Published:Updated:

இடியட் பாக்ஸ் - 28: "மார்க்ஸ்... என்னய்யா சீரியல் எடுத்து வெச்சிருக்க?!"

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 28: "மார்க்ஸ்... என்னய்யா சீரியல் எடுத்து வெச்சிருக்க?!"

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

மார்க்ஸ் யோசனையாக நின்று கொண்டிருந்தான். அவன் அருகில் நெல்லையப்பன், பாண்டியன்.

“சாரி தல... இரண்டு நாள்லயே இந்த டைரக்டர் சரிப்பட்டு வர மாட்டான்னு சொல்லியிருக்கணும். என் தப்புதான்” என குற்ற உணர்வு மேலிட சொன்னான் பாண்டியன்.

“அதான் முடிஞ்சு போச்சுல்ல... இனி சாரி சொல்லி என்ன ஆகப்போகுது?” என்றான் மார்க்ஸ்.

“இப்ப என்னப்பா பண்றது?” எனப் புரியாமல் கேட்டார் நெல்லைப்பன்.

“பாண்டியா ஃபர்ஸ்ட் எபிசோடுக்கு இன்னும் எத்தனை சீன் எடுக்கணும்?”

“2 சீன் எடுத்திருக்கான். இன்னும் 6 சீன் எடுக்கணும் தல”

“இன்னொரு கேமரா சொல்லு... கேமராமேன் பாஸ்கர் ஃபீரியா இருந்தா உடனே கிளம்பி வர சொல்லு... லேட் நைட் போயாவது இன்னைக்கு 6 சீனையும் முடிக்கிறோம்” என உறுதியாகச் சொன்னான் மார்க்ஸ்

“கேமரா, கேமராமேன் ஓகேப்பா... டைரக்டர் யாரு?”

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“நீயே களத்தில இறங்குறீயா... அடி தூள்” என உற்சாகமானார் நெல்லையப்பன்.

இப்படி செய்யணும், அப்படி செய்யணும் என குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பதற்கு பதில் எப்படி செய்யணும் என செய்து காட்டிவிடுவது நல்ல தலைவர்களின் ஸ்டைல்.

“எடிட்டர் ஜெகனை லேப்டாப்போட வர சொல்லு... ஷூட் பண்ண ஷூட் பண்ண பேரலலா ஸ்பாட்லயே உட்கார்ந்து எடிட் பண்ணிட சொல்லு.”

“டன் தல” என்றபடி பாண்டியன் மார்க்ஸ் சொன்னவைகளை ஏற்பாடு செய்வதற்காக போனுடன் நகர்ந்தான்.

“பசங்கள கூப்புடுங்கன்ணே...”

“யப்பா... இப்படி வாங்க எல்லாரும்” என நெல்லையப்பன் கை தட்டி கூப்பிட ஆங்காங்கே விளையாடியபடி, ஒய்வெடுத்தபடியிருந்த நடிகர் நடிகைகள் மார்க்ஸ் அருகில் வந்தனர்.

“வணக்கண்ணா... வணக்கண்ணா” என அவர்கள் ஒவ்வொருவராக வணக்கம் வைத்தபடி அவன் எதிரே கூடினார்கள்.

மார்க்ஸ் அவர்களை உற்றுப் பார்த்தான். அனைவரும் முதல் முறையாக நடிப்பவர்கள். பள்ளிக்கூட கதை என்பதால் நடிப்பவர்கள் அனைவருமே பள்ளி அல்லது அதிகபட்சம் கல்லூரியில் படிப்பவர்களாகவே இருந்தனர். ஷூட்டிங் போவது போல இல்லாமல் உற்சாகமும் சந்தோஷமுமாக பள்ளிக்கு செல்கிற மாணவர்களைப் போல அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களின் கண்களில் இருந்த கனவு மார்க்ஸுக்கு நம்பிக்கையூட்டியது.

“அண்ணே அடுத்த சீன் பேப்பரை அவங்க கிட்ட குடுங்க!”

