Published:Updated:

இடியட் பாக்ஸ் - 44 : பேபியம்மா வீட்டில் பார்ட்டி… ஆரஞ்சு டிவி ஆஃபிஸில்?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 44 : பேபியம்மா வீட்டில் பார்ட்டி… ஆரஞ்சு டிவி ஆஃபிஸில்?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

கான்ஃபரன்ஸ் ரூமில் மேனன், தாட்சா, பிரசாத் மூவரும் ஒரு புறமும் அவர்களுக்கு எதிரே ஏஞ்சல், தனபால், மனோன்மணி, குரு, ரஞ்சித் என திவ்யாவின் டீம் ஆட்களும் அமர்ந்திருந்தனர். மார்க்ஸ் அவர்களுக்கு நேர் எதிரில் வெள்ளை நிற போர்ட் அருகே நின்று கொண்டிருந்தான்.

மார்க்ஸ் மெதுவாக தொண்டையை செருமினான். அனைவரது கவனமும் அவன் பக்கம் திரும்பியது.

“ஒருத்தர் எதுக்காக எல்லாம் வேலைய விட்டு போவாங்க?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

அறையில் மெளனம் நிலவியது. மேனன் முகத்தில் சின்ன புன்னகை… மார்க்கரால் வொயிட் போர்டில் மார்க்ஸ் எழுதத் தொடங்கினான்.

“சம்பளம் பத்தல, வேற ஒரு நல்ல வேலை கிடைச்சிருக்கு, நம்ம திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கல... எனக்கு தெரிஞ்சு இதெல்லாம் காரணமா இருக்கலாம். இப்படி ஏதாவது ஒரு விஷயத்துக்காக நீங்க வேலைய விட்டு போறதா இருந்தா தாராளமா போங்க. ஆனா எதுக்காக போறீங்கன்ற காரணத்தை மட்டும் சொல்லிட்டு போங்க!”

அனைவரும் பதில் பேச முடியாமல் மெளனமாக இருந்தனர்.

“ஒருத்தர பிடிக்கலன்றதுக்காக எல்லாம் வேலையை விட்டு போறது நியாயமே இல்லல்ல” என ஏஞ்சலைப் பார்த்தபடி மார்க்ஸ் சொன்னான்.

தாட்சா, மேனன் அருகில் குனிந்தவள், மெல்லிய குரலில் “ஒரு குட்டி மேனனா ரெடியாகுறான் போல இருக்கே!”

மேனன் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தார்.

“யாரோ ரொம்ப பெருமைபடுற மாதிரி தெரியுது!”

மேனனின் புன்னகை இன்னும் அதிகமானது. ஒரு மாணவனின் வளர்ச்சியை ரசிக்கிற ஆசிரியரின் பெருமிதம் அதில் தெரிந்தது.

“உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும் நம்ம கம்பெனி டேக் ஓவர் பண்றப்ப புரோகிராமிங் டீம்ல மொத்தம் 40 பேர் இருந்தோம். 25 பேருக்கு மேல இருக்க முடியாதுன்ற சூழ்நிலை வந்தப்ப நாம இந்த வேலையில இருக்கணும்றதுக்காக 15 பேர் அவங்களா வேலைய ரிசைன் பண்ணாங்க. அதுக்கு எல்லாம் அர்த்தமே இல்லாம பண்ணிடாதீங்க” என்றான் மார்க்ஸ்.

அறையில் கனத்த மெளனம் நிலவியது.

“என்ன பிரச்னைன்னு வாய திறந்து சொல்லுங்க...”

“கம்பெனி நியாயமா நடந்துக்கல” என்றாள் ஏஞ்சல்.

அனைவரும் அவளைப் பார்த்தனர்.

“யாரு நல்லா பர்ஃபார்ம் பண்றாங்களோ அவங்களைத்தான் புரோகிராமிங் ஹெட்டாக்குறதா சொன்னாங்க... எங்களோட மூணு சீரியலும் நல்லா பர்ஃபார்ம் பண்ணுது. உங்களோடுதுல ஒரு சீரியல்தான் ஹிட். மத்த ரெண்டும் சுமார்தான். ஆனா உங்களை புரோகிராமிங் ஹெட்டா அனவுன்ஸ் பண்றாங்க... அது நியாயமா எங்களுக்குத் தோணல... அதனால நாங்க போறோம்” என்றாள் ஏஞ்சல்.

