மார்க்ஸ், திவ்யா, பாண்டியன் மூவரும் லிஃப்டில் இருந்து இறங்கி தல்வார் டவர் பில்டிங்கில் இருந்து வெளியே ஓடி வர நெல்லையப்பன் பதற்றமாக நின்றிருந்தார். ஆபிஸ் கார் கிளம்பத் தயாராக இருந்தது.
“எங்க மாமா ராயப்பேட்டா ஆஸ்பிட்டலா இல்லை ஜிஎச்-சா?" என பாண்டியன் கேட்டான்.
“வளசரவாக்கத்துல மனோன்மணி ஆஸ்பிட்டல்” என்றார் நெல்லையப்பன்.
“அந்த ஆஸ்பிட்டலுக்கு எப்படி?”
“அவங்க வீட்டு பக்கத்துல இருந்த ஆஸ்பிட்டலுக்குத்தான் முதல்ல கொண்டு போயிருப்பாங்க போல!”
“போலாம்” என்றான் மார்க்ஸ் இறுகிப் போன குரலில்.
அவர்கள் நால்வரும் காரில் ஏற, பில்டிங்கை விட்டு வெளியே வந்த கார் பீச் ரோட்டில் வேகமெடுத்தது.
“என்னாச்சு” என தயக்கமான குரலில் கேட்டாள் திவ்யா.
“வீட்டு வேலை செய்யுற அம்மா கிட்ட இன்னொரு சாவி இருந்திருக்கும் போல… இவ ஷூட்டிங் போனாலும் அவங்க வீட்டை கிளீன் பண்ணி சமைச்சு வெச்சிட்டு போவாங்களாம். வழக்கம் போல காலையில வந்தவங்க கதவ திறந்து பார்க்குறப்ப ஹால்ல ஃபேன்ல...” என மேற்கொண்டு சொல்ல முடியாமல் நெல்லையப்பன் தடுமாறினார்.
திவ்யா முகம் மாறினாள்.
“அந்தம்மா சத்தம் போட்டதும் அக்கம் பக்கத்துல இருந்தவங்க வந்து பாடிய கீழ இறக்கி பக்கத்தில இருந்த இந்த பிரைவேட் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போயிருக்காங்க. அவங்கதான் சேனலுக்கு போன் பண்ணது...”
மார்க்ஸ் இறுகிப் போன முகத்துடன் அமர்ந்திருந்தான்.
“மேகலாவோட அப்பா அம்மா?”
“அவங்க திருச்சியில இருக்காங்க.... போன் பண்ணி சொல்லியிருக்கு” என்றார் நெல்லையப்பன். பேச்சை மாற்றும் வண்ணம், “அண்ணே கொஞ்சம் வேகமா போங்கன்னே” என்றான் பாண்டியன்.
அதற்கு பின் மருத்துவமனை வரும் வரை யாரும் பேசிக் கொள்ளவில்லை. மருத்துவமனைக்குள் கார் நுழைந்தது. நியூஸ் சேனல் ரிப்போர்டர்களும் கேமரா மேன்களும் மருத்துவமனை வாசலில் கூடியிருந்தார்கள்.
அவர்களில் சிலர் மருத்துவமனைக்குள் அனுமதிக்கும் படி அங்கிருந்த மருத்துவமனை செக்யூரிட்டிகளுடனும், போலிஸ்காரர்களுடனும் சண்டை போட்டுக் கொண்டிருக்க காரை ஓரமாக நிறுத்திவிட்டு மார்க்ஸும் மற்றவர்களும் வெளியே வந்தனர்.
அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்த டார்லிங் ஓடி வந்தான். “தல பின்னாடி வழியா போயிரலாம்” என அவர்களை பின்புற வாயில் வழியாக மருத்துவமனைக்குள் அழைத்துக் கொண்டு போனான்.
