Published:Updated:

இடியட் பாக்ஸ் - 38: நடிகை மேகலாவின் காதலனால் ஷூட்டிங்கில் ஏற்பட்ட பிரச்னை… மார்க்ஸ் என்ன செய்தான்?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 38: நடிகை மேகலாவின் காதலனால் ஷூட்டிங்கில் ஏற்பட்ட பிரச்னை… மார்க்ஸ் என்ன செய்தான்?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

மார்க்ஸ் சின்ன தயக்கத்துடன் நந்திதாவின் முன்னே நின்று கொண்டிருந்தான். திவ்யா எதும் பேசாமல் தனது அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டாள்.

“வாழ்த்து சொன்னது நான்... நீ தேங்ஸ் சொல்றது அவளுக்கா?” என்ற நந்திதாவின் வார்த்தைகளில் வருத்தமும் கிண்டலும் கலந்திருந்தன.

“இல்ல நந்து... திவ்யாவோட ஷோ ரேட்டிங் வந்தப்ப நான் கிஃப்ட் கொடுத்தேன்ல!”

“அதனால உன் ஷோவுக்கு ரேட்டிங் வந்ததும் அவதான் உனக்கு கேக் பொக்கே எல்லாம் கொடுத்திருக்கான்னு நீயா நினைச்சுக்கிட்ட?”

ஆமென மார்க்ஸ் தலையாட்டினான்.

“கேக் கொடுத்த என்னை மட்டும் நீ டென்ஷன் பண்ணல. கொடுக்காத கேக்குக்கு தேங்ஸ் சொல்லி திவ்யாவையும் நீ இம்ப்ரஸ் பண்ணிட்ட!”

“கொஞ்சம் சொதப்பிட்டேன்ல!”

“ஏம்பா அதான் கார்டுல கொட்டை எழுத்துல என் பேரை எழுதியிருந்தேனே!”

“அது கார்டா… நான் கவனிக்கல”

“ஓ... பொக்கே பார்த்ததுமே அதை திவ்யாதான் கொடுத்திருப்பான்னு முடிவு பண்ணி ஓடி போய் கட்டிபிடிச்சிட்ட!”

மார்க்ஸ் தர்மசங்கடமாகப் புன்னகைத்தான். நந்திதா அவனையே உற்றுப் பார்த்தாள்.

“என்ன பார்க்குற?”

“உண்மையை சொல்லு… நீ இன்னும் திவ்யாவை லவ் பண்றதான?!”

ஆமென மார்க்ஸ் தலையாட்டினான்.

நந்திதா சிரித்தாள்.

“நந்து நீ...” என மார்க்ஸ் இழுக்க...

“நான் உன்ன லவ் பண்றேன்!”

“அது எப்படி முடியும்?”

“உன்ன காதலிக்காத திவ்யாவை நீ காதலிக்கிறப்ப... என்ன காதலிக்காத உன்ன நான் காதலிக்க கூடாதா?”

மார்க்ஸ் என்ன பேசுவது எனத் தெரியாமல் புன்னகைத்தான்.

“மிஸ்டர் மார்க்ஸ்... காதல்ன்னா என்ன?” என்றாள் நந்து.

“நீயே பெட்டரா ஏதாவது யோசிச்சு வச்சிருப்ப... சொல்லு கேட்டுக்குறேன்”

“என்னைப் பொறுத்த வரைக்கும் லவ் இஸ் த லைஃப் லாங் ஃப்ரெண்ட்ஷிப்!”

தன்னையறியாமல் “வாவ்” என்றான் மார்க்ஸ்.

“இரண்டு பேர் பழகணும்... ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கணும்… விட்டுக் கொடுக்கணும். அன்கண்டிஷனலா அன்பு காட்டணும்… அவங்க கூட இருக்குறப்ப சேஃபா, சந்தோஷமா நம்மை உணரணும். இவங்க இல்லாம வாழவே முடியாதுன்னு நமக்கு ஒரு கட்டத்துல தோணும் பாரு... அதுக்கு பேர்தான் காதல்!”

