Published:Updated:

இடியட் பாக்ஸ் - 21 | மார்க்ஸை ஏன் அழ வைத்தார் சித்தார்த் மேனன்?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 21 | மார்க்ஸை ஏன் அழ வைத்தார் சித்தார்த் மேனன்?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

அலோக், கண்கள் கலங்க சித்தார்த்மேனன் எதிரில் அமர்ந்திருந்தான். மேனன் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தபடியே இருந்தார்.

“மேனன், அவன் என் முகத்தில பேப்பரைத் தூக்கியடிச்சிட்டான்னு சொல்றேன். எதுவுமே பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” எனச் சற்று கோபமாக கேட்டான் அலோக்.

“யூ ஆர் ஸோ லக்கி... நல்ல வேளை அவன் பேப்பரைத் தூக்கியடிச்சான்” என மேனன் சொல்ல அலோக்கின் முகம் மாறியது.

“என்ன மேனன் ஜோக்கா?!”

“இல்ல அலோக்... அவன் மட்டும் பேப்பரைத் தூக்கியடிக்காம பொறுமையா வந்து என்கிட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ணியிருந்தா உன்னை நான் தூக்கியடிக்க வேண்டியதாயிருந்திருக்கும்” என மேனன் சொல்ல “வாட்?” என்று உரக்கக் கேட்டான் அலோக். மேனனிடன் இருந்து இப்படி ஒரு பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை.

“ஆமா அலோக்... இந்த மாதிரி பிஹேவியர்ஸ்க்கு நம்ம கம்பெனியில அதுதான் தண்டனை. டிசிப்ளனரி கமிட்டியில ஒரு வருஷம் இருந்திருக்க... உனக்கு தெரிஞ்சிருக்கணுமே?”

“என்ன மேனன் என்ன மிரட்டுறியா?”

“இல்ல... நம்ம யாரையும் மிரட்ட முடியாதுன்னு சொல்றேன்!”

அலோக் பதில் சொல்ல முடியாமல் மேனனைப் பார்த்தான்.

“செல்ஃப் ரெஸ்பெக்ட் உள்ள ஒரு டீமாலதான் நல்ல ரிசல்ட் தர முடியும். அப்படி ஒரு டீமை பில்டப் பண்ண எல்லோரும் போராடிக்கிட்டு இருக்காங்க. நீ அதை காலி பண்ற மாதிரி ஒரு விஷயத்தை பண்ணா எப்படி?”

மேனனை பற்றி அலோக்குக்கு ஏற்கெனவே தெரியும். ஆனால் இவ்வளவு தூரம் அவர் மார்க்ஸை சப்போர்ட் செய்வார் என்பது அலோக் எதிர்பார்க்காதது. மேனன் தொடர்ந்தார்.

''தன் மேல் மரியாதையும் நம்பிக்கையும் உள்ளவனால மட்டும்தான் எக்ஸ்ட்ராடினரி விஷயங்களை பண்ண முடியும். மேல கீழன்னு எல்லாம் இல்ல... ஒருத்தரோட தன்மானத்தை டச் பண்றதுக்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது!”

“நீ ஒரு கம்யூனிஸ்ட் மேனன். மேனேஜ்மென்ட்டுக்கு ஏத்த ஆள் இல்ல” என்றான் அலோக்.

“தேங்க்ஸ்... இதை நான் காம்ப்ளிமென்ட்டாவே எடுத்துக்கிறேன். இன்னொரு விஷயம். நாம எல்லாருமே வேலைக்காராங்கதான். சம்பளம் மட்டும்தான் வித்தியாசம். We are all part of a machine. இதுல சின்னது பெரிசுன்னு வித்தியாசம் பார்க்க என்ன இருக்கு? எல்லா பார்ட்டும் சரியா வேலை செஞ்சா தான் மிஷின் ஒழுங்கா ஓடும்” என உறுதியானக் குரலில் சொன்னார் மேனன்.

“அப்ப அந்த மார்க்ஸ் மேல ஆக்ஷன் எதுவும் எடுக்க மாட்ட?”

“உனக்காகதான் அவன் மேல ஆக்ஷன் எதுவும் எடுக்கல... ரியாக்ட் பண்ண அவனுக்கு தண்டணை கொடுக்கணும்னா ப்ரவோக் பண்ண உனக்கு அதை விட பெரிய தண்டணை தர வேண்டியது இருக்கும்.”

