Published:Updated:

இடியட் பாக்ஸ் - 60: நடிகர் மாயோன் பற்றிய கிண்டலும், நெல்லையப்பனைப் பதம் பார்த்த கற்களும்!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 60: நடிகர் மாயோன் பற்றிய கிண்டலும், நெல்லையப்பனைப் பதம் பார்த்த கற்களும்!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

மார்க்ஸ் கேன்டீனுக்கு அருகில் உள்ள சின்ன அறை ஒன்றில் அமர்ந்திருந்தான். அந்தச் சின்ன அறைக்குள் இடித்துக் கொண்டு நெல்லையப்பன், பாண்டியன் மற்றும் அவனது அணியினர் அனைவரும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரின் முகத்திலும் மார்க்ஸ் மீதான அக்கறையும் கவலையும் தெரிந்தது.

“இப்ப என்ன ஆயிடுச்சுன்னு எல்லாரும் இப்படி முகத்தைத் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கீங்க?”

“இல்லப்பா... பொசுக்குன்னு இப்படி ஒரு முடிவு எடுத்திட்டியே” என ஆதங்கமாகச் சொன்னார் நெல்லையப்பன்.

“பொறக்கும் போதே புரோகிராமிங் ஹெட்டுன்னு போஸ்டிங்கோட பொறந்தமா என்ன?”

“திவ்யாவைக் காப்பாத்துறதுக்கு வேற ஏதாவது பண்ணியிருக்கலாம்” என்றான் பாண்டியன்.

“நான் என்னமோ வேலைய விட்டுப்போன மாதிரி ஃபீல் பண்றீங்க… டிஜிட்டல் டிவிஷனுக்குத்தான மாறியிருக்கேன்.”

அனைவரும் மெளனமாக இருந்தார்கள்.

“டிஜிட்டல்தான் ஃபியூச்சர் தெரியும் இல்ல” என அவர்கள் முகத்தைப் பார்க்காமல் சொன்னான் மார்க்ஸ்.

“எங்க... அதை என் முகத்த பார்த்து சொல்லு பார்ப்போம்!”

மார்க்ஸ் நிமிர்ந்து நெல்லையப்பனை பார்த்தான்.

“டிஜிட்டல் ஃபியூச்சர்தான். ஆனா நம்ம டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்ல என்ன இருக்கு? சேனல்ல வர்ற ஷோவும் படமும்தான் இருக்கு. அதுல நீ என்ன பண்ண போற சொல்லு?” என்றார் நெல்லையப்பன்.

“இப்பதான வந்திருக்கேன். இனிமேதான் என்ன பண்றதுன்னு யோசிக்கணும்” தனது பதில் தனக்கே திருப்தியளிப்பதாக இல்லை என்று மார்க்ஸுக்குப் புரிந்தது.

“அப்ப நாங்க இனி ஏஞ்சலுக்கு வேலை செய்யணுமா?” என கோபமாகக் கேட்டார் நெல்லையப்பன்.

“ஏஞ்சலே, திவ்யாவுக்கு கீழ தான வேலை செய்ய போறா அப்புறமென்ன?”

“மேனன் சார் கிட்ட சொல்லி ரூமாவது கொஞ்சம் பெரிய ரூமா வாங்குப்பா... இந்த சின்ன ரூம்ல உன்னை பாக்குறது ரொம்ப சங்கடமா இருக்கு”

“எந்த ரூம்ல இருந்து வேலை செய்றோம்றது முக்கியமில்ல மாமா... என்ன வேலை செய்றோம்றதுதான் ரொம்ப முக்கியம்!”

“இதெல்லாம் விவரமா பேசு... ஆனா, பாலிட்டிக்ஸ்னு வரும் போது கோட்டையை விட்டிரு...”

மார்க்ஸ் சிரித்தான்.

