Published:Updated:

இடியட் பாக்ஸ் - 31: ஏஞ்சலின் சிரிப்பும், நந்திதாவின் கண்ணீரும்!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 31: ஏஞ்சலின் சிரிப்பும், நந்திதாவின் கண்ணீரும்!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

மார்க்ஸ் சிறு புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.

“நிஜமாதான்” என்றாள் நந்திதா...

“இந்தப் பேச்சுவார்த்தை எப்ப நடந்தது?” எனப் புன்னகை மாறாமல் கேட்டான் மார்க்ஸ்.

“நேத்து ராத்திரி”

“ம்” எனப் புன்னகையுடன் தலையாட்டி யோசித்தான் மார்க்ஸ்.

“இங்க பாரு உன்ன மாதிரி ஒருத்தன் எல்லாம் ரொம்ப ரேர் பீஸ்... அதான் திவ்யா வேணாம்னு சொன்னதும் உடனே நான் புக்கிங் போட்டுட்டேன்” என்றாள் நந்திதா.

மார்க்ஸ் சிரித்தான்...

“சிரிக்காத... சீரியசா சொல்றேன்... அடுத்த பத்து நாள் உனக்கு ஆறுதல் சொல்லி, திவ்யா எல்லாம் ஒரு ஆளான்னு அவளைப் பத்தி தப்பு தப்பா பேசி உன்ன மாதிரி ஒருத்தனை எல்லாம் என்ன மாதிரி ஒருத்தியாலதான் புரிஞ்சுக்க முடியும்னு நைஸா பிட்டப் போட்டு... சாப்பிட்டியா, தூங்குனியான்னு போன் பண்ணி அக்கறையா இருக்கிற மாதிரி நடிச்சு... உன்னை கட்டி பிடிச்சு ஆறுதல் சொல்ற மாதிரி உன்னோட எமோஷனைத் தூண்டி அப்புறமா நமக்கு நடுவில இருக்கிற நட்பு, காதலா மாறிடுச்சுன்னு நினைக்கிறேன், அப்படி இப்படின்னு சீன போட்டு உன்னைத் தட்டி தூக்குறதுக்கு பதிலா ஓப்பனா நேரா உன்ன பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன். அவ்வளவுதான் வித்தியாசம்.”

மார்க்ஸ் அவளை ரசித்து சிரித்தான். நந்திதாவின் வெளிப்படையான பேச்சு அவனுக்குப் பிடித்திருந்தது.

“என்ன சிரிக்கிற?”

“சம்பந்தப்பட்டவன் பெர்மிஷன் இல்லாம நீங்களே முடிவு பண்ணிக்கிறதா? நான் என்ன டி-ஷர்ட்டா... எனக்கு வேணாம் நீ எடுத்துக்கோன்னு அவ உனக்கு குடுக்குறதுக்கு?!”

“சரி... பெர்மிஷன் கேட்டா போச்சு... என்ன சார் நான் ஓகே வா உங்களுக்கு?”

மார்க்ஸ் நந்திதாவை உற்றுப் பார்த்தான்.

“அவளை மாதிரி கலரா இல்லையேன்னு யோசிக்கிறயா?”

“சீசீ... நீ பெரிய அழகி தெரியும்ல!”

“வெள்ளையா இருக்கிறதுக்கும் அழகா இருக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாத ஊருப்பா உங்க ஊரு. வெள்ளையா இருந்தா உடனே அழகின்றானுங்க!”

“இதை யார் சொன்னது?”

“உங்க ஆளுங்க. ஹீரோயின் செலக்ட் பண்ணும் போதுதான் பார்த்தேனே!”

“என்னோட ஃபேவரைட் ஹீரோயின் யாரு தெரியுமா?”

“யாரு?”

“நந்திதா தாஸ், கொங்கனா சென், பிபாஷாபாசு”

“எல்லாரும் பெங்காலிஸ்” எனக் குழந்தையைப் போல சிரித்தாள் நந்திதா.

'ஆம்' எனத் தலையாட்டி புன்னகைத்தான் மார்க்ஸ்.

