தல்வார் டவரின் முன்னால் ஆட்டோவில் வந்து இறங்கினார் சித்தார்த் மேனன். மாயோனின் ரசிகர்கள் பெரும் திரளாக நின்று கொண்டிருந்தார்கள். பேருக்கு இரண்டு போலிஸ்காரர்கள் கூட்டத்தினர் பில்டிங்கின் உள்ளே நுழையாமலிருக்க அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
“இன்ஸ்பெக்டர் சேனல்காரங்க கிட்ட பேசிக்கிட்டு இருக்காரு. அவர் வர்ற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க” என கான்ஸ்டபிள் பேசிக் கொண்டிருந்தது ஏறக்குறைய கெஞ்சுவது போலிருந்தது.
“இன்னும் ஒன் ஹவர்ல மொத்த ஆபிஸும் கீழ வந்து எங்க எல்லார் கால்லயும் விழுந்து மன்னிப்பு கேட்கணும். நாங்க உள்ள பூந்தோம் அப்புறம் ஆபிசே இருக்காது... பார்த்துக்கோங்க” என அந்த கூட்டத்தின் தலைவன் போல இருந்த ஒருவன் சத்தமாக மிரட்டிக் கொண்டிருந்தான்.
மேனன் எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தார். உடைந்து கிடந்த கண்ணாடி துண்டுகளை கவனமாகத் தாண்டி லிஃப்டில் ஏறினார். அவர் பத்தாவது தளத்தில் நுழைந்தபோது மொத்த ஆபிஸும் பதற்றமாக அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தது.
நெல்லையப்பன் தலையில் கட்டுடன் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் பதறிப் போனார் மேனன்.
“அவரை ஆஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகாம என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்றார் மேனன்.
“இல்ல சார் ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணி தையல் போட்டாச்சு... ஒண்ணும் பிரச்னை இல்ல சார். கீழ கிரவுட் குறைஞ்சதும் ஆஸ்பிட்டல் அழைச்சிட்டு போயிரலாம் சார்” என்றான் பாண்டியன்.
“யார் ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணது?”
“ஷெட்யூலிங் டிப்பார்ட்மென்ட் மனோகரி சார்... இங்க வர்றதுக்கு முன்னால அவங்க அப்பல்லோல நர்ஸாதான் இருந்தாங்க!”
“திவ்யா, மார்க்ஸ்லாம் எங்க?”
“கான்ஃபரன்ஸ் ரூம்ல இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க.”
மேனன் கான்ஃபரன்ஸ் அறைக்குள் நுழைந்தார். இன்ஸ்பெக்டர் ஒருவரும் அவர் அருகே கான்ஸ்டபிளும் அமர்ந்திருக்க மார்க்ஸ் அவர்களிடம் கோபமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அவன் அருகில் திவ்யா அமர்ந்திருந்தாள்.
“கோபப்பட்டு பிரயோஜனம் இல்ல சார். அவங்க சொல்ற மாதிரி மன்னிப்பு கேட்டு பிரச்னைய முடிக்கப் பாருங்க... இன்னும் கிரவுட் சேர்ந்தா பிரச்னை கன்ட்ரோல் மீறி போயிடும். உங்க சேனலோட இமேஜ்தான் டேமேஜ் ஆகும்” என இன்ஸ்பெக்டர் அவர்களை எச்சரித்தபடியிருந்தார்.
மேனன் உள்ளே நுழைந்ததும் மார்க்ஸும், திவ்யாவும் எழுந்து நிற்க, வந்திருப்பது அவர்களை விட பெரிய பொறுப்பிலிருப்பவர் என்பது இன்ஸ்பெக்டருக்கு புரிந்தது.
“என்னாச்சு மார்க்ஸ்?” எனக் கேட்டார் மேனன்.
“கூட்டத்தை கன்ட்ரோல் பண்ண சொன்னா நம்மளை மன்னிப்பு கேட்கச் சொல்லிட்டு இருக்காங்க சார்” என்றான் மார்க்ஸ்.
