Published:Updated:

இடியட் பாக்ஸ் - 56: சர்ச் வாசலில் நெகிழ்ந்த செல்வியும், மகிழ்ந்த மார்க்ஸூம்!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 56: சர்ச் வாசலில் நெகிழ்ந்த செல்வியும், மகிழ்ந்த மார்க்ஸூம்!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

செல்வியின் திருமணம் முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். பாண்டியனும், வினுவும் சேனலின் சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் சிலரை மார்க்ஸின் பேரைச் சொல்லி திருமணத்திற்கு அழைத்து வந்திருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டினர் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

மார்க்ஸ் சர்ச்சின் நீளமான படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தான். “சேர் கொண்டு வரவா தம்பி” என யாரோ கேட்டார்கள்.

“இல்லங்க வேணாம்” என்றான் மார்க்ஸ். தரையில் அமர்ந்திருப்பது அவனுக்கு இதமாக இருந்தது.

செல்வி மெதுவாக அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

“என்ன செல்வி சந்தோஷமா?”

“ரொம்ப சந்தோஷம்ணா” என்றாள் செல்வி. நேற்று வரை சாராக இருந்த மார்க்ஸ் இன்று அண்ணனாகியிருந்தான்.

“எனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலன்ணா” என பேச முடியாமல் தடுமாறினாள் செல்வி. சந்தோஷமும் நெகிழ்ச்சியும் அவளது வார்த்தைகளில் முண்டியடித்தது.

“நீ நன்றி சொல்லணும்னா மொத்த ஆபிஸுக்கும் தான் நன்றி சொல்லணும்” என்றான் மார்க்ஸ்.

“சர்ச் வெட்டிங்ன்றது கிறிஸ்டியன் பொண்ணுங்க எல்லாருக்குமே ஒரு கனவுன்னா.... அதுக்காக நான் கஷ்டப்பட்டு சேர்த்த காசுதான் அம்மா ஆபரேஷனுக்காக செலவாகி போச்சு. சின்ன சர்ச்சுல சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லாம நம்ம கல்யாணம் நடக்கப் போகுதேன்ற நினைப்போடதான் நான் வீட்ல இருந்து கிளம்பினேன். இங்க வந்து பார்த்தா...” என மேற்கொண்டு பேச முடியாமல் அவள் குரல் உடைந்தது.

“குமுதா ஹேப்பிதானே?!” எனச் சிரித்தான் மார்க்ஸ்.

“இப்ப யோசிச்சாலும் நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருக்குன்னா... நான் ஆசைப்பட்டதைவிட அதிகமாவே கிடைச்சிருச்சு” என்றாள் செல்வி.

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“அண்ணா” என நந்திதாவின் கிரெடிட் கார்டை நீட்டினாள் செல்வி.

“இது நந்திதாவோட கிரெடிட் கார்ட்டு” என அவள் சொன்னதும் தனது கோட் பாக்கெட்டில் இருக்கும் செல்வியின் டெர்மினேஷன் லெட்டர் சட்டென மார்க்ஸுக்கு நினைவுக்கு வந்தது.

“நந்திதாகிட்டயே குடுத்திருக்க வேண்டியது தான?”

“சாரி சொன்னேன். கார்டு தர மறந்திட்டேன்” என்றாள் செல்வி.

மார்க்ஸ் செல்வியிடமிருந்து நந்திதாவின் கிரெடிட் கார்டை வாங்கிக் கொண்டான்.

“தப்பு பண்ண ஒருத்திக்கு நியாயமா நீங்க தண்டணைதான் கொடுத்திருக்கனும். இவ்வளவு பெரிய சந்தோஷத்த கொடுத்திருக்கீங்க... எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்குன்னா”

“விடும்மா... இப்ப போய் அதெல்லாம் பேசிக்கிட்டு!”

“கடன் கேட்கிறதை அவமானமா நினைச்சேன். திருடுறது அத விட பெரிய அவமானம்னு இப்ப புரியுதுன்னா!”

