Published:Updated:

இடியட் பாக்ஸ்: 16 | ஒரு முத்தம்... ஒரு ஜோசியம்... ஒரு திடீர் வெறுப்பு!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ்: 16 | ஒரு முத்தம்... ஒரு ஜோசியம்... ஒரு திடீர் வெறுப்பு!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

மார்க்ஸ் தனது புல்லட்டை தல்வார் டவர் டூ வீலர் நிறுத்தும் இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். அருகில் நின்ற ஸ்கூட்டி ஒன்றின் கண்ணாடியில் தன்னை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டான்.

சிகரெட் ஒன்றை எடுத்து வாயில் வைத்தவன் லைட்டருக்காக பாக்கெட்டை துழாவ அது காலியாக இருந்தது. சிகரெட்டை பையில் போட மனமில்லாமல் அதே சமயம் செக்யூரிட்டியிடமும் தீப்பெட்டி வாங்கி பற்ற வைக்கத் தோன்றாமல் நின்று கொண்டிருந்தான். திவ்யா கொடுத்த முத்தத்தின் ஈரம் கன்னத்தில் இன்னும் காயாமல் இருப்பது போலவே இருந்தது.

தன்னிச்சையாக அவனது கரங்கள் தாடையை தடவிக் கொண்டன. மேலே போனால் திவ்யாவைப் பார்த்தாக வேண்டும். அவளை எப்படி எதிர்கொள்வது என மார்க்ஸுக்கு தயக்கமாயிருந்தது. அந்தத் தயக்கம் அவனுக்குப் புதிதாகவும் இருந்தது. பெருமூச்சு விட்டவன் சிகரெட்டை பாக்கெட்டில் போட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

மார்க்ஸ் லிஃப்டில் நுழைந்து 13-வது ஃப்ளோர் பட்டனை அழுத்தினான். லிஃப்ட் கதவு மூடப்போகும் சமயம் ஏஞ்சல் ஓடி வந்தாள். லிஃப்டில் மார்க்ஸ் தனியாக இருப்பதை பார்த்து அவள் உள்ளே வரத் தயங்க, கதவு மூடப் போக மார்க்ஸ் ஒரு கையால் லிஃப்டின் கதவைத் தடுத்தபடி “வா” என்றான்.

ஏஞ்சல் வேறு வழியில்லாமல் லிஃப்டின் உள்ளே நுழைந்தாள்.

கதவு மூடியது...

அந்த பெரிய லிஃப்டில் ஏஞ்சலும் மார்க்ஸும் மட்டும் தனித்திருந்தார்கள்.

ஒரக்கண்ணால் மார்க்ஸை நோட்டமிட்ட ஏஞ்சல் அவன் முகத்தை பார்க்காமல் நேராகப் பார்த்தபடி, “என்ன வீட்டுக்குப் போன்னு துரத்திட்டு நீ மட்டும் நேத்து திவ்யாவோட தனியா போனியாமே” என்றாள்.

மார்க்ஸ் புன்னகையுடன் திரும்பி, “ஆமா” என்றான்.

“எங்க போனீங்க?”

“சும்மா அப்படியே லீலா பேலஸ்ல இருந்து திவ்யாவோட ஹோட்டல் வரைக்கும் பேசிக்கிட்டே நடந்து போனோம்.”

“மனசில என்ன '96' பட த்ரிஷா - விஜய் சேதுபதின்னு நினைப்பா?”

மார்க்ஸ் சிரித்தபடி, “எக்ஸாக்ட்லி.... செமயா புடிக்கிற”

“அதுக்கப்புறம்?”

“அப்புறம் என்ன... திவ்யாவை ஹோட்டல்ல டிராப் பண்ணிட்டு நான் ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போயிட்டேன்”

“அவ்வளவுதானா?”

“வேற ஒண்ணு நடந்திச்சு... ஆனா அதை நான் சொன்னா நீ நம்பமாட்ட!”