“சார்... நாங்க பாம்பே ஆபிஸுக்கு ரிப்போர்ட் பண்ணிட்டுதான் எந்த முடிவும் எடுக்க முடியும். அரை மணி நேரம் டைம் கொடுங்க சார்” என்றார் மேனன்.
“சீக்கிரம் சார். பெருசா எதுவும் நடந்த பிறகு வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லல்ல” என்றார் இன்ஸ்பெக்டர்.
“நிச்சயமா சார்” என மேனன் கண்ணை காட்ட மார்க்ஸும், திவ்யாவும் வெளியே வந்தனர்.
இரவு ஷிஃப்ட் வேலை செய்பவர்களும், பகல் ஷிஃப்ட் முடிந்து வெளியே போக முடியாத ஊழியர்களுமாய் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பதற்றமாக ஹாலில் நின்று கொண்டிருந்தனர்.
“மார்க்ஸ், அந்த மாயோனை கான்டாக்ட் பண்ண முடியுமா?” எனக் கேட்டார் மேனன்.
“அவரோட மேனேஜர் நம்பர் இருக்கு சார்.”
“அவருக்கு ஒரு போன் போடு!”
“நிறைய தடவை ட்ரை பண்ணிட்டேன் சார். அந்தாளு போனை எடுக்கல… அவரோட செட்அப்தான் சார் இது. அவர்தான் ரசிகர் மன்றத்துக்கு ஆளுங்களைத் தூண்டிவிட்டு இந்தக் கூட்டத்தை அனுப்பியிருக்காரு. இன்ஸ்பெக்டருக்கும் பேசியிருப்பாருன்னு நினைக்கிறேன். அதனாலதான் இவங்களும் நம்மளை சமாதானமா போகச் சொல்றாங்க” என்றான் மார்க்ஸ்.
சற்று நேரம் யோசித்த மேனன், ”கீழ அவங்க பண்ற கலாட்டாவை எல்லாம் ஷூட் பண்ணனுமே” என்றார்.
“சார்... அவங்க பண்ண மொத்தமும் ஷூட் பண்ணியிருக்கோம் சார். வீடியோ எடுக்குறது யாருன்னு தெரியாம அவங்க வெட்டுவோம் குத்துவோன்னு இன்டர்வியூ எல்லாம் குடுத்திருக்காங்க சார். நல்ல குவாலிட்டி ஃபுட்டேஜ் இருக்கு சார்” என்றான் கேமராமேன் ஜாக்.

“அந்த ஃபுட்டேஜை எல்லா நியூஸ் சேனலுக்கும் அனுப்பிவிடுங்க... இன்னும் பத்து நிமிஷத்தில அது எல்லா சேனல்லயும் ஏர் ஆகணும்” என்றார் மேனன்.
“யெஸ் சார்” என ஆட்கள் சிதறி ஓடினார்கள். மார்க்ஸ் போனை எடுத்து நியூஸ் சேனல் நண்பர்களுடன் பேசத் தொடங்கினான்.
“நெல்லையப்பன் ஓகே வா...” என ஆதரவாக அவர் தோளில் கை வைத்தார் மேனன்.
“ஒரு எட்டு மேல போயி, எங்கப்பா நல்லாயிருக்காரான்னு பார்த்துட்டு வந்துட்டேன் சார்” எனச் சிரித்தார் நெல்லையப்பன்.
“உங்க மேல கை வெச்சதுக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும். இந்த விஷயத்தை நான் ஈஸியா விட மாட்டேன்” என இறுகிப் போன முகத்துடன் சொன்னார் மேனன். மேனனின் இந்த முகத்தை இதுவரை யாரும் பார்த்ததில்லை.
