Published:Updated:

இடியட் பாக்ஸ் - 42: திவ்யா - மார்க்ஸ்… ஆரஞ்சு டிவியில் ப்ரமோஷன் யாருக்கு?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 42: திவ்யா - மார்க்ஸ்… ஆரஞ்சு டிவியில் ப்ரமோஷன் யாருக்கு?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

“கிளம்பலாமா” என மீண்டும் கேட்டாள் திவ்யா.

“ஒரே ஒரு நிமிஷம் இரு... வந்திடுறேன்” என திவ்யாவை தனது அறையில் அமர வைத்துவிட்டு அவசரமாக பாத்ரூமுக்குள் நுழைந்தான் மார்க்ஸ். என்ன செய்வது என அவனுக்கு நிஜமாகவே புரியவில்லை.

யாராவது ஒருவரிடம் உண்மையை சொல்லியே ஆக வேண்டும். யாரிடம் சொல்வது? தனக்காக பார்க்கிங் ஏரியாவில் காத்து கொண்டிருக்கும் நந்திதாவிடம் திவ்யாவும் நானும் தனியாக வெளியே போகிறோம் என சொல்வதா? இல்லை திவ்யாவிடம் நந்திதாவையும் தங்களுடன் அழைத்து செல்லலாம் எனச் சொல்வதா?

இருவரில் ஒருவர் அவனால் காயப்படப் போவது நிச்சயம். அது யாரென மார்க்ஸால் முடிவு செய்ய முடியவில்லை. மார்க்ஸ் குழம்பி தவிக்கும் சமயம் அவனது போனடித்தது. போனை எடுத்தான். மறுமுனையில் பேபியம்மா.

“மார்க்ஸு…. சர்ச்சுக்கு வந்துட்டேன் வர்றியா” அப்போதுதான் அது செவ்வாய்கிழமை என்பது மார்க்ஸுக்கு உறைத்தது.

“அம்மா... எனக்கு ஒரு பெரிய உதவி பண்ணனும்!”

“என்னடா?”

“நந்திதாவுக்கு போன் பண்ணி கொஞ்சம் சர்ச்சுக்கு போலாம்னு கூப்புடுறீங்களா?”

“நந்திதாவையா? எதுக்குடா?”

“தயவு செஞ்சு அவளை எப்படியாவது சர்ச்சுக்கு கூட்டிட்டு போங்க... நான் ராத்திரி வீட்டுக்கு வந்து மத்த விஷயம் எல்லாம் நேர்ல சொல்றேன்”

“சரி... அவகிட்ட பேசுறேன்” என பேபியம்மா போனை கட் செய்தார்.

மார்க்ஸ் தனது போனை பார்த்தபடி காத்திருந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே நந்திதாவிடமிருந்து போன் வந்தது.

“மார்க்ஸ்... பேபியம்மா பக்கத்துல இருக்கிற அந்தோணியார் சர்ச்சுக்கு வந்திருக்காங்களாம்… என்ன கூப்புடுறாங்க நீயும் வர்றியா?”

“இல்ல நந்து நீ போயிட்டு வா... நாம நைட்டு வீட்ல பார்க்கலாம்!”

“ஓகே பை... ஸாரி” என நந்திதா போனை வைத்தாள். மார்க்ஸுக்கு ஒரு புறம் நிம்மதியாகவும் மறுபுறம் குற்றவுணர்வாகவும் இருந்தது. குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிக் கொண்டவன் பாத்ரூமில் இருந்து வெளியே வந்தான்.

திவ்யா அவனது அறைக்கு வெளியே காத்திருந்தாள்.

“போலாம்” என்றான் மார்க்ஸ். திவ்யா புன்னகையுடன் அவனுடன் நடந்தாள்.

எஸ்கிமோஸ் ஐஸ்கிரீம் பார்லர் என்ற எழுத்துக்கள் நியான் விளக்கில் மின்னிக் கொண்டிருந்தன. பார்லரின் வெளிப்புறம் இருந்த மேஜைகளில் இளைஞர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. ஐஸ்கிரீம் பார்லரின் உள்ளே ஒரு ஓரமாக மார்க்ஸும் திவ்யாவும் எதிர் எதிரே அமர்ந்திருந்தார்கள்.

