Published:Updated:

இடியட் பாக்ஸ் - 51: மார்க்ஸ் சொன்னதும், மேகலாவின் வீட்டில் பாண்டியன் செய்ததும்?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 51: மார்க்ஸ் சொன்னதும், மேகலாவின் வீட்டில் பாண்டியன் செய்ததும்?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

ராயும் திவ்யாவும் அவனது அறையில் தனித்திருந்தார்கள். ராய் பூசியிருந்த விலையுயர்ந்த பர்ஃப்யூம் மணம் அந்த அறையை நிறைத்தது. சின்ன புன்னகையுடன் அவன் திவ்யாவை பார்த்துக் கொண்டிருந்தான். அதேபோன்றதொரு புன்னகை திவ்யாவின் முகத்திலும் இருந்தது.

“வந்ததுமே கேக்கணும்னு நினைச்சேன்... நீதான் நியாயமா புரோகிராமிங் ஹெட்டா இருந்திருக்கனும். எப்படி அந்த மார்க்ஸுக்கு விட்டுக் கொடுத்த?” எனப் பேச்சை ஆரம்பித்தான் ராய்.

“மத்தவங்க கிட்ட நடந்துக்கிற மாதிரி என்னால மார்க்ஸ் கிட்ட நடந்துக்க முடியல அது லவ்வா... இல்லை லூஸிங் மைசெல்ஃபானு தெரியல!”

ராயின் முகம் இருண்டது. அவன் தன்னை சமாளித்துக் கொண்டவனாக, “உனக்காக ஒரு ரித்திக் ரோஷன் வெயிட்டிங்ல இருக்காரு... பார்த்து சூஸ் பண்ணு” எனச் சிரித்தபடி சொன்னான்.

“அது நார்த்ல ராய். சவுத்ல ரஜினிகாந்த்தான் சூப்பர் ஸ்டார்” என சொல்லி சிரித்தவள், “அப்புறம் மீட் பண்ணலாம்” என்றபடி அவனது அறையை விட்டு வெளியே வந்தாள்.

உலகத்தின் சந்தோஷமான விஷயங்கள் என சில உண்டு. அதிலொன்றுதான் நம்மை வேண்டாம் என ஒதுக்கி தள்ளியவர்கள் மீண்டும் நாம் வேண்டும் என வந்து நிற்கும் போது வருவது.

திவ்யா தனது அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். மார்க்ஸ் அமர்ந்திருந்தான்.

“என்ன சொல்றான் அந்த ராய்?” என கேட்டான் மார்க்ஸ்.

திவ்யாவுக்கு சிரிப்பு வந்தது. தன்னுடைய ஆண் கொஞ்சம் பொஸசிவ்வாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைத்து பெண்களின் எதிர்பார்ப்பும். அதை அவர்கள் ரசிக்கவும் செய்வார்கள். அது குறித்த சின்ன கர்வமும் அவர்களுக்கு இருக்கும். ஆனால் ஒரு நூலிழை அதிகமானால் அதுதான் சந்தேகம் என்பது அதில் ஒளிந்திருக்கும் ஆபத்து.

“ஒண்ணும் சொல்லல... சும்மா பேசிட்டிருந்தான்” என உள்ளூர மார்க்ஸின் தவிப்பை ரசித்தபடி சொன்னாள் திவ்யா.

சில தகுதிகளை எல்லாம் பார்த்துதான் பெண், ஓர் ஆணை தேர்ந்தெடுக்கிறாள். ஆனால், அப்படி ஒருவனைத் தேர்ந்தெடுத்த பிறகு அவன் தன்னிடத்தில் மட்டும் அப்படி இருக்ககூடாது என்றும் அவள் எதிர்பார்க்கிறாள். ஆளுமையான ஆணை தேர்ந்தெடுக்கும் பெண்கள் அவன் தன்னிடம் குழந்தையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

“அவன் பழைய கதை எதுவும் பேசலயா?” என்றான் மார்க்ஸ்

“அது எப்படி பேசாம இருப்பான்...”

“என்னவாம் அவனுக்கு?”