தலைவன் என்பவன் தொண்டர்களின் முதுகிற்குப் பின் ஒளிபவன் அல்ல. அவர்களுக்கு அரணாய் முன்னால் நிற்பவன். தனது கூட்டத்திற்கு ஒரு பிரச்னை வரும்போது ஓடி ஒளியாமல் வெற்றியோ தோல்வியோ அவர்களுடன் நின்று களமாடுபவன்.
“மாயோன் ரசிகர்கள் வெறியாட்டம் - தாக்கப்பட்ட தனியார் சேனல்’’, ‘’ஆபத்தான நிலையில் சேனல் ஊழியர் - திரையில் சாத்வீகம் பேசும் நடிகரின் நிஜ முகம் இது தானா’’, ‘’வெறியாட்டத்தை வேடிக்கை பார்க்கும் காவல்துறை” என அடுத்த அரை மணி நேரத்தில் நியூஸ் சேனல்கள் பரபரப்பாக செய்திகளை வாசிக்க இன்ஸ்பெக்டர் அவசர அவசரமாக ஓடி வந்தார்.
“என்ன சார்… என்கிட்ட சமாதானம் பேசுற மாதிரி பேசிக்கிட்டே வெளிய நியூஸ் குடுத்திட்டீங்களா?” எனக் கோபமாகக் கேட்டார்
“நீங்க என்ன சர்ச் ஃபாதரா சமாதானம் பேசுறதுக்கு. இன்ஸ்பெக்டர் சார் நீங்க… உங்க கடமைய செய்யுங்க” என்றார் மேனன்.
“என்னைப் பத்தி உனக்கு தெரியாது” என்றார் இன்ஸ்பெக்டர்.
“என்ன பண்ணுவ... அடிப்பியா... அடி பார்ப்போம்” என மேனன் முன்னால் நகர மொத்த அலுவலகமும் கோபக்கார மேனனை பார்த்து திகைத்து போனது.
“கூட்டம் உள்ள புகுந்தா என்னாகும் தெரியும் இல்ல?”
“உன் வேலை போகும்” என்றார் மேனன். இன்ஸ்பெக்டர் முகம் இருண்டது.
“என் ஆபிஸ் லீகல் டீம் கமிஷனர் ஆபிஸ்ல உட்கார்ந்துட்டு இருக்காங்க. பாம்பேல ஹெட் ஆபிஸ்ல இருந்து ஹோம் செகரேட்டரிக்கு பேச சொல்லியிருக்கு. 5 நிமிஷத்துல கீழயிருக்கிற கூட்டம் கலையலைன்னா அந்த கம்ப்ளெயின்ட்ல முதல் பேர் உங்களோடதாதான் இருக்கும்” என்றார் மேனன்.
“இல்ல சார்... நான் ஏன் சொல்றன்னா” எனச் சட்டென இறங்கி வந்தார் இன்ஸ்பெக்டர்.
“ஜனநாயகத்தை தூக்கி பிடிக்கிறதுல நீங்க ஒரு தூண்னா... நாங்க இன்னொரு தூண். மீடியாவுக்கு சுதந்திரம் இல்லாத ஒரு நாடு நாடே இல்ல!”
“நான் பார்த்துக்கிறேன் சார்..."
“அவங்களை சமாதானம் பண்ணி அனுப்புறது இல்ல சார். பிரச்னை பண்ணவங்களை அரெஸ்ட் பண்ணனும்” என்றார் மேனன்.
“நான் பார்த்துகிறேங்க” என அவசரமாக ஓடினார் இன்ஸ்பெக்டர்.
மார்க்ஸின் போன் அடித்தது.
“சார் மாயோனோட மேனேஜர் சமரஸ்தான் பேசுறாரு...”
மேனன் போனை வாங்கினார்.
“ஹலோ... என்னங்க ஹீரோவைப் பத்தி தப்பு தப்பால்லாம் நியூஸ் குடுக்குறீங்க… வாங்குனது பத்தாதா?”
சமரஸின் குரலில் இருந்த மிரட்டல் தொனி மேனனைக் கோபமூட்டியது.