நெல்லையப்பன் சீன் பேப்பரை அவர்களிடம் நீட்டினார்.

“இன்னும் ஒரு மணி நேரம் டைம் தாரேன்... எல்லாரும் அவங்க அவங்க வசனத்த பார்த்துக்குங்க... டயலாக் மிஸ்ஸே ஆகக்கூடாது. சிங்கிள் டேக்கில அடிச்சு தூக்குறீங்க சரியா?” என மார்க்ஸ் உரத்த குரலில் சொல்ல அவனது பரபரப்பு அவர்களை தொற்றிக் கொண்டது. பரபரப்பாக அவர்கள் சீன் பேப்பரை பிடித்து இழுக்க... “பார்த்து பார்த்து பேப்பரைக் கிழிச்சிடாதீங்க” என்றார் நெல்லையப்பன். அவர்கள் அனைவரும் பேப்பருடன் நகர அதற்குள் தகவலறிந்த டைரக்டரும் கேமராமேனும் பதற்றமாக அங்கு வந்தனர்.

“சார் மார்னிங் சார்...”

“குட் மார்னிங் ராக்ஸ்...”

“சார் நீங்களே ஷூட் பண்ண போறீங்கன்னு சொன்னாங்க...”

“நானும் ஷூட் பண்ணப் போறேன்” என சிரித்தான் மார்க்ஸ்.

டைரக்டர் புரியாமல் அவனைப் பார்த்தார்.

“6 சீன் இருக்கு... நீங்க அந்த 2 வாத்தியார்கள் சீன் எடுங்க... பசங்களோட நாலு சீன் நான் எடுக்குறேன்!”

“சார் என்னை தூக்கிடாதிங்க சார்... ரொம்ப அசிங்கமா போயிடும்” எனப் பதற்றமாக சொன்னான் ராக்ஸ்.

“ராக்ஸ்... நீங்க ஷூட் பண்ண சீன் எல்லாம் பார்த்தேன். சூப்பரா ஷூட் பண்ணி இருக்கீங்க... அதுல எந்த குறையும் கிடையாது. ஆனா அதை 10 நாள் ஷூட் பண்றதுக்கு நமக்கு டைமும் கிடையாது, பட்ஜெட்டும் கிடையாது. நீங்க ஃபாஸ்டா ஷூட் பண்ற வரைக்கும் கூடவே இன்னொரு யூனிட் ஷூட் பண்ணியே ஆகணும். மினிமம் 5 சீனாவது ஒரு நாள்ல எடுக்கணும். அதை குவாலிட்டியா எப்படி பண்றதுன்னு நீங்க யோசிச்சா உங்களுக்கு பதிலா இன்னொரு டைரக்டரை நான் யோசிக்க வேண்டிய அவசியமிருக்காது!”

“யெஸ் ஸார்... யெஸ் ஸார்... பண்ணிடுறேன் சார்” என பரபரப்பாக அவன் நகர்ந்தான்.

மார்க்ஸ் திரும்பி நெல்லையப்பனை பார்த்தான்.

“ஒரு குட்டி மேனனா நீ மாறிக்கிட்டு வர்றப்பா” என சிரித்தார் நெல்லையப்பன்.

“இதை விட பெரிய பாராட்டு என்ன இருக்க முடியும்?” என மார்க்ஸ் புன்னகைத்தான்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

திவ்யாவின் வீட்டு வரவேற்பரையில் திவ்யாவின் அப்பா டிவி பார்த்துக் கொண்டிருக்க... அம்மா சமைத்துக் கொண்டிருந்தாள். திவ்யாவும் நந்திதாவும் அவளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தனர்.

“அவன் எப்படி வருவான்?” எனக் கேட்டாள் அம்மா.

“யாரு” என திவ்யா புரியாமல் கேட்டாள்.

“கார்ல் மார்க்ஸ்டி” என அம்மா சிரிக்க நந்திதாவும் சேர்ந்து சிரித்தாள்.

“இப்ப எதுக்கு அவசரமா அவனை நீ தேடுற?”

