கான்ஃபரன்ஸ் அறையின் வெளிப்புறம் மார்க்ஸும் அவனது அணியினரும் பதற்றமாகக் காத்திருந்தார்கள். யாரும் அறையின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
உள்ளே மேஜையின் ஒரு புறம் பாண்டியன் தனியாக தலை குனிந்தபடி அமர்ந்திருந்திருந்தான். எதிரே அலோக்,செல்லப்பா, பிரசாத் மூவரும் அமர்ந்திருந்தனர். அனைவரும் சித்தார்த் மேனன் வருகைக்காகக் காத்திருந்தார்கள். மேனன் ஒரு சர்க்கஸ் துப்பாக்கி என்பது பிரசாத்துக்கும், செல்லப்பாவுக்கும் நன்றாகத் தெரியும். அது எப்போது முன்னாடி சுடும், எப்போது பின்னாடி சுடும் என்பது கணிக்கமுடியாத ஒன்று. அலோக் மட்டும் நம்பிக்கையுடன் காத்திருந்தான். விதிகளை மீறி மேனன் எதுவும் செய்யமுடியாது என்பது அவனுக்குத் தெரியும்.
மேனன் நடந்து வர அறைக்கு வெளியே காத்திருந்த அனைவரும் அவருக்கு வணக்கம் வைக்க அவர் தலையாட்டியபடி அவர்களைக் கடந்து கான்ஃபரன்ஸ் அறைக்குள் நுழைந்தார். எப்போதும் அவரது இதழின் ஓரமாய் ஒட்டியிருக்கும் புன்னகை இல்லாமல் அவரது முகம் கடுமையாகத் தெரிந்தது.
“என்னப்பா சார் கிட்ட ஒருவார்த்தை சொல்லியிருக்கலாமே” என மார்க்ஸைப் பார்த்து கேட்டார் நெல்லையப்பன்.
“வேணாம்னே... அவருக்கு எது சரின்னுபடுதோ அதை அவர் செய்யட்டும்!”
கான்ஃபரன்ஸ் அறைக்குள் நுழைந்த மேனன் சேரில் அமர்ந்தபடி திரும்பி பிரசாத்தைப் பார்த்து கண்களால் 'என்ன?' எனக் கேட்க பிரசாத்துக்கு லேசாக உதறல் எடுத்தது.
“இல்ல சார் பாண்டியன் வெண்டார்கிட்ட இருந்து லஞ்சம் வாங்கியிருக்காரு. கையும் களவுமா நாங்க பிடிச்சிட்டோம்!”
“எங்க வச்சு பிடிச்சீங்க?”
“அவரு டேபிள்லதான் சார்” என்றான் செல்லப்பா.
மேனன் திரும்பி பாண்டியனைப் பார்த்தார்.
“அது நான் கடனா குடுத்த பணம் சார்... என்னோட அக்கவுன்ட்ல இருந்து காலையில அந்தப் பணத்தை நான் அவருக்கு மாத்திவிட்டதுக்கு புரூஃப் இருக்கு. அதைத்தான் அவங்க திருப்பிக் குடுத்தாங்க!” என்றான் பாண்டியன்.
“இல்ல சார்... அது லஞ்சப் பணம் தான் சார்” என பாண்டியன் முடிக்கும் முன் அவசரமாகச் சொன்னான் பிரசாத்.
”நம்ம கம்பெனி ரூல்ஸ் படி வெண்டாரோட இந்த மாதிரி மணி டிரான்ஸாக்ஷன் வெச்சுக்கிறது பெரிய தப்பு. அது ஒண்ணு போதும் வேலையை விட்டு அனுப்புறதுக்கு!” என உள்ளே புகுந்தான் அலோக்.
மேனன் அலோக்கைப் பார்த்தார்.
“ரூல்ஸ் மேனன்... நீங்களோ நானோ அத மாத்த முடியாது” என்றான் அலோக்.
“கரெக்ட்... தேங்ஸ் அலோக் ரூல்ஸை ஞாபகப்படுத்துனதுக்கு” என்ற மேனன் முகத்தில் சின்ன புன்னகை.
