Published:Updated:

இடியட் பாக்ஸ் - 43: மார்க்ஸா, திவ்யாவா… ஒரு நிறுவனத்துக்கு யார் முக்கியம்?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 43: மார்க்ஸா, திவ்யாவா… ஒரு நிறுவனத்துக்கு யார் முக்கியம்?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பீச் ஸ்டேஷன். தட தடவென்ற சத்ததுடன் எலெக்ட்ரிக் ட்ரெயின் ஒன்று வந்து நின்றது. மதிய நேரம் என்பதால் பிளாட்ஃபார்மிலும், ட்ரெயினிலும் கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. ட்ரெயினிலிருந்து சிலர் இறங்க, பிளாட்ஃபார்மில் காத்துக் கொண்டிருந்த சிலர் வண்டியில் ஏற மெதுவாக கிளம்பிய வண்டி சில நொடிகளில் வேகமெடுத்து ஸ்டேஷனை விட்டு காணாமல் போக மீண்டும் ஸ்டேஷன் அமைதியானது.

திவ்யா அங்கிருந்த பென்ச் ஒன்றில் அமர்ந்திருந்தாள். முகம் தெரியாத மனிதர்களுக்கு மத்தியில் தனியாக அமர்ந்திருப்பது ஆறுதலாக இருந்தது அவளுக்கு.

அவளது போன் அடித்தது. எடுத்து பேச மனமில்லாமல் சைலன்ட் பட்டனை அழுத்தினாள் திவ்யா.

தன்னை புரோகிராமிங் ஹெட்டாக அறிவித்தவுடன் மார்க்ஸை எப்படி எல்லாம் சமாதானம் செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தவள் இப்போது தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள வழி தெரியாமல் தவித்தாள். இந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என அவளுக்கு புரியவில்லை.

ஒரு சாதாரண நிகழ்ச்சி தயாரிப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு ஒரு சேனலின் புரோகிராமிங் ஹெட்டாக உயர்ந்தவள் அவள். மீண்டும் இன்னொருவருக்கு கீழ் வேலை செய்வது பணி ரீதியாக பின்னடைவுதான். சேனல் தன்னை கைவிட்டதாக உணர்ந்தாள் அவள். அடுத்து என்ன செய்யலாம் என அவளது மனது பரபரவென யோசித்தது.

இது மேனனின் முடிவல்ல என்பது அவளுக்குப் புரிந்தது. தன்னுடன் நெருக்கமாக இருக்கும் மும்பை ஆபிஸ் ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தது என்கிற கேள்வி அவளுக்குள் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது.

…………………….

மேனன் அறையில் தருணும் மேனனும் மட்டும் இருந்தார்கள்.

“என்ன மேனன் சந்தோஷம்தான?” எனக் கேட்டான் தருண்.

“எதுக்கு?” என்றார் மேனன்.

“உன்னோட பையன் புரோகிராமிங் ஹெட்டாகியிருக்கான்... அது உனக்கு சந்தோஷம் இல்லையா?”

“திவ்யாவும் என்னோட பொண்ணுதான்” என்றார் மேனன்.

தருண் சிரித்தபடி, “மார்க்ஸுக்கும் உனக்கும் ஒரு தனி கனெக்ட் உண்டுன்னு எனக்குத் தெரியும்” என்றான்.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல...”

“அத விடு... இந்த விஷயம் பத்தி நீ என்ன யோசிக்கிறேன்னு சொல்லு” என்றான் தருண்.

“இதை கொஞ்சம் தள்ளி போட்டிருக்கலாம்!”

“நேஷனல் ஹெட் தெளிவா சொல்லிட்டாரு... புரோகிராமிங் ஹெட் பிஸினஸ் ஹெட்டுன்னு ஒருத்தரை ஃபிக்ஸ் பண்ணியே ஆகனும்னு... நல்லதோ கெட்டதோ ஒருத்தர் ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்துக்கணும்.. அப்பதான் சரியா வரும்.”

மேனன் சற்று யோசித்தவர், “எதுக்காக நீ மார்க்ஸை செலக்ட் பண்ண? மூணு ஷோவோட GRP யும் ஒண்ணா சேர்த்தா திவ்யா டீமோட GRP தான அதிகம்!”

