Published:Updated:

இடியட் பாக்ஸ் - 48: தகப்பன்கள் பலவிதம்... அதில் சித்தார்த் மேனன் வேறு ரகம்!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 48: தகப்பன்கள் பலவிதம்... அதில் சித்தார்த் மேனன் வேறு ரகம்!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

அஞ்சலியும் தாட்சாவும் எதிர் எதிரே அமர்ந்திருந்தார்கள்.

அஞ்சலி பேச்சை எப்படித் துவங்குவது என்ற யோசனையிலும் தாட்சா மேனனின் மகள் என்ன சொல்லப் போகிறாளோ என்கிற யோசனையிலுமாக இருக்க மெளனமாக சில நொடிகள் கழிந்தன.

“அப்பா என்ன பத்தி ஏதாவது சொல்லியிருக்காரா?” எனக் கேட்டாள் அஞ்சலி.

“பொண்ணு இருக்குன்னு தெரியும்... ஆனா, பெருசா உன்ன பத்தி பேசிக்க வாய்ப்பு கிடைக்கல” என்றாள் தாட்சா.

“நான் கொல்கத்தால அம்மா கூட தான் இருக்கேன்.”

“அத சொல்லியிருக்காரு!”

“என் அம்மாவும் அப்பாவும் பிரியறப்ப எனக்கு 5 வயசு.”

தாட்சா அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது போல அவளைப் பார்த்தபடி இருந்தாள்.

“அடுத்த வருஷமே அம்மா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாங்க… ஹி இஸ் ஆல்சோ எ நைஸ் பெர்சன். ஆனா அந்த வருஷமே அம்மாவுக்கு வேற வேலை கிடைச்சு அவங்க ஹாங்காங் போற மாதிரி ஒரு சிட்டிவேஷன் வந்திருச்சு.”

தாட்சா அவள் பேசுவதை கேட்டபடியிருந்தாள். “அம்மா அவங்க பார்ட்னரோட ஹாங்காங் போறப்ப என்ன பார்த்துக்க சொல்லி அப்பா கிட்ட விட்டுட்டு போயிட்டாங்க!”

தாட்சா முகம் மாறி அஞ்சலியை பார்த்தாள்.

“இதை நான் கம்ப்ளைன்ட்டா சொல்லல. அம்மாவுக்கும் என்ன பிரியுறது கஷ்டமாதான் இருந்துச்சு. ஆனா, அவங்களுக்கு வேற வழியில்ல.”

தாட்சா தலையாட்டினாள்.

“ரெண்டு வருஷத்துல வரேன்னு சொல்லிட்டுப்போன அம்மா திரும்ப இந்தியாவுக்கு வந்தது என்னோட 15 வயசுலதான். அதுவரைக்கும் நான் அப்பா கூட தான் இருந்தேன்.”

ஏறக்குறைய 9 வருடங்கள் மேனன் அவளது மகளோடு தனியாக இருந்திருக்கிறார் என்கிற தகவல் தாட்சாவுக்கு ஆச்சர்யமான ஒன்றாக இருந்தது.

“அப்பா அப்ப சோனியோட நேஷனல் ஹெட்டா இருந்தாரு. எனக்காக அந்த வேலையை ரிசைன் பண்ணாரு. நான் அவரோட இருந்ததால பெருசா எந்த வேலையும் அவர் எடுத்துக்கல. ஃபீரிலான்ஸிங்கா சில சின்ன சின்ன வேலைகள் மட்டும் பண்ணிகிட்டு இருந்தாரு. என்ன பார்த்துக்கிறது தான் அவரோட முழு நேர வேலையா இருந்திச்சு.”

“புரியுது” என்றாள் தாட்சா.

“சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க... அந்த 9 வருசமும் ஒரு நாள் கூட மிஸ் பண்ணாம என்ன அவர் ஸ்கூல் டிராப் பண்ணியிருக்காரு.. பிக்கப் பண்ணியிருக்காரு. என் பாட்டி 'நான் அஞ்சலிய பார்த்துக்கிறேன்... நீ போய் வேலையை பாரு'ன்னு பல தடவ அப்பா கிட்ட சண்டை போட்டிருக்காங்க. ஆனா அப்பா என்ன பார்த்துக்கிற கடமையை யாரோடவும் ஷேர் பண்ணிக்கிட்டதே இல்லை. அம்மாவைப் பத்தி ஒரு வார்த்தை அவர் தப்பா சொன்னதுமில்ல. நான் தூங்குனதுக்கு அப்புறம் வேலை செய்வாரு. நான் முழிக்கிறதுக்கு முன்னால அவர் எந்திரிச்சு தயாரா இருப்பாரு.”

