கேன்டீனில் அனைவரும் கூடியிருந்தார்கள். டேபிளில் பூங்கொத்துகள் வைக்கப்பட்டிருந்தன. ஏதோ ஓர் அறிவிப்பு வரப்போகிறது என அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆனால், என்ன அறிவிப்பு என்பதுதான் அனைவரது யோசனையாக இருந்தது.
ஒருபுறம் ஏஞ்சலும் அவளது ஆட்களும் நிற்க... மறுபுறம் மார்க்ஸும் மற்றவர்களும் நின்று கொண்டிருந்தார்கள்.
“நாம ரிசைன் பண்ண போறோம்றது கம்பெனிக்கு தெரிஞ்சிடுச்சு” என்றாள் ஏஞ்சல்.
“எப்படி?” எனப் பதற்றமாக கேட்டான் தனபால்.
“டேபிள் மேல 12 பொக்கே இருக்கு கவனிக்கலையா?”
அவசரமாக பொக்கேக்களை எண்ணிய தனபால் “ஆமா ஏஞ்சல்” என்றான்.
ஏஞ்சல் புன்னகைத்தாள்.
“என்ன பண்ணுவாங்க?”
“நம்ம ரிசைன் பண்றதுக்கு முன்னாடி அவங்களே நம்மள பாராட்டி பொக்கே குடுத்து ‘பை பை’ சொல்ல போறாங்க...” என்றாள் ஏஞ்சல்.
தனபால் புரியாமல் அவளைப் பார்த்தான்.
“நம்ம 12 பேர் ஒரே நேரத்துல ரிசைன் பண்ணா அவங்களுக்கு அசிங்கம். அதான் அவங்க முந்திகிட்டு நம்மள அனுப்பலாம்னு பாக்குறாங்க.”
தனபாலுக்கு அப்போதுதான் டேபிளின் மேலிருந்த பொக்கேக்களின் அர்த்தம் புரிந்தது.
“நம்ம ரிசைன் பண்ண போறோம்னு அவங்களுக்கு எப்படித் தெரியும்?”
“எங்கம்மாவே மார்க்ஸுக்கு போட்டு கொடுத்திருக்கும்” என்றாள் ஏஞ்சல்.
“அப்ப நம்ம வேற எங்கயாவது மீட் பண்ணியிருக்கலாமே?!” என ஆதங்கமாகச் சொன்னான் தனபால்.
“எல்லாம் நல்லதுக்குத்தான். நம்மளா போறோம்னு சொன்னா முடியாதுன்னு அடம் பிடிப்பாங்க... அவங்களா அனுப்புனா மூணு மாச சம்பளம் குடுத்து அனுப்பனும். நமக்கு லாபம்தான்” என்றாள் ஏஞ்சல்.
“ஆமால்ல” எனப் புன்னகைத்தான் தனபால்.
ஏஞ்சல் திரும்பி மார்க்ஸைப் பார்த்தாள். மார்க்ஸ் கைகளைக் கட்டியபடி குழப்பமாக நின்று கொண்டிருந்தான்.
"மார்க்ஸ்" என மெல்ல அவன் காதில் கிசுகிசுத்தார் நெல்லையப்பன்.
“என்ன மாமா?”
“மேனன் வேற லெவல் ஆளுப்பா!”
“என்ன திடீர்னு?”
“நீங்க என்னடா வேலைய விட்டு போறது... நான் உங்களை அனுப்புறன்டானு ஒரு ஃபேர்வெல் ரெடி பண்ணாரு பாரு... வேற லெவல் மாஸ்!”
மார்க்ஸ் தலையாட்டினான்.
அவன் மேனனிடம் ஏஞ்சலும் மற்றவர்களும் வேலையை ரிசைன் செய்யப்போகிறார்கள் என்ற போது அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
“ஏன்?” என ஒரு வார்த்தையில் கேட்டார்.
“நல்ல சம்பளம் சார்” என்றான் மார்க்ஸ்.
