Published:Updated:

இடியட் பாக்ஸ் - 57: சின்னத்திரை டான்ஸ் ஷோவும், துரை - பத்மபிரியா ஜோடியும்!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 57: சின்னத்திரை டான்ஸ் ஷோவும், துரை - பத்மபிரியா ஜோடியும்!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

காலையில் எழுந்து சோம்பல் முறித்தபடி கிச்சனுக்குள் நுழைந்தாள் திவ்யா. ஃபிளாஸ்க்கில் காபி தயாராக இருந்தது. நந்திதா காபி போட்டிருப்பாளோ, என்ற சந்தேகத்தில் அவளது அறையை திறந்து பார்க்க அவள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.

திவ்யாவின் இதழில் சின்ன புன்னகை மலர்ந்தது. காபியை எடுத்து கோப்பையில் ஊற்றினாள். காபியின் மணம் அவள் நாசியை நிறைத்தது. மெதுவாக எடுத்துப் பருகினாள். முதல் துளி இதழில் பட்டதும் அதன் சுவையை கண்கள் மூடி ரசித்தாள். காபியோடு காதலையும் கலந்திருந்தான் மார்க்ஸ்.

திவ்யா குளித்து விட்டு வெளியே வந்தாள். அவளது படுக்கையில் அவள் அன்று அணிய தீர்மானித்திருந்த ஜீன்ஸும் குர்த்தாவும் அயர்ன் செய்து தயாராக வைக்கப்பட்டிருந்தன.

மீண்டும் திவ்யாவின் முகத்தில் புன்னகை. அலுவலகம் செல்ல கிளம்பி தயாராக ஹாலுக்கு வந்தாள். பிரட் டோஸ்ட் ஆம்லெட், ஆரஞ்சு ஜூஸ் டைனிங் டேபிளில் தயாராக இருந்தது. இதையெல்லாம் அவன் எப்போது தயார் செய்தான் என்ற எண்ணம் அவளுக்குள் ஓடியது.

அவள் மெல்லிய சிரிப்புடன் மார்க்ஸின் அறையை திறந்தாள். அது காலியாகயிருந்தது. திவ்யா புன்னகை மாறாமல் மார்க்ஸூக்கு போன் செய்தாள். மார்க்ஸ் போனை எடுத்ததும் “கொஞ்சம் கூச்சமா இருக்கு அத பத்தி பேச வேண்டாமே” என்றான்.

திவ்யா சிரித்தாள்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“கொஞ்சம் அந்த காலத்து காதலனா பிஹேவ் பண்றனோ?” என்றான் மார்க்ஸ்.

“ஆமா... ஆனா பிடிச்சிருக்கு” என்றாள் திவ்யா.

“நிஜமாவா?”

“நீ பண்ணதெல்லாம் ஒண்ணும் பெரிய விஷயமில்ல... ஆனா அத நீ பண்ண பார் அதான் இதுல ஹைலைட்!”

“ஓ”

“நீ எப்படி என்னோட துணியை அயர்ன் பண்ணியிருப்பேன்னு யோசிச்சு யோசிச்சு பாக்குறேன்... ஆனா மைண்ட்ல அந்த விஷுவல் வரவே மாட்டேங்குது” என சிரித்தாள் திவ்யா.

மார்க்ஸும் சிரித்தபடி “இன்னும் கொஞ்சம் பெட்டரா மார்டனா லவ் பண்ண முயற்சி பண்றேன்” என்றான்.

“ஒண்ணும் அவசியம் இல்ல... காதலே பழைய எமோஷன்தான். உலகம் எவ்வளவோ மார்டனா மாறிடுச்சு. என்னென்னமோ பண்ணிட்டாங்க... ஆனாலும் இன்னைக்கு வரைக்கும் உலகத்தோட சிறந்த காதல் பரிசுன்னா அது தாஜ்மஹால்தான. அதைத் தாண்டி எதையும் சொல்ல முடியலையே!”

“சூப்பர் மேட்டர் திவ்யா” என்றான் மார்க்ஸ்.

“போதும் போதும்... சமையல், துணி அயர்ன் பண்றது எல்லாம் ஓகே… ஆபிஸுக்கு என்ன யார் கூட்டிட்டு போறது?’

“நான் தான்”

“எங்க இருக்க?”