அவர்களுக்கு எதிரே பெரிய கோப்பைகளில் ஐஸ்கிரீம்.

மார்க்ஸ் சின்ன புன்னகையுடன் சுற்றிப் பார்த்தான்.

“என்ன பாக்குற?” எனக் கேட்டாள் திவ்யா.

“காதலுக்கும் ஐஸ்கிரீமுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு... அது என்னன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்” என்றான் மார்க்ஸ்.

திவ்யா புன்னகையுடன் சுற்றிப் பார்த்தவள் “இரண்டு பேர் தனியா வந்திருந்தா அவங்க காதலர்கள்னு அர்த்தமா?”

“சில சமயங்கள்ல சில இடங்கள்ல இரண்டு பேர் மட்டும் தனியா இருந்தா பெரும்பாலும் அவங்க காதலர்களா இருக்க நிறைய வாய்ப்பிருக்கு!”

“ஓகோ... இன்னும் வேற என்ன காதல் தியரி வச்சிருக்க?”

"நாலு பேர் உட்கார்ற டேபிள்ல ஒரே பக்கமா இரண்டு பேர் இடிச்சிக்கிட்டு உட்கார்ந்திருந்தா அவங்க புது காதலர்கள்” என்றான் மார்க்ஸ்.

“ரெண்டு பேர் எதிர் எதிரா உட்கார்ந்துகிட்டு இருந்தா?” என சிரிப்புடன் கேட்டாள் திவ்யா.

“மனசுக்குள்ள காதல் இருக்கு… ஆனா அவங்க காதலை இன்னும் சொல்லிக்கலைன்னு அர்த்தம். அப்படியில்லைன்னா ரொம்ப நாளா காதலிக்கிறவங்கன்னு அர்த்தம்!”

“நம்ம இதுல யாரு?”

மார்க்ஸ் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அவள் புருவத்தை உயர்த்தி கண்களால் பதில் சொல் என்பது போல கேட்டாள்.

“காதலிக்க மாட்டாளான்னு ஏக்கமா ஒருத்தன், அவனை காதலிச்சிடுவோமோன்ற பயத்துல ஒருத்தி” திவ்யா அவன் பதிலை ரசித்து சிரித்தாள்.

மார்க்ஸும் புன்னகைத்தான். இன்னும் இந்த உலகத்தின் விடை தெரியாத கேள்விகளில் ஒன்று காதல் எத்தனை வகைப்படும் என்பதுதான்.

“இன்னொன்னு சொல்லட்டா?” என்றான் மார்க்ஸ்.

“என்ன?” என்றாள் திவ்யா.

“உன்னால இந்த ஐஸ்கிரீமை முழுசா சாப்பிட முடியல. நீ சாப்பிடுன்னு எனக்கு கொடுத்தா நம்ம ரெண்டு பேரும் ஒரே ஐஸ்கிரீமை ஷேர் பண்ண மாதிரி ஆயிடும். நான் அதை லவ்வுன்னு எடுத்துக்க சான்ஸ் இருக்கு. அப்படி ஒரு எண்ணத்தை எனக்கு கொடுக்க வேணாம்னு நீயே கஷ்டப்பட்டு சாப்புடுற கரெக்டா?”

திவ்யா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“மனசுல என்ன பெரிய சைக்யாட்ரிஸ்ட்டுனு நினைப்பா?”

“ஆமாவா இல்லையா” என கேட்டான் மார்க்ஸ்.

“ஐஸ்கிரீம் நிறைய இருக்கு என்னால சாப்பிட முடியலதான். ஆனா மார்க்ஸ் மாதிரி ஒரு தன்மான சிங்கம் நான் சாப்பிட்ட பாதி ஐஸ்கிரீமை சாப்பிடாதே... அதான் என்ன செய்யலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்!”

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

மார்க்ஸ் சின்ன புன்னகையுடன் அவளது ஐஸ்கிரீம் கோப்பையைத் தன் பக்கம் இழுத்தவன் சாப்பிடப் போக “ஏய்... வேற ஸ்பூன் தரேன்” என அவசரமாகச் சொன்னாள் திவ்யா.

