Published:Updated:

இடியட் பாக்ஸ் - 34: மார்க்ஸ் - திவ்யா ஷோக்களின் ரேட்டிங்... வெற்றி யாருக்கு?

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 34: மார்க்ஸ் - திவ்யா ஷோக்களின் ரேட்டிங்... வெற்றி யாருக்கு?

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

மார்க்ஸ் காலையில் கண் விழித்ததும் முதலில் அவன் நினைவுக்கு வந்தது அன்று வியாழக்கிழமை என்பதுதான். டிவி சேனல்களைப் பொறுத்தவரை அதுதான் ஜட்ஜ்மென்ட் டே. சென்ற வார நிகழ்ச்சிகளுக்கான ரேட்டிங் வரக்கூடிய நாள் அது. நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் பரிட்சை ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் மாணவர்களைப்போல ரேட்டிங்கிற்காகப் பதற்றத்துடன் காத்திருப்பார்கள். வியாழன் காலை 11 மணிக்கு எல்லாம் ரேட்டிங் வந்துவிடும்.

யாருடைய நிகழ்ச்சிகளுக்கு அதிகமான ரேட்டிங் வருகிறதோ அவர்களுக்கு மகிழ்ச்சியாகவும், ரேட்டிங் வராதவர்களுக்கு குழப்பமும் துக்கமுமாக வியாழக்கிழமை தொடங்கும். அந்த சந்தோஷமோ, துக்கமோ ஒரு வாரத்திற்கு மட்டும்தான். மீண்டும் அடுத்த வியாழக்கிழமை, அடுத்த ரேட்டிங், அதற்கான மகிழ்ச்சி துக்கம் என வாழ்க்கை வாரத்துக்கு வாரம் மாறிக் கொண்டே இருக்கும்.

மார்க்ஸ் அலுவலகம் செல்வதற்காகத் தயாரானவன் தனது அறையில் இருந்து வெளியே வந்தான். நந்திதாவும் திவ்யாவும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார்கள். திவ்யாவின் முகத்தில் மெல்லிய பதற்றம் இருந்ததைக் கவனித்தான் மார்க்ஸ். நந்திதா எப்போதும் போல புன்னகையுடன் இருந்தாள். ரேட்டிங் டென்ஷன் என்பது புரோகிராமிங் டிப்பார்ட்மென்ட்டுக்கு மட்டும்தான். மற்றவர்களுக்கு இல்லை.

மற்ற டிப்பார்ட்மென்ட் ஆட்களைப் பொறுத்தவரை அவர்கள் வேலை செய்யும் சேனலுக்கு நல்ல ரேட்டிங் வந்தால் நல்லது என்கிற பொதுவான சந்தோஷம்தானே தவிர வரவில்லை என்பதற்காக அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.

மார்க்ஸைப் பார்த்து ‘குட் மார்னிங்’ என்றாள் நந்திதா.

‘குட் மார்னிங்’ என்றபடி அவர்கள் எதிரே அமர்ந்தான் மார்க்ஸ். நிஜத்தில் அவனுக்கு சுத்தமாக பசியில்லை. சாப்பிடாமல் போனால் அவன் பதற்றமாக இருக்கிறான் என திவ்யா நினைக்கக்கூடும். அவள் முன்னால் பதற்றமாக இருப்பதைக் காட்டிக்கொள்ள வேண்டாம் என முடிவு செய்தவன், டோஸ்ட் செய்யப்பட்ட பிரட் துண்டுகளை எடுத்து பட்டரை தேய்க்கத் துவங்கினான்.

திவ்யா ஓரக் கண்ணால் அவனைக் கவனித்தாள். அவன் சற்று பதற்றமாக இருக்கிறான் என்பதும் அதை மறைக்க முயல்வதும் அவளுக்குப் புரிந்தது. அவளையறியாமல் அவள் இதழில் புன்னகை மலர்ந்தது.

“நந்து என் வாட்சைப் பார்த்தியா?” என்றான் மார்க்ஸ்.

"இல்லையே” என அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பே அவள்தான் அதை எடுத்திருப்பாள் என்றது.