“நான் எங்க தேடுறேன். உங்கப்பாதான் ஈவ்னிங்ல இருந்து ஒரு 100 தடவ கேட்டுட்டாரு. அவன் எப்ப வருவான் வருவான்னு!”

“எதுக்கு... வந்ததும் அவன் கூட சண்டை போடுறதுக்கா?!”

“அத உங்கப்பாகிட்ட தான் நீ கேட்கணும்” என்றாள் அம்மா.

“ஆன்ட்டி அவன் காலையிலதான் வருவான்” என்றாள் நந்திதா.

“ஏண்டி” என ஆச்சர்யமாகக் கேட்டாள் திவ்யா.

“உனக்கு விஷயமே தெரியாதா? அவங்க டீம் ஸ்கூல் சீரியல் பண்றாங்கல்ல... அந்த டைரக்டர் கொஞ்சம் சொதப்பலாம். அதான் நம்மாளே களத்தில இறங்கி டைரக்ட் பண்றானாம். பரபரப்பா ஷூட்டிங் போகுதுன்னு சொன்னாங்க!”

“மார்க்ஸ்... டைரக்ட் பண்ணுவானா?”

“ஹலோ... மார்க்ஸ் அடையார் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல டைரக்‌ஷன் படிச்ச ஆளு தெரியும்ல... இங்க ஜாயின் பண்றதுக்கு முன்னாடி ரெண்டு மூணு சீரிஸ் டைரக்ட் பண்ணியிருக்கான்!”

“இது எப்படி உனக்கு தெரியும்?”

“இது எப்படி உனக்கு தெரியல?” என நந்திதா கேட்க திவ்யாவுக்குள்ளும் அதே கேள்விதான் ஓடியது. யோசித்து பார்க்க அவளுக்கே கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. இதுபற்றி அவர்கள் பேசிக் கொண்டதே இல்லை.

“அப்ப மார்க்ஸ் நைட்டு வர மாட்டானா?” என்றாள் அம்மா.

“ஏம்மா ஏதாவது அர்ஜென்ட்டா பேசணுமா... வேணும்னா நான் போன் போடுறேன்.”

“இல்ல... அவனுக்கு பிடிக்கும்னு புட்டு பண்ணேன்... அதான்” என அம்மா சொல்ல திவ்யா திரும்பி முறைத்தவள், “இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலையா” என்றாள்.

அம்மா சிரித்தாள்.

“அவனுக்கு புட்டு பிடிக்கும்னு எப்படி உனக்கு தெரியும்?!”

"அவனை இன்ஸ்டால ஃபாலோ பண்றேனே”

“இது எப்ப இருந்து?!”

“அவன் உங்கப்பாவ பார்த்து யாருடா நீன்னு கேட்டானே அப்பல இருந்து!” என அம்மா சிரிக்க நந்திதாவும் திவ்யாவும் சேர்ந்து சிரித்தனர்.

“அம்மா ஒண்ணு பண்ணலாம்... புட்டை பார்சல் பண்ணுங்க... நேரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே போய் கொடுத்திட்டு வந்திடலாம்” என்றாள் நந்திதா.

“ஏய்... இந்த நேரத்துல எப்படி போறது?”

“ஒரு கேப் போட்டு போயிடலாம்.”

“ஆமாடி எனக்கு கூட ஷூட்டிங் பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை” என்றாள் அம்மா.

“அப்பாகிட்ட என்ன சொல்லுவ?”

“அதை நான் பார்த்துக்கிறேன்... நீ கிளம்பு!”

திவ்யா தயக்கமாகத் தலையாட்டினாள்.

இரவு மணி 10-ஐ தாண்டியிருந்தது. சைல்ட் ஜீசஸ் பள்ளியின் வகுப்பறை ஒன்றில் உற்சாகமாக ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. மாணவர்களின் எனர்ஜி தன்னையும் தொற்றிக் கொண்டதை மார்க்ஸ் உணர்ந்தான். இதே எனர்ஜி மொத்த தமிழகத்தையும் தொற்றிக் கொள்ளும் என அவன் நம்பினான்.

