Published:Updated:

"அது என்னடா கார்ப்பரேட் நியாயம்... காபி கடை நியாயம்!"- இடியட் பாக்ஸ் - 2

இடியட் பாக்ஸ் - 2
News
இடியட் பாக்ஸ் - 2

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

"அது என்னடா கார்ப்பரேட் நியாயம்... காபி கடை நியாயம்!"- இடியட் பாக்ஸ் - 2

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ் - 2
News
இடியட் பாக்ஸ் - 2

பில்டிங்கிற்குள் நுழைந்து பத்தாம் எண் பட்டனை அழுத்த லிஃப்ட் நகரத் தொடங்கியது. லிஃப்டில் யாரும் இல்லாதது மார்க்ஸுக்கு ஆறுதலாக இருந்தது. லிஃப்டின் கண்ணாடியில் மார்க்ஸ் தன்னைப் பார்த்துக் கொண்டான். வேறு யாரையோ பார்ப்பது போல அவனுக்கு இருந்தது.

சின்ன சத்தத்துடன் லிஃப்ட் திறக்க பத்தாவது மாடியில் மார்க்ஸ் நுழைந்தான். மார்க்ஸைப் பார்த்த ஃப்ளோர் செக்யூரிட்டி ஆப்ரகாம் எழுந்து வணக்கம் வைத்தார். தலையாட்டியபடி மார்க்ஸ் தனது ஐடி கார்டை கதவைத் திறப்பதற்காக காட்ட… பதற்றமாக ஆப்ரகாம் “சார் கார்டு வேலை செய்யல சார்” என்றார்.

“ஏன்?”

“இல்ல சார் அது வந்து…”

“அதுக்குள்ள ஆரம்பிச்சிடானுங்களா?”

ஆப்ரகாம் அவரசமாக பட்டனை அழுத்த கதவு திறந்தது.

கூட்டமாக ஏழெட்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.

“மார்க்ஸ் சார்...” என ஜெயந்தி ஓடி வந்து அவனை அணைத்துக்கொண்டு அழத் தொடங்கினாள்.

மார்க்ஸ் சற்று பதறிப்போனான்.

“என்னாச்சு... என்னாச்சு ஜெயந்தி?”

“பேப்பர் குடுத்துட்டானுங்க மார்க்ஸு” என சொன்ன ஜெகன் முகத்தில் உயிரே இல்லை.

“யாரு பிரசாத் கூப்பிட்டு குடுத்தானா?”

“அவன் ரூம்ல இருந்து வரவே இல்லை சார். மனோன்மணி கையில குடுத்து எல்லாருக்கும் பேப்பர குடுக்க சொல்லிட்டான்.”

“ஆள் யாரையும் தூக்குற பிளான் இல்லன்னு அன்னைக்கு அந்த பாம்பேகாரன் சொன்னானே!”

“எல்லாம் முடிஞ்சு போச்சு தல” என வருத்தமாக சாய் சொல்ல…

“நீங்க தான் சார் கேக்கணும்” என்றான் ஜெகன்.

மார்க்ஸ் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் அவனைப் பார்த்தான்.

“எனக்கு புரியுது சார்… நீங்க செய்றதுக்கு ஒண்ணும் இல்லை... எதுக்கும் ஒரு வாட்டி பேசிப்பாருங்க சார்… 16 வருஷம் சார்… ராத்திரி பகலா இந்த கம்பெனிக்காக வேலை செஞ்சு கடைசியில ஒண்ணும் இல்லாது போச்சு... பட்டுன்னு ஒரு பேப்பரைத் தூக்கி குடுத்து கிளம்புன்னுட்டானுங்க!”

மார்க்ஸ் அதற்கு எப்படி பதில் சொல்வது எனத் தெரியாமல் அவன் சொன்னதை ஆமோதிப்பது போல தலையாட்டினான்.

அவனது செல்போன் அலறியது.

போனில் 'Dhatchayani GM' என ஒளிர்ந்தது. போனை எடுத்தான்.

“தாட்சா…”

“எங்க இருக்க?”

“டென்த் ஃப்ளோர் ரிசப்ஷன்ல…”

“கொஞ்சம் மேல என் ரூமுக்கு வா…”

“வரேன்...”