“டிரைவர் கீழ புல்லட் பக்கத்துல உனக்காக வெயிட்டிங். சாப்டுட்டு பொறுமையா வா”

திவ்யா படியிறங்கி வந்தாள். மார்க்ஸ் சின்ன வெட்கத்துடன் காத்திருந்தான். வெட்கப்படுகையில் ஆண்கள் அழகாகிறார்கள் எனத் தோன்றியது திவ்யாவுக்கு. இதுதான் ஆணின் இயல்பென காலம் காலமாக கற்பிக்கப்பட்டு இருப்பதை உடைக்கும் ஆண்கள் எல்லோரும் அழகுதான்.

பெண்ணை சரிநிகர் சமானமாக நடத்த அவளை தூக்கிப் பிடிப்பது ஒரு வழியென்றால் இறங்கி வந்து அவளது பார்வையில் உலகை பார்ப்பதும் கூட இன்னொரு வழி தான்.

மார்க்ஸ் அவளைப் பார்த்ததும் புல்லட்டில் ஏறினான். திவ்யா பின்னால் ஏறி அமர, மார்க்ஸ் தனது கையில் இருந்த ஒரு ஹெல்மெட்டை திவ்யாவுக்கு நீட்டினான்.

“இது என்ன புதுசா இருக்கு”

“100 வருஷம் உன் கூட சந்தோஷமா வாழணும்ல அதான்” என்றபடி அவனும் தனது தலையில் ஹெல்மெட்டை மாட்டினான். திவ்யா சிரித்தபடி அவன் புல்லட்டில் அமர்ந்தவள் அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.ஒருவரை நேசிப்பதென்றோ இல்லை வெறுப்பதென்றோ முடிவு செய்து விட்டால் பெண்கள் அரைகுறையாக செய்வதில்லை. அதை முழுமையாக செய்வது அவர்கள் இயல்பு.

“திவ்யா” என்றான் மார்க்ஸ்.

“யெஸ் மிஸ்டர் மார்க்ஸ்”

“தேங்க்யூ”

“வெல்கம்”

மார்க்ஸ் நிறைவாக உணர்ந்தான். அவனது புல்லட் தடதடத்து கிளம்பியது.

இடியட் பாக்ஸ் - மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் - மார்க்ஸ், திவ்யா

மார்க்ஸும் நெல்லையப்பனும் கண்ணன் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

“எங்க மாமா... பாண்டியனை ஆளே பார்க்க முடியல”

“அவன் பிஸிப்பா”

“என்ன பிஸி?”

“காதல் தான்” என சிரித்தார் நெல்லையப்பன்.

“காதலா... யாரோட?”

“சும்மா நடிக்காதப்பா!”

“சத்தியமா தெரியாது மாமா... ஆள் யாருன்னு சொல்லு”

“மேகலாவோட பாண்டிக்கு ஒரு டிராக் ஓடுது... அவன் மேகலாவை ஆஸ்பத்திரிக்கு கையில தூக்கிட்டு போற மாதிரி ஒரு வீடியோ எல்லாம் கூட போன வாரம் வைரலாச்சேப்பா தெரியலன்ற?”

“என்ன மாமா சொல்ற?” என ஆச்சரியமானான் மார்க்ஸ்.

“ஆமா மார்க்ஸ்... தயிர் சாதத்துக்கு தொட்டுக்க மட்டன் சுக்கா மாதிரி அது ஒரு சம்பந்தமில்லாத காம்பினேஷன் தான். ஆனா டேஸ்ட்டா இருக்கும்!”

மார்க்ஸ் சிரித்தபடி “நான் எப்படி இதை மிஸ் பண்ணேன்” என்றான். “எங்கப்பா... உன் வாழ்க்கையிலதான் ஒரு தயிர் சாதம் மாம்பழம் காம்பினேஷன் ஓடிக்கிட்டு இருக்கே!”

“யோவ் மாமா... என்ன?” என பொய்யாக அதட்டினான் மார்க்ஸ்.

“சர்ச்சு வாசல்ல நீ அந்த பொண்ண கிஸ் பண்ணல”

மார்க்ஸ் ஆச்சரியத்தின் உச்சிக்குப் போனான்.

“எப்படி மாமா?”