திவ்யா பதில் சொல்லாமல் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“இல்ல பர்சனல்னா சொல்ல வேணாம்.”

“அதுல என்ன பர்சனல் இருக்கு... அவன் கல்யாணம் நின்னிடுச்சு. உன்ன வேணாம்னு சொன்னது தப்புன்னு சொன்னான்.”

“அவன் எங்க உன்ன வேணாம்னு சொன்னான். நீதான அவனை வேணாம்னு சொன்ன” என்றான் மார்க்ஸ்.

“மியூச்சுவலா பேசி பிரிஞ்சதுதான...” என்றாள் திவ்யா.

“சரி இப்ப என்னவாம் அவனுக்கு!”

“எனக்காகத்தான் சவுத் டிரான்ஸ்பஃபர் கேட்டு வாங்கிட்டு வந்தானாம். இன்னொரு சான்ஸ் குடுன்னு சொல்றான்” என திவ்யா சிரித்தாள்.

அவள் நிஜம் சொல்கிறாளா இல்லை தன்னை கிண்டலடிக்கிறாளா எனப் புரியாமல் அவளை பார்த்தான் மார்க்ஸ்.

தன்னுடைய பிடி இப்போது அவளது கையில் இருப்பது மார்க்ஸுக்குப் புரிந்தது. அவனுக்கும் சிரிப்பு வந்தது.

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

“என்ன சிரிக்கிற?”

“நிஜமாவே ராய் அப்படியா சொல்றான்?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

அவள் ஆமென தலையாட்டினாள்.

“நீ என்ன சொன்ன?”

“மார்க்ஸ்னு ஒருத்தன் என்ன ப்ரபோஸ் பண்ணியிருக்கான்னு சொன்னேன்!”

மார்க்ஸ் சிரித்தான்.

“நிஜமா சொன்னேன்” என்ற திவ்யாவின் முகத்தில் புன்னகை.

“நீ மார்க்ஸுக்கு ஓகே சொல்லிட்டன்னு அவன் கிட்ட சொல்லலையா?”

“நான் எப்ப உனக்கு ஓகே சொன்னேன்?”

மார்க்ஸ் எதுவும் பேசாமல் அவளை ஏறிட்டு பார்த்தான்.

“கரெக்ட்... சரி திவ்யா கிளம்பறேன்... 5 மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு” என சொல்லிவிட்டு அறையை விட்டு நகர்ந்தான் மார்க்ஸ். அவன் சட்டென அந்த உரையாடலை முடித்து கொண்டு கிளம்புவான் என திவ்யா எதிர்பார்க்கவில்லை.

சில பிரச்னைகளை தீர்ப்பதற்கான சிறந்த வழி அவை பிரச்னை என ஒப்புக் கொள்ளாமல் இருப்பதுதான் என்பது மார்க்ஸின் பாலிசி.

திவ்யா தனக்குள் சிரித்துக் கொண்டாள். தனக்காக மார்க்ஸ் பதற்றமாவது அவளுக்குப் பிடித்திருந்தது. ‘இப்ப புரியுதா ஏஞ்சலை பார்க்கும் போது எனக்கு எப்படி இருக்கும்னு’ என நினைத்தாள் திவ்யா. அது தன்னுடைய இயல்பில்லையே என்பதும் அவளுக்கு யோசனையாக இருந்தது.

காதலுக்கென்று நிரந்தரமான விதிகள் எதுவும் இல்லை. அவை எப்போதும் மாறுதலுக்குட்பட்டவை.

…………………….

சென்னை விமான நிலைய முதல் தளத்தில் நுழைவாயிலுக்கு அருகே உள்ள காபி ஷாப்பில் மேனன் காபி வாங்குவதற்காக காத்திருந்தார். காபி தயாராகிக் கொண்டிருக்க பலத்த சிரிப்பு சத்தம் கேட்டு மேனன் திரும்பி பார்த்தார்.