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“மேனன்.....நான் இந்த கம்பெனியோட ஃபைனான்ஸ் மேனேஜர். அவன் ஒரு சாதாரண ஆளு!”

“நியாயம்கிறது ஃபைனான்ஸ் மேனேஜருக்கு ஒண்ணு பியூனுக்கு ஒண்ணுன்னு கிடையாதுல்ல!”

“நான் வேலைக்கு சேர்ந்தப்ப என்னோட பாஸ் கிட்ட எவ்வளவு அவமானப்பட்டிருக்கேன்னு உனக்கு தெரியுமா?” என ஆதங்கமாக கேட்டான் அலோக்.

“இதுதான் எனக்கு புரியவே மாட்டேங்குது. நீ ஒரு மோசமான பாஸ் கிட்ட வேலை செய்யுறப்ப எப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருக்க... உன்னோட பாஸ் உன்னை அவமானப்படுத்தும்போது உன் மனசு எவ்வளவு வலிச்சிருக்கும். எத்தனை நாள் நீ அழுதிருப்ப...” - அலோக், மேனனை பார்த்தபடியே இருந்தான்.

“ஒரு மோசமான பாஸ்கிட்ட இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க..... நீ ஒரு பாஸா மாறும்போது நியாயமா எப்படி நடந்திருக்கணும்? உன் பாஸ் உன்னை எப்படி எல்லாம் நடத்தணும்னு நீ ஆசைப்பட்டியோ அப்படியெல்லாம் உன்கிட்ட வேலை செய்யறவனை நீ நடத்தணுமா இல்லையா?! நீ பட்ட கஷ்டத்தையும் அவமானத்தையும் அவனுக்குத் தராம இருக்கணுமா இல்லையா? அதுதான நியாயம்?”

மேனன் சொன்ன எதுவும் அலோக்கின் காதுகளை எட்டவில்லை.

“அந்த மார்க்ஸை நான் சும்மா விட மாட்டேன்” என்றான் அலோக்.

“நான் வேணும்னா அவனை உன்கிட்ட சாரி கேட்கச் சொல்றேன். நீயும் ஒரு சாரி சொல்லிரு!”

“மேனன்” எனக் கோபமாக எழுந்தான் அலோக். மேனன் அவனை நிமிர்ந்து பார்த்தார்.

“அப்படி அவன்கிட்ட என்ன இருக்குன்னு இப்படி சப்போர்ட் பண்ற?”

“அவனும் உன்ன மாதிரிதான். ரொம்ப நேர்மையான ஒரு ஆள். நேர்மையா இருக்கான்றதாலயே உன்னை மாதிரி திமிரும் உண்டு. கொஞ்சம் உன்னை மாதிரியே கோபக்காரன்” எனச் சொல்லி சிரித்தார் மேனன். அலோக் அதை ரசிக்கிற மனநிலையில் இல்லை.

“மேனன் நீயும் சீனியர் வி.பி. நானும் சீனியர் வி.பி. யாரோ ஒரு சின்ன பையனுக்காக என்னை நீ அசால்டா டீல் பண்றல்ல...”

“அலோக்... நீ பணம் எண்ணுறவன். மார்க்ஸ் பணம் பண்ணுறவன். அவன் பணம் பண்ணா தான் நீ எண்ண முடியும். கிரியேட்டிவான ஆளுங்க எப்பவுமே எமோஷனலான ஆளுங்களாதான் இருப்பாங்க. அடிமைகள் உனக்கு வேணும்னா அதுக்கு இது இடம் இல்ல” என உறுதியாகச் சொன்னார் மேனன்.

மார்க்ஸாவது ஒரு முறைதான் பேப்பரை தூக்கியடித்தான். இந்த மேனன் வார்த்தைக்கு வார்த்தை தன்னை தூக்கியடிக்கிறான் எனத் தோன்றியது அலோக்கிற்கு.

“அந்த மார்க்ஸ் ஒரு நாள் உன்னை தூக்கிட்டு உன் சீட்ல உட்கார்றானா இல்லையா பாரு!”