“அவங்க இல்லாம மேனேஜ் பண்ணிட முடியுமா?”
“கொஞ்சம் கஷ்டம்தான் சார். ஆனா, சமாளிச்சுக்கலாம்” என்றான் மார்க்ஸ்.
“அப்ப சரி” எனச் சாதாரணமாகச் சொல்லிவிட்டார் மேனன்.
அடுத்த அரைமணி நேரத்தில் கேன்டீனில் மீட்டிங் என அனைவருக்கும் மெயில் வந்துவிட்டது.
“துரோகிங்க நம்மள ஆப்படிச்சுட்டு போறானுங்க... அவனுங்களுக்கு பொக்கே எல்லாம் குடுத்து வழியனுப்பணுமா?” என்றார் நெல்லையப்பன்.
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" என்றான் பாண்டியன்.
நெல்லையப்பன் திரும்பி அவனை முறைத்தார்.
“அவங்களை வெட்கப்பட வச்சு அனுப்பலாம்னு சார் யோசிச்சிருப்பாரு மாமா” என்றான் மார்க்ஸ்.
“யாரு இவனுங்களா வெட்கப்படப் போறானுங்க... நாம பயந்துட்டோம்னு சந்தோஷப்படுவானுங்கப்பா!”
“விடு மாமா... நல்ல சம்பளம் கிடைக்குது போறானுங்க... வேற என்ன பண்ணச் சொல்ற?”
“இல்லப்பா எதுவா இருந்தாலும் உன் கிட்ட பேசலாம் இல்ல... ஒரு மாசமா பிளான் பண்ணி இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணி இப்படி படக்குன்னு முதுகுல குத்தணும்னு அவசியம் இல்லல்ல!”
“பார்த்துக்கலாம் விடு...” என்றான் மார்க்ஸ்
நெல்லையப்பன் அவர்களை எரிச்சலாகப் பார்த்தார்.
“தனபால்... நான் போய் இந்த சேனல் எனக்கு பிடிக்கல... மார்க்ஸை எனக்கு பிடிக்கல.... எங்களுக்கு இங்க மரியாதையில்ல... அதனாலதான் நாங்க போறோம்னு சொல்லிடப்போறேன்” என்றாள் ஏஞ்சல்.
“தைரியமா சொல்லு ஏஞ்சல்.”
“அதனால பிரச்னை ஒண்ணும் வராதில்ல?”
“வந்தா பாத்துக்கலாம் விடு. பேசாம போனா நம்மள துரோகிம்பானுங்க. அதனால எதுவாயிருந்தாலும் மொத்த ஆபிஸ் முன்னால போட்டு உடைச்சிரு பார்த்துக்கலாம்” என்றான் தனபால்.
ஏஞ்சல் சின்ன பெருமூச்சுடன் தயாரானாள்.
12 பேரும் ஒன்றாக ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து மார்க்ஸ் தலைமை சரியில்லை, அதனால் வேலையை ராஜினாமா செய்கிறோம் எனச் சொல்லத் திட்டமிட்டிருந்தாள் ஏஞ்சல். ஆனால், இப்படி அவர்கள் முந்திக் கொண்டார்களே என அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால், போவதற்கு முன்னால் மனதிலிருப்பது அத்தனையையும் கொட்டிவிட வேண்டும் எனத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
மேனன் தாட்சா இருவரும் கேன்டீனுக்குள் நுழைய பேசிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் மெளனமானார்கள்.
மேனன் புன்னகையுடன் அனைவரையும் பார்த்தார்.
“நாம எல்லாம் இங்க ஏன் கூடியிருக்கோம்னா...” என மேனன் நிறுத்த... அனைவரும் அவர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என அவரையே பார்த்தனர்.
“ஏஞ்சல்” என அழைத்தார் மேனன்.
ஏஞ்சல் தயக்கமாக நடந்து வந்தாள்.
மேனன் பொக்கே ஒன்றை எடுத்து நீட்டினார். ஏஞ்சல் அதை வாங்கிக் கொள்ள அனைவரும் காரணம் புரியாமல் கை தட்டினார்கள்.