“இதுக்காக திவ்யா வேலைய விட்டு போறேன்னு சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கு... நீங்க ஏன் வேலையை விட்டு போகணும்?” என்றான் மார்க்ஸ்.

“திவ்யாவுக்கு நடந்த அநியாயத்துக்காக நாங்க ரிசைன் பண்றோம்” என்றாள் ஏஞ்சல்.

“அப்ப தனிப்பட்ட முறையில வேற எந்த காரணமும் உங்களுக்கில்ல... அப்படித்தான?”

ஏஞ்சல் சற்று தடுமாறி, “சேனல்ல ஒரு தப்பு நடக்குது... நாங்க கேட்க கூடாதா?”

“நான் அத கேக்கல... திவ்யாவுக்கு நடந்த அநியாயத்துக்காக தான் நீங்க வேலையை ரிசைன் பண்றீங்க... மத்தபடி உங்களுக்கு பர்சனலா வேற எந்த பிரச்னையும் இல்ல கரெக்டா”

“ஆமா” என குறுக்கே புகுந்தான் தனபால்.

“தயவு செஞ்சு நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க... இந்த விஷயத்தை நான் திவ்யா கிட்ட பேசிக்கிறேன்” என்றான் மார்க்ஸ்.

“முடிவு என்னன்னு தெரியாம நாங்க யாரும் வேலைக்கு வர மாட்டோம்” என்றாள் ஏஞ்சல்.

இடியட் பாக்ஸ் - மார்க்ஸ், ஏஞ்சல்
இடியட் பாக்ஸ் - மார்க்ஸ், ஏஞ்சல்

மார்க்ஸ் ஒரு கணம் யோசித்து தனது போனை எடுத்து டயல் செய்தவன், “திவ்யா ஒரு நிமிஷம் கான்ஃபரன்ஸ் ரூம் வரைக்கும் வர முடியுமா? பிளீஸ்” என்று போனை கட் செய்ய அனைவரது முகமும் மாறியது.

மேனன் மட்டும் அதே புன்னகையுடன் இருந்தார்.

“அடுத்து என்ன நடக்க போகுதுன்னு உங்களுக்கு ஏதோ தெரியுது... அது என்னன்னு எனக்கும் சொல்லலாம்ல” என அவரது காதோரம் கிசுகிசுத்தாள் தாட்சா.

“பாதிக்கப்பட்டவங்க கிட்டயே தீர்ப்பு சொல்ற அதிகாரத்தை கொடுத்திட்டா அதை மறுத்து யாரும் பேச முடியாதுல்ல” என்றார் மேனன்.

திவ்யா அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். அனைவரும் கூடியிருப்பதை பார்த்து முகம் மாறியவள் “என்னாச்சு” எனப் புரியாமல் கேட்டாள்.

“உங்க டீம் எல்லாம் வேலைய ரிசைன் பண்றாங்களாம்” என்றான் பிரசாத்.

திவ்யா முகம் மாற, “அப்படியா... ஏன்” எனப் புரியாமல் கேட்டாள்.

“இல்ல உங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய புரோகிராமிங் ஹெட் போஸ்ட்டை சேனல் குடுக்கல... அதனால நாங்க யாரும் வேலை செய்ய மாட்டோம்னு சொல்றாங்க” என்றான் பிரசாத்.

திவ்யா அனைவரையும் ஒரு கணம் பார்த்தவள்... “அவங்க எல்லாம் வேலையில கன்டின்யூ பண்றாங்க... ஏன்னா நானும் வேலையில கன்டின்யூ பண்றேன்” என்றாள் திவ்யா.

அவளது அந்தப் பதிலை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை.

“ஏஞ்சல்... நாம எல்லாரும் இன்னொரு அரை மணி நேரத்துல மீட் பண்ணலாம். அடுத்த வார எபிசோட்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணனும்... வரேன்” எனச் சொல்லிவிட்டு திவ்யா அங்கிருந்து நகர்ந்தாள்.

திவ்யாவின் அந்தப் பதிலை மார்க்ஸே எதிர்பார்க்கவில்லை. திவ்யாவே வேலையில் தொடர்வதாகச் சொல்லிவிட்ட பிறகு அவளுக்காக வேலையை ராஜினாமா செய்வதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்த அனைவரும் மெதுவாகக் கலைந்தனர். பெரிதாக ஒரு கலவரத்தை எதிர்பார்த்த பிரசாத் ஏமாற்றத்துடன் எழுந்தான்.

