Published:Updated:

இடியட் பாக்ஸ் - 58 : டான்ஸ் ஷோ துரை - ப்ரியா பிரச்னைக்கு மேனன் சொன்ன தீர்வு என்ன?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 58 : டான்ஸ் ஷோ துரை - ப்ரியா பிரச்னைக்கு மேனன் சொன்ன தீர்வு என்ன?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

மேனன் யோசனையாக அமர்ந்திருந்தார். அவர் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காக மார்க்ஸும் நெல்லையப்பனும் காத்திருந்தார்கள்.

“பிரியாகிட்ட நீங்க ரெண்டு வார்த்தை பேசுனீங்கன்னா” என இழுத்தார் நெல்லையப்பன்.

“துரை கிட்ட பேசலாமா?” என்றார் மேனன். இருவரும் அவரை ஆச்சர்யத்துடன் ஏறிட்டுப் பார்த்தனர்.

துரையுடன் வாழ மாட்டேன் என அடம்பிடிக்கும் பிரியாவை விட்டுவிட்டு அவளுக்காக காத்திருக்கும் துரையிடம் மேனன் என்ன பேசப்போகிறார் என யோசித்தது நெல்லையப்பன் மனது.

மார்க்ஸின் அறையில் மேனனின் எதிரில் துரை அமர்ந்திருந்தான். பின்னால் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. மார்க்ஸூம் நெல்லையப்பனும் அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார்கள்.

“துரை... பிரியாவை உனக்கு ரொம்ப பிடிக்குமா?” எனக் கேட்டார் மேனன்.

கண்கள் கலங்க துரை தலையாட்டினான்.

“உன்னைவிட அவளுக்கு டான்ஸைத்தான் பிடிச்சிருக்கு!”

துரை அதற்கும் ஆமென தலையாட்டினான். அவனது அப்பாவித்தனம் மார்க்ஸை என்னவோ செய்தது.

“அவ விக்ரம் வேணும்னு உன்ன விட்டுட்டுப் போகல... டான்ஸுக்காகத்தான் அவ உன்ன விட்டு போறா”

நெல்லையப்பனும் மார்க்ஸும் மேனனை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.

“அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் துரை. ஏன்னா அவளோட கனவுக்குத் திரும்பவும் உயிர் கொடுத்தது நீ தான். இப்ப அந்த கனவு உன்னை விட, குழந்தைகளை விட ஏன் அவளை விட அவளுக்குப் பெருசா தெரியுது. அதுல அடுத்தடுத்து சாதிக்கணும்னு நினைக்கிறா!”

துரை மெளனமாகயிருந்தான்.

“பறக்கிற சந்தோஷத்தை நீதான் அவளுக்கு குடுத்த... திரும்பவும் அவளைக் கூட்டுக்குள்ள அடைச்சா அவ சந்தோஷமா இருக்க மாட்டா!”

துரை அவரை ஏறிட்டுப் பார்த்தான்.

“சில சமயம் புருஷன் புள்ளைங்களைவிட சில பெண்களுக்கு அவங்களோட பேஷன் முக்கியமா இருக்கும். அதை புரிஞ்சிக்கிறது ஒண்ணுதான் அவங்களை நாம நேசிக்கிறதுக்கும் அவங்க நம்மளை நேசிக்கிறதுக்குமான ஒரே வழி.

இத நான் ஒரு அதிகாரியா சொல்லல… ஒரு மனைவியைப் பிரிஞ்ச கணவனா சொல்றேன். உன்னோட இடத்துல நானும் இருந்திருக்கேன் துரை. எனக்கு புரியும். ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவங்களை தடுத்து நிறுத்த முடியும். ஆனா அதுக்கப்புறம் அவங்க அவங்களா இருக்க மாட்டாங்க. ஒண்ணா தனித்தனியா இருக்கிறதைவிட ஒரு நட்போட தள்ளி இருக்கிறது தான் ரெண்டு பேருக்கும் நல்லது.''