சர்க்கஸ் துப்பாக்கி பின்னாடி வெடிக்கப் போகிறது என்பது தெரிந்துவிட்டது பிரசாத்துக்கு.
“நம்ம கம்பெனியில இதெல்லாம் செய்யலாம் இதெல்லாம் செய்ய கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு. அந்த பாலிசிய எம்ப்ளாயிஸுக்கெல்லாம் மீட்டிங் போட்டு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுவோம். அப்புறம் அந்த பாலிஸி டாக்குமென்ட்ல எல்லோர் கிட்டயும் கையெழுத்து வாங்குவோம். இதை எல்லாம் பண்ணியாச்சில்ல பிரசாத்?” என மேனன் கேட்க தடுமாறினான் பிரசாத்.
“இல்ல சார்... மும்பைல இருந்து கார்ப்பரேட் கவர்னன்ஸ் டீம் அடுத்த வாரம்தான் மீட்டிங்காக வர்றாங்க” என்றான்.
“அப்படியா... உங்க பழைய கம்பெனி எம்ப்ளாயி அக்ரிமென்ட்ல இந்த மாதிரி ரூல்ஸ் எதுவும் இருக்கா?!”
“இல்ல சார்”
“இப்ப பாண்டியனை டெர்மினேஷன் பண்ணி அவர் கோர்ட்டுக்கு போனா நாம என்ன பதில் சொல்லுவோம்” என மேனன் கேட்க பாண்டியன் நிமிர்ந்து மேனனைப் பார்த்தான். அவர் அவனுக்காக வாதாடுகிறார் என்பது அவனுக்குத் தைரியத்தைத் தர அவன் சற்று நிமிர்ந்து அமர்ந்தான்.
“பாலிசி டாக்குமென்ட்ல கையெழுத்து போடலைன்னா லஞ்சம் வாங்கலாம்... இல்லையா மேனன்...” ஆத்திரமும் கிண்டலுமாக கேட்டான் அலோக்.

“அப்படி இல்ல... வெண்டாருக்கு கடன் குடுத்து வாங்கலாம்!”
“புரொடக்ஷன் கம்பெனி அவனோட கவர்ல பணத்தைப் போட்டு ஓப்பனா கொடுத்திருக்கான். இவன் நம்ம ஆபிஸ்ல சிசிடிவி கேமரா பத்தி கவலைப்படாம அவனோட சீட்லயே உட்கார்ந்து அதை வாங்கியிருக்கான். நீங்க அவனை சப்போர்ட் பண்றீங்க... இது என்ன நியாயம் மேனன்?!”
“அலோக் உன்னோட கேள்வியிலேயே பதிலும் இருக்கு. எந்த முட்டாளாவது இப்படி செய்வானா? அட்லீஸ்ட் டீக்கடையில வெச்சு அந்தப் பணத்தை வாங்க மாட்டானா? அந்த அளவுக்கு கூடவா பாண்டியன் கிரியேட்டிவ்வா யோசிக்க மாட்டாரு!”
“என்ன மேனன் இது... இவ்வளவு ஒன்சைடா பேசுறீங்க?!”
“ஒன்சைடா பேசுறது நீங்க... அதனாலதான் நியாயமா பேசுற நான் உங்களுக்கு ஒன்சைடா தெரியுறேன்!”
பிரசாத்துக்கும் செல்லப்பாவுக்கும் ஏசி குளிரிலும் வியர்த்தது.
“லஞ்சத்தை ஒழிக்கிறதுக்கும், உங்களுக்கு எதிரா பேசுற ஆளுங்களை ஒழிக்கிறதுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும். இந்த என்கொயரியில இறுதி முடிவு எடுக்குற அதிகாரம் எனக்கு இருக்கு. நான் பாண்டியன் லஞ்சம் வாங்கலைன்னு நம்புறேன். நீங்க வேற ஏதாவது சொல்லணுமா?!”
“சிசிடிவி ஃபுட்டேஜோட நான் மும்பையில இருக்கிற கார்ப்பரேட் கவர்னன்ஸ் டீமுக்கு கம்ப்ளெய்ன்ட் பண்ணுவேன்” என்றான் அலோக்.