“இந்த ரூம்தான்” என அறை ஒன்றை காட்டினான் டார்லிங். உள்ளே போகலாமா வேண்டாமா என அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது உள்ளேயிருந்து 50 வயது மதிக்கத்தக்க டாக்டர் ஒருவர் வெளியே வந்தார்.
“யார் நீங்க எல்லாம், இங்க எதுக்கு நிக்குறீங்க?” என்றார் கண்டிப்பான குரலில்
“சார்தான் ஆரஞ்சு டிவியோட ஹெட்” என்றான் பாண்டியன்.
“டிவிக்காரங்கள உள்ள விடக்கூடாதுன்னு சொல்லியிருக்கனே... நீங்க மட்டும் எப்படி வந்தீங்க… முதல்ல வெளிய போங்க” என அவர் குரலை உயர்த்தினார்.
“டாக்டர்... டாக்டர்.... நியூஸ் கவர் பண்றதுக்காக நாங்க வரல. நம்ம சேனல்ல தான் அந்த பொண்ணு வேலை செஞ்சாங்க... மார்க்ஸ் சார் அவங்களுக்கு கார்டியன் மாதிரி” என்றான் பாண்டியன்.
டாக்டர் ஒரு கணம் யோசித்தவர், “சொல்லுங்க என்ன வேணும்?” என்றார்.
“இல்ல மத்த ஃபார்மாலிட்டி என்னன்னு சொன்னீங்கன்னா” எனத் தயக்கமாகக் கேட்டார் நெல்லையப்பன்.
“என்ன ஃபார்மாலிட்டி? எதுவா இருந்தாலும் ஆப்பரேஷன் முடிஞ்சா தான் சொல்ல முடியும்”
அனைவரும் அதிர்ந்து போய் டாக்டரை பார்த்தனர்.
“என்ன ஆப்பரேஷன்?” என்றாள் திவ்யா.
“பின்னங்கழுத்தில Bone ஒண்ணு டிஸ்லொக்கேஷன் ஆயிருக்கு… அதை ஆப்பரேட் பண்ணதுக்கு அப்புறம்தான் எதையும் சொல்ல முடியும்!”
அனைவரும் அவரை அதிர்ச்சியாகப் பார்த்தனர்.
“என்னாச்சு” என்றார் டாக்டர்.
“இல்ல டாக்டர் அவங்க இறந்துட்டதா சொன்னாங்க”
“நான்சென்ஸ்... யாரு சொன்னது” என்றார் டாக்டர்.
“இல்ல டாக்டர் அப்படிதான் போன்ல சொன்னாங்க” என தயக்கமாகச் சொன்னான் பாண்டியன்.
“யாரோ தப்பா சொல்லியிருக்காங்க... அதுக்காக பேஷன்ட் நல்லாயிருக்காங்கன்னும் அர்த்தம் இல்ல... இது கொஞ்சம் காம்ளிகேட்டட் இன்ஜுரி தான். ஆப்பரேஷன் முடிஞ்சுதான் எதையும் சொல்ல முடியும்” என்றபடி டாக்டர் நகர்ந்தார்.
“ஏண்டா முட்டாள் உசிரோட இருக்கிற புள்ளைய செத்து போச்சுன்னு சொல்லிட்டியே” என கோபமானார் நெல்லையப்பன்.
“இல்ல மாமா போன்ல அப்படி தான் சொன்னாங்க” என்றான் பாண்டியன்.
“தேங்க் காட்... அவளுக்கு எதுவும் ஆகாம இருக்கணும்” என்றாள் திவ்யா.
“பாண்டியா அவங்க அம்மா அப்பாவுக்கு என்ன சொல்லியிருக்காங்கன்னு தெரியல... பிரச்னை எதுவும் இல்லன்னு சொல்லு... அவங்க பதட்டமாகாம வரட்டும்.”
“அவங்க நம்பர்” என பாண்டியன் தயங்க...
மார்க்ஸ் தனது செல்போனை எடுத்து பார்த்து மேகலா அப்பாவின் செல்போன் நம்பரை சொல்ல அதை தனது போனில் டயல் செய்தபடி அங்கிருந்து நகர்ந்தான் பாண்டியன்.
