Published:Updated:

இடியட் பாக்ஸ் - 76 | தாம்சனின் லைட்டர் ஆஃபரும், மார்க்ஸின் புது சீரியல் ஐடியாவும்!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு : இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 76 | தாம்சனின் லைட்டர் ஆஃபரும், மார்க்ஸின் புது சீரியல் ஐடியாவும்!

பொறுப்பு துறப்பு : இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

வெல்லப்போவது சினிமா அவார்ட்ஸா இல்லை டிவி அவார்ட்ஸா என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் ஆரஞ்ச் டிவி கான்ஃபரன்ஸ் ரூமில் அனைவரும் காத்திருந்தார்கள்.

“மார்ஸ் டிவியோட சினிமா அவார்ட்ஸ் 10 ரேட்டிங் பண்ணியிருக்கு” என்றாள் சாந்தினி. அனைவரும் அவள் அடுத்து சொல்ல போகும் வார்த்தையை எதிர்பார்த்தபடியிருந்தனர்.

“நம்மளோட டிவி அவார்ட்ஸ் ரேட்டிங்” என ஒரு கணம் நிறுத்திய சாந்தினி 11.2 என சொல்ல அனைவரும் ஓவென கத்தினார்கள். அந்த சந்தோஷ சத்தம் ஆரஞ்ச் டிவி முழுவதும் எதிரொலித்தது.

சினிமா விருது என்பது மக்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று. தொலைக்காட்சி விருது என்பது அவர்கள் இதுவரை பார்த்திராதது. அவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்ட தொலைக்காட்சி கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவை மக்கள் தங்கள் வீட்டு விழாவாகப் பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் புரிந்தது.

மக்களுக்கு இதுதான் பிடிக்கும் என ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளை தொடர்ந்து தருவது ஒரு ரகம். புதிது புதிதாக நிகழ்ச்சிகளை தொடர்ந்து முயற்சித்து பார்ப்பது, அவர்களின் கவனத்தை திருப்புவது இன்னொரு ரகம்.

இதில் தோல்விக்கான வாய்ப்பு அதிகம். ஆனால், மாபெரும் வெற்றி என்பது எப்போதும் தோல்விகளுக்கு நடுவில்தான் ஒளிந்து கொண்டிருக்கும்.

இடியட் பாக்ஸ் | மாறா
இடியட் பாக்ஸ் | மாறா

மார்க்ஸும், திவ்யாவும் உற்சாகமாக கை குலுக்கிக் கொண்டார்கள்.

“இந்த ரேட்டிங்கை நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றாள் திவ்யா.“நானும்தான். அஞ்சுலேர்ந்து ஆறு ரேட்டிங் வரும்னு நினைச்சேன்.பதினொன்னு எல்லாம் மெடிக்கல் மிராக்கிள்” என்றான் மார்க்ஸ்.

திவ்யா சிரித்தாள்.

“எனக்கு இதுக்கு ட்ரீட் வேணுமே” என்றான் மார்க்ஸ்.

“தந்துட்டா போச்சு” என்றாள் திவ்யா

“என்ன சொன்னதும் சட்டுன்னு ஒத்துகிட்ட?” எனக் கேட்டான் மார்க்ஸ்

“உன்னோட ஒரு டின்னர் போறதுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு… நான் மிஸ் பண்ணுவேனா?” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் புன்னகைத்தான். திவ்யா கண்ணடித்தாள்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் ரெஸ்ட்டாரன்ட்டில் மார்க்ஸும், திவ்யாவும் அமர்ந்திருந்தார்கள்.

மார்க்ஸ் டேபிளை தட்டியபடி “ஆர்டர் பண்ணதெல்லாம் வர்றதுக்கு எப்படியும் ஒரு இருபது நிமிசமாவது ஆகுமில்ல” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“இப்ப என்ன... ஃபுட் வர்றதுக்குள்ள போய் ஒரு தம்மடிக்கணும் உனக்கு... அதான”

“என் மனச அப்படியே வாசிக்கிற திவ்யா நீ”

“அதெல்லாம் ஒண்ணும் வாசிக்கல... நீ டேபிள்ல தாளம் போட்டா தம்மடிக்க போறேன்னு அர்த்தம்”

மார்க்ஸ் சிரித்தான்.