“காதலிக்கிறவங்க காதலை ஃபீல் பண்றதுக்கு முன்னாலயே சுத்தி இருக்கிறவனுங்க ஃபீல் பண்ணிருவாங்க” என்றார் நெல்லையப்பன்.

அது உண்மை தான் என தோன்றியது மார்க்ஸுக்கு.

“அதில்ல மாமா... கிஸ் பண்ண விஷயம் எப்படி தெரியும்” என்றான் மார்க்ஸ்.

நெல்லையப்பன் சிரித்தார்.

“யோவ் சொல்லுய்யான்றேன்” என சிரித்தபடி கேட்டான் மார்க்ஸ்.

“அத எனக்கு சொன்னது யாருன்னு கேட்டா நீ இன்னும் டென்ஷனாயிடுவ?”

“யாரு மாமா?”

“நம்ம டீக்கடை கண்ணன்தான்” என்றான் நெல்லையப்பன்.

மார்க்ஸ் அதிர்ச்சியாக திரும்பி கண்ணனை பார்த்தான். கண்ணன் மும்முரமாக டீ ஆற்றிக் கொண்டிருந்தான்.

“அவனுக்கு யார் சொன்னதாம்”

“உளவுத்துறை கிட்ட சோர்ஸ் யாருன்னு கேட்க கூடாது... உயிரே போனாலும் அவன் சொல்ல மாட்டான்”

“ஏன் அப்படி?” என்றான் மார்க்ஸ்.

“ஒரு தொழில் தர்மம்தான்”

“ஏன்யா... புறணி பேசுறதுல தர்மம் வேறயா?” என்றான் மார்க்ஸ்.

“ஆமா” என நெல்லையப்பன் சிரித்தார். மார்க்ஸும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டான்.

“சார்” என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பினார்கள். துரை நின்று கொண்டிருந்தான். துரைக்கு வயது 35-க்கு மேல் இருக்கும். ஒரு கையில் இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்றை தூக்கி வைத்திருந்தான். அவனது மற்றொரு கரத்தை பற்றியபடி 5 வயது

பெண் குழந்தை ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த கையில் பெரிய ஒயர் கூடை ஒன்றும் வைத்திருந்தான்.

“துரை எப்ப ஊர்ல இருந்து வந்தீங்க?’’ எனக் கேட்டான் மார்க்ஸ்.

“இன்னைக்கு காலையிலதான் சார்!”

“டீ சாப்பிடுறீங்களா?”

“இல்ல சார்… உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் துரை.

“வாங்க உள்ள போய் பேசுவோம்” என்றான் மார்க்ஸ்.

“அந்த கூடையை குடுப்பா” என்றார் நெல்லையப்பன்.

“இல்ல சார் இருக்கட்டும்”

“அட குடப்பா...” என நெல்லையப்பன் அதை வாங்கிக் கொண்டார்.

“நீயும் உன் கூடையும்தான் தமிழ்நாடு முழுக்க ஃபேமஸாச்சே” என நெல்லைப்பன் சிரித்தார். அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள்.

துரை அவர்களுக்கு அறிமுகமானது இருவர் நிகழ்ச்சிக்கான ஆள் தேர்வின் போதுதான். இருவர் என்கிற டான்ஸ் ஷோவுக்கான ஆடிஷனுக்கு

தனது மனைவியை அழைத்துக் கொண்டு வந்திருந்தான் துரை. தமிழகத்தின் வெவ்வேறு பகுதியில் இருந்து நடனமாடுபவர்களை தனித்தனியாக தேர்ந்தெடுத்து அதில் ஒரே வயது ஆர்வமுள்ளவர்களை

ஜோடிகளாக சேர்ப்பார்கள். அறிமுகமில்லாத இருவர் எப்படி இணைந்து ஒரு ஜோடியாக நடனமாடுகிறார்கள் என்பதுதான் அந்த நிகழ்ச்சி.

இருவர் ஆடிஷனில் துரையை முதன்முதலாக நெல்லையப்பன் பார்த்தபோது ஒரு குழந்தைக்கு இட்லி ஊட்டியபடி மடியில் மற்றொரு குழந்தையை படுக்க வைத்து பால் பாட்டிலில் பால் கொடுத்துக் கொண்டிருந்தான் அவன்.

