நந்திதா தனது அறையில் இருந்து கிளம்பி வெளியே வர, திவ்யா
கையில் அவளது லேப்டாப் பேகுடன் நின்று கொண்டிருந்தாள்.
“ஸாரிடி... கொஞ்சம் லேட்டாயிருச்சு” என்றாள் நந்திதா.
“ஏஞ்சல் வீட்டு பார்ட்டியிலருந்து நேத்து ராத்திரி எப்ப வந்த?” என்றாள் திவ்யா.
“காலையில ஆயிடுச்சு... ஏஞ்சல் அம்மா சூப்பர் டைப்பு... ராத்திரி எல்லாம்
பேசிக்கிட்டே இருந்தோம். அப்படியே சோஃபாவில தூங்கிட்டேன். காலையில
தான் அவங்க வந்து டிராப் பண்ணிட்டு போனாங்க”
“ஓகே... ஓகே... போலாமா?” என்றபடி திவ்யா கூலிங் கிளாஸ் ஒன்றை
எடுத்து கண்ணில் மாட்டினாள்.
“ஏய்... புதுசா? கூலர்ஸ் சூப்பரா இருக்கு”
“அப்படியா” என திவ்யா தனது மொபைலின் முன்புற கேமராவை ஆன் செய்து
தன்னைத்தானே ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.
“போதும் உன்னை ரசிச்சது... எங்கடி வாங்குன ஆன்லைன்லயா?”
“தெரியல... இது கிஃப்ட்”
“கிஃப்டா”
“ஆமா... மார்க்ஸ் கொடுத்தான்”
நந்திதா முகம் மாறினாள். அவளுக்குள் சட்டென ஏமாற்றம் படர்ந்தது. ஒரு கணம்
திவ்யா அதை ரசித்தாள். அடுத்த கணமே அப்படி ரசித்ததற்காக தன்னைத்தானே
கடிந்தும் கொண்டாள்.
“எதுக்கு திடீர்ன்னு கிஃப்ட்” என கேட்ட நந்திதாவின் குரலில் சில நொடிகளுக்கு முன்னால் இருந்த உற்சாகம் காணாமல் போயிருந்தது.

“என்னோட ஷோஸ்க்கு நல்ல ரேட்டிங் வந்திச்சுல்ல”
“அதுக்கு கிஃப்டா?”
“ம்” என திவ்யா தலையாட்டினாள்.
“அதுக்கு எதுக்கு கிஃப்ட் சம்பந்தமில்லாம? ஒரு பொக்கே கொடுக்கலாம்,
அதிகபட்சமா கேக் கூட ஓகே!”
“அதுவும் கொடுத்தான்”
நந்திதா அதை எதிர்பார்க்கவில்லை.
“காலையில நீ சாப்பிட்டியே ரெட் வெல்வட்... அந்த கேக் அவன் கொடுத்தது தான்”
இதை சொல்ல வேண்டாம் என தான் திவ்யா நினைத்தாள். ஆனாலும்
அவளுக்குள்ளிருந்த ஏதோ ஒன்று அதை சொல்ல வைத்தது.
நந்திதா தன்னை சமாளித்துக் கொண்டவள் “சரி போலாம்” என்றாள்.
திவ்யா கதவை மூடும் போது நந்திதா வலிய புன்னகையை வரவழைத்தபடி சொன்னாள்.
“இந்த கூலர்ஸ் உன் முகத்துக்கு செட்டாகல!”
“இப்பதானடி சூப்பரா இருக்குன்னு சொன்னே!”
“அது சும்மா சொன்னேன். ஆக்சுவலா இது உனக்கு சுமாராதான் இருக்கு!”
“அன்பா தர்றாங்க... அதப்போய் நல்லாயிருக்கு, நல்லாயில்லைன்னு சொல்ல முடியுமா?” என மேற்கொண்டு திவ்யா ஏதோ பேசப்போக....