“வாட்சைக் குடு நந்து... என்ன சின்ன புள்ளைங்க மாதிரி விளையாடிக்கிட்டு” என்றான் மார்க்ஸ்.

“கண்ண மூடு தரேன்” என்றாள் நந்திதா.

“குடுன்றேன்ல...”

“டூ மினிட்ஸ் கண்ண மூடு...”

மார்க்ஸ் புன்னகையுடன் கண்ணை மூடினான்.

“கையை நீட்டு...”

மார்க்ஸ் கையை நீட்ட நந்திதா வாட்சை அவன் கையில் கட்டினாள். கண்ணை திறந்த மார்க்ஸ் கையிலிருந்த புது வாட்சைப் பார்த்து ஆச்சர்யமானான்.

“ஏய் என்ன இது... என் வாட்சைக் குடு”

“இனிமே இதுதான் உன் வாட்ச்... பிடிச்சிருக்கா?”

திவ்யாவுக்கு மெலிதாக நந்து மேல் கோபம் எட்டிப்பார்த்தது. ஆனாலும் அதை மறைத்தபடி கேஷுவலாக இருப்பது போல புன்னகைக்க முயன்றாள்.

“எதுக்கு இதெல்லாம்?”

“பாம்பேல இருந்து நேஷனல் ஹெட் போன் பண்ணி ப்ரொமோவைப் பாராட்டி தள்ளிட்டார். யூ-டியூப்ல மூணு ப்ரொமோவும் ஒன் மில்லியன் வியூஸைத் தாண்டிருச்சு. அதுக்காக எனக்கு ஒரு ஸ்பெஷல் போனஸ் போட்டிருக்காங்க... அதுல தான் இதை வாங்குனேன்.”

"உனக்கு வந்த பணம் அது. உனக்கு பிடிச்சது ஏதாவது வாங்கலாம் இல்ல?”

“எனக்கு பிடிச்சதை வாங்குறதா? இல்ல எனக்கு பிடிச்சவங்களுக்கு வாங்குறதான்னு யோசிச்சேன்... பிடிச்சவங்களுக்கே வாங்கலாம்னு உனக்கு வாங்கிட்டேன். இது எப்பவும் உன் கையிலயே இருக்கணும்” என நெகிழ்ச்சியாக சொன்னாள் நந்திதா.

மார்க்ஸ் சிரித்தான்.

"சிரிக்காத... நீ மட்டும் அந்த மியூஸிக் வாங்கித் தரலைன்னா இந்த ப்ரொமோவ யாரும் பார்த்திருக்க மாட்டாங்க.”

வாட்சைப் பார்த்த மார்க்ஸ் “விலை கூடுதலா இருக்கும் போல இருக்கே” என இழுக்க...

“வேணாம்னு மட்டும் தயவு செஞ்சு சொல்லிடாதே... உனக்காகப் பார்த்து பார்த்து வாங்கியிருக்கேன்... ப்ளீஸ்”

வாட்சைப் பார்த்தவன் நிமிர்ந்து நந்திதாவைப் பார்த்தான்.

அவன் அதை மறுத்துவிடப் போகிறானோ என்கிற பயம் அவள் கண்ணில் தெரிந்தது. அவள் கண்கள் அதை ஏற்றுக் கொள் என கெஞ்சின.

திவ்யா அவர்களை கவனிக்காமல் சீரியசாக சாப்பிடுகிற பாவனையில் இருந்தாள். அவள் மனம் அவன் என்ன சொல்லப்போகிறான் எனப் படபடத்துக் கொண்டிருந்தது.

“இன்னொரு தடவ இப்படி பண்ணாத... இதுக்கு தேங்ஸ்” என்றான் மார்க்ஸ்.

நந்திதா அப்படியே எழுந்தவள் அமர்ந்திருக்கும் மார்க்ஸை ஒரு கரத்தால் அணைத்துக் கொண்டு “தேங்க் யூ மார்க்ஸ்... தேங்க் யூ சோ மச்” எனக் கண்கள் கலங்கினாள். மார்க்ஸ் ஆதரவாக அவள் முதுகை தட்டிக் கொடுத்தான்.

