Published:Updated:

இடியட் பாக்ஸ் - 41: மேனன் - தாட்சா… அன்பின் மெளன மொழிகள் என்னவெல்லாம் செய்யும்?

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 41: மேனன் - தாட்சா… அன்பின் மெளன மொழிகள் என்னவெல்லாம் செய்யும்?

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

நந்திதா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் எதிரே சின்ன புன்னகையுடன் மார்க்ஸ் அமர்ந்திருந்தான். அவள் ஒரு கையால் ஐஸ்கிரீமை சாப்பிட்டபடியே மறுகையால் டேபிளில் இருந்து மெனுவை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு ஐஸ்கிரீம் பெயரை கார்டில் சுட்டிக் காட்ட... மார்க்ஸ் சற்று எட்டி அதை பார்த்தவன் ‘’இட்டாலியன் வொன்டரா?” என்றான்.

ஐஸ்கிரீமை சாப்பிட்டபடி ஆமென நந்திதா தலையாட்டினாள்.

“ஏற்கெனவே மூணு சாப்டாச்சு.... இன்னொன்னு கண்டிப்பா வேணுமா?” என மார்க்ஸ் தயக்கமாகக் கேட்டான்.

“உனக்கென்ன நான்தானே சாப்பிடுறேன் போய் வாங்கிட்டு வா” என்பதாக சைகையால் அவள் சொன்னாள்.

மார்க்ஸ் எழுந்து கவுன்ட்டரை நோக்கி நடந்தான். நந்திதா எதுவும் பேசாமல் சாப்பிடத் துவங்கினாள்.

மார்க்ஸ் ஐஸ்கீரீம் கோப்பையுடன் வந்து அமர்ந்தான்.

அதை ஒரு கையால் வாங்கியவள் மீண்டும் மெனு கார்டை பார்க்கத் துவங்க மார்க்ஸ் அவசரமாக அதை இழுத்தவன்…

“இன்னைக்கு இது போதும்... விட்டுடலாம்” என்றான்.

“அதெப்படி நீ பண்ண காரியத்துக்கு உன்னை இதோட விடுறது” என்றாள் நந்திதா.

“இந்த மாசம் பூரா எப்ப வேணா எவ்வளவு வேணா ஐஸ்கிரீம் கேளு... வாங்கித் தாரேன்.. இன்னைக்கு இது போதும்!”

நந்திதா அவனை முறைத்துப் பார்த்தாள்.

“அதுதான் அவ்வளவு சாரி சொல்லிட்டேன்ல இன்னும் முறைச்சா எப்படி?”

“திவ்யாவோட சண்டைன்னா வேலையை ரிசைன் பண்ணிட்டு போவியா நீ? எங்களைப் பத்தி எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்கல... அப்ப நாங்கள்லாம் உனக்கு ஒண்ணுமே இல்ல… அப்படித்தானே?”

“அப்படியில்ல நந்து!”

“அதெப்படி நீ ரிசைன் பண்ணுவ?”

“திரும்ப திரும்ப ரிசைன்னு சொல்லாத... அது ஏதோ கோபத்துல!”

“நீ யார் கூட வேணா சண்டை போடு... எங்க வேணா போ... ஆனா போறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணுமா, வேண்டாமா?”

“சொல்லாம போனது தப்புதான். அதனாலதான இந்த மாசம் பூரா உனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தரேன்னு ஒத்துகிட்டு இருக்கேன்ல!”

நந்து முறைத்தாள்... மார்க்ஸ் 'விட்டுடேன்' என்பதுபோல பார்த்தான்.

“உன் ஊருக்கு போறேன்னு அவளும் என்கிட்ட சொல்லல... சொல்லிருந்தா நானும் அவகூட வந்திருப்பேன்... உன் அம்மா அப்பா எல்லாம் பார்த்திருப்பேன்!”

“இது நீ அவகிட்ட தான் கேட்கணும்.... அவ வருவான்னு எனக்கே தெரியாது!”