“அப்ப நான் ஓகேதான்ற...”

“நந்து...” என மார்க்ஸ் ஏதோ சொல்ல வர...

“வேணாம்னா வேணான்னு ஓப்பனா சொல்லு... என்ன விட உனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பான்னு எல்லாம் அல்வா குடுக்காத!”

மார்க்ஸ் சிரித்தபடி, “அதுவே காதலான்னு தெரியல... அதுக்குள்ள அது பிரேக்கப்பும் ஆகி அடுத்த லவ் ப்ரபோசல் வேறயா?”

“இப்ப என்ன சொல்ற நான் வேணுமா, வேண்டாமா?”

“காதல்ன்றது...”

“மண்டைக்குள்ள பல்பு எரியணும், மனசு படக்படக்குன்னு அடிச்சுக்கணும், பாக்குறப்ப பேட்டரி கட்டைய நாக்குல வச்ச மாதிரி விர்ன்னு இருக்கணும் அதான?” என்றாள் நந்திதா.

மார்க்ஸ் சிரித்தபடி, “ஒருத்தருக்கொருத்தர் பிடிக்கணும் இல்ல!”

“சரி என்ன பண்ணா பிடிக்கும்னு சொல்லு!”

“நீ இப்படி பேசிக்கிட்டே இருந்தா பிடிக்கும்...” எனச் சிரித்தான் மார்க்ஸ்.

நந்திதா மெல்லிய வெட்கத்துடன் சிரித்தாள்.

“ஓவரா பேசுறேன் இல்ல!”

“இல்ல... தெளிவா பேசுற… இந்த கிளாரிட்டி வாழ்க்கையில எல்லா விஷயத்துலயும் இருந்துட்டா நீதான் பெரிய ஆள்”

“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே”

“நந்து... திவ்யா இல்லன்னா நந்துன்னு நான் உன்ன சாய்ஸ்ல வைக்கிறது எவ்வளவு பெரிய தப்பு. திவ்யாவுக்கு என் மனசில எப்படி ஒரு இடம் இருக்கோ அதே மாதிரி உனக்கும் ஒரு இடம் இருக்கு. திவ்யா காலி பண்ணாதான் உனக்கு என் மனசில இடம் குடுப்பேன்னு சொன்னா உனக்கு நான் மரியாதை குடுக்கலைன்னு அர்த்தமாயிடும். திவ்யாவைப் பிடிக்கிற மாதிரியே உன்னையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அடுத்து என்னன்னு திட்டம் போட்டு காய் நகர்த்த ஆரம்பிச்சா உறவு ரொம்ப பொய்யாயிடும். சில விஷயங்கள் தானா நிகழணும்... அவ்வளவுதான்” என்றான் மார்க்ஸ்.

பார்த்து பேசிப் பழகி புரிந்து கொண்டு வருவதுதானே காதல். பார்த்ததும் இவள் என முடிவு செய்து கொண்டு அதைக் காதலை நோக்கி நகர்த்துவது எவ்வளவு பெரிய போலித்தனம்.

நந்திதா அவனைப் புன்னகையுடன் பார்த்தபடி இருந்தாள்.

“என்னாச்சு ஏதாவது தப்பா பேசுறனா?”

“பயங்கர தெளிவா பேசுற... உன்ன எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிக்குது... அதனால... இப்போதைக்கு இத அப்படியே விடுவோம்... மீதிய அப்புறமா பார்த்துக்கலாம்!”

“கரெக்ட்”

“என் மனசுல என்ன இருக்குன்னு சொல்லிட்டேன்... நடக்குதா பார்ப்போம்... நடக்கலைன்னா” என நந்திதா நிறுத்த...

“நடக்கலைன்னா” என மார்க்ஸ் சின்ன ஆர்வத்துடன் கேட்டான்.

“பாண்டியன் நெல்லையப்பன்னு அடுத்த சாய்ஸ டிக் அடிச்சுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்” என சிரித்தாள் நந்திதா.