மார்க்ஸ் அவள் முதுகில் ஆதரவாக தட்டிக் கொடுத்தான்.

“நீ பண்ணது தப்பில்லைன்னு நான் சொல்ல மாட்டேன். தப்பு பண்றவன் மனுஷன். அதை உணர்ந்து சரி பண்ணிக்கிறவன் பெரிய மனுஷன்” எனச் சிரித்தான் மார்க்ஸ்.

“அண்ணா நான் ஒண்ணு சொன்னா நீங்க தப்பா எடுத்துக்க கூடாது.”

“என்னம்மா?”

“நான் வேலைய ரிசைன் பண்ணலாம்னு இருக்கேன்.”

மார்க்ஸ் இதை எதிர்பார்க்கவில்லை. எப்படி அவளது டெர்மினேஷன் லெட்டரை தருவது என அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போது செல்வி வேலையை அவளாகவே ராஜினாமா செய்கிறேன் என்கிறாள். மார்க்ஸ் என்ன சொல்வதென தெரியாமல் அமைதியாகயிருந்தான்.

“ஆமான்னா... என்ன மன்னிச்சு பெருந்தன்மையா நீங்க எல்லாரும் ஏத்துக்கிட்டீங்க... இந்த அன்பு எப்பவும் இருக்கணூம்னா நான் அங்க இருக்க கூடாதுன்னா.”

மார்க்ஸின் கண்கள் கலங்கின.

“நாளைக்கு ஏதாச்சும் ஒண்ணு காணாம போறப்ப நீ பார்த்தியா செல்வின்னு யதார்த்தமா யாராவது கேட்டா கூட பக்குன்னு ஆயிடும்னா. இன்னொரு வாட்டி இவ பண்ணிருப்பாளோன்னு யாருக்காவது ஒரு சின்ன சந்தேகம் வந்தா கூட அதைத் தாங்கிக்க முடியாதுன்னா. அந்தப் பயத்தோடவே நான் அங்க வேலை செய்ய முடியாதுன்னா.”

மார்க்ஸ் புரிந்து கொண்டதன் அடையாளமாகத் தலையாட்டினான்.

நம்பிக்கையின் பிரச்னையே அதுதான். ஒரு முறை அதை போட்டுடைத்து விட்டால் மீண்டும் அதை முன்புபோல ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது.

“அந்த சேலை பணத்தை மட்டும் கொஞ்சம் கொஞ்சமா நந்திதாவுக்கு திருப்பி கொடுத்துடுறேன்னா.”

“தேவையில்லம்மா... அவளோட பிரசன்ட்டா இருக்கட்டும்னு அவ சொல்லிட்டாம்மா!”

“மத்த எதையும் திருப்பி தரணும்னு நினைக்கலைன்னா... இந்த சேலைக்கான பணம் மட்டும்!”

“புரியுது” என்றான் மார்க்ஸ்.

“இனிமே ஆயுசுக்கும் இப்படி ஒரு காரியம் பண்ண மாட்டேன்னா...” எனக் கண்கள் கலங்கினாள் செல்வி.

“அடடா... என்ன சும்மா அத பத்தியே பேசிக்கிட்டு... உனக்கு இன்னொரு நல்ல வேலை நானே பார்த்து சொல்றேன்!”

செல்வி தலையாட்டினாள்.

“போ... மாப்பிள்ளை ஒத்தையில நின்னுட்டு இருக்காரு”

“அவரு அந்த சீரியல் ஹீரோயினோட போட்டோ புடிக்கிறதுல பிஸியா இருக்காருன்னா” என்றாள் செல்வி.

மார்க்ஸ் மனம் லேசாகி சிரித்தான்.

“போய் என்ன கதைன்னு கேட்குறேன் அவர்கிட்ட” எனப் புன்னகையுடன் செல்வி எழுந்து போனாள்.