“சிரிக்காத... சீக்கிரம் போயிட்டு வா... ஆர்டர் பண்ண ஃபுட் வந்தா நான் பாட்டுக்கு சாப்பிட ஆரம்பிச்சிருவேன். உனக்காக எல்லாம் வெயிட் பண்ண மாட்டேன்” என்றாள் திவ்யா.

“சூடான சூப்ப ஊதி ஊதி நீ குடிச்சு முடிக்கிறதுக்குள்ள நான் வந்திருவேன்”

“அதுக்குதான் நீ சூப் ஆர்டர் பண்ணலையா?” என்றாள் திவ்யா.

“அதே” என மார்க்ஸ் சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தான்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

ரெஸ்ட்டாரன்ட்டில் இருந்து வெளியே வந்த மார்க்ஸ் அங்கிருந்த திறந்தவெளி தோட்டம் போன்ற புகை பிடிக்கும் இடத்திற்குள் நுழைந்தான். ஆங்காங்கே சிலர் நின்று சிகரெட் புகைத்தபடியிருந்தார்கள்.

சிகரெட்டை எடுத்து வாயில் வைத்த மார்க்ஸ் அதை பற்ற வைக்க லைட்டரை தேடினான். அப்போது தான் லைட்டர் இல்லாதது அவன் நினைவுக்கு வந்தது. யாரை கேட்கலாம் என அவன் சுற்றிப் பார்த்தான். அவன் முதுகுக்குப் பின்னாலிருந்து யாரோ “மார்க்ஸ்” என அழைத்தார்கள். மார்க்ஸ் திரும்பி பார்த்தான்.

இருளில் இருவர் நின்று கொண்டிருந்தார்கள்.

“லைட்டர்” என கையிலிருந்த லைட்டரை நீட்டினார் அவனை அழைத்தவர். பழக்கப்பட்ட குரலாக இருக்க மார்க்ஸ் மெதுவாக நடந்து அவர்கள் அருகில் வந்தான்.

தாம்சனும் மனோஜும் புகைபிடித்தபடி நின்று கொண்டிருந்தனர்.

தாம்சன் புன்னகையுடன் லைட்டரை நீட்டினார்.

“சார்” என ஆச்சர்யமானான் மார்க்ஸ்.

தாம்சன் லைட்டரை நீட்டியபடி இருந்தார்.

“இல்ல சார் வேணாம்... தேங்ஸ்” என்றான் மார்க்ஸ்.

அவனது தயக்கத்தை பார்த்து “இட்ஸ் ஒகே...” என்றார் தாம்சன்.

“இல்ல சார்... தம்மடிக்கிறதே ஒரு சின்ன ரிலாக்ஸுக்குத்தான். அதை இப்படி உங்க முன்னால டென்ஷனா அடிக்க முடியாது சார்” என சிரித்தான் மார்க்ஸ்.

“இதுல தப்பா எடுத்துக்க ஒண்ணுமில்ல” என்றார் தாம்சன்.

“புரியுது சார்... உங்களுக்கு இது ஒகே தான். ஆனா, எனக்கு இது கம்ஃபர்டபிளா இல்லை சார்” என்றான் மார்க்ஸ்.

தாம்சன் அவனது பதிலை ரசித்தபடி “எப்படியிருக்கீங்க மார்க்ஸ்” என கேட்டார்.

“நான் நல்லா இருக்கேன் சார்” என்றான் மார்க்ஸ்.

“மாறாவோட ஷோ... டிவி அவார்ட்ஸ்... ஸ்கூல் ஸ்டோரி... வரிசையாக எல்லாமே ஹிட் அடிக்கிறீங்களே…” என்றார் மனோஜ்.

