Published:Updated:

இடியட் பாக்ஸ் - 18 | "ஆமா, நான் மார்க்ஸுக்கு முத்தம் கொடுத்தேன்... ஆனா?!"

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 18 | "ஆமா, நான் மார்க்ஸுக்கு முத்தம் கொடுத்தேன்... ஆனா?!"

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

திவ்யாவின் அறை... மார்க்ஸூம் திவ்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்கள். திவ்யா பேசட்டும் என மார்க்ஸ் காத்திருந்தான். ஒட்டுமொத்த கோபத்தையும் அவள் வார்த்தைகளால் தன் மேல் விசிறியடித்து விட்டால் மனசு லேசாகிவிடும் என மார்க்ஸுக்குத் தோன்றியது. கோபத்தில் அவள் தன்னை ஒரு அடி அடித்தால் தேவலாம் போலிருந்தது. ஒரு இனிய நிகழ்வு இப்படியாகி விடும் என மார்க்ஸ் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை.

யார் முதலில் பேச்சைத் தொடங்குவது என்று தெரியாமல் அறையில் கனத்த மெளனம் நிலவியது. மார்க்ஸின் உடல் மொழி மன்னிப்பு கேட்கும் தோரணையில் இருந்தது. திவ்யாவின் முகமோ கோபம், சந்தோஷம், வெறுப்பு என எந்த உணர்வுகளும் இல்லாமல் இறுகிப் போயிருந்தது.

“என்ன?” என முதலில் மெளனத்தை உடைத்தாள் திவ்யா.

அந்த “என்ன?” என்கிற சின்ன கேள்வி ஒட்டு மொத்த பதிலையும் மார்க்ஸிடம் எதிர்பார்த்தது. மார்க்ஸ் தொண்டையை செருமிக் கொண்டான். எப்படி ஆரம்பிப்பது, என்ன சொல்வது எனத் தெரியாமல் அவன் நின்றிருந்தான். தமிழ்த் திரைப்படங்களில் டைம்பாமை செயலிழக்க செய்யும் திக் திக் சூழல் அது. துண்டிக்க வேண்டியது சிவப்பு கேபிளையா, இல்லை பச்சை கேபிளையா? தவறாகத் துண்டித்தால் பாம் வெடிக்கும். துண்டிக்க யோசித்தாலும் பாம் வெடித்து விடும். திவ்யா மார்க்ஸின் கண்களை நேராக பார்த்தபடி அவனது பதிலுக்காகக் காத்திருந்தாள்.

“திவ்யா” என மார்க்ஸ் ஆரம்பிக்கும் சமயம் அவளது இன்ட்டர்காம் அடித்தது. மார்க்ஸை ஒரு கணம் உற்று பார்த்தவள் போனை எடுக்க மறுமுனையில், “திவ்யா, ஒரு நிமிஷம் கான்ஃபரன்ஸ் ரூம் வர முடியுமா?” என அழைத்தான் பிரசாத்.

“உடனே வரணுமா?”

“ஆமா திவ்யா...” என்றான் பிரசாத்.

“வரேன்” என திவ்யா போனை வைத்து விட்டு மார்க்ஸைப் பார்த்தாள். “திவ்யா நான்...” என அவன் மீண்டும் ஆரம்பிக்க இப்போது மார்க்ஸின் செல்போன் அடித்தது. மார்க்ஸ் போனை எடுக்க, “மார்க்ஸ் உடனே கான்ஃபரன்ஸ் ரூம் வாங்க...“ என்றான் பிரசாத்.

“பிரசாத் ஒரு 10 நிமிஷத்துல...” என மார்க்ஸ் ஏதோ சொல்ல வர... “தாட்சா மேடம், மேனன் சார்... எல்லாம் வெயிட் பண்றாங்க நீ உடனே வா” என போனை கட் செய்தான் பிரசாத்.