போனை கட் செய்தவன், “மேடம்தான் கூப்புடுறாங்க... பார்த்துட்டு வந்துர்றேன்…” என்றான்.

“மேடத்த பாக்கத்தான் நாங்க எல்லாம் வெயிட் பண்றோம். காலையில இருந்து மீட்டிங்லயே இருக்காங்க… நீ சொல்லு மார்க்ஸு” என்றான் ஜெகன்.

மார்க்ஸ் மீண்டும் லிஃப்டில் ஏறினான். கவலைப்படிந்த முகங்கள் அவனைப் பரிதாபமாக பார்த்தபடி இருக்க கதவு மூடியது. அவர்களது முகங்கள் அவன் மனதை ஏதோ செய்வது போல உணர்ந்தான்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

13-வது மாடியில் லிஃப்ட் வந்து நிற்க… அவன் தாட்சாயணியின் அறையை நோக்கி நடந்தான்.

கண்ணாடி கதவு வழியாக பார்க்க தாட்சாயிணியின் அறை காலியாக இருந்தது.

“மேடம் உங்களை உள்ள வெயிட் பண்ண சொன்னாங்க” என்றாள் வெளியே உட்கார்ந்திருந்த தாட்சாவின் செக்ரட்டரி நான்ஸி.

“மேடம் எங்க?”

“கான்ஃபிரன்ஸ் ரூம்ல...”

“பாம்பேகாரனுங்களோடயா?”

ஆமாம் எனத் தலையாட்டியவள், “மார்க்ஸ் என்னயும் தூக்கிருவாங்களா?” என பரிதாபமாகக் கேட்டாள்.

“யார் வந்தாலும் அவங்களுக்கு ஒரு செகரட்டரி வேணும்தான...” அவளது கேள்விக்கு அவளே பதிலை சொல்லிக்கொள்ள…

“உனக்கு எல்லாம் ஒண்ணும் பிரச்னை வராது நான்சி... நீ ஏன் டென்ஷன் ஆகுற?” என சொல்லிவிட்டு தாட்சாவின் அறைக்குள் நுழைந்தான் மார்க்ஸ்.

மெல்ல தாட்சாயணியின் அறையை சுற்றிப்பார்க்க… விருதுகள், சுவர் ஓவியங்கள், வொயிட் போர்ட் அதன் அருகில் பெரியதாக போன தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட குரூப் போட்டோ. மார்க்ஸ் சின்ன புன்னகையுடன் அந்த போட்டோவைப் பார்த்தபடியே இருந்தான்.

புகைப்படத்தில் இருக்கும் அனைவரது முகத்திலும் உற்சாகம், சந்தோஷம். 'ஓ' என கத்தியபடி அனைவரும் உறைந்துபோயிருந்தார்கள். அவன் எப்போது அந்த அறைக்கு வந்து அந்த புகைப்படத்தை பார்த்தாலும் அவனுக்கு ஏதோ ஒரு விஷயம் புதியதாகத் தென்படும். மார்க்ஸ் அந்த புகைப்படத்தை உற்றுப் பார்க்க… பீட்டர், லட்சுமியின் தோளில் கை வைத்தபடி நின்று கொண்டிருந்தது அப்போதுதான் அவன் கண்ணில் பட்டது.

லட்சுமி - பீட்டர் கல்யாணம் நடந்தபோது 'இது எப்படி நடந்தது' என மொத்த ஆபிஸும் ஆச்சர்யப்பட்டது. சம்பந்தம் இல்லாத டிப்பார்ட்மென்ட், வெவ்வேறு ஃப்ளோர் என இருவரையும் ஒன்றாக லிஃப்ட்டில் கூட யாரும் பார்த்ததில்லை. ஆனால் 2 வருட காதல் எனப் பிறகுதான் சொன்னார்கள். புகைப்படத்தை பார்த்த மார்க்ஸ் முகத்தில் புன்னகை மலர… இந்த போட்டோவில் ஜோடியா நின்னத பார்த்திருந்தா அப்பவே பிடிச்சிருக்கலாமே என அவன் யோசித்தபடி இருக்க... தாட்சாயணி அறைக்கதவை திறந்தபடியே உள்ளே வந்தாள்.

“தாட்சா…”

“ஒரு 5 மினிட்ஸ் குடு… எதுவும் கேட்காத எதுவும் சொல்லாத…” என அவள் டேபிளில் இருந்த வாட்டர்பாட்டிலை எடுத்து தண்ணீரை குடித்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்.