“யார் ஜெயிச்சது?” எனக் கேட்டாள் தாட்சா.

“ஆரம்பத்தில திவ்யா புரோகிராமிங் ஹெட்டுன்னா நான் வேலை செய்ய மாட்டேன்னு மார்க்ஸ் சொன்னான். மார்க்ஸ் புரோகிராமிங் ஹெட்டா இருந்தா இருந்திட்டு போகட்டும் நான் வேலை செய்யுறேன்னு திவ்யா சொல்லிட்டு போயிட்டா... இப்ப சொல்லுங்க யார் ஜெயிச்சது?” என்றார் மேனன்.

“கேள்விக்கு கேள்வியிலேயே பதிலா?”

“விட்டு குடுக்குறவங்கதான் எப்பவுமே ஜெயிக்கிறாங்கன்றது என்னோட அபிப்ராயம்” எனச் சிரித்தார் மேனன். தாட்சாவும் புன்னகைத்தாள்.

திவ்யாவும் அவளது டீமும் அமர்ந்திருந்தனர்.

“நீங்க கோபப்பட்டு வேலைய தூக்கிப் போடுவீங்கன்னு நான் நெனச்சேன்” என்றாள் ஏஞ்சல்.

“நானும் வேலைய விடணும்னுதான் நினைச்சேன். உங்களாலதான் நான் அத பண்ண முடியாம போச்சு!”

அவர்கள் அனைவரும் ஆச்சர்யமாக திவ்யாவை பார்த்தனர்.

“என்னோட புரமோஷனுக்காக நான் உங்கள எல்லாம் தூண்டிவிட்டு ரிசைன் பண்ண சொன்ன மாதிரி ஒரு சூழலை நீங்க ஏற்படுத்திட்டீங்க... அது ரொம்ப தப்பு... இப்படியெல்லாம் பிளாக்மெயில் பண்ணி ஒரு புரமோஷன் வாங்க முடியாதுன்னு கூடவா உங்களுக்குப் புரியல?”

அவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர்.

“நான் வேலைய ரிசைன் பண்ணா நாளைக்கே நம்ம பெங்காலி சேனலுக்கு போவேன். இல்ல வேற சேனல்ல ஜாயின் பண்ணுவேன். அதுவும் இல்லன்னா ஒரு வருஷம் சும்மா கூட இருப்பேன். உங்களால அது முடியுமா?”

அனைவரும் அமைதியாக இருந்தனர்.

“இதுல எத்தனை பேருக்கு உடனடியா நல்ல வேலை கிடைக்கும்... இதே சம்பளம் கிடைக்கும் சொல்லுங்க?"

“கஷ்டம்தான்” என முணுமுணுத்தான் குரு.

“இந்த மாஸ் ரெசிக்னேஷன் மூலமா என்ன சாதிக்கப் போறோம். ஆர்கனைசேஷனுக்கு பாடம் சொல்லி குடுத்துட்டோம்னு நீங்க நினைச்சா ரொம்ப தப்பு. கம்பெனி இதுக்காக எல்லாம் ஃபீல் பண்ணாது. அடுத்தடுத்து ஆளுங்க வருவாங்க... கம்பெனி தொடர்ந்து ஓடிக்கிட்டேதான் இருக்கும். நம்ம வாழ்க்கைதான் பாதியில நிக்கும்” என்றாள் திவ்யா.

“மார்க்ஸ் பண்ணா நியாயம்... நாங்க பண்ணா தப்பா?”

“100 பேருக்காக வேலைய விடுறதா மார்க்ஸ் சொன்னான். அது கெத்து. என்னோட புரமோஷனுக்காக நான் பத்து பேர வேலையை விட சொன்னா அது அசிங்கம். அப்படி ஒரு சூழ்நிலையிலதான் என்ன கொண்டு வந்து நீங்க நிறுத்திட்டீங்க!”

அனைவருக்கும் அவள் சொல்ல வந்தது புரிந்தது.