“அப்படி நடந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்... ஒரு நல்ல தலைவனோட கடமை நிறைய தொண்டர்களை சேர்க்கிறதில்லை... அவனை மாதிரியே இன்னும் பல தலைவர்களை உருவாக்குறதுதான். அதை செய்யாதவன் செல்ஃபிஷ். அவனுக்கு தலைவனா இருக்கிறதுக்கு தகுதியே இல்லை.''

அலோக் எதுவும் பேசாமல் கோபமாகக் கதவை தள்ளிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். மேனனுக்கு அலோக்கைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

திவ்யா தனது சேரில் அமர்ந்திருக்க நந்திதா அவளது டெஸ்க்கில் அமர்ந்திருந்தாள். அவள் முகம் முழுக்க ஆச்சர்யம் நிரம்பிக் கிடந்தது.

“என்னடி சொல்ற... அலோக் முஞ்சில, மார்க்ஸ் பேப்பர தூக்கியடிச்சிட்டானா?”

“ம்” என தலையாட்டினாள் திவ்யா.

“இப்படி தூக்கி, இப்படி அடிச்சிட்டானா?” என வெறுங்கையால் அவள் ஆக்ஷ்ன் பண்ணிகாட்டி கேட்க...

திவ்யா முறைக்க நந்திதா சிரித்தபடி...

“அதுக்கு அலோக் ரியாக்ஷன் என்ன?”

“அவர் அதை எதிர்பார்க்கவே இல்லை.... ரொம்ப ஷாக்காயிட்டாரு”

“முதல்ல தூக்கியடிச்சது அந்தாளுதான அப்புறம் என்ன?”

“அதுக்கு பதிலுக்கு நீயும் அதையே பண்ணுவியா?” எனக் கோபமாக திவ்யா கேட்டாள்.

“அதான் மார்க்ஸ்... கெத்துடி அவன்.”

“மண்ணாங்கட்டி... வேலை போனா தெரியும் அவனுக்கு!”

“அது எப்படிப் போகும் அதான் மேனன் சார் இருக்காரே”

“அந்த தைரியத்துலதான் இவன் ஆடுறான்”

“தப்புடி... யாரும் இல்லன்னாலும் அவன் இதைத்தான் பண்ணுவான். ஏன்னா அவன் மார்க்ஸ்!” என தலைநிமிர்த்தி சொன்னாள் நந்திதா. அவளை எரிச்சலாகப் பார்த்தாள் திவ்யா.

“ஆமா... நீ என்ன பண்ண?”

“நான் என்ன பண்றது. ஒண்ணும் பேசாம அலோக் ரூம்ல இருந்து எந்திரிச்சு வந்துட்டேன்!”

“அதில்ல திவ்யா, வெளிய வந்து மார்க்ஸை கட்டிப்பிடிச்சு ஒரு உம்மா குடுத்தியா இல்லையா?!”

“அவன் பண்ண வேலைக்கு உம்மா வேற குடுப்பாங்களாக்கும்... இதோட உனக்கும் எனக்கும் எல்லாம் முடிஞ்சுதுன்னு சொல்லிட்டேன்!”

“அடிப்பாவி என்னடி சொல்ற?” என நந்திதா கோபமாக கேட்க...

“ஆமா வேற என்ன பண்ண சொல்ற? ஃபைனான்ஸ் மேனேஜர் மூஞ்சில பேப்பரைத் தூக்கி அடிக்கிறான்... அவனை நீ என்னன்னு நினைப்ப?”

“ஹீரோன்னு நினைப்பேன்!”

“கோபத்த கன்ட்ரோல் பண்ணத் தெரியாதவன் என்ன பொறுத்தவரைக்கும் முட்டாள்...”

“ஆமாடி மார்க்ஸ் முட்டாள்தான். குனிஞ்சே பழக்கப்பட்ட 100 பேருக்கு நடுவுல நிமிர்ந்து நிக்குறவனை அப்படித்தான் உலகம் சொல்லும்!”

திவ்யா எரிச்சலாக “என்னடி உளர்ற?” எனக் கேட்டாள்.

“நீ தான் மார்க்ஸ்கிட்ட ஏதோ உளறிட்டு வந்திருக்க... போய் அவன் கிட்ட முதல்ல சாரி சொல்லு!”

“நான் அவனுக்கு ஸாரி சொல்லணுமா. அவன்தான் அலோக் கிட்ட சாரி சொல்லணும்.”