தாட்சா அவள் பேசுவதை கேட்டபடி இருந்தாள்.

“லயன் கிங் படம் நான் ஒரு ஐந்நூறு தடவை பார்த்திருப்பேன். அந்த 500 தடவையும் அவர் என்கூட உட்கார்ந்து அந்த படம் பார்த்திருக்காரு. அதுல அப்பா சிங்கம் முபாசா செத்து போற சீன் வரும் போதெல்லாம் நான் அழுவேன். அவர் என்ன சமாதானம் பண்ணுவாரு. வீடு எனக்கு பிடிச்ச கலர்ல இருந்தது. எனக்கு என்ன பிடிக்குமோ அத மட்டும் தான் வீட்ல சமைப்பாங்க. எனக்கு யார பிடிக்குமோ அவங்க மட்டும் தான் என் வீட்டுக்கு வர முடியும். இப்படி எல்லாமே எனக்கு பிடிச்சதுதான், அவருக்கு பிடிச்சதா இருந்திச்சு. அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும் அத தவிர வேற என்ன பிடிக்கும்னு சத்தியமா எனக்கு தெரியாது!”

அஞ்சலியின் வார்த்தைகள் தாட்சாவை என்னவோ செய்தது.

“அந்த 9 வருஷத்துல அப்பா ஸ்மோக் பண்ணி நான் பார்த்ததில்லை. ஒரு போதும் அவர் குடிச்சிட்டு வந்ததா எனக்கு ஞாபகத்தில இல்லை. எல்லா இடத்திலயும் கடவுள் இருப்பாருன்னு சொல்லுவாங்க. ஆனா, எனக்கு எங்கப்பா இருந்தாரு!”

அஞ்சலி முன்னால் கண்கள் கலங்கிவிடக் கூடாது என தாட்சா தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“அதுக்காக அவர் வருத்தப்பட்டதில்லை. ஒரு நாள் கூட அவர் அதுக்காக ரிக்ரெட் பண்ணி நான் பார்த்ததே இல்ல. என்ன பார்த்துக்கிறத ரொம்ப சந்தோஷமா பண்ணாரு. அப்பாவோட பர்சனல் வாழ்க்கைலயும், கரியர்லயும் முக்கியமான அந்த 9 வருஷத்த அப்பா எனக்காக விட்டுக் கொடுத்தார்” எனச் சொல்லும் போதே அஞ்சலியின் கண்கள் கலங்கின.

அப்பாக்களின் வாழ்க்கை பெரும்பாலும் மெளனமான தியாகங்களால் நிறைந்திருக்கும். அப்பாக்களின் தியாகத்திலேயே மிகப்பெரிய தியாகம் அவர்கள் அம்மாவின் வேலையையும் சேர்த்து செய்வதுதான்.

“என் அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா அப்பா...” என மேற்கொண்டு பேச முடியாமல் அஞ்சலிக்கு தொண்டை அடைத்தது...

“சாரி... கொஞ்சம் தண்ணி எடுத்துக்கிறேன்”

“ப்ளீஸ்” என்றாள் தாட்சா.

வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் தொடர்ந்தாள்.

“அப்பாவோட வாழ்க்கையில இன்னொரு பொண்ணு வராம போனதுக்கு நான்தான் காரணம்ன்ற கில்ட் எனக்கு எப்பவும் உண்டு. அதே மாதிரி கரியராவும் அவர் எங்கேயோ இருந்திருக்கணும். என்னாலதான் அதுவும் அவருக்கு சரியா அமையாம போச்சு.”

அஞ்சலி என்ன சொல்ல வருகிறாள் என்பது தாட்சாவுக்கு மெதுவாக புரிய தொடங்கியது.

“எனக்கு நினைவு தெரிஞ்சு அப்பா இரண்டு பொண்ணுங்கள பத்திதான் அடிக்கடி என் கிட்ட பேசியிருக்காரு. ஒண்ணு நயன்தாரா, இன்னொன்னு நீங்க” எனச் சிரித்தாள் அஞ்சலி.