“ஏய்... கல்கத்தா... என்ன பொசுக்கு பொசுக்குன்னு அழுதுகிட்டு... தீதிக்கு தெரிஞ்சா உன்ன உதைக்கப் போறாங்க” எனச் சொல்லி சிரித்தான். நந்திதாவும் சிரித்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டாள். ஏமாற்றமும் எரிச்சலுமாக திவ்யா எழ அவளது போனடித்தது...

”கிளம்புடி ஆபிஸ் கேப் வந்திருச்சு” என போனை பார்த்தபடி சொன்னாள்.

“நீ கேப்ல போ திவ்யா நான் மார்க்ஸோட பைக்ல வந்துடுறேன்” என்றாள் நந்திதா.

திவ்யா அவளை முறைத்துப் பார்த்தாள்.

“ப்ளீஸ்டி...” என நந்திதா கெஞ்சும் தொனியில் சொன்னாள்.

எதுவும் பேசாமல் திவ்யா கிளம்பினாள்.

“ஏய் எதுக்கு இப்ப அவள வெறுப்பேத்துற?” என்றான் மார்க்ஸ்.

“அவள வெறுப்பேத்தணும்னு எல்லாம் பண்ணல. உன் கூட இன்னும் கொஞ்ச நேரம் இருக்கணும் போல இருக்கு… அவ்வளவுதான்!”

மார்க்ஸ் புன்னகையுடன் அவளை பார்த்தவன் “சரி போலாம் வா” என்றான்.

மார்க்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்தான். அலுவலகம் எப்போதும் போல அமைதியாக இருந்தது. மார்க்ஸின் மனம் மட்டும் வரப்போகும் ரேட்டிங் பற்றிய சிந்தனையில் இருந்தது.

மார்க்ஸ் தனது அறைக்கு வர அவனுக்கு முன்னால் அனைவரும் காத்துக் கொண்டிருந்தார்கள். நெல்லையப்பன் நெற்றி முழுக்க விபூதியுடன் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் மார்க்ஸுக்குச் சிரிப்பு வந்தது.

“யோவ் மாமா என்ன இதெல்லாம்?”

“காலையிலயே கபாலிய பார்த்து... இன்னைக்கு நல்ல ரேட்டிங் வரலைன்னா அவ்வளவுதான்னு மாமா மிரட்டிட்டு வந்திருக்காரு” என்றான் பாண்டியன். அறையிலிருந்த அனைவரும் சிரித்தனர். அந்தச் சிரிப்புக்கு பின்னால் கொஞ்சம் பயமும் நிறைய எதிர்பார்ப்பும் ஓளிந்து கிடந்தன.

“சாமி கும்பிட்டா நல்ல ரேட்டிங் வருமா… நல்ல ஷோ பண்ணாதான் மாமா ரேட்டிங் வரும்!”

“சில சமயம் நல்ல ஷோ பண்ணாலும் ரேட்டிங் வர மாட்டேங்குதே அது ஏன்?” என மடக்கினார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் சிரித்தான்.

“அதுக்கு பேர் தான்பா விதி... அதுல தப்பிக்கதான் நமக்கு தெய்வபலன் வேணும்!”

“விழுந்து விழுந்து சாமி கும்பிட்டாலும் சில சமயம் சாமி கை விட்டுருதே அது ஏன்?” என மார்க்ஸ் அவரை மடக்கினான்.

“யப்பா ரேட்டிங் வர்ற நேரத்தில எதுக்குப்பா சாமியை சண்டைக்கு இழுக்குற?” என்றார் நெல்லையப்பன். அனைவரும் சிரித்தனர்.

மார்க்ஸின் அறையில் இருந்த இன்டர்காம் ஒலித்தது. சட்டென அனைவரும் அமைதியானார்கள். பதினோறு மணிக்கு போன் வருகிறது என்றால் அது ரேட்டிங் பற்றியதாகத்தான் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது.

பாண்டியன் போனை எடுத்தான்.

