மார்க்ஸ் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியபடி அமர்ந்திருந்தான். எதிரில் உட்கார்ந்திருந்த திவ்யா எங்கிருந்து பேச்சை ஆரம்பிப்பது என வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தாள். இந்தப் பேச்சை இப்போது தொடங்கியிருக்க வேண்டாமோ என அவளுக்குத் தோன்றியது. ஆனால், மார்க்ஸ் அமர்ந்திருந்த தோரணை அவளை எளிதில் விட்டுவிடுவதாகத் தெரியவில்லை.
“நான் உன்ன வேணாம்னு சொல்றதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு” என்றாள் திவ்யா.
மார்க்ஸ் புன்னகைத்தான்.
“சீரியசா நான் ஒரு விஷயம் சொல்ல ஆரம்பிக்கிறப்ப, இப்படி காரணமே இல்லாம சிரிக்கிறது அதுல முக்கியமானது” எனக் கோபத்தோடு ஆரம்பித்தாள் திவ்யா.
மார்க்ஸ் இல்லை என்பதாகத் தலையாட்டினான்.
“என்ன வேணும்னு சொல்லு.. வேணாம்னு சொல்லு... அதெல்லாம் அப்புறம்… இங்க வர்றதுக்கு முன்னால நீ யாரு, உன்னோட வாழ்க்கையில என்ன நடந்துச்சு.... அதைப் பத்திதான சொல்றதா சொன்ன.... முதல்ல அத சொல்லு!”
சின்ன பெருமூச்சுடன் யோசித்தாள் திவ்யா. மார்க்ஸ் காத்திருந்தான். “எனக்கு அக்கறையான ஆம்பளைங்க பிடிக்காது” என்றாள் திவ்யா.
மார்க்ஸ் மெல்லிய ஆச்சர்யத்துடன் அவளை ஏறிட்டு பார்த்தான்.
“அக்கறையின்ற போர்வையில நம்மளை எப்பவும் அடிமையா வச்சுக்கணும்னு பார்ப்பாங்க... லேட்டாயிடுச்சு நான் உன்ன வீட்ல டிராப் பண்றேன்றது, உட்கார சொல்லிட்டு லைன்ல நின்னு காபி வாங்கிட்டு வர்றது. சாப்பிட போனா எப்பவும் அவங்களே பில் பே பண்றது, ரோடு கிராஸ் பண்றப்ப கையைப் பிடிக்கிறது... இதெல்லாம் யாராவது பண்ணா எனக்கு அவ்ளோ கோபம் வரும்” என்றாள் திவ்யா.
மார்க்ஸ் அவளைப் பார்த்தபடி இருந்தான்.
“என்ன பார்த்தா திமிர் பிடிச்சவள்னு தோணுதுல்ல”
“தன்னம்பிக்கை திமிரு ரெண்டுமே ஒண்ணுதான். இந்தப் பக்கமிருந்து பார்த்தா தன்னம்பிக்கை, அந்தப் பக்கத்திலிருந்து பார்த்தா திமிரு!”
“என்னை இம்ப்ரஸ் பண்றேன்னு எதையாவது பேசாதே... ஒழுங்கா உண்மையை பேசு.”
“நான் தன்னம்பிக்கையான ஆளா... இல்லை திமிர் பிடிச்சவனா?” எனக் கேட்டான் மார்க்ஸ்.
“பயங்கர திமிர் பிடிச்சவன்” என்றாள் திவ்யா.
“அதனால எனக்கு இன்னொரு திமிர் பிடிச்சவங்களைப் புரிஞ்சுக்க முடியும்” என்றான் மார்க்ஸ்.
“ஆம்பிளைங்க கேரிங்கா இருக்கிறது கூட ஒரு விதத்தில பொண்ணுங்கள ஈக்குவலா நடத்தாததோட அடையாளமாதான் எனக்கு தோணும். உன்ன ராணி மாதிரி பாத்துக்குறேன் இல்ல பேபி மாதிரி பாத்துக்கிறேன்னு சொல்லுவானுங்க. டார்ச்சர் அது... முதல்ல என்ன எதுக்கு நீ பார்த்துக்கணும்… எனக்குத் தெரியும் என்ன பார்த்துக்க!”
மார்க்ஸ் மெளனமாக அவள் பேசுவதை கேட்டபடியிருந்தான்.