“கம்பெனிக்கு நல்லவன் தேவை இல்லப்பா... வல்லவன்தான் வேணும்!” எனும்போது கதவு தட்டப்பட அனைவரும் திரும்பி பார்க்க கண்ணாடி கதவு வழியாக வெளியே ஏஞ்சல் நிற்பது அனைவருக்கும் தெரிந்தது.

பாண்டியன் கதவைத் திறந்தான்.

“இங்க என்ன அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க?” என அவர்களைப் பார்த்து அதிகார தோரணையில் ஆரம்பித்தாள் ஏஞ்சல்.

“தகுதியே இல்லாதவங்க எல்லாம் பதவிக்கு வந்துர்றாங்க... தகுதியான நீ இப்படி கஷ்டப்படுறயேன்னு மார்க்ஸ் கிட்ட கேட்டுட்டு இருந்தோம்” என்றார் நெல்லையப்பன்.

ஏஞ்சல் முகம் இருண்டது.

“என்ன திமிரா?”

“ஆமா, மார்க்ஸ் திமிர்!”

“என் கூடதான் இனி குப்பை கொட்டணும் தெரியும் இல்ல?”

“உன் கூட இருந்தா குப்பையைதான் கொட்டணும்னு எங்களுக்குத் தெரியாதா என்ன?” என நெல்லையப்பன் சொல்ல அனைவரும் சிரித்தனர்.

ஏஞ்சல் முகம் சிவந்தாள்.

“மாமா... வாய மூடு… நீங்க கிளம்புங்க முதல்ல... போய் வேலையைப் பாருங்க” என்றான் மார்க்ஸ்.

எல்லோரும் மெளனமாக நகர்ந்தார்கள்.

ஏஞ்சல் மார்க்ஸ் டேபிளின் எதிரில் இருந்த சேரில் அமர்ந்தாள். அவனது அறையை சுற்றிப் பார்த்தாள்.

“என்ன பாக்குற?”

“பாக்குறதுக்கு எதுவுமே இல்லையேன்னு பார்த்தேன்” எனச் சிரித்தாள்.

“ஆமா பாக்குறதுக்கு வேலை மட்டும்தான் இருக்கு... வேற எதுவும் இல்ல” என்றான் மார்க்ஸ்.

“என்ன... உன் ஆளை என்கிட்டயிருந்து காப்பாத்திட்டயேன்னு சந்தோஷப்படுறியா?”

“சே… சே... நீ அவகிட்ட இருந்து தப்பிக்கணுமேன்னு பயப்படுறேன்” என்றான் மார்க்ஸ்.

“என்ன பண்ணிடுவா... தலைய சீவிருவாளா?”

“அதெல்லாம் அவகிட்ட தான் கேக்கணும்... அந்த போஸ்ட்டுக்கு தகுதியான ஆள் அவ... கொஞ்சம் லேட்டா வந்திருக்கா… அவ்வளவுதான்!”

ஏஞ்சல் மார்க்ஸையே தீர்க்கமாக பார்த்தாள்.

“அப்படியென்னடா லவ்வு அவ மேல... உன் பதவியவே தூக்கி எறியற அளவுக்கு?!”

மார்க்ஸ் பதிலேதும் சொல்லாமல் புன்னகைத்தான்.

“யாருக்காகவும் உன் கெத்தை விட்டு குடுக்கவே மாட்டியே... இது புதுசா இருக்கே!”

ஓர் ஆணின் உச்சபட்ச சொத்து என்பது அவனது ஈகோதான். அதையே அவன் ஒரு பெண்ணுக்காக விட்டுக் கொடுக்கிறான் என்றால் அவளுக்காக அவன் எதையும் செய்வான் என்றுதான் அர்த்தம்.

“என்னடா பாக்குற?”

“ஏஞ்சல் நீ ரொம்ப நாளா ஆசைப்பட்ட பதவி உன்னைத் தேடி வந்திருக்கு. அதுல நீ என்ன பண்ணலாம்னு யோசி. உன் வாழ்க்கை வேற மாதிரியாகும்.”

