Published:Updated:

இடியட் பாக்ஸ் - 39: ஆரஞ்ச் டிவி வேலையை ஏன் ராஜினாமா செய்தான் மார்க்ஸ்?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 39: ஆரஞ்ச் டிவி வேலையை ஏன் ராஜினாமா செய்தான் மார்க்ஸ்?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

மார்க்ஸ் வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தான். ஹாலில் ஒரு புறம் மேஜைகள் போடப்பட்டு அதன் பின்னால் காவலர்களும் எதிர்புறமிருந்த பென்ச்சில் மார்க்ஸும் அவனருகே வயதான பெரியவர் ஒருவரும் அமர்ந்திருந்தார்கள். கம்பி போட்ட அறை ஒன்று காலியாக இருந்தது. வாக்கி டாக்கியில் யாரோ யாருக்கோ கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்கள். கீழே தரையில் இருவர் சப்பணமிட்டு அமர்ந்திருந்தனர்.

மார்க்ஸின் போன் அடித்தது. எதிரில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்த ரைட்டர் நிமிர்ந்தார். மார்க்ஸ் தயக்கமாக அவரைப் பார்த்தான்.

“பரவாயில்ல எடுத்து பேசுங்க” என்றார் அவர்.

மார்க்ஸ் போனை எடுத்தான். மறுமுனையில் பாண்டியன்.

“தல...”

“என்னடா நடக்குது?”

“ஷூட்டிங் போகுது தல....”

“மேகலா எப்படியிருக்கா?”

“ஒகேதான் தலை... முகம் லைட்டா வீங்கிதான் இருக்கு… ஆனா கேமரால பெருசா தெரியல... ரொம்ப டைட் க்ளோஸ் வைக்க வேணாம்னு சொல்லியிருக்கு”

“அத கேட்கலடா... அவ ஓகேவான்னு கேட்டேன்... வலி இருந்தா டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போங்க!”

“இல்ல தல... ஃபீரியா இருக்குறப்ப கன்னத்தில ஐஸ் வைக்க சொல்லியிருக்கு... அவங்க ஒகேதான்”

“ம்... ஏஞ்சல் திவ்யா எல்லாம் எங்க இருக்காங்க?”

“இங்கதான் இருக்காங்க.... ஸ்டேஷனுக்குத்தான் வரணும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க”

“ஒண்ணும் தேவையில்ல... நான் பார்த்துகிறேன்!”

“தல.... நான் வேணா வரவா?”

“நீயும் வினோவும் ஸ்பாட்டை விட்டு நகரக்கூடாது... எவனாவது திரும்ப பிரச்னை பண்ண வந்தா சிக்கலாயிடும்” என சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் ஜீப் வந்து நின்றது... அதிலிருந்து இன்ஸ்பெக்டர் இறங்கி உள்ளே வந்தார்.

“இன்ஸ்பெக்டர் வந்துட்டாரு… நான் திரும்ப கூப்புடுறேன்!” என போனை கட் செய்தான் மார்க்ஸ்.

இன்ஸ்பெக்டர் உள்ளே வந்தபடி, “வில்சன்... அந்த ஷூட்டிங்ல சண்டை போட்ட ஆள் யாரு?” என கான்ஸ்டபிளிடம் கேட்க “நான்தான் சார்” என்றான் மார்க்ஸ்.

அவனை ஏற இறங்க பார்த்தவர், “உள்ள வாங்க” எனச் சொல்லி விட்டு அறைக்குள் நுழைய மார்க்ஸும் அவருக்குப் பின்னால் உள்ளே நுழைந்தான்.

இன்ஸ்பெக்டர் சீட்டில் அமர்ந்தவர் அவனுக்கு எதிரில் இருக்கும் சேரைக் காட்ட மார்க்ஸ் அமர்ந்தான். இன்ஸ்பெக்டருக்கு எப்படியும் வயது 40க்கு மேல் இருக்கும். ஒட்ட வெட்டிய முடியும் குட்டி தொப்பையுமாக சினிமாக்களில் வரும் வழக்கமான போலீஸ் போல இருந்தார்.