மார்க்ஸையும் நெல்லையப்பனையும் அவரது வார்த்தைகள் தொட்டன. அவர்கள் துரையின் வாழ்க்கையில் வீசப் போகும் புயலை திசை திருப்பப் பார்த்தார்கள். மேனனோ அவனை புன்னகையுடன் புயலை எதிர்கொள்ள தயார் செய்கிறார்.

“என்ன பண்ணலாம் துரை... நீ சொல்லு”

“நான் பிரியாவ பாக்கணும் சார்” என்றான் துரை. அவனது குரல் இப்போது மாறியிருந்தது.

“நெல்லையப்பன் கீழ கான்ஃபரன்ஸ் ரூமுக்கு அவர கூட்டிட்டு போங்க” என்றான் மார்க்ஸ்.

“குழந்தைங்க”

“நான் பார்த்துகிறேன் நீங்க போய் பேசிட்டு வாங்க” எனப் புன்னகையோடு சொன்னான் மார்க்ஸ்.

நெல்லையப்பன் அவனை அழைத்து சென்றார். மேனன் விளையாடும் குழந்தைகளை பார்த்தபடியிருந்தார்.

“சார்... ஏன் சார் நீங்க பத்மபிரியா கிட்ட பேசணும்னு நினைக்கல?”

“துரை இவ்வளவு பண்ணதுக்கு அப்புறமும் அவன் வேணாம்னு முடிவு எடுக்கிற பொண்ணு நம்ம வார்த்தையில மனசு மாறும்னு உனக்கு தோணுதா மார்க்ஸ்”

“இல்ல சார்”

“அன்பை எப்பவும் பிச்சையா வாங்கக் கூடாது மார்க்ஸ். பரிதாபத்துக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. நியாயம் தர்மம் ஒழுக்கத்தோட பேரை சொல்லி ஒரு பொண்ணை ஒருத்தனோட வாழ ஃபோர்ஸ் பண்ண கூடாதுன்றது என்னோட ஒப்பீனியன். இரண்டு பேர் சேர்ந்து இருக்கறதுக்கு காதலைத் தவிர வேற எது காரணமா இருந்தாலும் அது சரியான திருமணம் இல்ல மார்க்ஸ்!”

இழுத்துப்பிடிப்பதுதான் பிரியமானவர்களுக்கு பிரச்னை என்றால் அவர்களை விட்டு விடுவது தான் நம் பிரியத்தை காட்ட சிறந்த வழி.

அன்பென்பது இன்னொரு அன்பை வாங்கிக் கொண்டு பதிலுக்கு அன்பைத் தருவதல்ல. எதையும் எதிர்பாராமல் தருவது மட்டுமே.

துரை கான்ஃபரன்ஸ் அறைக்குள் நுழைந்தான். போனை பார்த்துக் கொண்டிருந்த பத்மபிரியா நிமிர்ந்தாள். துரையை பார்த்ததும் அவள் முகம் மாறியது. உடல் இறுகியது. துரையின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள அவள் தயாராவதை துரை உணர்ந்தான்.

“எப்படியிருக்க” என்றான் துரை.

“ம்”.

“நல்லா மெலிஞ்சிட்ட”

பத்மபிரியா அமைதியாக இருந்தாள்.

“நாம பிரியறதுதான் சரியா வரும்னா பிரிஞ்சிரலாம் பத்மா” என்றான் துரை.

பிரியா அதை எதிர்பார்க்கவில்லை. துரை கோபப்பட மாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். ஆனாலும் அழுது அடம் பிடித்து தன்னுடன் வாழ வேண்டும் என அவன் நிர்பந்திப்பான் என அவள் எதிர்பார்த்தாள். அவன் புன்னகையுடன் “பிரிந்து விடலாம்” என சொன்னது பிரியாவுக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

“பசங்க என் கூட இருக்கட்டும். நீ எப்ப வேணா வந்து பார்த்துட்டு போ.இல்ல அவங்க உன்ன பாக்கணும்னு சொன்னாங்கன்னா கூட்டிட்டு வரேன்”

பிரியா என்ன பேசுவது எனத் தெரியாமல் துரையை பார்த்தபடி இருந்தாள்.