“யெஸ் யூ ஆர் ரைட்... இந்த இடத்துலதான் நான் நீ என்ன முடிவு எடுப்பேன்னு யோசிச்சு பார்த்தேன். ஒரு மேனனா நான் அந்த முடிவை எடுத்தேன்!”

மேனன் தருணை பார்த்தார். அவன் புன்னகையுடன் தொடர்ந்தான்.

“திவ்யாவோட ஷோ இன்னைக்கு நல்லா பர்ஃபார்ம் பண்ணலாம். ஆனா, சேனலோட ஃபியூச்சர் மார்க்ஸ் பண்ற ஷோலதான் இருக்கு. அந்த ஸ்கூல் ஸ்டோரி வேணாம்னு நான் அவ்வளவு சண்டை போட்டேன். ஆனா, இன்னைக்கு அந்த ஸ்கூல் ஷோதான் எல்லாரையும் நம்ம சேனலை திரும்பிப் பார்க்க வச்சிருக்கு!”

மேனன் தருண் பேசுவதைக் கேட்டபடியிருந்தார்.

“மார்க்ஸ் மாதிரி வித்தியாசமா யோசிக்கிறவங்க கிட்ட கொஞ்சம் மாஸ் ஆடியன்ஸுக்கு மசாலா சேர்த்துக்கோங்கனு சொல்ல முடியும். ஆனா வழக்கமான டிராமா யோசிக்கிறவங்க கிட்ட வித்தியாசமா யோசிங்கன்னு நாம சொல்ல முடியாது. ஏன்னா அது அவங்களுக்கு வராது. அதனாலதான் நான் மார்க்ஸை செலக்ட் பண்ணேன்... போதுமா என் விளக்கம்!”

“தருண்... திவ்யா நம்ம பெங்காலி சேனலோட புரோகிராமிங் ஹெட். ஒண்ணுமில்லாத அந்த சேனலை நம்பர் ஒண்ணா ஆக்குனது அவதான். இந்த சேனலுக்கு அவ தேவைன்னு நம்மதான் அவளை கூட்டிட்டு வந்தோம். இப்ப அவளை இன்னொரு புரோகிராமிங் ஹெட்டுக்கு கீழ வேலை செய்ய வைக்கிறது அவளோட மோட்டிவேஷனை காலி பண்ணிடும்” என்றார் மேனன்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“மேனன்.... திவ்யாவா, மார்க்ஸான்னு கேட்டா திவ்யா தான் என்னோட சாய்ஸ். ஆனா, இந்த சேனலுக்கு இப்ப மார்க்ஸ் தேவை. அதனாலதான் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டியதாயிருக்கு. திவ்யா அத புரிஞ்சுப்பான்னு நினைக்கிறேன்” என்றான் தருண்.

“அனவுன்ஸ் பண்றதுக்கு முன்னால நம்ம திவ்யா கிட்ட இத பத்தி பேசியிருக்கலாம்!”

“இப்ப வர்ற பிரச்சனை முன்னாடியே வந்திருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். திவ்யாவோட சுயமரியாதைக்கோ கெளரவத்துக்கோ எந்த குறையும் வராம நம்ம பார்த்துக்கலாம். பதவியில என்ன இருக்கு? நான் தான் சவுத் ஹெட். ஆனா, நீ என்னைக்காவது என் பேச்சை கேட்டிருக்கியா சொல்லு” என சிரித்தான் தருண். மேனனும் புன்னகைத்தார்.

“நம்ம எல்லாரும் கம்பெனிக்காக வொர்க் பண்றோம் அவ்வளவுதான். திவ்யாவுக்கு அது புரியும்” என அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் தருண்.

“எப்படியிருக்கு மேடம் உங்க புது ரூம்?” என தாட்சாவிடம் கேட்டான் பிரசாத்.

தல்வார் டவரில் இன்னொரு தளத்தையும் ஆரஞ்ச் டிவிக்காக சில மாதங்களுக்கு முன் வாடகைக்கு எடுத்து அதில் சில பெரிய அறைகளையும் புது கான்ஃபிரன்ஸ் ரூம்களையும் செல்லப்பாவும் பிரசாத்தும் தயார் செய்து கொண்டிருந்தது தாட்சாவுக்குத் தெரியும். அது இதற்காகதான் என்பது இப்போதுதான் தாட்சாவுக்குப் புரிந்தது.