மார்க்ஸ் அவளைப் பார்த்தபடி இருந்தான்.

“காதல்ன்றது சினிமா மாதிரி ஒரு செகண்ட்ல வர்ற விஷயம் கிடையாது... அது ஒரு ப்ராஸஸ்... ஒத்துக்கிறயா?

“நீ இப்ப என்ன சொல்ல வர்ற?”

“அப்படி ஒரு ப்ராஸஸ்ல நான் இருக்கேன்னு சொல்றேன்!”

“நந்து எனக்கு திவ்யாவ பிடிச்சிருக்கு... ஏன்னு எல்லாம் காரணம் கேட்காத ஆனா பிடிச்சிருக்கு. அவ வேணாம்னு சொன்னாலும், விலகிப் போனாலும் எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு!” என்றான் மார்க்ஸ்.

“பிடிச்சிருக்குன்னு பொதுவா சொல்லாத... நீ அவளை லவ் பண்ற அப்படித்தானே?”

“ஆமா நந்து...”

“நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்கமாட்டியே?”

“இல்ல... சொல்லு!”

“திவ்யா மேல வந்த அதே ஃபீலிங் உனக்கு ஏஞ்சல் மேலயும் வந்திச்சுதான?”

மார்க்ஸுக்கு சட்டென தூக்கி வாரிப் போட்டது...

“இது வேற அது வேறன்னு சமாளிக்காம உண்மைய சொல்லு... ஏஞ்சலை நீ லவ் பண்ணப்பவும் இதே மாதிரி ஃபீல் பண்ணியா இல்லையா?"

ஆமென மார்க்ஸ் தலையாட்டினான்.

“காதல் இரண்டு மூணு தடவை வரும்... இரண்டு மூணு பேர் கிட்டயும் வரும்… அது ஒரு தேடல்... சரியான துணை கிடைக்கிற வரைக்கும் அந்தத் தேடல் தொடர்ந்துகிட்டேதான் இருக்கும். நீயும் திவ்யாவும் ஒண்ணு சேர்ந்தா எனக்கு சந்தோஷம்தான். அப்படி ஒரு வேளை நீங்க சேரலைன்னா நாம ஏன் சேரக்கூடாது!”

“நந்து” என அவள் கரத்தை பிடித்த மார்க்ஸ் நெகிழ்ச்சியாக “வேற யாரோ ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு சொல்றவனைத் தூக்கி போட்டுட்டு போகாம நீ ஏன் எனக்காக காத்திருக்கணும்!”

“என்ன பண்றது எனக்கு பிடிச்சிருக்கே” என சிரித்தாள் நந்திதா....

மார்க்ஸ் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் அவளைப் பார்த்தான்.

“இங்க பார் மார்க்ஸ்... நீ என்னை ஏமாத்தல... தெளிவா திவ்யாவை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்ட... எந்தச் சூழ்நிலைலயும் உன்னை நான் தப்பு சொல்ல மாட்டேன். நமக்கு நடுவில ஒரு அழகான ஃபிரெண்ட்ஷிப் இருக்கு... அது காதலா மாறுனா நல்லது. இல்ல கடைசிவரைக்கும் அது ஃபிரண்ட்ஷிப்பாவே இருந்திட்டாலும் ரொம்ப நல்லது... போதுமா?” என எளிதாக சொன்னாள் நந்திதா.

மார்க்ஸ் மெளனமாகயிருந்தான். அது நந்திதா சொல்வது போல அவ்வளவு எளிதல்ல என்பது அவனுக்குப் புரிந்தது. நல்ல நட்பு காதலாக மாறும் என்பது உண்மைதான். ஆனால் ஒருபோதும் காதல் மீண்டும் நல்ல நட்பாகத் தொடர வாய்ப்பில்லை. காதல் தோற்றுப்போகும் போது காதலிகள் மீண்டும் தோழிகளாவதில்லை. முன்னாள் காதலிகளாக மட்டுமே அவர்கள் தொடர முடியும். என்னதான் அவர்களை தோழிகள் என சொல்லிக் கொண்டாலும் அதை தாண்டிய ஏதோ ஒன்று அந்த உறவில் மறைந்து கிடக்கும். அதுதான் காதலின் வரமும் சாபமும்.