“போலாம்... போலாம்...” என நந்திதா லிஃப்ட்டை விடுத்து படிக்கட்டில்
அவசரமாக இறங்கினாள்.
“என்னாச்சுடி லிஃப்ட்லயே போலாமே!”
“நீ லிஃப்ட்ல வா... வெயிட் பண்றதுக்கு கடுப்பாயிருக்கு” என படியிறங்கியபடியே நந்திதா சொன்னாள். தட் தட் என அவள் படியிறங்கும் ஓசையில் அவளது கோபம் புரிந்தது திவ்யாவுக்கு. அந்த கோபம் திவ்யாவுக்கு ஒரே சமயத்தில் சந்தோஷமாகவும் இருந்தது... சங்கடமாகவும் இருந்தது.
மார்க்ஸ் அலுவலகத்தில் இருக்கும் தனது அறையில் அமர்ந்து லேப்டாப்பில்
எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.
சட்டென அறைக்கதவை திறந்து கொண்டு நந்திதா உள்ளே நுழைந்தாள்.
“ஹாய்” என்றான் மார்க்ஸ்.
“நீ திவ்யாவுக்கு கூலர்ஸ் பிரசன்ட் பண்ணியா?”
நந்திதா அப்படி கேட்டதும் மார்க்ஸுக்கு சிரிப்பு வந்தது.
“ஆமா... ஏன் நல்லாயில்லையா?”
என்ன சொல்வது எனத் தெரியாமல் தடுமாறிய நந்திதா “எனக்கு ஏன் நீ கிஃப்ட் எதுவும் கொடுக்கல!”
ஒரு குழந்தையைப்போல அவள் கேட்டதும் மார்க்ஸ் சத்தமாக சிரித்தான். நந்திதாவுக்கு சட்டென வெட்கமாயிருந்தது.
“ரொம்ப சில்லியா கேட்குறேன்ல?”
“ஆமா”
“அவளுக்கு கிஃப்ட் கொடுத்தேன்னதும் காரணமே இல்லாம கடுப்பாயிட்டேன்.
யோசிச்சுப் பார்த்தா ரொம்ப சில்லியாதான் இருக்கு... ஸாரி... உன் வேலையைப் பாரு!”
என அவள் அவசரமாகத் திரும்ப “நந்து” என்றான் மார்க்ஸ்.
அவள் மார்க்ஸைப் பார்த்து திரும்பினாள்.
“நீ அப்படி கேட்டது சில்லியாதான் இருந்துச்சு... ஆனாலும்...” என வார்த்தையை முடிக்காமல் தனது டேபிள் டிராவை திறந்தவன் அதிலிருந்து
ஒரு சின்ன கிஃப்ட் பேப்பர் சுற்றிய பாக்கெட்டை எடுத்து நீட்டினான்.
சட்டென நந்திதாவின் முகம் பிரகாசமானது.
“எனக்கா” என சைகையால் அவள் கேட்க...
ஆமென தலையாட்டினான் மார்க்ஸ்.
அதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.... படபடப்பும் சந்தோஷமுமாக அதை
கையில் வாங்கியவள் “இதை பிரிக்கலாமா” என சைகையால் மார்க்ஸிடம் கேட்க
மார்க்ஸ் புன்னகையுடன் ஆமென்பதாக தலையாட்ட... நந்திதா அதைப் பிரித்தாள். அதில் அழகான செயின் ஒன்றும் அதோடு இணைந்த இன்யாங் டாலர் ஒன்றும் இருந்தது. அவள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாற மார்க்ஸ் அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“தேங்ஸ் மார்க்ஸ்...”
“வெல்கம்”
தனது கழுத்தில் செயினை மாட்டிக் கொண்டவள், “எப்படியிருக்கு” எனக் கேட்டாள்.
“வேற லெவல்” என்றான் மார்க்ஸ்..