“சான்சே இல்ல” என நந்திதா மறுத்து தலையாட்டினாள்.

“அது எனக்கும் தெரியும். அதான் ஆள விடுன்னு ஒதுங்கிட்டேன். அவனுக்கு அவன் ஈகோதான் முக்கியம். அதையே கட்டிக்கிட்டு அழட்டும்” என கோபமாகச் சொன்னாள் திவ்யா.

“ஆரம்பிச்சது அலோக். அதைச் சொல்லவே மாட்டுற?"

“நாய் உன்னைக் கடிச்சா நீ திருப்பி கடிப்பியா?”

“அடிப்பாவி அலோக்கை நாய்னு திட்டுற” என நந்திதா சிரித்தாள்.

“சிரிக்காத... அசிங்கமா நடந்துகிறவங்களை டீல் பண்றதுக்கான வழி பதிலுக்கு அதே மாதிரி அசிங்கமா நடந்துக்கிறது இல்ல!”

“இப்ப என்ன சொல்ல வர்ற?!”

“மார்க்ஸ் பத்தி இனி என்கிட்ட பேசாத... எனக்கும் அவனுக்கும் நடுவுல எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு சொல்றேன்... அவ்வளவுதான். இனிமே எங்களுக்குள்ள ஒண்ணும் இல்லை!”

“இனிமே ஒண்ணும் இல்லைன்னா... முன்னால ஒண்ணு இருந்திச்சுன்னு ஒத்துகிற அப்படித்தானே!”

“நீ முதல்ல இடத்த காலி பண்ணு!” என வாசலைக் காட்ட...

“போறேன்... போறதுக்கு முன்னால ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு”

“என்ன?”

“மார்க்ஸை நான் லவ் பண்ணலாமா” என நந்திதா சிரித்தாள்.

திவ்யா அவளை முறைக்க....

“நாளைக்கு பிரச்னைக்கு வரக்கூடாது... உனக்கு வேணும்னா இப்பவே சொல்லு... விட்டுறேன்... உனக்கு வேணாம்னா நான் எடுத்துகிறேன்.”

“என்னடி லாஜிக் இது?”

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“ஃபிரண்டோட ஆளைத் தட்டி தூக்கிட்டேன்னு உலகம் என்ன தப்பா பேசக்கூடாதில்ல!”

சட்டென திவ்யா முகம் மாற, “லூசுத்தனமா பேசாதடி... ஸ்விகில ஆர்டர் பண்ண ஜூஸா இது... உனக்கு வேணாம்னா நான் எடுத்துகிறேன்ற” என எரிச்சலும் கோபமுமாகச் சொன்னாள்.

“என் கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லல” என நந்திதா விடாமல் மீண்டும் கேட்டாள்.

“அவன் யாரோ நான் யாரோ... நீ அவனை லவ் பண்ணு... இல்ல கல்யாணம் பண்ணு... ஐ டோன்ட் கேர்”

“இது போதும் எனக்கு...”

“முதல்ல சாயங்காலம் வரைக்கும் அவன் வேலையில இருக்கானான்னு பாரு” என்றாள் திவ்யா.

“அவனுக்கு வேலை போயிடுச்சுன்னா நானும் என் வேலைய ரிசைன் பண்ணிட்டு அவனை கொல்கத்தாவுக்கு கூட்டிட்டு போய் செட்டிலாயிடுவேன்” எனச் சொல்லி சிரித்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

திவ்யாவுக்கு முதல் தடவையாக நந்திதா மேல் எரிச்சல் வந்தது.

மேனன் தனது அறையில் அமர்ந்திருந்தார்.

கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

அவர் திரும்பி பார்த்து கையசைக்க... மார்க்ஸ் உள்ளே நுழைந்தான்.

“யெஸ் மார்க்ஸ்” என்றார் மேனன்.

“உங்ககிட்ட இருந்து கால் வரும்னு எதிர்பார்த்தேன் சார்” என மார்க்ஸ் தயக்கமாகச் சொன்னான். மேனன் புன்னகைத்தார்.

மார்க்ஸ் எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் நின்றான்.

“நீ பண்ணது உனக்கு தப்புன்னு தோணுதா?”