“பொக்கே குடுத்து பெப்பே காட்டுற ஒருத்தரை நான் இப்பதான் பாக்குறேன்” என்றார் நெல்லையப்பன்.
“ஏஞ்சலை சீனியர் மேனேஜரா ப்ரமோட் பண்ணியிருக்கோம். ஏஞ்சல்தான் இனி ஃபிக்சன் ஹெட். நம்ம டிவில வர்ற எல்லா சீரியலுக்கும் அவங்கதான் இன்சார்ஜ்!” என்றார் மேனன்.
அதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஏஞ்சல் திக்குமுக்காடிப் போனாள். அனைவரும் பலமாக கை தட்டினார்கள்.
“மார்க்ஸு... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே” என்றார் நெல்லையப்பன்.
ஆச்சர்யம் மாறாமல் ஆமென தலையாட்டினான் மார்க்ஸ்.
“ஏஞ்சல் உங்களோட புது சேலரி ஸ்ட்ரக்சர் இதுல இருக்கு” என சீலிடப்பட்ட கவர் ஒன்றையும் நீட்டினார் மேனன்.
“தேங்க்ஸ் சார்” என்றாள் ஏஞ்சல். அதைத்தவிர வேறு எதையும் சொல்லத் தோன்றவில்லை அவளுக்கு.
“தனபால், குரு” என வரிசையாக 6 பேரின் பெயரை சொன்னார் மேனன்.
“நீங்க எல்லாரும் அசிஸ்டென்ட் மேனேஜர்ல இருந்து மேனேஜரா ப்ரமோட் ஆகியிருக்கீங்க!”

மீண்டும் கைதட்டல் காதை பிளந்தது. அவர்களுக்கு பொக்கேவும் புது சேலரி விபரங்கள் அடங்கிய கவரையும் வழங்கினார் மேனன்.
“ஏஞ்சல் பக்கம் இருந்திருந்தா ப்ரமோஷனும் கிடைச்சிருக்கும், சம்பளமும் கூடியிருக்கும்” என்றார் நெல்லையப்பன்.
“அடுத்த வாரம் நாம பேப்பர் போடலாம் மாமா!” எனச் சிரித்தபடி சொன்னான் பாண்டியன்.
“நான் எல்லாம் ரிசைன் பண்றேன்னு சொன்னா... சரிப்பான்னு வீடு வரைக்கும் கொண்டு வந்து இறக்கி விட்டுட்டு போயிருவாங்க” என்றார் நெல்லையப்பன்.
ஏஞ்சல் அணியில் மீதமிருக்கும் ஐந்து பேரின் பேரைச் சொன்ன மேனன் அவர்களைப் பணி நிரந்தரம் செய்வதாகவும் அவர்களுக்கு புதிய சம்பளம் வழங்குவதாகவும் அறிவித்தார்.
ஏஞ்சல் அணியினர் இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து போயிருந்தார்கள். அவர்கள் அவமானத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இந்த எதிர்பாராத வெகுமானத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“ஏஞ்சல் என் சேலரியை டபுள் பண்ணியிருக்காங்க!” என்றான் தனபால்.
“அதுக்குள்ள கவரை பிரிச்சிட்டீங்களா?” என கடுகடுத்தாள் ஏஞ்சல்.
“டென்ஷன் தாங்க முடியல அதான்.”
அவனுக்கு மற்ற சேனல் தருவதாகச் சொல்லியிருந்த சம்பளத்தை விட இது அதிகம்.
“நம்ம ஆபிஸ்காக கஷ்டப்பட்டு முறையான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த 12 பேருக்கு இன்னைக்கு ப்ரமோஷன் கொடுத்திருக்கோம். இதே மாதிரி ஒவ்வொரு டிப்பார்ட்மென்ட்லயும் இருக்குற மத்த திறமைசாலிகளை கண்டுபிடிச்சு அடுத்த வாரம் இதே வியாழக்கிழமை அவங்களுக்கான ப்ரமோஷன் அனவுன்ஸ் பண்ணுவோம்” என்றார் மேனன்.
