Published:Updated:

இடியட் பாக்ஸ் - 82: ஆரஞ்சு டிவியின் பிரமாண்ட சினிமா அவார்ட்ஸ்… மேனனின் ராஜினாமா!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 82: ஆரஞ்சு டிவியின் பிரமாண்ட சினிமா அவார்ட்ஸ்… மேனனின் ராஜினாமா!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

மார்க்ஸ், திவ்யா, ஏஞ்சல் மூவரும் மேனன் அறையில் நின்று கொண்டிருந்தார்கள். மேனன் புன்னகையுடன் அவர்களை பார்த்தபடியிருந்தார்.

“இது நியாயமே இல்லை சார்” என்றான் மார்க்ஸ்.

மேனன் சிரித்தார்.

“சிரிக்காதீங்க சார்... நீங்க என்ன சென்னைக்கு வர சொல்லி கூப்பிட்டப்ப என்ன சார் சொன்னீங்க?” எனக் கேட்டாள் திவ்யா.

“சரியா ஞாபகம் இல்லையே” என மேனன் யோசிப்பது போல மேலே பார்த்து கண்களை மூடினார்.

“மூணு வருஷம் இங்கதான் இருப்பேன்னு சொன்னீங்களா இல்லையா?”

“இல்ல திவ்யா… அது…”

“காரணம் எல்லாம் சொல்லாதீங்க சார்... அப்படியெல்லாம் நீங்க வாக் அவுட் பண்ண முடியாது” என சொல்லும்போதே திவ்யாவின் குரல் உடைந்தது.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

நீங்கள் வேலையை விட்டு போகும்போது எத்தனை பேர் நிஜமாகவே வருத்தப்படுகிறார்கள் என்பதில் இருக்கிறது நீங்கள் அந்த இடத்தில் எப்படி வேலை செய்தீர்கள் என்பதற்கான மரியாதை. தனது வேலையை மட்டும் சிறப்பாக செய்பவர்களுக்காக யாரும் கண்ணீர் சிந்துவதில்லை. வேலை செய்யும் நீங்கள் உங்களை சுற்றி இருக்கும் சூழலை எவ்வளவு ஆனந்தமாக வைத்திருக்கிறீர்கள், உங்களோடு பணிபுரியும் சக பணியாளர்களுடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது, அவர்களது அலுவலக வாழ்வில் உங்கள் பங்கு என்ன, அவர்கள் வாழ்வில் நீங்கள் என்ன மாற்றங்களை ஏற்படுத்தினீர்கள் என்பதெல்லாம்தான் அவர்கள் உங்களை நேசிப்பதற்கு காரணம். வெற்றியாளர்கள் வெளியே போவது குறித்து அவர்களுக்கு கவலை இல்லை. நல்ல மனிதர்கள் விடைபெறும் போதுதான் அவர்கள் வருத்தமடைகிறார்கள்.

“எதுக்காக சார் இந்த முடிவு ?” எனக் கேட்டாள் ஏஞ்சல்.

“திவ்யா, மார்க்ஸ், ஏஞ்சல்னு அடுத்த நல்ல தலைவர்களை இங்க உருவாக்கியாச்சு... இப்ப நான் பொறுப்பை அவங்க கையில கொடுத்துட்டு விலகுனாதான அவங்க அடுத்த லெவலுக்கு வர முடியும், அவங்க நினைச்சத அவங்க பண்ண முடியும்!”

“எங்களுக்கு வழி விடுறதுக்காக நீங்க விலகனும்னு அவசியம் இல்லை சார். வீ நீட் யூ” என்றாள் திவ்யா.

“நான் சைக்கிள் கேரியரை பிடிச்சுக்கிட்டு இருக்கிற வரைக்கும் உங்களால சைக்கிள் ஒட்ட கத்துக்க முடியாது. என்னோட கைய எடுக்க வேண்டிய நேரம் வந்திருச்சு... நான் விலகுனாதான் உங்களால வளர முடியும்” என புன்னகைத்தார் மேனன்.

அவர்கள் என்ன பேசுவது எனத் தெரியாமல் மௌனமாக இருந்தார்கள்.

