தல்வார் டவர்ஸின் மொட்டை மாடியில் கையில் சிகரெட்டுடன் மார்க்ஸ் நின்று கொண்டிருந்தான். நிலவு வெளிச்சத்தில் மொட்டை மாடி நிறைந்திருந்தது. மார்க்ஸின் மனதில் நந்திதா பற்றி பேபியம்மா சொன்ன விஷயங்கள் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தன.
“மார்க்ஸ்” என்ற குரல் கேட்டு அவன் திரும்ப நந்திதா நின்று கொண்டிருந்தாள். அவன் அவளை எதிர்பார்க்கவில்லை.
“இன்னும் நீ கிளம்பல?” என்றான் மார்க்ஸ்.
“விளையாடுறயா? உன்கூடதான் நான் வரேன்னு சொன்னேன்”
“ஓ... ஆமால்ல.... மறந்தே போயிட்டேன்... ஒரு போன் பண்ணியிருக்கலாமே”
“எத்தனை தடவை போன் பண்றது உனக்கு” என நந்திதா கேட்க மார்க்ஸ் போனை எடுத்துப் பார்த்தான். ஆறு மிஸ்டு கால்கள் நந்திதாவிடமிருந்து என்றது மொபைல் ஸ்கிரீன்.
“சாரி சைலன்ட்ல இருந்துச்சு... கவனிக்கல”
மார்க்ஸின் குரலும் முகமும் ஏதோ சரியில்லை என்பதை நந்திதாவுக்கு உணர்த்த அவள் மெதுவாக அவன் அருகில் வந்தாள்.
“என்ன மார்க்ஸ் எதாவது பிரச்னையா?”
மார்க்ஸ் நந்திதாவை ஏறிட்டுப் பார்த்தான்.
“நீ இப்படி இருக்க மாட்டியே... என்னன்னு சொல்லு நான் சரி பண்றேன்” எனப் புன்னகைத்தாள் நந்திதா. அந்தப் புன்னகை மார்க்ஸை என்னவோ செய்தது. அவன் அவளை வாஞ்சையாகப் பார்த்தான்.
“அப்படி பார்த்தா என்ன அர்த்தம்?”
“என்னன்னு தெரியல இன்னைக்கு ஒரு மாதிரி டல்லா இருக்கு”
“நீ டூ மச்சா வேலை செய்யுற.... அதான் உன் பிரச்னை... பேசாம ரெண்டு நாள் லீவு போட்டுட்டு ஊருக்கு போயிட்டு வா!” என சிரித்தாள் நந்திதா.
“நீ ஊருக்கு போகலையா?” என மார்க்ஸ் கேட்க நந்திதா முகம் மாறியவள் சட்டென அதை மறைத்தபடி “போகணும்” என்றாள்.
அவள் மேலும் பேசட்டும் என்பதுபோல மார்க்ஸ் மெளனமாயிருந்தான்.
“அம்மாவும் அப்பாவும் வா, வான்னு போன் பண்ணிக்கிட்டேதான் இருக்காங்க... இவ்வளவு வேலையை விட்டுட்டு எப்படி போறது?” என எங்கோ பார்த்தபடி சொன்னாள் நந்திதா. பெரும்பாலும் பிரியமானவர்களின் கண்களைப் பார்த்து யாரும் பொய் சொல்வதில்லை.
“அப்பாகிட்ட உன்னைப் பத்தி எல்லாம் கூட சொல்லியிருக்கேன்... ப்ரொமோ பார்த்திட்டு நல்லா இருக்குன்னு சொன்னாரு... நீதான் அதுக்கு காரணம்னு சொன்னேன்.”
பொதுவாக பொய் மார்க்ஸை கோபப்படுத்தும். ஆனால், நந்திதாவின் பொய் அவனை வருத்தப்படுத்தியது. “எனக்கு கல்கத்தால யாரும் இல்லை” என அவள் உண்மையை சொல்லியிருந்தால் கூட சின்ன வருத்தத்துடன் போயிருக்கும் போல... ஆனால் ஒரு பொய்க்கு பின்னால் அவள் தன்னை மறைத்துக் கொள்ள முயன்றது மார்க்ஸை இன்னும் சங்கடப்படுத்தியது.