தாட்சா முப்பதுகளின் இறுதியில் இருப்பவள். பச்சை நிற காட்டன் புடவை, கழுத்தில் மெல்லிய ஒற்றை சங்கிலி. சின்ன தலைமுடியை போனிடெயில் ஸ்டைலில் முடிந்திருந்தாள். அவளது வெள்ளை முகத்தில் புடவைக்கு மேட்சிங்காக பச்சை நிறத்தில் பொட்டு, அழகிய முகம்.

“தாட்சா நீங்க ஏன் புது ஷோ ஆங்கர் பண்ண கூடாது" எனப் பல தடவை அவளிடம் மார்க்ஸ் கேட்டிருக்கிறான். ''போடா" என அவள் மறுத்துவிட்டு போகும்போது அவள் முகம் வெட்கத்தில் சிவப்பதைப் பார்க்கமுடியும். அலுவலக விழாக்களில் தாட்சாவை மேடைக்கு அழைக்கும் போதெல்லாம் 'ஆரஞ்ச் டிவியின் ரம்யா கிருஷ்ணன் மேடைக்கு வரவும்' என்றுதான் அழைப்பார்கள். முகம் சிவக்க அவள் மேடைக்கு வரும் போது கரவொலியும் விசிலும் தூள் பறக்கும்.

அன்பும் கண்டிப்பும் கலந்த முகம் அவளுடையது. “அது எப்படி தாட்சா எல்லா கேள்விக்கும் உங்ககிட்ட பதில் இருக்கு, எப்படி எல்லா பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கு” என ஆச்சர்யத்துடன் பல தடவை மார்க்ஸ் அவளிடம் கேட்டதுண்டு.

சாதாரண நிலையில் இருந்த அந்த சேனலை தூக்கி நிறுத்தியதில் அவளுக்குப் பெரும் பங்குண்டு.

எப்போதும் பரபரப்பாக புன்னகையுடன் இருக்கும் தாட்சாவை முதன் முறையாக இப்படி மெளனமாக பார்ப்பது மார்க்ஸுக்கு சங்கடமாக இருந்தது. ஏதாவது ஆறுதலாக இரண்டு வார்த்தை பேசலாமா என யோசித்த மார்க்ஸ் அதை விட மெளனம் அவளை ஆசுவாசப்படுத்தும் என்பதை உணர்ந்து அமைதியாக இருந்தான்.

தமிழகத்தின் பிரபலமான டிவி சேனல்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிற சேனல் ஆரஞ்சு டிவி. அதன் பிஸினஸ் ஹெட் தாட்சா... புரோகிராமிங் ஹெட் மார்க்ஸ். இரண்டாவது இடத்தில் இருக்கும் சேனல் என்றதும் பெரிதாக யோசித்துவிட வேண்டாம். முதலில் இருக்கும் சேனலின் GRP 1400. ஆரஞ்சு டிவியின் GRP 175. அதற்கு பின்னால் மூன்றாவது நான்காவது ஐந்தாவது இடத்தில் இருக்கும் சேனல்கள் எல்லாம் 80, 50, 30 GRP என ஓடிக்கொண்டிருக்கின்றன.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்
GRP என்றால் என்ன என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு எல்லோருக்கும் தெரிந்த TRP-யைப் புரிந்துகொள்ள வேண்டும். அரை மணி நேரத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியை எத்தனைப் பேர் பார்த்தார்கள் என்கிற கணக்குதான் TRP. அதாவது டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட். ஒரு நாளில் மொத்தம் 48 அரை மணி நேரங்கள். வாரத்துக்கு 336 அரைமணி நேரங்கள். இந்த 336 அரை மணி நேரத்தின் TRP-யையும் கூட்டினால் என்ன வருகிறதோ அதுதான் அந்த வாரத்தின், அந்த சேனலின் GRP. அதாவது கிராஸ் ரேட்டிங் பாயின்ட்.

