Published:Updated:

இடியட் பாக்ஸ் - 32: மார்க்ஸின் பெருந்தன்மை... திவ்யாவின் வெறுப்பு!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 32: மார்க்ஸின் பெருந்தன்மை... திவ்யாவின் வெறுப்பு!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

காபி ஷாப் ஒன்றில் நந்திதாவும் மார்க்ஸும் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள்.

“என்ன பண்ணலாம்?” எனக் கேட்டாள் நந்திதா.

“மேனன் சார் ப்ரமோ அப்ரூவ் பண்ணிட்டார். டெக்னிக்கலா பார்த்தா இதுக்கப்புறம் திவ்யா சொல்றதுக்கு எதுவும் இல்லை” என்றான் மார்க்ஸ்.

“ஆனா, திவ்யாவுக்கு ப்ரோமோ பிடிக்கல...”

“ஆமா நந்திதா”

“ஏன் அவளுக்கு பிடிக்கல?”

“ஒண்ணு, நீ என்கூட பைக்ல அவ்ளோ க்ளோஸா வந்த கோபமா இருக்கலாம்... இல்ல அவளுக்கு நிஜமாவே ப்ரோமோ பிடிக்காம இருந்திருக்கலாம்!” என மார்க்ஸ் சிரித்தான்.

நந்திதா புன்னகையுடன் யோசித்தவள் “இப்ப நான் என்ன செய்யட்டும் மார்க்ஸ்?” எனக் கேட்டாள்.

“அவளுக்கு பொறாமைன்னு யோசிச்சா நாம செய்றதுக்கு எதுவும் இல்ல... நாம அப்படி யோசிக்க வேண்டாம். நிஜமாவே ப்ரோமோல என்ன தப்புன்னு யோசிச்சு பார்க்கலாம்!”

“உனக்கு என்ன சரி பண்ணலாம்னு தோணுது?”

“திவ்யாவோட மூணு ஷோஸ்க்கும் நீ பண்ணது சாங் புரமோ... சூப்பர் லொக்கேஷன், நல்ல காஸ்ட்யூம் அட்டகாசமான விஷுவல்ஸ்” என மார்க்ஸ் நிறுத்தினான்.

“அதுல என்ன சரியில்லன்னு சொல்லு”

“மியூஸிக் கொஞ்சம் சுமாரா இருக்கு. அதுதான் அந்த ப்ரமோவை கொஞ்சம் லோவா காட்டுது!”

“நாளைக்கு காலையில ப்ரமோஸ் ஏர்ல போயாகனும். இதுக்கப்புறம் எந்த மியூஸிக் டைரக்டரை பிடிச்சு பாட்டு ரெடி பண்ணி அனுப்ப முடியும் சொல்லு?!”

மார்க்ஸ் யோசித்தவன் “ஒருத்தன் இருக்கான். ஆனா, அவன்கிட்ட போய் நிக்கணுமான்னுதான் யோசிக்கிறேன்!’

“யாரு” என ஆர்வமாகக் கேட்டாள் நந்திதா.

“கெளதம் சித்தார்த்”

“வாட்” என அதிர்ச்சியுடன் சேரை விட்டு எழுந்தாள் நந்திதா.

“என்னாச்சு நந்திதா?”

“என்ன விளையாடுறியா? எவ்வளவு பெரிய மியூஸிக் டைரக்டர் அவரு... கரன்ட்டா மூணு இந்திப்படம் வேற பண்ணிக்கிட்டு இருக்கார்... தெரியும்ல?”

“அது தெரியல... ஆனா, நான் கேட்டா அவன் பண்ணுவான்” என்றான் மார்க்ஸ்.

“சான்சே இல்லை... அவர் இப்ப ஒரு ஸ்டார் மியூஸிக் டைரக்டர். அவராவது ஒரே ராத்திரியில மூணு சாங் பண்றதாவது... ஆர் யூ ஜோக்கிங்?” என்ற நந்திதாவின் குரலில் துளியும் நம்பிக்கையில்லை.

“நம்பர் தரேன்... நீ வேணா ட்ரை பண்ணு... என்ன சொல்றான் கேளு!”

“அவர் நம்பர் எப்படி உன்கிட்ட?”