“நீ முதல்ல சொல்லு... அது நம்புற மாதிரி இருக்கான்னு நான் அப்புறம் சொல்றேன்”

“திவ்யா எனக்கு முத்தம் குடுத்தாங்க” என்றான் மார்க்ஸ்.

குபீரென சிரித்தாள் ஏஞ்சல்!

மார்க்ஸ் புன்னகையுடன் அவளை பார்த்தபடியே இருந்தான். அவள் நம்பமாட்டாள் என்பது அவனுக்கு தெரியும். அவனாலேயே நம்ப முடியவில்லை எனும்போது ஏஞ்சலாவது நம்புவதாவது....

ஏஞ்சல் அடக்க முடியாமல் தொடர்ந்து சிரித்தபடி இருக்க....

“நான்தான் சொன்னேன்ல நீ நம்ப மாட்டேன்னு...”

ஏஞ்சல் சிரிப்பை கட்டுப்படுத்தியபடி, “போதையில நீ திவ்யாவுக்கு முத்தம் குடுத்திட்டேன்னு சொன்னாகூட நான் நம்பியிருப்பேன். ஆனா அவங்க உனக்கு குடுத்தாங்கன்னு உட்டே பாரு ஒரு உடான்ஸு...” என மீண்டும் சிரித்தாள்.

லிஃப்ட் கதவு திறந்தது...

ஏஞ்சல் சிரித்தபடி வெளியே வந்தவள் திரும்பி லிஃப்டின் கதவைப் பிடித்தபடி, “நீ இப்படி எல்லாம் சொன்னா நான் வெறுப்பாவேன்னு நினைக்கிறயா... சான்சே இல்லை... நீ யாருக்கு வேணா முத்தம் குடு... கட்டிப்பிடி... எனக்கெல்லாம் அது ஒரு விஷயமே இல்ல... அப்புறம் இன்னொரு விஷயம், அடுத்த தடவ பொய் ஏதாவது சொன்னா கொஞ்சம் நம்புற மாதிரி சொல்லு... என்ன சரியா?”

“இல்ல ஏஞ்சல் நிஜமாத்தான்...”

“போடா... மனசுல பெரிய ரன்பீர் கபூர்ன்னு நினைப்பு” என சொல்லிவிட்டு ஏஞ்சல் நகர்ந்தாள்.

மார்க்ஸ் சிரித்துக் கொண்டான். லிஃப்ட் 13-வது மாடியை நோக்கி நகரத் தொடங்கியது.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

திவ்யா தனது அறையில் அமர்ந்திருந்தாள். எதிரே லேப்டாப் இருந்தாலும் அவளது கண்கள் கண்ணாடி கதவு வழியாக அவளது அறையைத்தாண்டி யாராவது போகிறார்களா என்பதை நோட்டமிட்டபடி இருந்தது.

அவளது அறையைத் தாண்டித்தான் மார்க்ஸ் அவனது அறைக்குப் போக வேண்டும். ஆபீஸ் பாய் ஒருவன் காபியுடன் அவளது அறையை கடந்து போக ஒரு கணம் சட்டென இதயம் நின்று மீண்டும் துடித்தது திவ்யாவுக்கு... என்ன அவஸ்தை இது... ஒரு முறை மார்க்ஸை சந்தித்து நடந்ததைப் பேசிவிட்டால் இந்தப் பதற்றம் தணிந்து எல்லாம் சரியாகிவிடும் என்று தோன்றியது அவளுக்கு!

லேப்டாப்பில் மெயிலை படிக்கப் போனவள் தன்னை அறியாமல், “சே” என்று சத்தமாகவே சொல்லிக் கொண்டாள். அவள் அப்படி நடந்து கொண்டதை அவளாலேயே நம்ப முடியவில்லை.