“பேரு என்ன?”

“மார்க்ஸ்”

“மார்க்ஸா?”

“முழுப்பேரு காரல் மார்க்ஸ் சார்...”

“அதான பார்த்தேன்.... பிரச்னை பேர்லயே இருக்கே... இந்த பேர வச்சிக்கிட்டு இது கூட பண்ணலன்னா எப்படி?”

மார்க்ஸ் அமைதியாக இருந்தான்.

“படிச்ச பையன் நீங்க... சேனல்ல பெரிய வேலையில இருக்கீங்க... இப்படி ரவுடியிஸம் பண்ணலாமா தம்பி?”

“தப்பு பண்ணது அவன்தான் சார். தட்டி கேட்டதுதான் நான்”

“புரியுது....ஆனா சட்டம் அப்படி பார்க்காதே... சட்டத்துக்கு தப்பு பண்ண ரகுவரனும் ஒண்ணுதான், தட்டி கேட்குற ரஜினிகாந்தும் ஒண்ணுதான்!”

மார்க்ஸ் மெளனமாக இருந்தான்.

“ஆமா… அவனுங்கள ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணது யாரு?”

“நான்தான் சார்”

“100-க்கு போன் பண்ணது?”

“நான்தான் சார்”

“அடிய போட்டு ஆஸ்பத்திரியில சேர்த்திட்டு அப்படியே ஸ்டேஷனுக்கும் வந்திட்டீங்க” என இன்ஸ்பெக்டர் சிரித்தார்.

மார்க்ஸ் மெதுவாக புன்னகைத்தான்.

“ம்... சொல்லுங்க என்ன பண்ணலாம் இப்ப?”

“நீங்க சொல்லுங்க சார்”

“அந்த அடிபட்ட நடிகைய கம்ப்ளெய்ன்ட் குடுக்கச் சொல்லுங்க... நீங்க தடுக்கத்தான் போனீங்கன்னு சொல்லிக்கலாம்.”

“வேணாம் சார்... உடனே பத்திரிகை, டிவின்னு நியூஸைப்போட்டு அந்த பொண்ண ரொம்ப டார்ச்சர் பண்ணிருவாங்க சார்.”

“வேற யாரோ பண்ற மாதிரி சொல்றீங்க... நீங்கதானய்யா டிவி?”

“அதனாலதான் வேணாம்னு சொல்றேன் சார்!”

“அப்ப என்னன்னு கம்ப்ளெய்ன்ட் எழுதுறது?”

“அடிதடி சண்டைன்னு...”

“அப்படின்னா உங்களையும்ல தூக்கி உள்ள போடணும்!”

“பரவாயில்ல சார்… ஆனா, அந்தப் பொண்ணு பேர் இதுல வர வேணாம் சார்…”

இன்ஸ்பெக்டர் அவனை உற்றுப்பார்த்தார். மார்க்ஸ் அவரையே பார்த்தபடி இருந்தான். கதவைத் திறந்து கொண்டு கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளே நுழைந்தார்.

“அய்யா.. அந்த பாக்யாவோட மாமா வந்திருக்காரு!”

“அந்தாள மட்டும் உள்ள வர சொல்லு” என்றவர் மார்க்ஸ் பக்கம் திரும்பி, “நீங்க அமைதியா இருங்க… நான் பேசிக்கிறேன்” என்றார்.

வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை உடல் முழுக்க நகைகள் என பாக்யாவின் மாமா உள்ளே நுழைந்தார். மெலிந்த, ஆனால் இறுகிப்போன தேகம்.

“உட்காரு திருமலை...”

அவன் மார்க்ஸை முறைத்துப் பார்த்தபடி அமர்ந்தான்.