சட்டென ஏதோ நினைவுக்கு வந்தவளாக நந்திதா முகம் மாறியபடி
“நான் வாட்ச் வாங்கி கொடுத்ததால அதை நேர் பண்றதுக்கு நீ இதை வாங்கி
கொடுக்குறயா” எனக் கேட்டாள்.

“அப்படியெல்லாம் இல்ல”
“திவ்யாவுக்கு மட்டும் தனியா கிஃப்ட் குடுத்தா தப்பா இருக்கும்னுதான
எனக்கும் சேர்த்து வாங்குன?”
மார்க்ஸ் சிரித்தான்.
“எதுக்கு சிரிக்கிற”
“ரொம்ப ஆராய ஆரம்பிச்சா வாழ்க்கையில எதையுமே அனுபவிக்க முடியாம போயிடும்... கிஃப்ட் பார்த்ததும் உனக்கு வந்த சந்தோஷத்தை சந்தேகம் கொன்னுடுச்சு பாரு. நான் என்ன நினைச்சு வாங்குனா என்ன? அது என் பிரச்சனை. உனக்கு இது சந்தோஷமா இருக்கா இல்லையா?”
“ரொம்ப சந்தோஷமாயிருக்கு”
“அவ்வளவுதான் விடு”
நந்திதா பதில் ஏதும் சொல்லாமல் மார்க்ஸை அணைத்துக் கொண்டவள்
அங்கிருந்து நகர்ந்தாள். மார்க்ஸ் புன்னகையுடன் மீண்டும் லேப்டாப்பை
பார்த்து திரும்பிக் கொண்டான்.
மார்க்ஸின் அறைக்கதவை திறந்து கொண்டு நந்திதா வெளியே வருவதற்கும்
திவ்யா தனது அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வரவும் சரியாக
இருந்தது. நந்திதாவின் கழுத்தில் டாலடித்த அந்த புதிய செயின் திவ்யாவின்
பார்வையில் பட்டது.
“ஏய் என்னடி புது செயினா... எப்ப வாங்குன? இந்த இன்யாங் டாலர் தான் நான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன்”
“இது கிஃப்ட்... மார்க்ஸ் கொடுத்தான்!”
திவ்யாவின் முகம் சட்டென மாறியது.
“லன்ச்சுல மீட் பண்ணலாம்... ப்ரொமோ டெலிவரி இருக்கு” என கெத்தாக நந்திதா நடந்து சென்றாள் நந்திதா. உற்சாகம் இப்போது இடம் மாறியிருந்தது. திவ்யா சட்டென வெறுமையாக உணர்ந்தாள்.
மேனன் தனது அறையில் அமர்ந்திருந்தார். அறைக்கதவை தட்டிவிட்டு
பிரசாத் உள்ளே நுழைந்தான்.
“குட்மார்னிங் பிரசாத்”
“ஒரு சின்ன பிராப்ளம் சார்”
“நீங்க வர்றீங்கனாலே பிராப்ளம் தானே... சொல்லுங்க”
“ரெண்டு ஹவுஸ்கீப்பிங் பசங்களை வேலைய விட்டு அனுப்பிட்டேன் சார்!”
“அவங்க ஏஜென்ஸி எம்ப்ளாயிஸ்தான... அதுக்கு என் பெர்மிஷன் தேவையில்லையே”
“அதில்ல சார்... அவங்களை ஏன் அனுப்பினேன்ற காரணம் உங்களுக்கு தெரியணும் சார்” என இழுத்தான் பிரசாத்.