துரை தனது பாக்கெட்டிலிருந்து ஒரு ஏடிஎம் கார்டை எடுத்து நீட்டினான்.

“உன்னோட கார்டு... எண்பதாயிரம் கிட்ட பணம் இருக்கு. மேற்கொண்டு ஏதாச்சும் வேணும்னா போன் பண்ணு போட்டுவிடுறேன். உன் நகைங்க எல்லாம் லாக்கர்ல இருக்கு. எப்ப வேணும்னு சொன்னா எடுத்து வைக்கிறேன். உன் துணிமணி நீ வந்து எடுத்துக்கிட்டாலும் சரி. இல்ல நான் பஸ்ல போட்டு விடுறதா இருந்தாலும் சரி தான்.”

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

பத்மபிரியாவின் கண்கள் கலங்கின. எதிரியின் எப்பேர்பட்ட கோபத்தையும் நாம் எதிர்கொள்ள முடியும். ஆனால், எதிரியின் அன்பை எதிர்த்து நிற்பது கடினம். போட்டியையும் எதிரியையும் வெல்வதற்கான எளியவழி அவர்களை நேசிப்பதுதான். அதனால்தான் உலகை சரி செய்ய அன்பெனும் ஆயுதத்தை கையில் எடுத்தார்கள் தலைவர்களும் புனிதர்களும்.

“நீ எதுக்காக என்ன விட்டு விலகணும்னு நினைக்கிறன்னு எனக்குப் புரியுது பத்மா. சந்தோஷமா உனக்குப் பிடிச்சத பண்ணு. எதுனாலும் எனக்கு போன் பண்ணு” என துரை எழுந்தான்.

பத்மபிரியா பதறிப்போய் அவனை பார்த்தாள். அவன் புன்னகையுடன் அறையை விட்டு வெளியே வந்தான்.

“போலாம் சார்” என நெல்லையப்பனிடம் சொன்னான் துரை.

நெல்லையப்பன் திரும்பி கான்ஃப்ரன்ஸ் ரூமின் கண்ணாடி வழியாக உள்ளே பார்த்தார். பத்மபிரியா உடைந்து போய் அழத் தொடங்கினாள்.

‘அழ வேண்டியவன் புன்னகைக்கிறான். புன்னகைக்க வேண்டியவள் அழுகிறாள். இந்த மேனன் ஒரு பெரிய வித்தைக்காரன்தான்’ என மனதுக்குள் ஆச்சரியப்பட்டுக் கொண்டார் நெல்லையப்பன்.

பாண்டியன் மேகலா வீட்டின் காலிங் பெல்லை அடித்தான். பதில் ஏதும் இன்றி அமைதியாக இருந்தது. சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அடித்தான். அமைதி தொடர்ந்தது. வராண்டாவில் இருந்து எட்டிப் பார்த்தான். கீழே மேகலாவின் கார் நின்று கொண்டிருந்தது. அவள் வெளியே சென்றிருக்க வாய்ப்பில்லை. அவளது மொபைல் போனுக்கு போன் செய்தான். வீட்டின் உள்ளே போனடிக்கும் சத்தம் கேட்டது. கதவுக்கு அருகில் இருக்கும் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் பார்க்க முயற்சித்தான். உள்ளே எதுவும் தெரியவில்லை. பாண்டியன் மனது லேசாக கலவரமாகத் தொடங்கியது.

மெல்லிய பதற்றத்துடன் அவன் கதவை தட்டத் தொடங்கினான்.