“என்னோட வாழ்க்கையிலயும் அப்படிபட்ட சில காதல்கள் வந்துச்சு... அந்தக் காதல்தான் எதுலாம் காதல் இல்லைன்னு எனக்கு கத்து கொடுத்திச்சு.”
மார்க்ஸ் அவளை ஏறிட்டு பார்த்தான்.
“என்னோட ஃபர்ஸ்ட் லவ்... காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறப்ப என்னோட சீனியர் ஒருத்தனோட...”
“அவன் பேரு”
“ரொம்ப முக்கியமா அது இப்ப...”
“இல்ல... ஞாபகம் வச்சுக்கத்தான்...”
“அவன நீ ஒண்ணும் ஞாபகம் வச்சுக்கணும்னு அவசியம் இல்ல!”
“சரி வச்சுக்கல சொல்லு...” என்றான் மார்க்ஸ்.
“சொல்ற அளவுக்கு எல்லாம் ஒண்ணும் இல்ல... அவனை ஏன் பிடிச்சுதுன்னு கூட சரியா எனக்கு ஞாபகம் இல்ல. காலையில 5 மணிக்கு குட் மார்னிங் அனுப்புவான். 5.30 மணிக்கு நான் வாக்கிங் போறப்ப கூட வருவான். அப்புறம் என்ன பஸ் ஸ்டாண்ட்ல பிக்கப் பண்ணுவான். காலேஜ்ல டிராப் பண்ணுவான். நடுவுல லன்ச் அவனோடதான் கேன்டீன்ல சாப்பிடணும். ஈவ்னிங் எங்கயாவது போறதா இருந்தா அவன் கூடதான் போகணும். ராத்திரி கண்ணு முழிச்சு எக்ஸாம் படிச்சா 1 மணிக்கு டீ வாங்கிட்டு வருவான். ஒருநாள் குட்நைட் போடாம நான் தூங்கிட்டா அவனை சமாதானம் பண்ண 3 நாள் ஆகும். எனக்கு ஒரு கட்டத்துல சுதந்திரமா மூச்சு கூட விட முடியல. இதுல, எல்லாரும் இப்படி ஒருத்தன் கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும்னு எனக்கு அட்வைஸ் வேற...”
"அப்புறம் என்னாச்சு?”
"ஒரு நாள் அவனை கூப்பிட்டு என்னால முடியலைன்னு கையைத் தூக்கிட்டேன். அப்பவும் அவனுக்கு புரியல... எல்லாரும் என்னதான் ‘பிட்ச்’னு சொன்னாங்க... ஆமா நான் பிட்ச்தான்னு சொல்லிட்டேன். அந்த பிரேக்கப்புக்கு அப்புறம் தான் எனக்கு சுதந்திரம்ன்னா என்னன்றதோட அர்த்தமே புரிஞ்சுது!”
“அதுக்கப்புறம் அவன் என்ன ஆனான்?”
“ராணி மாதிரி நம்மள பார்த்துக்க மாட்டானான்னு ஏங்குற பல பொண்ணுங்க காத்துக்கிட்டு இருந்தாங்க. அதுல ஒரு பொண்ணோட அவன் சேர்ந்திட்டான். எனக்கு பண்ணதெல்லாம் அவன் அந்த பொண்ணுக்கு பண்ண ஆரம்பிச்சான். ‘எப்படிப்பட்ட ஒருத்தனை மிஸ் பண்ணிட்ட’-ன்னு காட்டுறேன்னு அவன் இன்னும் அதிகமா அவளைப் பார்த்துக்கிட்டான்.”
மார்க்ஸ் சிரித்தான்.
“அந்தப் பொண்ணு என்ன பாவமா பார்ப்பா... நான் அவளை ரொம்ப பாவமா பார்ப்பேன்”
மார்க்ஸ் புரிந்ததன் அடையாளமாகத் தலையாட்டினான்.
“இரண்டாவது லவ்... அதெல்லாம் லவ்வுன்னு சொல்லக் கூடாது... ஆனா எப்படி சொல்றதுன்னு தெரியல... அதனால லவ்வுன்னு சொல்றேன்!”
“ஏன் லவ்வுன்னு சொல்லக் கூடாது?”
“லவ்வுன்னா அது தோத்து போக கூடாது. தோத்து போனா அது லவ் கிடையாது.”