“பரவாயில்ல” என மார்க்ஸ் சாப்பிடத் துவங்க திவ்யா முகத்தில் சின்ன வெட்கம் கலந்த புன்னகை.

மார்க்ஸ் நிமிராமல் “என்ன சிரிப்பு” எனக் கேட்டான்.

“எல்லா விஷயத்துக்கும் ஈகோ பாக்குற மார்க்ஸ் ஐஸ்கிரீம் விஷயத்துல இப்படி உருகிட்டாரேன்னு யோசிச்சேன்!”

“உலகத்துக்கு முன்னால எதெல்லாம் முக்கியமான விஷயம்னு விட்டு குடுக்காம தம் கட்டுறமோ அதை எல்லாம் காதலிக்கிற பொண்ணு கிட்ட விட்டு கொடுக்கணும். அப்பதான் காதல்ல ஜெயிக்கமுடியும்!”

“இது புதுசா இருக்கே” என்றாள் திவ்யா.

“காதலிக்கிற பொண்ணுகிட்ட தோத்து போறதுதான் காதல்ல ஜெயிக்கிறதுக்கான வழி” என்றான் மார்க்ஸ்.

திவ்யா யோசனையும் புன்னகையுமாக அவனைப் பார்த்தாள்.

“என்ன யோசிக்கிற?”

“உன்ன நான் லவ் பண்ணலைன்னு சொல்றேன். ஆனா, லவ் பண்ற பொண்ணு எப்படியெல்லாம் நடந்துப்பாளோ அப்படியெல்லாம் உன்கிட்ட நான் நடந்துக்கிறேன்ல?”

மார்க்ஸ் அவளை உற்றுப் பார்த்தான்.

“திவ்யா”

“ம்”

“5 நிமிஷம் ட்ராவல் பண்ற ஒரு ஆட்டோல ஏறுறதுக்கு முன்னாடி அந்த டிரைவர் எப்படின்னு யோசிச்சுட்டுதான் ஏத்துறோம். வாழ்க்கை பூரா ஒருத்தன் கூட ட்ராவல் பண்றோம்றப்ப நிறைய கேள்விகள், குழப்பங்கள், யோசனைகள் வர்றது சகஜம்தான். தட்ஸ் ஓகே”

“அதெல்லாம் சரிதான்… ஆனா கடைசியில உன்ன நான் வேணாம்னு சொல்லிட்டா என்ன பண்ணுவ?”

மார்க்ஸ் அவளை சற்று நேரம் பார்த்தவன், “உனக்கு கொடுத்து வச்சது அவ்வளவு தான்னு நினைச்சுப்பேன்” என சிரித்தான்.

திவ்யாவும் சிரித்தாள். சட்டென எழுந்து அவன் அருகே அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும் எனத தோன்றியது அவளுக்கு. அவசரமாக அந்த நினைவை உதறினாள் திவ்யா. ஈயம் பித்தளைகளை சட்டென ஏற்றுக் கொள்ளுகிற மனது தங்கத்தைத்தான் சந்தேகத்துடன் உரசி உரசிப் பார்க்கும். தான் நேசிக்கும் ஆணிடம்தான் பெண் கோபப்படுவாள், விட்டு கொடுக்க மாட்டாள். வீம்பு பிடிப்பாள், கெஞ்ச மாட்டாள், மன்னிப்பு கேட்க மாட்டாள்.

மார்க்ஸும் திவ்யாவும் வீடு திரும்பிய போது நந்திதா உறங்கிப் போயிருந்தாள். ஒன்றாக வீடு திரும்பும் தங்களிடம் நந்திதா என்னவெல்லாம் கேள்வி கேட்ககூடும் என யோசித்து அதற்கான பதில்களையும் மனதிற்குள் ஓட்டியபடி வீடு திரும்பிய மார்க்ஸுக்கு அவள் உறங்கிப் போயிருந்தது சற்று ஆறுதலாக இருந்தது.

நந்திதா பற்றி யோசித்தபடியே உறங்கிப்போன மார்க்ஸ் காலையில் எழுந்து போனை பார்த்தான். போன் ஸ்கிரீனில் நந்திதாவிடம் இருந்து மேசேஜ் ஒன்று வந்திருப்பதாக காட்டியது. யோசனையும் தயக்கமுமாக மார்க்ஸ் அந்த மேசேஜைத் திறந்தான்.