“இல்ல சார். ஆனா உங்களுக்கு தப்புன்னு தோணிச்சுன்னா நான் அலோக்கிட்ட மன்னிப்பு கேக்குறேன் சார்!”

கெத்து என்பது அநீதிக்கு முன் நிமிர்ந்து நிற்பது மட்டுமல்ல... அன்புக்கு முன்னால் தலை குனிந்து நிற்பதும்தான்.

“என்கிட்ட இருந்து உனக்கு போன் வரலைன்னா... எனக்கு அது தப்புன்னு தோணலைன்னுதான் அர்த்தம்.”

அவரது அன்பு மார்க்ஸை நெகிழச் செய்தது.

“இப்படி நடந்துக்காதன்னு கூட ஒரு வார்த்தை சொல்லலையே சார் நீங்க...”

“சொன்னனே... அலோக்க கூப்புட்டு சொன்னேன் இப்படி நடந்துக்காதன்னு...” என மேனன் சிரித்தார்.

அதற்கு மேல் கட்டுப்படுத்தமுடியாமல் மார்க்ஸின் கண்கள் பனித்தன. அவன் உதட்டை கடித்து அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றான். கார்ப்பரேட்டுகளில் ஒரு நல்ல காட்ஃபாதர் கிடைப்பதென்பது மிக மிக அரிய விஷயம். எவ்வளவுதான் உயரப் போனாலும் கீழே இருப்பவனைப் போட்டியாகப் பார்க்கிற மனப்பான்மைதான் அதிகம். ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பதாக சொல்வார்கள். அலுவலகங்களில் ஒருவனின் வெற்றிக்கு முன்னால் நல்ல தலைவர்கள் இருப்பார்கள். நல்ல நிறுவனங்களில் வேலை செய்பவர்களை விட நல்ல தலைவர்களிடம் வேலை செய்பவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.

மார்க்ஸ் அவரை ஏறிட்டுப் பார்த்தான்.

“வேற என்ன?”

ஒன்றும் இல்லை என்பதாகத் தலையாட்டினான் மார்க்ஸ்.

“உனக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன். யார் வேணாலும் எப்ப வேணாலும் மார்க்ஸை கோபப்படுத்திட முடியும்னு இருக்கக்கூடாது. ஒரு சின்ன வார்த்தை போதும் உன்னை டென்ஷன் பண்ணன்னு யாரும் யோசிக்கக்கூடாது. நம்ம கோபம் நம்ம கன்ட்ரோல்ல இருக்கணும். நம்ம நினைக்கிறப்பதான் நாம கோபப்படணும். மத்தவங்க நினைக்கிறப்ப இல்லை. நம்ம கோபம் நம்ம கன்ட்ரோல்ல இருந்தா அது பலம். அது மத்தவங்க கன்ட்ரோல்ல இருந்தா பலவீனம்!”

மார்க்ஸ் அவரை மரியாதை மேலிட பார்த்தபடி இருந்தான்.

“நான் என்ன சொல்றேன்னு புரியுதா?”

மார்க்ஸ் புரிந்தவனாகத் தலையாட்டினான்.

மேனன் புன்னகைத்தார்.

“தேங்ஸ் சார்... நான் வரேன்” என அவன் திரும்ப “மார்க்ஸ்” என அவனை அழைத்தார் மேனன்.

அவன் திரும்ப...

“பிரச்னை நடந்த அடுத்த செகண்ட் அலோக் என்னைத் தேடி வரல. திவ்யாதான் வந்தா...” என மேனன் சொல்ல மார்க்ஸ் முகம் ஆச்சர்யத்தில் மாறியது.

“அங்க என்ன நடந்ததுன்னு அவதான் சொன்னா. உன்னோட பக்கம் உள்ள நியாயத்தை எனக்குப் புரிய வச்சது திவ்யாதான். அதனாலதான் என்னால தெளிவான முடிவு எடுக்க முடிஞ்சுது!” என மேனன் பேச பேச திவ்யாவின் அன்புக்கு முன்னால் தன்னை மிகச்சிறிதாக உணர்ந்தான் மார்க்ஸ்.

“நீ இந்த கம்பெனிக்கு எவ்வளவு முக்கியம்னு அவ என்னை கன்வின்ஸ் பண்ணான்னா பாரேன்” எனச் சொல்லி மேனன் புன்னகைத்தார்.