“இல்ல திவ்யா” என மார்க்ஸ் ஆரம்பிக்க, திவ்யா இடைமறித்தாள்.
“நான் அந்த அர்த்தத்தில் சொல்ல வரல. எல்லா காதலும் கல்யாணத்தில் முடியணும்னு அவசியம் இல்ல... ஆனா அவங்கள பத்தி யோசிக்கிறப்ப அப்ப எப்படி யோசிச்சமோ அதே மாதிரி இப்பவும் அன்பா நினைக்க முடிஞ்சா அதுக்கு பேர்தான் லவ்வுன்னு சொல்ல வந்தேன்.”
“சான்சே இல்ல திவ்யா” என்றான் மார்க்ஸ்.
அவள் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்தாள்.
“பாம்பேல ஒரு பெரிய சேனல்ல நான் ட்ரெய்னியா வேலை செஞ்சுட்டு இருந்தப்ப என்னோட எக்ஸிக்யூட்டிவ் ப்ரொட்யூசர் செளந்தரோட ஒரு காதல் ஆரம்பிச்சுது. வி யூஸ் டூ ஸ்மோக், டிரிங்க், பப்புக்கு போவோம் டான்ஸ் ஆடுவோம். புரோகிராமிங்ல நிறைய விஷயங்கள் எனக்கு கத்து கொடுத்தது அவன்தான். நான் என்னோட ஃப்ரெண்ட் ரேச்சல், அவன் மூணு பேரும் எப்பவும் ஒண்ணா இருப்போம். ஒரு நாள் ரேச்சல் தலை வலிக்குதுன்னு ஆபிஸ்ல பெர்மிஷன் போட்டுட்டு பாதியில வீட்டுக்கு போயிட்டா... எனக்கு மனசு கேக்கல... புதுசா ஒரு பிளாஸ்க் வாங்கி ஒரு டாக்ஸி எடுத்து மட்டுங்கா போயி அவ எப்பவும் சாப்பிடுற ஒரு சவுத் இந்தியன் ரெஸ்டாரண்ட்ல அவளுக்காக ஃபில்டர் காபி வாங்கிக்கிட்டு நான் அவ வீட்டுக்கு போனேன். அங்க அவளும் செளந்தரும்...” என மேற்கொண்டு பேச முடியாமல் நிறுத்தினாள் திவ்யா.

சில நினைவுகளை அவ்வளவு எளிதாய் நாம் கடந்து செல்ல முடிவதில்லைதான். எப்போது நினைத்தாலும் அப்போது தான் நடந்த மாதிரி வலியைத் தரக்கூடிய சக்தி அவைகளுக்கு உண்டு.
“எனக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு. என் காதல் தோத்து போச்சுன்னு எல்லாம் இல்ல. ஒரு நல்ல ஃப்ரெண்டையும் ஒரு நல்ல மென்ட்டாரையும் ஒரே சமயத்துல இழந்திட்டேன்” என வெறுமையாகச் சொன்னாள் திவ்யா. அவளது குரலில் இருந்தது
கோபமா, இல்லை வருத்தமா என்பதை மார்க்ஸால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“அதுக்கப்புறம் நான் ரொம்ப உஷாராதான் இருந்தேன். ஆனா என்ன பண்றது காயம் ஆறும் போது ஆக்ஸிடென்ட்டை மனசு மறந்துடுதே… அடுத்த காதல் ஆபிஸ்ல... என்னோட இம்மீடியட் பாஸ் ராயோட. அவனை மாதிரி ஒருத்தனைப் பார்க்கவே முடியாது. வெரி ப்ரஃபஷனல், வெரி சின்சியர், ரொம்ப மாடர்ன். எல்லா பிரச்னைக்கும் அவன்கிட்ட ஒரு சொல்யூஷன் இருக்கும். பர்ஃப்க்ட்டுன்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னன்னு கேட்டா ராய்னு சொல்லலாம். அவன் என்னை லவ் பண்றேன்னு சொன்னப்ப என்னாலயே நம்ப முடியல.”
“அவனோட ஏன் பிரேக் அப் ஆச்சு?” என ஆர்வம் தாங்காமல் கேட்டான் மார்க்ஸ்.