சற்று தள்ளியிருந்த பென்ச் ஒன்றில் அஞ்சலியும் தாட்சாவும் அமர்ந்திருந்தனர். தாட்சா அஞ்சலியின் தோளில் தனது கரத்தை போட்டிருந்தாள். அஞ்சலி தாட்சாவை ஒரு கையால் அணைத்தபடி அமர்ந்திருந்தாள். நீண்ட நாள் பழகிய தோழிகளைப்போல அவர்கள் தெரிந்தார்கள். சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களை அப்படிப் பார்ப்பது மேனனுக்கு சந்தோஷமாக இருந்தது.

காபியை வாங்கியபடி மேனன் அவர்கள் அருகில் வந்தார்.

“என்ன பயங்கர சிரிப்பா இருக்கு!”

“அது கேர்ள்ஸ் திங்” என ஒன்றாக அவர்கள் சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தார்கள். மேனன் ட்ரேயை நீட்ட அவர்கள் காபி கோப்பைகளை எடுத்துக் கொண்டார்கள்.

“45 மினிட்ஸ்க்கு முன்னால நீ உள்ள இருக்கணும்” என்றார் மேனன்.

“போனா போட்டும்பா... நான் அடுத்த ஃபிளைட்ல போறேன்” என்றாள் அஞ்சலி.

“எனக்கு ஓகே” என்றார் மேனன்.

“நான் எது சொன்னாலும் உங்களுக்கு ஓகேதான் இல்லப்பா” என சிரித்தாள் அஞ்சலி.

மேனன் புன்னகைத்துக் கொண்டார்.

“நான் பேசாம சென்னைக்கே வந்திரலாம்னு யோசிக்கிறேன்” என்றாள் அஞ்சலி.

“தாரளமா வா...”

“இந்த ஊர்ல ஏதோ மேஜிக் இருக்குப்பா” என்றாள் அஞ்சலி.

“உனக்குமா?” என சிரித்தார் மேனன்.

தாட்சா புன்னகையால் வெட்கத்தை மறைக்க முயன்றாள்.

“பார்த்தீங்களா தாட்சா... எங்கப்பா எப்படி பிட்டு போடுறாருன்னு” என சிரித்தாள் அஞ்சலி.

“இல்லடா எனக்கு சென்னை பிடிச்சிருக்குன்னு சொன்னேன்.”

“சென்னைக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்குப்பா” என்றாள் அஞ்சலி.

அவளது ஃபிளைட்டுக்கான இறுதி அழைப்பு என அறிவிப்பு வர, “சரிப்பா நான் கிளம்பறேன்... தாட்சா வரேன்” என அவர்கள் இருவரையும் அணைத்தவள் விடை பெற்றுக் கொண்டாள்.

தொலை தூரமோ இல்லை அருகிலோ, வழியனுப்பவும் வரவேற்கவும் ஒருவர் இருக்கும் போது பயணங்களின் துவக்கமும் முடிவும் அழகாகிவிடுகின்றன.

“மெட்ரோ ட்ரெயின்ல போலாமா?” என்றாள் தாட்சா.

“கார்... என்ன பண்றது?” எனக் கேட்டார் மேனன்.

“நாளைக்கு டிரைவரை அனுப்பி எடுத்துக்கலாம்” என்றாள் தாட்சா.

இருவரும் விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ஸ்டேஷன் செல்லும் பாதையில் மெளனமாக நடந்தார்கள்.

“எனக்கு ஏர்போர்ட் பிடிக்கும்” என்றார் மேனன்.

“ஏன்?” என சிரித்தபடி கேட்டாள் தாட்சா.

“ஏர்போர்ட்டுக்குள்ள போறப்பவே எல்லா பொறுப்புகளையும் கவலைகளையும் வெளிய விட்டுட்டு உள்ள போற மாதிரி தோணும். உள்ள இருக்குறப்ப எதைப் பத்தியும் எனக்கு யோசனை வராது. திரும்பவும் நம்ம ஊர் திரும்புற வரைக்கும் எந்த நினைப்பும் இல்லாம ஃபீரியா இருக்கிற மாதிரி இருக்கும்” என்றார் மேனன்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“இங்க ஒருத்தர் உங்களுக்காகக் காத்துட்டு இருந்தா அப்படித் தோணாது” என மேனனை பார்க்காமல் சொன்னாள் தாட்சா.