“நீ யாரு?”
“என்ன யாருன்னு கேட்குற?” எனக் குரலை உயர்த்தினான் சமரஸ்.
“அடுத்த நியூஸ் அடிபட்டவரோட ஃபேமிலி இன்டர்வியூவோட வருது. நீ டிவியில பார்த்தது கொஞ்சம்தான். பார்க்காத ஃபுட்டேஜ் எல்லாம் இன்னும் நிறைய இருக்கு அதையும் டிவியில போட்டிரலாம்னுதான் இருக்கேன்” என்றார் மேனன்.
“இங்க பாருங்க... சமாதனமா போயிரலாம். நீங்க சேனல்ல ஹீரோவைப் பத்தி போட்ட நிகழ்ச்சிக்கு மன்னிப்பு மட்டும் கேட்டிருங்க... இந்தப் பிரச்னைய இதோட விட்டுடுறேன்” என்றான் சமரஸ்.
“உன் ஹீரோதான் அவரோட ரசிகர்கள் பண்ண காரியத்துக்காக எங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும். அவர் மன்னிப்பு கேட்குற நியூஸ் அரை மணி நேரத்துல வரலைன்னா புது ஃபுட்டேஜோட எங்க நியூஸ் வரும்” என போனை கட் செய்தார் மேனன்.
மீண்டும் போனடித்தது.
“சார் சமரஸ்தான்...”
“போன எடுக்காத” என்றார் மேனன்.
“யெஸ் சார்” என மார்க்ஸ் உற்சாகமானான்.
“மேனன் சார்” என மெதுவாக அழைத்தார் நெல்லையப்பன்.
“சொல்லுங்க நெல்லையப்பன்...”
“மாணிக்கமா ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருந்த உங்களுக்குள்ள இப்படி ஒரு பாட்ஷா இருக்கிறது தெரியாம போச்சே” என்றார் நெல்லையப்பன். அனைவரும் சிரித்தனர். மேனனும் புன்னகைத்தார்.
“இன்னைக்கு இந்தப் பிரச்னையில நாம இறங்கி போயிட்டா நாளைக்கு இங்க இருக்கிற யாருக்கு வேணா என்ன வேணா நடக்கலாம். ஒரு கல்லுவிட்டா நாம நினைச்சதை சாதிக்க முடியும்ற நம்பிக்கையை நாம அவங்களுக்கு ஒரு போதும் குடுக்கக்கூடாது. அதே மாதிரி என் ஆபிஸ்ல இருக்கிற ஒருத்தன் மேல கைய வச்சா என்ன ஆகும்னு அவங்களுக்குத் தெரியணுமில்ல!”
“நீங்க கோபப்படாதிங்க சார்” என்றாள் திவ்யா.
“மத்தவங்க நம்மளை கோபப்படுத்துறதுக்கும், நாம கோபப்படணும்னு முடிவு பண்ணி கோபப்படுறதுக்கும் வித்தியாசம் இருக்கு திவ்யா” எனச் சிரித்தார் மேனன்.
கோபம் என்கிற நெருப்புக்குள் நாம் குதிப்பதற்கும் அதை பந்தமாக்கி நாம் விரும்பியபடி உபயோகிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தான் மார்க்ஸ்.
“தனது ரசிகர்களின் செயலுக்காக வருத்தம் தெரிவித்தார் நடிகர் மாயோன்.’’
‘’வன்முறையில் ஈடுபட்ட தனது ரசிகர்களை மன்றத்திலிருந்து நீக்க முடிவு.’’
‘’கருத்து சுதந்திரம் ஜனநாயகத்தின் கண் போன்றது என்பதில் தனக்கு மாற்று எண்ணம் ஏதுமில்லை” என செய்தி சேனல்களில் செய்தி ஓடிக் கொண்டிருக்கும் போது மீண்டும் மார்க்ஸின் போனடித்தது.