“அப்பாவும் உன்ன மாதிரி கம்யூனிஸ்ட்தான்..." இல்லாத அப்பாவுக்கு அவள் தனக்கு பிடித்த உருவம் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
“உன்ன மாதிரிதான் தப்புன்னா அடி தூள். அதே அன்பு காட்டுறதுன்னா அசர அடிச்சிருவாரு நான்னா அவருக்கு உசிரு!”
மார்க்ஸ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன பாக்குற?”
“உங்கப்பாவ நான் பார்க்கணும்”
“உன்னைக் கண்ணாடியில பார்த்துக்கோ... அதுதான் அவரு!”
மார்க்ஸ் புன்னகைத்தான். அவள் ஏதோ ஒரு வெற்றிடத்தை தன்னை கொண்டு நிரப்பப் பார்க்கிறாள் எனத் தோன்றியது.
“போலாமா” என்றாள் நந்திதா...
நந்திதாவும் மார்க்ஸும் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களுக்கு முன்னதாக திவ்யா வீட்டில் இருந்தாள்.
“ஹாய் திவ்யா... எப்ப ஆபிஸ்லேந்து வந்த?” என்றாள் நந்திதா.
“நான் வந்து ரொம்ப நேரமாச்சு... எங்க சுத்திட்டு வர்றீங்க ரெண்டு பேரும்” என்ற திவ்யாவின் குரலில் எரிச்சல் நிறைந்திருந்தது.
“ஆபிஸ்லேந்து நேரா இங்கதான் வர்றோம்”
“பொய் சொல்லாத... நான் ஏஞ்சலுக்கு போன் பண்ணேன். நீங்க அப்பவே கிளம்பிட்டதா சொன்னா!”
“சாரிடி வழியில பீச்சுல வண்டிய நிறுத்தி ஒரு குல்ஃபி சாப்பிட்டோம்” என்றாள் நந்திதா. அந்த உபரி தகவல் திவ்யாவை மேலும் வெறுப்பேற்றியது.
”சாப்பிடலாமா… ரொம்ப நேரமா பசியோட உனக்காக காத்துட்டு இருக்கேன்!”
“அஞ்சு நிமிஷம் குடு... ஒரு குளியலைப் போட்டுட்டு ஒடி வந்தடுறேன்” என திவ்யாவின் பதிலுக்குக் காத்திராமல் நந்திதா தனது அறைக்குள் ஓடினாள். திவ்யாவும் மார்க்ஸும் மட்டும் தனித்திருந்தனர்.
“என்ன சமையல்?" என்றான் மார்க்ஸ்.
“சப்பாத்தி... டால்... எக் கறி”
“சூப்பர்” என அவளுக்கு எதிரே டேபிளில் அமர்ந்தான் மார்க்ஸ்.
“என்ன சூப்பர்... உனக்கு சப்பாத்தி பிடிக்காதுன்னு எனக்கு தெரியும்."
“ஆமா... பொதுவா சப்பாத்தி பிடிக்காது... ஆனா நீ பண்ணா பிடிக்கும்.”
“சும்மா நடிக்காத...”
“நிஜமா திவ்யா... நீ என்ன பண்ணாலும் எனக்கு பிடிக்கும்.”
“இப்ப எதுக்கு இந்த லவ் டயலாக்?”
மார்க்ஸ் சிரித்தான்.
“உனக்கு என்ன பிடிக்கும், யாரைப் பிடிக்கும்னெல்லாம் எனக்குத் தெரியும்” என்ற திவ்யாவின் குரலில் வெறுப்பு, பொறாமை, ஆதங்கம் என எல்லாம் கலந்திருந்தது.
“எனக்கு உன்ன தான் ரொம்ப பிடிக்கும்!”