“உங்கம்மா என்ன சொன்னாங்க அவளைப் பார்த்துட்டு?”

“நல்ல பொண்ணுன்னு...” என மார்க்ஸ் இழுக்க!

“அவங்களுக்கு அவளைப் பிடிச்சிருக்கு அதான!”

“அப்படித்தான் நினைக்கிறேன்!”

“பிடிச்சிருந்தா பேசி ஒண்ணா சேருங்க... இல்லன்னா வேணாம்னு தூக்கி போட்டுட்டு உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொல்றவகிட்ட வந்து சேருங்க... எதுக்கு இப்படி ரெண்டுக்கும் நடுவில போட்டு நீங்களும் குழம்பி எங்களையும் குழப்பி... ச்ச… கடுப்பா இருக்கு!”

மார்க்ஸ் அவளது கரத்தை தனது கரத்தால் ஆதரவாகப் பற்றினான்...

“ஏற்கெனவே நாலஞ்சு ஐஸ்கிரீம் சாப்பிட்டாச்சு… இப்ப எதுக்கு இன்னொன்னு!”

“இங்க பாரு நந்து... அவ என்கூட இருக்கா... இல்லாமபோறா அது வேற விஷயம்… ஆனா, நீ எப்பவும் என் கூட இருப்ப... அது மட்டும் நிச்சயம்!”

நந்திதா அவனைப் பார்த்தாள்.

“காதல் மட்டும்தான் அன்பா, ஏன் ஃபிரண்ட்ஷிப் அன்பு இல்லையா?”

“நீ என்னதான் வளைச்சு வளைச்சு சொன்னாலும் நீ சொல்றதோட அர்த்தம் ஒண்ணுதான்... அவளை நீ லவ் பண்ற... என்ன நீ பண்ணல அதானே!”

“ஏன் நாம ஒரு நல்ல ஃபிரண்டாயிருக்கக் கூடாதா!”

“குடுத்தா முழுசா குடு... அவளுக்கு குடுத்தது போக மிச்சம் இருக்கிற அன்பை ஃப்ரெண்ட்ஷிப்புன்னு எனக்கு பிச்சைப்போடாத... எனக்கு வேணாம்” என அவள் எழுந்து போனாள்.

மார்க்ஸ் என்ன பேசுவது எனத் தெரியாமல் அமர்ந்திருந்தான். நந்திதாவை காதலிக்கவும் இல்லை. அவளைக் காயப்படுத்தவும் விருப்பமில்லை... இந்த நிலைதான் இருப்பதிலேயே கஷ்டம் என்பது அவனுக்குத் தோன்றியது.

மார்க்ஸ் தனது அறையில் அமர்ந்திருந்தான்.

கதவைத் தட்டிவிட்டு திவ்யா உள்ளே நுழைந்தாள்.

“ஹாய்” என்றான் மார்க்ஸ்.

“புது பட்ஜெட் ஷூட் காப்பி ஒண்ணு வேணும்... இருக்கா?”

“இருக்கு தாரேன்” என அவன் டேபிளில் தேடத் தொடங்கினான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த திவ்யா கேட்டாள்.

“எங்க லன்ச்சுக்கு ஆளைக் காணோம்?"

“கேன்டீன்ல சாப்பிட கொஞ்சம் போரா இருந்துச்சு... அதான் லன்ச்சுக்கு வெளியே போயிருந்தேன்!”

“ஐஸ்கீரீம் எப்பயிருந்து லன்ச்சாச்சு?”

மார்க்ஸ் நிமிர்ந்து திவ்யாவைப் பார்த்தான். அவனுக்கு சிரிப்பு வந்தது.

“அப்படி சிரிச்சா என்ன அர்த்தம்?”

“அது வந்து...”

“எனக்கு ஐஸ்கீரீம் பிடிக்காதுன்னு உன்கிட்ட நான் சொன்னதா ஞாபகம் இல்லையே!”

“இல்ல நந்திதா ஐஸ்கீரீம் வேணும்னு சொன்னா அதான்.”