“சொல்லுப்பா என்ன விஷயம்!”

“கம்ப்ளெய்ன்ட் குடுக்கணும் சார்!”

“ஏற்கெனவே குடுத்திட்டாங்கப்பா...”

மாமாவின் முகம் மாறியது.

“அடிச்சுபுட்டு கம்ப்ளெய்ன்ட் வேற குடுக்குறானா இவன்.. ஆஸ்பத்திரியில கிடக்குறது எங்க ஆளுங்க சார்!”

“நல்ல வேளை ஆஸ்பத்திரியில கிடக்குறானுங்க... இல்லன்னா ஜெயில்ல இருந்திருப்பானுங்க...”

“சார்” என்று மாமா ஏதோ பேச வர...

“இங்க பாரு உன்ன ஏற்கெனவே என்கவுன்ட்டர்ல போடச் சொல்லி ஆர்டர் வந்திருக்குன்னு பேசிக்கிறாங்க… இதை சாக்கா வெச்சிக்கிட்டு முடிச்சு விட்டுடப் போறாங்க பார்த்துக்கோ... தம்பி கிட்ட பேசி கம்ப்ளெய்ன்ட் வாபஸ் வாங்கச் சொல்றேன். இதை அப்படியே விட்டிரு... டிவிகாரங்க விஷயத்தைப் பெருசு பண்ணிட்டாங்கன்னா கொத்தா மாட்டிப்பீங்க... அப்புறம் உன் இஷ்டம்”

மாமாவின் முகத்தில் குழப்பம் தெரிந்தது.

“என்னப்பா என்ன சொல்ற?”

“மருமகன்...”

“அவனாலதான் உனக்கு ஆப்பு வரப்போதுன்னு சொல்றேன். மருமவன் மருமவன்னு உருகுற?”

மார்க்ஸ் அமைதியாக இருந்தான்.

“நீங்க சொல்றீங்களேன்னு இதோட விடுறேன். அவங்க குடுத்த கம்ப்ளெய்ன்ட்...” என மாமா இழுக்க...

“நான் பார்த்துக்கிறேன்… நீ கிளம்பு!” என இன்ஸ்பெக்டர் சொல்ல மாமா எழுந்து நகர்ந்தான்.

“திருமலை இதோட விஷயத்தை விட்டுடணும்... அப்புறமா தனியா ஏதாவது பண்ணணும்னு நினைச்சா பிரச்னை உனக்குத்தான். இவங்க டிவி ஓனர் பாம்பேல பெரிய டான். இப்பதான் போன்ல வந்தாரு. நான்தான் பேசி சமாதானம் பண்ணி வச்சிருக்கேன்... மேற்கொண்டு ஏதாவது பண்ணீங்கன்னா அவரு வேற மாதிரி டீல் பண்ணுவாரு பார்த்துக்குங்க!”

“இல்ல சார் நாங்க விட்டுடுறோம். அவங்களையும் விட்ற சொல்லுங்க...” என மாமா எழுந்து சென்றார்.

இன்ஸ்பெக்டர் மார்க்ஸைப் பார்த்து கண்ணடித்தார். மார்க்ஸ் புன்னகைத்தான்.

“நீங்கதான் கதை எழுதுவீங்களா, எப்படி என் கதை?”

“வேற லெவல் சார்!”

“டீ சாப்பிடுறீங்களா?”

“வேணாம் சார்... அப்ப எனக்கு என்ன!”

“மெடல் ஏதாவது எதிர்பாக்குறீங்களா, அதெல்லாம் தர மாட்டாங்க...” என சிரித்தார் இன்ஸ்பெக்டர்.

மார்க்ஸ் அவரை வியப்பாகப் பார்த்தான்.

“என்ன பார்க்குறீங்க?”