“பொய் கூலர்ஸ் வாங்கு குடுக்குறதுக்கும், தங்கத்துல சங்கிலி வாங்கி குடுக்குறதுக்கும் வித்தியாசம் தெரியாத ஆள் கிடையாது நான்” சட்டென அவளை அறியாமல் வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தன.
மார்க்ஸ் சிரித்தான்.
மாட்டிக் கொண்ட குழந்தை அவசரமாக சமாளிக்கும் தொனியில் “நான் அந்த அர்த்தத்துல சொல்லல” என்றாள் திவ்யா.
மார்க்ஸ் புன்னகையுடன் திவ்யாவை பார்த்தான்.
“எனக்கு எல்லாம் ஒண்ணும் சங்கிலி வாங்கி தர வேணாம். அவளை ஏமாத்திடாத அவ்வளவுதான்!”
“எனக்கு நந்திதாவை பிடிக்கும்… ஆனா நமக்குள்ள இருக்குறது வேற...”
“என்ன வேற?”
“அது நட்பு... இது....”
திவ்யா தலை அவன் அடுத்து சொல்லப்போகும் வார்த்தையை எதிர்பார்த்து அவளையறியாமல் முன்னோக்கி நகர...
“இது என்னன்னு உனக்கே தெரியும்!”
“எனக்கெல்லாம் தெரியாது... எதுவா இருந்தாலும் ஒப்பனா சொல்லு!”
“நீதான் கண்டுபிடி நமக்குள்ள என்னன்னு?” எனச் சொல்லிவிட்டு மார்க்ஸ் தனது அறைக்குள் நுழைந்தான். திவ்யா கோபத்தில் பல்லைக் கடித்தாள்.
காதலில் விழுவது ஓர் இனிய அனுபவம். காதலென்பது ஆணிடம் தோற்று போவது என நினைக்கிற பெண் கடைசி வரைக்கும்தான் காதலிக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறாள். அன்பை பலவீனம் என நினைத்துக்கொண்டு அதை மறைத்துக் கொள்ள போராடுகிறாள்.
காதலென்கிற வார்த்தையை கேட்டதும் பெண்களுக்கு வருகிற கோபம் எதிராளி மேல் அல்ல… அவர்கள் மீதானதுதான். காதலித்து விடவேக்கூடாது எனக் கவனமாக இருக்கிற பெண்களிடம்தான் காதல் கொட்டிக் கிடக்கிறது.
மார்க்ஸும் அவனது அணியினரும் கான்ஃபரன்ஸ் அறையில் அமர்ந்திருந்தனர். இரண்டாவது வார ரேட்டிங் வந்திருந்தது. அவர்கள் அனைவரும் கனத்த மெளனத்தில் இருந்தனர்.
“மாமா அவங்க ஷோஸோட ரேட்டிங் என்ன?”
“ஏழு ... அஞ்சு ... அஞ்சு... எல்லா ஷோவும் இந்த வாரம் ஒவ்வொரு பாயின்ட் ஏறியிருக்கு”
“நம்ம ரேட்டிங் என்ன?”
“ஃப்ரோசன் மங்கிப்பா... அதே 2.5, 2.3 ஸ்கூல் ஸ்டோரி கொஞ்சம் ரிவர்ஸ்ல போயி 1.3-ல நிக்குது”
“என்ன பண்ணலாம்?”
“ஏதாச்சும் அதிரடியா பண்ணலாம் தல” என்றான் பாண்டியன்.
மார்க்ஸ் நிமிர்ந்து பாண்டியனைப் பார்த்தான்.
“தல அந்த பேய் கதை நம்ம காஞ்சனா மாதிரி பண்ணலான்னு காமெடியா ட்ரை பண்ணோம்ல... அதை கொஞ்சம் சீரியசாக்கலாமா?”
“எப்படின்னு சொல்லு”
“ரைட்டர் சொல்லுங்க” என்றான் பாண்டியன்.
பேப்பரை இரண்டாக மடித்து கேஸ்கட்டு போல கையில் வைத்திருந்த ரைட்டர் எழுந்தார்.
“செத்துப் போயி பேயா சுத்திகிட்டு இருக்கிற வினோதினிக்கு ஒரு குழந்தை சார்."