“ஹிட்டானது மட்டும் தான் சார் வெளிய தெரியுது. நடுவுல நிறைய ஃபிளாப் ஷோஸ் பண்ணியிருக்கோம்” என்றான் மார்க்ஸ்.

“எத்தனை தடவை வேணா தோத்து போகலாம் பிரச்னையில்ல.... அந்த தோல்வி எல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி ஒரு பெரிய சக்ஸஸ் பண்ணிட்டா போதும். இத்தனை ஃபெயிலியர்ஸ் பத்தி யாரும் பேச மாட்டாங்க” என்றார் தாம்சன்.

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“உங்களைப் பத்தி நிறைய கேள்விபட்டிருக்கேன்” என்றார் மனோஜ்.

“நல்லபடியாவா இல்ல மோசமாவா சார்”

“நல்லபடியா தான்” என சிரித்தார் மனோஜ்.

“மார்க்ஸ் ஒரு பெரிய கேமுக்கு நீங்க ரெடியா?” எனக் கேட்டார் தாம்சன்.

“புரியல சார்”

“நீங்க மார்ஸ் டிவியில சேர இன்ட்ரஸ்டடா?” என சட்டெனக் கேட்டார் தாம்சன். மார்க்ஸ் அதிர்ந்து போனான்.

“சார்... நிஜமாவா கேட்குறீங்க?” என்றான் மார்க்ஸ்.

“என்ன சந்தேகம் உங்களுக்கு... நான் பொய்யால்லாம் ஆஃபர் கொடுக்க மாட்டேன்”

“இல்ல சார்... உங்க சேனல் எங்கயோ இருக்கு... நான் ஒரு 300 GRP சேனல்ல வேலை செய்யுற ஆள் சார்” என்றான் மார்க்ஸ்.

“இன்னைக்கு ஒருத்தன் எங்க இருக்கான்றத வெச்சு ஒருத்தனை நான் முடிவு பண்ண மாட்டேன். நாளைக்கு அவன் எங்க இருப்பான்றத வெச்சுதான் அவன் யாருன்னு நான் முடிவு பண்ணுவேன்” என்றார் தாம்சன்.

மார்க்ஸ் அவரை ஆச்சரியமாகப் பார்த்தான்.

“என்னோட சேனல் பாஸ்ட்ல இருக்கு... நீ தான் டிவியோட ஃபியூச்சர்” என்றார் தாம்சன்.

“நான் உங்க சேனலுக்கு செட்டாக மாட்டேன் சார்” என்றான் மார்க்ஸ்.

“அப்படி செட்டாகாத ஒருத்தர் தான் எனக்கு வேணும். இப்ப இருக்கிற ஃப்ளோவை எல்லாரும் கண்ண மூடி என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க. அவங்களை டிஸ்டர்ப் பண்ணி ஷேக் பண்ற மாதிரி ஒருத்தர் எனக்கு வேணும்” என்றார் தாம்சன்.

மார்க்ஸ் அமைதியாக இருந்தான்.

“எவ்வளவு சேலரி வேணும்.. இப்ப நீங்க வாங்கிகிட்டு இருக்கிறத விட டபுள், டிரிப்பிள்... அதுக்கு மேல... எனிதிங் இஸ் ஒகே ஃபார் மீ!”

மார்க்ஸ் முகம் மாறி அவரைப் பார்த்தான்.

“என்னடா அள்ளி குடுக்குறேன்னு நீ நினைக்காத... அதை எப்படி லாபமா மாத்துறதுன்னு எனக்கு தெரியும்... தைரியமா வாங்க மார்க்ஸ் மூவ் பண்ணிட்டே இருக்கணும் மார்க்ஸ். ஒரே இடத்துல தேங்கிடக் கூடாது.”

மார்க்ஸ் தயக்கமாக அவரைப் பார்த்தான் .

