Published:Updated:

இடியட் பாக்ஸ் 23: மார்க்ஸ் - அலோக் கேன்டீன் பேச்சுவார்த்தை... பதறிய பிரசாத்... மிரண்ட நெல்லையப்பன்!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் 23: மார்க்ஸ் - அலோக் கேன்டீன் பேச்சுவார்த்தை... பதறிய பிரசாத்... மிரண்ட நெல்லையப்பன்!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

மார்க்ஸின் அறையில் பார்த்த அதே பாப் மார்லி... அதே புன்னகை!

“ஏன் என்கிட்ட சொல்லல?” எனக் கோபமாகக் கேட்டாள் திவ்யா.

“ஒரு சர்ப்ரைசா இருக்கட்டும்னுதான்” எனச் சிரித்தாள் நந்தினா.

“அந்த மார்க்ஸ் நம்மளோட ஹவுஸ் மேட்டா... எப்படி செட் ஆகும்டி?”

“அவன் பாட்டுக்கு அவன் ரூம்ல இருக்கப் போறான்... நாம நம்ம ரூம்ல இருக்கப்போறோம்... இதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற?”

“லூசாடி நீ... ஏற்கெனவே அவனையும் என்னையும் சேர்த்து வச்சு ஆபிஸ்ல ஏகப்பட்ட கதை ஓடுது... இப்ப நானும் அவனும் ஒரே வீட்ல இருக்கோம்னு தெரிஞ்சது அவ்வளவுதான்” என எரிச்சலும் கவலையுமாகச் சொன்னாள் திவ்யா.

“மத்தவங்க தப்பா பேசுவாங்கன்னு பயப்படுறயா? நீயா இப்படி பேசுற... என்னால நம்ப முடியல” என நந்திதா சொல்ல திவ்யா என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் அவளைப் பார்த்தாள்.

“இங்க பார்... லாஸ்ட் மினிட்ல மானஸ் சொதப்பிட்டான். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல... வீடு பார்த்து கொடுத்த ஏஜென்ட் அந்த ரூமுக்கு ஒருத்தரை பிடிச்சுத் தரேன்னுதான் சொன்னான். யாரோ தெரியாத ஒருத்தரோட வீடை ஷேர் பண்றதுக்கு மார்க்ஸ் ஒகேன்னு எனக்கு தோணிச்சு. அதான் அவனை சேர்த்துக்கிட்டேன்!”

அவளது பதிலில் திருப்தியடையாத திவ்யா அவளைப் பார்த்தபடியே நிற்க...

“உனக்குப் பிடிக்கலைன்னா சொல்லு அவனை அனுப்பிடலாம்” என்றாள் நந்திதா.

“அவன் திங்ஸ் எல்லாம் எடுத்திட்டு வந்துட்டான். இப்ப என்ன சொல்லி அவனை வெளிய அனுப்புவ?”

“அது எதுக்கு உனக்கு... நான் சொல்லிக்கிறேன்”

“ஒண்ணும் தேவையில்ல... அவன் என்னதான் தப்பா நினைப்பான்” எனக் கோபமாக திவ்யா சொல்ல, நந்திதா சிரித்தாள்.

“எனக்கு வர்ற கோபத்துக்கு உன்னை...” என திவ்யா அவளது கழுத்தை பிடிக்கப் போக...

காலிங் பெல் அடித்தது!

இருவரும் திரும்ப, மார்க்ஸ் உள்ளே நுழைந்தான்.

“ஹாய் திவ்யா...”

அவள் எதுவும் பேசாமல் அவனை முறைக்க...

“முதன்முதல்ல வீட்டுக்கு வந்திருக்க... வலது கால் எடுத்து வச்சு வந்தியா இல்லையா” என மார்க்ஸ் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க...

நந்திதா சிரித்தாள். மார்க்ஸும் சிரித்தான்.

திவ்யா அவனை முறைத்தபடியே இருந்தாள்.

“என்ன நந்து உங்க ஃபிரண்டுக்கு வீடு பிடிக்கலையா?”

“வீடெல்லாம் ஓகேதான்... கூட தங்கப் போற ஆள்தான் பிரச்னை” என நந்திதா சிரித்தபடி சொன்னாள்.