“தாரளமா பண்ணுங்க... அப்படி பண்ணா உங்க மூணு பேர் வேலையும் போயிடும்” என்றார் மேனன்.
தூக்கிவாரிப்போட்டது பிரசாத்துக்கும் செல்லப்பாவுக்கும்.
“பாண்டியனோட இரண்டு கையையும் பிடிச்சு நீங்க ஒரு கைதிய இழுத்துட்டு போற மாதிரி இழுத்திட்டு போயிருக்கீங்க. அப்படி ஒருத்தரை நடத்துறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. தப்பே பண்ணியிருந்தாலும் மொத்த ஆபிஸ் முன்னாடியும் பாண்டியனை அவமானப்படுத்த உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல!”
அலோக் முகம் இருண்டது.
“இதை நீ ஞாபகப்படுத்துனதால இதுக்கு நான் ஆக்ஷன் எடுக்கலைன்னா ரொம்ப தப்பாயிடும். பிரசாத், அலோக்குக்கு ஒரு வார்னிங் லெட்டர் அனுப்பிருங்க!”
அவசரமாக “யெஸ் சார்” என்றான் பிரசாத்.
“அந்த லெட்டரை நீங்க ரெண்டு நாள் கழிச்சுதான் அனுப்ப முடியும். ஏன்னா உங்களையும், செல்லப்பாவையும் நான் ரெண்டு நாள் சஸ்பெண்ட் பண்றேன்.''
''சார்'' எனப் பதறிப்போய் எழுந்தார்கள் இருவரும்.
“சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக தங்களோட பதவியை, பவரை தப்பா பயன்படுத்துற கோழைங்களாலதான் நல்ல வேலைக்காரங்களை நிறைய கம்பெனிகள் இழந்துடுது. இந்த உண்மை பெரும்பாலும் வெளிச்சத்துக்கே வராமலும் போயிடுது!”
“சார்... சார்...” எனப் பிரசாத் ஏதோ பேச வர...
“நீங்க கிளம்பலாம்” என்றார் மேனன்.
அலோக் கோபமாக நாற்காலியை பின்னோக்கித் தள்ளிவிட்டு எழுந்துசெல்ல பிரசாத்தும் செல்லப்பாவும் அவனைப் பின் தொடர்ந்தனர்.
மேனன் எழுந்திருக்க... “சார்” எனக் கண்ணீருடன் பாண்டியன் அவரது காலில் விழப்போக அவனைத் தடுத்தவர்...
“பாண்டியன் என்ன இதெல்லாம்?”
“தேங்க் யூ சார்” என மேற்கொண்டு பேசமுடியாமல் அவனுக்கு அழுகை வந்தது. “போய் வேலையைப் பாருங்க” என்றபடி மேனன் அறையை விட்டு நகர வெளியே காத்திருந்த மார்க்ஸும் அவனது அணியினரும் கான்ஃபரன்ஸ் அறைக்குள் ஓடி வந்தனர்.
மேனன் காரிடாரில் நடந்து செல்ல கான்ஃபரன்ஸ் அறையில் இருந்து “ஏ” என்கிற சந்தோஷக் கூச்சல் கேட்டது. அவர் இதழில் புன்னகை மலர்ந்தது. நல்லது செய்வது எளிதான விஷயம்தான். கெடுதல் செய்வதற்குத்தான் நிறைய முயற்சிகள் செய்ய வேண்டும். மற்றவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான் மிகப்பெரிய சந்தோஷம். ஏனோ இது பலருக்குப் புரிவதில்லை.
திவ்யாவின் அறையில் ஏஞ்சல் அமர்ந்திருந்தாள்.
“எல்லா ப்ராஜெக்ட்டும் ஷூட் ஆரம்பிச்சாச்சு இல்ல...” என்றாள் திவ்யா.
“இல்ல...'வேதம்' மட்டும் இன்னும் ஷூட் ஆரம்பிக்கல...”
“ஏன்?” எனக் கேட்டாள் திவ்யா.