தாட்சா அறையை சுற்றிப் பார்த்தாள்.

ஏற்கனவே தாட்சா இருந்த அறையை விட இரண்டு மடங்கு பெரியதாக இருந்தது. ஒரு பக்கம் முழுக்க கண்ணாடி சுவர் அதன் வழியாக சென்னையின் உயர்ந்த கட்டடங்கள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரிந்தன. அமர்ந்து வேலை செய்வதற்கான நீண்ட மேஜை, புத்தகங்கள் வைத்துக் கொள்வதற்கான பெரிய அலமாரி, குறிப்புகள் எழுதுவதற்கான கண்ணாடியில் ஆன பெரிய போர்ட், ஒரு பக்க சுவர் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு 85 இன்ச் பெரிய டிவி, அறை மூலையில் நான்கு பக்கம் சோஃபா, நடுவில் டீப்பாய் என பார்க்க வருபவர்களை சந்திக்க அழகான செட்டப். குட்டி ஃபிரிட்ஜ் ஒன்று. அந்த அறைக்கு வெளியிலேயே அவர்களுக்கான செகரட்டரிகள் அமர்வதற்கான தனி அறை. அவர்கள் அனுமதி பெற்றுதான் யாரும் உள்ளே வர முடியும்.

இதைப்போல நான்கு அறைகள் வரிசையாக இருந்தன.

“பக்கத்து ரூமெல்லாம் யாருக்கு?” எனக் கேட்டாள் தாட்சா.

“இது உங்களோடது. உங்களுக்கு பக்கத்து ரூம் மார்க்ஸோடது!”

இதைச் சொன்ன பிரசாத்தின் குரலில் மெல்லிய வருத்தமிருந்ததை தாட்சாவால் உணர முடிந்தது.

“திவ்யா வருவாங்கன்னுதான் சொன்னாங்க... அவங்களுக்கு தெரியாமலேயே அவங்களோட ஃபேவரைட் கலர் ஸ்கீம்ல ரூம் ரெடி பண்ணோம். ஆனா, திடுதிப்புன்னு மார்க்ஸ்தான் ஹெட்டுன்னு சொல்லிட்டாங்க!”

மொத்த சேனலும் திவ்யா தான் அடுத்த புரோகிராமிங் ஹெட் என நினைத்துக் கொண்டிருந்திருக்கிறது என்பது தாட்சாவுக்கு புரிந்தது.

“அடுத்த ரூம் சீயோன் சாருக்கு, இன்னொரு ரூம் தருண் சார் இங்க வரும் போது யூஸ் பண்றதுக்கு!”

“அப்ப மேனனுக்கு?” அவளை அறியாமல் வார்த்தைகள் வந்து விழுந்தன.

“அவரு கீழ இருக்கிற ரூம் போதும்னு சொல்லிட்டாரு” என்றான் பிரசாத்.

“ஓ” என்றாள் தாட்சா.

“உங்க திங்ஸ் எல்லாம் மாத்த சொல்லிட்டேன் மேடம்” என்றான் பிரசாத்.

“அதுக்குள்ள என்ன அவசரம்?”

“இன்னைக்கு நல்ல நாள் அது தான்”

தாட்சாவால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை.

“நான் வரேன் மேடம்” என பிரசாத் அங்கிருந்து நகர்ந்தான்.

தாட்சா மீண்டும் ஒரு முறை அந்த அறையை சுற்றிப் பார்த்தாள். அது தன்னை விழுங்க காத்திருப்பது போல அவளுக்கு தோன்றியது. அந்த அறை அவள் தான் அந்த சேனலின் சர்வ வல்லமை படைத்தவள் என்பதை சொல்லாமல் சொல்லியது.

இடியட் பாக்ஸ் | தாட்சா
இடியட் பாக்ஸ் | தாட்சா

“ஹாய்” என்ற குரல் கேட்டு தாட்சா திரும்ப மேனன் நின்று கொண்டிருந்தார்.

“நைஸ் ரூம்” என்றார் மேனன்.

தாட்சா அவரையே பார்த்தபடி இருந்தாள்.