“நான் அப்படி சொன்னேனா?” எனக் கோபமாக திவ்யா கேட்க... “அடிப்பாவி இப்பதான சொன்ன... அதுக்குள்ள இப்படி பல்டியடிக்கிற...” என்றாள் நந்திதா.

“யாரா இருந்தாலும் எனக்கு ஒகே... என்னை தொந்தரவு பண்ணக் கூடாது அவ்வளவுதான்” எனச் சொல்லிவிட்டு திவ்யா நகர்ந்து தனது அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள். நந்திதாவும், மார்க்ஸும் அவளது கோபத்தை ரசித்து சிரித்தனர்.

......................................................

மார்க்ஸ் அலுவலகத்தில் தனது ஆட்களுடன் அமர்ந்திருந்தான்.

“தல இன்னும் நம்ம ப்ரொடியூஸர்ஸுக்கு அப்ரூவல் வரல” எனப் பாண்டியன் கவலையாகச் சொன்னான்.

மார்க்ஸ் அவனை ஏறிட்டுப் பார்க்க...

“30 நாள்தான் தல இருக்கு. அப்ரூவல் வந்தாதான் அவங்க வேலையை ஆரம்பிக்க முடியும்...”

“அதான் மேனன் சார் அப்ரூவல் கொடுத்திட்டாரே” என்றான் மார்க்ஸ்.

“சாமி அப்ரூவல் குடுத்திருச்சுப்பா... நடுவில இருக்கிற அலோக் பூசாரி இழுத்தடிக்கிறான்” என்றார் நெல்லையப்பன்.

“ம்” என தலையாட்டி யோசித்தான் மார்க்ஸ்...

“அவன் கண்ணு முன்னால நீ வீசி எறிஞ்ச பேப்பர் இன்னும் பறந்துக்கிட்டு இருக்குப்பா” என நெல்லையப்பன் சொல்ல அனைவரும் சிரித்தனர்.

“அண்ணே... முடிஞ்சு போன விஷயத்தை ஏன்னே திரும்ப பேசிக்கிட்டு... அது ஒரு ஆக்ஸிடென்ட். ரெண்டு பேரும் அதை மறந்திட்டு தாண்டிப் போக வேண்டியதுதான்.”

“அது ஆக்ஸிடென்ட்ன்றது சரிதான்பா... என்ன நீ லாரியில வந்த... அலோக் சைக்கிள்ல வந்தான்'' என நெல்லையப்பன் சொல்ல மீண்டும் அனைவரும் சிரித்தனர்.

மார்க்ஸும் புன்னகைத்தான்.

“தல... வேணும்னா மேனன் சார்கிட்ட ஒரு வார்த்தை பேசுறீங்களா?” என்றான் பாண்டியன்

“சும்மா சும்மா அவர்கிட்ட போய் நிக்கக் கூடாது பாண்டியா. ஆனந்தி நீங்க அந்த அலோக்குக்கு இன்னொரு மெயில் தட்டுங்க... அக்ரிமென்ட் போட லேட்டாகுற ஒவ்வொரு நாளும் ஷோ லான்ச் பண்றதுக்கு லேட்டாகும்னு சொல்லுங்க'' என்றான் மார்க்ஸ்.

“சரி மார்க்ஸ்” என்றாள் ஆனந்தி.

“பாண்டியா ப்ரொடியூசர்ஸை வேலைய ஆரம்பிக்கச் சொல்லு... அப்ரூவலுக்கு வெயிட் பண்ண வேணாம். முதல் 20 எபிசோட் ஒன்லைன், டயலாக் இந்த வீக் எண்டுக்குள்ள வேணும். ஆர்ட்டிஸ்ட் லொக்கேஷன் எல்லாம் ஃபைனல் பண்ணச் சொல்லு. அக்ரிமென்ட் போட்ட அடுத்த நிமிஷம் ஷூட்டிங் ஆரம்பிச்சிடலாம்.”

“சரி தல...” எனத் தலையாட்டினான் பாண்டியன்.