அனைவரும் கரவொலி எழுப்பினார்கள்.
“நம்ம ரெசிக்னேஷன் லெட்டரை யாருக்கும் தெரியாம கிழிச்சு போடணும்” என்றான் தனபால். அங்கிருக்கும் 12 பேரின் எண்ணமும் அதுவாகவே இருந்தது.
கூட்டம் கலையத் தொடங்கியது. தயக்கமாக நெல்லையப்பன் மேனன் அருகில் வந்தார்.
“சார்...”
“சொல்லுங்க நெல்லையப்பன்...”
“நீங்க தப்பே பண்ணமாட்டீங்களா சார்?”
மேனன் சிரித்தபடி “புரியல” என்றார்.
“அதெப்படி சார்? எல்லா கேள்விக்கும் உங்க கிட்ட ஒரு கரெக்டான ஆன்சர் இருக்கு? எல்லா பிரச்னைக்கும் பக்காவா ஒரு முடிவு சொல்றீங்க. எப்படி உங்களால மட்டும் அது முடியுது. வாழ்க்கையில நீங்க எப்பவுமே சொதப்புனதே இல்லையா சார்?”
மேனன் சிரித்தார்.
“அட சொல்லுங்க சார்”
“நிறைய சொதப்பி இருக்கேன் நெல்லையப்பன். இப்ப நான் சரியா எடுக்கிறதா நீங்க நினைக்கிற ஒவ்வொரு முடிவுமே பத்து பதினைஞ்சு சொதப்பல் பண்ணி நான் கத்துக்கிட்டதுதான். 40 வயசு வரைக்கும் நான் நிறைய தப்பு தப்பான முடிவுகள் எடுத்திருக்கேன். அந்த மிஸ்டேக் எல்லாம் பண்ணி கத்துக்கிட்ட விஷயங்கள்தான் இப்ப சரியான முடிவெடுக்க யூஸ் ஆகுது” என்றார் மேனன்.
நெல்லையப்பன் ஆச்சர்யமாக மேனனைப் பார்த்தார்.
“கீழ விழாம சைக்கிள் கத்துக்க முடியாது நெல்லையப்பன். தப்பு பண்ணாதான் அனுபவம் கிடைக்கும். அனுபவம் தான் நம்மள தப்பு பண்ணாத பர்ஃபெக்ட்டான ஆளா மாத்தும்.”
“அதுக்கும் ஒரு தத்துவத்தை சொல்லிடுறீங்களே சார்” என சிரித்தார் நெல்லையப்பன்.
மேனன் அவரது தோளைத் தட்டிச் சிரித்தார்.
“நம்மள விட்டுட்டு போறேன்னு நினைக்கிறவங்களுக்கு பதவி உயர்வும் சம்பள
உயர்வும் குடுக்குறீங்களே... அது ஓகே தானா சார்?”
“அவங்களுக்கு இன்னொருத்தன் நல்ல சம்பளம் தர தயாரா இருக்கான். அப்ப அவங்க அதுக்கு தகுதியான ஆளுங்கன்னுதான அர்த்தம். அந்த சம்பளத்தை ஏன் நாமளே தரக் கூடாது. வாய்ப்பு தேடி போறவங்களுக்கும், நமக்கு அங்கீகாரம் கிடைக்கலன்னு வருத்தப்பட்டு போறவங்களுக்கும் வித்தியாசம் இருக்கு” என்றார் மேனன்.
நெல்லையப்பன் யோசித்தார்.
“சில சமயம் நல்ல ஆளுங்களோட அருமை அவங்க போறேன்னு சொல்றப்பதான் நமக்கே புரியுது. என்ன பண்றது?”
“அப்ப நானும் போறேன் சார்” என்றார் நெல்லையப்பன்.