“எனிவே... நான் இங்க இருந்து ரிலீவ் ஆக இன்னும் 3 மாசம் இருக்கு. அதுவரைக்கும் நாம எல்லோரும் எப்பவும்போல நம்ம வேலையை செய்யலாம்” என்றார் மேனன்.

“நானும் உங்களோடவே வந்தர்றேன் சார்” என்றான் மார்க்ஸ்.

மேனன் சிரித்தார்!

“நான் ரிட்டயர்ட் ஆக போறேன்” என்றார் மேனன்.

“நானும் ரிட்டயர்ட் ஆகிடுறேன் சார்” என்றான் மார்க்ஸ்.

திவ்யாவும் ஏஞ்சலும் புன்னகைத்தார்கள்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“ஒருத்தரை ஃபாலோ பண்றதுன்றது ஃபிஸிக்கலா அவர்கூட இருக்கிறதுன்னு அர்த்தம் இல்ல மார்க்ஸ். அவரோட நம்பிக்கைகளை, கனவுகளை, அவரோட கொள்கைகளை ஃபாலோ பண்ணி அதை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போறவங்கதான் நிஜமான ஃபாலோயர்ஸ். அஞ்சு வருஷம் கழிச்சு என்ன நீங்க ஞாபகம் வச்சுக்கிட்டீங்கனா அதுதான் என்னோட சக்சஸ். என்கிட்ட இருந்து நீங்க கத்துகிட்ட ஏதோ ஒரு விஷயம் அப்ப உங்களுக்கு வாழ்க்கையில பயன்பட்டுதுன்னா நான் நிஜமா உங்களுக்கு ஏதோ செஞ்சிருக்கேன்னு எடுத்துக்கலாம்” என்றார் மேனன்.

நாம் நேசிப்பவர்கள் விடைபெறும் போது ஏற்படுகிற வெற்றிடத்தை அவர்களின் நினைவுகளால் நிரப்புவதை தவிர வேறு வழியில்லை. நாம் எப்படி இருந்தால் அவர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்களோ அப்படி நம்மை மாற்றிக் கொள்வதுதான் அவர்கள் மேல் நாம் நிஜமாகவே பிரியமாயிருக்கிறோம் என்பதற்கான அடையாளம்.

“இன்னைக்கு வேற என்ன மீட்டிங் இருக்கு” எனக் கேட்டார் மேனன்.

“ஃபிலிம் அவார்ட்ஸ் பண்றதுக்காக ஏஜென்சியை வர சொல்லியிருக்கோம் சார்” என்றாள் திவ்யா.

“எத்தனை மணிக்கு மீட்டிங்” என மேனன் கேட்க, “அவங்க வந்துட்டாங்க சார். கான்ஃபரன்ஸ் ரூம்ல வெயிட் பண்றாங்க” என்றாள் திவ்யா.

“ஓ... குட்... அவங்களை மீட் பண்ணலாம்” என எழுந்தார் மேனன். அவர்கள் மெளனமாக பின் தொடர மேனன் கான்ஃபரன்ஸ் ரூமுக்குள் நுழைந்தார். அங்கு குழுமியிருந்த நபர்களை ஏஞ்சல் அறிமுகம் செய்து வைத்தாள்.

“சார் இவர் மிஸ்டர் அற்புதம். ஃபிரேம் பை ஃபிரேம் ஏஜென்சியோட டைரக்டர்... இது மிஸ்டர் மேனன் எங்க சேனலோட இன்சார்ஜ்” என்றாள் ஏஞ்சல்.

அற்புதமும் மேனனும் கை குலுக்கி கொண்டார்கள்.

இருவரும் அமர்ந்தனர்.

“சென்னையோட லீடிங் மீடியா ஏஜென்சி சார். அற்புதம் சாருக்கு இன்டஸ்டிரியோட நல்ல கனெக்‌ஷன் இருக்கு சார். அவர் சொன்னா எல்லோரும் கேட்பாங்க” என ஏஞ்சல் சொல்ல மேனன் தலையாட்டினார்.