“ஃபைனான்ஸ் டிபார்மென்ட்டை முறைச்சுக்கிட்டா இப்படித்தான்... லாஜிக்கா எங்க எங்கல்லாம் நமக்கு செக் வைக்க முடியுமோ அங்கல்லாம் வைப்பானுங்க'' என்றார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் தலையாட்டினான். பெரும்பாலான நிறுவனங்கள் தோற்று போனதற்குக் காரணம் அவர்கள் எதிர்த்து நின்ற எதிரிகளால் அல்ல. தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக கூட இருந்தே குழி பறிக்கும் இதுபோன்ற ஆட்களால்தான்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

திவ்யாவும் ஏஞ்சலும் அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிரே சந்திரசேகர் அமர்ந்திருந்தார். ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த சினிமா தயாரிப்பாளர் அவர்.

“இங்க பாரும்மா உண்மையை சொல்றேன். 100 படம் எடுத்த கம்பெனி என்னோடது. இந்த டிவி சீரியலால் எதுவும் நிறையப் போறதில்ல. இதுல எனக்கு பத்து பைசா லாபம் வேண்டாம். இத்தனை நாள் நான் சம்பாதிச்ச பேர் போயிடாம இருந்தா அது போதும்.''

“சார்... நீங்க 100 படம் பண்ணியிருக்கலாம். ஆனா எனக்கு இது முதல் சீரியல். அதை பெஸ்ட்டா பண்ணனும்னு நான் நினைக்கிறேன். நீங்களும் அப்படி நினைச்சாதான் சார் சரியா வரும்” என்றாள் திவ்யா.

அவள் சட்டென அப்படிச் சொன்னதும் திக்கென்று இருந்தது ஏஞ்சலுக்கு. ஏனென்றால் அது அவள் அழைத்துவந்த தயாரிப்பாளர். ஆனால் சந்திரசேகர் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டார்.

“நீ சொல்றது வாஸ்தவம்தாம்மா.... முதல் படத்தை எங்கப்பா எப்படி பயபக்தியா பண்ணாரோ அதே பயபக்தியோட இந்த சீரியலை நான் பண்றேன் போதுமா. உனக்கு உன் சேனல் எப்படி முக்கியமோ அதே மாதிரி எனக்கு என் கம்பெனி பேர் முக்கியம். அசத்திடலாம் விடு" என அவர் சொல்ல, திவ்யா புன்னகையுடன் தலையாட்டினாள்.

“சார் உங்க கம்பெனி இனி சீரியல் பண்ணி பேர் சம்பாதிக்க வேண்டியதில்ல... பெரிய பணமும் இதுல வராது. அப்புறம் எதுக்காக சார் நீங்க சீரியல் பண்ணனும்?" என்றாள் திவ்யா.

சந்திரசேகர் சிரித்தார். தலையைத் தூக்கி கொஞ்ச நேரம் யோசித்தவர் திவ்யாவைப் பார்த்தபடி...

“இரண்டு காரணம் இருக்கும்மா... ஒண்ணு புதுசா ஒரு விஷயத்தை முயற்சி பண்ணி பார்க்குறதுல கிடைக்கிற சந்தோஷம். இன்னொன்னு இதனால 50 பேருக்கு வேலை கிடைக்கும். 50 குடும்பம் பொழைக்கும். வேலை குடுக்குறதுல ஒரு சந்தோஷம் இருக்கும்மா... நல்ல முதலாளிங்க பல பேரு லாபமே இல்லைன்னாலும் தொடர்ந்து கம்பெனி நடத்துறது இந்த சந்தோஷத்துக்காகத்தான்” எனச் சொல்லி அவர் கும்பிட திவ்யாவுக்கு அவர் மேல் மரியாதையும் நம்பிக்கையும் பிறந்தது. பதிலுக்கு அவளும் கைகூப்பி புன்னகைத்தாள்.

“அடுத்து யாரை மீட் பண்ணனும்?” என திவ்யா கேட்க நம்ம அடுத்த தயாரிப்பாளர் புஷ்பகலா என்றாள் ஏஞ்சல். புஷ்பகலா இந்தியாவின் அனைத்து சேனல்களிலும் நிகழ்ச்சிகளை தயாரிக்கக்கூடிய தயாரிப்பாளர். நிறுவனம் ஆரம்பித்த 5 ஆண்டுகளிலேயே இந்தியாவின் அனைத்து முன்னணி சேனல்களிலும் சீரியல்கள் தயாரிக்கும் அளவுக்கு அவர்களது நிறுவனம் வளர்ந்திருந்தது.

“என்னநான் அறிமுகப்படுத்திக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்” என்று ஆரம்பித்தார் புஷ்பகலா.