“எல்லா சமயத்துலயும் நாம நினைக்கிறத கம்பெனி செய்யணும்னு அவசியம் இல்லை. சில சமயம் கம்பெனியும் தப்பான முடிவுகளை எடுக்கலாம். கம்பெனிக்கு புத்தி சொல்றது நம்ம வேலை கிடையாது. நாம கன்டின்யூ பண்ணனுமா வேணாமான்னு மட்டும்தான் யோசிக்கணும்!”

“இப்ப என்ன பண்ணலாம் திவ்யா?” எனக் கேட்டாள் ஏஞ்சல்.

“வேலையை கன்டின்யூ பண்ணலாம். மத்ததை அப்புறம் யோசிக்கலாம்” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் தனது பெரிய அறையில் தனித்திருந்தான். அந்த அறைக்கும் தனக்கும் சற்றும் பொருத்தமில்லை என அவனுக்குத் தோன்றியது. அந்த பெரிய அறையில் ஓரமாக தரையில் அமர்ந்திருந்தான். கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. அவன் நிமிர்ந்து பார்க்க... திவ்யா உள்ளே நுழைந்தாள்.

“என்ன தரையில் உட்கார்ந்துட்டு இருக்க?”

“இல்ல சும்மாதான்... எனக்கு இந்த ரூமே செட்டாகல”

அவள் மெதுவாக அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

“நீ சேர்ல உட்காரு திவ்யா”

“இல்ல இருக்கட்டும்... புரோகிராமிங் ஹெட்டே தரையில உட்கார்ந்திருக்காரு… நாம சேர்ல உட்கார்ந்தா மரியாதையா இருக்குமா?” என சிரித்தாள் திவ்யா.

“என்ன திவ்யா கலாய்க்கிற...”

“சே... சே.. சீரியசாதான் சொல்றேன்... என்னதான் இருந்தாலும் அதிகாரி நீங்க.. உங்க மனசு கோணாம நான் நடந்துக்கணும் இல்ல!”

மார்க்ஸ் கை எடுத்து கும்பிட்டான். திவ்யா சிரித்தாள்.

“நீ வேலைய விட்டு போயிடுவேன்னு நான் ரொம்ப பயந்தேன்” என்றான் மார்க்ஸ்.

“போகணும்னு தான் நானும் நினைச்சேன்”

மார்க்ஸ் அவளைப் பார்த்தான்.

“நான் ஏன் போலன்னு சொல்லு?”

தெரியல என்பது போல மார்க்ஸ் தலையாட்டினான்.

“உன் வாழ்க்கையில ஒரு சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு. அந்த சந்தோஷத்த நான் கெடுக்கக்கூடாதுன்னு நினைச்சேன்...” என்றாள் திவ்யா.

மார்க்ஸின் கண்கள் கலங்கின.

“எனக்கு கிடைக்கலைன்ற வருத்தத்தைவிட உனக்கு கிடைச்ச சந்தோஷம் பெரிய விஷயமா தோணிச்சு. அதான் போகல!”

“திவ்யா... நான்...” என மேற்கொண்டு பேச முடியாமல் அவன் தடுமாற, “ஃபீரியா விடு... சந்தோஷமா இரு!”

மார்க்ஸ் அவளைப் பார்த்தான்.

“இதெல்லாம் நான் ஒரு வருஷத்துக்கு முன்னாலயே பார்த்துட்டேன். அதுவும் இல்லாம நான் ஹெட்டாயிருந்தேன்னு வையி உன்ன மாதிரி ஒருத்தனை டீம்ல வச்சுக்கிட்டு எப்படிச் சமாளிக்கிறது? அது ரொம்ப கஷ்டம்… அதுக்கு இது எவ்வளவோ பெட்டர்” எனச் சிரித்தாள் திவ்யா.

“நீ இவ்வளவு ஈஸியா எடுத்துப்பேன்னு நான் எதிர்பார்க்கல” என்றான் மார்க்ஸ்.

“உனக்கு மட்டும்தான் விட்டுக் கொடுக்க தெரியுமா? நீ மட்டும் தான் அசத்துவியா… எங்களாலயும் முடியும்”

“உனக்கு கஷ்டமா இல்லையா?”

“மனசுக்கு பிடிச்சவங்க கிட்டதான தோத்து போய் இருக்கேன்... ஓகேதான்” எனச் சிரித்தாள் திவ்யா.

மார்க்ஸ் நெகிழ்ச்சியாகப் பார்த்தான்.