“என்ன அட்வைசா... என்ன பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும். ஓவரா ஆட வேண்டான்னு உன் ஆள்கிட்ட சொல்லி வை. நான் போட்டு பார்த்தா அவ தாங்கமாட்டா!”

“சொல்றேன்” என்றான் மார்க்ஸ்.

“உன்ன இந்த மாதிரி ரூம்ல பாக்க சந்தோஷமாதான் இருக்கு.”

“அப்பாடா இப்பவாவது நீ சந்தோஷப்படுற மாதிரி ஒரு விஷயத்தை நான் பண்ணியிருக்கேனே” எனச் சிரித்தான் மார்க்ஸ்.

“இப்படித்தான் கடைசி காலத்துல ஒரு சின்ன ரூம்ல கஷ்டப்பட்டு செத்து போனாராம் காரல் மார்க்ஸ் தெரியும் இல்ல”

“தெரியும்... அதனாலதான் அவரை இன்னும் உலகம் ஞாபகத்தில வச்சிருக்கு. அவர் காலத்துல பெரிய பெரிய பங்களால வாழ்ந்தவங்க எல்லாம் யாரு என்னன்னு தெரியாம போயிட்டாங்க” என்றான் மார்க்ஸ்.

“இந்த வாய் மட்டும் இல்லன்னா...” என ஏஞ்சல் பல்லைக் கடித்தாள்.

மார்க்ஸ் சிரித்தான்.

“ஏஞ்சல் நாம செய்யுற விஷயம்தான் நம்ம யாருன்றதை முடிவு பண்ணும். என்னை ஜெயிக்கனும்னா என்னை விட பெருசா ஏதாவது நீ பண்ணனும். புரியுதா? நான் போட்ட கோட்டை அழிக்க முடியாது. அதை விட பெருசா நீ ஒரு கோடு போடுறதுதான் என் கோட்டை சின்னதாக்க ஒரே வழி!”

ஏஞ்சல் கிண்டலாகக் கையெடுத்து கும்பிட்டாள்.

மார்க்ஸும் அவளை ஆசிர்வதிப்பது போல ஒரு கையை உயர்த்தி பாவனை செய்தான்.

சின்ன எரிச்சலுடன் ஏஞ்சல் நகர்ந்தாள்.

மார்க்ஸ் புன்னகையுடன் அவள் போவதை பார்த்துக் கொண்டிருந்தான். அவனது போனடித்தது. போனை எடுத்தான்.

“உன்கிட்ட பேசணும்” என்றாள் திவ்யா.

“டின்னருக்கு என்ன கூட்டிட்டு போறியா?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

மறுமுனையில் திவ்யா மௌனமாக இருந்தாள்.

“ப்ளீஸ்” என்றான் மார்க்ஸ்.

“போலாம்... ஈவ்னிங் 6 மணிக்கு என்ன பிக்அப் பண்ணிக்கோ” என போனை வைத்தாள் திவ்யா.

இடியட் பாக்ஸ் - மார்க்ஸ், ஏஞ்சல்
இடியட் பாக்ஸ் - மார்க்ஸ், ஏஞ்சல்

ரெஸ்டாரன்ட் ஒன்றில் திவ்யாவும் மார்க்ஸும் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள்.

“திவ்யா” என மார்க்ஸ் ஏதோ ஆரம்பிக்க திவ்யா கையை உயர்த்தி பேசாதே என்பது போல கையைக் காட்டினாள்.

மார்க்ஸ் பேச வந்ததை பாதியில் நிறுத்திவிட்டு திவ்யாவை பார்த்தான். “நான்” என திவ்யா ஏதோ ஆரம்பிக்க அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

நம் கோபத்துக்கு பதிலாக பெருங்கோபத்தை தரும் பெண்கள்தான் அன்புக்கு பதிலாக அழுகையைத் தருகிறார்கள்.

மார்க்ஸ் மெதுவாக தனது கரத்தை நீட்டி டேபிளின் மேல் இருந்த அவளது கரத்தை அழுத்தமாக பற்றினான்.