“ஒரே கேள்விதான் உங்க கிட்ட... நம்பர் ஒன் சேனலை விட்டுட்டு நீங்க ஏன் எங்க சேனலுக்கு ஷோ பண்ணனும்னு ஆசைப்படுறீங்க?” என திவ்யா கேட்டாள்.

“நான் ஷோ பண்ற சேனல நம்பர் ஒண்ணா மாத்தி காட்டணும்னுதான்” என கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னார் புஷ்பகலா. அவரது நம்பிக்கை திவ்யாவுக்குப் பிடித்திருந்தது.

திவ்யா அடுத்து ஏதோ பேசப்போகும் சமயம் திவ்யாவின் போன் அடிக்க எடுத்து காதில் வைத்தவள், “சொல்லு” என்றாள். மறுமுனையில் மார்க்ஸ்.

“அந்தம்மாவ நம்பாத... அமிதாப் பச்சனை ஹீரோவா நடிக்க வைக்கிறேன். கேத்தரினாவை ஹீரோயினா கொண்டு வாரேன்னு எல்லாம் சீன் போடும். ஆனா, அவங்க ஆபிஸ்ல வேலை செய்யுறவங்களே எல்லா ரோல்லயும் நடிப்பானுங்க... பாரிஸ்ல ஷூட் பண்றேன்னு சொல்லும். ஆனா, கடைசில பாரிஸ் கார்னர்ல ஷூட் பண்ணும். கேட்டா, நான் சொன்னது இந்த பாரிஸ்தான்னு சொல்லும். உலக டார்ச்சர் அது. அந்தம்மா கொடுக்குற பில்டப்பை நம்பிடாத” என்றபடி அவன் போனை கட் செய்ய திவ்யா யோசனையாக நிமிர்ந்து புஷ்பகலாவை பார்த்து புன்னகைத்தாள்.

“நம்ம சீரியலுக்கு மும்பையில இருந்து பெஸ்ட் மாடலை ஹீரோயினா எடுத்துட்டு வரேன். வேணும்னா முதல் 20 எபிசோட் பாரிஸ்ல ஷூட் பண்ணலாம். மொத்த தமிழ்நாடும் நம்ம சீரியலைத் திரும்பிப் பார்க்கும்” என புஷ்பகலா சொல்ல திவ்யா என்ன சொல்வது எனத் தெரியாமல் அவளைப் பார்த்தாள்.

“சூப்பர் மேடம்...” என்றாள் ஏஞ்சல்.

“அப்புறம் ஒரு சின்ன விஷயம். மார்க்ஸுன்னு ஒருத்தன் இங்க இருக்கான். அவன் இருக்கிற வரைக்கும் இங்க சீரியல் பண்ணவே கூடாதுன்னுதான் இருந்தேன். புதுசா நீ வந்திருக்கேன்னு சொன்னதாலதான் நான் இங்க வந்தேன். அவன் ஆப்போசிட் டீமாமே... அவனை நாம காலி பண்றோம்” என புஷ்பகலா சிரித்தார்.

ஏஞ்சலும் அதை ரசித்து சிரிக்க திவ்யா அவளை ஏறிட்டு பார்த்தவள், “மார்க்ஸ் என்னோட எதிரி கிடையாது என்னோட நல்ல ஃபிரண்ட்” என சொல்ல புஷ்பகலா முகம் மாறியது.

“என் கம்பெனி ஆளுங்க பத்தி இன்னொரு தடவை என்கிட்ட தப்பா பேசாதிங்க. நாம சீரியல் பத்தி மட்டும் பேசலாம்!”

“இல்ல நான் பர்சனலா சொன்னேன்” என புஷ்பகலா தடுமாறியபடியே சொல்ல, “ஆபிஸ்ல பேசுறப்ப அஃபீஷியலா மட்டும் பேசலாம்” என திவ்யா சொல்ல புஷ்பகலா முகம் இருண்டது.

“மேடம் இந்தியில பண்ண மாதிரி எங்களுக்கும் ஒரு ஹிட் சீரியல் பண்ணிக் கொடுங்க...” எனப் பேச்சை மாற்றினாள் ஏஞ்சல்.

“கண்டிப்பா பண்ணிடலாம்” என சிரித்தாள் புஷ்பகலா.