போனை எடுத்தார் மேனன்.
“என்ன சார் இப்ப சந்தோஷமா? எங்களை குனிய வச்சிட்டீங்க...” என்றார் சமரஸ்.
“உங்களை நிமிர வச்சிருக்கோம் சமரஸ்… தப்பு செய்றப்பதான் ஒருத்தன் தலை குனியுறான். அதை உணர்ந்து மன்னிப்பு கேட்குறப்ப அவன் நிஜமாவே தலை நிமிர்றான்” என்றார் மேனன்.
“ஹீரோ உங்கள நேர்ல பார்க்கணும்னு ஆசைப்படுறாரு...”
“பார்க்கலாமே” என்றார் மேனன்.
“சாரோட ஃபார்ம் ஹவுஸ் படப்பையில் இருக்கு!”
“நான் அவரைப் பார்க்கணுன்னாதான் படப்பை வரணும். அவர் எங்களை பார்க்கணும்னா அவர்தான் எங்க ஆபிஸுக்கு வரணும்” என்றார் மேனன்.
“இதெல்லாம் ஓவரா இருக்கு சார்” என எரிச்சலாக சொன்னான் சமரஸ்.
“அவர் ஆபிஸ் வந்து அடிபட்டவரை பார்த்து ஆறுதல் சொன்னா அவரோட இமேஜ் இன்னும் கூடுன்றது என் அபிப்ராயம். அப்புறம் உங்க இஷ்டம்.”
“ஒரு நிமிஷம் நான் அவர்கிட்ட பேசிட்டு சொல்றேன்” என போனை கட் செய்தான் சமரஸ்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மாயோன் ஆபிஸ் வருகிறார் என்கிற செய்தி வந்தது. அனைவரும் ஓவென துள்ளி குதித்தார்கள். மேனன் அமைதியாய் புன்னகைத்தார்.
மாயோன் தல்வார் டவருக்கு வந்த போது நள்ளிரவை தாண்டியிருந்தது. நியூஸ் சேனல் நிருபர்களும் கேமராமேன்களுமாக தல்வார் டவர் அந்த நேரத்திலும் நிரம்பி வழிந்தது. மாயோன் உடைந்து கிடந்த கண்ணாடிகளை பார்த்தவர் சேதங்களை தானே தனது சொந்த செலவில் சரி செய்வதாக அறிவித்தார். நெல்லையப்பனைச் சந்தித்தவர் அவரது மருத்துவ செலவுக்கு 2 லட்சம் ரூபாய்க்கான செக்கை வழங்கினார். இது மொத்தமும் இன்னும் சில நிமிடங்களில் அவர் குறித்த நேர்மறை செய்திகளாக மாறும் என்பதை அவர் அறிந்து வைத்திருந்தார்.
மேனன் பூங்கொத்து கொடுத்து மாயோனை கான்ஃபரன்ஸ் அறைக்கு அழைத்து வந்தார். திவ்யா, மேனன், மார்க்ஸ் மூவரும் மாயோனுக்கு எதிரில் அமர்ந்தனர். சமரஸ் அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்தான்.
"நீங்க ஜெயிச்சுட்டீங்க சந்தோஷம்தான” என்றான் சமரஸ்.
“ஜெயிச்சது நாங்க இல்ல... நீங்கதான்” என்றார் மேனன்.
மாயோன் அவரை நிமிர்ந்து பார்த்தார்.
“உங்களுக்கு பாதகமான ஒரு சூழ்நிலை இப்ப உங்களுக்கு சாதகமா மாறிடுச்சு. 2 மணி நேரத்துக்கு முன்னால உங்கள திட்டுனவங்க எல்லாரும் இப்ப உங்களைப் பாராட்டுறாங்க. இது வெற்றியில்லையா?” எனக் கேட்டார் மேனன்.
“நான் அதுக்காகலாம் இதைப் பண்ணல” என்றார் மாயோன்.