தாட்சாவும் சிரித்தபடி, “உனக்கு என்ன வேணும் அத சொல்லு” என்றாள்.

“அப்பாவ உங்களுக்கு பிடிச்சிருக்கா? அவர் ஒரு பியூட்டிஃபுல் சோல்” என அவள் மேற்கொண்டு ஏதோ சொல்ல வர அவளை இடைமறித்த தாட்சா...

“எனக்கு மேனனைப் பிடிக்கும்” என்றாள்.

அஞ்சலி சட்டென அந்த பதிலை எதிர்பாராமல் தாட்சாவை நிமிர்ந்து பார்த்தாள்.

“எங்களுக்கு நடுவில ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு... அன்பு இருக்கு. ஆனா, அதுக்கு பேர் காதல்தானான்னு எனக்கு சொல்ல தெரியல. எங்களுக்கு நடுவுலயிருக்கிற இந்த ட்ராவல் ரொம்ப அர்த்தமுள்ளதா இருக்கு. சந்தோஷமாயிருக்கு. இது எவ்வளவு தூரம் போகும்னு பார்க்கணும்.”

அஞ்சலி சந்தோஷமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இதைக் கேட்கத்தான் நீ இவ்வளவு தூரம் கிளம்பி வந்தியா... நான் கரெக்டா சொல்லிட்டனா...”

“சாரி... எனக்கு புரியுது. உண்மைய சொல்லணும்னா இவ்வளவு ஓப்பனா நீங்க இத பேசுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல. இது போதும். இது உங்க ரெண்டு பேரோட பர்சனல் விஷயம். நான் இதுக்குள்ள வரக்கூடாதுதான். ஆனா அப்பாவுக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கணும்ற ஆர்வத்துலதான்!”

புரியுது என்பதன் அடையாளமாக தாட்சா தலையாட்டினாள்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“நான் உங்க கிட்ட பேசுனது எதுவும் அப்பாவுக்குத் தெரிய வேண்டாம்” என்றாள் அஞ்சலி.

“நானும் அததான் சொல்லணும்னு நினைச்சேன். நான் சொன்னதும் அவருக்குத் தெரியக்கூடாது... ”

அவள் சிரிப்புடன் தலையாட்டினாள்.

“நீ உங்கப்பாவுக்கு ஏதாவது நம்பிக்கை குடுத்து அப்புறம் ஏதோ காரணத்தினால நாங்க சேர முடியாத ஒரு சூழ்நிலை வந்தா...” என தாட்சா நிறுத்தியவள்,

“இந்த வயசுல காதலே அதிகம். காதல் தோல்வி எல்லாம் அவருக்குத் தேவையா?” எனச் சிரித்தாள் தாட்சா.

“நான் வாய திறக்கல...” என அஞ்சலியும் சிரித்தாள்.

“மேனனை பார்த்திட்டியா?”

“இல்லை... நான் வர்றது கூட அவருக்குத் தெரியாது. இனிதான் பார்க்கணும்!”

“உங்கப்பாவுக்கு ஒரு சின்ன ஷாக் குடுக்கலாமா?” என கண்ணடித்தபடி போனை எடுத்தாள் தாட்சா.

“மேனன் என்னோட ரூமுக்கு ஒரு நிமிஷம் வர முடியுமா... ஒரு முக்கியமான விஷயம் டிஸ்கஸ் பண்ணனும்” என போனை கட் செய்தாள் தாட்சா.

இருவரும் குறுகுறுப்புடன் காத்திருக்கக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் மேனன்.

“ஹாய்ப்பா” என சிரித்தாள் அஞ்சலி....

“ஏய் அச்சு....” என ஆச்சர்யமானார் மேனன். அவர் அவளை அங்கு சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.

“நீ எங்க இங்க?” என அவர் மேற்கொண்டு பேச முடியாமல் ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் தடுமாற அஞ்சலி அவரை அணைத்துக் கொண்டாள்.

“ஒரு சின்ன சர்ப்ரைஸ் குடுக்கலாம்னுதான் சொல்லாம வந்தேன்” என்றாள் அஞ்சலி.

“அதிருக்கட்டும்... தாட்சா ரூம்ல என்ன பண்ற?”

“உங்களைப் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்” என்றாள் தாட்சா.

“என்னப் பத்தியா... என்ன டிஸ்கஸ் பண்ணீங்க?”