மார்க்ஸிடம் அந்த இசையமைப்பாளரின் நம்பர் இருப்பதே நந்திதாவுக்கு பெரும் ஆச்சர்யமாக இருந்தது. மார்க்ஸ் புன்னகையுடன் நம்பரை சொல்ல தனது போனில் அந்த எண்ணை டயல் செய்தபடி நந்திதா எழுந்து சென்றாள்.

சற்று தள்ளி சென்ற நந்திதா போனில் பேசத் தொடங்க, அதை பார்த்தபடி மார்க்ஸ் காபியைக் குடிக்கத் தொடங்கினான்.

நந்திதா போனை கட் செய்துவிட்டு திரும்பி வந்தாள்.

“என்ன சொல்றாரு உன்னோட ஸ்டார் மியூஸிக் டைரக்டர்?” என்றான் மார்க்ஸ்.

“நாம சொன்ன எல்லாத்துக்கும் ஒத்துகிட்டாரு. இன்னைக்கே சாங் முடிச்சி தர்றாராம். ப்ரோமோ விஷுவல் மட்டும் உடனே மெயில் அனுப்பச் சொன்னார். ராத்திரி எட்டு மணிக்கு நம்மள வர சொன்னாரு” என அவர் ஒப்புக்கொண்ட அதிர்ச்சி மாறாமல் சொன்னாள் அவள்.

“சூப்பர்... நீ போய் வாங்கிட்டு வந்திரு” என்றான் மார்க்ஸ்.

“அவரோட ஒரே ஒரு கண்டிஷன் நீ ஸ்டூடியோவுக்கு வரணும்றதுதான். உன்கிட்ட தான் சாங்கோட ஹார்ட் டிஸ்கை தருவாராம்.''

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“அவ்வளவு பெரிய ஆள எப்படி உனக்கு தெரியும்?!”

“அவன் என் காலேஜ் மேட். அவனை நான்தான் சென்னைக்கு கூட்டிட்டு வந்தேன். போலாம் வா!” என மார்க்ஸ் எழுந்து வண்டியை நோக்கி செல்ல நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்திதா.

இடியட் பாக்ஸ் | திவ்யா
இடியட் பாக்ஸ் | திவ்யா

திவ்யா யோசனையாக தனது அறையில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு எதிரே ஏஞ்சல்.

“நான் எல்லார் முன்னாலயும் அப்படி சொல்லியிருக்க கூடாதோ?!” என்ற திவ்யாவின் குரலில் மெல்லிய வருத்தமிருந்தது.

“சே... சே... அந்த இடத்துல உங்க ஜென்யூன் ஒப்பினியனை சொல்லித்தானே ஆகணும்!”

“உனக்கு ப்ரோமோ பிடிச்சிருந்திச்சா?”

“தப்பா இல்லை... ஆனா சூப்பர்னு சொல்ல முடியாது. மியூஸிக் ரொம்ப சுமார்!”

“ம்” என யோசித்தாள் திவ்யா.

“ரொம்ப எல்லாம் யோசிக்காதிங்க... என்னதான் ஃப்ரெண்டா இருந்தாலும் பிடிக்காததை பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியாதில்ல!”

திவ்யா யோசனையாகத் தலையாட்டினாள்.

“நந்து ஒண்ணும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க...”

“அவளைக் கொஞ்சம் வரச் சொல்லேன்”

ஏஞ்சல் செல்போனை எடுத்து நந்திதாவுக்கு முயற்சி செய்ய திவ்யா யோசனையாக காத்திருந்தாள்.

“நந்து போனை எடுக்கல...”

“அவ இன்னும் ஆபிஸ் வரலயா?”

“வரலைன்னுதான் நினைக்கிறேன். ஆனா எப்படியும் வந்துதான் ஆகணும். ப்ரோமோ எல்லாம் காலையில ஏர்ல போயாகணுமே!”

“சரி வரட்டும்” என்றாள் திவ்யா!

ஏஞ்சல் திவ்யாவை உற்றுப் பார்த்தாள். ஆனால், அவள் மனதில் ஓடும் எண்ணங்களை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

.........................................................

ஈசிஆர் கடற்கரை ஓரமாக இருந்தது கெளதம் சித்தார்த்தின் வீடு. அதை வீடு எனச் சொல்லக் கூடாது. ஒரு ஏக்கரில் பிரமாண்டமாக இருந்தது அந்த பங்களா. மார்க்ஸின் புல்லட் உள்ளே நுழைய செக்யூரிட்டி பலமாக சல்யூட் அடித்தான். ஏற்கெனவே கெளதம் அவர்கள் வருவதை பற்றிச் சொல்லி வைத்திருப்பான் போலும்.