“ஹலோ... சொல்லு பாஸ்கர்!”

பாஸ்கர் தான் ரேட்டிங்கை டவுன்லோட் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லக்கூடியவன். அனைவரும் சின்ன பதற்றத்துடன் பாண்டியனின் முகத்தையே பார்த்தபடியிருந்தனர்.

"ம்... சொல்லு...” என பாண்டியன் பென்சிலால் துண்டு காகிதம் ஒன்றில் ரேட்டிங்கை குறித்துக் கொள்ள... அதை எட்டிப்பார்க்கும் துணிவில்லாமல் அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.

“சரி... சரி...” என பாண்டியன் போனை வைத்தான்.

“என்னப்பா ஆச்சு?” என்றார் நெல்லையப்பன்.

“அவங்களோட ஷோ மூணும் ரொம்ப நல்லா பண்ணியிருக்கு தல”

“என்ன ரேட்டிங்?”

“டாப் ஷோ ஆறு... மத்த ரெண்டு ஷோவும் 4.4, 4.8”

அதுவரை மூன்று என்பதுதான் ஆரஞ்ச் டிவியின் சீரியல்களுக்கான சிறந்த ரேட்டிங்காக இருந்தது. ஆறு என்பதெல்லாம் அதிசயம்தான்.

“நம்ம ஷோ எவ்வளவுன்னு சொல்லுப்பா?” என்றார் நெல்லையப்பன்.

“2.4, 2.2, ஸ்கூல் ஸ்டோரி 1.8” என பாண்டியன் முடிக்கவும் பக்கத்திலிருக்கும் திவ்யாவின் அறையில் இருந்து 'ஓ' என அவளது அணியினர் கத்தும் சத்தம் கேட்டது.

மார்க்ஸ் யோசனையுடன் பாண்டியனைப் பார்த்தான்.

திவ்யாவின் அறையில் இருந்து கைதட்டலும் விசிலும் கேட்டது.

“சும்மாவே ஓவரா ஆடுவாணுங்க... இன்னைக்கு இவனுங்கள கையில பிடிக்க முடியாதே” என்றார் நெல்லையப்பன்.

“ஆறுன்றது எல்லாம் பெரிய சாதனை மாமா. எதுக்கு அவங்களைப பார்த்து பொறாமைப்படுற?” என்றான் மார்க்ஸ்.

“ஒரு நாளுக்கு அறுபதாயிரம் கொடுத்து அந்த சினிமா ஹீரோயின சீரியலுக்கு கூட்டிட்டு வந்திருக்காங்க... அதனால ஆறு வருது. நம்மளும் ஒரு ஹீரோயினை இறக்கியிருந்தா வந்திருக்கப்போகுது!”

மார்க்ஸ் சிரித்தபடி “செல்லாது செல்லாது” என்றான்.

அவனது அணியினர் அனைவரது முகத்திலும் வேதனையும் ஏமாற்றமும் தெரிந்தன.

“இந்த ஜனங்களே வேஸ்ட் தல... அதே மாமியார் மருமக சண்டைதான். ஆன்னு வாயைப் பொளந்து பார்க்குறானுங்க... இவனுங்களுக்கு எல்லாம் நல்ல ஷோவே பண்ணக்கூடாது” என வெறுப்புடன் சொன்னான் பாண்டியன்.

“பாண்டியா அவன்தான் உன் முதலாளி. அவனுக்குப் பிடிச்சதை நீ குடுத்துதான் ஆகணும். உனக்குப் பிடிச்சதை அவன் பார்க்கலைன்றதுக்காக அவனைத் திட்டி பிரயோஜனம் இல்ல”

“அப்ப நாமளும் அதே குப்பையைத்தான் தல பண்ணனும்”

“இல்ல பாண்டியா... புதுசா ஒண்ணு பண்ணனும்… ஆனா புதுசா பண்றோம்னு அவங்களை விட்டு ரொம்ப தள்ளியும் போயிடக் கூடாது. நம்ம ஷோவில அவங்களுக்கு பிடிச்ச ஏதோ ஒண்ணு மிஸ்ஸாகுது. அதைப் பிடிச்சிட்டா சரியா வந்திரும்.”