மேனன் சிரித்தார். நெல்லையப்பனும் சிரித்தார்.
…………………………………………………..
திவ்யா தனது அறையில் யோசனையாக அமர்ந்திருக்க, நந்திதா உள்ளே நுழைந்தாள்.
“என்னடி திடீர்னு போன் பண்ணி, பார்க்கணும்னு சொல்ற... ஆச்சர்யமாயிருக்கு”
“உட்காரு”
நந்திதா எதிரில் இருந்த சேரில் அமர்ந்தாள்.
“ஏஞ்சல் ஃபிக்ஷன் ஹெட்டாயிருக்கா தெரியும் இல்ல?”
“தெரியுமே... சார் அனவுன்ஸ் பண்ணும் போது நானும் கேன்டீன்ல இருந்தனே” என்றாள் நந்திதா.
“நம்மளோட சீரியல்கள்ல என்னென்ன சேன்ஜஸ் எல்லாம் பண்ணணும்னு நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அதெல்லாம் பண்ணத் தேவையில்லன்னு ஏஞ்சல் ஒரு மெயில் போட்டிருக்கா” என்றாள் திவ்யா.
“என்னடி சொல்ற?” என வியப்பானாள் நந்திதா.
“நான் அப்ரூவ் பண்ண ரெண்டு சீரியல்சோட கதை சரியில்லன்னு அத ஹோல்ட்ல போட்டுட்டா!”
“காலையிலதான் பதவி கொடுத்தாங்க... மதியானத்துக்குள்ள இவ்வளவு ஆட்டமா? தப்பா இருக்கே!”
“நான் என்ன செய்யட்டும்?” எனக் கேட்டாள் திவ்யா.
“எதையும் மாத்தக் கூடாதுன்னு சொல்லு!”
“நான் எப்படிச் சொல்ல முடியும்?”
“ஏன் சொல்லக் கூடாது?” எனக் கோபமாக கேட்டாள் நந்திதா.
“ஏஞ்சல் டிபார்ட்மென்ட் ஹெட். மார்க்ஸ் புரோகிராமிங் ஹெட். நடுவுல நான் யாரு?” எனச் சொன்ன திவ்யாவின் குரலில் வருத்தம் கலந்திருந்தது.
“மார்க்ஸ்கிட்ட போய் சொல்லலாம் வா...”
“சின்ன பசங்க மாதிரி மிஸ் அவ என்ன அடிச்சிட்டான்னு கம்ப்ளெய்ன்ட் பண்ண சொல்றியா?”
நந்திதா அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கலங்கினாள்.
“வர்றப்ப புரோகிராமிங் ஹெட்டுன்னு கூட்டிட்டு வந்தாங்க... அதை மார்க்ஸுக்காக நான் விட்டு குடுத்தேன். இப்ப ஏஞ்சலை டிப்பார்ட்மென்ட் ஹெட்டா ஆக்கிட்டாங்க… நான் யாரு? எனக்கு என்ன அதிகாரம் இருக்குன்னே எனக்குப் புரியல” என்றாள் திவ்யா.
“திவ்யா, ஏஞ்சல் வேணும்னே உன்னை டிஸ்டர்ப் பண்றா. நீயும் மார்க்ஸும் ஒண்ணா இருக்கிறது அவளுக்குப் பிடிக்கல. அந்தக் கோபத்தை வேலையில காட்டுறா!”
“இருக்கட்டும் ஏஞ்சல். ஆனாலும், அவ முடியாதுன்னு சொன்னா நான் ஒண்ணும் பண்ண முடியாதில்ல!”
“மார்க்ஸ் கிட்ட பேசுனியா?”
“அவனும் அந்த மெயில்ல சிசி-ல இருக்கான். அவனுக்கும் நடக்குறதெல்லாம் தெரியும். ஆனாலும் அவன் அமைதியாத்தான் இருக்கான்!”
“இப்ப என்ன பண்ணலாம் திவ்யா?”