மார்க்ஸும் வாய் விட்டு சிரித்தான்.

சிரித்துக்கொண்டிருந்த நந்திதா ஏதோ நினைவுக்கு வந்தவளாக “அய்யய்யோ” என்றாள்.

“என்னாச்சு” என்றான் மார்க்ஸ்.

“இல்ல நம்ம சீரியல்ஸுக்காக பண்ண ப்ரமோஷனோட ஸ்கீரினிங் இருக்கு”

“ஸ்கீரினிங் எங்க, ஆபிஸ் கான்பரன்ஸ் ரூம்லதான!”

“இல்ல குட்லக் பிரிவியூ தியேட்டர்ல...”

“அய்யய்யோ... எத்தனை மணிக்கு?”

“மூணு மணிக்கு” எனப் பதற்றமாக சொன்னாள் நந்திதா.

மார்க்ஸ் வாட்சைப் பார்த்தான். இன்னும் 15 நிமிடங்கள் இருந்தன.

“வா... போயிரலாம்” என மார்க்ஸ் எழுந்தான்.

நுங்கம்பாக்கம் குட்லக் பிரிவியூ தியேட்டர். வாசலில் மொத்த புரோகிராமிங் டீமும் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு சேல்ஸ் டீமும் அலுவலகத்தின் மற்ற முக்கிய தலைகளும் காத்திருந்தனர். புதிதாகத் தயாரான சீரியல்களின் ப்ரோமோக்கள் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டிருந்தன. அதைப் பார்ப்பதற்காக அவர்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தார்கள்.

மேனன் சிகரெட் புகைத்தபடி நின்று கொண்டிருந்தார்,

“பாண்டியன்” என அழைத்தாள் தாட்சா.

பாண்டியன் அருகில் வந்தான்.

“மார்க்ஸ் வரலையா?”

“ஆன் த வே மேடம்!”

“ஏன் லேட்டு?”

“ஸ்கிரீனிங் ஆபிஸ்லன்னு நினைச்சுகிட்டு இருந்திருக்காரு... குட்லக்குன்னு இப்பதான் சொன்னோம்!”

“எவ்வளவு நேரமாகும் வர்றதுக்கு?”

“5 மினிட்ஸ் மேடம்” என்றான் பாண்டியன். அடுத்த நாள் என்பதைக் கூட 5 மினிட்ஸ் என்றுதான் சொல்லுவார்கள். வார்த்தை மாறுவதே கிடையாது. எப்போது கேட்டாலும் 5 மினிட்ஸ்தான்.

“போன் பண்ணி எங்க இருக்கான்னு செக் பண்ணு!”

“யெஸ் மேடம்” என நகர்ந்தான் பாண்டியன்.

திவ்யா ஏஞ்சல் மற்றும் அவளது அணியினர் காத்திருந்தார்கள்.

“நந்திதாவும் இன்னும் வரல திவ்யா...” என்றாள் ஏஞ்சல்.

“மார்க்ஸும் அவளும் ஒண்ணாதான் வர்றாங்கன்னு நினைக்கிறேன்!”

“ப்ரோமோ ஹெட் முன்னாடியே வந்து எல்லாத்தையும் ரெடி பண்ணியிருக்கணும் இல்ல?”

“பண்ணியிருக்கணும்... என்ன பிரச்னைன்னு தெரியல” என்றாள் திவ்யா.

ஏஞ்சல் திவ்யாவை ஓரக் கண்ணால் கவனித்தாள். ஏதோ ஒன்றை தொலைத்த பாவனையில் அவள் இருந்தாள். என்னவாகயிருக்கும் என்பது அவளுக்குப் புரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று சரியில்லை என்று மட்டும் ஏஞ்சலுக்குத் தோன்றியது.

தாட்சா மேனன் அருகில் வந்தவள் “மார்க்ஸ் ஆன் த வே... இன்னும் ஒரு 10 நிமிஷமாயிடும்னு நினைக்கிறேன்” என்றாள்.

“ஒண்ணும் குழப்பம் இல்ல”

தாட்சாவுக்கு சிரிப்பு வந்தது.