“என்ன யோசிக்கிறீங்கன்னு சொல்லுங்க மார்க்ஸ்”

“ஸாரி சார்... என்னால இப்ப ஆரஞ்ச் டிவியை விட்டு வர முடியாது சார்” என்றான் மார்க்ஸ்.

“ஒகே... வர வேணாம் ஆனா... ஏன் வரலைன்னு எனக்கு ஒரு நியாயமான காரணத்தை நீங்க சொல்லணும்” என்றார் தாம்சன்.

“என்ன ஆரஞ்சு டிவியோட ஏதாவது சென்ட்டிமென்ட் கனெக்‌ஷனா?” எனக் கேட்டான் மனோஜ்.

“அப்படி எல்லாம் இல்ல சார்... ஆரஞ்சு டிவியில இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன் சார். இன்னும் கூட நான் கத்துக்க வேண்டியதிருக்கு சார்”

“ஏன் எங்க சேனல்ல கத்துக்க முடியாதா?” என்றான் மனோஜ்.

“பெரிய நிறுவனங்கள்ல வேலை செய்றவங்களால எதையும் கத்துக்க முடியாது சார். உங்களோட பிரமாண்டமான சேனல்ல நான் ஒரு சின்ன பார்ட்டா தான் இருப்பேன். ஆனா சின்ன நிறுவங்கள்ல வேலை செய்றப்ப அதோட எல்லா பிராசஸ்லயும் என்னால இன்வால்வ் ஆக முடியும் சார். நிறைய கத்துக்க வாய்ப்பும் கிடைக்கும். சொல்றத செய்யுற மாதிரி ஒரு ஆள் தான் சார் உங்க சிஸ்டத்துக்கு வேணும். இங்க நான் முடிவு எடுக்குறவன். அங்க நான் நீங்க சொல்ற வேலைய முடிக்கிறவன்.”

தாம்சன் சிரித்தார்.

“இன்னொரு காரணமும் இருக்கு சார்”

“என்ன அது?” என்றார் மனோஜ் சின்ன ஏமாற்றத்துடன்.

“பெரிய நிறுவனம்கிற பிராண்ட்ல எனக்கு நம்பிக்கை இல்ல சார். அதை யாரு ரெப்ரசன்ட் பண்றாங்கன்றது தான் ரொம்ப முக்கியம். நான் ஒரு நல்ல பாஸ் கிட்ட வேலை செய்யுறேன். நல்ல கம்பெனியா, நல்ல பாஸா ரெண்டுல எது முக்கியம்னு என்னை கேட்டா நான் நல்ல பாஸைத்தான் சூஸ் பண்ணுவேன்” என்றான் மார்க்ஸ்.

“அந்த பாஸ் யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” எனக் கேட்டான் மனோஜ்.

“சித்தார்த் மேனன்” என்றான் மார்க்ஸ்.

“யா... ஐ நோ ஹிம்” என்றார் தாம்சன்.

“என் மேல எதுவும் கோபம் இல்லயே சார்” என்றான் மார்க்ஸ்.

“இல்ல... உண்மைய சொல்லனும்னா இப்ப தான் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றார் தாம்சன்.

“ஸாரி சார் உங்க ஆஃபரை வேணாம்னு சொல்லிட்டேன்னு தப்பா எடுத்துக்காதீங்க சார்” என்றான் மார்க்ஸ்.

“வெற்றின்றது எப்பவுமே சரியான சமயத்தில சரியான முடிவுகளை எடுக்குறதுதான் மார்க்ஸ்... யோசிச்சுகோ” என்றார் தாம்சன்.

“இல்ல சார் நான்” என மார்க்ஸ் ஏதோ சொல்ல வர தாம்சன் தனது கையிலிருந்த லைட்டரை அவனிடம் நீட்டினார்.

“இதை வெச்சுக்கோ... ஸ்மோக் பண்றப்ப எல்லாம் என் ஆஃபரை உனக்கு இந்த லைட்டர் ரிமைண்ட் பண்ணும். மனசு மாறுனா என்ன கான்டாக்ட் பண்ணு” என லைட்டரை கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார் தாம்சன்.