“ரொம்ப யோசிக்காத விடு பார்த்துக்கலாம்... குட்நைட்” என சொல்லிவிட்டு நந்திதா நகர்ந்து சென்றாள். மார்க்ஸ் மட்டும் பால்கனியில் தனித்திருந்தான்.

காலையில் மார்க்ஸ் அலுவலகம் செல்ல கிளம்பித் தயாராக தனது அறையை விட்டு வெளியே வந்தான்.

ஹாலில் இருந்த சோஃபாவில் கையில் லேப்டாப் பேக்குடன் திவ்யா அமர்ந்திருந்தாள்.

“குட்மார்னிங்” என்றான் மார்க்ஸ்.

“குட்மார்னிங்” என்ற திவ்யாவின் குரலில் வழக்கமான உற்சாகம் இல்லை.

இடியட் பாக்ஸ் - மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் - மார்க்ஸ், திவ்யா

“ஆபிஸ் கார் வரலையா”

“நான் இன்னைக்கு கார் சொல்லல” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் திரும்பி அவளைப் பார்த்தான்.

“நான் இன்னைக்கு உன்னோட பைக்ல ஆபிஸ் வரலாமா” எனக் கேட்டாள் திவ்யா.

மார்க்ஸ் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.

‘’ப்ரொமோ ஷூட் இருக்குன்னு நந்து காலையிலயே கிளம்பிட்டா!”

“அப்ப ஓகேதான்” என மார்க்ஸ் புன்னகைத்தான்.

“சாரி”

“எதுக்கு?”

“உன்ன நான் விஷ் பண்ணியிருக்கணும்… பண்ணல... கேக் பொக்கேன்னு இல்லைன்னாலும் ஒரு மெசேஜாவது அனுப்பியிருக்கலாம். எனக்குத் தோணல!”

“அது பரவாயில்ல விடு” என்றான் மார்க்ஸ்.

“உன்னோட ஷோக்கு ரேட்டிங் வந்ததுல நிஜமாவே எனக்கு சந்தோஷம்தான்!” என்ற திவ்யாவிடம்,

“வெளிய சொல்லலைன்னாலும் நீ சந்தோஷப்படுவேன்னுதான் எனக்கும் தோணுச்சு” என்றான் மார்க்ஸ்.

மேற்கொண்டு என்ன பேசுவது எனத் தெரியாமல் இருவரும் அமைதியாகயிருந்தார்கள். பேச எதுவும் இல்லாதபோது வரும் மெளனமல்ல அது. கொட்டி கிடக்கும் விஷயங்களில் எதைப்பேசுவது என தெரியாதபோது வருகிற மெளனமது.

……………………….

மேனன் தனது அறையில் அமர்ந்திருந்தார். அவரது அறைக்கதவை தட்டிவிட்டு பரபரப்பாக தாட்சா அவரது அறைக்குள் நுழைந்தாள்.

“உங்களுக்கு ஏதாவது போன் வந்துச்சா?” என்றாள்.

“யார் கிட்டயிருந்து” என மேனன் புரியாமல் கேட்டார்.

“என் சம்பந்தப்பட்ட ஆளுங்க யார் கிட்டயிருந்தாவது போன் வந்துச்சா?”

“இல்லையே”

“உங்க போன் குடுங்க” என அவரது பதிலுக்கு காத்திராமல் அவரது போனை எடுத்தாள் தாட்சா.

“இவ்வளவு பெரிய சேனல் நடத்துற ஆளு… ஒரு நல்ல போன் வாங்கக்கூடாதா?”

மேனன் புன்னகைத்தார்.

“பாஸ்கோட் என்ன?”

“ஜீரோ ஜீரோ ஜீரோ ஜீரோ...”