“ராயோட பேமிலி ரொம்ப ட்ரெடிஷ்னல். அவங்களுக்குன்னு நிறைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் எல்லாம் இருக்கு. ரொம்ப அன்பானவங்க. மரியாதையானவங்க. ஆனா, அந்த குடும்பத்துக்குள்ள நம்ம ஃபிட்டாகணும்னா நம்மளை நிறைய மாத்திக்கணும். அப்பதான் எனக்கு ஒரு உண்மை உறைச்சது. ராய்க்கு தானா காதல் வரல... அவன் என்னை காதலியா செலக்ட் பண்ணியிருக்கான்னு புரிஞ்சது”
திவ்யாவை ஆச்சர்யமாகப் பார்த்தான் மார்க்ஸ்.
“அவனுக்கு லவ் மேரஜ் பண்ணனும். அப்படி ஒருத்தர் அரேஞ்டு மேரேஜ் பண்ணிகிறது கொஞ்சம் அவனை பழைய ஆளா காட்டுறதுக்கு வாய்ப்பு இருக்கு… வரப்போற பொண்ணு அழகா இருக்கணும், புத்திசாலியா இருக்கணும், வேலை செய்யணும்... அதே சமயத்துல ஃபேமிலி ஃபங்ஷன்னு வர்றப்ப ட்ரெடிஷ்னலா அங்கயும் ஃபிட்டாகனும்.”
மார்க்ஸ் திவ்யாவை பார்த்தபடி இருந்தான்.
“வேலைக்கு செலக்ட் பண்ற மாதிரி காதலியா என்ன அவன் செலக்ட் பண்ணியிருக்கான்னு அப்புறமாதான் எனக்கு புரிஞ்சுது. பிளான் பண்ணி ஒரு பொண்ணை தட்டி தூக்குவாங்களே அந்த மாதிரி. எனக்கு அது ஒரு ஜாப் ஆஃபர் மாதிரியே தோணிச்சு... அவனோட காதலியா வேலை செய்யணும்... அப்புறம் வொய்ஃபா ப்ரமோட் பண்ணுவாங்க... அப்புறம் அவனோட குழந்தைக்கு அம்மாவா ப்ரமோஷன் கிடைக்கும்.”
மார்க்ஸ் சிரித்தான்.
“காதல்ன்றது அன்கண்டிஷ்னலா இருக்க வேண்டாமா? நான் அவன்கிட்ட சாரி சொல்லிட்டேன்”
“வேணாம்னு சொன்னப்ப அவனோட ரியாக்ஷன் என்னவா இருந்துச்சு?” ஆர்வம் தாங்காமல் கேட்டான் மார்க்ஸ்.
“அவனோட ரியாக்ஷன் இல்ல... என் அம்மா அப்பாவுக்கேகூட நான் அவசரப்பட்டு வேணாம்னு சொல்லிட்டேன்னு என் மேல வருத்தம்தான்” என்றாள் திவ்யா.
“என்னோட அனுபவத்தில நான் கத்துகிட்டது இதுதான். காதல்ன்றது நேசிக்கிற பொண்ண அடிமையா வெச்சுகிறது. அவள பொத்தி பொத்தி பார்த்துகிறேன்னு சொல்லி எதுக்கும் லாயக்கில்லாதவளா அவள மாத்துறது. ஒரு நாய்குட்டி, கிளி வளர்க்கிற மாதிரி காதலியையும் வளர்க்கிறது. அவ வாழ்க்கையும் சேர்த்து இவனுங்களே வாழ்றதுன்னு வச்சுக்கோயேன்.”
மார்க்ஸ் தலையாட்டி ஆமோதித்தான்.
“பொதுவா ஆம்பிளைங்களோட காதல் உடல் சம்பந்தப்பட்டதுதான். அதனாலதான் அது ஒருத்தரோட நிக்குறது இல்ல. காதலி பொண்டாட்டின்னு ஒருத்தர் வேணும்... அதில்லாம சைடுல சில சல்லாபங்களும் அவங்களைப் பொறுத்தவரை வாழ்க்கைக்கு முக்கியம். ரொம்ப நாள் அவங்களால ஒரே பொண்ணோட மட்டும் இருக்க முடியாது. போரடிக்கும். வாய்ப்பில்லாதவனும், வசதியில்லாதவனும்தான் இங்க ராமனா இருக்காங்க. ஆம்பளைங்கள பொறுத்தவரைக்கும் நல்லவன் கெட்டவன்னு பிரிக்கமுடியாது. வாய்ப்பு கிடைச்சவன், வாய்ப்பு கிடைக்காதவன்… அவ்வளவுதான்.”
