Published:Updated:

இடியட் பாக்ஸ் - 52: வாய்ஸ் ஸ்டார் ஜட்ஜ் ஷர்ஷவர்தனும், நாகர்கோயில் சண்முகமும்!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 52: வாய்ஸ் ஸ்டார் ஜட்ஜ் ஷர்ஷவர்தனும், நாகர்கோயில் சண்முகமும்!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

ஜன்னல் வழியாக வெளிச்சம் முகத்தில் அறைய மார்க்ஸ் உறக்கம் கலைந்து எழுந்தான். சனிக்கிழமைதானே இன்னும் கொஞ்ச நேரம் உறங்கலாம் என உருண்டு படுத்த அடுத்த நொடியே அன்றைக்கு 'வாய்ஸ் ஸ்டார்' ஆடிஷன் என்பது அவன் நினைவுக்கு வந்தது. சட்டென எழுந்து அமர்ந்தான். செல்போனை எடுத்து பார்த்தான். மணி 7 எனக் காட்டியது. வேகமாக அவன் குளித்து தயாராகி ஹாலுக்கு வந்தான்.

திவ்யாவும் நந்திதாவும் கிளம்பி போயிருந்தார்கள். அவர்கள் விட்டு சென்ற பர்ஃபியூம் மணம் மட்டும் மிச்சமிருந்தது. அவசரமாகக் கதவை பூட்டிவிட்டு கிளம்பினான். அங்கிருந்து ஜூப்ளி ஸ்கூலுக்கு 15 நிமிடங்களில் போய் விடமுடியும் எனக் கணக்கிட்டது அவன் மனது.

ஜூப்ளி ஸ்கூலுக்கு வெகு தொலைவுக்கு முன்னதாகவே நீண்ட வரிசையில் ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். என்ன வரிசை இது என்ற சிந்தனை அவன் மனதிலோடியது. வளைந்து நெளிந்து அந்த வரிசை ஜூப்ளி ஸ்கூல் வாயிலில் முடிய அப்போதுதான் அவர்கள் ஆடிஷனுக்காக வந்தவர்கள் என்பது அவனுக்கு உறைத்தது.

ஜீப்ளி ஸ்கூல் முழுக்க வாய்ஸ் ஸ்டார் நிகழ்ச்சியின் விளம்பர பலகைகளால் நிரம்பி கிடந்தது. ஏற்கெனவே பாடல் பாடி அனுப்பி ஆடிஷனுக்கு தேர்வானவர்கள் ஒரு புறமும், புதிதாக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வந்தவர்கள் மறுபுறமும் என இரண்டு தனி தனி வரிசைகள் பள்ளிவாசலின் வலப்புறமும் இடப்புறமுமாக நீண்டிருந்தன. கூட்டத்தை ஒழுங்கு செய்ய காவலர்கள் வந்திருந்தார்கள்.

“ஏன் சார் முன்னாலயே சொல்ல வேண்டாமா இவ்வளவு கூட்டம் வரும்ன்னு” என இன்ஸ்பெக்டர் ஒருவர் பிரசாத்திடம் கடிந்து கொண்டார்.

“சார் சத்தியமா இவ்வளவு பேர் வருவாங்கன்னு நாங்க எதிர்பார்க்கல சார்” என அவரிடம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான் பிரசாத். ஆச்சர்யம் மாறாமல் வரிசையை பார்த்தபடி வந்த மார்க்ஸின் புல்லட், பள்ளி வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டது. செல்லப்பா ஓடி வந்தார்.

“நம்ம சேனல் ஹெட்டுப்பா அவரு” என செல்லப்பா சொல்ல மார்க்ஸின் புல்லட்டை உள்ளே அனுமதித்தார்கள் வாசலில் நின்றிருந்த பாதுகாப்பு ஊழியர்கள். மார்க்ஸ் அவருக்கு சல்யூட் வைத்துவிட்டு புல்லட்டை உள்ளே கொண்டு வந்து நிறுத்தினான்.

நெல்லையப்பனும் பாண்டியனும் மார்க்ஸுக்காகக் காத்திருந்தார்கள்.