“என்னாச்சு?” என கேட்டார் மேனன்.

“உலகமே இடிஞ்சு விழுதுன்னு சொன்னாலும் மேனனனுக்கு ஒண்ணும் குழப்பம் இல்லதான்” என்றாள் தாட்சா.

மேனன் சிரித்தார். அதில் தாட்சா தன்னை எவ்வளவு தூரம் கவனிக்கிறாள் என்கிற பெருமை தெரிந்தது.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

மணியடித்தபடி ஐஸ்கீரீம் வண்டி ஒன்று தியேட்டரை கடந்து சென்றது.

“ஐஸ்கீரீம்” என மேனன் அழைத்தார்.

“என்ன ஐஸ்கிரீம் இருக்கு?” என்றபடி வண்டி அருகே சென்றார் மேனன்.

அனைவரும் ஆச்சர்யமாக அவரை கவனித்தனர்.

“கப் இருக்கு.. சாக்கோ பார் இருக்கு, கோன் இருக்கு” என்றான் வண்டிக்காரன்.

“எனக்கு இரண்டு சாக்கோ பார் குடுங்க” என்றவர் திரும்பி பார்த்து “வாங்க ஐஸ்கிரீம் சாப்பிடலாம்” என அழைக்க அனைவரும் தயக்கமாகச் சிரித்தனர்.

“வாங்க... பாண்டியன் வாங்க...”

மெல்ல மெல்ல அனைவரும் ஐஸ்கிரீம் வண்டியை சூழ்ந்து கொள்ள வியாபாரம் சூடு பிடித்தது.

தாட்சாவின் அருகில் வந்தவர் “இந்தாங்க” என சாக்கோ பாரை நீட்டினார்.

“என்ன மேனன் இது?” எனப் புன்னகையும் ஆச்சர்யமுமாக கேட்டாள் தாட்சா.

“என்ன?”

“எவ்வளவு பெரிய ஆள் நீங்க... இப்படி சின்ன புள்ள மாதிரி ரோட்ல நின்னு ஐஸ்கிரீம் சாப்பிட்டுகிட்டு இருக்கீங்க!”

“சாக்லெட்டுக்கும் ஐஸ்கிரீமுக்கும் வயசு வித்தியாசம் கிடையாது. எவ்வளவு சீரியசான ஆளும் சிரிக்காம ஐஸ்கிரீம் சாப்பிட முடியாது. அங்க பாருங்க...”

தாட்சா திரும்பிப் பார்க்க...

அலோக்கும் பிரசாத்தும் ஏதோ பேசி சிரித்தபடி ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

“அது ஒரு கடையில போய் சாப்பிடலாம் இல்ல” எனத் தயக்கமாகச் சொன்னாள் தாட்சா.

“அது போர் தாட்சா... இப்படி சாப்பிட்டாதான் ஐஸ்கிரீமுக்கு அழகு...”

தாட்சா அவரை ரசித்து சிரித்தாள்.

“குச்சியில இருந்து ஐஸ்கிரீம் கழண்டு விழாம சாப்பிடுறது தனி டேலன்ட்” என்றார் மேனன்.

தாட்சாவும் சிரித்தபடி ஐஸ்கிரீமை சாப்பிடத் துவங்கினாள். 5 நிமிடத்திற்கு முன்னால் வரைக்கும் இறுக்கமாக இருந்த அந்த இடம் ஐஸ்கிரீமால் பிக்னிக்காக மாறியிருந்தது.

தனக்குள் இருக்கும் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ள தெரிந்தவனால் மட்டுமே வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழமுடிகிறது. பெரிய சந்தோஷங்களுக்காக காத்திருப்பதை விட அன்றாட வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்கத் தெரிந்தவர்கள்தான் பாக்கியவான்கள். பெரிய பெரிய முடிவுகளை போகிற போக்கில் எடுக்கிற மேனன் குழந்தையாய் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை ஆச்சர்யமாக பார்த்தபடி தனது ஐஸ்கிரீமை தாட்சா சாப்பிட்டாள். அவரது வெற்றியின் ரகசியம் அதுதான் என்று அவளுக்குத் தோன்றியது.

ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரையும் தட தடவென்ற மார்க்ஸின் புல்லட் சத்தம் நிமிரச் செய்தது. திவ்யாவும் நிமிர்ந்து பார்த்தாள். மார்க்ஸின் புல்லட்டில் நெருக்கி உட்கார்ந்தபடி நந்திதா அமர்ந்திருந்தாள். அவர்களை அப்படி பார்த்த அடுத்த கணம் திவ்யாவுக்குள் எரிச்சல் மூண்டது.

தாமதமாகிவிட்டபடியால் வழக்கத்துக்கு மாறாக சற்று அதிக வேகத்தில் மார்க்ஸ் புல்லட்டை ஓட்ட வேண்டியதிருந்தது. அந்த வேகம் தந்த பயத்தில் நந்திதா அவனை நெருங்கியிருந்தாள். இவை எதுவும் பார்க்கிற கண்களுக்குப் புரியாது அல்லவா!

அவர்கள் அவசரமாக வண்டியை நிறுத்திவிட்டு மேனனை நோக்கி ஓடி வந்தனர்.

நந்திதா சாரி கேட்கப் போகும் முன், “சாரி நந்திதா இன்னும் ஒரு 10 மினிட்ஸ் வேணும் இதை முடிக்கிறதுக்கு” என்றார் மேனன்.

“சாரி சார் நான்...” என அவள் ஏதோ சொல்ல வர...

“இங்க ரெண்டு ஐஸ்கிரீம் குடுப்பா” என்றார் மேனன்.

அவர்களது தாமதம் மறக்கடிக்கப்பட்டுவிட்டது, மன்னிக்கபட்டும்விட்டது.

மார்க்ஸ் பதற்றம் குறைந்து திரும்பிப் பார்த்தான்.

திவ்யா அவனை முறைத்துப் பார்த்தபடியிருந்தாள்.

மார்க்ஸுக்கு அவள் ஏன் முறைக்கிறாள் என்பது புரிந்தது.

கண்ணால் அவர்கள் பேசிக் கொண்டதன் அர்த்தம் ஏஞ்சலுக்கும் புரிந்தது.

“பாண்டியா” என்றார் நெல்லையப்பன்.

“சொல்லு மாமா”

“குச் குச் ஹோத்தா ஹைன்னு ஒரு இந்தி படம் பார்த்திருக்கியா?”

“ஊர சுத்தாம பாயின்டுக்கு வா...”

“அந்த படத்தில ரெண்டு ஹீரோயின்...”

“புரியுது...”

“மார்க்ஸ் கதையில யார் கஜோல், யாரு ராணிமுகர்ஜின்னுதான் தெரியல...”

பாண்டியன் திரும்பி நெல்லையப்பனை பார்த்தவன்...

“வாய தொட மூஞ்செல்லாம் ஐஸ்கிரீம்”

“அவனைத் துடைக்கச் சொல் நான் துடைக்கிறேன்” என்றார் நெல்லையப்பன்.

பாண்டியன் திரும்பி பார்க்க தனபால் முகமெல்லாம் ஐஸ்கிரீமாக நின்று கொண்டிருந்தான்.

பாண்டியனும் நெல்லையப்பனும் சிரித்தனர்.

ஸ்கிரீனிங் ஆரம்பிப்பதற்கான மணியடித்தது.

அனைவரும் பிரிவியூ தியேட்டருக்குள் நுழைவதற்காக நகரத் துவங்கினர். நெல்லையப்பன் அங்கு நின்று கொண்டிருந்த செல்லப்பாவிடம், “என்ன செல்லப்பா ஐஸ்கிரீம் பார்சல் கொண்டுவர மாதிரி இருக்கு” என்றார்.

அவன் அவரமாக குனிந்து பார்க்க அவனது சட்டையில் பெரிய ஐஸ்கிரீம் துண்டு விழுந்து அந்த இடம் முழுக்க வண்ணமாக மாறியிருந்தது.