“பிரசாத் கான்ஃபரன்ஸ் ரூம் வர சொன்னாரு” எனப் பெர்மிஷன் கேட்கும் தோரணையில் மார்க்ஸ் சொல்ல...

“என்னையும் வரச் சொன்னாங்க” என்றாள் திவ்யா. மார்க்ஸூக்கு ஏதோ நடக்கப்போகிறது எனப் புரிந்தது.

கான்ஃபரன்ஸ் அறையில் மேனன், தாட்சா, பிரசாத் என மூவரும் இருந்தார்கள். ஏஞ்சல் பிரசாத்தின் அருகில் அமர்ந்திருந்தாள்.

மார்க்ஸூம் திவ்யாவும் சற்று இடைவெளி விட்டு ஒரே பக்கமாக அமர்ந்திருந்தார்கள்.

“மார்க்ஸ்... நீயும் உன் ஆட்களும் வேணும்னே திவ்யா பத்தி தப்பு தப்பா ஒரு விஷயத்தை ஆபிஸ் ஃபுல்லா பரப்பிவிட்டிருக்கேன்றதுதான் உன் மேல உள்ள கம்ப்ளெய்ன்ட். ஏஞ்சல்கிட்ட நீயே சொல்லியிருக்க... அதுக்கப்புறம் உன் ஆளுங்க கிட்ட சொல்லி ஆபிஸ் பூரா அந்த நியூஸைப் பரப்பியிருக்க...” என வரிசையாக அடுக்கினான் பிரசாத்.

“எதுக்காக மார்க்ஸ் அப்படிப் பண்ணணும்?” எனக் கேட்டாள் தாட்சா.

“திவ்யா தான் மார்க்ஸுக்கு நேரடியானப் போட்டி. அவங்களைப் பத்தி தப்பா பேசி அவங்களை Demoralize பண்ணா அவங்களோட மொத்த டீமோட ஸ்பிரிட்டும் பாதிக்கும். அது அவருக்கு நல்லதுதானே!” என்றாள் ஏஞ்சல்.

“திவ்யா உங்ககிட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ணாங்களா?”

“தாட்சா மேடம், பாதிக்கப்பட்ட பெண்கள் கம்ப்ளெய்ன்ட் பண்ணட்டும்னு நாம ஏன் காத்திருக்கணும்? தப்பு நடந்திருக்குன்னு தெரியுறப்ப அதை நாமளா முன்வந்து விசாரிக்க வேண்டியது நம்ம பொறுப்புன்னு நான் நினைக்கிறேன்.”

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிற முனைப்பில் இருந்தான் பிரசாத்.

“கரெக்ட்தான்... பெண்களோட தயக்கம் தப்பு பண்றவங்களுக்கு அட்வான்டேஜா ஆகக் கூடாதுதான்” என்றார் மேனன்.

“அடுத்தது என்ன?” எனக் கேட்டாள் தாட்சா...

“திவ்யா ஒரு மெயில் அனுப்புனா போதும்!”

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“என்னன்னு மெயில் அனுப்பணும்?” அதுவரை அமைதியாக இருந்த திவ்யா கேட்டாள். மார்க்ஸ் திரும்பி திவ்யாவை பார்த்தான்.

“இல்ல நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததா சொல்லி உங்க நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துறாருன்னு...”

“ஒருவேளை நிஜமாவே அப்படி ஒரு விஷயம் நடந்திருந்தா?”

அறையில் இருந்த அனைவரும் ஒரு கணம் அதிர...

“நான் அவரைக் கிஸ் பண்ணது உண்மைதான். அவர் பொய் சொல்லல. அது ஆபிஸுக்கு வெளிய நடந்த ஒரு விஷயம். என் பெர்சனல். அதைப்பத்தி ஆபிஸுக்கு நான் எந்த விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன். கரெக்ட்தானே சார்” என உறுதியான குரலில் திவ்யா சொல்ல...