மார்க்ஸ் செல்வியின் வார்த்தைகளை யோசித்தபடி அமர்ந்திருந்தான். திவ்யா அவன் எதிரில் வந்து நின்றாள்.

பட்டுப்புடவை கையில் வளையல்கள் காதில் ஜிமிக்கி தலையில் மல்லிகைப்பூ என அவள் வேறு ஒரு திவ்யாவாக மாறியிருந்தாள்.

“என்ன சைட் அடிக்கிறயா?”

“பட்டு புடவையில பயங்கர அழகா இருக்க திவ்யா!”

“இப்பதான் நான் உன் கண்ணுக்கு தெரியறனா?”

மார்க்ஸ் சிரித்தான்.

“பயங்கர அழகுன்னா எப்படி?”

“இல்ல எப்பவும் பேன்ட் ஷர்ட்டுன்னு மாடர்னா தானே பார்த்திருக்கேன்… இந்த ஃபங்ஷன் கெட்டப் வேற லெவல்!”

திவ்யா சிரித்தாள்.

“நிஜமா திவ்யா… செம அழகு!”

“போதும் போதும்” என்றபடி அவள் அவன் அருகில் அமர்ந்தாள்.

“என்ன சொல்றா கல்யாண பொண்ணு?” எனக் கேட்டாள் திவ்யா.

“ஒண்ணும் இல்ல... அவ ஹேப்பிதான்”

“இப்படி ஒரு விஷயம் பாக்குறதுக்கே சந்தோஷமா இருக்கு மார்க்ஸ். பொதுவா சொல்வாங்கல்ல... இன்னொருத்தர சந்தோஷப்படுத்தி பாக்குறதுதான் உலகத்துலயே பெரிய சந்தோஷம்னு. அத இன்னைக்கு நான் ஃபீல் பண்ணேன்.”

மார்க்ஸ் திவ்யாவை புன்னகையுடன் பார்த்தான்.

“நல்லது பண்றதுகூட ஒரு போதைதான்... அதைப் பண்ண ஆரம்பிச்சு நாலு பேரோட சந்தோஷத்தை பார்த்துட்டோம்னா அப்புறமா அதை நம்மளால நிறுத்த முடியாதுல்ல!”

“கரெக்ட் திவ்யா” என்றான் மார்க்ஸ்.

“மார்க்ஸ்” என திவ்யா அழைக்க மார்க்ஸ் திரும்பி அவளைப் பார்த்தான்.

“எப்படி உன்னால மட்டும் இப்படி இருக்க முடியுது?”

“எப்படி இருக்கேன்?”

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“இல்ல மார்க்ஸ்.. சீரியசா சொல்றேன். அவ தப்பு பண்ணிட்டான்னு எல்லாரும் யோசிக்கிறப்ப... அவ ஏன் தப்பு பண்ணான்னு அவ பக்கம் நின்னு யோசிக்கிறியே... அது எப்படின்னு தான் கேக்குறேன்?”

மார்க்ஸ் அதற்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் அவளைப் பார்த்தான். “அதை நீ பிளான் பண்ணி எல்லாம் பண்றது இல்ல... சாதாரணமாவே உனக்கு அப்படித்தான் நினைக்க வருது.”

“திவ்யாவா என்ன புகழ்றது?”

“ஆமா... பக்கத்துல இருந்து உன்ன பாக்குறப்ப எனக்கு ஆச்சர்யமா இருக்கு. ஆரம்பத்துல கூட நீ கொஞ்சம் சீன் போடுறேன்னுதான் எனக்கு தோணிச்சு. அப்புறமாதான் நீ நடிக்கல உன் கேரக்டரே இப்படித்தான்னு புரிஞ்சுது.”

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“மேகலாவுக்காக சண்டை போட்டப்ப, அலோக் மூஞ்சில பேப்பர் தூக்கியடிச்சப்பல்லாம் உன் மேல வராத ஒண்ணு செல்விக்காக இந்தக் கல்யாணத்த முன்னாடி நின்னு நீ நடத்துனப்ப எனக்கு வருது” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் அவளை சந்தோஷமும் ஆச்சர்யமுமாகப் பார்த்தான்.