தொடர்ந்து திவ்யாவின் அறையில் இருந்து சத்தம் கேட்டபடியிருந்தது.

“மார்க்ஸ்... இவனுங்கள ரொம்ப கலாய்ச்சிட்டோம்.. இப்ப எப்படிப்பா இவனுங்கள சமாளிக்கிறது?” என கவலையாகக் கேட்டார் நெல்லையப்பன்

“உன் ஷோக்கு ஆறு வந்திருந்தா நீ என்ன பண்ணியிருப்ப?”

“அந்த தனபால் முன்னாடி சட்டைய கழட்டிட்டு ஆடியிருப்பேன்!”

“அப்படி நீ ஆடியிருந்தா அவன் என்ன பண்ணியிருப்பான்?”

“மூடிட்டு போயிருப்பான்!”

“அப்ப நாமளும் அதைத்தான் பண்ணணும்” என மார்க்ஸ் சிரித்தான்.

அனைவரது முகத்திலும் புன்னகை மலர்ந்தது. தோல்வியை எதிர் கொள்வதற்கான சிறந்த வழி அதை ஒப்புக் கொள்வதுதான்.

“இதை சமாளிக்க இன்னொரு வழி இருக்கு” என்றார் நெல்லையப்பன்.

“என்ன மாமா?”

“ஏ” என நெல்லையப்பன் சந்தோஷமாகக் கத்த... அனைவரும் பார்க்க... அவர் அவர்களை பார்த்து கத்துங்க என்பது போல சைகை செய்ய அனைவரும் ஏ என கத்த... மார்க்ஸ் சிரித்தான்.

“இவனுங்க எதுக்கு கொண்டாடுறானுங்கன்னு அந்த பயலுக பூரா கன்ஃபியூஸ் ஆகட்டும்” எனச் சிரித்தார் நெல்லையப்பன். அனைவரையும் அந்த சிரிப்பு தொற்றிக் கொண்டது.

கான்ஃபரன்ஸ் அறையில் அனைவரும் கூடியிருந்தனர்.

“குட் வொர்க் திவ்யா அண்ட் டீம்” என்றார் மேனன்.

அனைவரும் டேபிளைத் தட்டி ஆர்ப்பரித்தனர்.

“குட் வொர்க் ஏஞ்சல்” என்றார் மேனன்.

“தேங்கஸ் சார்” எனச் சந்தோஷமாகச் சொன்னாள் ஏஞ்சல்.

மார்க்ஸ் டீமின் ஆட்கள் அனைவரும் ஏமாற்றத்தை மறைத்தபடி அமர்ந்திருந்தனர். திவ்யா டீமில் இருப்பவர்கள் அவர்களைப் பார்த்த பார்வையில் ஓர் ஏளனம் கலந்திருந்தது.

திவ்யா மார்க்ஸைப் பார்த்தாள். மார்க்ஸ் அவளைப் பார்த்து புன்னகைத்தான். சந்தோஷமாக தோற்றுபோவது எப்படி என்பதை இவனிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் எனத் தோன்றியது திவ்யாவுக்கு.

“நம்ம சேனலோட போன வார மொத்த ரேட்டிங் 220... இந்த வாரம் 260 ஒரே வாரத்துல நாப்பது GRP அதிகமாயிருக்கோம். தேங்க்ஸ் டு த நியூ லாஞ்சஸ். ஒரு நல்ல மொமன்ட்டம் இருக்கு. அது மிஸ்ஸாயிடாம அப்படியே கன்டின்யூ பண்ணலாம். தேங்க் யூ” என மேனன் மீட்டிங்கை முடிக்க அனைவரும் எழுந்தனர்.

திவ்யாவின் அணியினர் அறையை விட்டு வெளியேற மார்க்ஸ் டீம் மட்டும் தனித்திருக்க மேனன் அவர்கள் அருகில் வந்தார்.