“சினிமா அவார்ட்ஸோட சக்ஸஸ்ன்றது அந்த விழாவுக்கு எத்தனை செலிபிரட்டி வர்றாங்கன்றதுலதான் சார் இருக்கு. என்னால இன்னைக்கு முன்னணியில் இருக்கிற அத்தனை பேரையும் நம்ம அவார்ட் ஷோவுக்கு கொண்டுவந்துட முடியும். தெலுங்கு, மலையாளம், இந்திலேர்ந்து கூட பாப்புலரான ஆளுங்களை கொண்டு வந்து நம்ம அவார்ட் ஷோவை கலர்ஃபுல்லாக்கிரலாம்” என்றார் அற்புதம்.

அற்புதம் சொன்னதை செய்பவர் என்பது அவர் பேசிய தொனியில் இருந்தே அனைவருக்கும் புரிந்தது.

“யாரையெல்லாம் அவார்ட்ஸுக்கு ஜூரியா போடலாம்” என கேட்டான் மார்க்ஸ்.

“அதெல்லாம் கவலைப்படாதீங்க சார்... பெரிய நேமாவும் இருக்கணும், அதே சமயத்துல நாம சொல்றதை கொஞ்சம் கேட்குறவங்களாவும் இருக்கணும். அந்த மாதிரி ஆளுங்களா பார்த்து ஜூரியா போட்டுக்கலாம். அவார்ட்ஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி குடுக்குறப்ப அவங்க யாரும் பிரச்னை பண்ண கூடாது” என்றார் அற்புதம்.

மார்க்ஸின் முகம் மாறியது.

“இல்ல சார் சரியான ஆளுங்களுக்கு அவார்ட் குடுக்கணும். அது முக்கியம்” என்றான் மார்க்ஸ்.

“ஆமா… ஆமா... அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன்... ஆர்டிஸ்ட்களைக் கொண்டு வந்து குவிச்சிடுறேன்... அவார்ட் ஷோ பெரிய ஹிட்டாகும். நல்ல டிஆர்பி வரும். என்ன நம்பி விடுங்க… நான் பார்த்துகிறேன்” என்றார் அற்புதம்.

“சரி சார்... அப்ப நாம எப்ப திரும்ப சந்திக்கலாம்” என கேட்டாள் திவ்யா.

“ஒரு நாலு நாள் டைம் குடுங்க... லிஸ்ட்டோட வர்றேன்” என்றார் அற்புதம். அவர்கள் எல்லோரும் கலைந்தார்கள்.

………………

மார்க்ஸ் வீட்டின் பால்கனியில் அமர்ந்திருந்தான். எதிரில் திவ்யா காபி கோப்பையுடன் நின்று கொண்டிருந்தாள்.

“யாரோ இன்னைக்கு ரிட்டயர்மென்ட் பத்தி பேசுன மாதிரி இருந்துச்சு” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“மேனன் சார லவ் பண்றதெல்லாம் இருக்கட்டும் கூடவே கொஞ்சம் எங்களையும் கண்டுக்குங்க சாரே” என்றாள் திவ்யா.

“நான் வேலையை ரிசைன் பண்றேன்னு சொன்னது உன் மேல இருக்கிற லவ்வுலதான்” என்றான் மார்க்ஸ்.

“என்ன உளர்ற, வேலைய ரிசைன் பண்ணா எப்படி நாம ஒண்ணா இருக்க முடியும்?”

“மேனன் சார் ஏன் வேலைய ரிசைன் பண்றாரு சொல்லு?”

“அதான் சாரே சொன்னாரே ஏன்னு...”

“அதோட சேர்ந்து இன்னொரு காரணமும் இருக்கு” என அர்த்தமாக புன்னகைத்தான் மார்க்ஸ்.

திவ்யா அவனைப் புரியாமல் பார்த்தாள்.

“மேனன் சாரும் தாட்சாவும் கல்யாணம் பண்ணிக்கப்போறாங்க”

திவ்யா முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.

“வாவ்... எப்ப?”

“சீக்கிரமே... கம்பெனி ரூல்ஸ்படி ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃப் ஒரே டிப்பார்ட்மென்ட்ல வேலை செய்ய முடியாதுல்ல... அதான் சார் ரிசைன் பண்றாரு” என்றான் மார்க்ஸ்.