மார்க்ஸும் புன்னகைத்தான்... அதில் வெட்கம் கலந்திருந்தது.

“அவ என்கிட்ட வந்து பேசுனதை யார் கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொன்னா... முக்கியமா உன்கிட்ட சொல்லவே கூடாதுன்னு சொன்னா... நான் சொல்லிட்டேன். என்னை மாட்டிவிட்டுறாத...” எனச் சிரித்தார் மேனன்.

“சொல்லல சார்” எனப் புன்னகையுடன் சொல்லிவிட்டு மார்க்ஸ் அவரது அறையை விட்டு வெளியே வந்தான். அவனது கால்கள் நேராக திவ்யாவின் அறையை நோக்கி நடந்தன.

அவன் திவ்யாவின் அறைக்கதவை திறந்தபோது அவள் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தபடி இருந்தாள். அவனை அவள் எதிர்பார்க்கவில்லை எனச் சொன்னது அவளது முகம்.

அந்தக் கணத்தில் மார்க்ஸிற்கு, ஒட்டு மொத்த அன்பையும் அவளது காலடியில் கொட்டிவிட வேண்டும் போலிருந்தது.

“என்ன?” எனப் பொய்யாக வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் திவ்யா கேட்டாள்.

“ஒண்ணும் இல்ல” என்றான் மார்க்ஸ்.

“அதான் நமக்குள்ள பேசுறதுக்கு எதுவும் இல்லைன்னு அப்பவே சொன்னனே...”

“நான் எதுவும் பேசுறதுக்காக வரல...”

“அப்புறம்?”

“சும்மா பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” எனப் புன்னகையுடன் சொன்னான் மார்க்ஸ்.

புரியாமல் திவ்யா அவனைப் பார்த்தாள்.

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

“நமக்குள்ள எல்லாம் முடிஞ்சுது புரியுதா?”

“முடியட்டும்” என்றான் மார்க்ஸ்....

திவ்யா முகம் மாற....

“அவசரமா ஆரம்பிச்சது அவசரமா முடிஞ்சிருச்சு!”

“ஆமா” என அவள் ஆமோதித்தாள்.

“அடுத்தது நிதானமா ஆரம்பிக்கட்டும்... அப்பதான் அது ரொம்ப தூரம் போகும்!”

“என்னது?” என்றாள் திவ்யா.

“இந்த நிமிஷம் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு தோணுது... சொல்லட்டா?”

“என்ன?”

“சொல்ல மாட்டேன்”

“சொல்ல மாட்டியா?”

“ஆமா சொல்லிட்டா பொசுக்குன்னு முடிஞ்சிரும். ஒரு மாதிரி சொல்லாம உள்ளயே வச்சுகிட்டு இருக்கிறது நல்லா இருக்கு!”

“என்ன உளர்ற?”

“ஆமா உளர்றேன்”.

என்ன பேசுவது எனப் புரியாமல் அவனையே பார்த்தாள் திவ்யா. அந்த கணத்தில் மார்க்ஸின் கண்ணுக்கு திவ்யா உலகத்தின் ஆகச்சிறந்த அழகியாகத் தெரிந்தாள். அவளது மனதின் அழகு முகத்தில் எதிரொலித்தது.

“இடத்தைக் காலி பண்றியா எனக்கு வேலை இருக்கு” என்றாள் திவ்யா

“இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!”

திவ்யாவின் முகம் மாற...

“இங்க பார்” என அவள் ஏதோ சொல்ல வர...

“ஒரு இன்ஃபர்மேஷன்தான். சந்தேகம் இருந்தா கண்ணாடில பாருங்க” எனச் சொல்லிவிட்டு அவன் நகர மெதுவாக தனது செல்போனை எடுத்து அதன் முன்பக்க கேமராவில் தன்னைத்தானே பார்த்துக் கொண்டாள். அவளுக்குப் புன்னகையும் வந்தது. தனது கோபத்தை கொஞ்சம்கூட மதிக்காமல் காதலாக வந்து பேசிவிட்டு போகும் மார்க்ஸின் தோரணை கோபத்தையும் வர வழைத்தது. ஒரே சமயத்தில் கோபமும் சந்தோஷமுமாக உணர்ந்தாள் திவ்யா.

- Stay Tuned...