“மார்க்ஸீ...” எனத் தயக்கமாக அழைத்தார் நெல்லையப்பன்.
“என்னன்ணே?”
“கஷ்டம்ன்னுதான் டாக்டர் சொல்றாரு”
“அவளுக்கு என்னன்னே கஷ்டம். அவ பாட்டுக்கு கண்ண மூடி படுத்திருக்கா, அவ நல்லாயிருக்கணும்னு நினைக்கிற நமக்குதான் கஷ்டம்” என்றான் மார்க்ஸ். அவன் குரல் வேதனையில் கம்மியது.
நெல்லையப்பன் கண்கள் கலங்கின.
“என்ன வேணா செய்யட்டும்ணே... திருடு... பொய் சொல்லு, ஸ்மோக் பண்ணு, தண்ணியடி, எவன் கூட இருக்கணுமோ இரு, ஓடிப்போகணுமோ ஓடிப்போ, எல்லாமே ஓகேதான்... எதுக்காகன்ணே இப்படி பண்ணனும்?”
திவ்யா மார்க்ஸைப் பார்த்தபடி இருந்தாள்.
“அவளுக்கு அவ தண்டணை குடுக்குறதா நினைச்சுகிட்டு இருக்கான்ணே... ஆனா, அவ குடுக்குற தண்டனை அவளுக்கு இல்லன்ணே... அவளைப் பெத்தவங்களுக்கு... அவளுக்கென்ன சொடக்கு போடுற நேரத்தில போய் சேர்ந்திருவா. அவங்கள்ல ஆயுசுக்கும் அவளை நினைச்சு அழுதுகிட்டு இருக்கணும்” என கண்கள் கலங்கினான் மார்க்ஸ்.
“ஒண்ணும் புரியலப்பா... பணம், புகழ், சொத்து சுகம் இப்படி எதுவுமே இல்லாதப்ப எல்லாம் நம்பிக்கையோட போராடுறாங்க... எல்லாம் கிடைச்சதுக்கு அப்புறம் எதுக்காக கஷ்டப்பட்டாங்களோ அதை எல்லாம் தூக்கி போட்டுட்டு போய் சேர்ந்துடுறாங்க... இவங்களை என்னன்னு சொல்றது” என்றார் நெல்லையப்பன்.
“கொலைய கூட நான் ஒத்துப்பேன்னே... ஆனா தற்கொலைய ஒரு போதும் நான் ஒத்துக்கவே மாட்டேன். அந்த பயல பிடிக்கலன்னா கொல்லு... நீ செத்து என்னாக போகுது” என மார்க்ஸ் சொல்லி வாய் மூட வராண்டாவின் மூலையில் காக்கி உடை ஒன்று தெரிந்தது. ஏற்கெனவே மேகலாவுக்காக மார்க்ஸ் சண்டையிட்டு வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன போது சந்தித்த அதே இன்ஸ்பெக்டர்.
அவர் மார்க்ஸைப் பார்த்ததும் கையை உயர்த்தி காட்ட... பதிலுக்கு மார்க்ஸும் கையை ஆட்டினான்.
“காரல் மார்க்ஸ்”
“சொல்லுங்க சார்”
“என்ன சொல்றாங்க டாக்டருங்க?”
“ஆப்பரேஷன் நடந்துகிட்டு இருக்கு சார்... முடிஞ்சா தான் எதுவும் சொல்ல முடியும்னு சொன்னாரு”
“ஸ்டேஷனுக்கு போன் பண்ணவங்க ஆள் செத்து போச்சுன்னே சொல்லிட்டாங்கப்பா” என்றார் இன்ஸ்பெக்டர்.
“எங்களுக்கும் அப்படித்தான் சார் போன் வந்திச்சு” என்றான் மார்க்ஸ்.