“அன்புதான் பெரிய ஹீரோயிசம். அடிதடி கிடையாது... அந்த செல்வி முகத்தில தெரிந்த சந்தோஷத்தை பார்த்தப்ப அதுக்கு காரணமாயிருந்த உன் மேல எனக்கு பெரிய மரியாதை வந்துச்சு!”

“போதும் திவ்யா இதுக்கு மேல நான் தாங்க மாட்டேன்.”

“நான் திட்டும் போது வாங்கிக்கறல்ல... பாராட்டும் போதும் வாங்கிக்கோ...”

“ஏற்கெனவே பட்டு புடவையில நீ வேற ஆள் மாதிரி இருக்க... பாராட்ட வேற செஞ்சன்னா பக்கத்துல இருக்கிறது உன்ன மாதிரியே தோணல... வேற யாரோ மாதிரி தோணுது” என்றான் மார்க்ஸ்.

“அப்ப நான் அத சொல்ல வேணாம்னு சொல்றியா?”

“எத?” எனப் புரியாதவனைப்போல கேட்டான் மார்க்ஸ். அதுவாக இருக்குமோ என படபடத்தது அவன் மனது. அடுத்த நொடியே அப்படியெல்லாம் இருக்காது அவசரப்படாதே என ஆறுதல் சொல்லி ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ளத் தயாரானது.

திவ்யா அவனைப் பார்த்தபடி இருந்தாள்.

மார்க்ஸ் அவளது பதிலுக்காகக் காத்திருந்தான்.

“சொல்லவா... வேணாமா?”

“தயவு செஞ்சு சொல்லு திவ்யா!” என்றான் மார்க்ஸ்.

அவள் ஏதோ சொல்ல வர... சட்டென சர்ச்சின் விளக்குகள் அணைந்தன. பெரிய விளக்குகள் அணைந்து சீரியல் பல்புகள் மட்டும் மின்னின.

“யப்பா யாருப்பா மெயின் லைட்டை ஆஃப் பண்ணது” என யாரோ தொலைவில் சத்தம் போட்டார்கள்.

அந்த இருளில் திவ்யாவின் கண்கள் மின்னியது மட்டும் மார்க்ஸுக்குத் தெரிந்தது.

திவ்யா தனது இரண்டு கரத்தாலும் மார்க்ஸின் கன்னத்தை பிடித்து அவன் இதழ்களில் முத்தமிட்டாள். அதை சற்றும் எதிர்பார்க்காத மார்க்ஸ் சட்டென என்ன செய்வது என தெரியாமல் அதிர்ந்து போய் நிற்க திவ்யா மீண்டும் அவனை முத்தமிட்டாள். நிதானமாய் அவனது இதழ்களில் இதழ் பதித்து ஆழமாக முத்தமிட்டாள். உணர்ச்சிவசப்பட்ட முத்தமல்ல. உணர்ந்து கொடுத்த முத்தம் அது.

“ஐ லவ் யூ மார்க்ஸ்” என நிறுத்தி நிதானமாகச் சொன்னாள் திவ்யா. பட்டென மீண்டும் விளக்குகள் எரிந்தன.

மார்க்ஸ் திவ்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான். திவ்யா சிரித்தாள். விளக்கு அணைந்ததும் அவள் முத்தமிட்டதும் ஐ லவ் யூ சொன்னதும் நிஜமாகவே நடந்ததா இல்லை தனது கற்பனையா என்று சந்தேகமாக இருந்தது மார்க்ஸுக்கு.

“திவ்யா” எனத் தயக்கமாக ஏதோ மார்க்ஸ் பேச முயல....

“முத்தம் குடுத்தா ஊசி போடுற மாதிரி மூஞ்ச வெச்சிகிற... வேஸ்ட்டா நீ” எனச் சிரித்தாள் திவ்யா.