“என்ன பாண்டியா இது?” என ஆச்சர்யம் குறையாமல் கேட்டான் மார்க்ஸ்.

“ப்ரோமோ வேற லெவல் ஹிட் தல... குமிஞ்சிட்டானுங்க ஆளுங்க” என்றான் பாண்டியன்.

“ரஜினி பட ரிலீஸ் மாதிரி ராத்திரியில இருந்தே வரிசையில நிக்குறானுங்களாம்” என்றார் நெல்லையப்பன்.

“இதல்லாம் ஷூட் பண்றாங்களா?” என கேட்டான் மார்க்ஸ்.

“நந்திதா வளைச்சு வளைச்சு எடுத்துகிட்டு இருக்கு... இதுதான் அடுத்த ப்ரோமோ!” என்றான் பாண்டியன்.

திவ்யாவும் ஏஞ்சலும் நடந்து வந்தார்கள்.

“என்ன பிளான் திவ்யா?” என கேட்டான் மார்க்ஸ்.

“ரெஜிஸ்ட்ரேஷன் 10 மணிக்கு குளோசிங்ன்னு சொல்லியிருக்கோம். வெயிட் பண்ற அவ்வளவு பேரையும் உள்ள அலவ் பண்ணி 10 மணிக்கு கேட்டை குளோஸ் பண்ணிரலாம். அதுக்கப்புறம் யாரையும் அலவ் பண்ண வேணாம்” என்றாள் திவ்யா.

“ஃபர்ஸ்ட் ரவுண்ட் ஆடிஷனுக்கு 15 பூத் ரெடி பண்ணிருந்தோம். அதை முப்பதாக்க சொல்லிட்டேன். இல்லன்னா இன்னைக்குள்ள ஆடிஷன் முடியாது” என்றாள் ஏஞ்சல்.

“முப்பது பூத்துக்கு ஜட்ஜஸ் இருக்காங்களா?”

“போன சீசன்ல லாஸ்ட் ரவுண்ட் வரைக்கும் வந்த சிங்கர்ஸை வர சொல்லியாச்சு!”

“குட்...”

“அப்படிப் பார்த்தா கூட ஆடிஷன் நடு ராத்திரி வரைக்கும் போகும்” என்றாள் ஏஞ்சல்.

“5 பேட்ச்சா பிரிச்சுக்கலாம். எல்லோருக்கும் டோக்கன் நம்பர் குடுத்துட்டு கிளம்ப சொல்லலாம். ஒவ்வொரு பேட்ச்சும் அந்த டைமுக்கு வந்தா போதும் காலையில இருந்து வெயிட் பண்ண வேணாம்” என்றான் மார்க்ஸ்.

“நல்ல ஐடியா” என்றாள் திவ்யா.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மேனனும் தாட்சாவும் வந்து இறங்கினார்கள்.

“சார் பார்த்தீங்களா சார் கூட்டத்த...” என்றார் நெல்லையப்பன்.

“அது கூட்டமில்ல... நம்ம பிராண்டோட வேல்யூ. பெருசா ப்ரமோட் பண்ணதும் வெளியே தெரியுது” என்றார் மேனன்.

அனைவரது முகத்திலும் சந்தோஷம் தெரிந்தது.

“குட் மார்னிங் சார்” என்றபடி அருகில் வந்தாள் நந்திதா.

“நந்திதா நிஜமான ஸ்டார் நீதான். தேங்க்ஸ் ஃபார் த ஃபன்டாஸ்டிக் ப்ரோமோ” என்றார் மேனன்.

நந்திதா அந்தப் பாராட்டை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாலும் அவள் மனது இதற்கு காரணம் மாட்ஸ்தான் என்றது. புது ப்ரோமோ பெரிய ஹிட் என்பதை மாட்ஸிடம் சொல்லி அவனுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என நினைத்தாள் நந்திதா. வழக்கம் போல அவனைத் தொடர்பு கொள்வது எப்படி என யாருக்கும் தெரியவில்லை.