“ஆஸ்பத்திரிகாரனுங்க பரவாயில்லப்பா... வழக்கமா இந்த மாதிரி கேஸ் எல்லாம் எடுக்க யோசிப்பானுங்க… இவனுங்க டக்குன்னு அட்மிட் பண்ணி ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிட்டாங்களே!”
“யெஸ் சார்!”
“இந்த புள்ள தூக்கு போட்டுகிச்சுன்னதும் உன்னதான் நினைச்சேன். அதுக்காக அன்னைக்கு எவ்வளவு தூரம் சண்டை போட்ட... இப்ப பாரு!”
அனைவரும் மௌனமாக இருந்தார்கள்.
“சரிப்பா... நல்லபடியா அது பொழைச்சு வரட்டும். ஏதாவது வேணும்னா எனக்கு போன் பண்ணு... வெளியே என்னப்பா இந்த டிவிக்காரங்க இப்படி அடிச்சுகிறாங்க...”
“இல்ல சார் அது அவங்களோட வேலைதான சார்!”
“அப்பல்லாம் பத்திரிக்கையில ஒரு செய்தி வரணும்னா நாம போன போட்டு வாங்க, வாங்கன்னு ரிப்போர்ட்டரை கூப்பிடணும். இப்பல்லாம் சாகுறவணுங்களுக்கு முன்னாடியே அவன் சாகப் போறான்னு இவங்களுக்குத் தெரிஞ்சிருது. எமனுக்கு முன்னால இவங்க வந்திடுறாங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.
மார்க்ஸ் அதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் தடுமாறினான்.
“வரேம்பா...” என இன்ஸ்பெக்டர் நகர்ந்தார்.
மதியம் மணி 2-ஐ தாண்டியிருந்தது.
மார்க்ஸும் மற்றவர்களும் டீக்கடையில் நின்று கொண்டிருந்தார்கள்.
“நீ வேணா ஆபிஸ் கிளம்பு திவ்யா...” என்றான் மார்க்ஸ்.
“இல்ல இருக்கட்டும்...” என்றாள் திவ்யா.
“அவங்க அம்மா அப்பா ஓகே தானா” எனக் கேட்டான் மார்க்ஸ்.
“ஆமா தல... அவளோட அம்மா அழுதுகிட்டுதான் இருக்காங்க... அப்பா கொஞ்சம் ஒகே” என்றான் பாண்டியன்.
“டாக்டர் என்ன சொல்றாரு?”
“டார்லிங் கேட்டுட்டு வரேன்னு சொல்லிட்டு போயிருக்கான்...”
மார்க்ஸ் தலையாட்டினான்.
டார்லிங் ஓடி வந்தான்.
அவன் வருவதைப் பார்த்த அனைவருக்குள்ளும் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
“என்னடா ஆச்சு” என்றார் நெல்லையப்பன்.
“மேகலா கண்ணு முழிச்சிருச்சு தல” என்றான் டார்லிங். சட்டென சந்தோஷமும் நிம்மதியும் அனைவருக்குள்ளும் பரவியது...
“அப்பாடா.... டாக்டர் என்ன சொல்றாரு?”
“உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்ல... ஆனா எந்திரிச்சு நடக்க கொஞ்சம் நாளாகும் போல”
“பொழைச்சுகிட்டால்ல... அது போதும்” என்றான் பாண்டியன்.
“மேகலாவை ரூமுக்கு மாத்திட்டாங்க... சாதாரணமாதான் இருக்கு” என்றான் டார்லிங்.
மார்க்ஸ் இழுத்து பெருமூச்சு ஒன்றை விட்டவன் “சரி போலாமா” என்றான்.
“என்னப்பா போலாமான்ற... ஒரு எட்டு அவளைப்போய் பாத்துட்டு கிளம்புவோம்.”
“எதுக்கு?”
“இல்லப்பா... அது வந்து” என நெல்லையப்பன் காரணத்தை தேடினார்.