“இல்ல... நான் இத எதிர்பார்க்கல... அதான்!”

“அதுக்கு நான் என்ன செய்யமுடியும்... ஆக்ஷன்தான் கஷ்டம். அதையே நான் பண்ணிட்டேன். ஒழுங்கா ஒரு ரியாக்‌ஷன் கூட குடுக்க முடியாதா உன்னால?” எனச் சிரித்தாள் திவ்யா.

“இன்னொரு தடவ...”

“என்னது இன்னொன்னா... இப்பவா… இங்கயா. கொஞ்சமாவது நியாயமா இருக்கா நீ கேக்குறது. இவ்வளவு வெளிச்சத்துல இத்தனை பேருக்கு நடுவுல” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பட்டென மீண்டும் ஒரு முறை விளக்குகள் அணைந்தன.

“யாருப்பா அது வெளி லைட்ட அணைச்சு அணைச்சு போடுறது!” என மீண்டும் யாரோ கத்தும் சத்தம் கேட்டது.

மார்க்ஸ் புன்னகைத்தான். திவ்யா படபடப்பாக உணர்ந்தாள்.

“காட் இஸ் கிரேட்” என்றான் மார்க்ஸ்.

“உனக்குதான் கடவுள் மேல நம்பிக்கையில்லயே” என்றாள் திவ்யா.

“இப்ப நம்புறேன்” என்றபடி மார்க்ஸ் அவளை முத்தமிடப்போக சட்டென விளக்குகள் எரிந்தன. மார்க்ஸ் ஏமாற்றமானான். திவ்யா சிரித்தாள். மார்க்ஸூக்கும் சிரிப்பு வந்தது.

“இதுக்குதான் இந்தக் கடவுளை நம்புறதே இல்லை” என்றான் மார்க்ஸ்.

“கடவுள் என்ன பண்ணாரு... கரன்ட்தான் உன்னை கை விட்டிருச்சு” எனத் திவ்யா சிரித்தபடி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“ஐ லவ் யூன்னா சொன்ன?”

“ஆமா” என்றாள் திவ்யா...

“பத்து நாள் முன்னாடி கூட வேற என்னென்னவோ பேசுனியே”

“ஆமா... இப்ப என்ன... அதனால என்ன வேணாம்னு சொல்லப் போறியா?”

“அய்யோ” என மார்க்ஸ் பதற திவ்யா சிரித்தாள்.

“அப்படி எல்லாம் இல்ல... இதை நீ சொல்றதுக்கு கொஞ்ச நாள் ஆகும்னு நினைச்சேன் திடீர்னு சொல்லிட்டியே அதான்.”

“தோணிச்சு சொல்லிட்டேன்..”

“திவ்யா”

“ம்”

“ஏன் இன்னைக்கு சொல்லணும்னு தோணுச்சு?”

“இப்ப என்ன... நீ நல்லவன் வல்லவன் அன்பானவன் கஷ்டப்படுறவங்களுக்கு உதவக் கூடியவன். அதனாலதான் உன்ன பிடிக்குதுன்னு சொல்லணுமா?”

மார்க்ஸ் சிரித்தான்.

“ஐ லவ் யூ சொன்னா மீ டூ ன்னு சொல்லணும்... முழிக்கக் கூடாது.”

“ஐ லவ் யூ” என்றான் மார்க்ஸ்.

“ஒண்ணும் தேவையில்ல’’ என அவனது கரத்தை இன்னும் இறுக பற்றிக் கொண்டாள் திவ்யா.

பேபியம்மா அவர்களைப் பார்த்து நடந்து வந்தார்.

“அம்மா வர்றாங்க... அம்மா வர்றாங்க” என அவன் அவளது கையை விடுவிக்க முயன்றான். திவ்யா இறுக பிடித்துக் கொண்டாள்.

“பார்த்துட்டேன்... பார்த்துட்டேன்” எனச் சிரித்தபடி பேபியம்மா அருகில் வந்தார்.