அஞ்சலி அவரை விட்டு நகர்ந்தவள் தாட்சாவின் அருகில் சென்று நின்றபடி, “அது கேர்ள்ஸ் எங்களுக்குள்ள...” எனச் சிரித்தாள்.

“அஞ்சலி என்ன பத்தி என்ன சொல்லியிருப்பான்னு எனக்கு தெரியும்” என்றார் மேனன்.

“என்ன சொல்லியிருப்பா... சொல்லுங்க?” என்றாள் தாட்சா.

“ரொம்ப நல்லவரு... அன்பானவர்... கூலா இருப்பாரு!”

“மேனன்... இதெல்லாம் எங்களுக்கே தெரியும்... அஞ்சலி சொல்லித்தான் தெரியணுமா?”

“வேறென்ன சொன்னா?” எனக் குழந்தையை போல கேட்டார் மேனன்.

“ஒரு முக்கியமான விஷயத்தை சொன்னா” என்றாள் தாட்சா.

“ஆமாப்பா... அந்த விஷயத்தை நான் சொல்லிட்டேன்” என்றாள் அஞ்சலி.

“நீங்க சும்மா போட்டு வாங்குறீங்க...” எனச் சிரித்தார் மேனன்.

தாட்சா அஞ்சலியின் தோளை அணைத்தபடி சிரித்தாள். மேனனுக்கு அவர்களை அப்படி பார்ப்பது சந்தோஷமாக இருந்தது.

“லன்ச்சுக்கு வெளியே போகலாமா மேனன்?” என்றாள் தாட்சா.

“கண்டிப்பா...”

“அஞ்சலி போலாமா?”

“ஷ்யூர்... ஒரு செல்ஃபி மட்டும் எடுத்துக்கலாமா?” எனக் கேட்டாள் அஞ்சலி.

“நானே கேட்கணும்னு நினைச்சேன்” என்றபடி மேனன் அவள் அருகே வந்து நிற்க மூவரும் ஒன்றாக செல்ஃபி ஒன்றை எடுத்துக் கொண்டார்கள்.

“டூ மினிட்ஸ்ப்பா... வாஷ் ரூம் வரைக்கு போயிட்டு வந்துர்றேன்” எனச் சொல்லிவிட்டு அஞ்சலி நகர்ந்தாள்.

“அஞ்சலி என்ன சொன்னா?”

“அதான் உங்களுக்கே தெரியும்னு சொன்னீங்களே”

“அதில்ல... அவ என்ன பார்க்க வரல... உங்கள தான் பார்க்க வந்திருக்கா”

“ஆமா” என்றாள் தாட்சா.

“அதான் என்ன சொன்னான்னு” என்றபடி ஆர்வமாக மேனன் தாட்சாவின் முகத்தைப் பார்த்தார்.

“மிஸ்டர் மேனன் நீங்க நல்ல பாஸ்ன்னு ஆபிஸ்ல எல்லாருக்கும் தெரியும். நீங்க எவ்வளவு நல்ல அப்பான்னு அஞ்சலி சொன்னா” என நிறுத்தியவள் சின்ன புன்னகையுடன், “எந்த ரோலா இருந்தாலும் எங்கப்பா அதை பெஸ்ட்டா பண்ணுவாருன்னு சொன்னா” என்றாள் தாட்சா.

“எந்த ரோல் எனக்கு குடுக்கலாம்னு இருக்கீங்க?” என புன்னகையுடன் மேனன் கேட்டார்.

“புதுசா எல்லாம் ஒண்ணும் இல்ல… ஏற்கெனவே நீங்க அந்த ரோல பண்ணிக்கிட்டுதான் இருக்கீங்க!”

“நல்லா பண்றனா?”

“பின்றீங்க...” எனச் சிரித்தாள் தாட்சா. மேனனும் சிரித்தார். அவர்களின் உறவு அடுத்த நிலையை நோக்கி நகர்வதை இருவரும் உணர்ந்தார்கள்.

…………………………………………….

மருத்துவமனையில் கட்டிலில் கழுத்தில் கட்டுடன் மேகலா படுத்திருந்தாள். எதிரே மார்க்ஸ் அமர்ந்திருந்தான்.

“ஏன்னு கேட்கவே இல்லையே சார்?” என்றாள் மேகலா.