அந்த இரவு, தனிமை, மார்க்ஸின் சிரிப்பு என எல்லாவற்றின் மேலும் அவளுக்குக் கோபம் வந்தது. மீண்டும் மீண்டும் அவளது எண்ணங்களில் அந்தக் காட்சி திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டேயிருந்தது.

மார்க்ஸை முத்தமிட்ட அடுத்த கணத்திலேயே திவ்யாவுக்கு தான் நிதானம் இழந்துவிட்டோம் எனப் புரிந்துவிட்டது. முத்தம் கொடுத்ததும் அவள் சட்டென விலகி நிற்க... மார்க்ஸ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

“குட் நைட்... காலையில பார்க்கலாம்” என அவன் கண்களை தவிர்த்து தலையை குனிந்தபடி சொன்னவள் திரும்பி விறுவிறுவென நடந்து ஹோட்டலுக்குள் வந்துவிட்டாள். நடுவில் ஒரு முறை கூட அவள் திரும்பிப் பார்க்கவில்லை... அந்த தைரியம் அவளிடம் இல்லை... அறைக்குள் நுழைந்து படுக்கையில் பொத்தென விழுந்த பிறகும் அவளுக்குப் படபடப்பு அடங்கவில்லை. எத்தனை முறை யோசித்தாலும் அந்த முத்தம் எப்படி நிகழ்ந்தது என அவளுக்கு சரியாகப் புரியவில்லை. அந்த முத்தத்திற்கான மார்க்ஸின் ரியாக்ஷன் என்ன என்பதையும் அவளால் நினைவுபடுத்தி பார்க்க முடியவில்லை.

இரவுவெல்லாம் உறக்கம் வராமல் தவித்தவள் தன்னை மறந்து கண்ணயர்ந்தபோது பொழுது விடிந்திருந்தது. உறங்கிய கொஞ்ச நேரத்திலேயே நந்திதா அவளை எழுப்பிவிட்டாள். நல்ல வேளையாக அவள், "நேத்து நைட் எங்கே போன?" எனக் கேள்விகள் எதுவும் கேட்கவில்லை.

திவ்யா டேபிளில் இருக்கும் வாட்டர் பாட்டிலை எடுத்து குடிக்கப்போக கண்ணாடி கதவு வழியாக மார்க்ஸ் அவளது அறையை கடந்து போனான். கையில் இருக்கும் பாட்டிலுடன் அப்படியே அசையாது இருந்தாள் திவ்யா. மனம் படபடவென அடித்துக் கொண்டது. அவனைக் கூப்பிடலாமா? அவனது அறைக்கு சென்று அவனிடம் பேசலாமா? இல்லை இன்ட்டர்காமிலேயே பேசிவிடலாமா எனப் பலவாறு யோசனைகள் திவ்யாவுக்குள் ஓடியது.

அவள் என்ன செய்யலாம் என யோசித்தபடி இருக்கும்போதே அவளது அறைக்கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தான் மார்க்ஸ்.

“குட் மார்னிங்” என மார்க்ஸ் சொல்ல....

அவனைத் தவிர்த்து லேப்டாப்பை பார்த்தபடி, “யெஸ்”

என்றாள் திவ்யா.

“பிஸியா?”

“ஆமா”

“2 மினிட்ஸ் கிடைக்குமா” என மார்க்ஸ் அவளைப் பார்த்தபடியே இருக்க... திரும்பிய திவ்யா அவன் கண்களைப் பார்க்காமல் பொத்தாம் பொதுவாக, “சொல்லுங்க” என்றாள்.

மார்க்ஸ் எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் ஒரு கணம் தயங்கி...

“இல்ல நேத்து நடந்தது...”

“அதை நான் நேத்தே மறந்துட்டேன்” என சட்டென சொன்னபடி அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் திவ்யா.

“அவ்வளவுதாங்க... அதை சொல்லலாம்னுதான் வந்தேன்... நீங்க ஒண்ணும் அதை யோசிச்சு குழம்பிக்க வேணாம்!”