“பொழைச்சுகிட்டால்ல... அவளோட அப்பா அம்மா வந்தாச்சு... போதும். அவங்க பார்த்துப்பாங்க நாம போலாம்” என மார்க்ஸ் நகர முற்பட திவ்யா சட்டென அவன் கரத்தை பற்றினாள். மார்க்ஸ் நின்று திரும்பினான்.
“நாங்க பாக்குறமோ இல்லையோ நீ அவளை கண்டிப்பா பார்க்கணும்” என்றாள் திவ்யா.

அனைவரும் அவள் சொன்னதை ஆமோதிப்பது போல மார்க்ஸைப் பார்த்தனர்.
“நமக்கு யாரும் இல்லைன்னுதான அவ அப்படி ஒரு முடிவெடுத்தா… அவளுக்கு ஒண்ணுன்னா யாரெல்லாம் கூட இருப்பாங்கன்னு அவளுக்குத் தெரியணும்” என்றாள் திவ்யா.
“யாரும் இல்லைன்னு எல்லாம் அவ அந்த முடிவெடுக்கல... யாரும் தேவையில்லைன்னுதான் அவ இப்படி முடிவெடுத்திருக்கா” என்றான் மார்க்ஸ்.
“யோவ்... டாக்டர் அந்த புள்ளைய இப்ப வேணா காப்பாத்தியிருக்கலாம். இன்னொரு தடவ அது தப்பா ஏதாவது பண்ணாம இருக்கணும்னா ஒழுங்கா நீ வந்து பேசு அதுகிட்ட” என்றார் நெல்லையப்பன்.
மேகலாவின் அறைக்கதவை திறந்து கொண்டு அவர்கள் அனைவரும் மெதுவாக உள்ளே நுழைந்தார்கள். கழுத்தில் கட்டுடன் அவள் படுத்திருந்தாள். கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. விரல் நுனியில் மாட்டப்பட்டிருந்த கிளிப்புகளிலிருந்து வயர்கள் நீண்டன. நீல நிற மருத்துவமனை கவுனில் படுத்திருந்த அவளைப் பார்க்கவே பாவமாயிருந்தது. அருகே அமர்ந்திருந்த அவளது அப்பாவும் அம்மாவும் மார்க்ஸை பார்த்ததும் எழுந்து நின்றனர்.
“உட்காருங்கம்மா உட்காருங்க” என்றான் பாண்டியன்.
மேகலா மெதுவாக தலையை திருப்பி அனைவரையும் பார்த்தாள். அவளது கண்கள் கலங்கின.
“மேகலா... எங்க டார்ச்சர்ல இருந்து எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தியா? அது நடக்காது. எப்படி உன்ன திரும்பவும் பிடிச்சு இழுத்திட்டு வந்தோம் பாரு” என்றார் நெல்லையப்பன்.
அனைவரும் கலங்கிய கண்களுடன் புன்னகைக்க...
“ஹீரோயினா, அக்காவா, அம்மாவா, பாட்டியால்லாம் நடிச்சு எத்தனைப் பேர நாம கொல்ல வேண்டியதிருக்கு. அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி? அதான் இந்த சீன் ஸ்கிரிப்ட்ல இல்லன்னு கடவுளே ரிஜெக்ட் பண்ணிட்டாரு!” என மீண்டும் சொன்னார் நெல்லையப்பன்.
மேகலா திரும்பி மார்க்ஸைப் பார்த்தவள் சிரமத்துடன் தனது கையை நீட்ட… மார்க்ஸ் அவள் அருகே வந்து படுக்கையில் அமர்ந்தவன் அவளது கரத்தைப் பற்றிக் கொண்டான்.
“சாரி சார்” எனத் தடுமாறி சொன்னவள் மேல பேச முடியாமல் அழத் துவங்க மார்க்ஸும் அதற்கு மேல் அடக்கிக் கொள்ள இயலாதவனாக அழுதான்.