“மேகலா... மேகலா” என அவள் பெயரை சொல்லி அழைத்தபடி கதவைத் தட்டினான். அதற்கும் பதில் இல்லாமல் போக பதட்டமாக கதவை உடைத்துவிடுவது என்கிற முடிவில் சற்று தள்ளி வந்து காலால் கதவை ஓங்கி உதைக்க போகும் சமயம்,

“பாண்டியன் சார்” என்ற குரல் கேட்டு திரும்பினான்.

வராண்டாவின் மூலையில் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளில் மேகலா அமர்ந்திருந்தாள். அவள் இதழை கடித்தபடி பாண்டியனைப் பார்த்து அழகாய் புன்னகைத்தாள்.

“நீ இங்க” என பாண்டியன் பதட்டம் குறையாமல் கேட்டான்.

“மொட்டை மாடியில வாக்கிங் போயிட்டு வந்தேன். கொஞ்ச நேரம் இப்படி ரெஸ்ட் எடுக்கலாமேன்னு உட்கார்ந்தேன்.”

பாண்டியனை சட்டென வெட்கம் சூழ்ந்தது. தனது தவிப்பை மேகலா பார்த்து விட்டாள் என்பதால் வந்த வெட்கமது.

“நீ எப்ப?” என பாண்டியன் தயக்கமாக ஆரம்பித்தான்.

“நீங்க லிஃப்டைத் திறந்து வந்தப்பவே பார்த்துட்டேன்” என்றாள் மேகலா.

“இங்க தான் இருக்கேன்னு சொல்ல வேண்டியது தான?”

“நீங்க என்ன பார்ப்பீங்கன்னு நினைச்சேன்”

“நான் டென்ஷாயிட்டேன்” என்றான் பாண்டியன்.

“எனக்கு உங்க டென்ஷன் பிடிச்சிருந்துச்சு. அதான் அமைதியா ரசிச்சுகிட்டு இருந்தேன்” என்றாள் மேகலா.

மீண்டும் வெட்கம் கலந்த புன்னகை அவன் முகத்தில் மலர்ந்தது. மேகலா எழுந்து வந்து கதவைத் திறந்தாள். பாண்டியன் உள்ளே நுழைந்தான்.

“இன்னொரு தடவ ஏதாவது பண்ணிக்கிறதா இருந்தா உங்க கிட்ட சொல்லாம பண்ண மாட்டேன். பயப்படாதீங்க!”

“இன்னொரு தடவையா?” என பாண்டியன் கோபமாகக் கேட்டான்.

“விளையாட்டுக்குச் சொன்னேன் சார்” என்றாள் மேகலா.

“விளையாட்டுக்கு கூட அந்த வார்த்தை சொல்லாத’’ என்றான் பாண்டியன்.

“சரி சார் சொல்லல” என மேகலா சிரித்தாள்.

பாண்டியன் ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்தான்.

“ஃபீரியா சார்... வெளிய எங்கேயாவது போலாமா?”

“எங்க?”

“நீங்க கூட்டிட்டு போங்க சார்... நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் கூட வருவேன்.”

பாண்டியன் மேகலாவை ஏறிட்டு பார்த்தான்.

“என்ன சார் பாக்குறீங்க?”

“எங்க கூப்பிட்டாலும் வருவீங்களா?”

மேகலா ஆமென தலையாட்டினாள்.

“சும்மா சொல்லாதீங்க”

“நீங்க ஒரு தாலிய கட்டி கூப்புட்டீங்கன்னா ஆயுசுக்கும் கூட வருவேன் சார்” எனச் சட்டென சொன்னாள் மேகலா.

பாண்டியன் முகம் மாறி அவளைப் பார்த்தான்.

“சாரி சார்” என அவள் உள்ளே சென்றவள் தனது தலையில் தட்டிக் கொண்டாள். அவளை அறியாமல் வார்த்தைகள் வந்து விழுந்து விட்டது. பாண்டியனை எப்படி பார்ப்பது என்கிற தயக்கம் அவளை தொற்றிக் கொண்டது.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் கண்ணாடி கிளாஸ் ஒன்றில் தண்ணீரை எடுத்துக்கொண்டு பாண்டியனுக்கு தண்ணீர் தருகிற சாக்கில் ஹாலுக்கு வந்தாள்.