“இனிமே தனியா பயணம் போற மாதிரியும் எனக்கு பிளான் இல்லை” என மேனன் வேறெங்கோ பார்த்தபடி சொன்னார்.

இருவரும் ஸ்டேஷன் சீக்கிரம் வந்துவிடப் போகிறதே என மெதுவாக நடந்தார்கள். அவர்களது தோள்கள் இடித்துக் கொண்டன. மேனன் கரத்தை தாட்சா பற்றிக் கொண்டாள். ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்துக் கொள்ளாமல் கரங்களை மட்டும் பற்றியபடி நடந்தார்கள். பற்றியிருந்த கரங்கள் ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டன.

பாண்டியன் மேகலாவின் வீட்டு முன்னால் வந்து நின்றான். அழைப்பு மணி அடித்தான். பதில் இல்லை. போனை எடுத்து டயல் செய்தான்.

“மேகலா நான் பாண்டியன் வந்திருக்கேன். வீட்ல இல்லையா?”

“வாசல்ல மேட்டுக்கு கீழ சாவி இருக்கும் பாருங்க பாண்டியன். திறந்துட்டு உள்ள வாங்க” என்றாள் மேகலா.

சின்ன ஆச்சர்யத்துடன் வாசலிருந்த மிதியடிக்கு கீழே இருந்த சாவியை எடுத்து கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

“பாண்டியன் இங்க...” என அறையிலிருந்து சத்தம் கேட்டது.

பாண்டியன் அறைக்கதவை திறக்க மேகலா படுக்கையில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள். கழுத்தை சுற்றி தலையை அசைக்காமல் இருக்கும் படியான நெக் கவர் போடப்பட்டிருந்தது.

“மார்க்ஸ் சார் கொஞ்சம் பிஸி. அதான் என்ன அனுப்பி உங்களை பார்த்துட்டு வர சொன்னார்” என்றான் பாண்டியன்.

“ ‘சீரியல்ல ஆள மாத்திட்டோம். வருத்தப்பட போறா நேர்ல போய் சொல்லிட்டு வா’-ன்னு உங்களைப் பார்க்க அனுப்பி வெச்சாரா?”

“சீரியல் எல்லாம் ஒரு விஷயமா... முதல்ல நீங்க நல்லபடியா எந்திரிச்சு வாங்க... அப்புறம் பார்த்துக்கலாம்” என்றான் பாண்டியன்.

“நடிக்கிறவங்களுக்கு உடம்பு சரியில்லன்னு நியூஸ் வந்தாலே முடிஞ்சுது பாண்டியன். அப்புறம் யாரும் கூப்பிட மாட்டாங்க” என்றாள் மேகலா.

“அத விடுங்க... இப்படி தனியா விட்டுட்டு எங்க போனாங்க உங்க அப்பா, அம்மா?”

“திருச்சிக்கு போயிருக்காங்க.. நைட்டு வந்துருவாங்க”

“திருச்சிக்கா... உங்கள தனியா விட்டுட்டா” என அதிர்ச்சியாக கேட்டான் பாண்டியன்.

“இல்ல... நர்ஸ் ஒருத்தங்கள வர சொல்லிட்டு தான் கிளம்புனாங்க. ஆனா, நர்ஸ் இன்னும் வரல” என்றாள் மேகலா.

“யாருக்காவது போன் பண்ணியிருக்கலாமே?”

“தோணல” என்றாள் மேகலா.

“நீங்க நடக்கறது எல்லாம்?” என பாண்டியன் சந்தேகமாகக் கேட்டான்.

“பத்து நாள் கீழ கால் வச்சு நிக்க வேணாம்னு சொல்லியிருக்காங்க” என்றாள் மேகலா.

“காலையில இருந்து ஏதாவது சாப்பிட்டீங்களா இல்லையா?”

மேகலா இல்லை என தலையாட்டினாள்.

“இருங்க நான் ஏதாவது ரெடி பண்றேன்” என்றான் பாண்டியன்.

“முதல்ல நான் பாத்ரூம் யூஸ் பண்ணனும்” எனத் தயக்கமாக சொன்னாள் மேகலா.