மார்க்ஸ் அடுத்த ஷாட்டிற்கு ரெடியாக பாண்டியன் உள்ளே நுழைந்தான்.

“தல அண்ணி வந்திருக்காங்க... வாங்க..”

“அண்ணியா... எனக்கு ஏதுடா அண்ணி” என்றான் மார்க்ஸ்!

நெல்லையப்பன் சிரித்தபடி “நீ ஒரு சரியான வெங்காயம்ய்யா” என்ற அடுத்த நொடி மார்க்ஸுக்குப் புரிந்து விட்டது.

“எங்கடா?”

“வெளிய நிக்குறாங்க...”

“நீ க்ளோஸ்அப் எல்லாம் எடுத்திரு... நான் பத்தே நிமிஷத்துல வந்துடுறேன்...”

“பொறுமையா போயிட்டு வாப்பா நாங்க பார்த்துக்குறோம்” என்றார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் அவசரமாக ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த வகுப்பறையை விட்டு வெளியே வந்தான். ஷூட்டிங் நடக்கும் இடம் தவிர பள்ளியின் மற்ற இடங்கள் அனைத்தும் இருளில் மூழ்கியிருந்தன.

மார்க்ஸ் சுற்றும் முற்றும் பார்த்தான். பள்ளிக்கு நடுவே இருந்த காலி மைதானத்தில் மூவர் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. மார்க்ஸ் இதயம் படபடக்க அவர்கள் அருகில் வந்தான்.

திவ்யாவின் அம்மா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“தம்பி நல்லா இருக்கீங்களா?!”

“அம்மா ரொம்ப சாரிம்மா... காலையில” என அவன் முடிக்கும் முன் அம்மா குறுக்கிட்டவள், “அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்ல... பார்த்துக்கலாம்” என்றாள்.

“என்ன திவ்யா திடீர்னு?”

“அம்மா புட்டு பண்ணாங்க... உனக்கு குடுக்கலாம்னு கிளம்பி வந்தோம்” எனச் சொல்லிவிட்டு சிரித்தாள் நந்திதா.

மார்க்ஸ் என்ன சொல்வது எனத் தெரியாமல் தடுமாற அம்மா சிரித்தபடி, “சும்மா போரடிச்சுது... அப்படியே உன் ஷூட்டிங் பாக்கலாம்னு கிளம்பி வந்தோம்” என்றாள்.

மார்க்ஸ் பொதுவாக தலையாட்ட...

“ஆன்ட்டி வாங்க நாம போய் ஷூட்டிங் பார்க்கலாம்” என நந்து சொல்ல, “போயிட்டு வந்துடுறோம்” என அம்மாவும் அவளுடன் நகர்ந்தாள்.

திவ்யாவும் மார்க்ஸும் மட்டும் தனித்திருந்தார்கள். நிலவு வெளிச்சத்தில் மார்க்ஸ் திவ்யாவைப் பார்த்தான். மீண்டும் அவள் முகம் அவனுக்கு ஒரு தேர்ந்த சித்திரக்காரனின் ஒவியத்தை ஞாபகப்படுத்தியது.

“சாப்பிடுறயா?”

“வேணாம் பசிக்கல!” என்றான் மார்க்ஸ்.

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளது பார்வை மார்க்ஸை ஏதோ செய்தது.

“திவ்யா டக்குன்னு ஒண்ணு தோணுது சொல்லட்டுமா?!”

“வேணாம்... நான் நோ-ன்னு சொல்லிடுவேன்!”

மார்க்ஸ் சிரித்தான். திவ்யாவும் சிரித்தாள்.

“நான் என்ன சொல்ல போறேன்னு சொல்லலயே?!”

“நீ என்ன சொன்னாலும் நோதான்” என்றாள் திவ்யா.

“ஏன்... நோ சொல்லணும்... யெஸ் சொல்லக் கூடாதா?!”

“உன்னைப் பத்தி எதுவுமே தெரியாம நான் எப்படி யெஸ் சொல்ல முடியும்?”