“சார் வழக்கமா இந்த அரேஞ்மென்ட்டெல்லாம் ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் டீம் கிட்ட கொடுத்துடுவோம். இந்தத் தடவை ஆபிஸ்ல இருக்குற எல்லா டிப்பார்மென்ட்டையும் களத்துல இறங்கிட்டீங்களே ஏன் சார்?” என கேட்டார் நெல்லையப்பன்.

“ஏன்னு நீங்க சொல்லுங்க பார்ப்போம்”

“நீங்களே பெட்டரா ஏதாவது யோசிச்சு வச்சிருப்பீங்க... நீங்களே சொல்லிருங்க சார்.”

“ஆபிஸ்ல இருக்கிற எல்லா டிப்பார்ட்மென்ட் ஆளுங்களும் ஒண்ணா ஒரு டீமா நம்மளோட ஒரு ஷோவுக்காக வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க... குடும்பத்துல ஒரு கல்யாணம் நடந்தா எப்படி குடும்ப ஆட்கள் எல்லாம் முன்னாடி நிப்பமோ அப்படி நிக்கிறோம். நமக்குள்ள ஒரு நல்ல பாண்டிங் வர்றதுக்கு இது ஒரு பெரிய வாய்ப்புதானே நெல்லையப்பன்” என்றார் மேனன்.

“ஆபிஸ் பார்ட்டில கூட எல்லாரும் ஒண்ணாதான் சார் இருக்கோம்” என்றான் பாண்டியன்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“சந்தோஷத்தை ஷேர் பண்றதைவிட சங்கடங்களை ஷேர் பண்றப்பதான் ரிலேஷன்ஷிப் ஸ்ட்ராங்கா இருக்கும். நாளைக்கு இந்த ஷோ ரேட்டிங் வர்றப்ப ஆபிஸ்ல இருக்குற எல்லாரும் இது என் ஷோ... இதுல நானும் வேலை செஞ்சிருக்கேன்னு நினைக்கிறது எவ்வளவு நல்ல விஷயம்” என்றார் மேனன்.

அனைவரும் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தனர். மொத்த வேலைகளையும் ஆபிஸில் இருப்பவர்கள்தான் செய்ய வேண்டும் என மேனன் சொன்ன போது ஏதோ காஸ்ட் கட்டிங் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். அதற்கு பின்னால் இப்படி ஒரு திட்டமிருப்பது அனைவருக்கும் அப்போதுதான் புரிந்தது.

“என் சேனல் இதுன்னு தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாரையும் சொல்ல வைக்கனும்னு போராடுறோம்... முதல்ல நம்ம ஆபிஸ்ல இருக்கிறவங்க அதை ஃபீல் பண்ண வேண்டாமா?”

“வேற லெவல் சார் நீங்க...” என்றார் நெல்லையப்பன்.

மேனன் சிரித்தார்.

“நான் ஒரு ரெஜிஸ்ட்ரேஷன் கவுன்ட்டரை பார்த்துக்கிறேன்” என தாட்சா தயாரானாள்.

“அப்ப நாங்க...” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“நீயும் மேனன் சாரும் ஓவராலா எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்குங்க” எனச் சொல்லிவிட்டு திவ்யா நகர்ந்தாள்.

தாட்சா, ஏஞ்சல், நெல்லையப்பன், பாண்டியன் என அனைவரும் கலைந்தார்கள். கேமராமேன் மார்க்ஸையும் மேனனையும் ஷூட் பண்ண துவங்கினான்.

“வேலை செய்யுறவங்களை போய் ஷூட் பண்ணு” என்றார் மேனன்.

நந்திதாவும் கேமராமேனும் சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தார்கள்.

கேட் திறக்கப்பட்டு வந்திருந்தவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். பெயர் பதிவு, டோக்கன் வழங்குதல், அவர்களை வரிசைப்படுத்துதல் என அனைவரும் பரபரப்பானார்கள்.

“சார்...”

“சொல்லு மார்க்ஸ்...”

“அடுத்த சீசன் கிட்ஸ்க்கு மட்டும்னு பண்ணலாம் சார்...”

“பண்ணலாம்” எனச் சாதாரணமாகச் சொன்னார் மேனன்.