“இதெல்லாம் உன் டயலாக் இல்ல...”

“நிஜமாவே நான் இதுக்கு தகுதியான ஆளான்னு தெரியல” என்றான் மார்க்ஸ்.

“எதையுமே எதிர்பார்க்காம நீ நிறைய நல்ல விஷயங்கள் பண்ணியிருக்க... அதுக்கான பலன்னு இத எடுத்துக்கோ. நல்லது மட்டும் விதைக்கிற இடத்தில இருந்தே திரும்பவும் கிடைக்கணும்னு அவசியமில்ல. யாருக்கோ நாம செய்யுற நல்ல விஷயங்களுக்கு வேற யார் கிட்ட இருந்தோ நமக்கு பலன் கிடைக்கும்.”

மார்க்ஸ் திவ்யாவின் கரத்தைப் பற்ற...

“ஹலோ... இப்ப நீ பாஸ் ... இப்படி கையெல்லாம் பிடிச்சா பெரிய கேஸ் ஆயிடும்!”

மார்க்ஸ் சிரித்தான்.

“சந்தோஷமா இரு... அத சொல்லிட்டு போலாம்னுதான் வந்தேன்” என அவன் தோளைத்தட்டிக் கொடுத்துவிட்டு எழுந்து சென்றாள்.

மார்க்ஸ் அப்படியே அமர்ந்திருந்தான். விட்டுக் கொடுப்பவர்களின் கரங்கள் லேசாகி விடுகின்றன. அதை வாங்கிக் கொள்ளும் கரங்கள் பாரமாகி விடுகின்றன.

மார்க்ஸ், கண்ணன் டீக்கடையில் நின்று கொண்டிருந்தான். நெல்லையப்பன், பாண்டியன், வினோ, டார்லிங் என அவனது ஆட்கள் அனைவரும் அவனை சுற்றி நின்றிருந்தார்கள்.

“யப்பா.. ஏதாவது கவனிக்கிறது” என்றார் நெல்லையப்பன்.

“என்ன கவனிக்கணும்?”

“பார்ட்டி கீர்ட்டி வையப்பா...”

“எதுக்கு பார்ட்டி” என்றான் மார்க்ஸ்.

“யோவ் புரோகிராமிங் ஹெட்டாயிருக்க... பார்ட்டி வையின்னா... என்ன பார்ட்டி நொன்ன பார்ட்டின்னுகிட்டு”

“புதுசாவா இந்தப் பதவிக்கு வந்திருக்கேன். ஏற்கெனவே நான் புரோகிராமிங் ஹெட்டாதான இருந்தேன்!”

“ஏம்பா... போன வேர்ல்ட் கப் ஜெயிச்சோம்னு இந்த வேர்ல்ட் கப் ஜெயிச்சதை யாராவது கொண்டாடாம இருப்பாங்களா?”

“கரெக்ட் மாமா” என்றான் பாண்டியன்.

“டேய் அமைதியா இருங்கடா... ஏற்கெனவே அவங்க அப்செட்டாகி இருக்கானுங்க.. பார்ட்டி அது இதுன்னு அவங்கள வெறுப்பேத்திகிட்டு” எனும்போது மார்க்ஸின் போன் அடித்தது. போனை எடுத்தான். மறுமுனையில் பேபியம்மா...

“என்னடா புரமோஷனாமே!”

“யாரும்மா சொன்னது?”

“ஏஞ்சல்தான் சொன்னா!”

“அவளே போன் பண்ணி சொன்னாளா?” என ஆச்சர்யமாக கேட்டான் மார்க்ஸ்.

“அவ ஏண்டா போன் பண்ணி சொல்லப்போறா... நான் அவளுக்கு வேற விஷயமா போன் பண்ணேன். அவ குரலே சரியில்ல... என்னடி பிரச்னைன்னு கேட்டேன். உனக்கு புரமோஷன் கிடைச்ச விஷயத்தை அவ கண்ணீரோட சொன்னா!” எனச் சிரித்தார் பேபியம்மா.

மார்க்ஸுக்கும் சிரிப்பு வந்தது.

“நீங்க என்ன சொன்னீங்க?”

“நல்லா வெறுப்பேத்தி விட்டுட்டேன்!”