“என்னங்க அப்படி பாக்குறீங்க... ரூம் பிடிக்கலையா?”

“எதுக்காக எனக்கு இந்த ப்ரமோஷன்?”

“அது நீங்க தருண் கிட்டதான் கேக்கணும்” என சிரித்தார் மேனன்.

“மேனன் நம்ம சேனலை மாத்துனது நீங்க... ப்ரமோஷன் மட்டும் எனக்கா?”

“ஐடியாதான் என்னோடது... எக்ஸிக்யூஷன் உங்களோடதுதான!”

“இது நீங்க இருக்க வேண்டிய ரூம்!”

“சத்தியமா இல்லை தாட்சா... எனக்கு இது சரிப்பட்டு வராதுன்னு தருண்ல இருந்து எம்.டி வரைக்கும் எல்லாருக்குமே நல்லா தெரியும்” என்றார் மேனன்.

“ஏன் அப்படி?” என கேட்டாள் தாட்சா.

“சின்ன வயசுல ஜெயிச்சிட்டா அதான் பிரச்னை… அதுக்கப்புறம் என்ன செய்யுறதுன்னு தெரியாம போயிடும். நான் நேஷனல் ஹெட்டானப்ப எனக்கு வயசு வெறும் 32. அதான் கம்பெனியில இருக்கிறதிலேயே பெரிய பதவி. அதுக்கப்புறம் என்ன பண்றது... 3 வருஷத்துல அந்த வேலை எனக்கு போரடிச்சிருச்சு. தூக்கி போட்டுட்டு ஒரு வருஷம் சும்மா இருந்தேன்!”

“சும்மா இருந்தீங்களா?”

“சும்மா இல்ல... ஊர்ல வீடு கட்டினேன்” எனச் சிரித்தார் மேனன்.

தாட்சா அவரை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

“சிமென்ட் செங்கல் வாங்குறதுல ஆரம்பிச்சு, வேலை செய்றவங்களுக்கு காபி டீ போடுற வரைக்கும் நான்தான் பார்த்துகிட்டேன். 8 மாசம் நானே கூட இருந்து வீடு கட்டினேன். ரொம்ப ஜாலியா இருந்துச்சு... அது ஒரு பியூட்டிஃபுல் எக்ஸ்பீரியன்ஸ். அப்புறம் ஒரு 6 மாசம் புது வீட்டுக்கு ஃபர்னிச்சர் வாங்குறேன்னு இந்தியா பூரா சுத்திகிட்டு இருந்தேன். அப்ப தான் திரும்பவும் எம்.டி கிட்ட மாட்டுனேன். வேலைக்கு வந்தே ஆகணும்னு இழுத்திட்டு வந்திட்டாரு.”

மேனன் பேசுவதை ஆச்சர்யமாக தாட்சா கேட்டுக் கொண்டிருந்தாள்.

“திரும்ப வேலைக்கு சேர்றப்ப எம்.டி கிட்ட கண்டிப்பா சொல்லிட்டேன். எப்ப வேலை போரடிச்சாலும் எஸ்கேப்பாயிடுவேன்னு. அவரும் ஒத்துகிட்டாரு. ஒரு மராத்தி சேனல் லான்ச் பண்ணோம். அப்புறம் ஒரு நியூஸ் சேனல், அப்புறம் நம்ம பெங்காலி சேனல் இப்ப இங்க... இப்படி எனக்கு போரடிக்காம கம்பெனி பார்த்துக்குது”

“அடுத்து எங்க?”

“ஆரஞ்ச் டிவி பிஸினஸ் ஹெட்டுக்கு ஆட்சேபனை இல்லேன்னா சென்னையிலயே செட்டில் ஆகலாம்னு யோசிக்கிறேன். நீங்கதான் மனசு வைக்கணும்” எனச் சிரித்தார் மேனன்.

“இப்படி சட்டுன்னு வேலையத் தூக்கி போடுறப்ப கஷ்டமா இல்லையா” எனக் கேட்டாள் தாட்சா

“ஸ்மோக்கிங் டிரிங்கிங் மாதிரி வேலையும் ஒரு அடிக்‌ஷன்தான். விடுறப்ப ரொம்ப கஷ்டமாதான் இருக்கும். அது இல்லாம முடியாதுன்னு தோணும். கொஞ்சம் சமாளிச்சு தூக்கி போட்டுட்டா அப்புறம் சந்தோஷமா இருக்கலாம்” என்றார் மேனன்.