“எதுக்கு திரும்பவும் அதை உனக்கு ஞாபகப்படுத்திகிட்டுதான் கேக்கல… மவளே இன்னொரு தடவ இந்த மாதிரி பண்ண...”

“சத்தியமா மாட்டேன் சார்” என்றாள் மேகலா.

“யாரையாவது பழி வாங்கணும்னா அதுக்கு பெஸ்ட் வழி அவங்க முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டுறதுதான்... புரியுதா?”

“செம மேட்டர் சார்... எப்படி சார் பிடிக்கிறீங்க இதெல்லாம்?”

“மண்ணாங்கட்டி... 100 தடவையயாச்சும் இது ஃபார்வேர்ட் மேசேஜ்ல வந்திருக்கும். என்னமோ நானே சிந்திச்ச மாதிரி சொல்ற!”

மேகலா சிரித்தாள்.

“சார் ஒரு சின்ன ரிக்வெஸ்ட்”

“என்ன?”

“என் கேரக்டர் மாத்தாதீங்க சார். ஒரே ஒரு மாசம் வேற ட்ராக்ல கதை பண்ணீங்கன்னா அதுக்குள்ள நான் நல்லாகி வந்துடுவேன் சார்...”

“பார்த்துக்கலாம்... அத பத்தி எல்லாம் யோசிக்காத!”

“சார் இத இன்னொரு ஃலைப்பா நான் பாக்குறேன். போன தடவ பண்ண தப்பல்லாம் சரி பண்ணி வேறொரு மேகலாவா நான் ஆசப்பட்ட மாதிரி வாழப்போறேன் சார். நீங்கதான் சார் எனக்கு ஹெல்ப் பண்ணனும்!”

மார்க்ஸ் யோசனையாகத் தலையாட்டினான்.

செய்த தவறுகளை எல்லாம் அழித்துவிட்டு சிறப்பான இன்னொரு வாழ்க்கையை வாழ வேண்டும் என ஆசைப்படாதவர்கள் யார் இருக்கிறார்கள். பெரும்பாலும் இரண்டாவது வாய்ப்பு தரக்கூடிய அளவுக்கு வாழ்க்கை இரக்கமுள்ளதாக இல்லை என்பதே உண்மை. புத்திசாலிகள் அனுபவங்களை பெரும் விலை கொடுத்து வாங்குவதில்லை. பெரும் விலை கொடுத்து அனுபவங்களை வாங்கிய முட்டாள்களிடம் அதை பயன்படுத்த வாழ்க்கை மிச்சம் இருப்பதில்லை.

“சரி ரெஸ்ட் எடு... நான் நாளைக்கு வரேன்” என சொல்லிவிட்டு மார்க்ஸ் வெளியே வந்தான்.

மேகலாவின் அப்பாவும் அம்மாவும் எழுந்து நின்றார்கள்.

“அவ சரியாகுற வரைக்கும் சீரியல் பத்தி கேட்டா எதுவும் சொல்ல வேண்டாம்” என்றான் மார்க்ஸ்.

அவர்கள் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக தலையாட்டினார்கள். மார்க்ஸ் அங்கிருந்து நகர்ந்தான்.

மார்க்ஸின் பைக் தல்வார் டவர் பில்டிங்கிற்குள் நுழைந்தது. வாசலிலேயே நெல்லையப்பன், டார்லிங், வினோ அனைவரும் நின்று கொண்டிருந்தார்கள்.

“ஏம்பா ஆபிஸ் வர்ற நேரமா இது. ஏன்பா இவ்வளவு லேட்டு?” என்றார் நெல்லையப்பன்.

“ஏன்ணே என்னாச்சு….” எனப் புரியாமல் கேட்டான் மார்க்ஸ்.

“எத்தன தடவ உனக்கு போன் பண்றது?” என்றார் அவர்.

“என்ன விஷயம்னு சொல்லுங்க”

“பெரிய பிரச்னைப்பா... நீ வா முதல்ல... வினு, நீ மார்க்ஸ் வண்டிய பார்க் பண்ணிட்டு வா” என்றார் நெல்லையப்பன்.

“என்னன்னு சொல்லுங்கணே!”

“கான்ஃபரன்ஸ் ரூமுக்கு வா... நீ என்ன பண்ணி வச்சிருக்கேன்னு உனக்கே புரியும்” என அவன் கரத்தை பற்றி அவர் இழுத்துக் கொண்டு போக வினோ, மார்க்ஸின் புல்லட்டை வாங்கிக் கொண்டான்.