“தேங்யூ சோ மச் பாஃர் எவ்ரிதிங்!”

அந்த நன்றிக்கு பின்னால் கோபமும் ஏமாற்றமும் வருத்தமும் கொட்டிக் கிடந்ததை மார்க்ஸால் உணரமுடிந்தது. சில நிமிடங்கள் மெளனமாக அமர்ந்திருந்தான். காலையில் திவ்யா தாங்கள் ஐஸ்கிரீம் பார்லர் சென்றதை நந்திதாவிடம் சொல்லியிருப்பாள் என்பது அவனுக்குப் புரிந்தது. மீதி கதைகளை அவள் யூகித்திருக்க கூடும். பக்கத்து அறைக்கதவை தட்டி நந்திதாவிடம் உடனடியாகப் பேச வேண்டும் போலிருந்தது அவனுக்கு. அந்த உணர்வை கட்டுப்படுத்திக் கொண்டான். அவனால் அவளது வலியை உணரமுடிந்தது. ஏதோ ஒரு விதத்தில் தான் அதற்கு காரணமாகிவிட்டதை நினைத்து அவனுக்கு வருத்தமாகவும் இருந்தது.

மார்க்ஸ் அலுவலகம் செல்ல குளித்து தயாராகி ஹாலுக்கு வந்தான். நந்திதாவின் அறை பூட்டியிருந்தது. கதவை தட்டலாமா என அவன் யோசிக்கும் சமயம் திவ்யா அவளது அறையிலிருந்து வெளியே வந்தாள்.

“நந்து ஆபிஸ் கிளம்பிட்டா” என்றாள் திவ்யா.

“அப்படியா… வழக்கமா என்னோடதான வருவா?”

“ஏதோ வேலை இருக்குன்னு நினைக்கிறேன்.. கொஞ்சம் சீக்கிரமாவே ஆட்டோ பிடிச்சு கிளம்பிட்டா”

நந்திதா கோபித்துக் கொண்டிருக்கிறாள், அவனைத் தவிர்க்கிறாள் என்பது மார்க்ஸூக்குப் புரிந்தது. அதை திவ்யாவிடம் காட்டிக் கொள்ளாமல்,

“ஓ... நீ எப்படி போற” எனத் தயக்கமாக்க கேட்டான் மார்க்ஸ்

“நான் ஷூட்டிங் ஸ்பாட் போறேன். ஆபிஸ் கார் வந்திருக்கு... இன்னைக்கு நீ தனியாதான் ஆபிஸ் போகணும்” எனச் சொல்லி சிரித்துவிட்டு அவள் நடந்தாள். நீண்ட நாள்களுக்குப் பிறகுதான் தனியாக ஆபிஸ் போகிறோம் எனத் தோன்றியது மார்க்ஸூக்கு.

மார்க்ஸ் தனது அறையில் அமர்ந்திருந்தான். அவனது அறைக்கதவை தட்டிவிட்டு திவ்யா உள்ளே நுழைந்தாள்.

மார்க்ஸ் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

“நீ ஷூட்டிங் ஸ்பாட் போறன்னு சொன்னியே”

“ஆமா… போற வழியில பிரசாத் போன் பண்ணி உடனே ஆபிஸ் வர சொல்லிட்டாரு!”

“என்ன விஷயம்” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“சவுத் ஹெட் தருண் வந்திருக்காரு” என்றாள் திவ்யா.

“வரட்டும்” என அலட்சியமாக சொன்னான் மார்க்ஸ். ஆனாலும் அவன் மனதிற்குள் எதற்காக அவன் இப்போது வந்திருக்கிறான் என்கிற எண்ணம் ஓடியது. “என்னயா சீரியல் எடுத்து வச்சிருக்கே” என அவன் காரணமில்லாமல் தன்னைத் திட்டியது மார்க்ஸின் நினைவுக்கு வந்து போனது.

“என்ன யோசிக்கிற?” என்றாள் திவ்யா.