“அப்பா… ரொம்ப கஷ்டமான பாஸ்கோட்” எனச் சிரித்தாள் தாட்சா.

மேனனும் புன்னகைத்தார்.

தாட்சா அந்த போனில் படபடப்பாக ஏதோ டைப் செய்தவள் “இந்தாங்க” என போனை நீட்டினாள்.

மேனன் புன்னகையுடன் போனை வாங்கி வைத்துக் கொண்டார்.

“என்ன பண்ணேன்னு கேட்க மாட்டீங்களா?”

“என்ன?”

“ஒரு நம்பரை பிளாக் பண்ணிட்டேன்”

“யார் நம்பர்?” என ஆச்சர்யமாகக் கேட்டார் மேனன்.

“என் அம்மா நம்பர்” என்றாள் தாட்சா.

மேனனுக்கு சிரிப்பு வந்தது...

“என்ன சிரிக்கிறீங்க?”

“உங்க அம்மா நம்பரை ஏன் என் போன்ல பிளாக் பண்ணீங்க?!”

“நேத்துல இருந்து உங்க நம்பரைக்கேட்டு ஒரே டார்ச்சர்… உங்க கிட்ட பேசணுமாம்!”

“என்ன பேசணுமாம்?”

“அது” என ஏதோ சொல்ல வந்தவள் “சும்மா ஏதாவது பேசுவாங்க... அதான் நம்பரை பிளாக் பண்ணியாச்சே... இனி போன் வராது”

“போன் வராது... ஆனா ஆள் நேர்ல வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு!”

“வாட்!”

“அது உங்கம்மாவா பாருங்க!”

தாட்சா திரும்ப அவளது அம்மா கோமதி, அறையின் கண்ணாடி கதவுக்கு வெளியே புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்.

தூக்கிவாரிப்போட்டது தாட்சாவுக்கு!

மேனன் எழுந்து சென்று கதவைத் திறக்க, கோமதி அறைக்குள் நுழைந்தார்.

அப்படியே தாட்சாவுக்கு வயதான மேக்கப் போட்டது போல இருந்தது அவரது தோற்றம். ஒடிசலான தேகம், கண்ணாடி, நேர்த்தியான உடையணிந்திருந்தார்.

“நான் கோமதி... தாட்சாவோட அம்மா... ரிட்டயர்ட் ஹெட்மாஸ்டர். நான் உங்களை ஒண்ணும் தொந்தரவு பண்ணலையே” என்றார் கோமதி.

“நோ... நோ... மை ப்ளஷர்” என்றார் மேனன்.

“அம்மா... இங்க என்னம்மா பண்ற?”

“மிஸ்டர் மேனனைப் பார்க்க வந்தேன்” என்றபடி சோஃபாவில் அமர்ந்தார் கோமதி.

“அம்மா... முதல்ல கிளம்பு வா”

“டோன்ட் கிரியேட் எ சீன் தாட்சா. ஐ ஆம் நாட் ஹியர் டு சீ யூ. ஐ ஆம் கோயிங் டு ஹேவ் அ வேர்ட் வித் ஹிம்!” எனப் படபடவென கோமதி ஆங்கிலத்தில் பேச புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் மேனன்.

“மிஸ்டர் மேனன் நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்!”

“நோ வே” என ஒரு சேரை இழுத்து அமர்ந்தாள் தாட்சா.

“தாரளமா இரு... நான் ஒண்ணும் சீக்ரெட் பேசப் போறதில்லை”

அம்மாவுக்கும் மகளுக்குமான அந்தச் சண்டையை மேனன் ரசித்தபடியிருந்தார். தாட்சா சின்ன படபடப்புடன் அம்மாவை முறைத்தபடி இருந்தாள்.

“நீங்க சொல்லுங்கம்மா” என்றார் மேனன்.

“நாலு மாசமா இவ வீட்ல வாய திறந்தாலே உங்க பேர் தான்... You have done this, Done that-ன்னு ப்ரைஸிங் யூ ஆல்வேஸ்!”