“சொல்லுங்க கேட்போம்”
“இங்க வேலை செஞ்சுகிட்டு இருக்கும்போதே அவங்க ரெண்டு பேரும் சீரியலுக்கு
டயலாக் எழுதற வேலைய சைலன்ட்டா செஞ்சிருக்காங்க சார்”
“அப்படியா... எந்த சீரியலுக்கு”
“அதான் சார் இன்னும் கொடுமை... மார்க்ஸ் பண்ற ஸ்கூல் சீரியலுக்கு இந்த பசங்கதான் டயலாக் எழுதியிருக்காங்க... அத மார்க்ஸும் சொல்லல... இவனுங்களும் சொல்லல”
“ஓ” என யோசித்த மேனன். “அவங்கள ஹவுஸ்கீப்பிங்ல இருந்து தூக்கிட்டீங்கல்ல”
“அவங்க வேலை செய்யுற ஏஜென்ஸியில இருந்தே தூக்கியாச்சு சார்”
“பர்ஃபக்ட் பிரசாத்”
“தேங்ஸ் சார்... இது எத்திக்ஸ் இல்லன்னு மார்க்ஸ் கிட்ட சொல்லணும் சார்”
“சொல்லலாம்... அதுக்கு முன்னால அந்த ரெண்டு பசங்களையும் டைரக்டா
ஆரஞ்ச் டிவி எம்ளாயியா வேலைக்கு எடுத்திருங்க”
“சார்” என அதிர்ச்சியானான் பிரசாத். மேனன் தன்னை பாராட்டும்போதே அவனுக்கு
சந்தேகம்தான். ஆனால் இப்படி ஒரு பன்ச் வைத்து முடிப்பார் என்று
அவன் எதிர்பார்க்கவில்லை.
“அவங்களை எந்த வேலைக்கு எடுக்குறது சார்” என பிரசாத் தடுமாறி கேட்டான்.
“ஸ்கிரிப்ட் ரைட்டர்தான். வசனம் வெளுத்து வாங்குறானுங்க... வேற யாரும்
இவனுங்கள தூக்கிட்டுப் போறதுக்குள்ள அவங்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்து லாக் பண்ணிருங்க!”
நொந்து போனவனாக தலையாட்டினான் பிரசாத். எப்போதும் தன் கையில் இருக்கும் ஆயுதத்தை பிடுங்கி தன்னையே தாக்குவதை மேனன் வழக்கமாக வைத்திருக்கிறார் என அவனுக்குத் தோன்றியது.
“அவங்களுக்கு என்ன சேலரி ஃபிக்ஸ் பண்ணலாம் சார்”
“வெளிய மார்கெட்டுல டயலாக் ரைட்டருக்கு என்ன கொடுக்குறாங்க?!”
“எபிசோடுக்கு அஞ்சாயிரம்... ஒரு மாசத்துல இருபது எப்பிசோட்னா
ஒரு லட்சம் வரும் சார்”
“அப்ப இரண்டு பசங்களுக்கும் ஆளுக்கு அம்பதாயிரம் சேலரி ஃபிக்ஸ் பண்ணிருங்க”
“சார்” என ஏறக்குறைய கத்தி விட்டான் பிரசாத்.
“என்னாச்சு பிரசாத்?”
“அவங்க மாசம் ஏழாயிரம் வாங்குறானுங்க சார். பத்தாயிரம் ரூபா கொடுத்தா போதும்... சந்தோஷமா வேலை செய்வாங்க!”
“எண்பதாயிரம் மிச்சம் பண்ணலாங்குறீங்க”
“யெஸ் சார்”
“யாரோ கண்ணுக்கு தெரியாத ஒரு சேட்டுக்கு லாபம் சம்பாதிச்சு கொடுக்கறதுக்காக
உங்களுக்கு நல்லா தெரிஞ்ச கஷ்டப்படுற ஒருத்தன் வயித்தில அடிக்கலான்றீங்க
அதான” மேனனின் குரலில் கடுமை ஏறியிருந்தது.
“இல்ல சார் பெஸ்ட் டீல்” என பிரசாத் பயத்தில் உளர...
“நியாயமான சம்பளத்தை தராம ஏமாத்துறதுக்கு பேர் பெஸ்ட் டீல்ன்னா... உங்களுக்கு
பேர் ஹெச்ஆர் மேனேஜர் இல்ல... திருடன்”
பயத்தில் பிரசாத்துக்கு வேர்த்தது.