“யோவ் என்னய்யா பேய்க்கு பிரசவம் பாக்குற” என்றார் நெல்லையப்பன்..
அறையில் சிரிப்பொலி.
“அவ சாகுறப்ப குழந்தை இல்லையே சார்” என்றான் மார்க்ஸ்.
“நாம அவ செத்தான்னுதான சொன்னோம் பாடிய காட்டலையே”
“ஆனாலும் எப்படி குழந்தை பொறக்கும்?”
“அவ ஆத்துல விழுந்ததா காட்டியிருக்கோம்... காவிரி தண்ணியில அடிச்சிட்டு போனவ கர்நாடகாவுல கரை ஒதுங்குறா”
“அது எப்படிங்க முடியும். கர்நாடகாவுல விழுந்தா இங்க வரலாம். இங்க இருந்து ரிவர்ஸ்ல எப்படிப் போறது?” என்றான் மார்க்ஸ்.
“பாடி எதிர் நீச்சல் போட்டு போயிருக்குப்பா” என்றார் நெல்லையப்பன்.
“அதெல்லாம் ஆடியன்ஸ் கேட்க மாட்டாங்க சார்” என்றார் ரைட்டர்.
“ஆனா சேனல்ல கேட்போம்...”
ரைட்டர் மேற்கொண்டு என்ன பேசுவது எனத் தெரியாமல் விழிக்க மார்க்ஸ் குறுக்கே புகுந்து, “சரி உங்க ஐடியா என்னன்னு சொல்லுங்க” என்றான்.
“அந்த பொண்ணு சாகல... மெமரி போயிடுது... அவளுக்கு அழகான குழந்தை பொறக்குது. திரும்பவும் வில்லன் கோஷ்டி போய் அவளை கொன்னுடுறாங்க… குழந்தை மிஸ்ஸிங்...”
மார்க்ஸ் சிரிப்பை அடக்கியபடி தலையாட்டினான்.
“அந்தக் குழந்தை இந்த வீட்டுக்கே வந்து சேர்ந்திடுது. ஆனா அப்பாவுக்கு இதுதான் அவரோட குழந்தைன்னு தெரியாது!”
“ஏம்பா ஸ்கூலுக்கு போன புள்ளையே திரும்ப ஒழுங்கா வீடு வந்து சேர மாட்டேங்குது. அது எப்படி காணாம போன குழந்தைங்க மட்டும் கரெக்டா அதே வீட்டுக்குத்தான் வந்து சேருதுன்னு தெரியலயே” என்றார் நெல்லையப்பன்.
மீண்டும் அனைவரும் சிரித்தனர்.
“இந்த பேய் அந்த வீட்டுக்குள்ள இருக்கிற ஒரு நாய்க்குள்ள புகுந்துடுது...”
“நாய் கண்ணுக்கு பேய் தெரியும்ப்பாங்க இங்க பேயே நாயாயிடுது” என்றார் நெல்லையப்பன்.
“நாயெல்லாம் காட்ட முடியாது. அனிமல் வெல்ஃபர்ல ஒத்துக்க மாட்டாங்க...”
“பேய் ஒரு சின்ன குழந்தையா உருவம் எடுத்து வீட்டுக்குள்ள வருதுன்னு வச்சுக்கலாம் சார். அது இந்தக் குழந்தைக்கு சப்போர்ட்டா இருக்கு”
மார்க்ஸ் அவர்களைப் பார்த்தபடி இருந்தான்.
“என்ன தல” என்றான் பாண்டியன்.
“ஏண்டா... என்னடா இது உலக குதாம்ஸா இருக்கு”
“இல்ல தல... ஃபேன்டஸியில ரொம்ப லாஜிக் பார்க்க வேண்டாம்.”
“ஆமா சார்... டிஆர்பி கண்டிப்பா எகிறும் சார்” என்றார் ரைட்டர்.