“சரியான ஹீரோயின் கிடைக்கல....கிடைச்சதும் ஃப்ளோருக்குப் போயிடலாம்!”
“என்ன ஏஞ்சல் இது... இதெல்லாம் ஒரு காரணமா சொல்ல முடியுமா... ஹீரோயின் ஆப்ஷன் யாருன்னு சொல்லுங்க?”
“எல்லாருமே மேகலா பண்ணா நல்லாயிருக்கும்னு ஆசைப்படுறோம். அவளுக்கேத்த ரோல். பின்னி எடுத்துருவா. அவளுக்கு டிவியில பெரிய ஃபேன் பாலோயிங்கும் இருக்கு!”
“அப்ப மேகலாகிட்ட பேச வேண்டியதுதானே?”
“பேமென்ட் ஜாஸ்தி. அதுவும் இல்லாம ஏதோ படம் நடிக்கப் போறாளாம். ரொம்ப பிஸி”
“அப்புறம் எப்படி அவங்க நம்ம சீரியல் நடிப்பாங்க... வேற ஆள் பாருங்க...” என்றாள் திவ்யா.
“இல்ல அவளை நடிக்க வைக்க ஒரு வழி இருக்கு!”
என்ன என்பது போல ஏஞ்சலை ஏறிட்டுப் பார்த்தாள் திவ்யா.
“அவ மார்க்ஸோட ஆளு!”
“வாட்”
“இல்ல... அந்த அர்த்தத்துல சொல்லலை.. அவன்தான் அந்தப் பொண்ணை அறிமுகப்படுத்தினது. அவளுக்கு அவன்தான் காட் ஃபாதர். அவன் சொன்னா அவ பண்ணுவா!”
திவ்யா யோசனையாக ஏஞ்சலைப் பார்த்தாள்.
“நீங்க வேணா மார்க்ஸ் கிட்ட பேசிப்பார்க்க முடியுமா?”
இன்ட்டர்காமை எடுத்த திவ்யா, “மார்க்ஸ் ஒரு உதவி” என்றாள்.
மார்க்ஸ் சட்டென போனை கட் செய்ய... திவ்யா புரியாமல் மீண்டும் இன்ட்டர்காமில் அவன் நம்பரை டயல் செய்யப்போக அறைக்கதவை திறந்து கொண்டு மார்க்ஸ் உள்ளே நுழைந்தான்.
“உதவின்னு கூப்பிட்டா ஓடோடி வருவோம்ல...” என சிரித்தபடி சொன்னவன் அறையில் ஏஞ்சலும் இருப்பதை கவனித்து சற்று தன்னை கன்ட்ரோல் செய்தபடி “ஹாய் ஏஞ்சல்” என்றான்.
“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணும்...” என்றாள் திவ்யா.
“சொல்லுங்க”
“என்னோட 'வேதம்' ப்ராஜெக்ட்ல மேகலா நடிச்சா நல்லாயிருக்கும்னு டீம்ல ஃபீல் பண்றாங்க. நீ சொன்னா அவங்க கேட்பாங்களாமே ஒரு வார்த்தை சொல்ல முடியுமா?”
மார்க்ஸ் யோசிக்க திவ்யா மார்க்ஸிடம்...
“ஏதாவது பிரச்னையா... அப்படின்னா வேணாம்”
“அப்படி இல்ல...” என இழுத்தவன் “சரி பேசுறேன்” என்றான்.
“இப்பவே பேசு” என ஏஞ்சல் இன்டர்காமில் எண்ணை டயல் செய்து ஸ்பீக்கரில் போட... மேகலாவின் காலர் டியூனான ''உன்ன விட'' என்ற 'விருமாண்டி' பாடல் சத்தமாக ஒலித்தது.
ஏஞ்சல் திவ்யா மார்க்ஸ் மூவரும் காத்திருக்க போனை எடுத்தாள் மேகலா.
“ஹலோ”
“மேகலா... நான் மார்க்ஸ் பேசுறேன்”
“சார்... சார்... சொல்லுங்க சார்... சொல்லுங்க சார்...” அவளது சந்தோஷமும் பரபரப்பும் குரலில் தெரிந்தது.