“இல்ல சார் இப்படி ஒருத்தரை டிப்பார்ட்மென்ட்ல இப்பதான் பார்க்குறேன்”

“உங்க சீரியல் மாதிரிதாங்க... நல்லவங்க கெட்டவங்க எல்லா இடத்துலயும் இருக்கத்தான் செய்றாங்க.. போலீஸ் வேலை ரொம்ப கஷ்டங்க... பொம்பளைங்க படுற கஷ்டமா சீரியல் எடுக்குறீங்களே... எங்க கதைய சீரியலா எடுங்க... 1000 எபிசோட் போகும்… அவ்வளவு கதை இருக்கு எங்ககிட்ட...” எனச் சிரித்தார் இன்ஸ்பெக்டர்.

“பண்ணலாம் சார்” என்றான் மார்க்ஸ்.

“இந்த கலாட்டாவுல ஷூட்டிங் நின்னு போயிருக்கும்ல!”

“இல்ல சார் அது நடக்குது சார்!”

“என்னய்யா சொல்றீங்க... இந்தக் கலவரத்துலயும் ஷூட்டிங் நடக்குதா?”

“ஆமா சார்... அதுதான் டிவி... உலகமே அழிஞ்சாலும் ஷூட்டிங் பண்ணியே ஆகணும். டேப் குடுத்தேயாகணும் சார்!”

“எங்க பொழப்புதான் கஷ்டமனு நினைச்சுகிட்டு இருந்தேன். எங்களைவிட மோசமா இருக்கேய்யா உங்க பொழப்பு” என சிரித்தார் இன்ஸ்பெக்டர்.

“ஆமா சார்” எனச் சிரித்தான் மார்க்ஸ்.

“அப்புறம் இந்தப் பாடுறவங்களுக்கு ஒரு நிகழ்ச்சி வரப் போகுதுன்னு உங்க டிவியில விளம்பரம் போடுறாங்களே?”

“ஆமா சார்.. வாய்ஸ் ஸ்டார்...”

“அதுல கலந்துக்க ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா?!”

“சொல்லுங்க சார் பண்ணிக்கலாம்.. யாருக்கு சார்?” என்றான் மார்க்ஸ்.

“எனக்குதான்... என்ன பார்த்தா பாடுற மாதிரி தெரியலையா?"

“அப்படியில்ல சார்”

“காலேஜ் படிக்கிறப்ப பாட்டு போட்டின்னா நான்தான். என்ன அடிச்சுக்க ஆள் கிடையாது. ஏகப்பட்ட சர்ட்டிஃபிகேட் வாங்கியிருக்கேன்!”

“அப்படியா சார்...” என அவன் வாய் மூடும் முன் அவர் கணீரென்ற குரலில்,

‘’வாழ்ந்தாலும் பேசும்... தாழ்ந்தாலும் பேசும் வையகம் இது தானடா” என பாடத்துவங்க... ஏனோ மார்க்ஸ்க்கு சட்டென கண்கள் கலங்கின. அந்த இறுகிப்போன தோற்றத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த ஏக்கம் அவனை என்னவோ செய்தது.

ஆசைகளும் கனவுகளும் இல்லாத மனிதர்கள் யார்தான் இருக்கிறார்கள். வாழ்க்கையின் போக்கு ஒவ்வொருவரையும் எங்கெங்கோ கொண்டு போய் விடுகிறது. பெரும்பாலும் ஒருவருடைய கனவும் அவர் பிழைப்புக்காக செய்கிற வேலையும் வேறு வேறாகவே இருக்கிறது. வெகு சிலருக்கு மட்டுமே அது ஒன்றாக வாய்க்கிறது. தனக்கு விருப்பமான விஷயமே பணம் தரக்கூடிய வேலையாகவும் அமையப் பெற்றவர்கள்தான் உலகத்தின் மிகப்பெரிய பாக்கியவான்கள்.

மார்க்ஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தான். அனைவரும் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். மேகலா ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள். பேச முடியாமல் அவளுக்கு அழுகை வந்தது.