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

“ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு லவ் இருக்குன்னு தெரியும். ஆனா, அது இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் வரைக்கும் போகும்னு நினைக்கல” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“சோ… தாட்சாவுக்காக மேனன் சார் வேலையை விட்டு போறாரு”

“யெஸ்”

“மார்க்ஸ் சார் திவ்யாவுக்காக வேலைய விட்டு போகப் போறேன்னு சொல்றாரு.. இல்லையா?” என கேட்டாள் திவ்யா.

“எக்ஸாக்ட்லி”

“எனக்கு இப்ப அவசரமா புருஷன் தேவையில்லை... புரோகிராம் பண்ணத்தான் ஆள் வேணும். அதனால ஒழுங்கா வேலையைப் பாரு” என சிரித்தாள் திவ்யா.

“அடிப்பாவி... அப்ப நம்ம கல்யாணம்?”

“சேனல் 750 GRP வந்ததுக்கப்புறம் பார்க்கலாம்” என்றாள் திவ்யா.

“இதெல்லாம் நியாயமே இல்லை திவ்யா... எப்ப நம்ம 750 GRP பண்றது… நான் உன்னை கல்யாணம் பண்றது?” என்றான் மார்க்ஸ்.

“தெரியல” என்பது போல தோள்களைக் குலுக்கினாள் திவ்யா.

“அநியாயம் திவ்யா” என்றான் மார்க்ஸ்.

“அவன் அவன் காதலுக்காக என்னென்னமோ பண்றான்... நீ காதலுக்காக நல்லதா நாலு ஷோ பண்ண மாட்டியா?” என்றாள் திவ்யா.

“அப்ப நீ முடிவே பண்ணிட்டே” என்றான் மார்க்ஸ்.

“யெஸ்... சேனல் 750 GRP பண்ண அடுத்த வாரமே கல்யாணம். நீ உன் வேலையை ராஜினாமா பண்ணிரு... ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருக்கலாம்... வேற வேற சேனல்ல வேலை செய்யலாம்” என சிரித்தாள் திவ்யா.

“ஒரு வேளை 750 பண்ண முடியலைன்னா?”

“கடைசிவரைக்கும் நாம காதலர்களாவே இருக்க வேண்டியது தான்” என சொல்லிவிட்டு திவ்யா உள்ளே சென்றாள். மார்க்ஸ் சிரித்தான்.

மேனன் தனது அறையில் அமர்ந்து லேப்டாப்பில் எதையோ டைப் செய்து கொண்டிருக்க, “யெஸ்க்யூஸ் மி சார்” என்ற குரல் கேட்டது.

பிரசாத் நின்று கொண்டிருந்தான்.

“சொல்லுங்க பிரசாத்” என்றார் மேனன்.

“ஒரு சின்ன என்கொயரி”

“சொல்லுங்க”

“பாம்பே ஹெச்.ஆர்-ல இருந்து எனக்கு போன் பண்ணாங்க”

மேனன் பிரசாத்தை பார்த்தபடி இருந்தார்.

“நீங்களும் தாட்சா மேமும் கல்யாணம் பண்ணிக்க போறதா அவங்களுக்கு ஒரு மெயில் வந்திருக்கு... அதை எனக்கு அவங்க ஃபார்வேர்ட் பண்ணியிருக்காங்க”

“சரி”

“இல்ல சார்... அது உண்மையா இருந்தா உங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் வேலைய ரிசைன் பண்ண வேண்டியதிருக்கும்.”

மேனன் தலையாட்டினார்.

“அந்த தகவல் உண்மையில்லைன்னு சொல்லப் போறீங்க... அந்த மெயில அனுப்புனவங்க உங்க மேலயிருக்கிற முன்விரோதத்தில அதை அனுப்பியிருக்காங்கன்னு விளக்கம் கொடுக்க போறீங்க… அதான சார்” என்றான் பிரசாத்.

இல்லை என்பதாகத் தலையாட்டினார் மேனன்.

“அப்புறம்?” எனக் கிண்டலாக கேட்டான் பிரசாத்.

“அந்த மெயிலை அவங்க உங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணியிருக்காங்களா?” என மேனன் கேட்க, “யெஸ்” என்றான் பிரசாத்.