“குடுய்யா... உன் அப்பன் வீட்டு காசா எடுத்து குடுக்குற? உனக்கு ஏன் வலிக்குது... உங்களை மாதிரி நடுவுல இருக்கிறவனுங்களாலதான் வேலை செய்றவன் கஷ்டம் மேல இருக்கிறவனுக்கு தெரிய மாட்டேங்குது. ஒருத்தன் வயித்துல அடிக்கிறது தப்புன்னு அவங்களுக்கும் தெரிய மாட்டேங்குது!”
நடுங்கிப் போனான் பிரசாத்.
“இல்ல சார்... இப்ப தான் வேலைக்கு சேர்றாங்க அதுக்குள்ள”
“உன் சம்பளம் பக்கத்தில வந்துட்டானேன்னு யோசிக்கிறியா”
“அப்படியில்ல சார்”
“அவன் செய்யற வேலைக்கான சம்பளம் அது. உனக்கும் அந்த சம்பளம் வேணுன்னா நீயும் ஸ்கிரிப்ட் எழுது... லட்சம் லட்சமா சம்பளம் போடுற அக்கவுன்ட்ஸ் டிப்பார்ட்மென்ட் ஆளு என் சம்பளம் இருபதாயிரம் தானேன்னு வருத்தப்பட முடியுமா? அப்படித்தான் இதுவும். கம்பெனிக்காக வேலை செய்யுறவன சந்தோஷமா பார்த்துக்கத்தான் ஹெச்ஆர் டிப்பார்ட்மென்ட். அவனைப் போட்டுத் தள்ளி முதலாளிய குண்டாக்குறதுக்கு கிடையாது!”

“யெஸ் ஸார்... யெஸ் ஸார்”
“உன்னைப் பார்த்தாலே எரிச்சலாவது. போயா வெளிய” என்றார் மேனன்.
அவர் அப்படி ஒருமையில் யாரையும் பேசி பிரசாத் பார்த்ததில்லை. தப்பித்தோம்
பிழைத்தோம் என அவன் அங்கிருந்து நகர்ந்தான்.
மார்க்ஸ் தனது அறையில் அமர்ந்திருக்க அவனது போனடித்தது. அவன் போனை
எடுத்தான். மறுமுனையில் ஏஞ்சலின் அம்மா பேபியம்மாள்.
“எங்கடா இருக்க?”
“ஆபிஸ்லம்மா” என்றான் மார்க்ஸ்.
“சர்ச்சில இருக்கேன்... வா” என அவர் போனை துண்டித்தார்.
செவ்வாய்கிழமை மாலைகளில் பேபியம்மா பாரிஸ் அந்தோணியார் சர்ச்சுக்கு
வருவதும், மார்க்ஸ் அவர்களைப் போய் பார்ப்பதும் வழக்கம்.
“ஏம்மா ஏஞ்சலைக் கூப்புடலாம் இல்ல” என மார்க்ஸ் கேட்கும் போதெல்லாம்
“அவதான் தினமும் ஜெபம் பண்றாளே... கடவுளை விட்டு தள்ளி இருக்குறவன்
நீ ஒருத்தன்தான். அதனாலதான் உன்னை சர்ச்சுக்கு இழுத்துகிட்டு போறேன்”
என சிரிப்பார் பேபியம்மா.
தல்வார் டவரிலிருந்து அந்தோணியார் கோவில் அருகாமையில் தான் இருந்தது.
மார்க்ஸ் நடந்து வந்தான். பேபியம்மா சர்ச் வாசலில் மார்க்ஸுக்காக காத்திருந்தார்.
தொலைவில் இருந்து பார்க்கையில் சேலையை தலையில் முக்காடிட்டபடி
நின்று கொண்டிருக்கும் பேபியம்மா அவன் கண்களுக்கு கருணை ததும்பும் மேரியம்மாவாகவே காட்சி தந்தார். அவன் அருகில் வந்தான்.