அனைவரும் நெகிழ்ந்து போக நெல்லையப்பன் மட்டும் அவசர அவசரமாக, “யோவ் என்னய்யா... சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு... அதுவும் அழுவுது பாரு” என அதட்டும் குரலில் சொன்னார் நெல்லையப்பன்.
மார்க்ஸ் கண்களைத் துடைத்துக் கொண்டான். மார்க்ஸின் கண்ணீர் மேகலாவின்மனதைத் தொட்டது.
உங்களுக்காக மற்றவர்கள் சிந்தும் கண்ணீரை விட நீங்கள் பெரிதாக எதையும் சம்பாதித்து விட முடியாது என்பதுதான் உண்மை. உங்களின் துயரங்களை பகிர்ந்து கொள்ள எத்தனை இதயங்கள் காத்திருக்கின்றன என்பதில் இருக்கிறது நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் வெற்றி.
“தொட்டதுக்கெல்லாம் மார்க்ஸ் சார், மார்க்ஸ் சார்ம்பே... மனசு கஷ்டமாயிருந்தா ஒரு போன போடுறது... அத விட்டுபுட்டு....” என்றார் நெல்லையப்பன்.
“நான் நினைச்சேன்” என்றாள் மேகலா.
மார்க்ஸ் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
“நான்தான் சார் தப்பு பண்ணிட்டேன்.... நீங்க அவன் வேணாம்னு சொன்னீங்க... நான் கேக்கல... அப்புறம் எப்படி நான் உங்க கிட்ட...” என தட்டுத் தடுமாறி சொன்னாள் மேகலா.
“நீ எத்தன தடவ வேணா தப்பு பண்ணலாம். நான் கோபப்படுவேன். ஆனா, உன்ன தூக்கிப்போட மாட்டேன் புரியுதா? நீ நினைச்சதை பண்ணிக்க... உன் உசிரு உனக்கு மட்டும் சொந்தம் இல்ல… உன் மேல அக்கறையிருக்கிற எல்லாருக்கும் உன் உசிர்ல பங்கு இருக்கு ” என்றான் மார்க்ஸ்.
மேகலாவின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது.
“சரியே பண்ண முடியாத தப்புன்னு எல்லாம் எதுவும் கிடையாது. இந்த உலகத்திலேயே நமக்கு ரொம்ப முக்கியம் நாமதான். அப்புறம் தான் எல்லாரும். மத்தவங்களுக்காக நம்மள டார்ச்சர் பண்ணிக்கிறத விட பெரிய முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது.. புரியுதா?”
மேகலா லேசாகத் தலையாட்டினாள்.
“நாங்க இருக்கோம் உனக்கு. நீ என்ன பல்டியடிச்சாலும் உன்ன நாங்க ஏத்துப்போம். சந்தோஷமா இரு” என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
“ரெஸ்ட் எடு... சீக்கிரமா ஷூட்டிங் வந்து சேரு... நான் அப்புறம் வரேன்” என்றான் மார்க்ஸ்.
“ஆமாம்மா மேகலா... நாங்க வரோம். இன்னொரு தடவ இந்த மாதிரி ஏதாவது யோசிச்சே... கொன்னுபுடுவோம் கொன்னு” என்றார் நெல்லையப்பன்.
“நாளைக்கு வாரேன். ஏதாவது வேணும்னா போன் பண்ணுங்க” என்றான் மார்க்ஸ்.
மேகலாவின் அப்பாவும் அம்மாவும் கைகூப்ப அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.
மார்க்ஸ் தனது அறைக்குள் நுழைந்தான். அவனது வருகைக்காக அவனது அறையில் ஏஞ்சலும் மேகலா நடிக்கும் சீரியலின் தயாரிப்பாளரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அவனைப் பார்த்ததும் அவர்கள் எழுந்து நின்றனர்.
“சொல்லுங்க” என்றான் மார்க்ஸ்.
“மேகலா எப்படி இருக்கு சார்?” என்றார் தயாரிப்பாளர்.