“அம்மா...” என்று எச்சரிக்கும் தொனியில் சொன்னாள் தாட்சா.

“விடுங்க அவங்க பேசட்டும்... நீங்க சொல்லுங்கம்மா”

“அதனாலதான் இந்தப் பிரச்னையை உங்ககிட்ட கொண்டு வந்தேன்!”

“சொல்லுங்க!”

“இவளுக்கு என்ன குறைச்சல்?”

மேனன் திரும்பி தாட்சாவைப் பார்த்தார். அவள் காட்டன் புடவையில் தேவதையாய் அமர்ந்திருந்தாள்.

“அதான என்ன குறைச்சல்?”

“உண்மையை சொல்லுங்க... அவளைப் பார்த்தா யாராவது தேர்ட்டி நைன்னு சொல்லுவாங்களா?”

“அம்மா...” என வயசை சொன்ன கோபத்தில் தாட்சா கடுப்பானாள்.

“இல்லம்மா... இருபத்தியெட்டு இருபத்தி ஒன்பதுக்கு மேல சொல்ல முடியாது!”

“அவ அழகா இருக்காளா இல்லையா?!”

மேனன் மீண்டும் திரும்பி அவளைப் பார்த்தார்.

“என்ன ஒவ்வொரு கேள்விக்கும் திரும்பி திரும்பி என்னைப் பார்த்துக்கிட்டு!”

கோமதியும் மேனனும் சிரித்தனர்.

“ரொம்ப அழகா இருக்காங்க!”

“ஒரு கல்யாணம் அவ பண்ணிக்கணுமா வேண்டாமா?”

“அம்மா போதும்... நீ கிளம்பு” எனப் படபடத்தாள் தாட்சா.

“கண்டிப்பா பண்ணனும்” என்றார் மேனன்.

“சாதி, மதம், வேற ஸ்டேட்டா இருந்தா கூட எனக்கு சம்மதம்னு சொல்லிட்டேன்!”

தாட்சா தர்மசங்கடமாக உணர்ந்தாள்.

“டைவர்ஸி… விடோயர் கூட எனக்கு ஓகேதான். அவளோட ஃபீல்டுல இருக்கிற ஆளா இருந்தா இன்னும் பெட்டர்... அவளுக்கு பிடிச்சிருந்தா அது போதும்… ஆனா இப்படி தனியா இருக்கக்கூடாது!”

கோமதி சொல்ல வந்தது இருவருக்கும் புரிந்தது.

“மிஸ்டர் மேனன் நீங்கதான் இதுக்கு ஏதாவது பண்ணனும்!”

மேனன் திரும்பி தாட்சாவைப் பார்த்தார். தாட்சா அவரை ஏறிட்டு பார்க்க முடியாமல் தலைகுனிந்தபடி இருந்தாள்.

“நான் அவங்ககிட்ட பேசுறேம்மா” என்றார் மேனன்.

“தட்ஸ் ஆல்... ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடுறேன்” என கோமதி அவர்களுக்கு தனிமையை தந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

மேனனும் தாட்சாவும் தனித்திருந்தனர்.

“அம்மாவுக்கு நான் என்ன சொல்லட்டும்?” என்றார் மேனன்.

தாட்சா நிமிர்ந்து மேனனைப் பார்த்தாள்.

இருவரது முகத்திலும் புன்னகை!

“உலகத்துக்கே அட்வைஸ் பண்ற மேனனுக்கு நான் என்ன அட்வைஸ் பண்றது?”

“உங்க மனசுல யாராவது இருந்தா சொல்லுங்க... பேசி முடிச்சிடலாம்” என்றார் மேனன்.

“ஒருத்தர் இருக்காரு... ஆனா அவர் மனசுல நான் இருக்கேனான்னு எப்படி தெரிஞ்சுக்கிறது?”

“அவர்கிட்ட நேராவே கேட்டிடலாமே” எனப் புன்னகைத்தார் மேனன்.