“அய்யய்யோ... கீழ விழுந்திருச்சுன்னு நினைச்சேன்...”

“வாய்க்கும் தரைக்கும் நடுவுல இவ்வளவு பெரிய வயிறு வெச்சிருந்தா எப்படி அது தரையில விழும்” எனச் சிரித்தார் நெல்லையப்பன்.

செல்லப்பா அவரை முறைக்க நெல்லையப்பனும் பாண்டியனும் சிரித்தபடி நகர்ந்தனர்.

அனைவரும் திரையரங்கத்திற்குள் நுழைந்தனர். நந்திதா திவ்யாவின் அருகில் வந்து அமர்ந்தாள்.

“ஏண்டி லேட்டு?” எனக் கோபத்தை மறைத்தபடி கேட்டாள் திவ்யா.

“ஸ்கிரீனிங் இருக்குன்றத சுத்தமா மறந்தே போயிட்டேன்.”

“அது எப்படி மறக்கும்?”

“நிஜமாடி...”

“அவன் ஏன் லேட்டாம்?”

“ரெண்டு பேரும்தான் ஒண்ணா உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தோம். அவன் ஆபிஸ்ல ஸ்கிரீனிங்னு நினைச்சுட்டு இருந்தான்போல...”

“என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க?” என திவ்யா கேட்க நந்திதா பதில் சொல்லப்போகும் சமயம் திரையிடலுக்கான இரண்டாவது மணி அடித்தது.

“அப்புறம் சொல்றேன்” என நந்திதா சொல்லிவிட்டு திரையை பார்த்து திரும்பிக் கொண்டாள். திரை வெளிச்சமாக திரையிடல் துவங்கியது.

வரிசையாக அனைத்து சீரியல்களின் ப்ரோமோக்களும் திரையிடப்பட்டன. ஒவ்வொரு ப்ரோமோ முடிவிலும் சம்பந்தப்பட்டவர்கள் கரவொலி எழுப்பினர்.

ஸ்கிரீனிங் முடிந்து விளக்குகள் எரிந்தன.

நந்திதா தனது ப்ரோமோக்கள் குறித்து மேனன் என்ன சொல்லப் போகிறார் என்பது போல பார்த்தபடி இருந்தாள்.

“குட் வொர்க் நந்திதா” என சொன்ன மேனன் கை தட்ட அனைவரும் அவருடன் இணைந்து கரவொலி எழுப்பினர்.

“புது இடம்.... இங்க இருக்கிற கல்சர் பழக்கம் வழக்கம் எல்லாமே வேற. ஆனா ரொம்ப கவனமா அதை ரிசர்ச் பண்ணி நம்ம சீரியலோட முக்கியமான விஷயம் என்னவோ அதை கரெக்டா சொல்ற மாதிரி பர்ஃபெக்டா புரோமோ பண்ணியிருக்க நந்திதா. வெல்டன்...”

நந்திதா பெருமிதமும் நன்றியுமாக அவரைப் பார்த்தாள்.

“இந்த ப்ரோமோ பார்க்குற ஒவ்வொருத்தருக்கும் இந்த சீரியல ஒரு தடவையாவது பார்க்கணும்னு கண்டிப்பா தோணும். அவங்க ஒரு தடவையாவது நிச்சயமா சீரியலைப் பார்க்க வருவாங்க. அதுக்கப்புறம் அவங்களைத் தொடர்ந்து நம்ம சீரியல் பார்க்க வைக்கிறது கன்டென்ட் டீம் கையில இருக்கு!”

அனைவரும் தலையாட்ட...

“மார்க்ஸ்... ப்ரோமோ பத்தி உங்க ஒப்பினியன் என்ன?”

“எக்ஸலன்ட்டா இருக்கு சார். நாம நிறைய ப்ரோமோஸ் பண்ணியிருக்கோம். ஆனா நந்திதாவோட அப்ரோச் ரொம்ப வித்தியாசமா இருக்கு சார்...” என்றான் மார்க்ஸ்.