“உங்க சீரியல்ல நடிக்கிற பொண்ணு சார். அது எப்படியிருக்குன்னு நீங்க வந்து பார்க்க மாட்டீங்களா?”
“இல்ல சார்... மேனேஜரை அனுப்புனேன். ஆஸ்பிட்டல் உள்ள விடலைன்னு சொல்லி திருப்பி வந்துட்டாரு”
“ம்” என கோபத்தை அடக்கியபடி சொன்னவன் தனது சேரில் அமர்ந்தான்.
“அடுத்து என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணனும்” என்றாள் ஏஞ்சல்.
“என்ன பண்ணலாம்னா புரியல?” என கேட்டான் மார்க்ஸ்.
“இல்ல மேகலாவுக்கு பதிலா வேற யார ரீப்ளேஸ் பண்ணனும்னு முடிவு பண்ணணும்ல”
தூக்கிவாரிப்போட்டது மார்க்ஸூக்கு...
“என்ன பேசுற நீ... இன்னைக்கு காலையில தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு... அதுக்குள்ள அடுத்து என்னன்னு கேக்குறீங்க!”
“சார் தப்பா எடுத்துக்காதிங்க சார். ஒரு வாரமா அந்த பொண்ணு உடம்பு சரியில்ல, மனசு சரியில்லன்னு ஷீட்டிங் வரல... பிளான் பண்ணி பிளான் பண்ணி ஷூட்டிங் கேன்சல் பண்ணிட்டோம். இன்னைக்கு இவ்வளவு பேரையும் அசெம்பிள் பண்ணி இப்படியாகி போச்சு... இன்னைக்கு மட்டும் ரெண்டு லட்சம் நஷ்டம் சார்”
மார்க்ஸ் தயாரிப்பாளரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“இன்னைக்கு வெள்ளிகிழமையாயிடுச்சு... மண்டேக்கு டேப் இல்ல... நாளைக்கு ஷூட் பண்ணி ஞாயித்துக்கிழமை டப்பிங் மியூசிக் எல்லாம் முடிச்சா தான் டேப் கொடுக்க முடியும்” என தயக்கமாக சொன்னார் தயாரிப்பாளர்.
“நல்லா போயிட்டு இருக்கிற ஷோ... பிரேக் பண்ண முடியாது” என்றாள் ஏஞ்சல்.
மார்க்ஸூக்கு அவர்கள் இருவரையும் பார்க்க பாவமாய் இருந்தது. உயிருக்கு போராடும் ஒருவரை பற்றி யோசிக்க கூட முடியாமல் ஓட வேண்டிய ஒரு வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது எனத் தோன்றியது அவனுக்கு. அது குறித்த குற்றவுணர்வு அவர்கள் முகத்தில் தெரிந்தது. மார்க்ஸ் அதை இன்னும் ஊதி பெரிதாக்க விரும்பாமல் யோசிப்பது போல தலை குனிந்தான்.
“அவ எப்படியும் ஷூட்டிங் வர நாலு மாசமாகுன்றாங்க... கண்டிப்பா ஆள மாத்த தான் போறோம்... அத உடனே பண்ணிட்டா கதை பிரேக் இல்லாமல் போகும்” என்றாள் ஏஞ்சல்.
“என்ன பண்ணனும்?” என நிமிராமல் கேட்டான் மார்க்ஸ்.
“மேகலாவுக்கு ரீ ப்ளேஸ்க்கு 3 ஆர்ட்டிஸ்ட் பார்த்து வச்சிருக்கு... அதுல யாராவது ஒருத்தரை நீங்க செலக்ட் பண்ணா நாளைக்கு ஷூட் போயிடலாம்” என்றார் தயாரிப்பாளர்.
“ஏஞ்சலுக்கு யார் சரின்னு தோணுதோ அவங்களை ரீ-ப்ளேஸ் பண்ணிருங்க” என்றான் மார்க்ஸ்.
“இல்ல நீ ஒரு தடவ...”
“நீயே முடிவு பண்ணு” என்றான் மார்க்ஸ்.