திவ்யாவின் வார்த்தைகளுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றுகூடத் தெரியாமல் மார்க்ஸ் தடுமாறிப் போனான்.

ஏஞ்சலும், பிரசாத்தும் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆயுதங்கள் இன்றி போரில் சிக்கி கொண்டவர்கள் போலானது அவர்களின் நிலைமை.

மேனன் புன்னகையுடன், “என்ன பிரசாத், திவ்யா சொன்னது சரிதானே” எனக் கேட்க பிரசாத் தட்டுத் தடுமாறி, “யெஸ் சார்... நோ சார்... யெஸ் சார்” என உளறிக் கொட்டினான்.

“ஆபிஸ்ல பேசுற ஒவ்வொரு கிசுகிசுக்கும் என்னால பதில் சொல்லிகிட்டு இருக்க முடியாது பிரசாத். தயவு செஞ்சு இன்னொரு தடவை இப்படி என் டைமை வேஸ்ட் பண்ணாதிங்க... நான் வரேன் சார்!” என திவ்யா எழுந்து சென்றாள். 'பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்கும்' என்பது போலானான் பிரசாத்.

திவ்யா முத்தமிட்டாளா இல்லையா என ஏஞ்சலுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் அதை இப்படி எல்லோர் முன்னாலும் சொல்லி மார்க்ஸைக் காப்பாற்றுவாள் என அவள் கொஞ்சமும் யோசித்துப் பார்க்கவில்லை. மார்க்ஸுக்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம் நடக்கிறது என்கிற ஆதங்கம் அவளை அலைக்கழித்தது.

“மார்க்ஸ்” என மேனன் அழைக்க...

“யெஸ் சார்” என நினைவுக்கு வந்தான் மார்க்ஸ்.

“நீங்க கிளம்பலாம்...”

மார்க்ஸ் தலையாட்டி விட்டு நகரப் போகும் சமயம் ஏஞ்சலையும், பிரசாத்தையும் திரும்பிப் பார்த்தான். அந்தப் பார்வையில் கோபம் இருந்திருந்தால் கூட பிரசாத் தாங்கியிருப்பான். ஆனால், நன்றி இருந்ததை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

“ஏஞ்சல்... குட்... எனக்கென்னன்னு இல்லாம கூட வேலை செய்ற ஒருத்தங்க மேல அக்கறை எடுத்துகிட்டு இந்த விஷயத்தை HR வரைக்கும் கொண்டு வந்ததுக்கு என்னோட பாராட்டுக்கள்” என்றார் மேனன்.

அது கிண்டலா இல்லை நிஜமா எனத் தெரியாமல் அரைகுறையாக தலையாட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் ஏஞ்சல்.

மேனன் பிரசாத்தைப் பார்த்து புன்னகைத்தார். அவனுக்கு அடிவயிறு எல்லாம் கலக்குவதுபோல இருந்தது.

“பிரசாத்...”

“சார்...”

“நம்ம பெங்களூர் ஆபிஸுக்கு ஒரு நல்ல HR மேனேஜர் தேவைப்படுது.”

தாட்சாவுக்கு மேனனின் கிண்டல் சிரிப்பை வரவழைத்தது. பிரசாத் பார்க்காத வண்ணம் தலையை திருப்பிக் கொண்டாள்.

“சாரி சார்...”

“திவ்யா, மார்க்ஸ்ன்ற ரெண்டு வித்தியாசமான டேலன்ட் நம்ம சேனலுக்கு இப்ப தேவைப்படுது. அவங்களுக்கு நடுவுல எந்தப் பிரச்னையும் வராம அவங்கள எப்படி யூஸ் பண்ணிக்கிறதுன்னு நான் வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆனா நீங்க என்னடான்னா அதை கெடுக்கணும்ன்னே வேலை செய்றீங்க!”

“நோ சார்.... நோ சார்” எனப் பதறினான் பிரசாத்.