“மார்க்ஸ் இன்னைக்கு எபிசோட் பார்த்தேன்... சான்சே இல்லை... ஹெட் மாஸ்டர் ரூம்ல அந்த பசங்க பண்ற ஃபன்.... சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலிச்சிருச்சு... ஐ லவ் த ஷோ மேன்” என சொல்லி அவனைத் தட்டிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் அவர்.

ஏன் ரேட்டிங் வரவில்லை என ஒரு வார்த்தை கேட்கவில்லை. பரவாயில்ல பார்த்துக்கலாம் என ஆறுதல் வார்த்தையும் சொல்லவில்லை... குட் ஷோ என்ற பாராட்டுக்கு பின்னால் ஆறுதலிருந்தது, ரேட்டிங் வரும் கவலைப்படாதே என்கிற நம்பிக்கையிருந்தது. ஜெயிக்கவில்லை என்பதனால் நீ செய்த வேலை ஒன்றும் குறைவில்லை எனப் பாராட்டிருந்தது. அதுதான் மேனன்! அதுதான் மேனன் ஸ்டைல்!

மார்க்ஸ் வெளியே வந்தான். ஏஞ்சல் அவனுக்காக கான்ஃபரன்ஸ் ரூம் வெளியே காத்துக் கொண்டிருந்தாள்.

இடியட் பாக்ஸ் - மார்க்ஸ், ஏஞ்சல்
இடியட் பாக்ஸ் - மார்க்ஸ், ஏஞ்சல்

“அப்புறம்?” என்றபடி அவள் பார்த்த பார்வையில் கிண்டல் நிரம்பி வழிந்தது.

“அப்புறம் என்ன?”

“ஒத்துக்கோ”

“என்ன ஒத்துக்கணும்?”

“அடாத மழையிலயும் விடாம குடை பிடிப்பியே நீ.... தோத்துட்டேன்னு ஒத்துக்கோ!”

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“என்னமோ டிவிய நீதான் கண்டுபிடிச்ச மாதிரி சீன் போடுவியே... இன்னைக்கு என்னாச்சு? ஆறு ரேட்டிங்... உன் லைஃப்ல ஒரு ஷோவாவது ஆறு பண்ணியிருக்குமா?”

‘’இல்லை’’ என உதட்டைப் பிதுக்கித் தலையாட்டினான் மார்க்ஸ்.

“வேலையை எப்ப ரிசைன் பண்ற... டக்குன்னு பண்ணிடு... இல்லன்னா அவங்களே உன்னைத் தூக்கிட போறாங்க...”

“ஏஞ்சல்...”

“என்ன?”

“நீ ரொம்ப அழகான பொண்ணு... இந்த வில்லத்தனம் உனக்கு கொஞ்சம் கூட செட்டாகல... எனக்குப் புரியுது... எங்கயோ ஒரு இடத்தில நீ இப்படி மாறுனதுக்கு நான்தான் காரணமாயிட்டேன்னு... அதுக்கு சாரி.... நீ எப்பவும் போல ஜாலியா சந்தோஷமா இரு ஏஞ்சல்... இப்படி அடுத்தவங்களை வெறுப்பேத்தி சந்தோஷப்படுற ஆள் நீ கிடையாது!”

அவள் முகம் மாறி அவனைப் பார்த்தாள்.

“உன் சக்சஸை உலகமே ஒத்துகிச்சு… அதைக் கொண்டாடுறதை விட்டுட்டு...என்ன நோண்டுறதுல என்ன இருக்கு?”

“நீ தோத்துடேன்னு ஒத்துக்கோடா”

‘’இல்லை’’ என தலையாட்டினான் மார்க்ஸ்.

“ஃபர்ஸ்ட் ரவுண்ட்ல நீங்க முன்னாடி இருக்கீங்க... இன்னும் நிறைய ரவுண்ட் இருக்கு... பார்க்கலாம்” என நகர்ந்தவன் நின்று திரும்பி “அப்படியே நீ ஜெயிச்சாலும் எனக்கு சந்தோஷம்தான்” எனச் சிரித்தபடி நகர்ந்தான்.