மார்க்ஸ் சிரித்தான்.
“நாங்க எல்லாம் அப்படி இல்லைன்னு ஏதாவது சொல்லுவியே சொல்லு” என்றாள் திவ்யா.
“இல்ல... இல்ல நீ சொல்றது ஓரளவுக்கு உண்மைதான்!”
“இதில்லாம ஒரு கேட்டகரி இருக்கு... லவ்வையும் பிளான் பண்ணி பண்றது. அந்த மதம், அந்த சாதியிலயே லவ் பண்றது, வேலை பாக்குற பொண்ணா லவ் பண்றது, அழகான பொண்ணா, வசதியான பொண்ணா... இல்ல நம்ம ரேஞ்சுக்கு இந்த பொண்ணுதான் ஓகே சொல்லுவான்னு யோசிச்சு அதுக்கேத்த மாதிரி பொண்ணுங்கள லவ் பண்றது. இதுல கொடுமை நாங்களும் லவ் மேரேஜ்தான்னு சொல்லிகிட்டு திரியுறதுதான்” என்றாள் திவ்யா.
மார்க்ஸ் அவளை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டிருந்தான்.
“காதல்ங்கறது அன்கண்டிஷனலா வரணும்... கூட இருக்கிறவங்களை அடிமைப்படுத்த கூடாது. நான் எப்படி இருக்கிறனோ அப்படியே என்ன கடைசி வரைக்கும் இருக்கிறதுக்கு அலவ் பண்ணனும்... ஒரு நல்ல கம்பெனின்றது சந்தோஷத்தை தரணும். குவாலிட்டி ஆப் லைஃபை இம்ப்ரூவ் பண்ணனும். அதுதான காதலா இருக்க முடியும்?”
“நிச்சயமா...” என்றான் மார்க்ஸ்.
“இப்ப சொல்லு... நீ எப்படிப்பட்ட ஆம்பளைன்னு” எனக் கேட்டாள் திவ்யா.
“நீயே சொல்லு...”
“எனக்கு தெரியல... அதனால்தான் கிட்டவரேன்... தள்ளி போறேன்… ரொம்ப குழம்பிக்கிறேன்” என்றாள் திவ்யா.
“உன்கிட்ட ஒரு ஸ்கேல் இருக்கு திவ்யா. அதை வச்சுதான் நான் யாருன்னு நீ அளந்து பார்க்குற… நான் செளந்தரை விட பெட்டரா? ராய விட கம்மியான்னு யோசிக்கிற... உன்னோட பழைய அனுபவங்கள் வச்சுகிட்டு நான் யாருன்னு கண்டுபிடிக்க முயற்சி பண்ணா அது சரியா வராது. அதெல்லாம் தூக்கிப்போடு. புதுசா இத பாரு. இது சக்ஸஸா ஆகலாம்... இல்ல இன்னொரு அனுபவமா முடியலாம்... எதுக்கும் தயாரா இரு!”
“ஒரு பேச்சுக்கு கூட நீ எதிர்பாக்குற மாதிரி ஒருத்தனா நான் இருப்பேன்னு சொல்லமாட்ற இல்ல...”
“அது நான் சொல்லக்கூடாது திவ்யா. நான் நடந்துக்கிறதைப் பார்த்து நீ சொல்லணும்… நீ ப்ளஸ் நான் இஸ் ஈக்குவல் டூ நீ நான் கிடையாது. நாம் அப்படின்னு வேறொன்றுதான். அந்த நாம் அப்படின்றத பண்றதுக்கு சில விஷயங்களைச் சேர்க்கணும். சில விஷயங்களை விட்டுத்தரணும். எதை விட்டு தரணும், எதை சேர்க்கணுன்றதுலதான் நல்ல உறவோட மேஜிக் ஒளிஞ்சிட்டிருக்கு!”
“இப்ப என்ன சொல்ல வர்ற?”
“எதுவுமே சொல்ல வேணாம்றேன்... கோ வித் த ஃப்ளோ... பார்ப்போம்... அடுத்து என்ன ஆச்சர்யம் காத்துகிட்டு இருக்குன்னு!”