“ஏன் சார் அதுல உங்களுக்கு உடன்பாடில்லையா?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“எல்லா சேனல்லயும் பண்றாங்க... நம்மளும் அதை தவிர்க்க முடியாதுதான். ஆனா பர்சனலா என்ன கேட்டா எனக்கு அதுல உடன்பாடில்லைனுதான் சொல்லுவேன். அதைப்பத்தி அப்புறம் பேசலாம்” என்றார் மேனன்.

“சார் ஒரு டூ மினிட்ஸ்... வந்தர்றேன்” என்றான் மார்க்ஸ்

“தம்மா?”

“யெஸ் சார்...” என வெட்கத்துடன் சொன்னான் மார்க்ஸ்.

“நானும் வரேன்!” என்றார் மேனன்.

மார்க்ஸ் தலையாட்டினான்.

மேனன் சுற்றும் முற்றும் பார்த்தார். தாட்சா டேபிள் ஒன்றில் அமர்ந்து போட்டியாளர்கள் பெயர்களை எழுதிக் கொண்டிருந்தாள். மேனன் அவளையே பார்க்கத் தற்செயலாக தலைநிமிர்ந்த தாட்சா அவர் தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து புன்னகைத்தாள். மேனனும் பதிலுக்குப் புன்னகைத்தார்.

கண்களால் தாட்சா என்ன எனக் கேட்க, இரண்டு விரல்களை சிகரெட் என்கிற பாவனையில் சைகை செய்து கண்களால் 'போயிட்டு வரட்டுமா' என அனுமதி கேட்பது போல பார்த்தார்.

தாட்சா வேண்டாம் என்பதாகத் தலையாட்டினாள்.

மேனன் அவளைப் பாவமாகப் பார்த்தார். தாட்சாவுக்கு சிரிப்பு வந்தது. புன்னகையுடன் அவள் கண்களால் 'சரி' என சைகை காட்ட, மேனன் புன்னகையுடன் நன்றி சொல்லிவிட்டு திரும்பியவர் “போலாம் மார்க்ஸ்” என்றார்.

தாட்சா தற்செயலாக பார்வையை திருப்ப மார்க்ஸ் புன்னகையுடன் அவளைப் பார்த்து கொண்டிருந்தான். தனக்கும் மேனனுக்கும் நடுவில் கண்ணால் நடந்த உரையாடலை அவன் கவனித்து விட்டான் என்பது தாட்சாவுக்கு புரிந்தது.

வெட்கமும் பொய் கோபமுமாக தாட்சா என்னடா என கண்களால் கேட்க, மார்க்ஸ் ஒன்றுமில்லை என்பதாக சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தான்.

மேனனும் மார்க்ஸும் பள்ளிக்கு வெளியே இருந்த பெட்டிக்கடை ஒன்றில் சிகரெட் பற்ற வைக்க போகும் சமயம், “சார்” என குரல் கேட்டு இருவரும் திரும்ப பதினெட்டு பத்தொன்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் சாதாரண சட்டை பேன்ட் அணிந்து காலில் செருப்பு கூட இல்லாமல் நின்று கொண்டிருந்தான்.

“என்னப்பா?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“என் பேர் சம்முகம் சார். போட்டியில கலந்துக்க வந்தேன் சார். லேட்டாயிருச்சு கேட் பூட்டிட்டாங்க” என்றான் அவன்.

அவர்கள் கழுத்திலிருந்த பேட்ச்சைப் பார்த்து அவர்கள் ஆரஞ்சு டிவி ஆட்கள் என அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

“ஆமாப்பா இனி ஒண்ணும் பண்ண முடியாதே. பாரு எவ்வளவு பேர் லேட்டா வந்து வெளியே வெயிட் பண்றாங்க” என்றான் மார்க்ஸ்.

“எங்க இருந்து வர்ற?” எனக் கேட்டார் மேனன்.

“வெள்ளி சந்தை சார்... நாகர்கோயில் தாண்டி...”

“கொஞ்சம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா சம்முவம்?” என்றார் மேனன்.

“பஸ் 8 மணிக்கு கோயம்பேடு வந்திருச்சு சார். ஆட்டோவுக்கு காசு இல்ல சார். நடந்துதான் வந்தேன். பத்து நிமிஷம் லேட்டாயிருச்சு” என்றான் சண்முகம்.