பாண்டியன் யோசனையாக அமர்ந்திருந்தான். அவன் அமர்ந்திருந்த தோற்றம் மேகலாவுக்கு ஏமாற்றத்தை தருவதாக இருந்தது.

அவள் கிளாஸை டீப்பாயில் வைத்தாள். பாண்டியன் தண்ணீரை எடுத்து மடமடவென குடித்துவிட்டு மேகலாவை பார்த்து புன்னகைத்தான்.

அந்தப் புன்னகை உயிரற்று இருந்தது.

“எனக்கு புரியுது” என்றாள் மேகலா.

பாண்டியன் அவளை ஏறிட்டு பார்த்தான்.

“என்னோட ஃபிளாஷ்பேக் ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. நான் வாழ்க்கையில நிறைய காம்ப்ரமைஸ் பண்ணியிருக்கேன். என்ன பத்தி நிறைய தப்பு தப்பான விஷயங்கள் பத்திரிகையில வந்திருக்கு. அதெல்லாம் உண்மைன்னு சொல்ல மாட்டேன். அதே சமயம் அதெல்லாம் முழுசா பொய்யும் கிடையாது.”

மேகலாவின் கண்கள் கலங்கின.

“வாழ்க்கை பூரா நான் ஒரு நடிகையா தான் இருக்கணும்னு ஆசைப்படுறேன். அதுல உங்களுக்கு எந்தளவு விருப்பம் இருக்குன்னு எனக்குத் தெரியாது. இது எத பத்தியும் யோசிக்காம நான் அவசரப்பட்டு அந்த வார்த்தைய சொல்லிட்டேன்... ஸாரி”

பாண்டியன் மெளனமாகயிருந்தான்.

“நடிகைய காதலிக்கலாம் அவளோட ஃபிரண்டா இருக்கலாம். ஆனா, அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறதுன்ற வேற. நீங்க கிராமத்து ஆளு. உங்க வீட்ல இருக்கிறவங்க இதுக்கெல்லாம் ஒத்துக்கமாட்டாங்கன்னு நினைக்கிறேன். அவங்களை மீறி உங்களால யோசிக்க முடியுமான்னும் தெரியல”

பாண்டியன் அமைதியாகயிருந்தான். அந்த மெளனம் மேகலாவால் தாங்கி கொள்ள முடியாததாக இருந்தது.

“தப்புதான் சார்... நான் அப்படி கேட்டது. அதை மறந்திருங்க” என்றாள் மேகலா.

“நான் போயிட்டு அப்புறமா வரேன்” என மேகலாவின் கண்களைப் பார்க்காமல் சொன்னான் பாண்டியன்.

தான் வாழ்க்கையில் சந்தித்த எத்தனையோ ஆண்களைப்போல இவனும் சாதாரணமானவன் எனத் தோன்றியது மேகலாவுக்கு. தப்பி செல்ல காத்திருக்கும் பறவையை போல தெரிந்தான் பாண்டியன்.

“சரி சார்...”

பாண்டியன் எழுந்து செருப்பை மாட்டிக் கொண்டு நகர்ந்தான். மேகலா கதவை தாளிட்டாள். அவளுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

உடைந்து போய் அவள் அழத்தொடங்கினாள். வாயில் மணி அடித்தது. மேகலா யாராக இருக்கும் என்ற எண்ணத்துடன் கதவைத் திறந்தாள்.

பாண்டியன் நின்று கொண்டிருந்தான்.