“யாரோ எஸ்கேப் ஆகுற மாதிரி தெரியுதே!” என்றாள் திவ்யா
மார்க்ஸ் எழுந்தவன் திவ்யாவைப் பார்த்து குனிந்து “என் அழகி... உன்ன ரெண்டுல ஒண்ணு பாக்காம நான் எங்கேயும் போறதா இல்லை. அதுவும் இன்னைக்கு நீ பேசுனதுக்கு அப்புறம் மனசு வேற லெவல்ல உனக்காக ஃபீல் பண்ணுது… அடிச்சு நொறுக்கி கோப்பையை வாங்குறேன்... வரட்டா” என மார்க்ஸ் நகர்ந்தான்.
திவ்யா சிரித்தாள். அந்தச் சிரிப்பில் சந்தோஷம் நிறைந்திருந்தது. சொல்ல வேண்டியதை அவனிடம் சொல்லிவிட்டோம் என்கிற நிறைவும் இருந்தது.
……………..
கான்ஃபரன்ஸ் அறையில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.
சேல்ஸ் டீம் கவலையோடு அமர்ந்திருந்தது. சேல்ஸ் ஹெட் சீயோன் படபடப்பாகப் பேச ஆரம்பித்தான்.
“மேனன் சார்.. ப்ரோகிராமிங் டீம் சொன்னத நம்பி ஏகப்பட்ட பில்டப் கொடுத்து பெரிய ரேட்டுக்கு வாய்ஸ் ஸ்டார் ஷோவை வித்திருக்கேன் சார். தமிழ்நாடு முழுக்க 10 இடத்துல ஆடிஷன் பண்றோம். லட்சக்கணக்கான ஆட்கள் கலந்துக்க வருவாங்கன்னு சொல்லி இருக்கேன். க்ளையன்ட் சென்னை ஆடிஷனுக்கு வர்றேன்னு சொல்லியிருக்காரு” எனப் பயமும் கவலையுமாக சொன்னான் சீயோன்.
“நல்ல விஷயம்தான் வரட்டும்” என்றார் மேனன்.
“மேனன் நம்ம ஆடிஷன் ப்ரோமோ போட்டு ஒரு வாரம் ஆகுது. இதுவரைக்கும் மொத்தமே 300 என்ட்ரிதான் வந்திருக்கு” என்றாள் தாட்சா.
“ஏன் ரெஸ்பான்ஸ் அவ்வளவு கம்மியா இருக்கு... ப்ரோமோவை ஏதாவது மாத்தி பார்க்கலாமா?” என்றார் மேனன்.
“அதைப்பத்தி தான் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்” என்றாள் நந்திதா.
“என்ன பண்ணலாம் மார்க்ஸ்?” எனக் கேட்டார் மேனன்.
“ப்ரோமோ ஐடியாவுக்காக ஒருத்தனை வர சொல்லிருக்கேன் சார்” என்றான் மார்க்ஸ்.
“இப்ப வருவாரா?” எனக் கேட்டார் மேனன்.
மார்க்ஸ் திரும்பி பாண்டியனைப் பார்த்தான்.
“கண்ணன் கடையிலதான் இருக்கான். வந்திருவான் தல” என்றான் பாண்டியன்.
அவன் சொல்லி வாய் மூடும் சமயம் கான்ஃபரன்ஸ் அறையின் கதவைத் திறந்து கொண்டு ஒருவன் உள்ளே நுழைந்தான்.
வயது இருபதுகளின் இறுதியில் இருக்கும். ரவுண்ட் நெக் டீ- ஷர்ட், டிராக் பேன்ட், காலில் ரப்பர் செருப்புகள், பெரிய தாடி, நீளமான முடி, வட்டக் கண்ணாடி என கார்ப்பரேட் கலாசாரத்துக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத நபராக இருந்தான்.
“யார் இவன்?” என கிசுகிசுப்பாக அருகில் இருந்த ஏஞ்சலிடம் கேட்டாள் நந்திதா.
“மாட்ஸ்... ப்ரோமோ ப்ரொடியூசர்”
“மாட்ஸா”
“அப்பா வச்ச பேர் மாடசாமி... அதை சுருக்கி ஸ்டைலா மாட்ஸ்ன்னு வச்சுகிட்டான்.”
“ஆள பார்த்தா ப்ரோமோவுக்கும், அவனுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி இருக்கே!”