பாண்டியன் ஒரு குழந்தையை தூக்குவதைப்போல அவளை பாத்ரூமுக்கு தூக்கி கொண்டு போனான். அவளது கை கால்களை டவலால் சுத்தம் செய்தான். ஃபிரிட்ஜில் இருந்த மாவில் தோசை சுட்டு கொண்டு வந்து தந்தான். அவளை தொடுகிற போதெல்லாம் ஒரு உதவி தேவைப்படுகிற உடலை தொடுகிற தாதியை போலவே நடந்து கொண்டான். அவனது கண்களின் கண்ணியம் அவளது தயக்கத்தை தளர்த்தி இருந்தது.

அவளை மீண்டும் படுக்கையில் படுக்க வைத்தான். மேகலாவின் கண்கள் கலங்கியிருந்தன.

“நீங்க வேணா கிளம்புங்க பாண்டியன். அம்மா அப்பா வந்திருவாங்க” என்றாள் மேகலா.

“ஒண்ணும் தேவையில்ல... நீங்க தூங்குங்க நான் ஹால்ல இருக்கேன். அப்பா அம்மா வந்ததும் சொல்லிட்டு நான் கிளம்புறேன். கதவு கொஞ்சம் திறந்து இருக்கட்டும்” என அவன் ஹாலில் சென்று அமர்ந்து கொண்டான். மேகலா சின்ன புன்னகையுடன் போனை எடுத்தவள், மார்க்ஸ்க்கு டயல் செய்தாள்.

“மார்க்ஸ் சார்”

“சாரி மேகலா அதுக்கப்புறம் என்னால வந்து உன்ன பார்க்கமுடியல” என்றான் மார்க்ஸ்.

“அதான் என்ன பார்த்துக்க ஆள் அனுப்பியிருக்கீங்களே... அப்புறம் என்ன?” என்றாள் மேகலா.

“ஆள் அனுப்புனனா? நான் யாரையும் அனுப்பலையே.. யாரையாவது அனுப்பியிருக்கலாமேன்னு சொல்ல வர்றியா? ஏதாவது தேவைன்னா சொல்லு யாரையாவது அனுப்பி வைக்கிறேன்” என்றான் மார்க்ஸ்.

சட்டென ஏதோ புரிந்தது போலிருந்தது மேகலாவுக்கு

“இல்ல சார்.. சும்மா சொன்னேன். நான் அப்புறம் கூப்புடுறேன்” என போனை கட் செய்தாள் மேகலா.

ஆரம்பத்தில், பாண்டியன் மேகலாவுக்கு அடிக்கடி போன் செய்வான். இன்ஸ்டாவில் அவள் ஒரு புகைப்படம் போட்டால் முதலில் லைக் போடுவது அவனாகத்தான் இருக்கும். உடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் ஆரஞ்ச் டிவி பாண்டியனுக்கு உன் மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு என அவளை கேலி செய்வதுண்டு. பின்னாளில் அவள் பிஸியானப்பிறகு அவனது போன் கால்களை தவிர்க்க துவங்க அவனும் போன் செய்வதை நிறுத்திக் கொண்டான். எப்போதாவது சேனலுக்கு போகும்போது பாண்டியனை பார்க்க நேர்கையில் அவனது கண்கள் ஏதோ சொல்ல தவிப்பதாக அவளுக்குத் தோன்றும். அதை அவள் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.

திறந்திருந்த கதவு வழியாக பாண்டியன் ஹாலில் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவள் கண்கள் கலங்கின. அவளது மனது எழுந்து சென்று பாண்டியனின் தோளில் சாய்ந்து கொண்டது.

மார்க்ஸின் அறையில் நந்திதா நின்று கொண்டிருந்தாள். டார்லிங், வினோ நெல்லையப்பன் என மற்றவர்களும் அங்கிருந்தார்கள்.

“மாட்சை எப்படி மிஸ் பண்ணீங்க?” என கேட்டான் மார்க்ஸ்.