திவ்யா அவனை நிமிர்ந்து பார்த்தவள் எழுந்து அவன் அருகில் வந்து அவனை இடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

“இடமே இல்லை... இந்த சோஃபா சின்னதாயிருக்கு” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் சிரித்தான்.

“எனக்கு அழுகை வருது... நீ சிரிக்கிறியா?”

“உனக்கு ஏன் அழுகை வருது?”

“நீதான் என்ன அழ வைக்கிற...” என குழந்தை போல திவ்யா சொல்ல மார்க்ஸ் தனது கரத்தை அவளது தோளை சுற்றி போட்டவன் அவளை தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டான்.

“ஏன் இப்படி பண்ண?”

“ஏஞ்சலோட மெயில் பார்த்தேன். உன்னோட தன்மானத்த காப்பாத்த இதுதான் வழின்னு தோணிச்சு. பண்ணிட்டேன்” என்றான் மார்க்ஸ்.

“அவ்வளவு பெரிய பதவியை அசால்ட்டா தூக்கி போட்டா என்ன அர்த்தம்?”

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“உன் நெஞ்ச தொட்டு சொல்லு அந்தப் பதவி முக்கியம்னு உனக்குத் தோணல?”

மார்க்ஸ் பக்கவாட்டில் திரும்பி திவ்யாவை பார்த்தவன், 'இல்லை' எனத் தலையாட்டினான்.

“அதைவிட நீதான் ரொம்ப முக்கியம்னு தோணிச்சு” என அவன் சொன்னதும் திவ்யா அவனது தோளில் தனது முகத்தை புதைத்துக் கொண்டாள்.

வாழ்க்கை அவ்வப்போது நம்மிடம் உனக்கு “எது முக்கியம்” எனக் கேள்வி கேட்கும். அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல தவறுபவர்கள் அல்லது பதிலை தள்ளிப்போடுபவர்கள் அந்த முக்கியமான ஒன்றை இழந்து விடுகிறார்கள்.

“மார்க்ஸ்”

“சொல்லு திவ்யா”

“பயமாயிருக்கு...”

“என்ன பயம்?”

“வாழ்க்கைல முதல் தடவையா நீ இல்லாம வாழவே முடியாதுன்னு தோணுது” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

“அப்ப விடாத என்னை... டைட்டா பிடிச்சுக்கோ” என்றான் மார்க்ஸ்.

திவ்யா அவனை இன்னும் இறுக்கமாக அணைத்தபடி கேட்டாள்.

“என்ன சொல்றா உன் எக்ஸ்?”

“யாரு?”

திவ்யா முறைத்தாள்.

“ஏஞ்சலா… அந்த சின்ன ரூம்ல என்ன பாக்குறதுக்கு சந்தோஷமா இருக்குன்னு சொன்னா!”

“அப்படியா சொன்னா?”

“விடு திவ்யா... பாவம் அவ!”

“பாவமா... உன்னைப் பத்தி ஏதாவது தப்பா சொன்னா அவள கொன்னுடுவேன்னு சொல்லு” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் சிரித்தான்.

வாழ்க்கை எப்போதும் வியாபாரம்தான். ஏதாவது ஒன்றை கொடுத்துதான் இன்னொன்றை நாம் வாங்கியாக வேண்டும். எதை விற்று எதை வாங்குகிறோம் என்பதில் இருக்கிறது சந்தோஷத்தின் சூட்சுமம்.

இடியட் பாக்ஸ் | திவ்யா
இடியட் பாக்ஸ் | திவ்யா

திவ்யா தனது அறையில் அமர்ந்திருக்க அவளுக்கு எதிரே ஏஞ்சல் நின்று கொண்டிருந்தாள்.

“உட்காரு” என்றாள் திவ்யா.

ஏஞ்சல் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்தாள். அவள் அமர்ந்திருந்த தோரணை வேண்டுமென்றே திவ்யாவை எரிச்சலூட்ட செய்தது போலிருந்தது.