வீட்டு முன்னால் மார்க்ஸ் இறங்க ஒருவன் ஓடி வந்து மார்க்ஸின் புல்லட்டை வாங்கிக் கொண்டான்.

மார்க்ஸும் நந்திதாவும் வீட்டின் படியேறப் போக உள்ளேயிருந்து ஓடி வந்த கெளதம் “மாப்ள” என மார்க்ஸை அணைத்துக் கொண்டான்.

அந்த அணைப்பில் நிஜமான அன்பும் பாசமும் தெரிந்தது. மார்க்ஸ் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தான். அந்த அணைப்பு வழக்கத்தைத்தாண்டி கொஞ்ச நேரம் நீடித்தது. நண்பர்கள் விலக இருவரது கண்களும் கலங்கியிருந்தன.

“எப்படிடா இருக்க?”

“எனக்கென்னடா சூப்பரா இருக்கேன்!” என்றான் மார்க்ஸ்.

“இதுதாண்டா நந்திதா... சேனலோட புது ப்ரோமோ ஹெட்” என மார்க்ஸ் அவளை கெளதமுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

“வணக்கம்... அண்ட் தேங்ஸ்... நீங்க இல்லன்னா இந்த ராஸ்கல் இங்க வந்திருக்கவே மாட்டான்!” என்றான் கெளதம்.

நந்திதா ஆச்சர்யம் தாங்காமல் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வாங்க...”

அவர்கள் மூவரும் வீட்டிற்குள் நுழைய ஹாலில் மிக பிரமாண்டமாக மார்க்ஸும் கெளதமும் அணைத்தபடி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோ ஒன்று பெரியதாக மாட்டப்பட்டிருந்தது. நந்திதா ஆச்சர்யமாக திரும்பி மார்க்ஸைப் பார்த்தாள். 'யார்ரா நீ' என்பது போல இருந்தது அந்தப் பார்வை.

அவர்கள் மூவரும் ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்தனர்.

“இவன் தாங்க என் வாழ்க்கையவே மாத்துன ஆள்...”

“டேய் இப்ப இந்த ஃபிளாஷ்பேக் தேவையா?” எனச் சிரித்தபடி கேட்டான் மார்க்ஸ்.

“யார் கிட்டயாவது சொல்லணும்ல... இன்னைக்கு இவங்கதான் மாட்டியிருக்காங்க... ஏங்க போரடிச்சா சொல்லுங்க நிறுத்திடுறேன்.”

“இல்ல... இல்ல சொல்லுங்க... மார்க்ஸ் உங்களைத் தெரியும்னு சொன்னப்ப நான் நம்பவே இல்ல” என்றாள் நந்திதா.

“அவன் இங்க உட்கார்ந்துகிட்டு இருக்கான். அதைத்தான் என்னால நம்ப முடியல” எனச் சிரித்தான் கெளதம்.

கெளதம் பேசுவதை புன்னகையும் வாஞ்சையுமாக பார்த்துக் கொண்டிருந்தான் மார்க்ஸ்.

“ரெண்டு பேரும் காலேஜ் மேட். அண்ணே நாடகம் நடிப்புன்னு வெளுத்து கட்டுவாரு. நான் காலேஜ் கொயர் டீமோட கேப்டன். இவன் படிச்சு முடிச்சுட்டு சென்னையில ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்துட்டான். நான் வழக்கம் போல ஊர்ல வெட்டியா சுத்திகிட்டு இருந்தேன்!”

“ஷார்ட்டா சொல்லுடா!”

“பொறு... பொறு... என்ன மண்டையில தட்டி கூட்டிட்டு வந்து நாலு வருஷம் அவன் ரூம்ல வச்சி சோறு போட்டு, கடன உடன வாங்கி என்னோட 5 பாட்ட ரெக்கார்ட் பண்ணி ஒவ்வொரு டைரக்டரா பார்த்து என் மியூஸிக் சிடியைக் கொடுத்து துரத்தி துரத்தி சான்ஸ் கேட்டது அவன்தான்.”

நந்திதா மார்க்ஸைப் பார்த்தாள்.

“கதை சொல்றப்ப நல்லா இருக்கணும்னு எக்ஸ்ட்ராவா கொஞ்சம் அடிச்சு விடுறான் நந்திதா” என்றான் மார்க்ஸ்.