“என்ன தெரியணும்?!”

“உன் ஊரு, குடும்பம், படிப்பு...”

“இதெல்லாம் வெறும் தகவல்... எப்ப வேணா தெரிஞ்சுக்கலாம்... நான் எப்படிப்பட்ட ஆளுன்றதுதான முக்கியம். அதுதான் உனக்கு நல்லா தெரியுமே?!”

“மிஸ்டர் மார்க்ஸ்...”

“யெஸ்”

“நீ ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கான ஆள்...”

“தேங்க் யூ.. மேல சொல்லுங்க”

“இப்போதைக்கு அவ்வளவுதான்!”

மார்க்ஸ் சிரித்தான்.

“மிஸ் திவ்யா”

“சொல்லுங்க கார்ல் மார்க்ஸ்?!”

“நீங்க யாரு கையைப் பிடிக்கப் போறீங்கன்னு தெரியல... ஆனா நீங்க எந்த கையைப் பிடிக்கிறீங்களோ அவன் ரொம்ப அதிர்ஷ்டக்காரன்!”

திவ்யா புன்னகையுடன். “இன்னும் எந்த கைய பிடிக்குறதுன்னு நான் முடிவு பண்ணல... தேடிக்கிட்டுதான் இருக்கேன்” என்றாள்.

மார்க்ஸ் தனது கையை நீட்டினான். “நீங்க தேடுற கை இந்த மாதிரி இருக்குமா பாருங்க...”

திவ்யா புன்னகையுடன், “இருட்டுல சரியா தெரியல... காலையில பார்த்து சொல்லட்டுமா?” என்றாள்.

“தொட்டு பார்த்து சொல்ல முடியாதா?”

திவ்யா மார்க்ஸைப் பார்த்தாள்.

அவன் கரத்தை நீட்டியபடி காத்திருந்தான்.

திவ்யா சின்ன புன்னகையுடன் அவளது கையை தூக்க போகும் சமயம்.

“மார்க்ஸ் சார்... கூப்புடுறாங்க சார்” என வந்து நின்றான் உதவி இயக்குநர்.

இருவரும் சுதாகரித்துக் கொள்ள....

“நாங்க கிளம்புறோம்... நீ சாப்பிடு” என சொல்லியபடி திவ்யா கையில் இருந்த கவரை தர மார்க்ஸ் வாங்கிக் கொண்டான்.

“எப்ப வருவ?!”

“எடிட்டிங் டப்பிங் எல்லாம் இருக்கு!”

“வியாழக்கிழமை பார்க்கலாம்... நானும் எபிசோட்ஸ் எல்லாம் பாக்கணும். நாளைக்கு பிஸியா இருப்பேன்” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் தலையாட்டினான்.

வியாழக்கிழமை...

நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் கான்ஃபரன்ஸ் ரூம். திவ்யா டீம், மார்க்ஸ் டீம் என புரோகிராமிங் ஆட்கள் அனைவரும் கூடியிருந்தனர்.

மும்பையில் இருந்து நேஷனல் சேல்ஸ் ஹெட், சவுத் புரோகிராமிங் ஹெட், நேஷனல் மார்க்கெட்டிங் ஹெட் என பலரும் வந்திருந்தார்கள். சவுத் புரோகிராமிங் ஹெட்டுடன் அலோக் ஏதோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான்.

“யப்பா அந்த அசோக்....” என நெல்லையப்பன் ஆரம்பிக்க...

“அசோக் இல்லன்னே அலோக்...”

“அட ஆமாப்பா அந்த கருமம்தான்... சவுத் ஹெட்டுன்னு ஒருத்தர் வந்திருக்காரே அவர் கிட்ட ரொம்ப நேரமா சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கான்!”

“இருக்கட்டும்... அதுக்கென்ன இப்ப!”

“அவன் நம்மள பத்தி ஏதோ பத்த வைக்கிறான்னு நினைக்கிறேன். புகை இங்க வரைக்கும் வருது!”