தாட்சாவும் புன்னகையுடன் “மிஸ்டர் மேனன்...”

“எஸ் மிஸ் தாட்சா...”

“உங்களுக்கு இருக்கிற நக்கல் இருக்கே!”

இருவரும் சிரித்தனர். ரெஸ்ட் ரூம் சென்று விட்டு திரும்பி வந்த கோமதி அந்தத் தருணத்தை கலைக்க மனமில்லாமல் கண்ணாடிக் கதவுக்கு வெளியே நின்றபடி அவர்களை ரசித்தபடியிருந்தார்.

……………….

திவ்யா தனது அறையில் அமர்ந்திருந்தாள். பதற்றமாக ஏஞ்சல் அறைக்குள் நுழைந்தாள்.

“திவ்யா ஒரு சின்ன பிரச்னை!”

“என்னாச்சு?”

“நம்ம ஷூட்டிங்ல மேகலாவோட பாய் ஃப்ரெண்ட் பிரச்னை பண்றானாம். ப்ரடியூசர் நமக்கு போன் பண்றாரு”

“இதுல நாம என்ன பண்ண முடியும்?”

“அவரால சமாளிக்க முடியலைன்னு நம்ம ஹெல்ப் கேட்குறாரு!”

“சமாளிக்க முடியலைன்னா ஷூட்டிங்கை கேன்சல் பண்ண சொல்லுங்க… அப்புறம் பார்த்துக்கலாம்!”

“இல்ல திவ்யா... அது நாளை மறுநாள் டெலிகாஸ்ட் ஆக வேண்டியது. இன்னைக்கு ஷூட் பண்ணியே ஆகணும்!”

“இப்ப நம்ம என்ன பண்ணனும்?”

“சேனல் சைடுல இருந்து பேசுனா அவன் சமாதானமாவான்னு சொல்றாங்க… நான் வேணா போயிட்டு வந்துடுறேன்”

“இல்லல்ல நானும் வரேன்” என்றாள் திவ்யா.

“மார்க்ஸைக் கூப்பட்டுக்கலாமா?” எனத் தயக்கமாகக் கேட்டாள் ஏஞ்சல்.

ஆச்சர்யமாக அவளைப் பார்த்தாள் திவ்யா.

“இல்ல அந்த பொண்ணு மேகலா, மார்க்ஸ் சொன்னா கேட்கும். அதில்லாம இந்த மாதிரி பஞ்சாயத்து எல்லாம் அவனுக்கு பழக்கம்!”

திவ்யா யோசித்தவள் “எங்க ஷூட்டிங்?” எனக் கேட்டாள்.

“வளசரவாக்கம் கலெக்டர் ஹவுஸ்னா அவனுக்குத் தெரியும்.”

திவ்யா போனை எடுத்தவள், ”ஹலோ மார்க்ஸ்... எங்க இருக்க?”

மறுமுனையில் மார்க்ஸ் ஏதோ சொல்ல, ஏஞ்சல் திவ்யாவைப் பார்த்தபடி இருந்தாள்.

“ஷூட்டிங்ல ஒரு சின்ன பிரச்னை… நானும் ஏஞ்சலும் முன்னாடி போறோம் நீ கொஞ்சம் வர முடியுமா? வளசரவாக்கம் கலெக்டர் ஹவுஸ்... சரி...” என போனை வைத்தாள்.

“அவன் வெளிய எங்கேயோ இருக்கானாம்... அரைமணி நேரத்துல வந்துடுறேன்னு சொன்னான்... வாங்க நாம போலாம்” என்றாள் திவ்யா. இருவரும் நகர்ந்தார்கள்.

கலெக்டர் ஹவுஸுக்கு முன்னால் கார் வந்து நிற்க அதிலிருந்து திவ்யாவும் ஏஞ்சலும் இறங்கினார்கள். தயாரிப்பாளர் வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.

“என்ன பிரச்னை?” என்றாள் ஏஞ்சல்.