“அதான் நேத்தே மறந்திட்டேன்னு சொன்னனே...”

“ஆமா... ஆமா... அப்ப ஓகேதான் வரேன்” என மார்க்ஸ் திரும்ப...

“நீ என்னை பத்தி என்ன நினைச்சே?” என கேட்டாள் திவ்யா.

மார்க்ஸ் திரும்பி திவ்யாவைப் பார்த்தான்.

“என்ன ரொம்ப தப்பா நினைச்சிருப்பல்ல?”

அவன் இல்லை என்பதுபோல தலையாட்ட...

“உண்மையைச் சொல்லு... எமோஷனலா என்னை ரொம்ப வீக்கான ஆள்னு நீ நினைச்சியா இல்லையா?”

“இல்லைங்க... ரொம்ப அன்பானவங்கனு நினைச்சேன்...”

திவ்யா முகம் மாறிப் பார்க்க...

“முத்தம் பலவீனம்னு யார் சொன்னது? அது சிம்பல் ஆஃப் லவ்... அன்பை காட்டுறது பலவீனம் இல்லைங்க பலம். நமக்கு ரொம்ப பிடிச்ச ஒரு குழந்தைக்கு பாசமா முத்தம் கொடுப்போமே அந்த மாதிரிதான் நீங்க முத்தம் கொடுத்தீங்க.... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு... அதைத்தவிர வேற எதுவும் எனக்குத் தோணல...''

திவ்யா அவனைப் பார்த்தபடி இருக்க...

“தேங்க் யூ... அவ்வளவு தாங்க சொல்லனும். வேற எதுவும் இல்ல... நடந்ததை வேற மாதிரி அர்த்தம் எடுத்துகிட்டு நான் என்னை குழப்பிக்கல. நீங்களும் குழப்பிக்காதிங்க” எனச் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றான் மார்க்ஸ்.

சட்டென பதற்றம் குறைந்தது போல இருந்தது திவ்யாவுக்கு. நினைப்பதை அழகாகச் சொல்வதற்கு இவன் மட்டும் எங்கிருந்து வார்த்தைகளைப் பிடிக்கிறான். இந்த மார்க்ஸியம் தன்னையும் உள்ளுக்குள் மெல்ல ஆக்கிரமிப்பதை உணர்ந்தாள் திவ்யா.

மார்க்ஸ் கான்ஃபரன்ஸ் அறைக்குள் நுழைந்தான். அங்கு அவனது அணியினர் அமர்ந்திருந்தார்கள்.

“என்ன மாமா இன்னைக்கு உனக்கு ஃபேர்வல்ன்னு சொன்னாங்க... நீ இங்க உட்கார்ந்துகிட்டு இருக்க'' என மார்க்ஸ் சிரித்தபடி கேட்டான்.

அனைவரும் சிரித்தனர்...

“ஏம்பா நல்லதா நாலு வார்த்தை பேசக் கூடாதா?” என ஆதங்கமாக கேட்டார் நெல்லையப்பன்.

“நான் நல்லதா பேசி என்ன ஆக போகுது மாமா... நீயில்ல நல்லதா பேசியிருக்கணும்!”

“ஆமாப்பா தப்புதான்” என நெல்லையப்பன் வருத்தமாக தலையாட்டினார்.

“டேய் மேனன் வாடா இங்கன்னு கூப்புட்டா என்ன பண்ணுவாங்க... போடா அதான் வாசல்ன்னு காட்டுவாங்க!”

“நான் நேரா மேனனைப் பார்த்து அந்தாள் கால்லயே விழுந்துடுறேன்!”

“முதல்ல அதை செய்யுற வழியைப் பாரு...” என்றபடி மார்க்ஸ் சேரில் அமர்ந்தான். பின்பு பாண்டியனைப் பார்த்து....

“பாண்டியா ப்ளானிங் மீட்டிங் எத்தனை மணிக்கு?”

“நாலு மணிக்கு தல!”