“சத்தியமா இல்லைங்க... நான் சொன்ன கதை கம்மி. எனக்கு ஃபர்ஸ்ட் சான்ஸ் கொடுத்த டைரக்டர் சொன்னது இப்பவும் எனக்கு ஞாபகத்துல இருக்கு. இது உனக்காக குடுக்கல உன் ஃப்ரெண்டுக்காக கொடுக்குறேன். அவன் தொல்லை தாங்க முடியலைன்னு சொல்லித்தான் எனக்கு சான்ஸ் குடுத்தாரு!”

மார்க்ஸ் சிரித்தான்.

“வழக்கமா இப்படி எல்லாம் சான்ஸ் கேட்குற ஆள் இல்லையே மார்க்ஸ்” என ஆச்சர்யமாகக் கேட்டாள் நந்திதா.

“அவனுக்காக எதையுமே அவன் கேட்க மாட்டான். இன்னொருத்தங்களுக்கு நல்லது நடக்குதுன்னா கால்ல விழ கூட யோசிக்க மாட்டான். இப்ப கூட பாருங்க உங்களுக்கு ஏதோ தேவைனுதான வந்திருக்கான்” எனக் குரல் தழுதழுக்க சொன்னான் கெளதம். அந்த நெகிழ்ச்சி நந்திதாவையும் ஏதோ செய்தது.

“இவ்வளவு நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்திருக்கீங்க... அப்புறம் என்னாச்சு? நடுவில ஏன் இந்த கேப்?” என்றாள் நந்திதா.

“அவன் கிட்டயே கேளுங்க... கஷ்டப்படும் போது எல்லாம் கூட இருந்தான். எனக்கு வசதி வரும் போது அம்போன்னு விட்டுட்டு போயிட்டான்!”

“டேய்... கஷ்டப்படும் போதுதான் கூட இருக்கணும்... நல்லா வந்ததுக்கப்புறம் ஏன் இருக்கணும்?” என்றபடி மார்க்ஸ் சிரித்தான்.

“என்ன அவ்வளவு பேரும் நன்றிகெட்டவன்னு சொல்றாங்கடா... இந்த ஃலைப் நீ எனக்கு குடுத்தது!”

“லூசுத்தனமா பேசாத... உன்னோட திறமையில நீ முன்னாடி வந்திருக்க... அவ்வளவுதான். எப்ப எனக்கு வேணும்னாலும் உன்னைத் தேடி வரப்போறேன்... இப்ப வரலயா?” என்றான் மார்க்ஸ்.

“ஏங்க... எங்களுக்கு நடுவில எங்க பிரச்னை வந்திச்சு தெரியுமா? இவனோட பிறந்த நாளுக்கு!”

“ஒண்ணும் தேவையில்ல வாய மூடு” என மார்க்ஸ் இடைமறித்தான். அவனை கண்டுகொள்ளாமல் கெளதம் தொடர்ந்தான்.

“அவன் பிறந்த நாளுக்கு ஒரு பிரசன்ட் பண்ணேன். அவனுக்கு பயங்கரமா கோபம் வந்திருச்சு...”

“மொட்டையா பிரசன்ட்டுன்ற... என்ன பிரசன்ட்னு சொல்லுடா... கார் வாங்கிட்டு வந்து நிக்குறாரு சாரு”

“வெறும் இரண்டேகால் லட்சத்துல ஒரு சின்ன காரு... பயங்கரமா என்ன திட்டி அனுப்பிவிட்டுட்டான். அதுக்கப்புறம் என் பக்கமே வர்றதில்ல...”

“போன்ல எல்லாம் பேசிப்போம். பாக்க வந்தா அத வாங்கி தாரேன், இத வாங்கி தாரேன்னு ஒரே தொல்லை. அதான் தள்ளி இருந்து அவன ரசிச்சுகிறது” என்றான் மார்க்ஸ்.

நந்திதாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்தக் காலத்தில் இப்படி ஒருவனா?

“ஏங்க நீங்களே சொல்லுங்க... கோடியில சம்பாதிக்கிறேன். என் ஃப்ரெண்டுக்கு நான் ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன்... தப்பா சொல்லுங்க!”

“இதுல என்ன தப்பு இருக்கு மார்க்ஸ்?” என்றால் நந்திதா.

மார்க்ஸ் அமைதியாக இருந்தான்.