“ஒண்ணும் இல்ல!”

“இங்க பார் அவரு சில ப்ரமோஷன்ஸ் பத்தி அனவுன்ஸ் பண்ணதான் வந்திருக்கிறதா பேசிக்கிறாங்க”

மார்க்ஸ் திவ்யாவை உற்றுப் பார்த்தான்.

“என்ன புரோகிராமிங் ஹெட்டா அவரு அனவுன்ஸ் பண்ண வாய்ப்பிருக்குன்னு பாம்பேல இருந்து போன் பண்ணாங்க”

“நல்ல விஷயம்தானே” என்ற மார்க்ஸின் குரலில் உற்சாகம் இல்லாததை திவ்யா கவனித்தாள்.

“நமக்குள்ள பதவியில என்ன இருக்கு... நான் பேருக்கு ஹெட்டா இருந்தாலும் பிடிச்ச விஷயங்கள பண்றதுக்கான ஃபிரீடம் உனக்கு எப்பவுமே இருக்கு… அதனால அவன் அனவுன்ஸ் பண்ணதும் கோச்சுக்கிட்டு எந்திரிச்சு போயிடாத!”

மார்க்ஸ் மெளனமாக இருந்தான்.

“பத்து நாள் முன்னால நீ தான் சொன்ன உன் லீடர்ஷிப்ல வேலை செய்ய எனக்கு சம்மதம்னு... அது வெறும் வார்த்தையில்லைன்னு நான் நம்புறேன்!”

மார்க்ஸின் மெளனம் நீடித்தது.

“நேசிக்கிற பொண்ணு கிட்ட தோத்து போறது தான் நிஜமா ஜெயிக்கிறதுன்னு நீ சொன்னது உண்மையான்னு பார்ப்போம்” எனச் சொல்லிவிட்டு திவ்யா நகர்ந்து சென்றாள். அன்புக்கும் தன்மானத்துக்கும் நடுவில் தான் மாட்டிக் கொண்டிருப்பது மார்க்ஸுக்குப் புரிந்தது.

அலுவலகத்தின் கேன்டீனில் அலுவலகத்தின் மொத்த பேரும் கூடியிருக்க அலோக், பிரசாத், செல்லப்பா மூவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

திவ்யாவின் அருகில் ஏஞ்சலும் மற்றவர்களும் நிற்க, மார்க்ஸின் டீம் அவனது அருகில் நின்றிருந்தது.

என்ன செய்யலாம் என மார்க்ஸ் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். மார்க்ஸின் மனம் பதிலேதும் சொல்லாமல் அமைதியாகயிருந்தது.

நடக்கப்போவது குறித்து அவனது அணியில் அனைவரும் அறிந்திருந்தார்கள். பிரசாத், அலோக்கின் கூடுதல் சந்தோஷம் அதை உறுதி செய்வதாகயிருந்தது. ஏஞ்சல் மார்க்ஸையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பாண்டியா அந்த ஏஞ்சலை கவனிச்சியா?” என்றார் நெல்லையப்பன்.

“பார்த்தேன்... பார்த்தேன்... சந்தோஷத்தை அப்படியே அடக்கிட்டு இருக்கா... அவனுங்க திவ்யாதான் ஹெட்டுன்னதும் எப்படி குதிப்பா பாரு!”

“பேசாம நம்ம வெளிய போயிடலாமா?”

“அப்படியெல்லாம் ஒளியக் கூடாது மாமா... அவனுங்க சொன்னதும் இதை நம்ம ஒத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டு கெத்தா வெளிய போகணும். அப்பதான் அவனுங்களுக்கு செருப்பாலடிச்ச மாதிரி இருக்கும்” என்றான் பாண்டியன்.

மார்க்ஸ் திரும்பி அவர்களைப் பார்த்தான்.

“ஆமா தல... இதுக்கு மேல பொறுத்துக்க சொல்லாத... நீ என்ன வேணா முடிவெடு... எங்களை கம்பெல் பண்ணாதே!”

மார்க்ஸுக்கு என்ன சொல்வது எனத தெரியவில்லை.

மேனன், தாட்சா, சவுத் ஹெட் தருண் மூவரும் கேனடீனுக்குள் நுழைய மெல்ல சலசலப்பு அடங்கி அமைதியானது.