“நாம ரெடியா?”

“ரெடி தல” எனப் பாண்டியன் லேசாக இழுக்க...

“என்னடா இழுக்குற...”

“ஒண்ணும் இல்ல தல... ஏஞ்சலுக்கு ஒரு சின்ன ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கலாமான்னுதான்...”

மார்க்ஸ் முகம் மாற... “என்னடா?”

“அன்னைக்கு நம்ம பிரசன்டேஷனை அது போட்டு தள்ளிருச்சு இல்ல...”

“அதுக்கு?”

“இன்னைக்கு அவங்க பிரசன்டேஷனை கொஞ்சம் குழப்பி விடலாமான்னு...”

“என்னடா பண்ணப்போற?” என ஆர்வமாக கேட்டார் நெல்லையப்பன்.

“உன் கதையே இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கு... அதுக்குள்ள அடுத்த க்ரைம் பத்தி ஆர்வமா விசாரிக்கிற?” என மார்க்ஸ் அதட்டினான்.

“இல்லப்பா... இதுல பாண்டியன் மாட்டிகிட்டான்னா அவனையும் என் கூடவே வெளிய கூட்டிட்டு போயிரலாம்னுதான்!”

அனைவரும் சிரிக்க மார்க்ஸும் சிரித்தான்.

“என்ன தல பண்ணிரலாமா?”

“முதல்ல என்ன பண்ண போறேன்னு சொல்லு...”

பாண்டியன் புன்னகையுடன் மார்க்ஸ் அருகே குனிந்தான்.

சித்தார்த் மேனன் தன்னுடைய அறையில் அமர்ந்து லேப்டாப்பில் மெயில்களைப் பார்த்துக்கொண்டிருக்க... அவரது அறைக்கதவு மெதுவாகத் தட்டப்பட்டது.

சித்தார்த் மேனன் திரும்பிப் பார்க்க, முகமெல்லாம் கலவரமாக நெல்லையப்பன் நின்று கொண்டிருந்தார்.

நெல்லையப்பன் ஏதோ யோகா செய்பவரைப் போல ஒரு கையை நெஞ்சில் வைத்தபடி முதுகை நன்றாக முன்னோக்கி வளைத்து ஓரடி உயரம் குறைவாக உள்ளே நுழைந்தார்.

“வாங்க நெல்லையப்பன் என்ன விஷயம்?” என கேட்ட மேனனின் வார்த்தையில் புன்னகை ஒளிந்திருந்தது.

“சார் என்னை மன்னிக்கணும்!”

“எதுக்கு?”

“சாரை நேத்து நான் வாடா போடான்னு பேசிட்டேன்!”

“ஒரு சேனல் ஹெட்டை வாடா போடான்னு சொல்றதுக்கு ஒரு தைரியம் வேணும்தான் இல்ல?”

“தைரியம் தேவையில்ல சார்... கெட்ட நேரம் இருந்தா போதும்!”

மேனன் சிரித்தார்...

“ஏழரை சனியோட கடைசி வருஷம் சார்... குடுத்து கெடுக்கும்னு ஜோசியக்காரன் அப்பவே சொன்னான்... இது குடிக்க வெச்சு கெடுத்திருச்சு!”

“என்ன பண்ணலாம் சனிய?”

“அவனை ஒண்ணும் பண்ண முடியாது... நீங்க என்ன ஏதாவது பண்ணாம இருக்கணும்!”

மேனன் சிரித்தபடி, “நீங்க பண்ணதுக்கு உங்களை சும்மா விடக்கூடாதுன்னு மனசு சொல்லுதே நெல்லையப்பன்... என்ன பண்ணலாம்!”

நெல்லையப்பன் அவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற பயத்துடன் பார்க்க...

“நெல்லையப்பன் உங்களுக்கு ரேகை பார்க்கத் தெரியுமாமே... எல்லாரும் சொல்றாங்க!”