தூக்கிவாரிப் போட்டது மார்க்ஸுக்கும் மேனனுக்கும்.

“பணம் இல்லையா? அப்புறம் எப்படித் திரும்பி போவ?”

“செலக்ட் ஆயிட்டா திரும்பி போறதுக்கு சேனல்ல கேட்டு பணம் வாங்கிக்கலாம்னு நினைச்சேன் சார்!”

“செலக்ட் ஆகலைன்னா?” எனக் கேட்டார் மேனன்.

“கண்டிப்பா செலக்ட் ஆயிருவேன் சார்” என உறுதியாக சொன்னான் சண்முகம்.

மார்க்ஸூம் மேனனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“சார் வாசல் வழியா இவன அனுப்ப முடியாது. வெயிட் பண்ற எல்லாரும் பிரச்னை பண்ணுவாங்க... பின் பக்கம் காம்பவுண்ட் சுவர் வழியா தூக்கி விட்டுரலாம் சார்!” என்றான் மார்க்ஸ்.

மேனன் தலையாட்டினார்.

மேனனும் மார்க்ஸூம் சண்முகத்தை பள்ளியின் பின் பக்கமாக அழைத்து சென்று ஆளுக்கொரு காலை பற்றி காம்பவுண்ட் சுவரில் ஏற்றிவிட்டனர். நன்றியோடு அவர்களைக் கும்பிட்டவன் உள்ளே குதித்தான்.

மேனனும் மார்க்ஸும் எதுவும் நடக்காதது போல மீண்டும் பள்ளிக்குள் நுழைந்தனர்.

வாசலில் நின்று கொண்டிருந்த செல்லப்பாவிடம், “செல்லப்பா ஸ்கூலுக்கு பின்னாடி ஒரு ஆள் போடுங்க... யாரும் ஏறி குதிச்சு வந்திட போறாங்க” என்றார் மேனன்.

“யெஸ் ஸார்” என செல்லப்பா நகர மார்க்ஸும் மேனனும் சிரித்துக் கொண்டார்கள். விடிய விடிய ஆடிஷன்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. முதல் நாள் தேர்வான 200 பேரில் இருந்து 50 பேர் பிறகு அந்த ஐம்பதிலிருந்து 20 பேரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு மறுநாள் ஞாயிறு காலை ஆரம்பித்தது.

ஐம்பதிலிருந்து இறுதி போட்டியாளர்கள் இருபது பேரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு ஆடிட்டோரியத்தில் துவங்கியது. அதற்கான மொத்த நிகழ்ச்சியின் முக்கியமான நடுவரான பிரபல பாடகர் ஹர்ஷவர்தன் வந்திருந்தார். அனைவரும் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியபடியிருந்தனர்.

“பயங்கரமான சூடு பார்ட்டிய்யா அந்தாளு” என்றார் நெல்லையப்பன்.

“ஆமா மாமா எந்த நேரம் நட்டுப்பாருன்னே தெரியாது. போன சீசன்ல ஆடிகிட்டே பாடி இவர்கிட்ட அடி கூட வாங்குனான் ஒரு பார்ட்டிசிபென்ட்” என்றான் பாண்டியன்.

“ஆடிகிட்டே பாடுனா என்னடா தப்பு?”

“ஆடணும்னா டான்ஸ் ஷோவுக்கு போ... இது பாட்டு போட்டின்றாரு மாமா… பயங்கரமாக ஈகோ புடிச்ச ஆளு!”

“அதான் சிங்கர்ஸ் எல்லாம் இந்தாள் ஷோவுல அட்டென்ஷன்ல பாடுறானுங்களா?” என்றார் நெல்லையப்பன். பாண்டியன் சிரித்தான்.

இறுதி சுற்று வெறும் ஐம்பது பேர் என்பதால் ஆடிட்டோரியத்தில் சற்று ரிலாக்ஸ்டாக அனைவரும் அமர்ந்திருந்தனர்.

முதன்மை நடுவராக ஹர்ஷவர்த்தனும் அவருக்கு அருகில் மற்ற நடுவர்களாக இதர பாடகர்களும் அமர்ந்திருந்தனர்.