திவ்யாவும் புன்னகைத்தாள்.

புஷ்பகலா எழுந்து வெளியே செல்ல ஏஞ்சல் அவசரமாக, “என்ன திவ்யா அவங்ககிட்ட போய் இப்படி பேசிட்ட?!” என்றாள்.

“இதை நாம என்கரேஜ் பண்ணக்கூடாது ஏஞ்சல். மார்க்ஸை திட்டுனா நமக்கு பிடிக்கும்ன்னு நினைக்கறதே முதல் தப்பு. இந்த மாதிரி ஆளுங்க வேலை செய்யமாட்டாங்க... இந்த மாதிரி நமக்குள்ள பாலிடிக்ஸ் பண்ணியே காலத்தை ஓட்டுவாங்க”

“அவங்க பெரிய தயாரிப்பாளர். அவங்க நிச்சயமா நல்ல புராடக்ட் பண்ணுவாங்கன்னு நான் நம்புறேன்” என்றாள் ஏஞ்சல்.

“நீ நம்புனா கண்டிப்பா அவங்களுக்கு புராஜக்ட் குடு. நல்ல சீரியல் பண்ணா மட்டும் போதும்... மார்க்ஸை நாங்க பார்த்துகிறோம்னு சொல்லு” என திவ்யா சிரிக்க, ஏஞ்சலும் சிரித்தாள்.

“நீங்களும் மார்க்ஸூம் ஒரே வீட்ல இருக்கப் போறீங்களாமே?” என சட்டென சம்பந்தமில்லாமல் கேட்டாள் ஏஞ்சல்.

திவ்யா அவளை ஏறிட்டுப் பார்த்தவள் “மானஸ் உன் வீட்டு மாடியிலதான் குடியேறப் போறானாமே அப்படியா?” என்றாள்.

சில சமயங்களில் கேள்விக்கு இன்னொரு கேள்வி நல்ல பதிலாகி விடுவதுண்டு. ஏஞ்சல் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தாள். திவ்யாவுக்கு ஏஞ்சலிடம் அப்படி பேசியிருக்க வேண்டாம் எனத் தோன்றியது. என் விஷயத்தில் தலையிடாதே என்கிற கோபமா இல்லை, அவள் மார்க்ஸின் முன்னாள் காதலி என்கிற பொறாமையா எனத் தன்னைதானே கேட்டுக் கொண்டாள் திவ்யா.

மார்க்ஸூம் நெல்லையப்பனும் கேன்டீனுக்குள் நுழைந்தார்கள். பிரசாத், செல்லப்பா, அலோக் மூவரும் ஒன்றாக ஒரு டேபிளில் அமர்ந்திருந்தார்கள்.

“என்னப்பா மூணு வில்லனும் ஒண்ணா உட்கார்ந்திருக்கானுங்க” என்றார் நெல்லையப்பன்...

“ஆமாம்ணே” என ஆமோதித்தான் மார்க்ஸ்!

“அது எப்படின்னு தெரியலப்பா... ஒருத்தனுக்கொருத்தன் சம்பந்தமே இல்லாதவனுங்களா இருந்தாலும் கெட்டவனுங்க எப்படியோ ஒரே டீமாயிடுறானுங்க...”

நெல்லையப்பன் சொன்னது சரி என மார்க்ஸுக்குப்பட்டது. பெரும்பாலான அலுவலகங்களில் அதைப் பார்க்க முடியும். நல்லவர்கள் ஒன்றாக இருப்பது போலவே தப்பானவர்களும் ஒரு டீமாக இருப்பார்கள். அவர்களுக்கிடையில் இருக்கும் ஏதோ ஒரு வில்லத்தனம் அவர்களை ஒன்றாக இணைக்கும்போல.

“வாப்பா கீழ போய் டீ குடிக்கலாம். இவனுங்க மூஞ்சைப் பார்த்துக்கிட்டு டீயைக் குடிச்சா அது டீயாவே இருக்காதுப்பா” என்றார் நெல்லையப்பன்.

“அலோக் மெயில் போட்டானா அண்ணே” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“இல்லைன்னுதான் பசங்க சொன்னானுங்க!”

“நேரா அவன்கிட்ட பேசிடவா?”