“உங்களை பெங்களூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்றேன்... ஒரு வருஷம் அங்க வேலை செய்யுங்க...”

“சார்... மன்னிச்சிருங்க சார்... இனி என்னால எந்தப் பிரச்னையும் வராது சார்... ரெண்டு பசங்க சார், கஷ்டப்பட்டு ஸ்கூல்ல சீட் வாங்கியிருக்கேன். வொய்ஃபுக்கு சென்னையிலதான் சார் வேலை. வயசான அம்மா, அப்பாவை நான்தான் சார் பார்த்துக்கணும். டிரான்ஸ்ஃபர்னா பெரிய கஷ்டமாகிடும் சார்!”

சித்தார்த் மேனன் அவனை சீரியசாகப் பார்த்தவர், “இந்த உலகத்திலயே எனக்குப் பிடிக்காத ஆளுங்க யார் தெரியுமா? தங்களோட அதிகாரத்தை மிஸ்யூஸ் பண்றவங்கதான். நீங்க இன்னும் மோசம்... இல்லாத அதிகாரத்தை இருக்கிறதா நினைச்சுக்கிறது, அதை மிஸ்யூஸும் பண்றது!”

பிரசாத்தின் கண்கள் கலங்கின.

“உங்களுக்கு நல்ல விஷயம் நடக்கனும்னா நீங்க செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான். உங்களைச் சுத்தி இருக்கிறவங்களுக்கு நல்ல விஷயம் நடக்கனும்னு நீங்க நினைக்கனும். இல்லன்னா உங்களுக்கு அது நடக்கவே நடக்காது.”

“புரியுது சார்... புரியுது சார்” அழுதுவிடுவது போல பேசினான் பிரசாத்.

“போங்க” என்றார் மேனன்.

பிரசாத் தனது டைரி, பேனாவையெல்லாம் பொறுக்கிக் கொண்டு அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக வெளியேறினான்.

மேனன், திரும்பி தாட்சாவை பார்க்க... அவள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சு”

“உங்களுக்கு கோபம்லாம் கூட வருதே...”

மேனன் சிரித்தார்.

“அப்படி சிரிச்சா?”

“ஒரு அமைதியான சந்தோஷமான சூழலை கெடுக்கணும்னு யாராவது நினைச்சா என்னால தாங்கிக்கவே முடியாது. அப்படி பண்றவங்க எனக்கு மேல இருக்கிறவங்களா இருந்தா நான் வேலையை விட்டு போயிடுவேன். அவங்க எனக்கு கீழ வேலை செய்றவங்களா இருந்தா...”

“வேலைய விட்டு அனுப்பிடுவீங்க” என தாட்சா சிரித்தாள். மேனனும் சிரித்தார்.

“உங்க கூட யார் இருந்தாலும் அவங்களுக்கும் உங்ககிட்ட இருக்கிற நல்ல குவாலிட்டீஸ் வந்திடுது.”

“அப்படியா?” என மேனன் ஆச்சர்யமாகக் கேட்டார்.

“திவ்யா இந்த விஷயத்தை டீல் பண்ண விதம் உங்களை மாதிரியே எனக்குத் தோணிச்சு...”

“நல்லதுதானே...”

“சில பேர் இம்ப்ரஸ் பண்ணுவாங்க... நீங்க இன்ஸ்பையர் பண்றீங்க!”

மேனன் வெட்கத்துடன், “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல...”

“பரவாயில்ல.... பாராட்டுனா கொஞ்சம் எடுத்துக்கலாம் தப்பில்ல” என தாட்சா சொல்ல மேனன் சரி என்பதாகத் தலையை குனிந்து அதை ஏற்றுக் கொள்கிற பாவனையில் புன்னகைத்தார்.

தாட்சாவும் புன்னகைத்தாள்.

“நான் அப்படி உங்களை ஏதாவது இன்ஸ்பயர் பண்ணியிருக்கேனா?”