“அந்த மெயிலை அனுப்புனது யாருன்னு பார்த்தீங்களா?”

“இல்லை... அதான் பாம்பே ஹெச்.ஆர் விஷயம் என்னன்னு சொல்லிட்டாங்களே!”

“முதல்ல அந்த மெயில அனுப்புனது யாருன்னு பாருங்க” என்றார் மேனன்.

அவசரமாக தனது கையிலிருந்த போனில் மெயில் பாக்ஸை திறந்து பார்த்தான் பிரசாத். அவன் முகம் மாறியது.

“தாட்சாவும் நானும் கல்யாணம் பண்ணிக்க போறோம்னு மெயிலை அனுப்புனதே நான்தான்... புரியுதா? ஏற்கெனவே என்னோட ரெசிக்னேஷனையும் அனுப்பிட்டேன். பாம்பே ஹெச்.ஆர் சூசனை உங்ககிட்ட பேச சொன்னதும் நான்தான்” என்றார் மேனன்.

திருடனைப் பிடிப்பது போல வந்த பிரசாத் தான் ஒரு திருடனாக அகப்பட்டுக் கொண்டதைப் போல உணர்ந்தான்.

“இந்த ஆபிஸுக்கு நான் எவ்வளவோ நல்லது பண்ணியிருக்கேன். போறதுக்கு முன்னால கடைசியா ஒரு நல்லது மட்டும் பண்ண வேண்டியிருக்கு. அது வேற ஒண்ணும் இல்லை. உன் சீட்டை கிழிக்கிறதுதான்” என்றார் மேனன்.

“சாரி சார்...சாரி சார்...” எனத் தடுமாறினான் பிரசாத்.

“கெட் அவுட்... போன் பண்ணாம என் ரூமை தட்டிட்டு நீ உள்ள வந்த அவ்வளவுதான் சொல்லிட்டேன்… இடத்தை காலி பண்ணு” என்றார் மேனன்.

“யெஸ் ஸார்… யெஸ் ஸார்” என அவன் அவசரமாக அறையை திறந்து கொண்டு ஓடினான்.

மேனன் எரிச்சலாக அவனைப் பார்த்தபடி இருந்தார்.

தொழிலாளர்களின் நலனுக்காக மேனேஜ்மென்ட்டிடம் பேசாமல் மேனேஜ்மென்ட்டின் நலனுக்காக தொழிலாளர்களை வளைத்து நெரிக்கும் பிரசாத்தின் மேல் அவருக்கு கோபம் வந்தது.

மேனன் திரும்பி தனது லேப்டாப்பை பார்க்கப்போகும் சமயம் அவரது போனடித்தது. அவர் போனை எடுத்தார்.

“சார் அவார்ட் ஃபங்ஷனுக்கான பிரசன்ட்டேஷனோட டீம் வந்திருக்காங்க சார்” என்றாள் திவ்யா.

கான்ஃபரன்ஸ் ரூமில் அற்புதம் அவரது ஆட்களுடன் அமர்ந்திருந்தார். திரையில் அவர் தயார் செய்து வைத்திருந்த பட்டியலை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் என வரிசையாக அந்த விருதுகள் யார் யாருக்கு வழங்கப்பட போகின்றன என அவர் சொல்லிக் கொண்டே போக அறையில் அமர்ந்திருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“மொத்தம் 48 பெரிய ஆர்ட்டிஸ்ட், 4 மியூஸிக் டைரக்டர், 16 டைரக்டர்ஸ், 4 மியூசிக் டைரக்டர், இது இல்லாம 6 தெலுங்கு ஸ்டார்ஸ், அப்புறம் 3 பாலிவுட் ஸ்டார்ஸ்… அவ்வளவு பேரும் அந்த ஈவ்னிங்ல ஆரஞ்ச் டிவி ஃபிலிம் அவார்ட்ஸ்ல இருப்பாங்க” என்றார் அற்புதம்.

“இதுவரைக்கும் இத்தனை ஆர்டிஸ்ட் ஒண்ணா ஒரு அவார்ட் ஃபங்ஷன்ல கூடுனதேயில்லை… இது பெரிய ரெகார்டா இருக்கும்” என்றான் அற்புதத்தின் உதவியாளன்.