“வேணாப்பா அதுக்குத்தான் அவன் வெயிட் பண்றான். போயி கேட்டா உன்னை ஏதாவது மொக்க பண்ணுவான்!”

“சரின்னே அதுக்காக இப்படியே இருந்தா எப்ப நம்ம வேலையை ஆரம்பிக்கிறது?”

“வேணும்னு தனியா ரூம்ல போயி பேசு இங்க வேணாம்!”

“ஏன்?”

“பல்வாள்தேவன், அவன் அப்பன் நாசர் எல்லாம் ஒண்ணா இருக்காங்களே... அதான் யோசிச்சேன்!”

“பாகுபலி கூட மாமா கட்டப்பா நீ இருக்கிற... அப்புறம் எனக்கு என்ன பயம் சொல்லு!”

“யோவ் என்னய்யா என்னை முதுகுல குத்துனவனா ஆக்கிட்ட!” என நெல்லையப்பன் ஷாக் ஆக,

“ஒரு உதாரணத்துக்கு சொன்னா அப்படியே பாகுபலி கதைன்னு அர்த்தம் எடுத்துக்கிறதா... விட்டா அனுஷ்கா யாருன்னு கேட்ப போல!”

“அனுஷ்கா திவ்யா... தமன்னா அந்த கொல்கத்தா பொண்ணு!”

“வாய மூடு மாமா...” என சிரித்தபடி மார்க்ஸ் எழுந்தான்.

ஓரக்கண்ணால் மார்க்ஸைப் பார்த்து ஏதோ கிண்டல் செய்து சிரித்துக் பேசிக்கொண்டிருந்த பிரசாத், மார்க்ஸ் தன்னை பார்த்து நடந்து வருவதை பார்த்து முகம் மாறினான். செல்லப்பாவுக்கும் லேசாக உதறல் எடுத்தது.

மார்க்ஸ் ஒரு சேரை இழுத்துப்போட்டு அலோக்கின் எதிரில் அமர்ந்தான். நெல்லையப்பன் அவர்களுக்கு அருகில் இருந்த டேபிள் சேரில் அமர்ந்தார். உடன் வந்தது போலவும் இருக்கும், இல்லாதது போலவும் இருக்கும்படியான ஓர் இடம் அது.

“ஹாய் சார்” என்றான் மார்க்ஸ்...

பதில் எதுவும் சொல்லாமல் அவனைப் பார்த்தான் அலோக்.

“இதோட 5 மெயில் போட்டாச்சு சார். உங்ககிட்ட இருந்து பதில் இல்ல. அதான் நேர்ல கேட்கலாம்னு... மெயில் பார்த்தீங்களா சார்?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“பார்த்தேனே!”

“பதில் வரல அதான்!”

“போடக் கூடாதுன்னுதான் போடல...” என்றான் அலோக்.

“நம்ம சண்டையில வேலை பாதிக்க கூடாதில்ல சார்?!”

“என்ன தைரியம் இருந்தா என்கிட்ட வந்து பேசுவ நீ?”

மார்க்ஸ் முகம் மாறியது.

“உங்க கிட்ட பேச தைரியம் எதுக்கு... காரணம் போதாதா?”

“என்னடா திமிரா?”

“ஆமாடா திமிர்தான்...”

அலோக்கின் முகம் மாற....

பிரசாத் பதற்றமாக “மார்க்ஸ்” என்றான். அவர்கள் அடித்துக்கொள்வதில் பிரசாத்துக்கு சம்மதம்தான். ஆனால் அவன் முன்னால் அடித்து கொண்டால் அவன் என்ன செய்தான் என்ற கேள்வி வருமே என்கிற அக்கறைதான் அவனுக்கு.

“என்ன?” எனப் பிரசாத்தை பார்த்து கேட்டான் மார்க்ஸ்.

“பெரிய மனுஷனை மரியாதை இல்லாம பேசுற?”

“சின்ன மனுஷன்னா மரியாதை இல்லாம பேசலாமா?!”

பிரசாத் மெளனமானான்.

“இங்க பார். ஃபைனான்ஸ் டிப்பார்ட்மென்ட்டோட பவர் என்னன்னு உனக்கு நான் புரிய வைக்கிறேன். நீயும் உன் ப்ரொடியூஸர்களும், ஒவ்வொரு அப்ரூவலுக்கும் பேமன்ட்டுக்கும் நாயா அலையப் போறீங்க... மூணே மாசத்துல இந்த வேலை வேணாம்னு நீ ரிசைன் பண்ணிட்டு ஓடுறியா இல்லயான்னு மட்டும் பாரு” என அலோக் சொல்ல, மார்க்ஸ் புன்னகைத்தான்!