“ஏண்டா இங்க இருக்கிற ஆபிஸ்ல இருந்து வர்றதுக்கு இவ்வளவு நேரமா?”
“ஸாரிம்மா”
“வா” என்றபடி அம்மா உள்ளே நுழைந்தார்.
மார்க்ஸுக்கு கடவுள் நம்பிக்கையில்லை என்றாலும் அவன் அம்மாவின் அன்புக்காக
அவர்களுடன் சர்ச்சுக்கு போவதுண்டு. கடவுள் சம்பந்தமாக அவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி விவாதங்கள் நிகழும்.
“ஏண்டா கோயிலுக்குப்போயி சாமி கும்பிட்டா என்ன குறைஞ்சா போயிடுவ..
என் சாமி வேணாம்... உன் சாமிய கும்பிடு” என அம்மா கேட்கும் போதெல்லாம்
சிரிப்பையே பதிலாகத் தருவான் மார்க்ஸ்.
“இப்ப என்ன சாமி இல்லைன்றயா?”
“எனக்கு சாமி வேணாம்றேன். நம்மளைவிட கஷ்டப்படுறவங்க எவ்வளவோ பேர் இருக்காங்க... அவங்களை எல்லாம் அவர்தான பார்த்துக்கணும்... நாம
நல்லாதான இருக்கோம்... நம்மளும் அதைக் குடு... இதைக் குடுன்னு எதுக்கு
அவரைத் தொந்தரவு பண்ணிகிட்டு!”
“திமிருடா உனக்கு... மண்டிபோட்டு கடவுள் கிட்ட கேளு... அது நடக்குதா
இல்லையான்னு மட்டும் பாரு!”
“அம்மா கடவுளை கும்பிடுறது பிச்சை கேட்குற மாதிரி இருக்கக் கூடாதும்மா... அது காதலிக்கிற மாதிரி இருக்கணும்!”
“யாரு அந்த வெள்ளை தாடி சாமியார் சொன்னாரா?!”
மார்க்ஸ் சிரித்தான். அம்மா வெள்ளை தாடி சாமியார் என்று சொன்னது ஓஷோவை.
“நாங்க வயசானவங்கப்பா... பயபக்தியாவே கடவுளை கும்பிடுறோம்... நீ இளவட்டம்
கடவுளைக் காதலி” என அம்மா சிரிப்புடன் பேச்சை முடித்துக் கொள்வார்.
அம்மாவும் மார்க்ஸும் சர்ச்சுக்குள் நுழைந்தனர். ஆங்காங்கே முட்டியிட்டு
சிலர் பிராத்தித்துக் கொண்டிருந்தார்கள்.
அம்மா ஒரிடத்தில் முழங்காலிட்டு பிராத்தனையை துவங்க, மார்க்ஸ்
அம்மாவுக்கு அருகில் அமர்ந்தான். அவனுக்கு எப்போதும் தேவாலயங்களில் இருக்கும் அமைதி மிகவும் பிடிக்கும். மெதுவாக
கண்களை மூடினான். மனசு வேக வேகமாக எதை எதையோ யோசித்து
எங்கெங்கோ அலைபாய்ந்து பின் கொஞ்ச நேரத்தில் அமைதியானது.
அவன் சிந்தனைகள் ஏதுமின்றி அமைதியாய் இருந்தான்.
அவனுக்கும் அவனது அப்பாவுக்குமான ஒரு உரையாடல் சம்பந்தமில்லாமல் அவன் நினைவுக்கு வந்தது.
“கடவுள் இருக்காரா இல்லையா?!” என அவன் அப்பாவிடம் ஒரு தடவை
கேட்ட போது அவர் தான் சொன்னார். “இருந்தா இருந்துட்டு போட்டும்...
நமக்கு அவர் தேவையில்லை!”
அந்த பதில் புரியாமல் அவன் விழித்தபோது அப்பா எளிமையாகச் சொன்னார்.