“தனியா கூட்டிட்டு போய் ஐஸ்கீரீம் வாங்கி குடுன்னு சொன்னாளா?”

“அப்படியில்ல...” மேற்கொண்டு என்ன பேசுவது எனத் தெரியாமல் மார்க்ஸ் பார்த்தான்.

“அவகிட்ட சொல்லாம ரிசைன் பண்ணதுக்கு மன்னிப்பு கேட்டு தண்டணையா ஐஸ்கீரீம் வாங்கிக் கொடுத்திருக்க.... மார்க்ஸ் மன்னிப்பு கேட்குறது வெளிய தெரிஞ்சா அசிங்கம்ன்றதால தனியா கூட்டிட்டுப் போனியா?”

“இதெல்லாம் யார் உன்கிட்ட சொன்னது!”

“யார் சொல்லியிருப்பாங்க சொல்லு” எனக் கேட்டாள் திவ்யா.

“தெரியலையே!”

“நந்துதான் சொல்லிட்டுப் போனா... பெருமையா!”

மார்க்ஸூக்கு திவ்யாவின் எரிச்சல் புரிந்தது. மனதுக்குப் பிடித்தவனின் அன்பு மற்றவருக்கும் கொஞ்சம் போவதில் இருக்கும் சிக்கல் இது. பெண்கள் எப்போதும் முழுமையாக ஒருவனை வேண்டாம் என மறுப்பதில்லை.

இன்னும் கொஞ்சம் முயன்று பார் கிடைத்தாலும் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இழையோடுதான் பெரும்பாலும் அவர்களின் மறுதலிப்பு இருக்கும். கிட்ட வரவும் விடமாட்டார்கள். விலகிப் போனாலும் கோபித்துக் கொள்வார்கள்.

ஒன்று சேரவும் முடியாமல் பிரிந்து போகவும் விரும்பாமல் தொடர்வண்டியின் பெட்டிகளாய், தொடுகிற தூரத்தில் தொடவே முடியாமல் தொடரும் பல உறவுப் பயணங்களுக்கு இதுவே காரணம்.

இடியட் பாக்ஸ் - திவ்யா
இடியட் பாக்ஸ் - திவ்யா

“என்ன பண்ணலாம்?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“ஆபிஸ் முடிஞ்சதும் ஐஸ்கிரீம் சாப்பிடப் போலாம்” என்றாள் திவ்யா...

மார்க்ஸ் புன்னகையுடன் தலையாட்டினான்.

“உனக்கு இஷ்டம் இல்லன்னா வேணாம்”

“இல்ல… இல்ல... போலாம்” என்றான் மார்க்ஸ்.

அவள் தலையாட்டிவிட்டு நகர்ந்தாள். மார்க்ஸ் புன்னகையுடன் பின்னால் சாய்ந்து அமர்ந்தான். காதலிப்பதைவிட காதலை சொல்வதற்கு முன்னால் இருக்கும் காலகட்டம்தான் இனிமையானது. இருவரது மனதுக்குள்ளும் காதலிருப்பது மற்றவர்களுக்குப் புரியும். ஆனாலும் அதை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளாமல் இருக்கும் காலகட்டம் அது.

மார்க்ஸின் போன் அடித்தது. எடுத்துப் பார்த்தவன் நந்திதாவின் பெயரைப்பார்த்து முகம் மாற “ஹலோ” என்றான்.

"திவ்யாவ பார்த்தியா?”

“ஆமா... ஏன் என்னாச்சு?”

“இல்ல... எப்ப பார்த்த?” என்றாள் நந்திதா.

“இப்பதான் என் ரூமுக்கு வந்துட்டுப் போறா!”

“ஏதாவது கேட்டாளா?”

“புது பட்ஜெட் ஷூட் வேணும்னு கேட்டா!”

“அதில்ல... வேற ஏதாவது கேட்டாளா?”

“இல்லையே.... எதுக்கு கேட்குற?”