அனைவரும் அந்த அவார்ட் மாலைப் பொழுதை அப்போதே மனதில் ஓட்டிப் பார்த்து சந்தோஷத்தில் வாயடைத்துக் போயிருந்தார்கள்.

“சீயோன் என்ன சொல்றீங்க?” எனக் கேட்டாள் தாட்சா.

“மேம்... இத்தன பேர் வர்றதா இருந்தா இந்த ஷோவை பெரிய விலைக்கு நாம விக்க முடியும்” என்றான் சீயோன்.

“இதுல ஒரு ஆள் வரலைன்னா கூட என்ன கேளுங்க” என அசைக்க முடியாத நம்பிக்கையுடன் சொன்னார் அற்புதம்.

“நிச்சயமா நம்ம சேனலுக்கு இதுவரைக்கும் வராத ஒரு ரேட்டிங் வரும்” என்றாள் ஏஞ்சல்.

“உங்க சேனலோட இமேஜே வேற லெவலுக்கு போயிடும்” என்றார் அற்புதம்.

“இவ்வளவு பேரு ஆரஞ்சு டிவி அவார்ட்ஸை மட்டும் வாங்கப் போறதில்லை… ஆரஞ்ச் டிவி அவார்டை வாங்குறது மூலமா ஆரஞ்ச் டிவிக்கு பெரிய அங்கீகாரத்தை தரப் போறாங்க” என்றார் அற்புதத்தின் உதவியாளன்.

மேனன் திரும்பி மார்க்ஸைப் பார்த்தார்.

மார்க்ஸ் முகம் எந்த சலனமும் இல்லாமல் இருந்தது.

“மார்க்ஸ் எனி தாட்ஸ்” என கேட்டார் மேனன்.

மார்க்ஸ் மெதுவாக தொண்டையை செருமிக் கொண்டவன் அற்புதத்தை பார்த்தபடி “ஜூரி யாருன்னு ஃபிக்ஸ் பண்றதுக்கு முன்னாலயே அவார்ட் யாருக்குன்னு ஃபிக்ஸ் பண்ணிட்டீங்களே சார்” என்றான்.

அற்புதம் சத்தமாகச் சிரித்தார்.

“நாம ஃபிக்ஸ் பண்ற ஜூரிங்களும் இதே அவார்ட் லிஸ்ட்டைத்தான் தருவாங்க போதுமா?”

“இல்ல சார். ஜூரிஸ் ஃபிக்ஸ் பண்ணி ஒவ்வொரு கேட்டகிரிக்கும் நாலு பேரை நாமினேட் பண்ண வெச்சு, ஒரு மாசம் அதுல யாரு பெஸ்ட்டுன்னு செலக்ட் பண்ண சொல்லி ப்ரோமோஸ் ஓட்டி, மக்களை ஒட்டு போட வச்சு… அதுக்கப்புறம்தான சார் அவார்ட் யாருக்குன்னு முடிவு பண்ண முடியும்?” என்றான் மார்க்ஸ்.

“நீங்க சொல்ற எல்லாமே நடக்கும்... அதெல்லாம் நடந்து ஃபைனலா இவங்க தான் செலக்ட் ஆவாங்க” என்றார் அற்புதம்.

“அது எப்படி சார்?” என மார்க்ஸ் மீண்டும் கேட்க அற்புதம் முகம் மாறினார்.

“நீங்க பெஸ்ட் ஹீரோன்னு சொல்லி முகுந்த் பேரை சொல்லியிருக்கீங்க… ஆனா நியாயமா இந்த வருஷத்தோட பெஸ்ட் ஹீரோ சதீஷுக்குத்தான சார் போகணும்” என்றான் மார்க்ஸ்.

“சதீஷ் தேர்ட் லெவல் ஹீரோ... ஆனா, முகுந்த் மெகா ஸ்டார். அவரை பெஸ்ட் ஹீரோவா செலக்ட் பண்ணா அவருக்கு அவார்ட் குடுக்குறதுக்கு பாலிவுட் ஸ்டார் ஒருத்தரை அவரே பேசி அவரோட செலவுல கூட்டிட்டு வர்றதா சொல்லியிருக்காரு... அவரோட ரசிகர்கள் தமிழ்நாடு பூரா இருநூறு கட் அவுட் வைக்க போறதா சொல்லியிருக்காங்க... உங்க ஆரஞ்ச் டிவி லோகோவோட…”

அனைவரும் ஆச்சரியம் மேலிட அவரைப் பார்த்தார்கள்.