“யாருய்யா நீ.... என்னய்யா இந்த வேலையெல்லாம் நீ பண்ணிகிட்டிருக்க?” எனக் கேட்டார் நெல்லையப்பன்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“வொய்ஃப் டான்ஸ் பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கா சார்” என்றான் துரை.

“வொய்ஃபா யாரு?”

“பத்ம பிரியான்னு ஃபர்ஸ்ட் ரவுண்ட்ல ‘ஓம் நமச்சிவாயா’ பாட்டுக்கு ஆடுனாங்கள்ல சார் அவங்க தான்” என்றான் துரை.

“ஓ அந்த பொண்ணு கூட வந்தியா... அத விட நீ தான் இன்ட்ரஸ்டிங்கான ஆளா இருக்க” என்றபடி அவன் அருகில் அமர்ந்தார்.

“உன் கதை என்னன்னு சொல்லு கேட்போம்” என்றார் நெல்லையப்பன்.

“நமக்கு விருதுநகர் பக்கம் கிராமங்க... சோப்பு கம்பெனி வச்சிருக்கேன். 6 வருஷத்துக்கு முன்னாடி மாமா பொண்ண கல்யாணம் பண்ணிவெச்சிட்டாங்க… அது படிச்ச புள்ள... நல்லா டான்ஸ் ஆடும். காலேஜ்ல படிக்கிறப்ப ஏகப்பட்ட டான்ஸ் போட்டியில ஜெயிச்சு கப்பும் மெடலுமா வாங்கி வச்சிருக்கு. என்னைய கட்டிகிட்டு அந்த சின்ன கிராமத்துல மாட்டிக்கிச்சு. இரண்டு குழந்தை வேற ஆகிப்போச்சு... அப்புறம் எங்க டான்ஸ் எல்லாம். அப்ப தான் உங்க சேனல்ல இந்த டான்ஸ் போட்டி விளம்பரம் போட்டாக… ‘கலந்துக்கவா மாமா’ன்னு கேட்டுச்சு... சரின்னு கூட்டிட்டு வந்துட்டேன்” என துரை சொல்லி முடிக்க நெல்லையப்பன் ஆச்சரியமானார்.

“யோவ் வேற லெவல்யா… நீ ”

“இல்லைங்க... எனக்கு அதுன்னா உசிருங்க... அதுக்கு டான்ஸ்னா உசிருங்க... அதோட திறமை அப்படியே வேஸ்ட்டா போயிட கூடாதுல்ல”

“அது சரி குழந்தைகளை பார்த்துக்க வீட்ல ஆள் இல்லையா?”

“இருக்காங்க...” என இழுத்தான் துரை.

“என்ன பிரச்னை சொல்லு”

“இல்லைங்க... அது டான்ஸ் ஆடுறது எங்க வீட்ல யாருக்கும் பிடிக்கல… அவங்க அம்மா அப்பா கூட ஒத்துக்கல... எல்லாரும் பொண்டாட்டிய டான்ஸ் ஆட அனுப்புறயேன்னு என் கிட்ட கோச்சுகிட்டு இருக்காங்க. அதான் நானே புள்ளைகளை பார்த்துக்கலாம்னு கிளம்பி வந்திட்டேன்”

நெல்லையப்பன் துரையை மிகுந்த மரியாதையுடன் பார்த்தார். கட்டிய மனைவியை கண் கலங்காமல் வைத்துக் கொள்ளும் எத்தனையோ கணவன்களை அவர் பார்த்திருக்கிறார். ஆனால் மனைவியின் கனவுகளை மதிக்கும் துரை அவருக்கு வித்தியாசமானவனாக தெரிந்தான்.

மனைவியை அன்பாக பார்த்துக் கொள்வது என்பது தன்னை அவள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் எப்படி இருந்தாளோ அப்படியே அவள் இருக்கும்படியான ஒரு சூழலை ஏற்படுத்தித் தருவதென்பது பலருக்கு புரிவதில்லை.

கணவன் நினைக்கிற நல்லா பார்த்துக் கொள்வதற்கும் மனைவி எதிர்பார்க்கும் நல்லா பார்த்துகிறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இருவர் நிகழ்ச்சியில் பத்மபிரியா பிரபலமானதை விட கையில் எப்போதும் கூடையும் குழந்தைகளுமாய் சுற்றிக் கொண்டிருக்கும் துரை தான் மக்களிடையே அதிகமாக பிரபலமாகிப் போனான்.