ஒரு நிகழ்ச்சி நன்றாக இருந்தால் அதன் டிஆர்பி நன்றாக இருக்கும். அப்படி நிறைய நல்ல நிகழ்ச்சிகள் ஒரு சேனலில் இருந்தால் அதன் ஜிஆர்பி நன்றாக இருக்கும். ஆரஞ்சு டிவியை ஆரம்பித்தது ஒரு அரசியல்வாதி. அவரிடம் இருந்து ஐந்தாறு பேரிடம் கைமாறி கடைசியாக அது மகாதேவனிடம் வந்தபோதுதான் அதன் தலையெழுத்தே மாறியது. மகாதேவன் லண்டனில் தொலைக்காட்சி சம்பந்தமாகப் படித்துவிட்டு வந்த கோயம்புத்தூர்காரர்.

ஆரஞ்ச் டிவி GRP-யில் முதல் இடத்தில் இருக்கும் சேனலோடு போட்டிபோடவில்லையென்றாலும் கூட தரமான நிகழ்ச்சிகள் என்றால் அது ஆரஞ்ச் டிவிதான் என மக்களிடம் நல்ல பெயர் வாங்கியிருந்தது. அது கமர்ஷியல் இது குவாலிட்டி... இது தான் முதல் இரண்டு சேனல்களுக்கும் இடையில் இருந்த அடையாளம்.

ஆரஞ்ச் டிவியில் எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டு இருப்பதாக எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த நேரத்தில்தான், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மல்ட்டிநேஷனல் கார்ப்பரேட் நிறுவனம் இந்த சேனலை வாங்கப்போவதாகத் தகவல் பரவியது.

அந்த நிறுவனத்துக்கு இந்தியா முழுக்க ஒவ்வொரு மாநிலத்திலும் சேனல்கள் இருந்தன. தமிழில்கூட அவர்கள் தனியாகச் சேனல் தொடங்கப்போவதாகத்தான் முதலில் பேச்சுகள் இருந்தது. ஆனால், அவர்கள் ஆரஞ்ச் டிவியை வாங்கியது திடீர் திருப்பம்.

ஆரஞ்ச் டிவியை அவர்கள் வாங்கிய அந்த நிமிடத்தில் இருந்தே ஏதோ நடக்க போகிறது என்ற பயம் ஊழியர்களிடம் பரவ ஆரம்பித்துவிட்டது. அது இன்று நடக்கும் என்பது மட்டும்தான் எல்லோரும் எதிர்பாராத ஒரு விஷயம்.

தாட்சாயணி கண்களைத் திறந்து பார்க்க... மார்க்ஸ் அவளைப் பார்த்தபடியே இருந்தான்.

“போலாமா” என தாட்சாயிணி கேட்க, “எங்க தாட்சா” என்றான் மார்க்ஸ்.

“வா...” என எழுந்தவள் அவனைப் பார்த்து, “வாயை மூடிக்கிட்டு அமைதியா இருக்கணும். எதுவா இருந்தாலும் நான்தான் பேசுவேன்…” எனச் சொல்ல மார்க்ஸ் புன்னகையுடன், “அது கஷ்டமாச்சே தாட்சா …” என்றான்.

“அது எனக்குத் தெரியும்.... அதான் முதல்லயே சொல்றேன். உள்ள ஏதாவது வாயைத் திறந்தே கொன்னுடுவேன்...” எனச் சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் தாட்சா வேகமாக நடந்து செல்ல மார்க்ஸ் அவளைப் பின்தொடர்ந்து சென்றான்.

சட்டை கையை மேலும் ஒருதடவை மடித்து கொண்டு கையில் இருக்கும் வளையத்தை மேலே ஏற்றி இறுக்கிக் கொண்டு அவன் போகும் தோரணை பெரியதொரு சண்டைக்கான ஆரம்பம் என்பது போல நான்ஸிக்குத் தோன்றியது.

“கார்ப்பரேட் நியாயம்ன்னு ஒண்ணு இருக்கு மார்க்ஸ்...”

“அது என்னடா கார்ப்பரேட் நியாயம்... காபிகடை நியாயன்னுகிட்டு... நியாயம்ன்றது ஒண்ணுதான். ஆளாளுக்கு மாறாது!” என மார்க்ஸ் எப்போதோ சண்டை போட்டது நான்ஸிக்கு அப்போது ஞாபகத்துக்கு வந்துபோனது. நிச்சயமாக இப்போது ஏதோ நடக்கப் போகிறது என ஆர்வத்தோடு காத்திருந்தாள்.

- Stay Tuned...