மேகலா அவனை பார்த்தவள் திரும்பி சோஃபாவை பார்த்தாள். அவனது போன் சோபாவில் இருந்தது. போனை மறந்து விட்டு சென்றிருந்தான். மேகலா போனை எடுக்கத் திரும்பினாள். பாண்டியன் அவளது கரத்தைப் பற்றினான். அவள் புரியாமல் திரும்பிப் பார்த்தாள்.

“எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்” எனக் கேட்டான் பாண்டியன்.

அவன் சொன்னது அவளது மூளைக்கு உரைக்க கொஞ்ச நேரம் பிடித்தது.

கோபமும் வருத்தமுமாக “நான் கேட்டதும் இந்த வார்த்தையை உங்களால சொல்ல முடியலல்ல... இது சரியா வருமான்னு யோசிச்சீங்கதான” எனக் கேட்டாள் மேகலா.

“ஆமா யோசிச்சேன். நீ எனக்கு சரியான ஆளான்னு நான் யோசிக்கல. இப்படி ஒரு தேவதைக்கு நான் சரியான ஆளான்னுதான் யோசிச்சேன்!”

மேகலா பாண்டியனை கண்கள் கலங்கப் பார்த்தாள்.

“சத்தியமா” என்றான் பாண்டியன்.

அவன் வாய் மூடும் முன் மேகலா சட்டென பாய்ந்து அவனை அணைத்துக் கொண்டாள். பாண்டியன் ஆதரவாய் அவளது முதுகை பற்றிக் கொள்ள அவனது அணைப்பில் பாதுகாப்பாய் உணர்ந்தாள் மேகலா.

மார்க்ஸுக்கு அதிகாலையில் திடீரென விழிப்பு வந்தது. மணியைப் பார்த்தான். மூன்று என காட்டியது. இந்த சமயத்தில் விழிப்பு வர வாய்ப்பில்லையே என மார்க்ஸ் யோசித்தபோது நான் தான் உன்னை எழுப்பியது என அவனுக்கு நினைவூட்டியது வயிறு. ராத்திரி சாப்பிடவில்லை என்பது அப்போது தான் அவனது நினைவுக்கு வந்தது. கண்ணை மூடி உறங்கி விடலாம் என முயன்றான் மார்க்ஸ். வயிறு அடம் பிடித்தது.

மெதுவாக எழுந்து ஹாலுக்கு வந்தான். கிச்சனில் லைட் வெளிச்சம் தெரிய யோசனையாக கிச்சனுக்குள் எட்டிப் பார்த்தான். திவ்யா நின்று கொண்டிருந்தாள்.

“ஏய் இந்த நேரத்துல என்ன பண்ற?”

“பசிக்குது... டின்னர் மிஸ் பண்ணிட்டேன்” என்றாள் திவ்யா.

இருவருமே காபி ஷாப் ஒன்றில் காபி குடித்து விட்டு இரவு உணவைத் தவிர்த்திருந்தார்கள்.

“ஏதாவது பண்ணி தரட்டுமா” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“எனக்கு நல்லா சாப்பிடணும் போல இருக்கு” என்றாள் திவ்யா.

“நல்லான்னா... என்ன வேணும் சொல்லு”

“பிரியாணி”

மார்க்ஸ் யோசித்தான்.

திவ்யா சிரித்தபடி “இந்த நேரத்தில எங்க பிரியாணி கிடைக்கும்… நூடுல்ஸ் பண்ணி சாப்பிடலாம்” என்றாள்.

“ஒரு அருமையான பிரியாணி கிடைக்கும்... ஆனா போய்தான் சாப்பிடணும் ஓகேவா உனக்கு?”

“எனக்கு ஓகே”

“அப்ப ரெடியாகு” என்றான் மார்க்ஸ்.

இரவு நேர சென்னையில் மார்க்ஸின் புல்லட் விரைந்து கொண்டிருந்தது. பின்னால் திவ்யா குளிருக்கு அடக்கமாக மார்க்ஸை அணைத்தபடி அமர்ந்திருந்தாள்.

“எங்கடா போறோம்?”