“டீ குடிக்கிறப்ப தம்மு பத்த வைக்கிறேன்னு ஓரமா போனான் திரும்பி வரவே இல்லப்பா” என்றார் நெல்லையப்பன்.

“அவன் ஒரு பெரிய இவன்னு மேனன் சார் கிட்ட சொல்லியிருக்கோம். இன்னைக்கு ப்ரோமோ பிளான் பிரசன்ட் பண்ணி நாளைக்கே ஷூட் பண்ணனும். இப்ப என்ன பண்றது?”

“இதுக்குதான் இந்த மாதிரி ஆளுங்களை நம்பக் கூடாதுன்றது” என்றாள் நந்திதா.

“நீ ஏதாவது சொன்னியா?”

“நான் எல்லாம் ஒண்ணும் சொல்லல... உன் தலைமுடியும் தாடியும் என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. அதைப் பார்த்தாலே என்னால யோசிக்க முடியலைன்னு சொன்னேன். அவ்வளவுதான்” என்றாள் நந்திதா.

“இதுலதான்பா மாட்ஸ் கடுப்பாகி எஸ்கேப் ஆயிட்டான்னு நினைக்கிறேன்” என்றார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் நந்திதாவை பார்த்தான்.

“எனக்கு தோணிச்சு சொன்னேன். இதுக்காக ஒருத்தன் கோச்சுகிட்டு போறதெல்லாம் ரொம்ப ஓவர்” என்றாள் நந்திதா.

“இன்னும் அரை மணி நேரத்தில மீட்டிங்... என்ன பண்ணலாம்?” என்றான் டார்லிங்.

மார்க்ஸ் யோசிக்கும் சமயம் அறைக்கதவு தட்டப்பட்டது. அனைவரும் திரும்ப மாட்ஸ் உள்ளே நுழைந்தான்.

சுத்தமாக தாடி மழிக்கப்பட்டு, தலைமுடி அழகாக வெட்டப்பட்டு அரைக்கை சட்டையுடன் பள்ளி சிறுவனைப்போல் நின்று கொண்டிருந்தான் மாட்ஸ்.

“என்னடா இது?” என சிரிப்பை அடக்கமுடியாமல் கேட்டான் மார்க்ஸ்.

“இல்லன்னா பரட்டை தலையும் தாடியும் டிஸ்டர்ப்பா இருக்குன்னு ப்ரோமோ ஹெட் சொன்னாங்க... அதான் வெட்டிட்டேன்” என்றான் மாட்ஸ்.

அனைவரும் சிரித்தனர் நந்திதா அதை எதிர்பார்க்கவில்லை.

“ஏண்டா இதையே நாங்க சொல்லியிருந்தா என்னடா பண்ணியிருப்ப?” எனக் கேட்டார் நெல்லையப்பன்.

“இன்னும் பெருசா வளர்த்திருப்பேன்னா” என்றான் மாட்ஸ்.

மீண்டும் அனைவரும் சிரித்தனர்.

“சரிடா ப்ரோமோ பிரசன்டேஷன் ரெடியா?”

“அது ரெடின்னா. சாங் ப்ரோமோதான்... ஒரு சாங் போட்டிருக்கேன்... கேட்டு பாக்குறீங்களா?”

“குடு” என அவனிடம் பென் டிரைவை வாங்கிய டார்லிங் அதை லேப்டாப்பில் இணைத்து ஒலிக்கவிட்டான்.

பாடல் ஒலிக்கத் தொடங்க அனைவருக்கும் அந்தப் பாடல் சூப்பர் ஹிட் எனப் புரிந்தது.

“மீட்டிங் போலாம்" என நம்பிக்கையுடன் எழுந்தான் மார்க்ஸ்.

அனைவரும் அவன் பின்னால் நகர்ந்தனர்.

நந்திதா மாட்ஸின் அருகில் வந்தவள், “நான் சொன்னேன்னா முடி வெட்னீங்க?” எனக் கேட்டாள்.

“ஆமாங்க” என்றான் மாட்ஸ்.

“ஏன்?”

“ஒரு லவ்வுதான்” என சிரித்தான் மாட்ஸ்!

- Stay Tuned...