“தெரியல நந்து. எங்கயோ நான் என்ன மிஸ் பண்ணிட்ட மாதிரி தோணுது!”
“மேனன் சார் கிட்ட பேசுடா…”
“சாருக்குத் தெரியாதா? நான் போய் சொல்லணுமா?”
நந்திதா அமைதியாக இருந்தாள்.
“நான் 15 நாள் லீவு அப்ளை பண்ணியிருக்கேன். ஊருக்கு போய் அம்மா அப்பாவோட இருந்துட்டு வரலாம்னு பாக்குறேன். வந்ததுக்கப்புறமா ஒரு முடிவெடுக்கலாம்னு யோசிக்கிறேன்!”
“நல்ல விஷயம்தான். தாராளமா போயிட்டு வா” என்றாள் நந்திதா.
அவளது சிஸ்டமில் மெயில் வரும் ஓசை கேட்டது. அதை எட்டிப் பார்த்த திவ்யா முகம் மாறினாள்.
“என்னாச்சு?”
“மேனன் சார் என்னோட லீவ் அப்ளிகேஷனை ரிஜெக்ட் பண்ணிட்டார்!”
“ஏன்?” என ஆச்சர்யமாகக் கேட்டாள் நந்திதா.
“தெரியல சாரைப் பார்த்து கேட்டுட்டு வந்தர்றேன்” என எழுந்தாள் திவ்யா.
“அமைதியாயிரு. எல்லாம் சரியா வரும்” என அவளை அணைத்துக் கொண்டாள் நந்திதா. திவ்யாவுக்கு அந்த அணைப்பு அப்போது மிகவும் தேவையானதாக இருந்தது.
திவ்யா தனது அறையிலிருந்து வெளியே வரவும், ஏஞ்சல் எதிரில் வரவும் சரியாகயிருந்தது.
திவ்யா வேறு வழியின்றி அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.
“நான் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தேன்” என்றாள் ஏஞ்சல்.
“பார்த்தேன்...”
“நான் உங்களை ஹர்ட் பண்ணனும்னுலாம் அந்த மெயிலை அனுப்பல. ஒரு ஃபிக்சன் ஹெட்டா எனக்கு எது சரின்னு பட்டுதோ அதைத்தான் அதுல சொல்லியிருந்தேன்” என்றாள் ஏஞ்சல்.
“எனக்குப் புரியுது” என்றாள் திவ்யா.
“சாரி நத்திங் பர்சனல்!”
“இட்ஸ் ஓகே... ஆல் த பெஸ்ட் ஃபார் யுவர் நியூ ரோல்” என்ற திவ்யா அங்கிருந்து நகர முற்பட்டாள்.
“நீங்களும் மார்க்ஸும் பீச்ல எடுத்த போட்டோ பேஸ்புக்ல பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்துச்சு” எனக் கிண்டலாக புன்னகைத்தாள் ஏஞ்சல்.
முகம் மாறி திவ்யா எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து நகர்ந்தாள். மார்க்ஸுடனான தன்னுடைய உறவுதான் அவளின் மெயிலுக்கான காரணம் என்பது திவ்யாவுக்குப் புரிந்தது. மொத்தமாக அனைத்தும் தனது கட்டுப்பாட்டை விட்டுபோனது போல உணர்ந்தாள் திவ்யா.
திவ்யா, மேனனின் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.
“உட்காரு திவ்யா” என்றார் மேனன்.
“சார் இந்த 15 நாள் லீவ் எனக்கு அவசியம் தேவை சார். ஐ நீட் எ பிரேக்”
மேனன் சின்ன புன்னகையுடன் ஒரு கவரை நீட்டினார்.
“என்ன சார் இது?”
'படி' என்பதாக அவர் சைகை காட்ட திவ்யா கவரைப் பிரித்தாள். உள்ளிருக்கும் கடிதத்தைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.
“சார்... என்ன சார் இது?”