“விடு...விடு... அதான் எல்லாம் முடிஞ்சிருச்சுல்ல அப்புறம் என்ன?”

“நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை சார்”

“வேற வழியில்லயே... எப்படியோ போறன்னு உன்ன விட முடியலயே…”

“சாரி சார்”

“விடு... விடு... இப்ப வலி எப்படியிருக்கு?”

“பரவாயில்ல சார்...”

“உண்மையை சொல்லு”

“நீங்க அவன அடிச்ச அளவுக்கு அவன் என்னை அடிக்கல சார்” என மேகலா சிரிக்க அனைவரும் சிரித்தனர்.

“இந்தக் கலவரத்தில காமெடி வேறயா?”

“நிஜமாவே செம சாத்து சாத்திருக்கீங்களே தல...” என்றான் பாண்டியன்...

“அடிக்கிறப்ப என்ன அளந்து பார்த்தா அடிக்க முடியும்... சரி கிளம்பலாம்... நீ எங்க தங்க போற?” என மேகலாவை பார்த்து கேட்டான் மார்க்ஸ்.

“மாமா வீட்டுக்கு போயிடுறேன்... அங்க எல்லாம் யாரும் வர முடியாது!”

“சரி கிளம்பு... பிரச்னை ஒண்ணும் வராது... இருந்தாலும் கொஞ்சம் சேஃபா இருந்துக்கோ...”

“வரேன் சார்” என அவள் மீண்டும் அவனை அணைத்துக் கொண்டு காரில் ஏறிக் கிளம்பினாள்.

“நீ எப்படி போற?” என ஏஞ்சலைப் பார்த்து கேட்டான் மார்க்ஸ்.

“ஆபிஸ் கார்ல நானும் திவ்யாவும் கிளம்புறோம்!”

“இல்ல நான் மார்க்ஸோட பைக்ல போறேன்... நீங்க கிளம்புங்க ஏஞ்சல்!” என்றாள் திவ்யா.

அதை ஏஞ்சல் எதிர்பார்க்கவில்லை என்பது அவள் முகம் மாறியதிலிருந்தே தெரிந்தது. “சரி” எனத் தலையாட்டி அவள் காரில் ஏறி கிளம்பினாள்.

“தல உங்க வண்டி சாவி” என பாண்டியன் நீட்ட அதை திவ்யா வாங்கிக் கொண்டாள். சின்ன புன்னகையுடன் “நான் வரேன் தல” என பாண்டியன் தனது பைக்கில் கிளம்பினான்.

மார்க்ஸும் திவ்யாவும் தனித்திருந்தார்கள்.

“போலாம்” என மார்க்ஸ் சாவிக்காக கையை நீட்டினான். பதில் ஏதும் சொல்லாமல் திவ்யா சென்று புல்லட்டில் ஏறி அமர.... மார்க்ஸ் முகத்தில் ஆச்சர்யம்.

“புல்லட் எல்லாம் ஓட்டுவீங்களா என்ன? இந்த விஷயம் தெரியவே தெரியாதே எனக்கு...”

“என்ன பத்தி வேற என்ன தெரியும் உனக்கு!”

மார்க்ஸ் புன்னகையுடன் கையைத் தூக்கினான்.

“வந்து உட்காரு” என திவ்யா புல்லட்டை ஸ்டார்ட் செய்தாள். மார்க்ஸ் பின்னால் அமர்ந்தான். அவள் ஃபர்ஸ்ட் கியரைப்போட்டு வண்டியை கிளப்பிய லாவகத்திலேயே அது அவளுக்குப் புதிதல்ல என்பது அவனுக்குப் புரிந்தது.