“ஒண்ணும் இல்ல... வெச்சிடுறேன்” என நந்திதா போனை துண்டித்தாள்.

மார்க்ஸ் யோசனையானான். கோடிக்கணக்கானவர்களுக்கு கூட தர முடிகிற அளவுக்கு பெரிதாக இருக்கும் அன்பு பெண்ணுக்கு என வரும் போது ஒருவருக்கு மட்டுமே தரக்கூடிய அளவுக்கு சிறிதாகி விடுவது அதிசயம்தான்.

அனைவரும் கான்ஃபரன்ஸ் ரூமில் அமர்ந்திருந்தார்கள்.

மார்க்ஸும் திவ்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். நெருக்கமான இருவர் யாரோ போல ஒரு பொதுவான மீட்டிங்கில் அமர்ந்திருப்பது மிகவும் கடினமான ஒன்று. அனைவருக்கும் தெரியும் அவர்களுக்கு இடையில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று. அவர்கள் இருவர் மட்டும் அது இல்லை என்பது போன்ற முகபாவனையில் இருந்தாக வேண்டும். அது உலக நடிப்பென்பது அனைவருக்கும் புரியும். ஆனாலும், அதை அவர்கள் செய்தாக வேண்டும்.

டேபிளில் திவ்யாவின் பக்கமிருந்த வாட்டர் பாட்டிலை எடுக்க மார்க்ஸ் எட்டி முயல... திவ்யா பாட்டிலை எடுத்துத் தந்தாள்.

“தேங்ஸ்” என மார்க்ஸ் அதை வாங்கிக் கொண்டான். அனைவரது கண்களும் அதை கவனித்தன.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த மானஸ், ஏஞ்சலுக்கு அருகில் அமர்ந்தான்.

“யப்பா இந்த சல்மான்கான் இத்தனை நாளா ஆள காணோம்… திடீர்னு என்ட்ரி கொடுத்திருக்கானே” என்றார் நெல்லையப்பன்.

“நம்ம பாம்பே சேனல்ல ஏதோ டான்ஸ் ஷோ ஃபைனல்ஸாம். தம்பிதான் போயி வேலை செஞ்சு குடுத்திருக்காப்டி” என்றான் பாண்டியன்.

“அது இருக்கட்டும் இப்ப எதுக்கு திடீர்னு இந்த மம்மி ரிட்டன்ஸ்?”

“6 சீரியலை லான்ச் பண்ணியாச்சு… அடுத்து 6 நான் ஃபிக்ஷன் ஷோ லான்ச் பண்ணப்போறோம் அதுக்குதான்!”

“அதுக்கும் எனக்கும் என்னய்யா சம்பந்தம் இருக்கு... என்ன எதுக்கு இந்த மீட்டிங்குக்கு கூப்புட்டீங்க?”

“ஒரு வீட்ல நல்லது கெட்டதுன்னா பெருசுங்களை கூப்புடுறது இல்லையா… அந்த மாதிரிதான் மாமா!”

நெல்லையப்பன் பாண்டியனை முறைத்தார்.

அவன் சிரித்தபடி, “யோவ் மேனன் சார் மீட்டிங்... சார் எப்படியும் சூஸ் ஸ்னாக்ஸ் எல்லாம் சொல்லுவாரு வேணாம்னா கிளம்பி போ!”

“நான் ரொம்ப பிஸிதான்... இருந்தாலும் சேனலோட எதிர்காலத்தை கருதி இந்த மீட்டிங்கை அட்டெண்ட் பண்றேன்” என்றார் நெல்லையப்பன்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னால நெல்லையப்பன், நெல்லையப்பன்னு ஒரு மானஸ்தன் இங்க இருந்தான். அவனை நீ பார்த்த!”

“நீ ஜூஸ் தருவாங்கன்னு சொன்னதும் அவன் செத்துட்டான்யா” என்று சொல்லி நெல்லையப்பன் சிரிக்க பாண்டியனும் சிரித்தான்.