“நீங்களே பீதிய கிளப்பி நீங்களே பயந்துக்காதிங்க... நம்ம டீமோட மூணு ஷோவும் பார்த்தீங்களா?”

“பார்த்தேம்பா”

“எப்படி இருக்கு?!”

“பிரமாதமா இருக்குப்பா”

“அப்புறம் என்ன?”

“இல்லப்பா இந்த அலோக்கும் அந்தாளும் ஒண்ணா காலேஜ்ல படிச்சவனுங்களாம். இவன் சொல்லி அவன் நம்மள ஆப்படிப்பான்னு தோணுது.”

“இந்த கதையெல்லாம் எங்க இருந்துன்னே பிடிக்கிறீங்க?” என மார்க்ஸ் சிரித்தான். தாட்சா அவர்கள் அருகே வந்தார்.

“என்னடா ஆரம்பிக்கலாமா?!”

“மேடம் மேனன் சார் இன்னும் வரலயே மேடம்” என்றார் நெல்லையப்பன்

“அவருக்கு இன்னைக்கு உடம்பு சரியில்லையாம், வரமாட்டாரு!”

“அய்யய்யோ” என்றார் நெல்லையப்பன். அனைவரது முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது.

“ஏன் டென்ஷனாகுறீங்க நான் இருக்கேன்ல?”

“நீங்க இருப்பீங்க மேடம் நாங்க இருக்கணுமே!”

“இப்ப என்ன... நான் வேஸ்ட்டுன்னு சொல்ல வர்றீங்களா?”

“தாட்சா ஏன் இப்படி பேசுறீங்க... மேனன் சார் இந்த பாம்பேகாரங்க பாலிடிக்ஸை கரெக்டா கேட்ச் பிடிப்பாரு அதான்...” என அவளை சமாதானப்படுத்தும் குரலில் சொன்னான் மார்க்ஸ்.

“நீங்க பயப்படுற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல. சும்மா பார்த்துட்டு கிளம்பிடுவாங்க... ஸ்டார்ட் பண்ணலாமா?”

“ஓகே தாட்சா” என்றான் மார்க்ஸ்.

எதிரில் இருந்து திவ்யா மார்க்ஸைப் பார்த்தாள்.

மார்க்ஸ் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

ஏஞ்சல் சின்ன எரிச்சலுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

விளக்குகள் அணைக்கப்பட்டன... திரையிடல்கள் துவங்கின.

முதலில் திவ்யா டீம் சார்பில் அவர்கள் தயாரித்த மூன்று சீரியல்கள் திரையிடப்பட்டன. அவை முடிந்து விளக்குகள் ஒளிர...

“ஒரு சின்ன டீ பிரேக்... முடிச்சிட்டு அப்புறமா மார்க்ஸ் டீம் சீரியல்கள பார்க்கலாம்” என்றாள் தாட்சா...

காபிக்கள் பரிமாறப்பட்டன. மார்க்ஸ் மும்பைக்காரர்களின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவர்களது இறுகிப்போன முகத்திலிருந்து அவர்கள் அதை ரசிக்கிறார்களா இல்லையா என்பதை அவனால் கண்டறியமுடியவில்லை.

திவ்யா கண்களால் எப்படி இருக்கிறது எனக் கேட்டாள்.

"ஓகேதான்" என்பதாக தலையாட்டினான் மார்க்ஸ்!

“உன் சீரியல் எப்படின்னு பார்க்கலாம்” என அவள் சைகை செய்ய மார்க்ஸ் சிரித்துக் கொண்டான்.

“மார்க்ஸ்...” என காதில் கிசுகிசுத்தார் நெல்லையப்பன்.

“சொல்லுங்கன்ணே”

“இப்ப பார்த்த சீரியல் எல்லாம் எப்படி இருக்குப்பா?”

“வழக்கம் போல அரைச்ச மாவுன்னே!”

“சனங்களுக்கு அதுதான் பிடிக்கும்... அது சூப்பர் ஹிட்டாவும் பாரு...”

“அது எப்படி சொல்றீங்க?!”