பைக் சாலையில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. எதிர்காற்றில் பறந்த திவ்யாவின் கூந்தல் அவனது முகத்தை வருடியது. அவளது பர்ஃபியூம் வாசம் அந்த நாளில் நடந்த அனைத்து கசப்பான விஷயங்களையும் மறக்கடிப்பதாக இருந்தது. இந்த அனுபவம் அவனுக்குப் புதிது. இரண்டு முறை வண்டி குலுங்கிய போது அவளது தோளில் கை வைத்து சமாளித்துப்பின் அவசரமாகக் கையை எடுத்துக்கொண்டான்.

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

பைக்கை பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டிய சாலையில் நிறுத்தினாள் திவ்யா.

“வீட்டுக்குப் போகலையா?” என எதிர்புறம் இருந்த வீட்டைப் பார்த்தபடி கேட்டான் மார்க்ஸ்.

“அவசரமா வீட்டுக்கு போகணுமா?” என்றாள் திவ்யா.

“இல்ல அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல...”

அந்த இரவிலும் அந்தச் சாலை உயிர்ப்போடு இருந்தது. மாலைநேரங்களில் இருக்கிற அளவுக்குக் கூட்டமாக இல்லாமலும் வெறிச்சோடி போகாமலும் ஆங்காங்கே ஆட்களும் நிறைய தனிமையுமாக இருந்தது கடற்கரை.

மார்க்ஸ் திவ்யா பேசட்டும் என்பதுபோல காத்திருந்தான்.

எதிர்பாராமல் சட்டென திவ்யா அவனை அணைத்துக் கொண்டாள். மார்க்ஸ் ஒரு கணம் என்ன செய்வது என தெரியாமல் விழித்தான். பதிலுக்கு அணைத்துக் கொள்வதா இல்லை அப்படியேயிருப்பதா என்ற குழப்பம் அவனுக்குள். திவ்யா அவனை மென்மையாக அணைத்திருந்தாள்.

மார்க்ஸ் மெதுவாக தனது கரத்தால் அவளை அணைத்துக் கொண்டான். அந்த நிமிடம் முடிந்துவிடக்கூடாதே என அவனுக்குக் கவலையாயிருந்தது.

சில நொடிகள் மெளனமாக கடந்தன...

திவ்யா அவனை விட்டு விலகினாள். காற்றில் பறக்கும் தனது தலைமுடியை சரி செய்து கொண்டாள். மார்க்ஸ் சின்ன புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“எல்லா பெண்களும் பட்டுன்னு உன்ன கட்டிப்பிடிச்சுகிறாங்களே... அப்படி அந்த ஹக்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலான்னுதான் ஹக் பண்ணேன்!”

மார்க்ஸ் புன்னகையை பதிலாகத் தந்தான்.

"ஆனா ஏதோ ஒண்ணு இருக்கத்தான் செய்யுது!”

மார்க்ஸ் சிரித்தான்.

“சிரிக்காத நான் சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன்.”

“சரி சிரிக்கல”

“உன்னை அணைச்சுக்கிறப்ப அதுல லஸ்ட் இல்லை... வேற ஏதோ ஒண்ணு... ஒரு மாதிரி சேஃபா, அன்பா, நான் இருக்கேன். உனக்குன்னு ஆதரவா... உனக்குள்ள இருக்கிற பாசிட்டிவ் வைபை அப்படியே மத்தவங்களுக்கும் நீ பாஸ் பண்ற”

“என்னாச்சு இன்னைக்கு உனக்கு!”

“தெரியல... அத்தனை பேர் இருந்தாங்க அங்க... அந்தப் பொண்ணை அவன் அசிங்கப்படுத்துறதை வேடிக்கைப் பார்த்துக்கிட்டுதான் இருந்தாங்க... பட்டுன்னு ஒண்ணு அவன் முகத்துல விடணும்னு அங்க இருக்குற எல்லாத்துக்கும் தோணிச்சு. ஆனா, அதைப் பண்ற தைரியம் உன்கிட்ட மட்டும்தான் இருந்திச்சு”

மார்க்ஸ் அவளைப் பார்த்தான்.