“அப்ப நானும் இத தூக்கி போட்டுடுறேன். என்னையும் உங்க கூட கூட்டிட்டுப் போங்க!”

“எங்க கூட்டிட்டுப் போறது?”

“வீடு கட்டலாம், இந்தியா பூரா ஃபர்னிச்சர் தேடலாம்” என்றாள் தாட்சா.

மேனன் சிரித்தார்.

“என்ன சிரிப்பு?”

“இந்த இடத்துக்கு வர்றதுக்கு எவ்வளவு வொர்க் பண்ணியிருப்பீங்க... கொஞ்ச நாள் இத அனுபவிங்க... போரடிக்கும் போது யோசிக்கலாம்.”

"போரடிக்கலைன்னா”

"கன்டின்யூ பண்ணுங்க தாட்சா. எது பண்ணாலும் பிடிச்சு பண்ணனும் அவ்வளவுதான்!”

“எனக்கு எது பிடிச்சிருக்கு தெரியுமா?”

“எது?” என ஆர்வமாகக் கேட்டார் மேனன்.

“வேலையோ, வீடு கட்டுறதோ... இல்ல சும்மா ஊர் சுத்துறதோ எதுன்னாலும் எனக்கு ஓகே. நீங்க கூட இருக்கணும் அவ்வளவுதான்!”

மேனன் சட்டென தாட்சாவை நிமிர்ந்து பார்த்தார்.

தாட்சா புன்னகைத்தாள். அந்தப் புன்னகையில் வெட்கம், அன்பு, காதல் என அனைத்தும் கலந்திருந்தது.

“என்ன கூட இருப்பீங்களா?”

“அத விட சந்தோஷம் வேறென்ன இருக்கு?” என்றார் மேனன்.

தாட்சா புன்னகைத்தாள்.

“ஆல் த பெஸ்ட் ” என்றார் மேனன்.

“தேங்க்யூ மேனன்” என மேனனின் கரத்தைப் பற்றி குலுக்கினாள் தாட்சா. கரங்கள் பிரிய மனமின்றி பிரிந்தன.

பிரசாத் அறைக்கதவு தட்டப்பட அவன் நிமிர்ந்து பார்த்தான்.

நெல்லையப்பன், பாண்டியன், வினோ. டார்லிங் என மார்க்ஸ் டீம் அனைவரும் கையில் ஸ்வீட் பாக்ஸுடன் நின்று கொண்டிருந்தார்கள்.

“என்ன நெல்லையப்பா?” என்றான் பிரசாத்.

“ஸ்வீட் சார்... ஸ்வீட்... ஸ்வீட்”

“என்ன விசேஷம்?”

“மார்க்ஸ் ஹெட்டாயிருக்காப்டில்ல அதான்!”

“அதுக்கு அவன்ல ஸ்வீட் குடுக்கணும்... நீ ஏன்யா குடுக்குற?”

“உங்க வொய்ஃபுக்குதான் குழந்தை பொறந்திச்சு... அதுக்கு நீங்க ஸ்வீட் குடுக்கலையா?”

அனைவரும் சிரிக்க பிரசாத் முகம் இருண்டது.

“எடுங்க சார்...” என பாக்ஸை நீட்டினார் நெல்லையப்பன். அதை எட்டிப் பார்த்தவன்,

“என்னய்யா இது அல்வா” என்றான்.

“ஆமா சார்... எவ்வளவு நாள்தான் நீங்களே குடுப்பீங்க... அதான் ஒரு சேஞ்சுக்கு நாங்க குடுக்கலாம்னு!”

“என்னய்யா வம்பிழுக்கணும்னே வந்திருக்கீங்களா?"

“அல்வாவும் ஸ்வீட் தான சார். குடுத்தா எடுத்து வாயில போடுறத விட்டுபுட்டு... வளைச்சு வளைச்சு கேள்வி கேட்டு வாங்கி கட்டிக்கிட்டா நாங்க என்ன செய்ய முடியும்?”