“ஒரு அப்பாவா உனக்கு சாப்பாடு, துணிமணி, வீடு, படிக்க நல்ல ஸ்கூல்னு
எல்லா வசதியும் பண்ணி கொடுத்திருக்கேன். பதிலுக்கு நான் உன்கிட்ட என்ன
எதிர்பார்ப்பேன்!”
“நல்லா படிக்கணும்... தப்பு பண்ணாம எல்லார் கிட்டயும் நல்ல பையன்னு பேர் வாங்கணும்... இதைத்தான் எதிர்பார்ப்பீங்க”
“அதைத்தானே நம்மள படைச்ச கடவுளும் எதிர்பார்ப்பாரு!”
மார்க்ஸ்க்கு அப்பா சொன்னது தெளிவாகப் புரிந்தது. நாமே கடவுள் தன்மையோட
இருந்துவிட்டால் நமக்கென்று தனியாக ஒரு கடவுள் தேவையில்லை என்பதுதான் அது.
மார்க்ஸ் கண்களைத் திறந்தான். அம்மா சிலுவைக்குறியிட்டபடி எழுந்து நின்றார்.
அவன் கையில் மெழுகுவர்த்தியை திணித்து “ஏத்தி வைடா” என்றார்.
அவன் மெழுகுவர்த்தியை சிலுவைக்கு நேராக இருந்த டேபிளில் ஏற்றி வைத்தான்.
அம்மாவும் மார்க்ஸும் சர்ச்சிலிருந்து வெளியே வந்தனர்....
“என்னடா வேண்டிகிட்டே”
“நான்லாம் எதுவும் வேண்டிக்கல...”
“ஏன்?”
“அதான் எனக்காக நீங்க வேண்டிக்கிறீங்களே... அது போதாதா?”
“ஐஸ் போடுறதுல பெரியாள்டா நீ”
மார்க்ஸ் சிரித்தபடி அங்கிருந்த தள்ளு வண்டியில் அவித்த கடலை வாங்கினான்.

ப்ரேயர் முடித்து விட்டு சர்ச் வாசலில் வேர்க்கடலை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே பேசியபடி ஆட்டோ ஸ்டாண்ட் வரை இருவரும் நடந்து வருவார்கள். சிறிதுநேரம்
பேசிக்கொண்டு இருந்துவிட்டு அம்மாவை அவன் ஆட்டோ ஏற்றிவிடுவான். இது வாரவாரம் நடப்பதுதான்.
இருவரும் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வந்து நின்றார்கள்.
மார்க்ஸூக்கு தெரிந்த ஆட்டோகாரன் வணக்கம் வைத்தான்.
ஒரு அஞ்சு நிமிசம் என்பது போல மார்க்ஸ் கையைக்காட்ட அவன் சரி என
தலையாட்டினான்.
“மார்க்ஸ்....”
“அம்மா”
“நேத்து உன் ஆளு வீட்டுக்கு வந்திருச்சு!”
“ஆமாம்மா நானே கேக்கலான்னு நினைச்சேன்... எப்படிம்மா நம்மாளு”
“அருமையான புள்ளடா... கொஞ்சம் கூட கர்வமே இல்லாம நல்லா
பேசிக்கிட்டு இருந்திச்சு”
மார்க்ஸ் சிரித்தான்.
“அந்த புள்ள த்ரிஷா மாதிரி இருக்கு... நீ விஜய்சேதுபதி மாதிரி இருக்க... செட்டாகுமா”
“அம்மா... '96' படத்துல ஹிட்டான ஜோடிம்மா அது”
“படம் ஹிட்டாச்சு... ஆனா ஜோடி ஒண்ணா சேரலையே!”
“என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க” என மார்க்ஸ் பொய்யாக அதிர்ச்சியாக,
அம்மா சிரித்தார்.
“ஆரம்பத்திலயே அமுக்கி போடுடா... விட்டுபுட்டு அப்புறமா வருத்தப்படாத...”