மார்க்ஸ் கான்ஃபரன்ஸ் ரூமுக்குள் நுழைய படபடவென கைதட்டலில் அறையே அதிர்ந்தது. மொத்த ஆபிஸும் அந்த சின்ன கான்ஃபரன்ஸ் ரூமுக்குள் இடித்தபடி நின்று கொண்டிருந்தனர். டேபிளில் கேக் ஒன்று இருந்தது.

அனைவரும் ஓவென கத்த மார்க்ஸ் புரியாமல் அங்கு நின்று கொண்டிருந்த தாட்சாவையும், மேனனையும் பார்த்தான்.

“மார்க்ஸீ... இன்னைக்கு நம்ம ஸ்கூல் ஸ்டோரி ரேட்டிங் 10.8 TRPப்பா” என்றார் நெல்லையப்பன். அப்போது தான் அன்று வியாழக்கிழமை என்பதே மார்க்ஸுக்கு நினைவுக்கு வந்தது.

“சேனல் ஆரம்பிச்சு இவ்வளவு நாள்ல ஒரு ஷோ பத்துக்கு மேல TRP பண்றது இதுதான் முதல் தடவை. அது மட்டும் இல்ல... அந்த 7 மணி டைம் பேண்டுல நம்ம ஷோ தான் தமிழ்நாட்டுலயே நம்பர் ஒன்” என்றாள் தாட்சா

மொத்த கான்ஃப்ரன்ஸ் ரூமும் மீண்டும் கைதட்டலில் அதிர்ந்தது.

மார்க்ஸ் சந்தோஷத்தில் “எப்படி?” என்றான்.

“காரணமே காரணம் கேட்கிறதே” என்றார் நெல்லையப்பன்.

அனைவரும் சிரித்தனர்.

“முதல்ல கிடாவ வெட்டுங்க தல” என்றான் பாண்டியன்.

“தாட்சா நீங்க கேக் கட் பண்ணுங்க” என்றான் மார்க்ஸ்.

“சான்சே இல்லை ஒழுங்கா நீ கேக்க வெட்டு” என்றாள் தாட்சா.

மேனன் புன்னகையுடன் கண்களைக் காட்ட மார்க்ஸ் கேக்கை வெட்டினான். பலத்த கைதட்டல் ஒலித்தது. கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட மெதுவாக கூட்டம் கலைந்தது.

மார்க்ஸ், தாட்சா, மேனன் மூவர் மட்டும் கான்ஃபரன்ஸ் அறையில் தனித்திருந்தார்கள்.

“சார் அவங்க 1000 GRP-க்கு மேல இருக்காங்க... நாம இன்னும் 300 GRP கூட வரல... அதுக்குள்ள இந்த செலிபிரேஷன் எல்லாம் வேணுமா சார்” என்றான் மார்க்ஸ்.

பெரிய சக்ஸஸ் வந்தாதான் கொண்டாடுவேன்னு வெயிட் பண்ணாம இந்த மாதிரி சின்ன சின்ன வெற்றிகளைக் கொண்டாடுறது தப்பில்ல மார்க்ஸ்” என சிரித்தார் மேனன்.

இடியட் பாக்ஸ் | தாட்சா, மார்க்ஸ்
இடியட் பாக்ஸ் | தாட்சா, மார்க்ஸ்

மார்க்ஸும் புன்னகைத்தான்.

“ஒரு டைம் பேண்டுல நம்ம ஃபர்ஸ்டா வரமுடியும்னா ஏன் மத்த டைம்பேண்டுல வர முடியாதுன்ற நம்பிக்கை இன்னைக்கு எல்லாருக்கும் வந்திருக்கில்ல... அதுதான் ஸ்டார்ட்டிங் பாயின்ட்!”

“அவங்க இன்னும் வேற லெவல்ல நம்மள செய்வாங்க சார்”

“கண்டிப்பா... அதுவும் நம்ம கேக் வெட்டுன விஷயம் மட்டும் மத்த சேனலுக்கு தெரிஞ்சுது. பெரிய பெரிய ஷோவா போட்டு நம்மள உண்டு இல்லன்னு பண்ணிடுவாங்க” என சிரித்தார் மேனன்.