மார்க்ஸ் புன்னகையுடன் “பாவம்மா அவ”

“என்ன பாவம்... நாம நல்லா இருக்கணும்னு நினைக்கிறது தப்பில்ல... அடுத்தவன் நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைச்சா அது பெரிய தப்பு. அப்படி நினைக்கிறவங்களுக்கு இதுதான் நடக்கும்” என்றார் பேபியம்மா.

மார்க்ஸ் சிரித்தான்.

“இன்னைக்கு என்னடா பார்ட்டியா?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா..”

“ஏண்டா”

“இதுல கொண்டாட என்ன இருக்கு?”

“பார்ட்டின்றது நமக்காக இல்ல... நம்மள சுத்தி இருக்கிறவங்க சந்தோஷத்துக்காக பண்றது... ஒழுங்கா பார்ட்டி குடுக்கிற வழிய பாரு!”

“இல்லம்மா அது...”

“டேய் மொத்தமா எல்லாரையும் பார்ட்டிக்கு கூப்பிடுடா... 6 மாசமா ரெண்டு டீமா அடிச்சுகிட்டு இருந்தவங்க ஒண்ணா சேர்றதுக்கு இது நல்ல சான்ஸ் இல்ல”

பேபியம்மா சொன்னது அவனுக்கு நியாயமாகப்பட்டது.

“அம்மா... ஐடியா எல்லாம் ஓகேதான். ஆனா, உங்க பொண்ணு வர மாட்டா… ஏற்கெனவே நந்திதா கோச்சுக்கிட்டு இருக்கா அவ வர மாட்டா...” என மார்க்ஸ் முடிக்கும் முன் பேபியம்மா குறுக்கிட்டார்.

“ஏஞ்சல் வர்றதுக்கு ஒரு வழி சொல்லட்டுமா?”

“என்னம்மா?”

“பார்ட்டிய நம்ம வீட்ல வைப்போம்... எப்படியும் அவ வீட்டுக்கு வந்துதான ஆகணும்” எனச் சிரித்தார் பேபியம்மா. வருடம் தோறும் ஏஞ்சல் வீட்டில் கிறிஸ்துமஸ் நியூ இயருக்கு என அனைவரும் கூடுவது வழக்கம். அம்மாவின் யோசனை அவனுக்கு சரியாகவே பட்டது.

“நந்திதாவையும் நான் வர வைக்கிறேன்... பேசிக்கலாம்” என்றார் பேபியம்மா.

“உங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லையா?”

“இதுல என்னடா சிரமம் இருக்கு... சந்தோஷம்தான். எத்தன பேருன்னு சொல்லு… சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணனும்... பாண்டிகிட்ட சொல்லி லைட்டு மத்த ஏற்பாடு எல்லாம் நீ பார்த்துக்கோ” என்றார் பேபியம்மா.

“சரிம்மா” என போனை வைத்தான் மார்க்ஸ்.

“என்ன தல பேபியம்மா வீட்ல பார்ட்டியா?” என உற்சாகமானான் பாண்டியன்.

“ஆமாடா... அந்த சைடு ஆளுங்களும் கண்டிப்பா வரணும்... விட்டுறாத”

“வந்துருவாங்க தல... இனி வந்துதானே ஆகணும்” என சிரித்தான் பாண்டியன்.

நெல்லையப்பன் முகத்தில் மட்டும் யோசனை தெரிந்தது.

“என்ன மாமா... என்ன யோசிக்கிற” என்றான் மார்க்ஸ்.

“பார்ட்டின்றது ஓகேதான்... பேபியம்மா வீட்டுலன்றதுதான்” என அவர் இழுக்க...

“ஏன் மாமா அங்க என்ன பிரச்னை உனக்கு?”

“அந்தம்மா ரெண்டு ரவுண்டுக்கு மேல தராதுப்பா... அத ஏமாத்தி, கூட ரெண்டு ரவுண்ட் அடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும்” என்றார் நெல்லையப்பன்.

அனைவரும் சிரித்தனர்.

“உனக்கு அவங்கதான் சரி... இல்லன்னா உன்னை எல்லாம் சமாளிக்க முடியாது” என்றவன் பாண்டியனிடம் தனது ஏடிஎம் கார்டை தந்து, “ஏற்பாடு எல்லாம் பார்த்துக்கோ” என்றான்.

“அசத்திடுறேன் தல” என்றான் பாண்டியன்.