“அவன் கொஞ்சம் ஓகேதான். மார்க்ஸோட அன்பு தம்பிகள்ல ஒருத்தன் அவன்” என எரிச்சலாகச் சொன்னாள் ஏஞ்சல்.
“மார்க்ஸ்ன்னா... வணக்கம்ன்னா” என மாட்ஸ் உள்ளே நுழைந்தான்.
“மாட்ஸ், இது மேனன் சார்.. சார்தான் மொத்த சேனலையும் மாத்துனது. இது நந்திதா ப்ரோமோ ஹெட்!”
அவன் வணக்கம் என்பது போல தலை குனிந்து இருவரையும் பார்த்துவிட்டு மார்க்ஸ் அருகில் அமர்ந்தான்.
“இவரைப் பத்திதான் சார் ஒரு மாசமா மார்க்ஸ் சொல்லிட்டு இருந்தாரு. இப்பதான் ஆளைப் பிடிச்சிருக்கோம்” என்றாள் நந்திதா.
“எங்கடா போயிருந்த?” என்றான் மார்க்ஸ்.
“ஒரு சாமியாரோட கொல்லி மலைக்குப் போயிட்டன்னா... வேற லெவல்ன்னா அந்த ஃபீலிங்” என்றான் மாட்ஸ்.
அனைவரும் சிரித்தனர்.
“ஏன் மார்க்ஸ் போன தடவையே மாட்ஸ்க்கு மொபைல் ஒண்ணு வாங்கி குடுக்கணும்னு சொன்னியே குடுக்கலையா?” என சிரித்தபடி கேட்டாள் தாட்சா.
“வாங்கி குடுத்தேன் தாட்சா... கீழே கண்ணன் கடையில ரெண்டாயிரம் ரூபாய்க்கு வித்துட்டு போயிட்டான்” என்றான் மார்க்ஸ்.
மேனன் புன்னகையுடன், “மாட்ஸ்.. மொபைல் மேல என்ன கோபம்?” என்றார்.
“நம்ம வசதிக்குதான் சார் போன். ஆனா, அது நம்மள கன்ட்ரோல் பண்ணுது சார். அதான் தூக்கி போட்டுட்டேன்” என்றான் மாட்ஸ்.
“நாம புதுசா ஒரு ஷோ பண்றோம்... வாய்ஸ் ஸ்டார்ன்னு” என மேனன் ஆரம்பித்தார்.
“ப்ரோமோ பார்த்தேன் சார்... சூப்பரா இருந்துச்சு” என்றான் மாட்ஸ்.
நந்திதா முகத்தில் சின்ன நிம்மதி தெரிந்தது.
“ஆனா, ப்ரோமோ பார்த்துட்டு ஷோல கலந்துக்க பெருசா யாரும் அப்ளை பண்ணலையே மாட்ஸ்...”
“அது பண்ண மாட்டாங்க சார்” என்றான் மாட்ஸ்.
“ஏன் மாட்ஸ்?” எனப் புன்னகையுடன் கேட்டார் மேனன்.
“சார்... ப்ரோமோ ரொம்ப கிளாஸா இருக்கு. அந்த ப்ரோமோவ பார்த்தா இந்த ஷோல கலந்துக்க நமக்கு பெரிய சங்கீத ஞானம் இருந்தாதான் முடியும்ன்ற மாதிரி இருக்கு.”
அனைவரும் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
“நல்ல முறையா சங்கீதம் படிச்சவங்க மட்டும்தான் இதுக்கு அப்ளை பண்ணுவாங்க... காட்டுலயும் மேட்டுலயும் பாடுறவங்க வந்து கலந்துக்கிற மாதிரி ப்ரோமோ இருக்கணும் சார்.”
“அப்படி ப்ரோமோ பண்ணா குவாலிட்டியான சிங்கர் வரமாட்டாங்க!” என்றாள் நந்திதா.
“எது குவாலிட்டி? உங்களுக்கு ‘தெய்வம் தந்த பூவே’ பாட்டு பிடிக்கும்... எனக்கு ‘ரகிட ரகிட’ பிடிக்கும். எல்லா டைப் ஆளுங்களும் ஷோக்கு வரணும் இல்ல” என்றான் மாட்ஸ்.
“என்ன பண்ணலாம் மாட்ஸ்?” எனக் கேட்டாள் தாட்சா.