போட்டி தொடங்கியது. வரிசையாக ஒவ்வொருவராக பாடுவதும் நடுவர்கள் மதிப்பெண் போடுவதுமாக போட்டி தொடர்ந்தது.

“அடுத்து பாட வருவது சண்முகம் ஃப்ரம் நாகர்கோவில்” என்று அறிவிப்பு வந்ததும் சட்டென ஆச்சர்யமானார்கள் மார்க்ஸும், மேனனும்.

“இவ்வளவு தூரம் தாக்குபிடிச்சிருக்கானே!” என்ற எண்ணம் மார்க்ஸுக்குள் ஓடியது.

சண்முகம் நேற்று போட்டிருந்த அதே கசங்கிய உடையில் மேடையில் வந்து நின்றான். எண்ணெய் போட்டு தலையை படிய வாரி இருந்தான். காலில் செருப்பில்லாதது மேடையில் தெளிவாக தெரிந்தது.

மார்க்ஸும் மேனனும் அவனையே பார்க்க அவன் அம்மா என்று அழைக்காத என்று பாடத் தொடங்கினான். மொத்த அரங்கமும் அவனது குரலில் அப்படியே உறைந்து போனது. மார்க்ஸின் கண்கள் கலங்கின. சண்முகம் பாடி முடிக்க ஒரு கணம் அனைவரும் தங்களை மறந்து அமர்ந்திருந்தவர்கள் பின் சுதாகரித்து எழுந்து கரவொலி எழுப்பினார்கள். மற்ற நடுவர்களும் எழுந்து கரவொலி எழுப்ப ஹர்ஷவர்த்தன் மட்டும் முகத்தில் எந்த உணர்ச்சியுமின்றி அமைதியாக இருந்தார்.

மேனன் அருகில் இருந்த தாட்சாவிடம், “இந்த பையன்” என ஏதோ சொல்ல வர “எனக்கு தெரியும் நீங்கதான் அவன காம்பவுண்ட் சுவர்ல ஏத்திவிட்டதாமே” என்றாள் தாட்சா.

மேனன் சின்ன புன்னகையுடன் “அது எப்படி உங்களுக்கு?” என ஏதோ சொல்ல வர “அவன் ரெஜிஸ்ட்ரேஷனுக்கு வந்தப்ப உன்னை லைன்ல பார்த்த மாதிரி இல்லையேன்னு மிரட்டி கேட்டேன். கண்ணாடிக்காரருதான் காம்பவுண்ட்ல ஏத்திவிட்டதா சொன்னான்” என சிரித்தாள் தாட்சா.

மேனன் புன்னகைத்தார்.

“ஆனா வொர்த் மேனன்!” என்றாள் தாட்சா.

அனைவரும் பாடி முடித்திருந்தனர். ஐம்பதில் இருபது பேர் தேர்வு செய்யப்பட்ட லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு வந்தாள் திவ்யா.

மேனன், மார்க்ஸ், தாட்சா என அனைவரும் நின்று கொண்டிருந்தார்கள்.

“சார் ஃபைனல் லிஸ்ட்” என்றாள் திவ்யா.

“அனவுன்ஸ் பண்ணிட வேண்டியதுதானே” என்றார் மேனன்.

“ஒரு நிமிஷம் அதைக் குடு” என கையில் வாங்கி அதை பார்த்த மார்க்ஸ் முகம் மாறினான்.

“சண்முகம் பேர் இதுல இல்லையே” என மார்க்ஸ் கேட்க அனைவரும் ஆச்சர்யமானார்கள்.

“அதுக்குதான் இவ்வளவு நேரம் ஆர்க்யூமென்ட் போச்சு... மத்த ஜட்ஜஸ் எல்லாம் அவனுக்கு மார்க் போட்டிருக்காங்க... ஆனா மெயின் ஜட்ஜ் அவனுக்கு மார்க் போடல” என்றாள் திவ்யா.

“அநியாயமா இருக்கே... அற்புதமா பாடுனானே பையன்” என்றாள் தாட்சா.