“புளியந்தோப்பு” என்றான் மார்க்ஸ்.

“ரொம்ப தூரமா?”

“ஒரு இருபது கிலோமீட்டர்தான்”

இடியட் பாக்ஸ் - மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் - மார்க்ஸ், திவ்யா

“அடப்பாவி அவ்வளவு தூரம் போய் ஒரு பிரியாணி சாப்பிடணுமா?”

“சாப்பிட்டதுக்கு அப்புறம் அத சொல்லு” என்றான் மார்க்ஸ்.

புளியந்தோப்பு பிரியாணி கடைக்கு சற்று தள்ளி மார்க்ஸ் புல்லட்டை நிறுத்தினான். வண்டியிலிருந்து இறங்கிய திவ்யா முகம் ஆச்சரியத்தில் மலர்ந்தது. அதிகாலை நாலு மணிக்கு பிரியாணி கடையில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. பிரியாணி வாசம் அந்த பகுதி முழுவதையும் சூழ்ந்திருந்தது.

ஐடியில் பணிபுரியும் ஆண்களும் பெண்களும் ஆங்காங்கே காரை பைக்கை நிறுத்தி விட்டு பிரியாணிக்காக கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். சாதாரண தொழிலாளர்களும் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் மேல் தட்டு மக்களும் ஒன்றாக அருகருகே நின்றபடி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் காட்சி பார்ப்பதற்கு அழகாகயிருந்தது.

“நீ இப்படி ஓரமா வெயிட் பண்ணு வந்தர்றேன்” என்றபடி மார்க்ஸ் உள்ளே புகுந்தான். திவ்யா புன்னகையும் ஆச்சர்யமுமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

மார்க்ஸ் இரண்டு கையிலும் பிரியாணி தட்டுடன் உலககோப்பையை வென்ற தோனி மாதிரி சந்தோஷத்துடன் வெளியே வந்தான்.

திவ்யா சிரித்தாள்.

முதல் வாயை எடுத்து வைத்ததுமே அதன் சுவையும் மணமும் திவ்யாவின் மூளைக்குள் புதிய ரத்தத்தை பாய்ச்சியது.

“சூப்பரா இருக்கு” என்றாள் திவ்யா.

“நான் சொன்னேன்ல... பிரியாணி மட்டும் பார்சல் வாங்குனா அந்த ஃபீலே வராது. மணம் மிஸ்ஸாயிடும்” என்றான் மார்க்ஸ்.

“கிட்ட வா”

மார்க்ஸ் திவ்யா ஏதோ சொல்லப் போகிறாள் என நினைத்து அதை கேட்க அவள் காதருகே குனிந்தான்.

திவ்யா சட்டென அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“ஏய் என்ன இது?”

“உன்ன மட்டும் மிஸ் பண்ணிருந்தா நான் லைஃப்ல என்னடா பண்ணியிருப்பேன்?”

மார்க்ஸ் சிரித்தான்.

“வாழ்றதுன்னா அது நீ தாண்டா. உன்னோட சேர்ந்து நானும் இப்ப தான் வாழ ஆரம்பிச்சிருக்கேன். ஒவ்வொரு நிமிஷமும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு” என்றாள் திவ்யா.

நேசிக்கும் பெண்ணின் பாராட்டை விட ஒருவனுக்கு வேறு எது பெரிதாக இருக்க முடியும். உன்னுடன் இருக்கும் தருணங்கள்தான் என் வாழ்வின் சிறந்த தருணங்கள் என ஒரு பெண்ணின் வாயால் கேட்க நேரிடும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகி விடுகிறது.

பிரியாணி சாப்பிட்டு அவர்கள் கிளம்பும் போது விடிந்திருந்தது. திவ்யா அவனை அணைத்தபடி அவன் முதுகில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் விழித்து விடாமல் கவனமாக மார்க்ஸ் வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான். அந்தப் பயணம் அப்படியே நீளக் கூடாதா என்றிருந்தது மார்க்ஸுக்கு.