“நம்ம சீரியல் பார்க்குற ஆட்களை எல்லாம் கூட்டிட்டு போய் விதவிதமான டிபன் அயிட்டாம அவங்க முன்னால அடுக்கி வச்சு சாப்பிடுங்கன்னு சொல்லிப் பாரு. புதுசா இருக்கிறதை ஒருத்தன் தொட மாட்டான். ஒரு ஓரமா இருக்கிற இட்லியதான் பாய்ஞ்சு எடுப்பானுங்க...”

மார்க்ஸ் சிரித்தான்.

“சிரிக்காதப்பா... இவனுங்க எதையுமே புதுசா ட்ரை பண்ண மாட்டானுங்க. அதே நாலு இட்லி கட்டி சட்னி சாப்பிட்டே நாசமா போவானுங்க...”

“அண்ணே சனங்களோட ரசனையை திட்ட கூடாதுன்ணே... அதை எப்படி மாத்துறதுன்னு தான் பார்க்கணும்!” எனும் போது மீண்டும் விளக்குகள் அணைக்கப்பட...

“யப்பா நம்ம சீரியல் ஆரம்பிக்குது” என்றார் நெல்லையப்பன்.

திரையிடல் மீண்டும் தொடர்ந்தன. வரிசையாக மார்க்ஸின் மூன்று சீரியல்களும் திரையிடப்பட்டன. முடிந்து விளக்குகள் எரிந்தன. தொடர்ந்து வெவ்வெறு சீரியல்களை பார்த்த அலுப்பு அனைவரது முகத்திலும் தெரிந்தது. அனைவரும் மும்பையில் இருந்து வந்தவர்களின் கருத்துக்களுக்காக மெல்லிய பதற்றத்துடன் காத்திருந்தனர்.

சவுத் புரோகிராமிங் ஹெட் தருண் தொண்டையை செருமியபடி மெல்லிய, ஆனால் தீர்க்கமான குரலில் பேசத் தொடங்கினான். அவன் குரல் உணர்ச்சிகளற்று இருந்தது.

“இந்த ரீ லான்ச் நம்ம கம்பெனிக்கு ரொம்ப முக்கியம். இந்த 6 சீரியல்கள்தான் அடுத்த 6 மாசத்துல நம்ம சேனல் எந்த இடத்தில இருக்கப் போகுதுன்னு முடிவு பண்ற சீரியல்ஸ்...”

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

அனைவரும் தருணையே பார்த்தபடி இருந்தார்கள்.

“திவ்யா”

அவள் எழுந்து நின்றாள்.

“உங்க டீம் பண்ண மூணு சீரியல்ஸும் அவுட் ஸ்டாண்டிங்” திவ்யா டீமில் இருக்கும் அனைவரது முகங்களும் சந்தோஷத்தில் மலர்ந்தன.

“ஏஞ்சல்... யூ ஆர் டேக்கிங் கேர் ஆஃப் த பிக்‌ஷன்ஸ்ல...”

“யெஸ் ஸார்”

“குட் வொர்க்”

“தேங்ஸ் சார்” என்ற ஏஞ்சலின் உடல் சந்தோஷத்தில் நடுங்கியது. சேனலில் எது நடந்தாலும் மார்க்ஸ் செய்தான் என்றுதான் வரும். முதன் முறையாக தனக்காக அங்கீகாரம் கிடைத்ததன் பெருமிதம் அவள் முகத்தில் தெரிந்தது.

“அடுத்த மூணு சீரியல் பண்ணது யாரு... மார்க்ஸ்”

மார்க்ஸ் எழுந்து நின்றான்.

“என்னய்யா பண்ணி வச்சிருக்கீங்க... ரொம்ப அமெச்சூரா இருக்கு!”

தரண் அப்படி ஆரம்பிப்பான் என அறையில் யாரும் எதிர்பார்க்கவில்லை.

மார்க்ஸ் முகம் இறுகியது. அவன் திவ்யாவை பார்த்தான். அவள் கண்கள் பொறுமை பொறுமை என கெஞ்சின.