மேனன் புரிந்ததன் அடையாளமாகத் தலையாட்டிவிட்டு பேசத் தொடங்கினார்.
“உலகத்துலயே கஷ்டமான விஷயம் ஒரு பெரிய கூட்டத்தை வழி நடத்துறதுதான். உங்களை லட்சம் பேர் ஃபாலோ பண்ணாலும் அவங்க எல்லாருக்கும் ஒரே பேர்தான். மாயோனோட ரசிகர்கள். அவங்க நல்லது பண்ணாலும் கெட்டது பண்ணாலும் அதுக்கு நீங்கதான் பொறுப்பாயிடுவீங்க!”
“கரெக்ட் சார்” என்றார் மாயோன்.
“பெரிய ஹீரோ நீங்க... இந்த விஷயத்தை ரொம்ப தன்மையா ஹேண்டில் பண்ணீங்க. தேங்க்ஸ் சார்” என்றான் மார்க்ஸ்.
“பெரிய ஹீரோவா இருக்கிறது எவ்வளவு சந்தோஷமோ அவ்ளோ பெரிய பர்டன். ஸ்கீரின்ல நான் நடிக்கிறதை விட அதிகமா வாழ்க்கையில நடிக்கணும். நான் படம் நடிக்கிறேன், நீங்க பார்த்து ரசிக்கிறீங்க... அவ்வளவுதான் நமக்குள்ள டீல்னா ஒத்துக்க மாட்டாங்க. நடிகனை நடிகனாக மட்டும் இருக்க விடமாட்டாங்க... எதுக்கு நீ அதுக்கு குரல் கொடுக்கல... இதுக்கு சண்டை போடலம்பாங்க... நான் என்ன பதில் சொல்றது?” அனைவரும் புன்னகைத்தனர்.
“சார் எனக்கு நடிப்பு பிடிக்கும். அதுல எனக்கு பணமும் வருது. சந்தோஷமா அதைப் பண்றேன். அவ்வளவுதான். நான் கொடுத்த பணத்துலதான நீ பென்ஸ் கார்ல போற. எனக்கு ஒரு கஷ்டம்னா அதை திருப்பி குடுக்க மாட்டியான்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது?”

“புரியுது” என்றார் மேனன்.
“நான் நல்ல நடிகன் சார்... அவ்வளவுதான். நான் நல்ல தலைவன் எல்லாம் கிடையாது. ஸ்கீரின்ல நல்ல தலைவனா நடிக்க சொன்னா நான் நடிப்பேன். ஆனா நிஜம் அதில்ல... இதை எப்படி நான் இவங்களுக்கு புரிய வைக்கிறது. ஸ்பைடர்மேனும், சூப்பர்மேனும் ஏன் உலகத்தை காப்பாத்த வரலைன்னு அங்க யாரும் கேக்கல. ஆனா நான் நடிச்சிருந்தா இங்க கேப்பாங்க” எனச் சிரித்தார் மாயோன்.
அனைவரும் சிரித்தனர்.
‘’இந்தப் பிரச்னை இன்னையோட முடிஞ்சதுல எனக்கு சந்தோஷம்தான்” என எழுந்தார் மாயோன்.
“நம்ம ப்ரோமோல உங்களைப் பத்தி ஒண்ணும் தப்பா இல்லை. இவ்வளவு சாதாரணமா இருக்கிற ஒருத்தர் இவ்வளவு பெரிய ஆளாகும் போது உன்னால முடியும் நம்புன்னுதான் இருக்கு” என்றான் மார்க்ஸ்.
“உங்களுக்கு சங்கடமா இருந்தா?” என திவ்யா இழுக்க...
“இல்ல… இல்ல... அது அப்படியே இருக்கட்டும். இப்ப அதை எடிட் பண்ணா நான் உங்கள மிரட்டுன மாதிரி இருக்கும்” எனச் சொல்லி கரம் கூப்பி மாயோன் விடை பெற்றுக் கொண்டார்.