இந்த மாதிரி ஷோக்களுக்குதான் டிஆர்பி வருகிறது. இதைத்தான் மக்கள் பார்க்கிறார்கள். அதனால் இப்படித்தான் பண்ண வேண்டும் என்பது இவர்களின் வாதம்... திரைப்படங்களைப்போல சீரியல்களில் ஏன் யாரும் புதிய முயற்சிகளை செய்வதில்லை என்பது புரியாத புதிர்தான். தரமான இலக்கியங்களாலும் சினிமாக்களாலும் நிரம்பிக் கிடக்கும் கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கூட சீரியல்கள் இதே ரகத்தில்தான் இருக்கின்றன.
“தல...” என பாண்டியன் அழைக்க நினைவுகளிலிருந்து மீண்டான் மார்க்ஸ்.
“ரொம்ப மூட நம்பிக்கையை வளர்க்குற மாதிரியான காட்சிகளை அவாய்ட் பண்ணுங்க… காமெடியை குறைச்சிட்டு எமோஷனை ஜாஸ்தி பண்றது ஓகேதான். பேயை பாட்டில்ல பிடிக்கிறது, பாக்கெட்டுல போடுறது மாதிரி விஷயங்கள் வேண்டாம். எனக்கு பெருசா இதுல உடன்பாடில்ல. பார்த்து பண்ணுங்க” என்றான் மார்க்ஸ்.
ரைட்டர் எழுந்து வணக்கம் வைத்துவிட்டு நகர்ந்தார்.
“புரியுது தல... நம்ம இந்த பேய் கதையே பண்ணாம இருந்திருக்கலாம்” என சமாதானப்படுத்தும் சாக்கில் சொன்னான் பாண்டியன்.
“மக்களுக்கு பிடிக்காத படம் பண்ணலாம். தப்பில்ல… ஆனா ஒரு போதும் நமக்கு பிடிக்காத ஒரு படத்தைப்பண்ண கூடாது… இது நம்ம கமல்ஹாசன் சொன்னது. சரி விடு பார்த்துக்கலாம் நெக்ஸ்ட்...”
கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் நந்திதா...
“நந்திதா கதையை டிஸ்கஸ் பண்ணப்போறோம் கரெக்டா நந்திதாவே வர்றாப்பிடி” என்றார் நெல்லையப்பன்.

“என் கதையா?” என சிரித்தபடி சேரை இழுத்து மார்க்ஸின் அருகில் அமர்ந்தாள்.
“ஆமா நந்திதா... கலர் கம்மியான பொண்ணு... ஆனா கான்ஃபிடன்ஸான பொண்ணு இந்த கான்செப்ட் எடுபட மாட்டேங்குது... நீங்களே ஒரு ஐடியா சொல்லுங்க” என்றான் பாண்டியன்.
“ஹீரோயின் சிரிச்சாலே ஜனங்களுக்குப் பிடிக்காது... அவ அழணும்… அவ கூட சேர்ந்து இவனுங்களும் அழணும்... இல்லைன்னா பார்க்க மாட்டானுங்க” என்றார் நெல்லையப்பன்.
“இந்த கதை கண்டிப்பா வொர்க்காவும் ஆனா லேட்டாகும்” என்றாள் நந்திதா.
அனைவரும் அவளைத் திரும்பி பார்த்தனர்.
மார்க்ஸ் புன்னகையுடன் அவளைப் பார்த்தவன். “எதனால அப்படி சொல்ற?”
“நிறம் கம்மியா இருக்கிற பொண்ணுங்களே கூட நம்ம ஊர்ல அதை ஒரு குறையா தான் நினைச்சுக்கிறாங்க... எப்படியாவது சிகப்பாயிட முடியாதான்னு கிரீம் வாங்கி பூசிக்கிறாங்க.. அவங்களுக்கு அழகுக்கும் கலருக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லப்போறோம். அதை அவங்க நம்புறதுக்கு கொஞ்சம் டைமாகும்” என்றாள் நந்திதா...
அனைவரும் அவளை ஆச்சரியமாகப் பார்த்தனர்.