“பதில் சொல்லுடா... அப்படி என்ன ஈகோ உனக்கு?”

“அப்படியில்லடா... எதையும் எதிர்பார்த்து நான் பண்ணல... நட்பும் அன்பும் மட்டும்தான் என் மனசுல இருந்திச்சு. நீ ஏதாவது எனக்கு திருப்பி செய்யறப்ப இவ்வளவு நாள் நான் பண்ணது எல்லாம் எதையோ எதிர்பார்த்து பண்ண மாதிரி எனக்கு கில்ட்டியா இருக்கு. அவ்வளவுதான்!”

“நான் நன்றிகெட்டத்தனமா நடந்துக்கிற மாதிரி எனக்கு தோணுதே. அதுக்கு என்ன சொல்ற?” என்றான் கெளதம்.

“சீ... சீ... ஹால்ல அவ்வளவு பெருசா அம்மா அப்பா படம் கூட இல்லாம என் போட்டோ வச்சிருக்கியடா... இதுதாண்டா எனக்கு கெளரவம் சந்தோஷம் எல்லாம்!”

“இல்லடா” என கெளதம் ஏதோ சொல்ல வர... “வந்த வேலைய பார்ப்போமா” என்றான் மார்க்ஸ்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

அவர்கள் மூவரும் கெளதமின் வீட்டில் இருந்த சவுண்ட் ஸ்டூடியோவுக்குள் நுழைந்தனர்.

“எப்படிடா இருக்கு?”

“சூப்பரா இருக்கு மச்சான்”

“எல்லா ரெகார்டிங்கும் இங்கேயே பண்ணிடுறேன்!” என்றான் கெளதம்.

“இதுக்கப்புறம் கம்போஸ் பண்ணி சாங் ரெக்கார்ட் பண்ணி நாளைக்கு காலையிலக்குள்ள ரெடி பண்ணிட முடியுமா?” என கவலையாக கேட்டாள் நந்திதா.

கெளதம் சிரித்தபடி “சிவா” என அருகில் நின்றவனிடம் கண்ணைக் காட்ட அவன் தலையாட்டி நகர்ந்தான். விளக்குகள் அணைந்தன. ஸ்டூடியோவில் இருந்த திரையில் அவர்கள் அனுப்பியிருந்த ப்ரோமோக்கள் கெளதமின் இசையில் ப்ளே ஆகத் துவங்கின. அதிசயம் நடந்ததை போல உணர்ந்தாள் நந்திதா. அதே ப்ரோமோக்கள் கெளதமின் இசையில் வேறு ஒன்றாக மாறியிருந்தன.

மூன்று ப்ரோமோக்களும் ஓடி முடிக்க...

“எப்படி?” என நந்திதாவை பார்த்து கேட்டான் கெளதம்.

அவள் கண்கள் கலங்கி பேச முடியாமல் அவனை அணைத்துக் கொண்டவள் “தேங்யூ சோ மச்... தேங்யூ” என்றாள். கெளதமும் மார்க்ஸும் சிரித்தனர்.

“எப்படி இவ்வளவு ஷார்ட் டைம்ல” என நம்ப முடியாமல் கேட்டாள் நந்திதா.

“ஒரு சாங் ரெகார்டிங்... நீங்க போன் பண்ணப்ப மொத்த டீமும் இங்கதான் இருந்தாங்க... அடிச்சு தூள் பண்ணிட்டோம்!”

“சான்சே இல்லைங்க... நீங்க இதுக்கு மியூஸிக் போட்டீங்கன்னு சொன்னாகூட யாரும் நம்ப மாட்டாங்க.. தேங்யூ சோ மச்!”

“நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். என் ஃப்ரெண்ட திரும்பவும் என்கிட்ட கூட்டிட்டு வந்தீங்களே...”

“போடா” என மார்க்ஸ் அவனை அணைத்துக் கொண்டான்.

அன்பினால் செய்யப்படும் வேலைகள் எல்லாம் வேலை என்பதை தாண்டி சிறந்த படைப்புகளாக மாறிவிடுவதை நந்திதா உணர்ந்தாள்.