“பள்ளிக்கூட பசங்களை வெச்சுக்கிட்டு என்னமோ கூத்தடிச்சிருக்கீங்க... இன்னொரு சீரியல்ல அந்த கருப்பு பொண்ணு ஆடுறா பாடுறா சந்தோஷமா நம்பிக்கையா இருக்கா... யாரு பார்ப்பாங்க அத... சிண்டர்லா ஸ்டோரிதான் இங்க வொர்க்காகும். ஹீரோயின்னா பயந்து நடுங்கணும், அழணும், கஷ்டப்படணும். முட்டாளா இருக்கணும். அப்புறம் மெல்ல மெல்ல அவ எப்படி தன்னை கோப்பப் பண்ணிகிறான்றதுதான கதையா இருக்கமுடியும். அவளை எப்படி குடும்பத்துல இருக்கிறவங்க ஏத்துக்கிறாங்க. புருஷன் ஏத்துக்கிறான்றதுதான அவளோட கேரக்டர் ஜர்னியா இருக்க முடியும்.”

அலோக் மனதுக்குள் சிரிப்பதை மார்க்ஸ் உணர்ந்தான்.

“ஆரம்பத்துலயே ஹீரோயின் தைரியமா சந்தோஷமா இருந்தா நான் எதுக்கு இந்த கதையைப் பார்க்கணும்? சீரியலுக்கான பேஸிக்கே இல்லாம இருக்கு அந்த கதை. மூணாவது ஒரு லவ் ஸ்டோரி. எந்த காலத்துல இருக்கீங்க நீங்கலாம். காதல் சினிமாலதான் வொர்க் அவுட் ஆகும்... சீரியல்ல ஆகாது.”

தாட்சா என்ன பேசுவது எனத் தெரியாமல் திகைத்து போய் அமர்ந்திருந்தாள்.

மார்க்ஸுக்குக் கோபம் வரவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்று ஒருவன் சொன்னால் இல்லை அது நாலு கால் என வாதிடலாம். பிடித்தது முயலே அல்ல மூஞ்சூறு என சொன்னால் அவனுக்கு என்ன சொல்லி புரியவைப்பது என அவனுக்குப் புரியவில்லை.

மார்க்ஸ் அணியினர் மொத்தமாக உடைந்து போயிருந்தார்கள்.

“அலோக்” என்றான் தருண்.

“யெஸ் தருண்” என்ற அலோக்கின் குரலில் இருந்த சந்தோஷத்தை மார்க்ஸ் கவனிக்கத் தவறவில்லை.

“இந்த மூணு சீரியலையும் ஸ்கிராப் பண்ணிடு. அதுக்கு அட்வான்ஸ் குடுத்திருந்தா ஷூட் பண்ண வரைக்கும் ஆன செலவை கழிச்சிட்டு மத்ததை ரிட்டன் பண்ண சொல்லுங்க...”

“யெஸ் தருண்” என்றான் அலோக்.

“தாட்சா இந்த டீமை நான் ரிவ்யூ பண்ணனும். ஈவ்னிங் மீட்டிங் ஃபிக்ஸ் பண்ணுங்க...”

“தருண்”

“சொன்னதை செய்யுங்க” என்றான் கடுமையான குரலில்.

“அப்புறம்” என அவன் ஏதோ ஆரம்பிக்கப் போக....

“எக்ஸ்க்யூஸ் மி...” என்ற சத்தம் கேட்டு அனைவரும் திரும்ப... வாசலில் மேனன் நின்று கொண்டிருந்தார்.

சொற்ப ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிக் கொண்டிருக்கும் சூழலில் பேட்டை சுழற்றியபடி தோனி மைதானத்துக்குள் இறங்கும்போது கேலரியில் இருக்கும் அனைவரது உடலிலும் ஒரு உற்சாக மின்சாரம் பாயுமே அப்படி இருந்தது மார்க்ஸுக்கும் அவனது அணியினருக்கும்.

“யாமிருக்க பயமேன்” என்றது அவரது புன்னகை!

- Stay Tuned...