“சாரி” என்றாள் திவ்யா.

“எதுக்கு?”

“நேத்து உன்னைப் பாக்க முடியாது... அப்பாய்ன்மென்ட் வாங்கிட்டு வான்னு சொன்னதுக்கு”

“இப்பவும் அப்பாய்ன்மென்ட் வாங்கிட்டுதான் பாக்க வந்திருக்கேன்.”

“இனி தேவை இல்லைன்னு சொல்றேன்” என்றாள் திவ்யா.

“என்ன விஷயம் அதை சொல்லுங்க...”

“உனக்கும் எனக்கும் நடுவுல மார்க்ஸ் தவிர வேறெந்த பிரச்னையும் கிடையாதுன்னு எனக்கு தெரியும். அது உனக்கும் தெரியும்!”

ஏஞ்சல் திவ்யாவைப் பார்த்தாள்.

“நானும் மார்க்ஸும் ஆப்போசிட் டீம்ல இருந்தப்ப நீ தான் என்னோட கிரேட் சப்போர்ட். இப்பவும் நான் அந்த சப்போர்ட்டை உன் கிட்ட இருந்து எதிர்பாக்குறேன். ஒரு புரோகிராமிங் ஹெட்டா நானும், ஃபிக்ஷன் ஹெட்டா நீயும் சக்ஸஸ்ஃபுல்லா இருக்கணும்னா அதுக்கு ஒருத்தருக்கொருத்தர் உதவி தேவை!”

“என்ன பார்த்து பயந்திட்டியா?” எனக் கேட்டு புன்னகைத்தாள் ஏஞ்சல்.

அந்த ஒரு வார்த்தை திவ்யா பேசிய அத்தனை சமாதானங்களுக்கும் குறுக்கே சிவப்பு பேனாவால் கோடு போட்டது.

“நான் சொல்றது உனக்கு புரியலையா?” எனக் கேட்டாள் திவ்யா.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லையே” என்றாள் ஏஞ்சல்.

திவ்யா ஆத்திரப்பட்டு எதையும் பேசிவிடக்கூடாது எனக் கோபத்தை அடக்கியபடி ஏஞ்சலை பார்த்தாள்.

ஏஞ்சல் அந்த மெளனத்தை ரசித்தாள். தனது புன்னகையால் புகைந்து கொண்டிருக்கும் திவ்யாவின் மனதை விசிறினாள்.

"சரி... நீ கிளம்பு” என்றாள் திவ்யா.

“நீயும் மார்க்ஸும் பெர்சனலா என்ன வேணா பண்ணிக்குங்க.. அத பத்தியெல்லாம் எனக்கு கவலையில்லை... ஆனா உங்க லவ்வை வேலையில காட்டுனா அத பார்த்துகிட்டு போறதுக்கு நான் ஒண்ணும் ஏமாளி கிடையாது” என்றாள் ஏஞ்சல்.

கிளம்பு என சொல்வதை போல திவ்யா எழுந்தாள். ஏஞ்சல் அதை அலட்சியம் செய்து இன்னும் பெரிதாக புன்னகைத்தபடி அமர்ந்திருந்தாள்.

எதிராளியின் மிகப் பெரிய தந்திரம் நமக்குள் இருக்கும் கோபமெனும் மிருகத்தை தட்டி எழுப்புவதுதான். ஒரு வார்த்தையில் அதை தட்டி எழுப்பி விட்டால் போதும். வேறெதுவும் செய்யத் தேவையில்லை. நமக்குள் இருக்கும் மிருகமே நம்மை கொன்று தின்று விடும்.

ஏஞ்சல் எழுந்து திவ்யாவின் எதிரே நின்றாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர். ஏஞ்சலின் மூச்சு காற்றுபடும் தொலைவில் திவ்யாவின் முகம் அருகில் இருந்தது. திவ்யா தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

பற்ற வைத்தது யாரென்பது பெரும்பாலும் எவரது கவனத்துக்கும் வராது. பற்றி எரிந்ததுதான் தண்டணைக்குள்ளாகும்.