“ஒரு ரெண்டு நிமிஷம் பேசலாமா... நீ பிஸியா இருந்தா அப்புறமா அடிக்கிறேன்!”
“சார் ப்ளீஸ் சார்... சொல்லுங்க சார்”
“ஒரு புராஜெக்ட் விஷயமா பேசணும்!”
“சார் 10 நிமிஷம் கொடுங்க சார். நான் மவுன்ட் ரோட்லதான் இருக்கேன். நேர்ல வந்துடுறேன் சார்.”
ஒரு கணம் யோசித்த மார்க்ஸ் “சரி வா” என்றான்.
“வந்துகிட்டே இருக்கேன் சார்” என மேகலா போனை கட் செய்தாள்.
திவ்யா ஆச்சர்யமாக மார்க்ஸைப் பார்த்தாள். “யாருடா நீ?” என்பது போல இருந்தது அந்தப் பார்வை.
“நான் புரொடியூசர் டைரக்டருக்கு இன்ஃபார்ம் பண்ணி வைக்கிறேன். ஓகேன்னா உடனே அக்ரிமென்ட் சைன் பண்ணிடலாம்” என ஏஞ்சல் அங்கிருந்து கிளம்பினாள்.
“எல்லா பொண்ணுங்களும் மார்க்ஸ் சார்னா அப்படியே உருகுறாங்களே...” என்ற திவ்யாவின் குரலில் இருந்த மெலிதான பொறாமையை ரசித்தான் மார்க்ஸ்.
“இது வேறங்க”
“வேறன்னா?”
“எப்படி சொல்றது?'' என அவன் யோசிக்க...
“இன்னும் பத்து நிமிஷத்துல பாக்கத்தான போறேன்” என்றாள் திவ்யா.
மார்க்ஸ் புன்னகைத்தான்....

ஒரு நீல நிற ஃபுல் கவுனில் முழு மேக்கப்புடன் மேகலா ஆரஞ்சு டிவி அலுவலகத்திற்குள் நுழைய... மொத்த ஆபிஸும் அவளைத் திரும்பி பார்த்தது.
அவள் கான்ஃபரன்ஸ் அறைக்குள் நுழைய, அங்கு திவ்யாவும் ஏஞ்சலும் அமர்ந்திருந்தார்கள். திவ்யா மேகலாவை ஏறிட்டுப் பார்த்தாள். முகத்தில் அறைகின்ற ஆர்பாட்டமான அழகு. மேக்கப் இல்லாமல்கூட ஒரு கூட்டத்தில் அவளைப் பார்த்தாள் நடிகை என்று சொல்லிவிட முடியும். நல்ல உயரமும் முறையான உடற்கட்டுடன் இருந்தாள்.
“ஹாய் மேகலா...” என்றாள் ஏஞ்சல்.
“மார்க்ஸ் சார் இல்லையா?” என்றாள். அவள் கண்கள் அவனை தேடி ஏமாந்தது திவ்யாவுக்குத் தெரிந்தது.
“வராரு... நீ உட்காரு” என ஏஞ்சல் சேரை காட்ட தனது கவுனை இழுத்து பிடித்தபடி நாற்காலியில் அமர்ந்தாள் அவள்.
“இது திவ்யா” என ஏஞ்சல் திவ்யாவை அறிமுகம் செய்ய... “ஹலோ” எனப் புன்னகைத்தாள் மேகலா. அப்படியொரு அழகான புன்னகை அது. நடிகர் நடிகைகளின் சிரிப்பு பெரும்பாலும் செயற்கையானதாகவே இருக்கும். சம்பந்தமில்லாத பலரைப் பார்த்து கட்டாயத்தின் காரணமாக நாளெல்லாம் புன்னகைத்து, புன்னகைத்து எப்போதும் ஓர் உயிரற்ற புன்னகையை இதழில் ரெடிமேடாக வைத்திருப்பார்கள். ஆனால் மேகலாவின் சிரிப்பில் நிஜம் இருந்தது.