நந்திதா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“கன்ஃபார்மா பிரச்னை வர போகுது பாண்டியா” என கிசுகிசுத்தார் நெல்லையப்பன்.

“என்ன மாமா சொல்ற?”

''நம்ம ஆளு நந்திதாவை வேற லெவல்ல புகழ்றதும், அந்த பொண்ணு அதுக்கு கண்ணாலயே நன்றி சொல்றதும்... ஒண்ணும் சரியில்லப்பா...”

“சும்மா ஏதாவது கிளப்பி விடாத... எனக்கு ஒண்ணும் தப்பா தெரியல...”

“அடேய் பாண்டியா இவங்க ரெண்டு பேர் ரியாக்ஷன மட்டும் பார்க்காத... அந்தப் பக்கமா ஸூம் பண்ணி திவ்யாவுக்கு ஒரு டைட் க்ளோஸ் வை...”

பாண்டியன் எட்டி திவ்யாவைப் பார்த்தான்.

திவ்யாவின் முகம் இருண்டு போயிருந்தது அந்தக்குறைவான தியேட்டர் வெளிச்சத்திலும் தெரிந்தது.

“யோவ் மாமா ஆமாய்யா...”

''அப்படியே உன் கேமராவை ரைட்ல பேன் பண்ணி ஏஞ்சலுக்கு ஒரு க்ளோஸ் கட் பண்ணு...”

பாண்டியன் திரும்பி ஏஞ்சலை பார்க்க அவள் முகம் ஒரு வித்தியாசமான புன்னகையுடன் இருந்தது.

“ஏஞ்சல் சிரிக்கிறா மாமா...”

“அவ சிரிச்சா மார்க்ஸுக்கு ஏதோ தப்பா நடக்குதுன்னு அர்த்தம்!”

“மாமா... என்ன மாமா நடக்குது?”

“அதுதான் தெரியல... ஆனா உன் தலைக்கும் தலைவிக்கும் நடுவில ஏதோ பஞ்சாயத்து ஓடுதுன்னு மட்டும் புரியுது” என உறுதியாகச் சொன்னார் நெல்லையப்பன்.

''வேற ஏதாவது கருத்துக்கள் இருக்கா?'' என மேனன் கேட்டார்.

“நான் சொல்லலாமா” என்றான் சேல்ஸ் டீம் அப்பாராவ்.

“சொல்லுங்க அப்பாராவ்...”

“கதை மொத்தமும் ப்ரோமோலயே சொல்லிட்டா அப்புறமா சீரியல்ல பார்க்க என்ன இருக்கு?”

அனைவரும் நந்திதாவைப் பார்க்க அவள் அவனுக்கு எப்படி சொல்லிப் புரிய வைப்பது என்பது போல யோசிக்க மார்க்ஸ் எழுந்தான். “அப்பாராவ்... ப்ரோமோல ரெண்டு டைப் இருக்கு... இதுவரைக்கும் நாம பண்ணது எல்லாம் இது என்ன மாதிரி சீரியலா இருக்கும்... இதுல என்ன கதை இருக்கும்னு ஆர்வத்தை தூண்டுவோம். ஜனங்க என்ன இருக்கும்னு பாக்குறதுக்காக நம்ம சீரியல ட்யூன் பண்ணுவாங்க...”

“அதான சரி”

“ஒரு நிமிஷம் முடிச்சிடுறேன். நந்திதா பண்ண ப்ரோமோஸ்ல இந்த சீரியல்ல இதெல்லாம் இருக்கு... மிஸ் பண்ணிடாதிங்கன்னு சொல்றாங்க... என்ன நடக்கும்ன்ற எதிர்பார்ப்பை கிளப்புறது ஒரு விதம். அது எப்படி நடக்க போகுதுன்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துறது இன்னொரு விதம்.”

“எக்ஸாக்ட்லி” என்றார் மேனன்.

நந்திதா மீண்டும் நன்றி கலந்த புன்னகையுடன் மார்க்ஸைப் பார்த்தாள். திவ்யா இப்போதும் அதை கவனிக்கத் தவறவில்லை.