“என்ன நடக்குது இங்க... இதென்ன சர்ச்சா இல்ல லவ்வர்ஸ் பார்க்கா?” என்றார் பேபியம்மா...

“கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றான் மார்க்ஸ்.

பேபியம்மா சிரித்தபடி, “என்னடா எனக்கே வசனமா... ஏன் திவ்யா... இவன்தான்னு முடிவு பண்ணிட்ட போல இருக்கு”

“ஆமாம்மா...”

“என்ன திடீர்னு?”

“ரொம்ப நல்லவனா இருக்காம்மா” எனக் கிண்டலாக சிரித்தாள் திவ்யா.

“பிரச்னையான ஆளாச்சம்மா!”

“ஆமாம்மா ரொம்ப பிரச்னையான ஆள்தான்.”

“அப்புறம் ஏன் அவசரப்பட்ட... இன்னும் கொஞ்சம் பொறுமையா யோசிச்சிருக்கலாமே!”

“தப்பு பண்ணிட்டம்மா” என்றாள் திவ்யா.

“கரன்ட்டு போன கேப்ல கமிட்டாயிட்டீங்க?” எனச் சிரித்தார் பேபியம்மா.

மார்க்ஸும் திவ்யாவும் சிரித்தார்கள்.

“நல்ல மனுஷன் நல்ல புருஷனா இருக்கணும்னு அவசியம் இல்ல… புரியுதா?”

“என்னம்மா வெட்டி விடுற மாதிரியே பேசுறீங்க!” என்றான் மார்க்ஸ்.

“வெட்டி விடலடா ஒழுங்கா ஒட்டியிருக்கான்னு செக் பண்ணி பாக்குறேன்.”

திவ்யா இன்னும் மார்க்ஸின் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டாள்.

“புசுக்கு புசுக்குன்னு கோபம் வரும். வீம்பு பிடிச்சவன். மனசுக்குள்ள பெரிய லார்டு லபக்கு தாஸ்னு நினைப்பு அவனுக்கு.”

“அத்தனையும் உண்மைதான்மா” என்றாள் திவ்யா.

“அப்பவும் ஓகேன்றயா?”

“ஆமாம்மா... வாழ்க்கையே ரிஸ்க் தானம்மா... எடுத்து பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்!”

பேபியம்மா சிரித்தபடி, “ரொம்ப சந்தோஷம் கண்ணு” என்றார். அவரது குரலில் இருந்து கிண்டல் மறைந்து பாசம் தெரிந்தது.

“என்னம்மா திடீர்னு பல்டியடிச்சிட்டீங்க?” எனக் கேட்டாள் திவ்யா.

“அது மொத்தமும் தங்கம் கண்ணு... கெட்டியா பிடிச்சுக்கோ... விட்டுராத” என்றார் பேபியம்மா.

திவ்யாவும் மார்க்ஸும் சிரித்தார்கள்.

“கடவுளுக்கு முன்னாடி காதலைச் சொல்லியிருக்க... கண்டிப்பா நல்லாயிருப்பீங்க... நான் வரேன் மார்க்ஸ்.. நேரமாவுது சீக்கிரமா கிளம்புங்க” எனச் சொல்லியபடி பேபியம்மா அங்கிருந்து நகர்ந்தார்.

திவ்யாவும் மார்க்ஸும் மெளனமாக அமர்ந்திருந்தார்கள். இதுக்கு மேல் வாழ்க்கையில் சாதிக்க எதுவும் இல்லை எனத் தோன்றியது மார்க்ஸுக்கு. அனைத்து வெற்றிகளுமே பிடித்த பெண்ணின் பிரியத்துக்கு அப்புறம்தானே!

திவ்யா தனது அறையில் அமர்ந்திருந்தாள். காரணமே இல்லாமல் மனசு சந்தோஷமாக இருந்தது. இதழில் ஒரு புன்னகை எப்போதும் ஒட்டிக் கொண்டிருந்தது.