“மேடம் இந்த வீணை, பட்டுப்புடவை, கோயில்ல பாடுற ப்ரோமோ வொர்க் அவுட் ஆகாது. சும்மா கலாட்டாவா கீழ இருக்கிற சனங்க வரைக்கும் போற மாதிரி ஒரு ப்ரோமோ பண்ணனும்” என்றான் மாட்ஸ்.

“பர்ஃபெக்ட் மாட்ஸ்... நீங்களே ஒரு ப்ரோமோ ஐடியா கொடுங்க... நந்திதா மாட்ஸோட சேர்ந்து அதை உடனே எக்ஸிக்யூட் பண்ணுங்க” என்றார் மேனன்.
“யெஸ் சார்” எனக் கோபத்தை அடக்கியபடி சொன்னாள் நந்திதா.
“டார்லிங்... இவனுக்கு டீ சாப்பாடு எல்லாம் குடுத்து இங்கயே அடைச்சு வை… ப்ரோமோ முடியற வரைக்கும் இவனை வெளியே விடாத... விட்டா பிடிக்க முடியாது” என்றான் மார்க்ஸ்.
அனைவரும் சிரித்தனர்.
மாட்ஸ் எழுந்து நந்திதா அருகில் வந்தான். “நம்ம ப்ரோமோ ஐடியால உட்காரலாமா” எனக் கேட்டான்.
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... நான் முடிச்சிட்டு வந்தர்றேன்” என்றாள்.
“ஒண்ணும் பிரச்னை இல்ல... போயிட்டு வாங்க அதுக்குள்ள நான் ஐடியா முடிச்சு வச்சிர்றேன்” என்றான் மாட்ஸ்.
“இல்லல்ல... நாம சேர்ந்தே யோசிக்கலாம்... மத்த வேலைய தள்ளி வச்சர்றேன்” என அவசரமாகச் சொன்னாள் நந்திதா.
‘‘இதுவும் ஓகேதான்” என சிரித்தான் மாட்ஸ்.
……………….
மார்க்ஸ் தனது அறையில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான். போன் அடிக்க மார்க்ஸ் எடுத்தான்.
“கொஞ்சம் என் ரூம் வரைக்கும் வர முடியுமா?” என்றார் மேனன்.
“யெஸ் ஸார்” என போனை வைத்தான் மார்க்ஸ்.
மார்க்ஸ் அறைக்கதவைத் திறந்து கொண்டு மேனன் அறைக்குள் நுழைந்தான். அங்கு தாட்சா, திவ்யா, மேனன் அவர்களுடன் இன்னொருவனும் அமர்ந்திருந்தான்.
சீராக வாரப்பட்ட தலைமுடி, கொஞ்சமும் கலையாத நேர்த்தியான உடை, பளபளக்கும் ஷூ, கையில் கறுப்பு நிற பிராடோ வாட்ச் என விளம்பரப் படங்களில் வரும் மாடல் போலிருந்தான்.
“மார்க்ஸ் இதுதான் ராய்... சவுத் மார்க்கெட்டிங் ஹெட், சென்னையில் இருந்துட்டுதான் சவுத் இந்தியாவை மேனேஜ் பண்ண போறாரு” என்றார் மேனன்.
“ஹாய்” என ராய் அவனது கையை அழுத்தமாக பற்றி குலுக்கினான்.
மார்க்ஸ் திரும்பி, “நீ சொன்ன ராயா” என்பது போல திவ்யாவை பார்த்தான்.
ஆம் என்பதுபோல் அவள் மெலிதாக தலையை ஆட்டினாள்.
மார்க்ஸுக்கு ராய் மேல் இனம் புரியாத வெறுப்பும் கோபமும் வந்தது.
“ராய் இந்த வீடு ஓகே வா பாரு...” என மேனன் போனில் வீட்டின் புகைப்படம் ஒன்றை காட்ட அனைவரின் கவனமும் அவரது போன் பக்கம் திரும்பியது.
திவ்யா மார்க்ஸ் அருகில் வந்தவள், மெலிதாக அவன் காதில் சொன்னாள்…
“ராயோட கல்யாணம் நின்னுடுச்சாம்... இன்னும் அவன் சிங்கிள்தான்” என்றாள் திவ்யா.
மார்க்ஸ் அவளை முறைத்தான். திவ்யா மெலிதாக புன்னகைத்தாள்!