“அந்த ரெண்டு பேர நீ புரட்டி எடுத்தப்ப உன்ன எனக்கு அவ்வளவு பிடிச்சுது... யாருக்குத்தான் பிடிக்காது இப்படி ஒருத்தனை!”

மார்க்ஸ் ஆச்சர்யமும் புன்னகையுமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன பார்க்குற... உன்னை எனக்கு பிடிக்கும்தான். இந்தக் கண்ணு கலரு சிரிப்பு திமிரு ஸ்டைலு.... எல்லாம் எனக்கு பிடிக்கும். வெட்கத்தைவிட்டு சொல்லியாச்சு போதுமா!”

“திவ்யா!”

“பொறு நான் இன்னும் முடிக்கல... அது எப்படி ஒருத்தன் எல்லா இடத்துலயும் இப்படி இருக்க முடியுது... மனுஷன்னா ஏதாவது ஒரு குறை இருக்கணும்ல... அப்படி எதுவுமே இல்லாம எப்படி?”

“அந்த அளவுக்கு எல்லாம் ஒண்ணும் சீன் இல்ல”

“உன்னை குறுக்கப் பேசாதன்னு சொன்னேன்ல”

“சரி பேசல”

“எது பண்ணாலும் என்னைவிட ஒரு ஸ்டெப் மேல போய் ஏதாவது ஒண்ணு பண்ணிடுற… சண்டை போடுவேன்னு பார்த்தா மன்னிச்சிடுற… பயப்படுவேன்னு பார்த்தா கோபப்படுற... எல்லா சமயத்துலயும் நீ இங்க இருக்க!” என அவள் தனது கரத்தை மேலே காட்டினாள்.

மார்க்ஸ் அமைதியாக இருந்தான்...

“நீ அங்க இருக்குறதால நான் எப்பவுமே இங்க இருக்கிறதா ஃபீல் பண்ண வைக்கிற” என கையை கீழே காட்டினாள.

“உன் தப்பில்ல அது... ஆனா என்னால அதைத் தாங்கிக்க முடியல... நான் ஒரு நல்ல டீம் லீடரா இருக்கணும்னு யோசிக்கிறேன். ஆனா, நீ வேற மாதிரி லீடரா இருக்க... உன்னோட என்னால கம்பீட் பண்ண முடியல... நான் உன்கிட்ட ஒவ்வொரு தடவையும் தோத்துக்கிட்டே இருக்கேன் மார்க்ஸ்” என்ற திவ்யாவின் குரல் உடைந்தது.

“நான் அப்படி எல்லாம் யோசிச்சு எதையும் பண்ணல திவ்யா...”

“நீ அப்படி நடிக்கிறேன்னு நான் சொல்ல வரல... நீ நிஜமாவே அப்படிததான் இருக்குற… எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு… ஆனா என்னால வாழ்க்கை பூரா உன்னோட நிழல்ல இருக்க முடியாது மார்க்ஸ். அதனாலதான் உன்னைவிட்டு விலகி விலகி ஓடுறேன்!”

மார்க்ஸ் பதில் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தான்.

“நான் தனியா நின்னு ஜெயிக்கனும்றதுதான் என்னோட லட்சியம். எந்த இடத்துல இருந்தாலும் அங்க நான்தான் முதல்ல இருப்பேன். அப்படித்தான் இது வரைக்கும் இருந்திருக்கேன். இங்க அதுக்கு வாய்ப்பே இல்லை மார்க்ஸ்!”

மார்க்ஸ் அவளையே பார்த்தபடி இருந்தான்.

“நம்ம நேசிக்கிறவங்ககிட்ட நாம சரிசமமா இருக்க முடியணும். உன்னோட நான் எப்பவுமே அப்படி இருக்க முடியும்னு தோணல. ரொம்ப இன்ஃபீரியரா சில சமயம் நான் ஃபீல் பண்றேன். உன்னைப பார்த்து ஆச்சர்யப்பட்டுகிட்டே ஒரு வாழ்க்கையை என்னால வாழ முடியாது மார்க்ஸ்!”