ஆம் என தாட்சா தலையாட்டினாள்...

“என்னன்னு சொன்னா தெரிஞ்சுப்பேன்!”

“எனக்கு எப்பவுமே தனியா இருக்கிறது ரொம்பப் பிடிக்கும். காலைல வாக்கிங் போறதுல ஆரம்பிச்சு ராத்திரி மியூஸிக் கேட்டுட்டு தூங்குற வரைக்கும் தனிமை எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். அநாவசியமா ஒரு போன்கால் கூட நானா யாருக்கும் பேச மாட்டேன்.”

மேனன் அவளைப் பார்த்தபடி இருந்தார்.

“உங்களை சந்திச்சதுக்கு அப்புறம் ஒரு நல்ல கம்பெனியோட வேல்யூ என்னன்னு நான் தெரிஞ்சுகிட்டேன். இப்பல்லாம் தனியா இருக்க கடுப்பா இருக்கு. யூ ஆர் ஏ வெரி குட் கம்பேனியன் மிஸ்டர் மேனன்” என சிரித்தபடி அவள் எழுந்தாள்.

மேனன் ஆச்சர்யமும் புன்னகையுமாக அவளைப் பார்த்தார்.

“உங்களுக்கும் சேர்த்துத்தான் லன்ச் கொண்டு வந்திருக்கேன். லன்ச் டைம்ல மீட் பண்ணலாம்” என அவள் கிளம்பினாள்.

மேனன் அப்படியே அமர்ந்திருந்தார். தாட்சா போனப் பிறகும் அவள் விட்டுச் சென்ற வார்த்தைகள் அவரோடு பேசிக் கொண்டே இருந்தன. அந்த அழகிய சூழலை கலைக்க மனம் இல்லாமல் அவர் அப்படியே அமர்ந்திருந்தார்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

பலத்த இடியுடன் மழை பெய்து கொண்டிருந்தது. மார்க்ஸ் அலுவலக கட்டடத்தின் வாசலில் நின்று சிகரெட்டை பிடித்தபடி மழையை பார்த்துக் கொண்டிருந்தான். மார்க்ஸின் வாழ்க்கைக்கும் மழைக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. அவன் வாழ்க்கையில் நடந்த பல முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் ஒரு மழைநாளில் நிகழ்ந்தவைகள்தான். சில்லென்ற காற்று உடலோடு மனதையும் வருடியது...

மார்க்ஸின் அருகில் பாண்டியன் நின்று கொண்டிருந்தான்.

“தல” என்று பாண்டியன் மெலிதான குரலில் அழைக்க மார்க்ஸ் திரும்பி அவனைப் பார்த்தான்.

“அந்த திவ்யா ரொம்ப நல்ல பொண்ணு தல...”

“அதுக்கு?”

“இல்ல சும்மா சொன்னேன்...” என பாண்டியன் இழுக்க...

“எதுக்கு மென்னு முழுங்குற.... சொல்ல வந்ததை சொல்லு...”

“இல்ல தல அதுக்கு உன் மேல....” என பாதியில் பாண்டியன் நிறுத்த...

“காப்பாத்துறக்கும் காதலிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு!”

“காப்பாத்துறதுக்கும், ஆமா முத்தம் குடுத்தேன்னு சொல்லி காப்பாத்துறதுக்கும் கூட வித்தியாசம் இருக்கு தல...”

மார்க்ஸ் முறைக்க...

“எடிட்டிங் இருக்கு... நான் வந்தடுறேன்” எனச் சொல்லிவிட்டு பாண்டியன் திரும்பி உள்ளே சென்றான்.

மார்க்ஸ் மீண்டும் திரும்பி மழையைப் பார்த்தான்.

மின்னல் ஒன்று மார்க்ஸைப் பார்த்து கண் சிமிட்டியது.