மார்க்ஸ் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். மார்க்ஸைப் பார்த்த அடுத்த கணம் தாவிச்சென்று அவனை அணைத்துக் கொண்டாள் மேகலா... அதை அறையில் இருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை!
நீண்ட நாள் கழித்து அம்மாவைப் பார்க்கும் குழந்தை அணைத்துக் கொள்வதை போலிருந்தது அது. மார்க்ஸ் வெட்கமும் புன்னகையுமாக அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான். அவனது அணைப்பில் துளியும் களங்கம் இல்லாத அன்பு மட்டுமேயிருந்தது. அந்த ஒரு கணத்தில் வித்தியாசமான மார்க்ஸை உணர்ந்தாள் திவ்யா...
மார்க்ஸ் ஆதரவாக முதுகைத் தட்டிக் கொடுத்தான். மேகலா விலகியவள் கையில் இருக்கும் கர்சீப்பால் கண்மை கலையாமல் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“ஷூட்ல இருந்தா வர?!” என மார்க்ஸ் கேட்டான்.
“ஆமா சார்... ஒரு போட்டோ ஷூட்” என்றாள் மேகலா.
“முடிச்சிட்டு வந்திருக்கலாமே!”
“உங்க போனைப் பார்த்ததும் எனக்கு ஒண்ணும் ஓடல... ஓடி வந்துட்டேன்!”
மார்க்ஸ் சிரித்தபடி “உட்காரு” என்றான். அவள் சேரில் அமர்ந்தாள்.
“என்ன விஷயம் சார் சொல்லுங்க”
“நீங்க சொல்லுங்க!” என அவன் திவ்யாவைப் பார்த்தான்.
“ஒரு புது சீரியல்... லீட் ரோல்... பெங்காலில 1000 எபிசோட் மேல இன்னும் போய்கிட்டு இருக்கு. நல்ல கேரக்டர்.”
“மார்க்ஸ் சார் சொன்னா அப்பீல் கிடையாது. பண்றேன் அவ்வளவுதான்!”
“உங்க பேமென்ட் எல்லாம்...” என ஏஞ்சல் கேட்க,
“என்ன கொடுத்தாலும் ஓகே...” என்றாள் மேகலா!
“இங்க பாரு என்ன பேமென்ட் சொல்லு... கதைய கேளு... படம் வேற நடிக்கிற.. டேட்ஸ் பிரச்னை வரக்கூடாது” என மார்க்ஸ் சொல்லிக்கொண்டே போக...
“சார்... நீங்க பண்ணணும்னு சொல்லுங்க சார் நான் பண்றேன்... அவ்வளவுதான்!”
மார்க்ஸ் திரும்பி திவ்யாவைப் பார்த்தான்.
“தேங்ஸ் மேகலா... நாங்க புரொடுயூசரை உங்களை கான்டாக்ட் பண்ண சொல்றோம்” என்றாள் திவ்யா.
“நோ பிராப்ளம்” என்றாள் மேகலா.
“சார் நீங்க மாட்டேன்னு சொல்ல கூடாது” என மேகலா கிஃப்ட் ஒன்றை எடுத்து நீட்ட...
“நீ லேட்டா வரும்போதே நினைச்சேன்... இப்படி ஏதாவது பண்ணுவேன்னு” என்றான் மார்க்ஸ்.
“வாங்கிக்கோங்க சார்... ப்ளீஸ்”
அந்த காட்சிகளைப் பார்க்க பிடிக்காமல் ஏஞ்சல், “நான் வந்துடுறேன் திவ்யா” என அங்கிருந்து நகர்ந்தாள்.
மேகலா பார்சலை நீட்டியபடி இருக்க...
“என்னது இது” என்றான் மார்க்ஸ்.
“பிரிச்சு பாருங்க சார்!”
“என்னன்னு சொல்லு?!”
“செல்போன் சார்... ஐ போன் 12 ப்ளஸ்”
“எதுக்கு?”
“நான் உங்களுக்கு கிஃப்ட் தரக்கூடாதா?”