அந்த லைட்டரை ஒரு கணம் பார்த்த மார்க்ஸ் அதை அழுத்த சட்டென அதிலிருந்து நெருப்பு சீறி எழுந்தது.

இடியட் பாக்ஸ் - மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் - மார்க்ஸ், திவ்யா

“எங்கடா போயிட்ட ஒரு சிகரெட் பிடிக்க இவ்வளவு நேரமா?” எனக் கேட்டாள் திவ்யா.

“ஸ்மோக்கிங் ஏரியால தாம்சன் சாரைப் பார்த்தேன்”

“யாரு மார்ஸ் டிவி தாம்சனா”

ஆமென தலையாட்டினான் மார்க்ஸ்.

“என்ன சொல்றாரு?”

“என் சேனலுக்கு வந்து ஜாயின் பண்ணுன்னு கூப்பிட்டாரு” என மார்க்ஸ் சொல்ல ஆச்சரியமானாள் திவ்யா.

“அதுக்கு நீ என்னடா சொன்ன?”

“ஸாரி வரலைன்னு சொல்லிட்டேன்”

“ஏன்டா?” என கேட்டாள் திவ்யா.

“ஆரஞ்சு டிவியில ஒரு அழகான புரோகிராமிங் ஹெட் இருக்காங்க... அவங்கள நான் லவ் பண்றேன்... அதனால உங்க சேனலுக்கு வரலைன்னு சொல்லிட்டேன்” என்றான் மார்க்ஸ்.

“போடா” என திவ்யா சிரிக்க மார்க்ஸும் சிரித்தான்.

“போய் பார்த்தா தான தெரியும் அங்க அழகான புரோகிராமிங் ஹெட் இருக்காங்களா இல்லையான்னு”

“ஆமால்ல... எதுக்கும் நான் வேணா தாம்சன் சாருக்கு போன் பண்ணி கேட்டுடவா?” என்றான் மார்க்ஸ்.

“டேய் உண்மைய சொல்லு... எதுக்காக இந்த ஆஃபரை வேணாம்னு சொன்ன?”

“ஒரு சின்ன கம்பெனியில வேலைய ஆரம்பிக்கணும். ஒரு பெரிய கம்பெனியில் ரிட்டையர் ஆகணும். அதுதான் நம்ம பாலிசி. எப்ப ரிட்டையர்ட் ஆகணும்னு மூட் வருதோ அப்ப அங்க போய் ஜாய்ன் பண்ணிக்கிறேன்” என்றான் மார்க்ஸ்.

“ஓஹோ… சார் இப்ப என்ன மூட்ல இருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“ரொமான்ஸ்... அப்புறம் கல்யாண மூட்ல இருக்கேன்” என மார்க்ஸ் சிரித்தான். திவ்யாவும் சிரித்தாள்.

“அதுக்கும் முன்னால சாப்பிடுற மூட்ல இருக்கேன் பயங்கரமா பசிக்குது...” என மார்க்ஸ் சாப்பிடத் தொடங்க திவ்யா புன்னகையுடன் அவனைப் பார்த்தபடி இருந்தாள். மார்க்ஸ் அருகிலிருக்கும் போதெல்லாம் அவனது உற்சாகமும் சந்தோஷமும் தன்னை ஆட்கொள்வதை அவள் உணர்ந்தாள்.

காலையில் மார்க்ஸ் சேனலுக்குள் நுழையும் போதே பாண்டியன் அவனுக்காக காத்திருந்தான்.

“தல ஒரு சின்ன பிரச்னை” என்றான் பாண்டியன்.

“என்னடா காலங்காத்தாலயே வயலின் வாசிக்கிறீங்க?” என்றான் மார்க்ஸ்.