“யப்பா மார்க்ஸ் அந்த பத்ம பிரியாவுக்கு ஒரு நல்ல டான்ஸரா பார்த்து ஜோடி சேர்த்து விடுப்பா... ஃபர்ஸ்ட் பிரைஸ் ஜெயிச்சா 20 லட்சத்துல 10 லட்சம் அந்த பொண்ணுக்கு கிடைக்கும். அந்த பணம் துரைப்பயலுக்கு பெரிய ஆதரவா இருக்கும்’’ என்றார் நெல்லையப்பன்.

பத்மபிரியாவை விக்ரமுடன் ஜோடி சேர்த்து விட்டார்கள். விக்ரம் சிறந்த நடன கலைஞன். அவன் ஆரம்பத்தில் பத்மபிரியாவுடன் சேர்ந்து நடனமாட முடியாது. அவளுடன் நடனமாடினால் தன்னுடைய வெற்றி வாய்ப்பே பறி போய்விடும் என மறுத்தான். மார்க்ஸும் ஏஞ்சலும்தான் அவனை சம்மதிக்க வைத்தார்கள். சில வாரங்களிலேயே அந்த விக்ரம்- பத்மபிரியா ஜோடி தமிழகத்தின் பிரபலமான ஜோடியாக மாறிவிட்டது.

“என்ன துரை 10 லட்சம் கிடைச்சா என்ன பண்ணலாம்னு இருக்க?” என விளையாட்டாக ஒரு முறை கேட்டான் மார்க்ஸ்.

“பிரியாவுக்கு டான்ஸ் ஸ்கூல் வைக்கணும்னு ஆசை சார். வச்சி குடுத்திரவேண்டியதுதான் என சிரித்தான் துரை.

இருவர் செட்டில் அனைவருக்குமே துரை என்றால் தனி பிரியம் உண்டு. நிகழ்ச்சி ஒளிபரப்பு துவங்கிய பிறகு துரையின் வீட்டார் அவனுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். பத்மபிரியாவின் வீட்டினரும் தொடர்பை துண்டித்துக் கொண்டார்கள்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“கட்டின பொண்டாட்டிய எவன் கூடவோ டான்ஸ் ஆட விட்டுட்டு கை தட்டிட்டு திரியுறான். இவன் எல்லாம் ஒரு ஆம்பளையா” என துரையின் காதுபடவே அவன் ஊரில் பேசினார்கள். துரை எதை பற்றியும் கவலைப்படவில்லை. மனைவியின் சந்தோஷம் மட்டுமே அவனுக்கு பிரதானமாக இருந்தது.

தனது அறைக்குள் நுழைந்தான் மார்க்ஸ். பின்னால் குழந்தைகளுடன் நுழைந்தான் துரை. நெல்லையப்பனும் துரையின் கூடையை தூக்கியபடி உள்ளே நுழைந்தார்.

கையில் இருந்த குழந்தையை தன் அருகில் அமர வைத்தான் துரை. பெண் குழந்தை மார்க்ஸின் அறையில் இருந்த கண்ணாடி சுவர் வழியாக வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கியது.

“எங்க துரை ஆளையே பார்க்க முடியல” என்றான் மார்க்ஸ்.

“ஊர்ல சின்ன பிரச்னை சார். சோப்பு கம்பெனி பக்கம் போகாம நான் இங்கயே இருந்திட்டேனா.. கொஞ்சம் பணத்தை அடிச்சிட்டானுங்க. அதான்

ரெண்டு மாசமா அங்கேயே இருந்து அதெல்லாம் சரி பண்ண வேண்டியதா போச்சு” என்றான் துரை.

“அப்ப பிரியா?”

“அது இங்க தங்கியிருந்து டான்ஸ் பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கு சார்… அடுத்த வாரம் செமி ஃபைனல் இல்ல”

“சொல்லு துரை என்ன விஷயம்... சேனல் பேமன்ட் எதுவும் பெண்டிங்கா இருக்கா?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“அதில்ல சார்... வேற ஒரு விஷயமா உங்க கிட்ட பேசணும்”

“சொல்லு” என்றான் மார்க்ஸ்.

சட்டை நுனியை திருகியபடி அமைதியாக இருந்தான் துரை.

“சொல்லுப்பா என்ன பிரச்னை?”