“ஈஸியா எல்லாம் சாரி சொல்லிட்டு என்கிட்ட இருந்து தப்பிச்சுக்க முடியாது… போட்டுப் பார்க்கலாம் நீயா நானான்னு!”

பதில் ஏதும் சொல்லாமல் தலையாட்டினாள் திவ்யா.

ஏஞ்சல் அங்கிருந்து நகர்ந்து சென்றாள். திவ்யாவுக்கு உடம்பெல்லாம் ஆடியது. கோபத்தை எதிராளியின் மீது வீசுவதை விட தனக்குள் புதைத்துக் கொள்வது மிகக்கடினம் என தோன்றியது அவளுக்கு.

மேனன் காரை பீச் ஓரமாக கொண்டு வந்து நிறுத்தினார். காரை திறந்து கொண்டு மேனனும் தாட்சாவும் இறங்கினார்கள்.

“என்ன மேனன் திடீர்னு பீச்சுக்கு?”

“காற்று வாங்கப் போனேன்... ஒரு கவிதை வாங்கி வந்தேன்” என மலையாளம் கலந்த குரலில் மேனன் பாட தாட்சா சிரித்தாள்.

இருவரும் மணலில் இறங்கி கடலை நோக்கி நடந்தார்கள்.

“நான் கேட்ட கேள்விக்கு பாட்டு பாடி எஸ்கேப் ஆகாம பதில் சொல்லுங்க மேனன்” என்றாள் தாட்சா.

“பீச்சுக்கும் காதலுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்குன்னு எனக்கு எப்பவுமே தோணும். அது உண்மையான்னு பாக்கலாம்னுதான்” என மேனன் தயக்கமாகச் சொல்லி முடித்தார்.

தாட்சா சிரித்தாள். இருவரும் கடலை ஒட்டிய மணல்பரப்பில் அமர்ந்தார்கள்.

“அண்ணா அண்ணா அக்காவுக்கு பூ வாங்கி குடுன்னா” என்றபடி பூக்கூடையுடன் வந்த சிறுமி ஒருத்தி மேனனிடம் கெஞ்ச மேனன் என்ன செய்வதென தெரியாமல் திரும்பி தாட்சாவை பார்த்தார்.

தாட்சா கடலை பார்ப்பது போல திரும்பிக்கொள்ள வாங்கலாமா வேண்டாமா என மேனனுக்கு குழப்பமாக இருந்தது.

“அண்ணா மல்லின்னா வாங்கிக்கோன்னா” என சிறுமி மீண்டும் கெஞ்ச மேனன் பாக்கெட்டிலிருந்து 100 ரூபாய் தாளை எடுத்து நீட்டினார். சிறுமி பூவை கையால் அளக்கப்போக அவர் வேண்டாம் நீ வச்சுக்கோ என சைகை செய்தார். சிறுமி புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

மேனன் திரும்பி தாட்சாவை பார்த்தவர்

“ஐஸ்கிரீம் ஏதாவது வாங்கிட்டு வரவா?” எனக் கேட்டார் மேனன்.

“ஏன் பூ வாங்கலையா?”

“இல்ல வாங்குனா நீங்க வைப்பீங்களான்னு?”

“ஐஸ்கிரீம் கேட்ட மாதிரி அதை கேட்டிருக்கலாமே”

“இல்ல பூ... ரொம்ப சென்ட்டிமென்ட்டான விஷயம் அதான்” என மேனன் தயங்கமாக தாட்சாவை பார்த்தார்.

“மிஸ்டர் மேனன் ஆபிஸ்ல நீங்க ஜென்டில்மேனா இருங்க... வேணாம்னு சொல்லலை... ஆனா, காதலிக்கிறப்பவும் அப்படியே இருக்கணும்னு அவசியம் இல்ல... பரபரப்பான சின்ன பையன் எப்படி லவ் பண்ணுவானோ அப்படி என்ன லவ் பண்ணுங்க... தப்பில்ல.”