மேனன், அலோக், தாட்சா மூவரும் அறைக்குள் நுழைந்தனர். அறை சலசலப்பு அடங்கி அமைதியானது.

மேனன் போர்டின் அருகே சென்று மார்க்கரை எடுத்தார்.

“சக்ஸஸ்ஃபுல்லா நாம 6 சீரியல்ஸ் லான்ச் பண்ணியிருக்கோம். அடுத்து 6 பெரிய நான் ஃபிக்ஷன் ஷோஸ் பண்ணப் போறோம்!” என்றவர் போர்டில் டான்ஸ் ஷோ, சாங் ஷோ, காமெடி ஷோ என எழுதியவர்…

“இது மூணும் ஏஞ்சல் டீம் பண்றாங்க” என்றார்.

‘’ ‘ஸாரி’, ‘கள்ளிக் காட்டில் சிட்டி பெண்கள்’, ‘டாக் ஷோ’ என எழுதியவர் “இது மூணு ஷோவும் மார்க்ஸ் டீம் பண்றாங்க” என்றார்.

“இதுல எந்த ஷோவும் புதுசு இல்லையே...இது எல்லா சேனல்லயும் வந்து கிட்டு இருக்கு எதுக்காக ஒருத்தன் நம்ம டிவியில இதை வந்து பார்க்கணும்” என்றான் அலோக்.

“கரெக்ட் ஏன் பார்க்கணும்… அலோக் உன் கண்ணாடி கொஞ்சம் கழட்டேன்.”

“வாட்” எனப் புரியாமல் கேட்டான் அலோக்.

“சும்மா உன் கண்ணாடி கழட்டு...”

அவன் கண்ணாடியை கழட்டினான்.

“இதுல எழுதியிருக்கிறதைப் படி...”

“என்ன மேனன் விளையாடுறியா… என் கண்ணுக்கு அது தெரியல!”

“இப்ப பாரு” என போர்டில் பெரிதாக அவர் டான்ஸ் ஷோ என எழுத “டான்ஸ் ஷோ” என்றான் அலோக்.

“இதைத்தான் பண்ணப் போறோம்!”

கண்ணாடியை மாட்டியபடி அலோக் புரியாமல் அவரைப் பார்த்தான்.

“உலகம் பூராவே சக்ஸஸ்ஃபுல்லா இருக்கிறது டான்ஸ், சாங், காமெடி, டிபேட்… எல்லாரும் இதைத்தான் பண்றாங்க... இந்த சேனல்லயும் இதை நீங்க பண்ணியிருக்கீங்க. இதுல புதுசா எதுவும் பண்றதுக்கு வாய்ப்பு இல்லன்றப்ப எல்லார் பார்வையும்படுற மாதிரி பெரிசா பண்ணலாம்றதுதான் நம்மளோட பிளான்!”

“மேனன் சார்... வேற ஆளுயா... படம் போட்டு பாடம் எடுக்குறாப்டி” என சிலாகித்தார் நெல்லையப்பன்.

“அதுக்கு பெரிய பட்ஜெட் வேணுமே” என்றான் அலோக்.

“ஆமா... தயிர்சாதம் வேணாம், மட்டன் பிரியாணிதான் வேணும்னா அதிகமா செலவு பண்ணித்தான் ஆகணும்!”

“மேனன் போன வருஷம் 30 கோடி இந்த சேனலுக்கு இன்வெஸ்ட் பண்ணியிருக்காங்க… 40 கோடி வருமானம் வந்திருக்கு… 10 கோடி லாபம்!”

“கரெக்ட்” என்றார் மேனன்.

“இந்த ஷோஸ் எல்லாம் பண்ணா வருஷத்துக்கு எவ்வளவு பட்ஜெட் தேவைப்படும்?” என்றான் அலோக்.

“100 கோடி” என்றார் மேனன்.

“எவ்வளவு வருமானம் வரும்” என அலோக்

“110 கோடி” என்றார் மேனன்.