“இல்லம்மா ஒரு மாதிரி போய்கிட்டுதான் இருக்கு. வொர்க்கவுட்டாயிருன்னு
தான் நினைக்கிறேன்!''
“அப்புறம் உங்க கூட இன்னொரு புள்ள தங்கியிருக்கே”
“ஆமா... நந்திதா... அவளுக்கென்னம்மா”
“உன் ஆளு 12 மணிக்கு எல்லாம் கிளம்பிட்டா... இந்தப் புள்ளதான் காலையில
வரைக்கும் என்\கூட பேசிக்கிட்டு இருந்திச்சு”
“அவளும் சூப்பர் பொண்ணும்மா!”
“சூப்பரா... வேற ஆள்டா அவ...... அந்த நந்திதா பத்தி என்ன தெரியும் உனக்கு!”
“ஏம்மா கேக்குறீங்க…. கல்கத்தா பொண்ணு... நல்ல குணம்”
“வேற என்ன தெரியும்?”
“வேறென்ன?” மார்க்ஸ் புரியாமல் அம்மாவைப் பார்த்தான்.
“அந்த புள்ளைக்கு அம்மா அப்பா கிடையாதுடா... சொந்தம்னு சொல்லிக்க
அவளுக்கு யாரும் இல்லை!”
சட்டென தூக்கிவாரிப்போட்டது மார்க்ஸுக்கு!
“என்னம்மா சொல்றீங்க?”
“ஆமாடா... அவங்க மாமாதான் அவளை படிக்க வச்சது... மாறி மாறி ஹாஸ்டல்லயே இருந்து கஷ்டப்பட்டு படிச்சு இன்னைக்கு இந்த லெவல்ல இருக்கா அவ!”
எப்போதும் புன்னகையுடன் துறுதுறுவென இருக்கும் நந்திதாவுக்குள்
இப்படி ஒரு கதையா என அதிர்ந்துபோனான் மார்க்ஸ்.
“அநாதைம்மா நானுன்னு அவ சிரிச்சிக்கிட்டே சொன்னப்ப எனக்கு மனசெல்லாம்
பாரமாயிருச்சு”... சொல்லும்போதே அம்மாவின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
“இதைப்பத்தி என்கிட்ட சொன்னதே இல்லையேம்மா அவ!”
“எதுக்கு சொல்லணும்... எல்லாரும் அவளைப் பாவமா பார்க்குறதுக்கா... திவ்யாவுக்கு மட்டும் இது தெரியும் போல!”
சட்டென மனசு பாரமானதை போல உணர்ந்தான் மார்க்ஸ்.
“நம்ம தாண்டா இனி அதுக்கு சொந்த பந்தம் எல்லாம்... இன்னொருவாட்டி அநாதைன்னு சொன்னா அடி பின்னிடுவேன்னு சொல்லிட்டேன்”
மார்க்ஸ் தலையாட்டினான்.
“நல்லபடியா பார்த்துகணும்டா அவளை... எதுவா இருந்தாலும் அம்மா இருக்கேன்னு நான் அவகிட்ட சொல்லியிருக்கேன்!”
“பார்த்துக்கலாம்மா”
“இந்த விஷயமெல்லாம் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத... அவளா சொல்லும் போது பேசிக்கோ”
“சரிம்மா”
“நான் வரேன்டா... போயிட்டு போன் பண்றேன்” எனச் சொல்லியபடி அம்மா ஆட்டோவில் ஏறி கிளம்பினார் பேபியம்மா.
மார்க்ஸ் நகரக்கூட மனமில்லாமல் நின்று கொண்டிருந்தான். அவன் மனது முழுவதும் நந்திதா நிறைந்திருந்தாள். உடனடியாக அவளது தோளோடு சேர்த்தணைத்து ''நான் இருக்கேன் உனக்கு... கவலைப்படாதே'' என
சொல்ல வேண்டும் போலிருந்தது மார்க்ஸுக்கு!