“கோபப்படாதப்பா... வர்ற மண்டே லான்ச் ஆகுறதா இருந்த புது சீரியல் லான்ச் ஆகாதுப்பா” என்றார் நெல்லையப்பன்.

“என்னன்னே சொல்றீங்க? ஏன் லான்ச் ஆகாது” என அதிர்ச்சியாகக் கேட்டான் மார்க்ஸ்.

“புரொடியூசர் ஓடிட்டான்ப்பா”

“மாமா... நாலு நாள் முன்னாடி தான் அவரு அஞ்சு எபிசோட் ஷூட் பண்ணி கொண்டு வந்து காட்டுனாரு. அப்புறம் என்ன?” என்றான் மார்க்ஸ்.

“அந்த 5 எபிசோடை 20 நாளா எடுத்துருக்கான்பா அந்த புது டைரக்டர். நிலத்தை வித்து கொண்டு வந்த 40 லட்சத்தை 5 எபிசோட்லயே செலவழிச்சிட்டு புரொடியூசர் திரும்பவும் ஊருக்கே போயிட்டாரு” என்றார் நெல்லையப்பன்.

“இதுக்கு தான் அனுபவமில்லாத ஆளுங்கள எல்லாம் புரொடியூசரா ஆக்காதிங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா?” என கோபமாக சொன்னான் மார்க்ஸ்.

“இல்ல தல நம்ம மார்க்கெட்டிங் மனோ தான் அவரை கூட்டிட்டு வந்தது. நல்ல புரொடியூசர் தான். அந்த டைரக்டர் தான் கொஞ்சம் அவரை இழுத்து விட்டுட்டாரு ” என தயக்கமாகச் சொன்னான் பாண்டியன்.

“இப்ப என்ன பண்றது?” என்றான் மார்க்ஸ்.

“அந்த ஷோவுக்கு ஒரு புது புரொடியூசரைப் பிடிச்சு மாத்தி விடணும்” என்றான் பாண்டியன்.

“அதெல்லாம் அப்புறம்... வர்ற திங்கட்கிழமை ஷோ லான்ச் ஆகணுமே... அதுக்கு என்ன பண்றது?”

“கப்புன்னு மேனன் கால்ல விழுந்திரலாம்” என்றார் நெல்லையப்பன்.

“அது ஒண்ணு தான் ஒரே வழி... வாங்க போலாம்” என்றான் மார்க்ஸ்.

விஷயத்தை கேள்விப்பட்ட மேனன் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

“என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. பாம்பேக்கு மண்டே புது ஷோ லான்ச் ஆகும்னு ப்ராமிஸ் பண்ணிட்டேன். லான்ச் பண்ணியே ஆகணும்” என்றார் மேனன்.

“இன்னும் 6 நாள் தான் சார் இருக்கு”

“6 நாள்ல என்ன ஷோ பண்ண முடியுமோ அதை பண்ணுங்க” என முடித்து விட்டார் மேனன்.

திவ்யாவின் அறையில் அனைவரும் யோசனையாக அமர்ந்திருந்தார்கள்.

“தல 6 நாள்ல ஒரு சீரியல் லான்ச் பண்றதெல்லாம் நடக்கிற விஷயமே இல்லை” என்றான் பாண்டியன்.

“ஆமா… நான் வேணா சார் கிட்ட பேசிப் பார்க்குறேன்” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

“எங்களை எல்லாம் வரச் சொல்லிட்டு நீ மட்டும் தனியா யோசிச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்? என்ன யோசிக்கிறேன்னு எங்களுக்கும் சொல்லிட்டு யோசிக்கலாம் இல்ல” என்றாள் ஏஞ்சல்.

“நம்ம கிட்ட இப்ப என்ன ரெடியா இருக்கு” என கேட்டான் மார்க்ஸ்.

“அந்த சீரியலுக்காக செலக்ட் பண்ண 20 ஆர்ட்டிஸ்ட் மட்டும் இருக்காங்க” என்றார் நெல்லையப்பன்.