“ஆமா திவ்யா. மார்க்ஸ் புரோகிராமிங் ஹெட்டா இருக்க விரும்பல. கொஞ்ச நாள் நம்மளோட டிஜிட்டல் ஸ்பேசை பாத்துக்கிறேன்னு சொல்லிட்டான். அதனால உன்ன புது புரோகிராமிங் ஹெட்டா ப்ரமோட் பண்ணியிருக்கோம்.”
“ஏன் சார்?”
“அத நீ மார்க்ஸ் கிட்டதான் கேக்கணும்!”
“இல்ல சார். அவன் விட்டு குடுத்து அப்படி ஒரு பதவி எனக்குத் தேவையில்லை சார்!”
“யாரும் விட்டு குடுக்கல... அவன் கொஞ்சம் நாள் ரிலாக்ஸ்டா வேலை செய்ய விரும்புறதா சொல்லிட்டான். மும்பைக்கு பேசி அப்ரூவல் வாங்கியாச்சு. இனிமே இதை மாத்த முடியாது” என்றார் மேனன்.
திவ்யா என்ன பேசுவது எனத் தெரியாமல் அமர்ந்திருந்தாள்.
“திவ்யா இதுல யோசிக்க எதுவும் இல்ல... இப்ப இந்த மொத்த சேனலோட புரோகிராமிங்கான பொறுப்பு உன்னோடது. எப்பவும் போல எது சேனலுக்கு தேவையோ அத நீ பண்ணுவேன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. ஆல் த பெஸ்ட்” என்றார் மேனன்.
“மார்க்ஸ்” என திவ்யா இழுத்தாள்.
“அவனைப் பத்தி உனக்கு தெரியுமில்ல... அவன் கூலாதான் இருக்கான்!”
“தேங்க்ஸ் சார்” என எழுந்தாள் திவ்யா.
ஏஞ்சலும் அவளது அணியினரும் கான்ஃபரன்ஸ் ரூமில் அமர்ந்திருந்தனர்.
“என்ன சொன்னா அந்த திவ்யா?” எனக் கேட்டார் தனபால்.
“சொல்றதுக்கு என்ன இருக்கு? நீ சொன்ன எதையும் கேட்க முடியாது. நான் தான் ஃபிக்சன் ஹெட். நான் சொல்றதுதான் ஃபைனல்னு மெயில் தெளிவா சொல்லிடுச்சே!”
“நம்ம கொஞ்சம் அவசரப்பட்ட மாதிரி தோணுது” என்றான் குரு.
“அவ யாரு? நமக்கு ஆர்டர் போட அவளுக்கு என்ன அதிகாரமிருக்கு. நமக்கு சரின்னு பட்டதை பண்ண வேண்டியதுதான். நாளைக்கு ஃபிக்ஷன்ல ரேட்டிங் வரலைன்னா நம்மளத்தான கேப்பாங்க... அப்புறம் என்ன?” என்றாள் ஏஞ்சல்.
“அவ எப்படியும் மார்க்ஸ் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவா” என்றார் தனபால்.
“பண்ணட்டும். என்கிட்ட வந்து கேக்குற அளவுக்கெல்லாம் மார்க்ஸுக்கு தைரியம் பத்தாது” என சிரித்தாள் ஏஞ்சல்.
அனைவரும் சிரித்தனர்.
“கிளம்பலாம்… என் லேப்டாப்பை ஷட்டவுன் பண்ணு. இன்னைக்கு ட்ரீட் என்னோடது” என்றாள் ஏஞ்சல்.
அவளது லேப்டாப்பை மூடப் போன குரு முகம் மாறினான்.
“ஏஞ்சல் திவ்யா கிட்ட இருந்து உங்களுக்கு மெயில் வந்திருக்கு” என்றான் குரு.
“எப்ப வந்துச்சு?”
“மூணு மணிக்கு போட்டிருக்காங்க போல”
“என்னன்னு படி...”
மெயிலை படித்தவன் தயக்கமாக ஏஞ்சலைப் பார்த்தான்.
“என்னடா போட்டிருக்கு மெயில்ல?”