“நம்ம ஊர் அழகே இந்த நிறம்தான். நம்ம பொண்ணுங்க எல்லாம் ஹீரோயினுக்கு பின்னால வந்து நின்னு சப்போர்ட் பண்றதுக்கு கொஞ்சம் டைகும். நம்மதான் இதுன்னு ஒவ்வொரு பொண்ணும் சீக்கிரமே நினைக்க ஆரம்பிப்பா... அவளோட போராட்டம் நம்மளோட போராட்டம்னு அவங்க எப்ப நினைக்கிறாங்களோ அப்ப டிஆர்பி நிச்சயமா வரும்” என்றாள் நந்திதா.
“பாண்டியா நம்ம ரிசர்ச் டீம்ல சொல்லி இந்த பொண்ணுங்க பேஸ் பண்ற பிரச்னைகள் என்னன்னு ரிசர்ச் பண்ணி பாயினட்ஸ் குடுக்க சொல்லு... அதை அப்படியே கதையில இருக்கிற நம்ம ஹீரோயினுக்கு வைங்க” என்றான் மார்க்ஸ்.
“சூப்பர் தல” என்றான் பாண்டியன்.
“அடுத்து” என்றான் மார்க்ஸ்....
“நம்ம ஸ்கூல் கதை...” என இழுத்தார் நெல்லையப்பன். அது மார்க்ஸின் இதயத்திற்கு நெருக்கமான சீரியல் என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால் கருத்து சொல்ல அனைவருமே தயங்கினார்கள் என்பதுதான் உண்மை.
“அதுல என்ன பண்ணலாம்?” என்றான் மார்க்ஸ்.
“யார் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். ஆனாலும் பரவாயில்ல சொல்லுங்க அதானப்பா” என்றார் நெல்லையப்பன்.
மார்க்ஸ் சிரித்தான்.
“தல அதுல கொஞ்சம் ஃபேமிலி மிக்ஸ் பண்ணலாமா” என்றான் பாண்டியன்.
“அதுக்கு ஃபேமிலி ஸ்டோரியே பண்ணிடலாமே”
“டீச்சர் கதைய சொன்னா!”
“இது ஸ்டூடன்ட்ஸ் கதைன்னே... அதுல டீச்சர் வரலாம். டீச்சர் கதையில ஸ்டூடன்ட் வர முடியாது” என்றான் மார்க்ஸ்.
“இதுக்கு நீ தான்பா ஒரு வழி சொல்லணும்”
“வெயிட் பண்ணலாம் நிச்சயமா வொர்க்காகும்” என உறுதியாகச் சொன்னான் மார்க்ஸ்.
அனைவரும் மெளனமாயிருந்தனர்.
“நம்பி ஒரு புது விஷயத்தைப் பண்ணியிருக்கோம். அவசரப்பட்டு அதைக் கலைச்சு போடாம தொடர்ந்து பண்ணுவோம். புது கான்செப்ட் ஜெயிக்கிறதுக்கு கொஞ்சம் டைம் குடுத்து பார்ப்போம்” என மார்க்ஸ் சொல்லி முடிக்க அவனது போனடித்தது. போனை எடுத்து பார்த்த மார்க்ஸ் முகம் மாறினான்.
“சார்... சொல்லுங்க சார்”
“மார்க்ஸ் ஒரு சின்ன விஷயம்” என்றார் மேனன்.
“யெஸ் சார்”
“சேக்ரெட் ஹார்ட்ஸ் ஸ்கூல்ல இருந்து போன் பண்ணாங்க”
“யெஸ் சார்”
“நம்ம ஸ்கூல் ஸ்டோரி மேல அவங்க பயங்கர கோபத்துல இருக்காங்க... திட்டித் தள்ளிட்டாங்க...”
மார்க்ஸ் முகம் மாறினான்.
“நேர்ல வந்து பார்க்குறேன்னு சொல்லியிருக்கேன். போயிட்டு வந்துடலாமா?”
“யெஸ் சார்... யெஸ் சார்” என்றான் மார்க்ஸ்.
“நான் கீழ வெயிட் பண்றேன் வாங்க” என போனைத் துண்டித்தார் மேனன்.