“ஆடுங்கய்யா... ஆடுங்க... எவ்வளவு நாள்னு பாக்குறேன்” என பிரசாத் அல்வாவை எடுத்துக் கொண்டான்.

“மேல இருக்குறவன் மியூசிக் போடுற வரைக்கும் ஆட வேண்டியதுதான் சார். அவன் பிளக்க புடுங்குனதும் அடங்கிட வேண்டியதுதான்!”

அவர்கள் சிரித்தபடி அறையை விட்டு வெளியே வந்தார்கள்.

“பாண்டியா” என்றார் நெல்லையப்பன்.

“சொல்லு மாமா!”

“ஓவரா எல்லாரையும் வெறுப்பேத்துரமோ?”

“ஆமா மாமா”

“இந்த அண்ணாமலை மொமன்ட் வாழ்க்கையில எப்பவாவதுதான் வருது. அதை அனுபவிக்க கூடாதுன்னா எப்படி!” எனச் சிரித்தார் நெல்லையப்பன்.

“அடுத்து எங்க மாமா?”

“இந்த ஏஞ்சலை மட்டும் வெறுப்பேத்திட்டா போதும்பா... அதோட இன்னைக்கு கணக்க முடிச்சுக்கலாம்” என்றார் நெல்லையப்பன்.

“அந்த குள்ளநரி கூட்டத்த பாக்கவே முடியலையே மாமா” என்றான் பாண்டியன்.

“எங்கடா போயிற போறாங்க? நம்ம கிட்ட அசிங்கப்படக் கூடாதுன்னு எங்கயாவது ஒளிஞ்சுகிட்டு இருப்பானுங்க!”

“நம்ம தலைய வேற காணோமே மாமா” என்றான் பாண்டியன்.

“அதான... அனவுன்ஸ் பண்ணிட்டு ஆடிப்பாடுனதும் திரும்பி பார்த்தா ஆள காணோம்” என்றார் நெல்லையப்பன்.

திவ்யா பீச் ஸ்டேஷனில் அமர்ந்திருந்தாள்.

மெதுவாக அவள் அருகே வந்து யாரோ அமர்ந்தது போல் இருக்க அவள் தலையை திருப்பிப் பார்த்தாள். மார்க்ஸ் மெலிதாய் புன்னகைத்தான்.

“எப்படி நாம் இங்கே இருக்கிறோம் என்பது அவனுக்கு தெரிந்தது” என்ற கேள்வி அவளுக்குள் வந்தது.

“நீ அப்செட்டா ஆபிஸ் விட்டு கிளம்புனதும் பின்னாடியே நானும் வந்தேன். இங்க வந்து உட்கார்ந்த... உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு கொஞ்சம் தள்ளி வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என அவளது மனம் யோசித்த கேள்விக்கு பதில் சொன்னான் மார்க்ஸ்.

ஒட்டு மொத்தமாக அவனது ஆட்கள் அவனது வெற்றியை அலுவலகத்தில் கொண்டாடிக் கொண்டிருக்க அவன் அதை கண்டு கொள்ளாமல் தனக்குப் பின்னால் இத்தனை நேரம் காத்துக் கொண்டிருந்தான் என்ற நினைப்பே அவளுக்கு ஆறுதலாக இருந்தது. அதே சமயத்தில் மார்க்ஸின் அக்கறையில் மயங்கி தனக்கு நடந்த அநீதியை மறக்கவும் அவள் தயாராக இல்லை.

ஓரக்கண்ணால் மார்க்ஸைப் பார்த்தாள் திவ்யா. மார்க்ஸின் முகம் இறுகி போய் இருந்தது. மன்னிப்பு கேட்கிற தோரணையில் அவன் அமர்ந்திருந்தான். அவனுக்கு கிடைத்த பதவி உயர்வு அவனுக்கு சந்தோஷத்தை தராமல் சங்கடமாக இருப்பதை திவ்யா உணர்ந்தாள்.

இருவருக்கும் இடையில் கனத்த மௌனம் நிலவியது. எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பெரும் சத்தத்துடன் ஸ்டேஷனை கடந்தது. ரயிலின் வேகத்தில் இருவரது தலை முடியும் பறக்க திவ்யா மெதுவாக அதை சரி செய்து கொண்டாள்.