உங்களை வெறுப்பேற்றி பார்க்க வேண்டுமென நினைப்பவர்களை நீங்கள் வெல்வதற்கான ஒரே வழி வெறுப்பாகாமல் இருப்பதுதான்.

மார்க்ஸ் தனது புல்லட்டை வீட்டின் கீழே நிறுத்தியவன். வாட்சைப் பார்க்க மணி 12 என காட்டியது. கையில் இருக்கும். புது வாட்ச் நந்திதாவை நினைவூட்டியது.

“ஏஞ்சல் வீட்டுல பார்ட்டி இருக்கு... நான் போகட்டுமா” எனக கேட்டாள் நந்திதா.

"இதுக்கு எதுக்கு என்கிட்ட பர்மிஷன் கேட்குற” என்றான் மார்க்ஸ்.

“இல்ல நீ வீட்ல தனியா இருப்ப... இன்னைக்கு உன் மூட் வேற சரியில்ல அதான்!”

மார்க்ஸ் சிரித்தபடி. “அதெல்லாம் ஒண்ணும் இல்ல... நீ போயிட்டு வா... நீ ரெண்டு டீமுக்கும் பொதுவான ஆள். போலன்னா தப்பா இருக்கும்” என சொல்லி ஏஞ்சல் வீட்டு பார்ட்டிக்கு அனுப்பி வைத்தான் மார்க்ஸ்.

வீட்டிற்குள் நுழைந்தவன் செல்ஃபில் இருந்து கிளாஸ் ஒன்றை எடுத்து வைத்தான். ஃபிரிட்ஜிலிருந்தது ஒரு ஒயின் பாட்டில் வெளியே வந்தது.

வாசல்கதவு திறக்கும் சத்தம் கேட்டது.... மார்க்ஸ் திரும்பி பார்த்தான். திவ்யா நின்று கொண்டிருந்தாள்.

“என்ன மிஸ்டர் மார்க்ஸ் தனியா குடிச்சிட்டு இருக்கிற மாதிரி இருக்கு?”

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“வருத்தமா இருந்தா நாலு பேர் கிட்ட சொல்லணும். வெளிய எல்லாம் கெத்தை மெயின்டெய்ன் பண்றது. இடியே விழுந்தாலும் மார்க்ஸ் சிரிச்சுகிட்டே இருப்பாருன்னு இமேஜைக் குடுக்குறது… அப்புறமா தனியா வந்து குடிச்சிட்டு கண்ணாடி பார்த்து ஃபீல் பண்ணிக்கிறது… அப்படிதானே!”

“நந்திதா எங்க?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“ஏய், நான் என்ன சொல்றேன்... நீ என்ன கேட்குற?”

“சரி என்ன வேணும் உனக்கு!”

“இதுவரைக்கும் இந்த சேனல் சீரியலுக்கு வராத ஒரு ரேட்டிங் இன்னைக்கு வந்திருக்கா இல்லையா?”

“அதுல என்ன டவுட்டு? உண்மையிலயே பெரிய ரேட்டிங்தான்”

“அதை ஒத்துகிட்டா என்ன குறைஞ்சா போயிடுவ?”

“நான் ஒத்துக்கலைன்னா அது உண்மை இல்லைன்னு ஆயிடுமா?”

“ஒத்துக்க வேணாம். வெல்டன்னு ஒரு வார்த்தை சொல்றதுக்கு என்ன? உன் ஈகோ இடிக்குதா!”

மார்க்ஸ் இல்லை எனத் தலையாட்டினான்.

“எனக்கு தெரியும் உன்னைப் பத்தி... உன்னால என் வெற்றியயைத் தாங்கிக்க முடியல!”

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“இங்க பாரு... திட்டுனா கோபப்படு... அடிக்கும் போதும் அப்படியே சிரிக்கிறது. பெரிய மகான் இவரு!”

“திவ்யா... நீ ஜெயிச்சதுல எனக்கு சந்தோஷம்!’’