சேக்ரட் ஹார்ட்ஸ் பள்ளி. தலைமையாசிரியை அறையில் மேனனும் மார்க்ஸும் அமர்ந்திருந்தனர். சின்ன சத்தத்துடன் ஃபேன் சுற்றிக் கொண்டிருந்தது.
எதிரில் குழந்தை ஏசு படம் ஒன்று பெரியதாக மாட்டப்பட்டிருந்தது. அதன் கீழே செவன்ட்டி ஃபைவ் இயர்ஸ் என்ற எழுத்துகள் பளிச்சிட்டன. அவர்கள் தலைமையாசிரியைக்காக காத்திருந்தார்கள்.
“இது ரொம்ப பெரிய ஸ்கூலா?” எனக் கேட்டார் மேனன்.
“ஆமா சார் சென்னையோட டாப் 5 ஸ்கூல்ஸ்ல ஒண்ணு சார்”
“ஓ” என்றார் மேனன்.
“நீங்க வரணுன்னு அவசியம் இல்லையே சார். நானே சிஸ்டரை மீட் பண்ணியிருப்பேன்.”
“ஏசி ரூமுக்குள்ளயே மாட்டிக்கிட்டா உலகத்தில என்ன நடக்குதுன்னே தெரியாம போயிடும். இப்படி எல்லாம் சான்ஸ் கிடைக்குறப்ப வெளிய வந்துடணும்” எனப் புன்னகைத்தார் மேனன்.
“நம்ம சாதாரணமான ஆளுங்களா இருக்கும்போது அனுபவங்களைச் சம்பாதிக்கிறோம். ஒரு வயசுக்கு அப்புறம் அந்த அனுபவங்களைத்தான் நாம பணமா மாத்துறோம். ஆனா தொடர்ந்து அனுபவங்களை சம்பாதிக்கனும்கிறதை மறந்துடுறோம். கொஞ்ச நாள்ல புதிய அனுபவங்கள் இல்லாம நாம அவுட் டேட் ஆகிடுவோம். தொடர்ந்து நம்மளை புதுப்பிச்சுக்கிட்டே இருக்க வேண்டியது ரொம்ப அவசியம்” என்றார் மேனன்.
மார்க்ஸூக்கு அவர் சொன்னது சரி எனப்பட்டது. தலைமையாசிரியை அறைக்குள் நுழைந்தார்.
“குட் மார்னிங் சிஸ்டர்” என்றான் மார்க்ஸ்.
“குட் மார்னிங்” என்ற தலைமையாசிரியையின் முகம் கடுமையாக இருந்தது. அவரது வயது ஐம்பதுகளின் இறுதியில் இருக்கும். சலவை செய்யப்பட்ட வெள்ளை அங்கியும் கழுத்தில் வெள்ளியிலான சிலுவையுடன் கூடிய செயினும் அணிந்திருந்தார்.
“நீங்க யாரு?”
“என் பேரு மார்க்ஸ். நான் அந்த சீரியலோட இன்சார்ஜ் சிஸ்டர். இது மிஸ்டர் மேனன்… ஆரஞ்ச் டிவியோட பிஸினஸ் ஹெட்!”
“ம்” என யோசனையாக தலையாட்டிய தலைமையாசிரியை கண்டிப்பான குரலில் பேசத் துவங்கினார்.
“நான் டிவி எல்லாம் பார்க்க மாட்டேன். எங்க ஸ்கூல் டீச்சர் ஒருத்தங்கதான் சொன்னாங்க... இப்படி ஸ்கூல் பசங்களைப் பத்தி ஒரு சீரியல் வருது, ரொம்ப தப்பா இருக்குன்னு... அதனாலதான் பார்த்தேன். நாலு சாப்டர் பார்த்தேன். ரொம்ப ரொம்ப மோசமா இருந்துச்சு!”