“அவர் பண்றதா இருந்த கதை என்ன மாமா?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“ 'கடைகுட்டி சிங்கம்' மாதிரி ஒரு பெரிய ஜாயின்ட் ஃபேமிலி கதை” என்றாள் ஏஞ்சல்.

“அவர் பண்ண 5 எபிசோட் கையில தயாரா இருக்குல்ல. அதை டெலிகாஸ்ட் பண்ணா இன்னொரு வாரம் நமக்கு டைம் கிடைக்கும். இரண்டு வாரத்துக்குள்ள நாம புது புரொடியூசர் பிடிச்சு அந்த கதையை கன்டின்யு பண்ணலாம்” என்றான் மார்க்ஸ்.

“அது முடியாது” என்றாள் ஏஞ்சல்.

“ஏன்?”

“அந்தாளு அந்த 5 எபிசோடையும் கையோட கொண்டு போயிட்டாரு” என்றாள் ஏஞ்சல்.

மார்க்ஸ் எரிச்சலானான்.

“யப்பா ஒரு புதுக் கதையை பிடிச்சு.. அதுக்கு ஒரு லொகேஷன் பார்த்து ஷூட் பண்ணி 6 நாள்ல டெலிகாஸ்ட் பண்றது எல்லாம் நடக்காது மார்க்ஸ்” என்றார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் கண்ணை மூடி யோசித்தவன் சட்டென கண்விழித்தான்.

“டன்” என உற்சாகமாக சொன்னான்.

அனைவரும் அவனைப் பார்த்தனர்.

“இந்த சீரியலை நாமளே இன்ஹவுஸா புரொடியூஸ் பண்ணிரலாம்” என்றான் மார்க்ஸ்.

“அது ஓகே... என்ன கதை... எந்த லொக்கேஷன்ல இதை ஷூட் பண்ணப் போறோம்” எனக் கேட்டாள் திவ்யா.

“நம்ம ஆபிஸ்ல தான் ஷூட்டிங். அந்தாளு செலக்ட் பண்ணி வச்சிருக்கிற 20 ஆர்ட்டிஸ்ட்தான் இதுல நடிக்கப்போறாங்க”

“சரிப்பா கதைக்கு எங்க போவ?”

“கதை ரெடியா இருக்கு”

“என்ன கதைப்பா?” எனக் கேட்டார் நெல்லையப்பன்

“நம்ம கதைதான்ணே” என்றான் மார்க்ஸ்.

“நம்ம கதைனா?” புரியாமல் கேட்டாள் ஏஞ்சல்.

“ஒரு சேனல்ல நடக்கிற கலாட்டாதான் கதை. நாம இத்தன நாளா என்னல்லாம் கூத்தடிச்சமோ அத அப்படியே கதையா பண்றோம்!”

“அப்படின்னா 1000 எபிசோட் பண்ணலாமே” என சிரித்தார் நெல்லையப்பன்.

“சூப்பர் ஐடியா தல” என்றான் பாண்டியன்.

“என் கேரக்டரை எல்லாம் வில்லியா ஆக்கிடாதிங்க” என ஏஞ்சல் சொல்ல அனைவரும் சிரித்தனர்.

“நம்ம ஆபிஸுக்காக ஒரு ஃப்ளோர் எடுத்து இன்டீரியர் எல்லாம் பண்ணி அப்படியே சும்மா தான் இருக்கு... அதை நாம ஷூட்டிங்குக்கு யூஸ் பண்ணிக்கலாம்” என்றாள் திவ்யா.

“அப்புறம் என்ன நாளையில இருந்து ” என்றான் மார்க்ஸ்.

“இந்த சேனல் கதைக்கு ஒரு நல்ல பேர் வைப்பா” என்றார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் யோசிக்காமல் சொன்னான். நம்ம புது சீரியல் பேரு ‘இடியட் பாக்ஸ்’.

அனைவரும் ஓவென என கத்தினார்கள்.

Stay Tuned...