“என்னன்னு தெரியல... அவங்க சொந்த பிரச்னைகளை வீட்ல பேசிக்க வேண்டியதுதானே… அத விட்டுட்டு ஷூட்டிங் ஸ்பாட்ல வந்து சண்டை போட்டுகிட்டு இருக்கான். மூணு மணி நேரமா ஷூட்டிங் நிக்குது... ஆல் ஆர்ட்டிஸ்ட் காம்பினேஷன் வேற… ரெண்டு ரூபா அவுட்” என வாய் மூடாமல் புலம்பினார்.

அவர்கள் மூவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். ஷூட்டிங் லைட்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. இயக்குநர், கேமராமேன் என வேலை செய்பவர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள். உரக்க ஒருவன் கத்திக் கொண்டு இருக்கும் சத்தம் கேட்டது.

ஏஞ்சலையும் திவ்யாவையும் பார்த்த அனைவரும் முகம் மாறி வழிவிட அவர்கள் உள்ளே நுழைந்தனர். வீட்டின் நடுவில் நின்று கத்திக் கொண்டிருந்த அவன் அவர்கள் கண்ணில்பட்டான். சற்று உயரமாகவும் வழக்கத்துக்கு மாறான பருமனுடனும் இருந்த அவனது தோற்றம் பார்ப்பதற்கே அச்சமூட்டுவதாக இருந்தது. கையில், கழுத்தில் தங்கத்திலான பெரிய பெரிய பிரேஸ்லெட்டும் செயினும் அணிந்திருந்தான்.

“அவன்தான் பாக்யா... மேகலாவோட பாய் ஃபிரண்ட்” என கிசுகிசுத்தாள் ஏஞ்சல்.

“இவனைப் போய் எப்படி?”

“அதான் யாருக்கும் புரியல!”

“பாக்யா சார்... சேனல்ல வந்திருக்காங்க... நீங்க அவங்க கிட்ட பேசுங்க” என்றார் தயாரிப்பாளார்.

அவன் திரும்பி அவர்களைப் பார்த்தான்.

“என்ன சார்… என்ன பிரச்னை?” எனத் தயக்கமாக கேட்டாள் ஏஞ்சல்.

“வாங்க... நீங்கதான் காரணமா இதுக்கெல்லாம்?” என்றான் பாக்யா.

“என்னாச்சு?”

“இது என்ன சினிமாவா... சீரியல்தான... கிஸ்ஸிங் சீன் எல்லாம் வைக்கிறீங்க...”

இருவரும் என்ன பேசுவது எனத் தெரியாமல் பார்த்தனர்.

“அவளைக் கட்டிப்பிடிக்கிறதும், கையில தூக்குறதும்னு சினிமாவைவிட ஓவராப் போகுது... இவளும் இதுதான் சான்ஸ்னு அந்த ஹீரோ பயல உரசு உரசுன்னு உரசுறா” என அவன் குரலை உயர்த்தினான்.

“சார்... இது ஆக்டிங் சார். அதுகூடவா தெரியல உங்களுக்கு.. இது அவங்களோட வேலை. நடிகையைக் காதலிக்கிறீங்க… இதைப் புரிஞ்சுக்க முடியலைன்னா எப்படி?” எனச் சற்று கோபமாகக் கேட்டாள் திவ்யா.

“வேலையா… எது வேலை?! இந்த வேலைக்கு வேற பேர் இருக்கு” என அவன் காது கூசும் வார்த்தைகளை சொல்ல அந்த இடம் மொத்தமும் சட்டென அமைதியானது. அந்த அமைதியில் மார்க்ஸின் புல்லட் வந்து நிற்கும் சத்தம் திவ்யாவுக்குத் தெளிவாக கேட்டது.

மார்க்ஸ் வீட்டிற்குள் நுழைய அனைவரும் அவனுக்கு மரியாதை கலந்த வணக்கம் வைக்க தலையாட்டியபடி மார்க்ஸ் உள்ளே நுழைந்தான். அவன் பின்னால் பாண்டியனும் வந்தான்.