திவ்யா அலுவலகத்தில் இருக்கும் அவளது அறையில் அமர்ந்திருந்தாள். இரவு எல்லாம் அவள் தூங்கவில்லை என்பது அவளது கண்களில் தெரிந்தது. மார்க்ஸும் நந்திதாவும் இரவெல்லாம் வீட்டிற்கு வரவில்லை. நந்திதாவின் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மார்க்ஸின் போனுக்கு முயற்சி செய்ய திவ்யாவின் மனது இடம் கொடுக்கவில்லை. அவர்கள் இருவரும் இரவெல்லாம் ஆபிஸில் வேலை செய்துவிட்டு காலையில்தான் கிளம்பினார்கள் என செக்யூரிட்டி சொன்னார். திவ்யா வீட்டிலிருந்து கிளம்பும்போது அவர்கள் அலுவலகத்திலிருந்து வீடு நோக்கி கிளம்பியிருக்க வேண்டும்.

திவ்யாவின் அறைக்கதவு தட்டப்பட திவ்யா திரும்பினாள். மேனன் நின்று கொண்டிருந்தார். திவ்யா அவசரமாக எழுந்தாள்.

“குட்மார்னிங் சார்”

“குட்மார்னிங் திவ்யா.. என்ன இவ்வளவு சீக்கிரம் ஆபிஸ் வந்திட்ட?!”

“நீங்களும் வந்திட்டீங்களே சார்!”

“ஆளுங்க வர்றதுக்கு முன்னாடி வந்துட்டா கொஞ்சம் பீஸ்ஃபுல்லா வேலை செய்யமுடியுது அதான்” எனச் சிரித்தார் மேனன்.

திவ்யாவும் புன்னகைத்தாள்.

“இந்தக் காரணத்தை நான் சொல்லிட்டேன். அதனால நீ வேற ஏதாவது காரணம்தான் சொல்லியாகணும்!”

“ஒண்ணும் இல்ல சார்... சும்மாதான்” எனத் தயக்கமாக சொன்னாள் திவ்யா.

“புது ப்ரோமோஸ் எல்லாம் பார்க்கலாமா?!” என்றார் மேனன்.

“புது ப்ரோமோவா” என திவ்யா முகம் மாறினாள்.

“ஏதோ திரும்பவும் நந்திதா ரீ வொர்க் பண்ணியிருக்கா போல... பார்க்கலாமா?!” திவ்யா தலையாட்டினாள்.

கான்ஃபரன்ஸ் அறையில் ப்ரோமோ ப்ளே பண்ணுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. திவ்யாவும் மேனனும் உள்ளே நுழைந்தார்கள். விளக்குகள் அணைக்கப்பட்டன.

ப்ரோமோக்கள் ப்ளே செய்யப்பட திவ்யாவின் கண்கள் கலங்கத் துவங்கின. கெளதமின் இசையில் ப்ரோமோ வேறு அவதாரம் எடுத்திருந்தது.

விளக்குகள் எரிந்தன....

மேனன் திவ்யாவைப் பார்த்து புன்னகைத்தபடி “எப்படியிருக்கு ப்ரோமோ” என்றார்.

“சான்சே இல்லை சார்... மேஜிக்கலா இருக்கு சார்!”

“ரீசன்ட் டைம்ல நான் பார்த்த பெஸ்ட் ப்ரோமோ” என்றார் மேனன்.

“தப்பு பண்ணிட்டேன் சார். நேத்து நந்திதா கிட்ட நான் கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன்!”

“சீ... சீ... நீ அப்படி சொன்னதாலதான் இப்படி ஒரு ப்ரோமோ நமக்கு கிடைச்சது...”

“இல்ல சார் நான் நந்திதாவ ஹர்ட் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன் சார்!”

“ப்ரஃபஷனல் வேற பர்சனல் வேற... ரெண்டையும் மிக்ஸ் பண்ணிக்கக் கூடாது. ஒரு ஹெட்டா நீ உன் ஒப்பினியனை சொன்ன... அவளும் அத ஏத்துக்கிட்டு ப்ரோமோவை பெஸ்டா பண்ணி குடுத்திட்டா... அவ்வளவுதான். இதனால ஃப்ரெண்டா அவ கோச்சுகிட்டா... தட்ஸ் நாட் ரைட்” என்றார் மேனன்.

அவசரமாகக் கதவை திறந்து கொண்டு ஏஞ்சல் உள்ளே நுழைந்தாள்.

“திவ்யா யூடியூப்ல நம்ம மூணு புரோமோவும் டிரெண்டிங்ல டாப்-3ல இருக்கு” என அவள் சந்தோஷமாகச் சொன்னாள்.