“அப்பவும் லாபம் 10 கோடி தான் இல்லையா?” என அலோக் சொல்ல, ஆமென தலையாட்டினார் மேனன்.

அலோக் சிரித்தான். “30 கோடி போட்டு 40 கோடி எடுக்குறது புத்திசாலித்தனமா? 100 கோடி செலவு பண்ணி 110 கோடி லாபம் பண்றது புத்திசாலித்தனமா?” என அலோக் கேட்க,

“இந்த கேள்விக்கு நீயே பதில் சொல்லு பார்ப்போம்” என அர்த்தமாகப் புன்னகைத்தார் மேனன்.

அலோக் குழப்பமானான். மேனனின் புன்னகையில் ஏதோ அர்த்தம் புதைந்திருப்பதை அவன் உணர்ந்தான்.

“பொதுவா பாக்குறப்ப 30 போட்டு 40 எடுக்குறது தான் புத்திசாலித்தனம் மாதிரி தெரியுது. ஆனா, அது கரெக்டான ஆன்சர் இல்லைன்றதும் மேனன் முகத்தைப் பார்த்தா புரியுது... எப்படின்னுதான் தெரியல” என்றார் நெல்லையப்பன்.

“அவரே சொல்வார் மாமா வெயிட் பண்ணு!”

“ரெண்டுலயுமே லாபம் 10 கோடிதான். ஆனா முப்பது கோடி போடுறப்ப நம்ம சேனல்ல சின்னதா தெரியும். 100 கோடி போடுறப்ப நம்ம சேனல் பிரமாண்டமா தெரியும்!”

அனைவருக்கும் அவர் சொல்ல வருவது மெதுவாகப் புரியத் தொடங்கியது.

“பெட்டி கடை நடத்துறவனுக்கும் தினம் 1,000 ரூபா கிடைக்கும். டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்துறவனுக்கும் 1,000 ரூபாதான் கிடைக்கும். நம்ம சேனல பொட்டி கடையா நடத்துனா போதுமா, இல்ல டிபார்ட்மெண்ட் ஸ்டோரா நடத்தலாமா?” என சிரித்தார் மேனன்.

அலோக் புரிந்து கொண்டதன் அடையாளமாகத தலையாட்டினான்.

“ஆரம்பத்துல நம்ம பொட்டிகடைக்காரன் சம்பாதிக்கிறதைத்தான் சம்பாதிக்கிற மாதிரி தெரியும். ஆனா, போகப்போக அது வேறொன்னா மாறும்!”

அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

“நம்ம சேனலோட ஷோஸ் எல்லாம் சின்னதா இருக்கிறதால நம்ம சேனலோட விளம்பரங்களை எல்லாம் பத்து செகண்ட் அஞ்சாயிரத்துக்கும், ஆறாயிரத்துக்கும் வித்துகிட்டு இருக்கோம். ஷோஸ் பெரிசாகுறப்ப விளம்பரத்தோட விலை ஏறும். அது சேனலோட எதிர்காலத்துக்கு நல்லது” என்றார் மேனன்.

அனைவரது கண்ணிலும் சேனலில் தோற்றம் மொத்தமாக மாறப் போவது தெரிந்தது.

“இதுவரைக்கும் இந்த மார்க்கெட் பார்க்காத மாதிரி ஷோஸை எல்லாம் பெருசா பிளான் பண்ணுங்க... திங்க் பிக்!” என்றார் மேனன். அனைவரும் கலையத் துவங்கினார்கள்.

மேனனும், தாட்சாவும் மேனனின் அறைக்குள் நுழைந்தார்கள். மேனன் தனது சேரில் அமர்ந்தார். தாட்சா எதிரிலிருக்கும் சோஃபாவில் அமர்ந்தவள் மேனனைப் பார்த்தபடி இருந்தாள்.

“என்னாச்சு?” என்றார் மேனன்.

“சும்மா பாக்குறேன்... பார்க்க கூடாதா?”

மேனன் சிரித்தார்.

“உங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கனும் மேனன்… நீங்க ஒரு தோனிதான்” என்றாள் தாட்சா.