“ஓரளவுக்கு சார்...”

“என் கை பார்த்து சொல்லுங்க... உங்களை விட்டுடுறேன்”

“யெஸ் ஸார்” என சுறுசுறுப்பானார் நெல்லையப்பன்.

இது அவரது ஏரியா... எப்பேர்பட்ட ஆளையும் ஆருடம் சொல்லி அசத்தி விடுவார் நெல்லையப்பன்.

“ஏன் மாமா உண்மையை சொல்லு, ஜோசியம் ஒரு சயின்ஸா?” என அவரை கேட்டால்... “இல்ல அது காமன்சென்ஸ்'' என்பார்.

கையை நீட்டுபவனின் மன ஓட்டங்களை வைத்துக் கொண்டு அதற்கேற்றார்போல ஒரு விஷயத்தை சொல்லுவதில் நெல்லையப்பன் பலே கில்லாடி.

மேனன் கையை நீட்ட அதை நெல்லையப்பன் வாங்கிப் பார்த்தபடி இருக்க... தற்செயலாக மேனன் அறையை கடக்கப் போன தாட்சா இந்தக் காட்சியை பார்த்து விட்டு அறைக்குள் நுழைந்தாள்.

“நெல்லயப்பன் என்ன நடக்குது இங்க!”

“சார் கையைப் பார்க்கச் சொன்னாரு அதுதான்...”

“ஓ ஜோசியமா? நீங்க என்னதான் சொல்றீங்கன்னு நானும் கேக்குறேன்” என தாட்சா அவர் அறையில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.

கையை உற்றுப் பார்த்தவர் நிமிர்ந்து....

“கை சொல்றதை சொல்லுவேன்... பொய் சொல்றதா நினைக்கக் கூடாது”

“சொல்லுங்க அப்படி எல்லாம் எடுத்துக்க மாட்டேன்” என்றார் மேனன்.

“சாருக்கு குடும்ப வாழ்க்கையில ஒரு சின்ன சிக்கல்...”

மேனன் நிமிர்ந்து நெல்லையப்பனைப் பார்த்தார்.

தெரிந்தவர்களிடம் இந்த மாதிரி ஜோசியம் பார்க்கச் சொல்வதில் இதுதான் பிரச்னை. அவர்கள் நமது ரகசியங்களைத் தெரிந்து கொண்டு சொல்கிறார்களா இல்லை நிஜமாகவே ரேகைப் பார்த்து சொல்கிறார்களா என எளிதாக கண்டுபிடிக்க முடியாது.

“இட மாறுதல் வந்திருக்கணும். கரெக்டா மும்பையில இருந்து சென்னை வந்துட்டீங்க!”

“எனக்கு தெரியாததை சொல்லுங்க நெல்லையப்பன்....”

“சாரோட வாழ்க்கையே இனிதான் ஆரம்பிக்கப்போகுது. உங்க மனசுக்குப் பிடிச்ச ஒருத்தரை சீக்கிரமே சந்திக்கப் போறீங்க. அவங்கதான் உங்ககூட வாழ்க்கை ஃபுல்லா ட்ராவல் பண்ணப் போறாங்க!”

தாட்சாவின் மனசு படபடக்கத் துவங்கியது. நெல்லையப்பன் சுற்றி வளைத்து எங்கே வருகிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.

“அந்தப் பொண்ணோட அடையாளம் என்னன்னா....”

“நெல்லையப்பன் போதும்” எனக் குறுகிட்டாள் தாட்சா...

“மேடம்”

“போதும் நீங்க ஜோசியம் சொன்னது கிளம்புங்க போய் வேலையைப் பாருங்க...”

“யெஸ் மேடம்” என்றவர் மேனனை பார்த்து “அப்ப நம்ம பிரச்னை முடிஞ்சதில்ல சார்!”

“பொண்ணு வரான்னு சொன்னா போதுமா... பேர் என்னன்னு சொல்ல வேண்டாமா” என சிரித்தார் மேனன்.