“இப்ப என்னதான் சொல்ல வர்ற?”

“கோபம் வருதா உனக்கு!”

“இல்லை திவ்யா… உன்னோட பயத்துக்கு என்கிட்ட பதில் இல்லைன்னு சொல்றேன்!”

“என்கிட்டயும் இல்ல தான். கிட்ட வர முடியாமலும் தள்ளிப்போக முடியாமலும் ஒரு மாதிரி அவஸ்தையா இருக்கு எனக்கு!”

“என்ன பண்ணலாம் சொல்லு!”

“நான் திரும்பவும் கல்கத்தாவே போயிடலாம்னு இருக்கேன். நாளைக்கு மேனன்சார் கிட்ட இதைப் பத்தி பேசப்போறேன்!”

அதிர்ந்து போனான் மார்க்ஸ்.

“என்ன திவ்யா இப்படிச் சொல்ற?”

“ஆமா மார்க்ஸ்... அதுதான் சரியா வரும்” எனச் சொல்லியவள் பதிலுக்குக் காத்திராமல் விறுவிறுவென எதிர்பக்கமிருந்த வீட்டை நோக்கி நடந்து செல்ல அவள் போவதை இதயம் கனக்க பார்த்துக் கொண்டிருந்தான் மார்க்ஸ். அன்பான அணைப்புடன் ஆரம்பித்த அந்த உரையாடல் இப்படி முடியும் என அவன் கொஞ்சமும் நினைக்கவில்லை.

……………………..

சித்தார்த் மேனன் தனது அறையில் அமர்ந்திருந்தார்...

கதவைத் தட்டிவிட்டு திவ்யா அவரது அறைக்குள் நுழைந்தாள்.

“குட்மார்னிங் திவ்யா”

“குட்மார்னிங் சார்”

“சொல்லும்மா”

“ஒரு சின்ன ரிக்வெஸ்ட் சார்... என்ன திரும்பவும் கல்கத்தாவுக்கே டிரான்ஸ்ஃபர் பண்ண முடியுமா?”

சித்தார்த் மேனன் அவளை யோசனையாகப் பார்த்தவர், “அப்ப இந்த சேனலை யார் பார்த்துககிறது?”

“அதான் மார்க்ஸ் இருக்கானே சார். அவனைவிட புரோகிராமிங் ஹெட்டுக்கு ஒரு நல்ல ஆள் யார் சார் கிடைப்பாங்க?”

“உனக்கு விஷயமே தெரியாதா?”

திவ்யா முகம் மாற, “என்ன சார்… என்ன ஆச்சு?!”

“மார்க்ஸ் இன்னைக்கு காலையில வேலையை ரிசைன் பண்ணிட்டான்!”

அதிர்ந்து போன திவ்யா, “ஏன் சார்” என பதறிப்போய் கேட்டாள்.

“தெரியலம்மா… ஏதோ பர்சனல் ரீசன்னு லெட்டர்ல போட்டிருக்கான்.”

“நீங்க எப்படி சார் அவன் போறதுக்கு அலவ் பண்ணீங்க?”

“அவன் லெட்டரை எனக்கு அனுப்பலம்மா நேரா ஹெச்ஆருக்கே அனுப்பிட்டான்!”

“நீங்க போன் பண்ணி பேசலயா சார்?”

“போன் ஸ்விட்ச் ஆஃப்...”

என்ன செய்வது எனத் தெரியாமல் திவ்யா அவசரமாக தனது போனை எடுத்து மார்க்ஸின் எண்ணுக்கு டயல் செய்தாள்.

“நீங்கள் அழைக்கும் சந்தாதாரர் தொடர்புகொள்ளும் நிலையில் இல்லை” என்றது பதிவு செய்யப்பட்ட குரல்!

- Stay Tuned...