“ஒவ்வொருத்தருக்கு ஒரு ஸ்டைல். நான் தோனின்னா நீங்க கோலி. எல்லாரும் நல்ல ப்ளேயர்ஸ்தான். அவங்கவங்களுக்குன்னு விளையாடுறதுல ஒரு ஸ்டைல் இருக்கு. தட்ஸ் ஆல்”

இடியட் பாக்ஸ் | தாட்சா
இடியட் பாக்ஸ் | தாட்சா

“ஆனா, கோலிக்கும் தோனிக்கும் வித்தியாசம் இருக்கு மேனன். கோலி ஒரு பெஸ்ட் பேட்ஸ்மேன். ஆனா, பெஸ்ட் கேப்டன்னா அது எப்பவும் தோனிதான்!”

மேனன் தாட்சாவைப் புன்னகையுடன் பார்த்தார்.

“கிரவுண்ட்ல இருக்கிற ப்ளேயர்ஸுக்கு மட்டுமில்ல கிரிக்கெட் பாக்குற கோடிக்கணக்கான ஃபேன்ஸுக்கும் நம்பிக்கையைக் கொடுத்தது தோனிதான். சில பேரால மட்டும்தான் அப்படி இருக்க முடியும்” என்றாள் தாட்சா.

நேசிப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் பாராட்டு தரும் மகிழ்ச்சியே தனிதான்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல... உங்களோட மந்திரத்தில மாட்டிகிட்டு தவிக்கிறேன் நான்!”

“தாட்சா...”

“நான் கிளம்புறேன்... இதுக்கு மேல இங்க இருந்தா ஏதாவது உளறிடுவேன்னு பயமா இருக்கு” என எழுந்தவள் சட்டென எதிர்பாராமல் மேனின் தலைமுடியை கலைத்துவிட்டு நகர்ந்து சென்றாள். அந்த அன்பு அவரை சட்டெனத் தாக்கியது.

வார்த்தைகளால் சொல்ல முடியாத எத்தனையோ பெரிய விஷயங்களை சின்ன சிறு செயல்கள் எளிதாய் சொல்லி விடுகின்றன. அழுத்தமான கை குலுக்கல்கள், மென்மையாக தோளில் தட்டுபடுகின்ற தட்டல்கள், கை பிடித்து நடத்தல், கை துடைக்க முந்தானை தருதல், கண்ணீர் துடைக்க கைகுட்டை தருதல் என சொல்லிக் கொண்டே போகலாம் அன்பின் மெளன மொழிகளை!

ஒரு செகண்ட் பொறுமையா இருக்க முடியாதா என கரத்தை கடிந்து கொண்டாள் தாட்சா. அது பொய்கோபம் என்பது அவளின் கரத்துக்குத் தெரிந்திருந்தது.

மார்க்ஸ் லேப்டாப்பை மூடி வைத்தான். சோம்பல் முறித்துக் கொண்டவன் வாட்சைப் பார்த்தான். மணி 6.30 எனக் காட்டியது. அவன் கிளம்ப தயாராக அவனது போன் அடித்தது. போனை எடுத்து “ஹலோ” என்றான் மார்க்ஸ்.

“போலாமா” என்றது திவ்யாவின் குரல்.

“எங்க?”

“ஐஸ்கிரீம் வாங்கித தாரேன்னு சொன்னியே... மறந்துட்டயா?”

மார்க்ஸ் அதை எதிர்பார்க்கவில்லை.

“நிஜமாதான் சொல்றியா?”

“ஏன் அப்ப நீ வாங்கி தரேன்னு சொன்னது பொய்யா?” என்றாள் திவ்யா.

“இல்லல்ல... போலாம்...போலாம்”

“என் கூட வர்றது உனக்கு கஷ்டமா இருந்தா வேணாம்!”