நிமிர்ந்த அவனது கண்கள் கலங்கியிருந்தன.

“என்னாச்சு துரை” என பதறிப்போய் கேட்டார் நெல்லையப்பன்.

“பிரியா...” என மேற்கொண்டு பேச முடியாமல் அவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“பிரியாவுக்கு என்ன?” என சீரியசான குரலில் கேட்டான் மார்க்ஸ்.

“பிரியா டைவர்ஸ் வேணும்னு கேக்குது சார்” என அதற்கு மேல் அடக்க முடியாமல் அவன் வெடித்து அழ மார்க்ஸும் நெல்லையப்பனும் அதிர்ந்து போனார்கள்.

“லூசா அந்த பொண்ணு... அதுக்காக இவ்வளவு தூரம் பாடுபட்டிருக்க உன்ன போய்..... என்ன பிரச்னை அவளுக்கு” என கோபமாகக் கேட்டார் நெல்லையப்பன்.

“விக்ரமை கல்யாணம் பண்ணிட்டு டான்ஸராவே காலம் பூரா வாழப் போறேன்னு சொல்லுது சார்” என மீண்டும் அழுதான் துரை.

குழந்தைகள் இரண்டும் அழும் தகப்பனை வேடிக்கை பார்த்தன. என்ன நடந்திருக்கும் என்பதை மார்க்ஸும் நெல்லையப்பனும் நொடிப்பொழுதில் யூகித்து விட்டார்கள்.

விக்ரம் விவாகரத்தானவன். இந்த நிகழ்ச்சிக்காக பல மாதங்களாக பிரியாவும் விக்ரமும் ஒன்றாக பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். பல மணி நேரங்கள் ஒன்றாக இருக்க நேர்ந்த சூழலில் அவர்களுக்கிடையில் காதல் மலர்ந்திருக்கலாம்.

“அது சந்தோஷமா இருக்கணும்னுதான் சார் எல்லாம் பண்ணேன். இப்ப அதுவே என்ன விட்டு போயிடும் போலயிருக்கே சார். நானும் என் பிள்ளைகளும் என்ன சார் பண்ணுவோம்” என துரை அழுத போது

மார்க்ஸூக்கும் நெல்லையப்பனுக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

நிழலையும் நிஜத்தையும் குழப்பிக் கொள்ளும் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. சினிமா போலல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பது. ஆண்டுக்கணக்கில் தொலைக்காட்சி தொடர்கள் நீளும். அதில் நடிக்கிற நடிகர் நடிகைகள் வருடக்கணக்கில் தொடர்பில் இருக்கும் சூழல் ஏற்படும். அது போல தான் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும். திரை ஜோடிகளை நிஜ ஜோடிகளாக மக்களை பார்க்க வைப்பது தான் நிகழ்ச்சியின் வெற்றி. ஆனால் அதில் இருப்பவர்கள் அது ஒரு திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வருடக்கணக்கில் கணவன் மனைவியாக நடித்தாலும் அது வெறும் நடிப்புதான் என்பது தொழில்முறை நடிகர்களுக்கு நன்றாகத் தெரியும். வேஷம் கலைந்த பிறகு தனக்கு ஒரு கணவனும் தன்னுடன் நடிக்கும் சக நடிகருக்கு ஒரு மனைவியும் வீட்டில் காத்திருப்பார்கள், அந்த வாழ்க்கை தான் நிஜம் என்பதை புரஃபஷனல் நடிகர்கள் ஒருபோதும் மறந்து போவதில்லை. ஆனால் புதிதாக துறைக்கு வருபவர்கள் நிஜத்துக்கும் நிழலுக்கும் நடுவில் குழப்பிக் கொள்வது அவ்வப்போது நடக்கும்.

எத்தனையோ திரை ஜோடிகள் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்வதுண்டு. ஆனால் இது போல குழப்பங்களும்

பிரச்னைகளும் சில சமயங்களில் வருவதுண்டு.

அறையில் இருந்து வெளியே வந்த மார்க்ஸிடம், “என்னப்பா பண்ணலாம்?” என யோசனையாக கேட்டார் நெல்லையப்பன்.

மார்க்ஸின் அறைக்கு வெளியே இருவரும் நின்று கொண்டிருந்தார்கள். உள்ளே துரை குழந்தைகளுடன் ஏதோ பேசிக் கொண்டிருப்பது கண்ணாடி கதவு வழியாக தெரிந்தது.