தாட்சாவும் சிரித்தாள்.

“என்ன சார் இப்படி சொல்றீங்க?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“வெற்றியோட முதல்படி என்ன தெரியுமா? நம்ம எதிரிய டென்ஷன் பண்றதுதான்” எனச் சிரித்தார் மேனன். மார்க்ஸுக்கும் சிரிப்பு வந்தது.

திவ்யா தனது அறையில் அமர்ந்திருந்தாள்.

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு அவள் திரும்பினாள். மார்க்ஸ் உள்ளே நுழைந்து, “வரலாமா” என கேட்டான்.

சின்ன புன்னகையுடன் திவ்யா “இததான் நீ எப்பவுமே பண்ற?” என்றாள்.

“என்ன?”

“உள்ள நுழைஞ்சு ஸ்டைலா உட்கார்ந்திட்டு, அப்புறமா உள்ள வரலாமான்னு கேக்குறது”

மார்க்ஸ் சிரித்தான்.

“பிக்பாஸ் நம்மள தேடி ரூம் வரைக்கும் வந்திருக்கீங்க என்ன விஷயம்?” என்றாள் திவ்யா.

“இல்ல... மேகலா பண்ண கலாட்டாவுல நாம போட வேண்டிய சண்டை பாதியிலயே நின்னுடுச்சு”

“அதை கன்டின்யூ பண்ணலாம்னு வந்திருக்க அதான?” என்றாள் திவ்யா.

“அப்படியில்ல… நாம அப்புறம் பேசிக்கவே இல்லையே அதான்” என்றான் மார்க்ஸ்.

“உன்ன நான் நெருங்கி வர்றப்பல்லாம் ஏதோ ஒண்ணு சொதப்புது மார்க்ஸ்... அதனால!”

மார்க்ஸ் அவள் அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என்பது போல பார்த்தான். “தள்ளியே இருக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றாள் திவ்யா.

“நான் இதுக்கு வேறொரு வழி சொல்லட்டா?”

என்னவென்பதாக திவ்யா பார்த்தாள்.

“முதல்ல ஒண்ணா சேர்ந்திடலாம்... அப்புறம் என்ன வருதோ அதை சேர்ந்து ஃபேஸ் பண்ணலாம்.”

திவ்யா மார்க்ஸை உற்றுப் பார்த்தாள்.

“ஏஞ்சலுக்கும் உனக்கும் நடுவுல என்ன நடந்ததுன்னு நீ ஒப்பனா சொன்னாதான் நான் இது பத்தி முடிவு பண்ண முடியும்.”

மார்க்ஸ் முகம் மாறியது. “எனக்கு உன்ன பிடிச்சிருக்குன்றேன். ஏஞ்சலுக்கு ஏன் உன்ன பிடிக்கலன்னு நீ கேட்டா என்ன அர்த்தம்?”

“நீ தானே சொல்றேன்னு சொன்ன?”

“அது அப்ப... நான் யாருன்னு தெரியாதப்ப... இவ்வளவுக்கு அப்புறமும் நீ இத கேட்கிறது கஷ்டமா இருக்கு”

“அத சொன்னாதான் என்ன?” என கேட்டாள் திவ்யா.

“அத சொன்னாதான் நீ முடிவெடுப்பேன்னா அத ஏஞ்சல் கிட்டயே கேட்டுக்கோ… நான் சொல்ல மாட்டேன்” என்ற மார்க்ஸின் குரலில் கடுமை இருந்தது.

“சொல்லலைன்னா போ” எனக் கோபமாக சொன்னாள் திவ்யா.

“சரி... போ” என சொல்லிவிட்டு மார்க்ஸ் எழுந்து சென்றான். திவ்யா கோபமாக அவன் போவதை பார்த்தபடி இருந்தாள்.

எதையோ பேச ஆரம்பித்து சம்பந்தமில்லாமல் வேறெங்கோ பேச்சு முடிந்து விட்டது என்பது இருவருக்கும் புரிந்தது. ஆனாலும், திரும்பி போய் அவளை சரி செய்ய மனமில்லாமல் மார்க்ஸும், அவனை அழைத்து சமாதானம் பண்ண மனமில்லாமல் திவ்யாவும் தாங்கள் சரி என்கிற மனநிலையில் இருந்தார்கள். இதுதான் காதலின் முக்கியமான நிலை. சரிக்கும், சாரிக்கும் நடுவில் இருக்கிற மெல்லிய கோட்டை யார் தாண்டுவது என்பதுதான் அது.