“என் ஹோட்டலுக்குள்ள வா... உனக்கு பயங்கரமான சாப்பாடெல்லாம் வெச்சிருக்கேன்னு சொல்லலாம். இல்லன்னா பாரு என் ஹோட்டல்ல அது இருக்கு, இது இருக்குன்னு போட்டோ போட்டு கஸ்டமரை உள்ள கூப்பிடலாம்” என மார்க்ஸ் சொன்னதை எளிமையாகச் சொன்னார் மேனன்.

“தப்பா எடுத்துக்காதிங்க உங்களுக்கு எந்த அப்ரோச் சரின்னு தோணுது?”

“முதல் அப்ரோச்ல ஹோட்டலுக்குள்ள ஆளுங்க வராமலேயே போயிடுறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. அதுக்கு இதுவே பெட்டர். அதுக்கப்புறம் இந்த மாதிரி கிரியேட்டிவ் ப்ராசஸ்ல இருக்கிற ரிஸ்க்கும், சந்தோஷமும் அது வொர்க் ஆகுமா, ஆகாதான்னு தெரியாம இருக்கிறதுதான். ஜெயிச்சா ஃபார்முலா. ஜெயிக்கலைன்னா பாடம்” எனச் சிரித்தார் மேனன். அனைவரும் சிரித்தனர்.

“என்ன திவ்யா ப்ரோமோஸ் பத்தி உன்னோட ஒப்பீனியன் என்ன?”

அவள் எழுந்து நின்றாள்...

அருகில் நின்ற நந்திதா அவளைப் புன்னகையுடன் பார்த்தபடி இருந்தாள். அவர்கள் இருவருக்கும் இடையில் எப்போதுமே மிகச் சரியான புரிந்து கொள்ளுதல் இருக்கும்.

அனைவரும் திவ்யா என்ன சொல்லப் போகிறாள் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

“எனக்கு பிடிக்கல சார். நான் எதிர்பார்த்த மாதிரி இல்ல” என்றாள் திவ்யா.

அதை சற்றும் எதிர்பார்க்காத நந்திதா அதிர்ச்சியாக அவளை பார்த்தாள். அங்கிருந்த யாருமே அதை எதிர்பார்க்கவில்லை.

“மார்க்ஸோட மூணு சீரியலுக்கு பண்ண ப்ரோமோ ரொம்ப நல்லாயிருக்கு... எங்க டீம் பண்ண சீரியல்ஸோட ப்ரோமோஸ் நல்லா இல்ல சார்” என்றாள திவ்யா.

தியேட்டரில் கனத்த மெளனம் நிலவியது.

“மார்க்ஸ் பண்ற ஷோஸ் எல்லாமே வித்தியாசமான ஷோஸ். அதனால ப்ரோமோ அப்படி தெரியுது. உங்க ஷோஸ் எல்லாமே ரெகுலர் ஷோஸ்ன்றதால அது எப்பவும் போல இருக்குன்னு நினைக்கிறேன்” என்றார் மேனன்.

“அப்படி இல்ல சார். இதை இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணியிருந்திருக்கலாம். மத்தபடி ஓகேதான் சார்... சாரி மனசுல பட்டதை சொன்னேன் நந்திதா” என்றாள் திவ்யா.

நந்திதாவின் கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

“கொஞ்சம் எடிட்ல வேலை இருக்கு சார்... அத முடிச்சிட்டு வந்து டிஸ்கஸ் பண்ணிக்கலாம் சார்... நான் கிளம்புறேன்” என சொல்லிவிட்டு திவ்யா எழுந்து செல்ல அவள் பின்னால் ஏஞ்சலும் அவளும் டீமும் செல்ல மெதுவாக அனைவரும் கலைந்தனர்.

நந்திதா கண்ணீருடன் நின்று கொண்டிருந்தாள். மார்க்ஸ் அவளை யோசனையாக பார்த்தபடியிருந்தான்!

- Stay Tuned...