பிரசாத்தும் செல்லப்பாவும் பதற்றமாகப் பார்த்தனர்.

“அலோக்... நான் வேலைய விட்டு போகாம பார்த்துக்கோ. எனக்காக சொல்லல உனக்காக சொல்றேன். இங்க வேலை செய்யுறதால மட்டும்தான் நான் இப்படி உன் முன்னாடி உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கேன். இந்த வேலை வேணாம்னு நான் முடிவு பண்ணி இருந்தேன், இந்நேரம் உன்னை இந்த கேன்டீன்லயே பொளந்திருப்பேன். புரியுதா?”

அலோக்கின் முகம் இருண்டது.

“நீ என்ன வேணா பண்ணுடா... நீ என்னதான் பண்ணுறேன்னு நானும் பாக்குறேன். நீ பேப்பரைத் தூக்கியடிச்ச... நான் பேப்பரைத் தூக்கியடிச்சேன் முடிஞ்சுது கதை. அதை மறந்திட்டு அடுத்த வேலைய பாக்கலாம்னு நான் சொல்றேன். அதெல்லாம் முடியாது சண்டைதான் போடுவேன்னா வா சண்டை போடுவோம். புரோகிராம் பண்றதுதான் கஷ்டம். சண்டை போடுறது ஈஸிதான்.”

“என்னடா மிரட்டுறயா?” என்றான் அலோக்.

“செய்யாதத சொல்ற பழக்கமே நமக்கு கிடையாது. நான் என்னைக்கு உன்னால ரெசிக்‌னேஷன் லெட்டர் கொடுக்குறேனோ, அன்னைக்கு உனக்கு எண்ட் கார்ட்தான்!”

“மார்க்ஸ்... என் முன்னாடியே இப்படி பேசுற... நான் ரிப்போர்ட் பண்ணா என்ன ஆகும்ன்னு தெரியும் இல்ல?” என அதட்டினான் பிரசாத்!

“ரெண்டு பேர் பேசுனதையும் ரிப்போர்ட் பண்ணுங்க சார்...”

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

பிரசாத் முறைக்க...

“ஒன் சைடா ரிப்போர்ட் பண்ணலாம்னு பார்க்குறீங்களா? மாமா மொத்தத்தையும் ரெக்கார்ட் பண்ணிட்டு இருக்காரு. நான் அதைப் போட்டு காட்டுவேன்” என்றான் மார்க்ஸ்.

பிரசாத்தும் செல்லப்பாவும் பதறிப்போய் நெல்லையப்பனைப் பார்க்க... அவர் அவர்களை விட அதிகமாக பதறிப் போனார்.

“ரெக்கார்ட் பண்றனா... நானா?” என்பது போல இருந்தது அவர் பார்வை. நெல்லையப்பன் பாக்கெட்டில் இருந்த பெரிய இங்க் பேனாவை ரெக்கார்டர் என நினைத்து பிரசாத் பயமாகப் பார்த்தான்.

“அலோக் சார் இப்பவும் சொல்றேன். என்ன என் வேலையை செய்ய விடுங்க. அவ்வளவுதான் நான் கேட்குறேன்!”

“உன்னை மாதிரி வசனமெல்லாம் நான் பேச மாட்டேன். என் பவர் என்னன்னு உனக்கு புரியவைக்கிறேன்...”

“ரைட் விடு... புரிய வை... புரிஞ்சுக்கிறேன்... வா மாமா!” என மார்க்ஸ் எழுந்து நடக்க அவசரமாக நெல்லையப்பன் பின் தொடர்ந்தார்.

அலோக் அவன் போவதையே முகம் சிவக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். மார்க்ஸின் வாழ்க்கையை எப்படி நரகமாக்குவது என்று அவனுக்குள் பல யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தன. பல சுவாரஸ்யமான சண்டை காட்சிகள் வரப்போகிறது என்பது பிரசாத்துக்கும் நெல்லையப்பனுக்கும் புரிந்தது.

- Stay Tuned...