“இல்ல சிஸ்டர்... அது பசங்களோட பாயின்ட் ஆஃப் வியூல இருக்கு”
“நோ...நோ...நோ... அவங்க ஆடுறதும் பாடுறதும்... டீச்சர்ஸை எதிர்த்துப் பேசுறதும் டீச்சர்ஸ் அவங்களோட சேர்ந்துகிட்டு கூத்தடிக்கிறதும் வெரி பேட்... வெரி பேட்...”
மேனன் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

“இன்டிசிப்ளினோட உச்சக்கட்டமா இருக்கு... நாளைக்கு ஸ்கூல் அசெம்பிளியில இந்த சீரியல ஸ்டூடன்ட்ஸ் யாரும் பார்க்கககூடாதுன்னு அனவுன்ஸ் பண்ணப்போறோம்”
“சாரி சிஸ்டர் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க... நிறைய நல்ல கருத்துக்கள் நம்ம சீரியல்ல இருக்கு”
“நோ...நோ...நோ... காரணமே சொல்ல வேண்டாம். எங்களோட டை அப்புல மொத்தம் 250 ஸ்கூல்ஸ் இருக்கு. எல்லாருக்கும் சர்குலர் அனுப்பியாச்சு. நாளைக்கு எல்லா ஸ்கூல் அசெம்ளிலயும் இதைப் பார்க்க கூடாதுன்னு சொல்லபபோறோம். உங்க சீரியலை ஒருத்தரும் பார்க்க மாட்டாங்க” எனக் கடுமையாக சொன்னார் சிஸ்டர்.
“சிஸ்டர்” என மார்க்ஸ் ஏதோ சொல்ல வர…
“நீங்க கிளம்பலாம்… இதுல பேசுறதுக்கு ஒண்ணும் இல்ல... அதுல நல்ல சேஞ்சஸ பண்ணிட்டு எனக்கு காட்டுங்க... அது கரெக்டா இருந்தா அப்புறமா பார்க்கலாம்...”
“தேங்ஸ் சிஸ்டர்... நாங்க சேஞ்சஸ் பண்ணிட்டு உங்களை வந்து சந்திக்கிறோம்” என மேனன் எழுந்து வெளியே வர மார்க்ஸ் அவசரமாக “தேங்ஸ் சிஸ்டர்” என்றவன் அவர் பின்னால் ஓடி வந்தான்.
“சார்... சாரி சார்...” என்றான் மார்க்ஸ்.
“எதுக்கு மார்க்ஸ்?”
“இல்ல சார் 250 ஸ்கூல்… ஒரு ஸ்கூல்ல இரண்டாயிரம் பசங்க மொத்தம் 5 லட்சம் பேருக்கு இந்த சீரியல் பார்க்கககூடாதுன்ற மெசேஜ் போகப்போகுது சார்”
“ஆமா... அவங்க அசெம்பிளில சொன்னதுக்கு அப்புறம்தான் அந்த 5 லட்சம் பேருக்கும் இப்படி ஒரு சீரியல் வந்துகிட்டு இருக்குன்னு தெரியப்போகுது. இவங்க இப்ப பார்க்க கூடாதுன்னு சொன்னதுக்கு அப்புறம்தான் அவங்க முதல் தடவையா அந்த சீரியலை நாளைக்கு பார்க்கப்போறாங்க...”
மார்க்ஸ் ஆச்சர்யமானான்.
“பார்க்காதன்னு சொன்னா பாரக்குற வயசு அது... 5 லட்சம் ஸ்டூடண்ட்ஸ். ஒரு இருபத்தஞ்சாயிரம் டீச்சர்ஸ். ஒரு வீட்டுக்கு 4 பேர் போட்டா கூட மொத்தம் 21 லட்சம் பேர் உன் சீரியல நாளைக்குப் பார்ப்பாங்க... அடுத்த வார ரேட்டிங் கண்டிப்பா வேற லெவல்ல வரப்போகுது என்ன நம்பு மார்க்ஸ்” என்றார் மேனன்.
மார்க்ஸுக்கு அவரது லாஜிக் புரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர். அந்த கணத்திலிருந்தே மார்க்ஸ் அடுத்த வார ரேட்டிங்கிற்காகக் காத்திருக்கத் தொடங்கினான்.