மார்க்ஸ் கான்ஃபரன்ஸ் அறையில் அமர்ந்திருந்தான். பாண்டியன் நெல்லையப்பன் வினோ டார்லிங் திவ்யா அவனுக்கு எதிராக அமர்ந்திருந்தார்கள். திவ்யாவும் மார்க்ஸும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் சாதாரணமாக இருப்பதற்கு முயன்றுக் கொண்டிருந்தார்கள்.

“ஒரு பிரியாணி வாசம் வந்துகிட்டே இருக்குப்பா... எங்க இருந்துன்னு தெரியல” என்றார் நெல்லையப்பன்.

யாருக்கும் தெரியாமல் திவ்யாவும் மார்க்ஸும் தங்கள் கைகளை முகர்ந்து பார்த்துக் கொண்டார்கள்.

“எங்க ஏஞ்சலையும் அவங்க டீமையும் காணோம்” என்றான் மார்க்ஸ்.

“தெரியலப்பா போனடிச்சா எடுக்க மாட்டுறாங்க” என்றார் நெல்லையப்பன்.

“அவங்க இல்லாம என்ன மீட்டிங் அவங்க இருக்கனும்ல!”

“இல்ல தல... திடீர்னுதான் மீட்டிங் சொன்னோம். அவங்க வெளிய போயிட்டாங்கன்னு நினைக்கிறேன்” என பாண்டியன் சமாளித்தான்.

“ஆபிஸ் டைம்ல எங்க போறாங்க... போறதா இருந்தா சொல்லிட்டு போக வேண்டியது தான?” என மார்க்ஸ் எரிச்சலாக சொல்ல அவனது போனடித்தது. போனை எடுத்து பார்த்தவன் முகம் மாறினான்.

“இந்த நேரத்தில பேபியம்மா ஏன் போனடிக்கிறாங்க?” என்கிற யோசனையுடன் போனை எடுத்தான் மார்க்ஸ்.

“அம்மா”

“தனியா இருக்கியா?”

“சொல்லுங்கம்மா” என்றபடி மார்க்ஸ் எழுந்து கான்ஃபரன்ஸ் அறையை விட்டு வெளியே வந்தான்.

“ஏஞ்சலு, தனபாலு, அவளோட டீம்ல இருக்கிற மத்த ஆளுங்கன்னு பத்து பன்னிரெண்டு பேர் நம்ம வீட்ல தான் இருக்காங்க” என்றார் பேபியம்மா.

“அவங்களை இங்க நாங்க தேடிக்கிட்டு இருக்கோம். அங்க என்ன பண்றாங்க?”

“மீட்டிங் நடக்குதுப்பா”

“மீட்டிங்கா... என்ன மீட்டிங்?”

“அவங்க எல்லாரும் மொத்தமா புதுசா ஆரம்பிக்கப்போற ஏதோ ஒரு சேனல்ல சேரப் போறாங்களாம்!”

மார்க்ஸ் அதிர்ந்தான்.

“நாளைக்கு மொத்தமா அம்புட்டு பேரும் அவங்க ராஜினாமா லெட்டரை கொண்டாந்து குடுக்கலாம்னு பிளான் பண்ணி இருக்காங்க”

“ஏனாம்?”

“என்ன கேட்டா? நான் உன்ன கேக்கலாம்னுதான் போன் பண்ணேன்” என்றார் பேபியம்மா.

“சீரியசா போற மாதிரி பிளானா இல்லை...” என மார்க்ஸ் இழுக்க...

“எல்லாரும் ஆளுக்கொரு லெட்டர் ரெடியா வச்சிருக்காங்க. நாளைக்கு இந்நேரம் அந்த லெட்டர் உன் கையில இருக்கும்” என்றார் பேபியம்மா.

மார்க்ஸ் பதற்றமானான்.

- Stay Tuned...