“சரி நான் வரேன்”

“இருப்பா... அதுக்குள்ள எங்க போற?”

“சவுத் ஹெட்டோட ஏதோ மீட்டிங் இருக்காம் முடிச்சிட்டு வந்தர்றேன்”

“சரிங்க ஆபிசர்” என நெல்லையப்பன் கையை கட்டி பவ்வியமாகச் சொல்ல அனைவரும் சிரித்தனர். மார்க்ஸும் சிரித்தபடி நகர்ந்தான்.

கான்ஃபரன்ஸ் ரூமில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.

திவ்யா, மேனன் அருகில் அமர்ந்திருந்தாள். மேனனுக்குச் சற்று தள்ளி தருண் அமர்ந்திருந்தான். தாட்சாவும் மார்க்ஸும் எதிரில் அமர்ந்திருந்தார்கள். தருண் தனது லேப்டாப்பை ப்ரொஜெக்டரில் மாட்ட முயற்சி செய்து கொண்டிருந்தான்.

“திவ்யா” என அழைத்தார் மேனன்.

“யெஸ் சார்” என திரும்பினாள் திவ்யா.

“நான் உனக்காக பேசலன்னு ஏதாவது வருத்தம் இருக்கா?”

“கண்டிப்பா இல்ல சார்!”

“நீயும் இந்தப் பதவிக்கு ரொம்ப தகுதியான ஒரு ஆள் தான்”

“ஆனா, பதவி ஒண்ணுதான சார் இருக்கு” எனச் சிரித்தாள் திவ்யா.

மேனன் புன்னகையுடன், “இந்தப் பிரச்னைய ரொம்ப ஸ்போர்ட்டிவ்வா நீ எடுத்துக்கிட்ட...” என்றார்.

“எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துகிட்டதுதான் சார்”

மேனன் அவளைப் புன்னகையுடன் பார்த்தார்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“ஜெயிச்சிட்டோம்ன்னு எப்ப நாம நினைக்கிறமோ அதோட நம்ம வளர்ச்சி நின்னுடும். கத்துக்க இன்னும் இருக்குன்னு நினைக்கிறவங்களால மட்டும்தான் தொடர்ந்து அடுத்த லெவலுக்கு போய்கிட்டே இருக்கமுடியும்.”

“கரெக்டா சொன்ன...”

“நான் சொல்லல... இது நீங்க சொன்னதுதான்” எனச் சிரித்தாள் திவ்யா.

மேனனும் சிரித்தார். தாட்சா அதை கவனித்தபடி இருந்தாள். நல்ல தலைவன் எப்போதும் தோற்றுப் போனவர்களுடன் இருப்பான். வெற்றியை கொண்டாடுவதல்ல தலைமை. தோல்வியைப் பகிர்ந்து கொள்வதே நல்ல தலைமை.

சட்டென தருணின் லேப்டாப் ப்ரொஜெக்டரில் கனெக்ட் ஆகி திரையில் பெரிதாக எழுத்துக்கள் விரிந்தன.

‘’அடுத்த வருஷத்தோட GRP அண்ட் பிசினஸ் டார்கெட் இதுதான்’’ என்றான் தருண்.

‘’500 GRPகள் 300 கோடி வருமானம்’’ என அந்த திரையில் விரிந்த எண்களைப் பார்த்ததும் தாட்சாவும் மார்க்ஸூம் ஒரு சேர அதிர்ந்தார்கள்!

“இதுதான் எம்டியோட டார்கெட். இத அச்சீவ் பண்ண வேண்டிய பொறுப்பு உங்க ரெண்டு பேர் கிட்டயும் இருக்கு. இதுல டிஸ்கஸ் பண்ண எதுவும் இல்ல. இந்த டார்கெட்டை ரீச் பண்ண முடியலைன்னா மத்தவங்களுக்கு இடம் குடுத்துட்டு நாம வெளிய போக வேண்டியதுதான்” என உறுதியான குரலில் சொன்னான் தருண்.

தங்களுக்கு வழங்கப்பட்டது பதவி உயர்வல்ல... பணி உயர்வு என்பது இருவருக்குமே புரிந்தது. அதிகாரம் எப்போதும் பெரும் பொறுப்புகளை சுமந்து கொண்டே வரும் என்பதை மார்க்ஸ் மீண்டும் ஒரு முறை உணர்ந்தான்.

- Stay Tuned...