“ஆனாலும் அவர் பெஸ்ட் ஆக்டர் இல்லையே சார்” என்றான் மார்க்ஸ்.

“முகுந்த் பெஸ்ட் ஆக்டர் இல்லைன்னு சொல்றீங்களா?” என கேட்ட அற்புதத்தின் குரலில் மெலிதான கோபம் எட்டிப்பார்த்தது.

“நான் அப்படி சொல்லல சார். இந்த வருஷம் ரிலீசான அவரோட படத்துக்காக அவருக்கு இந்த அவார்ட் குடுக்க முடியாதுன்னு சொல்றேன்” என்றான் மார்க்ஸ்.

அற்புதம் எதுவும் பேசாமல் அவனை முறைத்தார்.

“இது மட்டும்தானா இல்ல வேற எதுவும் இருக்கா?” என கேட்டார் அற்புதத்தின் உதவியாளர்.

“ஹீரோயின் கூட ராணிக்கு எந்த அடிப்படையில தர்றதா சொல்றீங்கன்னு தெரியல” என்றான் மார்க்ஸ்.

“ராணிக்கு அவார்ட் கொடுக்குறதுக்காக அவங்களோட ஃபிரண்ட்ஸ் மூணு பேர் வர்றாங்க” என்றார் உதவியாளன்.

“யாரு” என ஆர்வமாக கேட்டான் சீயோன்.

“ரஞ்சனா, நந்தினி, ஸ்வேதா...” என அற்புதம் சொல்லி முடித்த அடுத்த கணம் அறையில் இருந்த அனைவரும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார்கள். தென்னிந்தியாவின் மூன்று முன்னணி ஹீரோயின்களின் பெயரைச் சொல்லிவிட்டு கர்வமாக அறையில் இருந்தவர்களை பார்த்தபடி அமர்ந்திருந்தார் அற்புதம்.

“அந்த நாலு ஹீரோயினை ஒன்னா, ஒரே ஸ்டேஜ்ல யோசிச்சுப் பாருங்க...” என்றார் அற்புதத்தின் உதவியாளர்.

“சார் இது நடிகர் நடிகைகளோட கலைவிழா இல்ல சார்... அவார்ட் ஃபங்ஷன்... யாரு தகுதியான ஆளுங்களோ அவங்களுக்குத்தான சார் அவார்ட் கொடுக்க முடியும்” என்றான் மார்க்ஸ்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

அதை சொல்லிவிட்டு அறையில் இருக்கும் அனைவரையும் சுற்றிப் பார்த்தான் மார்க்ஸ். அவர்கள் பார்த்த பார்வை அவர்கள் அனைவரும் அற்புதத்தின் பக்கமிருக்கிறார்கள் என்பதைக் காட்டியது.

“சரி... யாரு பெஸ்ட் ஹீரோயின்னு நீங்க சொல்லுங்க சார்” எனக் கேட்டார் அற்புதம்.

“ ‘அவளின் கதை’ பண்ண பத்மினிக்குத்தான் சார் அந்த அவார்ட் போகணும்” என்றார் மார்க்ஸ்.

“அவங்களுக்கும் ஒரு அவார்ட் குடுங்க சார்... அதை நான் வேணாம்னு சொல்லலையே” என்றார் அற்புதம்.

“என்ன அவார்ட் சார்”

“பெஸ்ட் ஆக்ட்ரஸ் ஜூரி அவார்ட்... நடிகையர் திலகம் சாவித்ரி அவார்ட்… இப்படி ஏதாவது ஒண்ணு கிரியேட் பண்ணி கொடுக்கலாம்”

“கரெக்ட்” எனத் தன்னையறியாமல் சொன்னாள் ஏஞ்சல்.

“அப்படி இஷ்டத்துக்கு அவார்ட் லிஸ்ட்டை கூட்டிக்கிட்டே போனா நல்லாயிருக்காதே சார்” என்றான் மார்க்ஸ்.