“பெரிய மெயில் அது. அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னா… ஒழுங்கா நான் சொல்றத செய்யுங்கன்றாங்க... எல்லா சீரியலோட அடுத்த 2 மாச கதையை நாளைக்கு சாயங்காலம் அவங்களுக்கு பிரசன்ட் பண்ணனுமாம்” என்றான் குரு.
“எனக்கு ஆர்டர் போட அவ யாரு?” எனக் குரலை உயர்த்தினாள் ஏஞ்சல்.
“ஹெச்ஆர்ல இருந்து இன்னொரு மெயிலும் வந்திருக்கு” என்றான் குரு.
அனைவரும் அவனைப் பார்த்தனர்.
“திவ்யாவை நம்ம சேனலோட புரோகிராமிங் ஹெட்டா புரமோட் பண்ணியிருக்காங்க.”
ஏஞ்சல் முகம் மாறினாள். இப்போது திவ்யா சொல்வதை ஏஞ்சல் கேட்டுத்தான் ஆக வேண்டும். சில மணி நேரங்களில் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது.
வாழ்க்கை ஒரு வட்டம். அதில் மேலே இருப்பவன் கீழே வருவதும், கீழே இருப்பவன் மேலே போவதும் சகஜம் என்பது ஒரு பிரபலமான தத்துவம்.
சாதாரண வாழ்க்கையில் அப்படி நடப்பதற்கு வெகு நாட்களாகும். ஆனால், மீடியா உலகில் மட்டும் தான் இதை கண்கூடாக பார்க்க முடியும். பதவி வரும்போது அமைதியாக இருப்பவன் பதவி விட்டு விலகும்போதும் மரியாதையைப் பெறுகிறான்.
ஏஞ்சல் கோபமாக அங்கிருந்து நகர்ந்தாள்.

திவ்யா மார்க்ஸின் அறையில் தனியாக அமர்ந்திருந்தாள். மார்க்ஸின் அறையை காலி செய்து சில மணி நேரங்களில் திவ்யாவுக்கு கொடுத்து விட்டார்கள். ஏஞ்சல் கோபமாக உள்ளே நுழைய முற்பட பெண் ஒருத்தி அவளை வழி மறித்தாள்.
“என்ன வேணும்?”
“நீ யாரு?” என ஏஞ்சல் கோபமாகக் கேட்டாள்.
“நான் மேடம் செகரட்டரி ஜெஸிகா.”
அதை எதிர்பாராத ஏஞ்சல் தடுமாறி “நான் அவங்களைப் பார்க்கணும்” என்றாள்.
“அப்பாயின்மென்ட் இருக்கா” என்றாள் ஜெஸிக்கா.
ஏஞ்சல் கோபத்தை அடக்கியபடி இல்லை என்று தலையாட்டினாள்.
“மேடம் இப்ப பிஸியா இருக்காங்க... நீங்க எதுக்காக அவங்களைப் பாக்கணும்னு மெயில் பண்ணுங்க. நான் நாளைக்கு அப்பாயின்மென்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டு உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றேன்” என்றாள் ஜெஸிக்கா.
பல்லைக் கடித்தபடி ஏஞ்சல் கண்ணாடி கதவு வழியாக பார்த்தாள். திவ்யா சின்ன புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தாள் ஏஞ்சல்.
மேனன் தனது அறையில் கவலையாக அமர்ந்து லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்தார். ஏஞ்சலுக்கும் திவ்யாவுக்கும் நடுவில் நடக்கும் மெயில் யுத்தம் அவரைக் கவலையடையச் செய்தது.
மாபெரும் சாம்ராஜ்ஜியங்கள் வீழ்ந்த கதையை படித்தவர்களுக்கு தெரியும். பெரும்பாலும் அவைகளின் வீழ்ச்சிக்கு வெளியே இருந்து வரும் எதிரிகள் காரணமாக இருப்பதில்லை. உள்ளுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில்தான் அவை அஸ்தமித்திருக்கின்றன என்று!