மேனன் முகம் புன்னகைக்கு மாறியது.

“மேனன் எனக்கு இதுதான் முதல் காதல். நானும் நிறைய காதல் சினிமாக்கள் எல்லாம் பார்த்திருக்கேன். எனக்கும் அந்த மாதிரி எல்லாம் லவ் பண்ணனும்னு ஆசை உண்டு. என்ன கொஞ்சம் லேட்டாயிடுச்சு... அவ்வளவுதான்!”

மேனன் சிரித்தார்.

“மேனன் சின்ன பசங்க மாதிரி கொஞ்ச நாள் நம்ம காதலிக்கலாம் அது ஒண்ணும் பாவம் எல்லாம் இல்ல... ஆரம்பத்துலயே ‘பவர் பாண்டி’ படத்துல வர்ற ராஜ்கிரண் ரேவதி மாதிரி ஃபீல் பண்ணாம... கொஞ்சம் தனுஷ் மடோனா மாதிரி யூத்தா ஃபீல் பண்ணுங்க. வயசு உடம்புக்குத்தான் மனசுக்கில்ல” என்றாள் தாட்சா.

மேனன் எழுந்து நின்றார்.

“என்னாச்சு” என புரியாமல் கேட்டாள் தாட்சா.

“அந்த பூக்கார பாப்பாவை பிடிச்சு பூ வாங்கிட்டு வந்துர்றேன்” என்றார் மேனன்.

சிரித்தபடி, “விடுங்க... அடுத்த தடவை பார்த்துக்கலாம்” என்றாள் தாட்சா.

“ம்ஹூம்... நம்மளோட முதல் பீச் மெமரி பூ இல்லாம இருக்கக் கூடாது” என அந்தச் சிறுமி போன திசையில் மேனன் ஓட தாட்சா அடக்க முடியாமல் சிரித்தபடி அவர் ஓடுவதை ரசித்து பார்த்தபடி இருந்தாள்.

திவ்யா வேலை முடிந்து கிளம்ப போகும் சமயம் நெல்லையப்பன் அவசரமாகக் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தார்.

“ஒரு சின்ன பிரச்னை...”

“என்னாச்சு?” எனப் புரியாமல் கேட்டாள் திவ்யா.

“நம்ம ஷோல நடிகர் மாயோனை கிண்டலடிச்சு ப்ரோமோ வந்திருக்குபோல!”

“அப்படியா நான் கவனிக்கலையே...” என்றாள் திவ்யா.

“நீங்கதான் ப்ரோமோவை அப்ரூவ் பண்ணியிருக்கீங்க” என்றார் நெல்லையப்பன்.

“அப்படியா என்ன ஷோ?” எனக் கேட்டாள் திவ்யா.

“வசந்தம் சீரியல்”

“அந்த சீரியல்ல ஹீரோ பத்தி தப்பா சொல்ல என்ன இருக்கு?”

“இல்ல மாயோன் மாதிரி ஒரு மூஞ்சே இன்னைக்கு இவ்வளவு பெரிய ஆளாயிருக்கு... நீயெல்லாம் ஆக மாட்டியான்னு வருது போல!”

திவ்யா அவசரமாக தனது மொபைலில் அந்த ப்ரோமோவை தேடி எடுத்து மீண்டும் ப்ளே செய்தாள். ப்ரோமோவை பார்த்த நெல்லையப்பன் முகம் மாறினார்.

“ரொம்ப தப்பாதான் இருக்கு” என்றார் நெல்லையப்பன்.

“நான் மாயோன்றது கேரக்டர்னு நினைச்சேன். நடிகர்ன்றது தெரியாது” எனப் பதற்றமாகச் சொன்னாள் திவ்யா.

நெல்லையப்பனுக்கு அவளது பிரச்னை புரிந்தது. மொழியும் இங்கிருக்கும் பிரச்னைகளும் வெளி மாநிலத்திலிருந்து வந்திருக்கும் அவளுக்குப் புரிந்திருக்க நியாயமில்லை.