“இங்க பாருங்க... உங்களுக்கு புரியல... அவார்ட் ஃபங்ஷனோட சக்ஸஸ் எவ்வளவு பெரிய ஆளுங்க அந்த ஃபங்ஷனுக்கு வர்றாங்க, உங்க அவார்ட் எவ்வளவு பெரிய ஆளுங்க வீட்ல இருக்குன்றதுலதான் இருக்கு... நீங்க சொல்ற ஆளுங்களுக்கு எல்லாம் அவார்ட் குடுத்தா அதை நீங்களே உங்க வீட்ல போட்டு பார்த்துக்க வேண்டியதுதான்” என எழுந்தார் அற்புதம்.

அவருடன் வந்தவர்களும் எழுந்தார்கள்.

“நீங்க முடிவு பண்ணிட்டு சொல்லுங்க சார்...” என்றார் அற்புதம்.

“நியாயமா ஒரு அவார்ட் ஷோ பண்ண முடியாதா?” என கேட்டான் மார்க்ஸ்.

“நியாயமா இந்த வருஷத்துக்கான வில்லன் அவார்ட் யாருக்கு போகணும் சொல்லுங்க” எனக் கேட்டார் அற்புதம்.

“விக்கிக்கு குடுக்கணும்”

“கரெக்ட்... ஆனா அந்தாளு எந்த அவார்ட் ஃபங்ஷனுக்கும் வர மாட்டாரு... நீங்க அவருக்கு அவார்டுன்னு அனவுன்ஸ் பண்ணிட்டு அந்த அவார்டை நீங்களே வச்சுக்க வேண்டியதுதான். பாக்குற ஆடியன்சுக்கு அதுல என்ன த்ரில் இருக்கு சொல்லுங்க... நம்மளை மதிச்சு வர்றவங்களுக்கு அவார்ட் கொடுக்கணும் சார். நல்ல ஆக்டராவே இருக்கட்டும் நம்ம ஃபங்ஷனுக்கு வராத ஒரு ஆளுக்கு ஏன் நாம அவார்ட் குடுக்கணும்? இதெல்லாம் உங்க கிட்ட விளக்கணும்னு அவசியம் இல்லை... ஆனாலும் என் பக்க நியாயம் என்னன்னு உங்களுக்கு தெரியனும்றதுக்காக சொல்றேன்... யோசிச்சு சொல்லுங்க” என சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் அறையிலிருந்து வெளியேறினார் அற்புதம்.

அனைவரும் மார்க்ஸைப் பார்த்தனர்.

“அவர் சொல்ற மாதிரி அவார்ட் குடுத்தா நம்மளை கழுவி கழுவி ஊத்துவாங்க” என்றான் மார்க்ஸ்.

“யாரு ஃபேஸ்புக்குல கமென்ட் போடுற அந்த ஆயிரத்தி இருநூறு பேரா?” எனக் கேட்டாள் ஏஞ்சல்.

மார்க்ஸ் அவளை ஏறிட்டு பார்த்தான்.

“அவர் சொல்ற மாதிரி இந்த ஃபங்ஷன் நடந்தா பத்து TRP-க்கு மேல வரும். எது வேணும்ன்னு இங்க இருக்கிறவங்க தான் முடிவு பண்ணனும்’’ என்றாள் ஏஞ்சல்.

அனைவரும் மார்க்ஸைப் பார்த்தார்கள்.

“எல்லா அவார்ட் ஃபங்ஷன்லயும் சின்ன அட்ஜெஸ்மென்ட் இருக்கத்தான் செய்யும் மார்க்ஸ்” என்றான் சீயோன்.

“உன் மனசாட்சிக்கு எது சரினு யோசிச்சு பண்ணப்போறியா, இல்ல சேனலுக்கும் அதோட வளர்ச்சிக்கும் எது நல்லதோ அத பண்ண போறியான்னு யோசி” என்றாள் ஏஞ்சல்.

அனைவரும் மார்க்ஸின் பதிலுக்காக காத்திருந்தார்கள். மார்க்ஸ், மேனைப் பார்த்தான்!

Stay Tuned...