“நான் என்ன பண்ணட்டும்?” என தனது கைவிரல்களை பார்த்தபடி கேட்டாள் திவ்யா.

“எது சரின்னு தோணுதோ அத பண்ணு திவ்யா... ஆனா, இங்க இருந்து எங்கேயும் போயிடாத” என்றான் மார்க்ஸ்.

விரக்தியாக புன்னகைத்தவள் “அது ஒண்ணு தவிர வேற வழியில்லையே” என்றாள்.

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

மார்க்ஸுக்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை. வெற்றி என்பது முக்கியமல்ல... யாரை வெற்றி கொள்கிறோம் என்பதே முக்கியம்.

நண்பர்களை வெற்றி கொள்ளும் போது வருத்தமே மிஞ்சுகிறது. மனதிற்கு பிடித்தவர்களுடனானப் போட்டியில் வென்றாலும் தோற்றாலும் இறுதியில் இழப்பு மட்டுமே பரிசாகக் கிடைக்கிறது.

“எனக்கு ஒரு காபி வாங்கி குடேன் தலை வலிக்குது” என்றாள் திவ்யா.

அதை எதிர்பார்க்காத மார்க்ஸ் அவசரமாக எழுந்து சென்றான்.

திவ்யா காத்திருக்க, மார்க்ஸ் காபியுடன் வந்தான். திவ்யா அதை வாங்கி குடிக்க துவங்கினாள். மார்க்ஸ் அவள் அருகில் அமர்ந்தான்.

'நமக்கு நடுவில் பர்ஸனலா எந்த பிரச்னையும் இல்லை' என்பதை அந்த காபி மூலம் திவ்யா சொல்கிறாள் என்பது மார்க்ஸுக்குப் புரிந்தது.

“திவ்யா” என மார்க்ஸ் அழைக்க அவள் திரும்பி அவனைப் பார்த்தாள்.

“எது உனக்கு சரின்னு தோணுதோ அத பண்ணு” என்றான் மார்க்ஸ்.

திவ்யா தலையாட்டினாள். அந்த உறுதியான தலையாட்டல் அவள் ஏதோ முடிவெடுத்து விட்டதை மார்க்ஸுக்கு உணர்த்தியது.

மேனன் தனது அறையில் அமர்ந்திருந்தார்.

பிரசாத் தயக்கமாக உள்ளே நுழைந்தான்.

மேனன் திரும்பி அவனைப் பார்த்தார்.

“சார் தப்பா எடுத்துக்காதிங்க... ஏதாவது பிரச்னைன்னா அது என் கிட்ட வருது. அப்படி என் கிட்ட வர்ற பிரச்னையை நான் உங்க கிட்டதான் கொண்டு வர வேண்டியதா இருக்கு”

“என்னன்னு சொல்லுங்க?”

“திவ்யா டீம்ல இருந்த 10 பேரும் வேலைய ரிசைன் பண்றதா சொல்லி லெட்டர் கொடுத்திருக்காங்க சார்”

“திவ்யா”

“அவங்க இல்ல சார் அவங்க டீம் ஆளுங்க மட்டும்தான்”

மேனன் தலையாட்டி யோசித்தவர், “திவ்யாவுக்கு இந்த விஷயம் தெரியுமா?”

“தெரியல சார். போன் பண்ணி பார்த்தேன். அவங்க போன் எடுக்க மாட்டேங்குறாங்க!”

மேனன் யோசித்தார்.

“என்ன சார் பண்ணலாம்?”

“பிரச்னை என்னன்னு மார்க்ஸ் கிட்ட சொல்லுங்க... அவர் முடிவு எடுக்கட்டும்”

அந்தப் பதிலை எதிர்பார்க்காத பிரசாத் “சார்” என்றான்.

“அவர்தான புரோகிராமிங் ஹெட்... அவர் டீம்லதான 10 பேர் லெட்டர் கொடுத்திருக்காங்க... அவரையே முடிவு எடுக்க சொல்லுங்க!” என திரும்பி அவர் வேலையைத் தொடர...

மார்க்ஸ் என்ன முடிவெடுப்பான் என பிரசாத் யோசிக்கத் தொடங்கினான்.

- Stay Tuned...