“இப்ப எதுக்கு இப்படி எல்லாம் பேசுற? நான் எதுக்கு வேணாம்னு சொல்லப் போறேன். உன் கூட வர்றது எனக்கு எவ்வளவு சந்தோஷம்னு உனக்கு தெரியாதா?”

“அப்படியில்ல நந்துவோட ஏதாவது புரோகிராம் இருந்தா விட்டுடலாம்!”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல... நாம தனியாதான போறோம்!”

“ஏன் வேற யாரையாவது கூட்டிட்டுப் போகணுமா?” என்ற திவ்யாவின் குரலில் எரிச்சல் தெரிந்தது.

“இல்ல...இல்ல... கேட்டேன்... என் பைக்லயே போலாம்தான!”

“உன்கிட்ட பைக்தான இருக்கு!”

“ஆமா”

“அப்ப அதுலதான் போறோம்... வேற ஏதாவது கேள்வி இருக்கா?”

“இல்ல… இல்ல... போலாம்…போலாம்!”

“சரி ரெடியா இரு... பத்து நிமிஷத்துல வரேன்” என அவள் போனைத் துண்டித்தாள்.

மார்க்ஸுக்குப் பரபரப்பாக இருந்தது. திவ்யாவே போன் செய்து தன்னை வெளியே அழைத்துச் செல்லச் சொல்வது இதுதான் முதல் முறை. மேசை டிராவில் இருந்து ரோலிங் சீப்பை எடுத்து தலையை வாரிக் கொண்டான். இந்தப் படபடப்பு கலந்த சந்தோஷம் அவனுக்குப் புதிதாக இருந்தது.

அவனது போன் மீண்டும் அடிக்க சட்டென போனை எடுத்தவன் “போலாம்” என்றான்.

“சரி சீக்கிரம் வா... கீழதான் உன் பைக்கிட்ட வெயிட் பண்றேன்” என்றாள் நந்திதா. சட்டென அதிர்ந்தான் மார்க்ஸ்.

“வர்றியா?” என்றாள் நந்திதா.

“கொஞ்சம் வேலை இருக்கு” என மார்க்ஸ் தட்டுத் தடுமாற...

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்... போலாம்”

மார்க்ஸுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.

“ரொம்ப நேரம் பார்க்கிங்ல வெயிட் பண்ண முடியாது சீக்கிரம் வா...” என நந்திதா போனை துண்டிக்கவும் கதவைத் திறந்து கொண்டு திவ்யா வந்து நின்றாள்.

மாலையில் கான்க்ஃபரன்ஸ் ரூமில் போட்டிருந்த உடையை மாற்றி வேறு உடை அணிந்திருந்தாள்...

“இந்த டிரஸ்...”

“ரொம்ப நாளா ஆபிஸ்லயே இருந்திச்சு... சரி வெளிய போறமே போட்டுக்கலான்னு தான் மாத்துனேன். நல்லா இல்லையா?”

“சூப்பரா இருக்கு” என்ற மார்க்ஸ் அவளைக் கவனித்தான்.

திவ்யா முகம் கழுவி லேசான மேக்கப் போட்டிருந்தாள். லிப்ஸ்டிக் அப்போதுதான் போட்டிருந்தாள் என்பது அறையின் விளக்கில் மின்னியபோது தெரிந்தது. தலை முடியை அணிந்திருக்கும் உடைக்கு ஏற்றாற் போல மாற்றி வாரியிருந்தாள். அவனுடன் வெளியே செல்வதற்காக அவள் சிரத்தையெடுத்து தயாராகியிருந்தாள் என்பது அவனுக்குப் புரிந்தது.

அவனது போனுக்கு மெசேஜ் வர மார்க்ஸ் எடுத்துப் பார்த்தான். நந்திதா அவனது பைக்கின் மேல் அவனுக்காகக் காத்திருப்பது போன்ற பாவனையில் ஒரு செல்ப்ஃபி எடுத்து அனுப்பியிருந்தாள்.

“போலாமா?” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் என்ன செய்வது என தெரியாத தர்மசங்டத்துடன் நின்றான்!

- Stay Tuned...