“பொய்... இன்னைக்கு பூரா நான் வெயிட் பண்ணேன். முகத்தைப் பார்த்து சொல்ல தைரியம் இல்லலைன்னா ஒரு போன் கால், ஒரு மெசேஜ்... ஏதாவது வரும்னு எதிர்பார்த்தேன்... வரல!”

மார்க்ஸ் அமைதியாக இருந்தான்.

“நீ வெளியே காட்டிக்கிற அளவுக்கு பெருந்தன்மையான ஆளும் கிடையாது. நீ என்கிட்ட காட்டிக்கிட்ட மாதிரி அன்பான ஆளும் கிடையாது!”

மார்க்ஸ் கிளாஸை எடுத்துக் குடித்தான்.

“அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? வாயைத் திறந்து ஏதாவது சொல்லு!”

“இங்க பார் நான் நல்லவன்… உன் மேல அன்பா இருக்கேன். இதெல்லாம் வார்த்தையா சொல்ல முடியாது… புரியுதா”

“பேச்ச மாத்தாத... இப்ப சொல்றேன் கேட்டுக்கோ... இந்த சேனல் 200 GRP வரைக்கும் வந்ததுக்கும் நீதான் காரணம். அது 200 GRP க்கு மேல போகாததுக்கும் நீதான் காரணம். இப்ப அது 260 ஆயிடுச்சு... சீக்கிரமே முன்னூறு முன்னூத்தி அம்பதுன்னு அது மேல போகும். அது உன்னால இல்ல... என்னால… இதை நான் திமிர்ல சொல்லல... என் மேல இருக்குற நம்பிக்கையில சொல்றேன்!”

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

மார்க்ஸ் அவளைப் பார்த்தபடி இருந்தான்.

“அப்புறம் எதிரியா இருந்தாலும் சரியா ஒரு விஷயத்தை பண்றப்ப அதைப் பாராட்ட கத்துக்கோ... அப்பதான் நல்ல தலைவனா இருக்க முடியும். புரியுதா?”

“குட் நைட்” என மார்க்ஸ் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டான்.

“உன்கிட்ட யாரும் உண்மைய சொன்னதில்ல மார்க்ஸ். நான்தான் சொல்றேன். அதான் உனக்கு கோபம் வருது... உனக்கு கஷ்டமா இருந்தாலும் நான் அதை சொல்லத்தான் செய்வேன்” என்று சொன்ன திவ்யா, தனது அறைக்குள் நுழைந்தாள்.

தனது ஹேண்ட் பேக்கை தூக்கி மெத்தையில் போட்டவள் திரும்பிப் பார்க்க... அவளது டேபிளில் மேல் கேக் ஒன்றும் ரோஜாக்கள் நிறைந்த பொக்கே, ஒரு கிரீட்டிங் கார்ட் மற்றும் கிஃப்ட் பேப்பரால் சுற்றப்பட்ட சின்ன பரிசுப் பொருள் ஒன்றும் இருந்தன.

அதை அவள் சற்றும் எதிர்பார்க்காமல் தடுமாறி அருகில் வர கேக்கின் மேல் ‘வெல்டன் மை டியர்’ என்ற வாசகங்கள் அவளைப் பார்த்துச் சிரித்தன.

சட்டென அவமானம் அவள் முகத்தில் அறைந்தது. மீண்டும் மார்க்ஸ் அவளை ஜெயித்துவிட்டான் என்பதை அவள் உணர்ந்தாள். அவளுக்கு அழுகை வந்தது.

அந்த அழுகை இப்படிப்பட்ட ஒருவனை தப்பாக புரிந்து கொண்டோம் என்பதாலா இல்லை தான் எது செய்தாலும் ஒரு படி மேலே போய் தன்னை அவன் வீழ்த்தி விடுகிறானே என்கிற தோல்வியினாலா என்பது அவளுக்கே புரியவில்லை.

மன்னிப்பை போல ஒரு பெரிய தண்டனை இந்த உலகத்தில் இல்லை. நாம் செய்தது தவறு என உணர்கிற தருணம் போல வாழ்கையின் மிக அவஸ்தையான தருணமும் எதுவும் இல்லை.

- Stay Tuned...