“அன்பு மட்டும் போதும்... இது தேவையில்ல...”
“வாங்கிட்டேன் சார்... திரும்பி கொடுக்க முடியாது”
“உனக்கு உதை வேணுமா.. இதுக்குத்தான் உன்ன கண்டா ஓடுறேன்” என கோபமாகச் சொன்னான் மார்க்ஸ்.
“ சரி சார்... சரி சார்... கோச்சுக்காதீங்க!” என அவள் அதை மீண்டும் தனது கைப்பையில் வைத்துக் கொண்டாள்.
திவ்யா அவர்களை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“திவ்யா இவர் எனக்கு எவ்வளவோ பண்ணியிருக்கார்... திரும்ப நம்ம ஏதாவது பண்ணா இப்படித்தான் கோச்சுக்கிறது... கிஃப்ட் குடுக்குறதுல என்ன தப்பு சொல்லுங்க?” என திவ்யாவைப் பார்த்து மேகலா கேட்க அவள் என்ன சொல்வது எனத் தெரியாமல் புன்னகைத்தாள்.
“இந்த கிஃப்ட்டை நீங்க வேணாம்னு சொல்ல முடியாது” என மேகலா சிகரெட் பாக்கெட்டும் லைட்டரும் தர மார்க்ஸ் சிரித்தபடி அதை வாங்கிக் கொண்டான்.
“இப்ப கொடுத்தியே இந்த ரேஞ்ச் ஓகே...”
அவர்களுக்கிடையிலான அந்த உறவை திவ்யா ரசித்தாள்.
“திருச்சியில இருந்து நடிக்கணும்கிற ஆசையில ஓடி வந்துட்டேன் திவ்யா. சென்ட்ரல்ல இறங்கி நேரா ஆரஞ்சு டிவி வாசல்ல வந்து நின்னுக்கிட்டிருந்தேன். அப்பதான் சாரைப் பார்த்தேன். இப்பவும் அந்தக் காட்சி என் கண்ணுக்குள்ளேயே இருக்கு... என்னைக் காப்பாத்துறதுக்காக கடவுள் புல்லட்ல வந்தாரு...”
“போதும் உன் கதை” என அதற்கு முற்றுப்புள்ளி வைக்க மார்க்ஸ் முயன்றான்.
“என் கதை மட்டும் இல்ல சார் உங்க கதையும்தான். திவ்யா நீங்க புதுசா ஜாய்ன் பண்ணியிருக்கீங்களா?”
“ஆமா” என திவ்யா தலையை ஆட்டினாள்.
“அப்ப சொல்லியே ஆகணும்... என்ன இந்த ஆபிஸ்ல வேலை செய்ற பொண்ணு வீட்ல தங்க வச்சு, என் அப்பா அம்மாவுக்கு போன் பண்ணி என் பேஷனைப் புரிய வெச்சு, இவரே காசு கட்டி என்ன ஒரு வருசம் ஆக்ட்டிங் படிக்க வச்சு... இவங்க சீரியல்லயே என்ன நடிக்க வச்சு...” என நினைவுகளில் மூழ்கியவள் சின்ன பெருமூச்சுடன்...
“எனக்கு எல்லாமே சார் தான்... இந்த ஃபீல்டுல நான் நிறைய ஆம்பிளைங்களை சந்திச்சிருக்கேன். எல்லாருமே எதிர்பார்ப்போடதான் உதவி பண்ணத் தயாரா இருந்தாங்க... ஆனா எதையுமே எதிர்பார்க்காம எனக்கு உதவுன ஒரே ஒரு ஆள் மார்க்ஸ் சார் மட்டும்தான்.”
“சரி கிளம்பலாமா...” என மார்க்ஸ் எழ மேகலா சிரித்தாள்.
புகழும் போது வெட்கப்படுவது உயர்ந்த இயல்பு. நம் மீதிருக்கும் அன்பால் கொட்டப்படும் புகழ்ச்சியான வார்த்தைகள் நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்வது அறிவு. தன்னை கடவுள் என கூசாமல் ஒருவன் புகழும் போது ஆம் என்பதாய் அதை ஏற்றுக் கொண்டு நம்புவதைப்போல முட்டாள்தனம் உலகத்தில் கிடையாது.