திவ்யா கிசுகிசுக்கும் குரலில் ஏஞ்சலிடம், “அனவுன்ஸ் பண்ணதும் அமைதியா இருங்க... மார்க்ஸையோ அவன் டீமையோ ஹர்ட் பண்ற மாதிரி ஏதாவது பண்ணிடாதிங்க” என்றாள்.

ஏஞ்சல் நக்கலான சிரிப்புடன் தலையாட்டினாள். அந்த சிரிப்பே அவங்களை என்ன செய்யுறேன் பாருங்க என்பது போலிருந்தது.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

தருண் ஓரடி முன்னால் வந்து நின்றான். தொண்டையை செருமிக் கொண்டவன் ஆங்கிலத்தில் பேசத் துவங்கினான்.

“குட்மார்னிங்... ஆரஞ்ச் டிவிய நம்ம கம்பெனி டேக் ஓவர் பண்ணப்ப, கம்பெனியோட ஷேர் ஹோல்டர்ஸ் பார்ட்னர்ஸுக்கு இதுல பெரிய நம்பிக்கையில்ல. புதுசாவே ஒரு சேனல் ஆரம்பிக்கலாம், எதுக்கு சுமாரான ஒரு சேனலை டேக் ஓவர் பண்ணணும். அதுவும் பெரிய பணம் குடுத்துன்னு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா எம்டி இந்த சேனலை ரொம்ப நம்புனாரு. அந்த நம்பிக்கை இந்த 6 மாசத்துல எல்லோருக்கும் வந்திருக்கு. அதுக்கு முக்கியமான காரணம் நீங்கதான். உங்க எல்லாரையும் அதுக்காக நான் மனசார பாராட்டுறேன்...”

அனைவரும் படபடவென சந்தோஷமாக கை தட்ட கேன்டீன் முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்தது.

“இந்த வெற்றி இப்படியே தொடர்றதுக்கு சரியான தலைமை வேணும். அதுக்கு தகுதியானவங்களுக்கு அந்தப் பதவிகளை குடுத்தே ஆகணம். இந்த சேனலோட பிஸினஸ் ஹெட், புரோகிராமிங் ஹெட் யாருன்னு நான் இப்ப அனவுன்ஸ் பண்ணப் போறேன்.”

ஒரே சமயத்தில் ஏஞ்சலும், திவ்யாவும் திரும்பி மார்க்ஸை பார்த்தார்கள். அவன் சீரியசாக தருணைப் பார்த்தபடி இருந்தான்.

“ரொம்ப யோசிச்சுதான் இந்தப் பதவிக்கான ஆட்களை நாங்க முடிவு பண்ணி இருக்கோம். அதனால நாங்க யாரை தேர்ந்தெடுத்தாலும் மத்தவங்க கம்பெனி முடிவை ஏத்துகிட்டு அவங்களுக்கு தங்களோட முழு சப்போர்ட்டை கொடுக்கணும்னு நான் கேட்டுக்கிறேன்!” என்றபடி தருண் மார்க்ஸைப் பார்த்தான். அவன் மார்க்ஸைப் பார்த்ததை அனைவரும கவனித்தார்கள். மார்க்ஸும் அவனது டீமும் தருண் முடிவை சொன்னதும் என்ன செய்யப்போகிறார்கள் என்கிற ஆர்வம் அங்கிருக்கும் அனைவருக்குமே இருந்தது.

“முதல்ல பிஸினஸ் ஹெட். மிஸ்டர் மேனனைத் தவிர அந்த பதவிக்கு தகுதியான ஆள் யார் இருக்க முடியும்” என தருண் சொல்ல தாட்சா புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு நிஜமாகவே சந்தோஷமாக இருந்தது.

“ஆனா வழக்கம் போல மேனன் அதை வேணாம்னு சொல்லிட்டாரு. அதனால ICE NETWORK-கின் பிஸினஸ் டெவலப்மென்ட் பிரசிடென்ட்டா கம்பெனி அவரை நியமிச்சிருக்கு!”