இதை அந்த நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்ட பொறுப்பாளன் கவனித்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஃபிக்ஷன் ஹெட் ஏஞ்சல் கவனித்திருக்க வேண்டும். திவ்யாவுக்கு இதிலிருக்கும் பிரச்னையை சொல்லியிருக்க வேண்டும். ஏஞ்சல் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு திவ்யாவை பிரச்னையில் மாட்டி விட்டுவிட்டாள் என்பது அவருக்கு புரிந்தது. கேட்டால் அப்ரூவல் திவ்யாதான் கொடுத்தாள் என வரும்.

“இப்ப என்ன பிரச்னை நெல்லையப்பன்?” எனக் கேட்டாள் திவ்யா.

“சேனலுக்கு கீழ அவரோட ரசிகர் மன்றத்துல இருந்து 1000 பேருக்கு மேல வந்திருக்காங்க... நம்ம மன்னிப்பு கேட்கணுமாம்”

“மார்க்ஸ் எங்க?”

“பெசன்ட் நகர் வரைக்கும் போயிருக்கான். அவனுக்கு விஷயம் சொல்லியாச்சு... வந்துகிட்டு இருக்காங்க.”

“வாங்க நெல்லையப்பன்... போயி அவங்க ஃபேன்ஸ் கிட்ட பேசலாம்!”

“வேணாம்... மார்க்ஸ் வந்திரட்டும்”

“அதுக்குள்ள இன்னும் கூட்டம் அதிகமானா பிரச்னைதான் ஜாஸ்தியாகும் முதல்ல போய் அவங்களை சமாதானப்படுத்தலாம். ப்ரோமோல வந்தது ஷோல வராதுன்னு அவங்க கிட்ட சொல்லலாம்” என்றாள் திவ்யா.

நெல்லையப்பன் தயங்கினார்.

“நீங்க வர்றீங்களா... இல்ல நான் போகட்டுமா?” என திவ்யா கேட்டாள்.

“வரேன் போலாம்...”

அவர்கள் இருவரும் தல்வார் டவர்ஸின் தரைத்தளத்திற்க்கு லிஃப்ட்டில் வந்து இறங்கினார்கள். செக்யூரிட்டிகள் இருவர் கண்ணாடி கதவை மூடி வைத்திருந்தனர். ஒருவன் வெளிப்புறம் நின்று கூட்டத்தினரிடம் பேசிக் கொண்டு இருந்தான்.

திவ்யாவையும் நெல்லையப்பனையும் பார்த்த அந்த செக்யூரிட்டி சேனல்காரங்க வந்தாச்சு என்று அவர்களை காட்டி கூட்டத்தினரிடம் ஏதோ சொல்ல கூட்டம் அவர்களை பார்த்து கோபமாகக் கத்தியது.

அவர்களின் ஆக்ரோஷம் ஏதோ தவறாக நடக்கப்போகிறது என அவளுக்குப் உணர்த்தியது.

“வாங்க நெல்லையப்பன் மேல போகலாம்” என அவள் சொல்லி வாய் மூடும் முன் கூட்டத்திலிருந்து யாரோ ஒருவன் வீசிய கல் ஒன்று பட்டு ரிசப்ஷன் ஏரியாவில் இருந்த கண்ணாடி நொறுங்கியது.

அடுத்தடுத்து ஐந்தாறு கற்கள் பறந்து வந்தன. மூன்று பக்கமும் இருந்த கண்ணாடிகள் நொறுங்க... அதில் கல் ஒன்று நெல்லையப்பன் நெற்றியைப் பதம் பார்க்க அவர் அலறியபடி நெற்றியை பற்றிக் கொண்டார். கையை மீறி ரத்தம் அவரது முகமெல்லாம் வழிந்தது. திவ்யாவுக்கு கை கால் எல்லாம் நடுங்கியது.

- Stay Tuned...