இன்டர்காமை கையில் எடுத்தவள் ஒரு கணம் மார்க்ஸுக்கு போன் செய்யலாமா என யோசித்து பின் வேண்டாமென ரிசீவரை கீழே வைக்க அவளது போன் அடித்தது. சின்ன புன்னகையுடன் போனை எடுத்தவள், “சொல்லு மார்க்ஸ்” என்றாள்.

“நான் ராய் பேசுறேன்” என்றது மறுமுனை குரல்.

திவ்யா உதட்டை கடித்துக் கொண்டாள்.

“சொல்லு ராய்”

“லன்ச் போலாமா?”

“இல்ல கொஞ்சம் வேலையிருக்கு”

“ஓகே... அப்ப ஈவ்னிங் பாக்கலாம்” என ராய் போனை கட் பண்ணப்போக அவசரமாக சொன்னாள் திவ்யா.

“ராய் ஒரு நிமிஷம் உன்கிட்ட பேசணும்” என்றாள்.

“சொல்லு திவ்யா....”

“நான் உன் ரூமுக்கு வரேன்” எனச் சொல்லிவிட்டு போனை துண்டித்தாள்.

ராயின் அறையில் திவ்யாவும் ராயும் மட்டும் தனித்திருந்தார்கள்.

ராய் நம்ப முடியாமல் திவ்யாவை பார்த்தபடியிருந்தான்.

“இரண்டு நாள் முன்னாடி கூட எனக்கு இன்னொரு சான்ஸ் குடுன்னு நான் கேட்டப்ப சரின்னு சொன்னியே” என்றான் ராய்.

“ஆமா ராய்... இது நேத்து எடுத்த முடிவுதான்” என்றாள் திவ்யா.

ராய் உதட்டைக் கடித்துக் கொண்டான். அவன் அடக்க முயன்றது. கோபத்தையா இல்லை வருத்தத்தையா எனப் புரிந்து கொள்ள முடியாத பாவனையில் அவனது முகமிருந்தது.

“இப்ப இத எதுக்காக என்கிட்ட சொல்ற?”

“நான் ஒரு முடிவு எடுத்ததுக்கு அப்புறம் உன்ன தேவையில்லாம காத்திருக்கச் சொல்றது தப்பில்ல... அதான் உன்கிட்ட முதல்ல சொல்றேன்.”

அவன் மௌனமாகத் தலையாட்டினான்.

“உன்னை கஷ்டப்படுத்துறதுக்காக சொல்லல... நீ லைஃப்ல மூவ் ஆன் பண்ணுன்னு சொல்லத்தான்.”

“ஒரு வேளை அந்த மார்க்ஸோட உனக்கு பிரேக்கப் ஆனா அப்ப எனக்கொரு வாய்ப்பிருக்குமா?”

“என்ன ராய் முட்டாள்தனமா பேசுற?”

“சாரி... சாரி” என அவசரமாகச் சொன்னான் ராய்.

“சாரி” என சொல்லிவிட்டு திவ்யா அவனது அறையிலிருந்து நகர்ந்தாள்.

ராய் யோசனையாக அமர்ந்தான். போனை எடுத்து டயல் செய்தான்.

“ஹலோ” என்றான் பிரசாத் மறுமுனையில்...

“பிரசாத் நான் ராய் பேசுறேன்.”

“சொல்லுங்க சார்”

“ஒரே டிபார்ட்மென்ட்ல இருக்கிற ரெண்டு பேர் லவ் பண்ணா என்ன பண்ணுவீங்க?”

“ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் வேற டிப்பார்ட்மென்ட்டுக்கு மாறனும். அப்படி மாற முடியாத மாதிரி ப்ரொஃபைல்னா யாராவது ஒருத்தர் வேலையை ரிசைன் பண்ணித்தான் சார் ஆகணும்.”

“தேங்ஸ் பிரசாத்” என போனை வைத்த ராய் சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்தான். அவனது இதழோரம் சின்ன புன்னகை ஒன்று மலர்ந்தது!

- Stay Tuned...