“குட் ஸ்டார்ட்” என்றார் மேனன். திவ்யாவுக்கு உடனே நந்திதாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

நந்திதாவும் மார்க்ஸும் வீட்டில் இருந்தனர். “சரி நான் கொஞ்சநேரம் தூக்கத்தைப் போடுறேன்” என்றான் மார்க்ஸ்.

“நம்ம ப்ரோமோ மூணும் டிரெண்டிங்ல இருக்கு தெரியும் இல்ல... இப்ப போயி தூங்க போறேன்னு சொல்ற?”

“அதுக்கு என்ன பண்ண சொல்ற?”

“கொண்டாடுவோம்”

மார்க்ஸ் சிரித்தான். வாயில் மணி அடித்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள நந்திதா சென்று கதவைத் திறந்தாள். சட்டென திவ்யா உள்ளே நுழைந்து அவளை அணைத்துக் கொள்ள அதை எதிர்பார்க்காத நந்திதா நெகிழ்ச்சியாக “ஏய் என்னடி...”

“சாரி” என மேற்கொண்டு பேச முடியாமல் திவ்யாவின் கண்கள் கலங்கின.

“ஏய் லூசு எதுக்கு அழற”

“இல்லடி அவ்வளவு பேர் முன்னால நான் அப்படி சொல்லியிருக்க கூடாது” என கண்கள் கலங்கச் சொன்னாள் திவ்யா.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல... நீ அப்படி சொல்லப்போய் தான் இப்படி ஒரு விஷயம் நடந்துச்சு!''

“என் மேல உனக்கு கோபம் இல்லையே”

“இருந்திச்சு... ஆனா ப்ரோமோ பார்த்த உடனே ஆபிஸ்ல இருந்து ஓடிவந்து என்ன அணைச்சுகிட்டியே... இந்த நிமிசத்துல எல்லாம் ஓடிப்போச்சு” என்றாள் நந்திதா.

“சாரிடி...”

“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல... லவ் யூ ஆல்வேஸ்” என சிரித்தாள் நந்திதா.

“எப்படி ஒரே ராத்திரியில இவ்வளவு பெரிய விஷயத்தை பண்ண?”

நந்திதா புன்னகைத்தாள்.

“கெளதம் சித்தார்த் மியூஸிக்காமே... அவருக்காக பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் க்யூவில நிக்குறாங்க. அசால்ட்டா அவரைப் பிடிச்சு ஒரே ராத்திரியில மூணு டியூன் வாங்கியிருக்க... எப்படி இதெல்லாம்?”

“உனக்கே தெரிஞ்சுருக்கணுமே...”

“புரியல”

“அந்த கெளதம் சித்தார்த்துக்கு மார்க்ஸ்தான் காட்ஃபாதர்” என்றதும் திவ்யா திரும்பி மார்க்ஸை பார்த்தாள்.

“ஹலோ அவன் என் காலேஜ்மேட்... அவ்வளவுதான்” என்றான் மார்க்ஸ்.

“நம்ம நிஜமா மார்க்ஸுக்குதான் தேங்ஸ் சொல்லனும்” என்றாள் நந்திதா.

“போதும் போதும் உங்க தேங்ஸ் எல்லாம்... நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். மதியமா ஆபிஸ் போகலாம்” எனச் சொல்லிவிட்டு அவன் நகர்ந்தான்.

அவனது பெருந்தன்மை திவ்யாவுக்கு எரிச்சலூட்டியது. அவன் அதை நந்திதாவுக்காக செய்தான் என்பது மேலும் அவளை கோபப்படுத்தியது. அவனிடம் மீண்டும் மீண்டும் தோற்று போவதாக உணர்ந்தாள் அவள்.

காதல் ஒரு விசித்திரமான நோய். சில சமயம் அன்பை அவமானமாய் எடுத்துக் கொள்ளும். நேசம் வேஷமாகத் தெரியும். உலகத்திடம் மண்டியிட்டு உதவி கேட்கும் மனசு காதலிப்பவனிடம் மட்டும் கெளரவம் பார்க்கும். நந்திதாவுக்காக மார்க்ஸ் செய்த அந்தக் காரியம் அவளது ஈகோவை காயப்படுத்தியது. மார்க்ஸின் மேல் காதலாவதற்கு பதில் அவள் வெறுப்பானாள்!

- Stay Tuned...