மின்னல் வெளிச்சத்தில் கண்கள் கூச... ஏஞ்சல் கண்களை மூடித் திறந்தாள். மொட்டை மாடிக்கு நுழையும் வாசலில் அவள் நின்று கொண்டிருந்தாள்.

கரங்களை நீட்டினாள். மழை நீர் கையில் பட்டுத் தெறித்தது. மனசு மேலும் பாரமானது போல உணர்ந்தாள் அவள். சந்தோஷமோ துக்கமோ அதை அதிகப்படுத்தும் சக்தி மழைக்கு எப்போதும் உண்டு.

பின்னால் யாரோ வரும் சத்தம் கேட்டு ஏஞ்சல் திரும்ப மானஸ் நின்று கொண்டிருந்தான். ஏஞ்சல் அவனை எதிர்பார்க்கவில்லை.

“உங்க சீட்ல நீங்க இல்ல... இங்க தான் இருப்பீங்கன்னு கெஸ் பண்ணேன்... ஐ'ம் ரைட்”

“கொஞ்சம் மனசு சரியில்ல அதான்” என ஏஞ்சல் மழையை பார்த்தபடி சொன்னாள்.

“அந்த மார்க்ஸை மனச விட்டு முதல்ல இறக்கி வைங்க... எல்லாம் சரியாகிடும்.”

ஏஞ்சல் மானஸை ஏறிட்டுப் பார்த்தாள்.

“உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?!”

“நமக்கு ஒருத்தரைப் பிடிச்சிருந்தா அவங்களைப் பத்தி நாம தெரிஞ்சுப்போம் இல்லையா... அப்படித்தான்!”

ஏஞ்சல் மானஸை உற்றுப் பார்த்தாள். அவன் அழகாய் புன்னகைத்தான்.

“இந்த உலகத்திலயே நான் அதிகமா அந்த மார்க்ஸைத்தான் வெறுக்கிறேன்” என்றாள் ஏஞ்சல்.

“அதிகமான நேசம் மாதிரி அதிகமான வெறுப்பு கூட காதலோட ஒரு டைப்தான்... உண்மையை சொல்லணும்னா நேசிக்கிறவங்களைவிட வெறுக்குறவங்களைப்பத்திதான் நாம அதிகமா யோசிப்போம்.”

ஏஞ்சலுக்கு அவன் பேச்சு நியாயம் எனப்பட்டது...

“நிஜமாவே ஒருத்தரை நாம வேணாம்னு தூக்கி போடணும்னா அவங்களைக் கண்டுக்காம இருக்கணும். அன்பும் இல்ல வெறுப்பும் இல்ல... அவன் என்ன ஆனாலும் அதைப்பத்தி கவலையும் இல்ல. இதுதான் ஒருத்தரை அவாய்ட் பண்றதுக்கான டெக்னிக்” என அவன் சிரித்தான்.

“நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே...”

“சொல்லுங்க”

“நீங்க யாரையாவது லவ் பண்ணியிருக்கீங்களா?”

“எனக்கு நிறைய பெண் தோழிகள் உண்டு. ஆனா, அதை லவ்வுன்னு சொல்ல முடியாது.”

“ஏன்?”

“காதல் மேல பெருசா எனக்கு நம்பிக்கை இல்ல...”

“இப்ப என்கிட்ட பேசிக்கிட்டு இருக்குறதுக்கு என்ன பெயர்?”

“நிச்சயமா காதல்ன்னு பொய் சொல்ல மாட்டேன்... உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு... உங்களுக்கும் பிடிச்சிருந்தா பேசலாம், பழகலாம். ஃபிரண்ட்ஸா இருக்கலாம். காதல் கல்யாணம்னு கமிட்மென்ட் எதிர்பார்த்தீங்கன்னா ஐ'ம் சாரி!”

ஏஞ்சல் புன்னகைத்தாள்.

“காதலோட பேரைச் சொல்லி நான் யாரையும் ஏமாத்தினது இல்ல. ஐ பிலீவ் இன் லஸ்ட்... நாட் லவ்!”