“பத்ம பிரியாவுக்கு போன் பண்ணி கொஞ்சம் வர சொல்லுங்களேன் பேசிப் பார்ப்போம்” என்றான் மார்க்ஸ்.

“இல்லப்பா இது அவங்களோட பர்சனல் விஷயம்” என நெல்லையப்பன் தயங்கினார்.

“அவங்களை ஜோடி சேர்த்துவிட்டது நீங்கதான?”

“அதுக்கில்லப்பா... இது என் சொந்த விஷயம் இதுல தலையிட சேனலுக்கு என்ன ரைட்ஸ் இருக்குன்னு அந்த பொண்ணு கேட்டா என்ன பண்றது?”

மார்க்ஸ் யோசித்தான்.

“நம்ம சேனல் ஆளா பேச வேண்டாம். பொதுவான ஒருத்தரா பேசிப் பார்க்கலாம். அவ முடியாதுன்னு சொன்னா நாம ஒண்ணும் செய்ய முடியாது தான். ஆனாலும் பேசாம இத விடமுடியாதுன்ணே” என்றான் மார்க்ஸ்.

“சரிப்பா” என போனுடன் நகர்ந்தார் நெல்லையப்பன்.

அறைக் கதவை திறந்த மார்க்ஸ் “துரை இங்கயே இருங்க... நான் வந்தர்ரேன்” என நகர்ந்தான்.

கான்ஃபரன்ஸ் அறையில் மார்க்ஸும் நெல்லையப்பனும் அமர்ந்திருந்தார்கள். கதவைத் திறந்து கொண்டு பிரியா உள்ளே நுழைந்தாள்.

“ஹாய் சார்” என்றபடி அவள் எதிரிலிருக்கும் சேரில் அமர்ந்தாள். ஆறு மாதத்திற்கு முன்னால் பார்த்த பத்மபிரியாவுக்கும் இப்போது பார்க்கும் பிரியாவுக்குமிடையே நிறைய வித்தியாசங்களை உணர்ந்தான் மார்க்ஸ்.

6 மாத டான்ஸ் பிராக்டிஸில் அவள் நன்றாக மெலிந்திருந்தாள். அது அவளை இன்னும் இளமையாக காட்டியது. டிராக் பேன்ட் ஒன்றும் டி-ஷர்ட் ஒன்றும் அணிந்திருந்தாள். காதுகளில் வரிசையாக வளையங்கள் குத்தியிருந்தாள். தலைமுடியை தூக்கி கொண்டை போட்டிருந்தாள். கையில் பல வண்ணத்தில் கயிறுகள் கட்டியிருந்தாள். சேரில் நன்றாக சாய்ந்து அவள் அமர்ந்திருந்த தோரணை நகரம் அவளை நம்பிக்கையானவளாக மாற்றியிருந்ததை சொல்லாமல் சொல்லியது.

“என்ன சார் அப்படி பாக்குறீங்க” என சிரித்தாள் பத்மபிரியா.

“அந்த விருதுநகர் பத்மபிரியாவ காணோமேன்னு தேடுறாரு” என்றார் நெல்லையப்பன்.

அவள் சிரித்தபடி “அதே பிரியா தான் சார். டிரஸ் தான் கொஞ்சம் மாறி இருக்கு. ஆள் அதே தான் சார்” என்றாள்.

“அப்படியா” என மார்க்ஸ் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அவள் புன்னகையுடன் மார்க்ஸை பார்த்தாள்.

“துரையை காலைல மீட் பண்ணேன்” என்றான் மார்க்ஸ்.

பிரியாவின் முகம் மாறியது.

“இது உங்களோட பர்சனல் விஷயம். இதுல தலையிட எங்களுக்கு உரிமை இல்ல தான்” என மார்க்ஸ் பேச ஆரம்பிக்க பிரியா இடை மறித்தாள்.

“சார் அவரை டைவர்ஸ் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன் சார். அவரோட எனக்கு செட்டாகாது சார்” என உறுதியான குரலில் சொன்னாள்.

அதற்கு மேல் என்ன பேசுவது என தெரியாமல் மார்க்ஸும் நெல்லையப்பனும் அவளை பார்த்தனர்!