திவ்யாவை பற்றி யோசித்தபடி மார்க்ஸ் தனது அறையில் அமர்ந்திருந்தான்.

நெல்லையப்பனும் பாண்டியனும் பதற்றமாக அறைக்குள் நுழைந்தனர்.

“தல ஒரு சின்ன பிரச்னை...”

“என்னாச்சு?”

“நம்ம ஸ்கூல் ஸ்டோரியில நடிக்கிற பசங்களைக் காணோம்”

“காணோமா... அதில யார காணோம்” என்றான் மார்க்ஸ்.

“அந்த பத்து பசங்களுமே மிஸ்ஸிங் தல... போன் போட்டா எடுக்க மாட்றானுங்க... ஷூட்டிங்கும் வரல” என்றான் பாண்டியன்.

“என்னடா சொல்ற?” என நிமிர்ந்து அமர்ந்தான் மார்க்ஸ்.

“இல்லப்பா விசாரிச்சதுல அவனுங்கள வச்சு ஒரு பெரிய கம்பெனி ஸ்கூல் படம் பண்ணப் போறாங்களாம்” எனத் தயக்கமாக சொன்னார் நெல்லையப்பன்.

“சரி அதுக்கு?”

“இல்லப்பா அதனால சீரியல்ல நடிக்க மாட்டேன்னு...”

“அது நடிக்கும் போது நடிக்கட்டும் அது வரைக்கும் சீரியல்லன் நடிக்க வேண்டியது தான!”

“இல்லப்பா சீரியல்ல தினம் மூஞ்ச காட்டுனா சினிமா வரும் போது புதுசா இருக்காதுல்ல... அதனால இப்பயிருந்தே சீரியல்ல நடிக்க கூடாதுன்னு படம் பண்ற ப்ரொட்யூசர் சொல்லிட்டாராம்”

“என்ன மாமா அநியாயமா இருக்கு... நம்ம சீரியல பார்த்துதான இப்படி பத்து பேரு இருக்கானுங்கன்னு அவங்களுக்கே தெரியும். அப்புறம் இதுல நடிக்கக் கூடாதுன்னா என்ன அர்த்தம்?” என கோபமாக கேட்டான் மார்க்ஸ்.

“தப்புதான் தல” என்றான் பாண்டியன்.

“அவனுங்கள விடுடா... இவனுங்களுக்கு எங்க புத்தி போச்சு? நேத்து வரைக்கும் யாருன்னு தெரியாம இருந்தவங்களுக்கு இவ்வளவு பேரு நம்ம சேனலாலதான கிடைச்சுது... இந்தப் பசங்க அத யோசிக்க வேண்டாமா?”

“இல்ல தல... சீரியல்ல பசங்க பெரிய ஹிட்டாயிட்டாங்க... இப்ப சினிமா அவங்களுக்கு பெரிசா தெரியுது.”

“அவங்களோட அக்ரீமென்ட் இருக்கில்ல” என கேட்டான் மார்க்ஸ்.

“இல்ல தல சின்ன பசங்கன்றதால போடல” என்றான் பாண்டியன்.

“அப்படியே அக்ரீமென்ட் இருந்தாலும் ஸ்பாட்டுக்கு வர தானப்பா வர வைக்க முடியும்... எப்படி நடிக்க வைக்கிறது?”

மார்க்ஸ் சற்று நேரம் யோசித்தவன்,

“எப்பலேர்ந்து வர மாட்டாங்களாம்?” என கேட்டான்.

“இனிமே வரப் போறதில்லைன்னு சொன்னாங்க... அடுத்த வாரமே படத்தோட அனவுன்ஸ்மென்ட் வரப்போகுதாம்!”

“நேத்து தான் தமிழ்நாட்டுல நம்பர் ஒண்ணுன்னு கேக் வெட்டுனோம். அடுத்த வாரம் அந்த சீரியலே நம்ம சேனல்ல இருக்காது போலயிருக்கு...” எனக் கவலையாகச் சொன்னார் நெல்லையப்பன்.

அவரது வார்த்தைகளுக்கு பின்னாலிருந்த நிஜம் மார்க்ஸை பயமுறுத்தியது!

- Stay Tuned...