“சரி சார் நான் பேசல” என்ற மேகலா திவ்யாவிடம் திரும்பி “சார்கிட்ட இன்னொரு பழக்கம் இருக்கு. நீங்க சாதாரண ஆளா இருக்கும்போது 100 தடவை பேசுவார். எப்ப போன் பண்ணாலும் எடுப்பார். ஏதாவது உதவின்னா உடனே செய்வாரு. அதுவே அந்த ஆளுங்க கொஞ்சம் வளர்ந்து பெரிய ஆளாயிட்டா கண்டுக்கவே மாட்டாரு!”
“இது வித்தியாசமா இருக்கே...” எனச் சிரித்தாள் திவ்யா.
“கஷ்டப்படும்போது கூட இல்லைன்னாதான் தப்பு. பெரிய ஆளானதுக்கு அப்புறம் நீங்களே உங்களைப் பார்த்துக்க வேண்டியதுதான். சரி கிளம்பு” என்றான் மார்க்ஸ்.
“ஓகே திவ்யா தேங்ஸ்... நாம அப்புறம் சந்திப்போம்” என மேகலா விடைபெற்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
“கொஞ்சம் கீழ வாங்க சார் புதுசா பென்ஸ் வாங்கியிருக்கேன். உங்க கிட்ட காட்டணும்...” என்றாள்.
“நாங்க பார்க்காத பென்ஸா...”
“அதில்ல சார்... என் காரை நீங்க பார்க்க வேண்டாமா?”
“போட்டா அனுப்பு பார்த்துக்கிறேன்...”
“ஈசிஆர்-ல ஒரு வீடும் வாங்கி இருக்கேன் சார். நீங்கதான் கிரஹப்பிரவேசத்துக்கு வரணும்!”
மார்க்ஸ் அவளை உற்றுப்பார்த்தான். அதன் அர்த்தம் புரிந்த மேகலா தயக்கமாக “என்ன சார்?” என்றாள்.
“இந்த இடத்துக்கு வரணும்னுதானே நீ கனவு கண்ட... அந்த கனவு நிஜமாயிடுச்சு. புகழ் பணம்னு நீ ஆசைப்பட்டதுக்கு மேல எல்லாம் கிடைச்சிருக்கு. புத்திசாலித்தனமா அதை காப்பாத்திக்கிற வழியைப் பாரு...”
“சார் நான்...”
“அந்த கந்துவட்டிக்காரனோட எதுக்கு சுத்திக்கிட்டு இருக்க...” என மார்க்ஸ் பட்டென கேட்க பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள் மேகலா.
“நாங்க காதலிக்கிறோம் சார். கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்” என்றாள்.
“நடிகைகளை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கான ஆளா இருக்கனும். அவனைப் பார்த்தா அப்படி தெரியல... நல்லா யோசிச்சுக்கோ... பின்னாடி வருத்தப்படுற மாதிரி ஆயிடக்கூடாது. உன்ன கஷ்டப்படுத்தனும்னு இதை நான் சொல்லல... எனக்கு அவன் சரியான ஆளா தோணல, அவ்வளவுதான். போலாம்” என மார்க்ஸ் நகர... மேகலாவும் தலை குனிந்தபடி பின்னால் நகர்ந்தாள்.
மார்க்ஸின் போன் அடித்தது. திவ்யா எனப் பெயர் வர “ஹலோ” என்றான்.
“அந்தப் பொண்ணு கிளம்பிட்டாளா?!”
“இன்னும் இல்ல... ஏன் என்னாச்சு?”
“ஓண்ணும் இல்ல” என திவ்யா போனை பட்டென கட் செய்தாள். அந்த 'ஒண்ணும் இல்ல' என்பதற்குப் பின்னால் ஒளிந்திருந்த ஓராயிரம் விஷயங்களை நினைத்து மார்க்ஸ் சிரித்துக் கொண்டான். திவ்யாவின் பொறாமையை அவன் ரசித்தான்!