தருண் சொல்லி முடித்த அடுத்த கணம் கரவொலியில் கேன்டீனே அதிர்ந்தது. தாட்சா ஆச்சர்யமும் சந்தோஷமும் மேலிட மேனனைப் பார்த்தாள். மேனன் வழக்கமான புன்னகையுடனிருந்தார்.

“புது புது சேனல்களை இந்தியா முழுக்க ஆரம்பிக்கிறதுதான் மேனனோட வேலையா இருக்கும். ஏற்கெனவே இருக்கிற சேனல்களை டெவலப் பண்றதுக்கான அதிகாரத்தையும் அவருக்கு கம்பெனி குடுத்திருக்கு. மேனன் நினைச்சா யாரை வேணா கேள்வி கேட்க முடியும். என்னையும் சேர்த்து!” என்றான் தருண்.

மேனன் புன்னகையுடன் அவன் தோளைத் தட்டினார்.

“மேனன் இந்தப் பதவி வேணாம்னு சொல்லிட்டதால இந்த சேனலோட பிஸினஸ் ஹெட்டை தேர்ந்தெடுக்குறது ரொம்ப ஈஸியாயிடுச்சு... தாட்சா பிஸினஸ் ஹெட்டா கன்டின்யூ பண்றாங்க” என தருண் முடிக்க...

மீண்டும் அனைவரும் கரவொலி எழுப்பினர்.

தருண் தாட்சாவை பார்த்து திரும்பியவன் “கங்கிராட்ஸ்” என்றான். தாட்சா “தேங்க் யூ” எனப் புன்னகையுடன் தலையசைத்து அதை ஏற்றுக் கொண்டாள்.

“அடுத்து சேனலோட புரோகிராமிங் ஹெட்”

அனைவரும் அமைதியானார்கள்.

“அது யாருன்னு முடிவு பண்றதுதான் எங்களுக்கு ஒரு பெரிய டாஸ்க்கா இருந்தது” என தருண் சொல்ல அனைவரது முகத்திலும் அதைத் தெரிந்து கொள்கிற ஆவல் தெரிந்தது.

தாட்சா, மார்க்ஸைப் பார்த்தாள். அவன் தாட்சாவை பார்த்தான். தாட்சா தனது கரத்தை லேசாக ஆட்டி அவனை பொறுமையாக இருக்குமாறு சைகை செய்தாள். மார்க்ஸ் மெலிதாக புன்னகைத்தான். அவன் அப்படி புன்னகைத்தால் ஏதாவது விவகாரமாகப் பண்ண போகிறான் என அர்த்தம் என்பது தாட்சாவுக்குத் தெரியும்.

“மார்க்ஸ் அல்லது திவ்யா இந்த ரெண்டு பேர்ல யார் இந்த பதவிக்கு சரியான ஆள்ன்னு நிறைய யோசிச்சு இந்த முடிவை எடுத்திருக்கோம்!”

திவ்யா மார்க்ஸைப் பார்த்தாள். மார்க்ஸ் அவள் பார்வையை தவிர்த்தவன், புன்னகையுடன் தருணை பார்த்தபடி இருந்தான்.

“நிறைய விஷயங்களை யோசிச்சுப பார்த்து... இந்தப் பதவிக்கு சரியான ஆள்னு கம்பெனி முடிவு பண்ணது யாரைன்னா...” என சின்ன புன்னகையுடன் நிறுத்திய தருண்,

“கார்ல் மார்க்ஸ்” என்று சொல்ல மார்க்ஸ் அணியினர் ஒரு கணம் திகைத்து போனார்கள். அது மார்க்ஸ் பெயர்தான் என்பது தாமதமாக அவர்களுக்கு உறைக்க ஓவென்ற பெரும் கூச்சல் எழும்பியது. மொத்த ஆரஞ்ச் டிவியும் கரவொலி எழுப்ப முற்றிலும் அதை எதிர்பாராத மார்க்ஸ் தடுமாறி திவ்யாவைப் பார்க்க அவளும் அதை எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது முகம் காட்டியது. ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் உதடுகள் துடிக்க கண்கள் கலங்க அவள் கை தட்ட மார்க்ஸ் அவளையே பார்த்தபடியிருந்தான்.

- Stay Tuned...