“ஒகே” என அவர்கள் அங்கிருந்து நகர்ந்தார்கள்.
மார்க்ஸ் அப்படியே அமர்ந்திருந்தான். வேறு ஒரு பொண்ணை தேர்ந்தெடுத்து மேகலா போலவே உடைகள், தலைமுடி, அலங்காரம் செய்து மேகலாவுக்கு டப்பிங் பேசிய அதே பெண்ணை வைத்து டப்பிங் செய்து இவருக்கு பதில் இவர் என சொல்லி மாற்றிவிட்டு சீரியல் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். ஆரம்பத்தில் அந்த பொண்ணு மாதிரியில்ல என புலம்பிக் கொண்டே மக்கள் அதை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சில நாள்களில் அவர்களுக்கும் புதியமுகம் பழகிப் போய்விடும்.
மார்க்ஸ் கரங்களை தலைக்கு பின்னால் கோர்த்தபடி சேரில் சாய்ந்து அமர்ந்தான். வாழ்க்கையும் அப்படித்தான். அது யாருக்காகவும் நிற்பது இல்லை. யார் இருந்தாலும் யார் இல்லாவிட்டாலும் அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. உதிர்ந்த இலைகள் குறித்து துக்கமோ துளிர்த்த இலைகள் குறித்து சந்தோஷமோ மரங்களுக்குக் கிடையாது.
இன்னும் இந்தப் பதவியில் இது போல எத்தனை சமரசங்களை செய்ய வேண்டியது இருக்குமோ என மார்க்ஸுக்குப் பயமாக இருந்தது.

தாட்சா தனது அறையில் அமர்ந்து லேப்டாப்பில் எதையோ டைப் பண்ணிக்கொண்டிருக்க... கதவு தட்டப்படும் ஓசை கேட்டு அவள் நிமிர்ந்தாள்.
கதவை லேசாகத் திறந்து கொண்டு இளம் பெண் ஒருத்தி எட்டிப் பார்த்தாள். “உள்ள வரலாமா?” என அவள் ஆங்கிலத்தில் கேட்க அவள் யாரென யோசித்தபடியே தாட்சா அவளை உள்ளே வருமாறு சைகை செய்தாள்.
உள்ளே நுழைந்த பெண்ணுக்கு வயது பதினெட்டிலிருந்து இருபதுக்குள்ளிருக்கும்.. புசுபுசுவென்ற சுருள்முடி பின்புறம் ஒட்ட வெட்டியிருந்தாள். கண்ணாடி அவளது முகத்திற்கு பொருத்தமாக இருந்தது. சிகப்பு நிற ரவுண்ட் நெக் டிஷர்ட், தொளதொளவென இருக்கும் கதர் பேன்ட் ஒன்றும் அணிந்திருந்தாள். லெதர்பேக் ஒன்றை குறுக்கு வாட்டில் தொங்கவிட்டிருந்தாள்.
“ஹாய்” என்றாள் அவள்.
“நீங்க” என தாட்சா கேட்டாள்.
“ஐ ஆம் அஞ்சலி மேனன். சித்தார்த் மேனனோட பொண்ணு” என அவள் கை நீட்ட அதை எதிர்பாராத தாட்சா தடுமாறி பின் சமாளித்து அவளது கரத்தை பற்றி குலுக்கினாள்.
“பிளீஸ் உட்காருங்க”
கால் மேல் கால் போட்டபடி எதிரில் இருக்கும் சேரில் அமர்ந்தபடி “நான் போன் பண்ணும் போதெல்லாம் அப்பா உங்களைப் பத்தி தான் பேசிக்கிட்டே இருப்பாரு... அதான் நேர்ல உங்கள பார்த்து சில விஷயங்கள பேசலாம்னு வந்தேன்” என்றாள் அஞ்சலி.
தாட்சா அவள் என்ன பேசப் போகிறாள் என்கிற படபடப்புடன் அவளையே பார்த்தாள்!