“அவன் அவருக்கு வணக்கம் வைக்கலையாம். அவரு கைய ஆட்டுறதுக்கு முன்னால பாட ஆரம்பிச்சிட்டானாம்!”

“இதுக்கெல்லாமா ரிஜெக்ட் பண்ணுவாங்க” என்றான் மார்க்ஸ்.

“அவரு அப்படி சொல்லல... அவனோட குரல் சரியில்ல அது இதுன்னு டெக்னிக்கல் ரீசன் சொல்றாரு. அவரை எதிர்த்து யாரும் பேச மாட்றாங்க!”

“நான் அவர்கிட்ட பேசி பார்க்கட்டுமா?” என்றார் மேனன்.

“வேணாம் சார்... அந்தாளு ஒரு மாதிரி” எனத் தயக்கமாக சொன்னாள் ஏஞ்சல்.

“பரவாயில்ல பேசறேன்” என்றார் மேனன்.

மேனன், மார்க்ஸ், தாட்சா மூவரும் திவ்யா, ஏஞ்சலுடன் மேக்கப் அறைக்குள் நுழைந்தனர்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

கண்களை மூடி ஹர்ஷவர்தன் சாய்ந்து அமர்ந்திருந்தார். மற்ற நடுவர்கள் கை கட்டி அவர் அருகில் அமர்ந்திருந்தனர்.

ஹர்ஷவர்தன் கண்களைத் திறந்தார்.

“என்னம்மா ரிசல்ட் அனவுன்ஸ் பண்ணிடலாமா?”

“சார்... இது மேனன். நம்ம சேனலோட அட்வைஸர். இது தாட்சா பிசினஸ் ஹெட். இது மார்க்ஸ் புரோகிராமிங் ஹெட்” என தயக்கமாகச் சொன்னாள் திவ்யா.

“என்ன வேணும்?” என்றார் ஸ்நேகம் இல்லாத குரலில்.

“அந்த சண்முகம்...” என மேனன் ஆரம்பிக்க...

“அவன் ரிஜெக்டட்... வேற என்ன சொல்லுங்க!” என்றார் அவர்.

அனைவரும் என்ன பேசுவது எனத் தெரியாமல் அவரை பார்த்தனர்.

“இல்ல சார் இந்த ஒரு ரவுண்ட் அந்த பையனை செலக்ட் பண்ண முடியுமான்னு...” எனத் தயக்கமாக ஏஞ்சல் கேட்டாள்.

“அவன்தான் ஷோவுக்கு முக்கியம்னா நான் கிளம்பறேன்... இவங்களும் இந்த ஷோல இருக்க மாட்டாங்க” என மற்ற பாடகர்களை கை காட்டிச் சொன்னார் அவர்.

“சார்... சார்... உங்க பேர வச்சுதான் மொத்த ஷோவும் இருக்கு... கோபப்படாதீங்க சார். சின்ன ரெக்வெஸ்ட்தான் சேனல்ல இருந்து...”

“நான் சொன்னா சொன்னதுதான்... அவனா நானா?”

“எதுக்காக சார் அவனை வேணாம்னு சொல்றீங்க?” எனக் கேட்டார் மேனன்.

“நீ ஜட்ஜா நான் ஜட்ஜா? உனக்கு காரணம் எல்லாம் நான் சொல்லணும்னு அவசியம் இல்லை” என்றார் ஹர்ஷவர்தன்.

மேனன் அவரை உற்றுப் பார்த்தவர், சற்று திரும்பி கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். சண்முகம் போட்டியாளர்களுக்கு நடுவில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது அவருக்குத் தெரிந்தது.

ஓர் இளைஞனின் எதிர்காலம் அவனுக்குத் தெரியாமலே தூக்கி எறியப்பட போகிறது. எவனோ ஒருவனது சின்ன கோபம் மற்றொருவனின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடுகிறது. காரணங்கள் தெரியாமலேயே பலர் தோற்று போய் விடுகிறார்கள்.

“எனக்கு நேரமாவுது... என்ன பண்ணட்டும்” என மீண்டும் கேட்டார் ஹர்ஷவர்தன்.

- Stay Tuned...