மார்க்ஸைப் பார்த்ததும் பாக்யாவின் முகம் மாறியது.

“வாப்பா... வா... உன்னதான் எதிர்பார்த்தேன்... அவளுக்கு ஒண்ணுன்னா அப்படியே துடிக்குமே உனக்கு!”

மார்க்ஸ் முகம் இறுகியது.

“எதுவா இருந்தாலும் வெளிய வா பேசிக்கலாம்… வா!” என்றான் மார்க்ஸ்.

“இந்தத் தனியா பேசுற கதையே வேணாம். அவ பண்ற அசிங்கத்தை சபையிலயே பேசி இன்னைக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்!”

“ஏய்... காதலிக்கிற பொண்ண முதல்ல அசிங்கமா பேசுறது நிறுத்து!”

“நீ யாருடா அத சொல்றதுக்கு... நான் கட்டிக்க போறவளை என்ன வேணா பேசுவேன்... ஏய்... மேகலா... வெளிய வாடி... வாடின்றேன்ல!”

அனைவரது பார்வையும் மாடிப் படிக்கட்டை நோக்கித் திரும்பின.

“உன் மாமா வந்திருக்காருடி பஞ்சாயத்து பண்ண... வா வந்து அவரு மடியில உட்கார்ந்துக்கோ.”

மார்க்ஸ் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றான். ஏதோ விபரீதமாக நடக்கப்போகிறது என அனைவருக்கும் புரிந்தது.

“வாடி” என மீண்டும் குரலை உயர்த்தினான் பாக்யா.

படிக்கட்டில் மேகலாவின் கால்கள் தெரிந்தன... படிக்கட்டில் மெதுவாக அவள் இறங்கி வந்தாள். அவளது முகம் புலப்பட அதை பார்த்த ஏஞ்சல், திவ்யா, மார்க்ஸ் மூவரும் அதிர்ந்தனர்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

அவளது முகத்தின் ஒரு பகுதி வீங்கிப் போயிருக்க கண்கள் அடிபட்டு சிகப்பாக கலங்கிப்போயிருந்தது...

மார்க்ஸைப் பார்த்ததும் உடைந்து போய் அழத்துவங்கினாள் மேகலா...

“வாடி...“ என நா கூசும் வார்த்தை ஒன்றை உதிர்த்தான் பாக்யா.

யாரும் எதிர்பாராமல் சட்டென மார்க்ஸ் திரும்பி முஷ்டியை மடக்கி பாக்யாவின் முகத்தில் பலங்கொண்டு குத்த அவன் தடுமாறி அருகிலிருந்த நாற்காலிகளைத் தள்ளிக் கொண்டு கீழே விழுந்தான். அவன் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.

அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த அவனது உதவியாளன் “ஏய்” என மார்க்ஸ் மேல் பாயப்போக அருகில் இருந்த லைட் ராடை எடுத்து மார்க்ஸ் அவன் விலாப்பக்கம் அடிக்க ‘’அம்மா’’ என்ற அலறலுடன் அவன்சரிந்து விழுந்தான்.

பாக்யா தட்டுத்தடுமாறி எழ முயல மார்க்ஸ் கையிலிருந்த இரும்பு ராடால் அவனை வெளுக்க ஏஞ்சலும் திவ்யாவும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள். அருகில் இருந்தவர்கள் மார்க்ஸை இழுத்துப் பிடிக்க மார்க்ஸ் காலால் பாக்யாவைத் தொடர்ந்து உதைத்தான். மரணபயம் பாக்யாவின் கண்ணில் தெரிந்தது.

“உன்னைக் கொன்றுவேன்டா ராஸ்கல்...” என மார்க்ஸ் திமிறினான்.

திவ்யா திரும்பி மேகலாவை பார்த்தாள். “வேணாம்... வேணாம்” என்ற வார்த்தைகளை அவளது இதழ்கள் உச்சரித்தாலும் கண்களில் மெல்லிய சந்தோஷம் தெரிவதை உணர்ந்தாள் திவ்யா!

- Stay Tuned...