ஏஞ்சல் புன்னகையுடன், “நிஜமா ஒருநாள் நீங்க லவ்ல விழுற மாதிரி ஒரு சிட்டிவேசன் வந்தா என்ன செய்வீங்க?”

“காதல்ன்னு ஒண்ணு இருக்குன்னு நம்புவேன்” என அவன் சிரிக்க ஏஞ்சலும் சிரித்தாள். அவளுக்கு அவனது நேர்மை பிடித்திருந்தது. மீண்டும் பலத்த சத்தத்துடன் இடி இடித்தது.

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

ஹோட்டலின் கண்ணாடி ஜன்னல் வழியாக மழை பெய்வதை நந்திதா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஷார்ட்ஸும் குட்டி ரவுண்ட் நெக் டி-ஷர்ட்டும் அணிந்து இருந்தாள். சட சடவென்ற சத்தத்துடன் மழை கொட்டிக் கொண்டிருந்தது. நியான் விளக்கு வெளிச்சத்தில் மழையின் கீற்றுக்கள் அவளுக்குப் புலப்பட்டன.

மழையை ரசித்துக் கொண்டிருந்த நந்திதா திரும்பிப் பார்த்தாள்... பாத்ரூம் கதவு திறந்திருந்தது. திவ்யா இரவு உணவுக்குப் பிறகு பிரஷ் பண்ணிக் கொண்டிருந்தாள். தொளதொளவென்று இருந்த பலாசோ பேன்ட்டும், வெள்ளை நிற டி-ஷர்ட்டும் அணிந்து அவள் உறங்கத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

“திவ்யா” என நந்திதா அழைக்க....

அவள் திரும்பி அவளைப் பார்த்தாள்.

“ஏன் மார்க்ஸை நீ மாட்டி விடல?”

அவள் ஒரு நிமிடம் என விரலால் சைகை காட்டினாள். வாய் கொப்பளித்து முகத்தைத் துடைத்தபடி வெளியே வந்தாள்.

“என்ன கேட்ட?!”

“ஏன் மார்க்ஸை மாட்டி விடலைன்னு கேட்டேன்...”

“அவன்தான் அப்படி நடந்துகிட்டான்னா நானும் எதுக்கு அப்படி நடந்துக்கணும்!”

“நீ முத்தம் குடுத்ததை எல்லோருக்கும் சொல்லி சந்தோஷப்படுற சீப்பான ஆளா என்னால மார்க்ஸை நினைக்க முடியல!” என்றாள் நந்திதா.

“ஆனா அதுதான நடந்துச்சு...”

“என்னமோ தப்பு நடந்திருக்கு...”

“என்னவா வேணா இருக்கட்டும்... என் முகத்தைப் பார்த்து பேசியிருந்தா அவன் யோக்கியன். ஆனா ஓடி ஒளிஞ்சிக்கிட்டானே... அதுக்கு என்ன அர்த்தம்?!”

“அது ஒண்ணுதான் இடிக்குது...”

“அவ்வளவுதான் அவன்... இன்னும் கொஞ்ச நாளைக்கு என் முகத்திலயே முழிக்க மாட்டான். அப்படியே பார்த்தாலும் இதைப்பத்தி மூச்சு விட மாட்டான். எப்படியோ பிரச்னை விட்டுது” என்று சொல்ல அறையின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

திவ்யா திரும்பி பார்த்தாள். “நான்தான் வாட்டர் பாட்டில் வேணும்னு ஹவுஸ் கீப்பிங்குக்கு போன் பண்ணி இருந்தேன்” என்றாள் நந்திதா.

திவ்யா சென்று அறைக்கதவைத் திறக்க... அங்கு தொப்பலாக நனைந்தபடி மார்க்ஸ் நின்றிருந்தான்.

“திவ்யா, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் மார்க்ஸ்.

- Stay Tuned...