“சார், பேரு அட்ரஸ் எல்லாம் ரேகை சொல்லாது சார்.... நீங்கதான் தேடி கண்டு பிடிக்கணும்....அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிறேன் சார்” என நெல்லையப்பன் நெஞ்சில் ஒரு கை வைத்து வணக்கம் சொல்ல...

“வர சனிக்கிழமை என் வீட்ல ஒரு பார்ட்டி இருக்கு நீங்க ஃபீரியா?” என மேனன் கேட்டார்.

நெல்லையப்பன் கைகூப்பி கும்பிட... தாட்சாவும் மேனனும் சிரிக்க... நெல்லையப்பன் அறையை விட்டு நகர்ந்தார்.

“நீங்க உங்க கையை காட்டியிருக்கலாமே தாட்சா...” என்றார் மேனன்.

“என் கைய பார்த்திட்டு அவர் என்ன சொல்லியிருப்பார்ன்னு எனக்குத் தெரியும்!”

“என்ன சொல்லியிருப்பாரு?”

“உங்க வாழ்க்கையில ஒரு பொண்ணு வரப்போகுதுன்னு சொன்னவரு என் வாழ்க்கையில ஒரு ஆம்பிளை வரப் போறாருன்னு சொல்லியிருப்பாரு...”

மேனன் அவளை ஏறிட்டுப் பார்க்க... அவளது போன் அடிக்க... அதை எடுத்தவள் ஒரு நிமிடம் என கையைக் காட்டிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றாள். மேனன் முகத்தில் மெல்லிய புன்னகை பூத்தது.

திவ்யா தனது அறையில் இருந்து மீட்டிங்கிற்கு கிளம்பிக் கொண்டிருக்கும்போது ஏஞ்சல் அறைக்குள் நுழைந்தாள்.

“ஏஞ்சல் பிரசன்டேஷன் எல்லாம் ரெடி தானே?!”

“காலையில உங்களுக்கு காட்டுனனே அது ஓகே தானே!”

“எனக்கு அது ஓகே தான்...”

“இத விட பெஸ்ட்டா யாரையும் அவங்க பிடிச்சிர முடியாது... கவலைப்படாதீங்க...”

“குட்” என திவ்யா தனது நோட் பேட் பேனாவை எடுத்து வைத்தபடி மீட்டிங்கிற்குத் தயாரானாள். ஏஞ்சல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவள் மெதுவாக, “திவ்யா... அந்த மார்க்ஸை விட்டு கொஞ்சம் தள்ளியே இருங்க...”

திவ்யா அவளை நிமிர்ந்து பார்க்க...

“இல்ல நீங்க நினைக்கிற அளவுக்கு அவன் அவ்வளவு நல்லவன் கிடையாது... இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் கூடவே இருப்பாங்க... பின்னாடி போய் நம்மள பத்தியே தப்பா பேசுவாங்க...”

திவ்யா என்ன சொல்ல வருகிறாள் என்பது புரியாமல் ஏஞ்சலைப் பார்த்தாள்.

“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதிங்க.... இன்னைக்கு காலையில கூட நேத்து நீங்க அவனை கிஸ் பண்ணிட்டீங்கன்னு வாய் கூசாம பொய் சொல்றான்!” என ஏஞ்சல் சொன்னதும் திவ்யாவுக்கு யாரோ 'பளார்' என முகத்தில் அறைந்தது போல இருந்தது.

இவனும் வழக்கமான ஆம்பிளைக் கூட்டத்தில் ஒருவன்தான். காலையில் அத்தனை தூரம் தன்னிடம் பேசிவிட்டு அதை வெளியில் சொல்வான் என அவள் கொஞ்சமும் நினைக்கவில்லை. திவ்யாவுக்கு சட்டென மார்க்ஸின் மேல் வெறுப்பு படர்ந்தது!

- Stay Tuned...