அவரை வழியனுப்பி வைத்துவிட்டு மேனன் ஹாலுக்கு வர அனைவரும் உற்சாகமாக கரவொலி எழுப்பினார்கள். மேனன் அவசரமாக அவர்களை அடக்கினார். அந்தக் கரவொலி அவருக்கு சந்தோஷத்தை தருவதற்கு பதிலாக சங்கடத்தையே தந்தது. நாம் வெற்றி கொள்பவர்கள் நாம் நினைக்கிற அளவுக்கு மோசமானவர்கள் இல்லை எனத் தெரிந்து கொள்கிற போது வருத்தமே மிஞ்சுகிறது.
ஒரு வாரம் முழுவதும் மாயோன் பற்றிய ப்ரோமோ ஒளிபரப்பானது. ஒட்டு மொத்த தமிழகத்தின் பேசு பொருளாக அது மாறியிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கான ரேட்டிங்குக்காக அனைவரும் காத்திருந்தார்கள்.
அந்தக் குறிப்பிட்ட அரை மணி நேர எபிசோட் தமிழகத்தில் அந்த வாரம் அனைவராலும் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளின் வரிசையில் முதல் இடம் பிடித்தது. அந்த அரை மணி நேரத்தில் தமிழக மக்கள் அதிகம் பார்த்தது ஆரஞ்சு டிவியைத்தான்.
கேக்குகள் வெட்டப்பட்டு கொண்டாடப்பட்டன. மேனன் அந்தத் தருணத்தின் நினைவாக திவ்யாவுக்கு பரிசு ஒன்றை தந்தார். திவ்யா பரிசை வாங்கிக் கொண்டு ஏஞ்சலின் அருகில் வந்தாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். திவ்யா புன்னகையுடன் ஏஞ்சலைப் பார்த்தாள்.
“எனக்கு தெரியும் என்ன காலி பண்றதுக்காக தான் நீ இத பண்ணேன்னு” என்றாள் திவ்யா.
ஏஞ்சல் அவளை ஏறிட்டுப் பார்த்தாள்.
“என்ன போட்டு தள்ள நீ பண்ண விஷயம் இன்னைக்கு இந்தியா பூரா இருக்கிற நம்ம நெட்வொர்குக்கு நான் யாருன்னு காட்டிருச்சு... அதே மாதிரி நீ எந்த அளவுக்கு கீழ இறங்குவேன்றதயும் எனக்கு புரிய வச்சிருச்சு!’’
ஏஞ்சல் முகம் மாறினாள்.
“பார்க்கலாம் நீ இன்னும் என்னென்ன வில்லத்தனம் எல்லாம் பண்றேன்னு” எனச் சொல்லிவிட்டு நகர்ந்தாள் திவ்யா.
திவ்யா போவதை கோபமாக ஏஞ்சல் பார்த்துக் கொண்டிருந்தாள். ராய் அதை கவனித்தான்.
உலகத்தின் நம்பர் ஒன் நெட்வொர்க், இந்தியாவின் நம்பர் ஒன், தமிழகத்தின் நம்பர் ஒன் என அனைத்து நம்பர் ஒன்னையும் தன்னகத்தே வைத்திருக்கும் அந்த சேனலின் கான்ஃபரன்ஸ் அறையில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் இந்திய தலைமை பொறுப்பாளர் தாம்சன் இறுகிப் போன முகத்துடன் அமர்ந்திருந்தார்.
“ஒரே ஒரு அரை மணி நேரம் மட்டும் தான் அவங்க நம்மளை லீட் பண்ணியிருக்காங்க சார். இந்த வாரம் நம்மளோட மொத்த GRP 1,350 சார்… அவங்க வெறும் 325 தான் சார். அதனால கவலைப்பட ஒண்ணும் இல்லை சார். எல்லா வாரமும் இப்படி கன்டன்ட் அவங்களுக்குக் கிடைக்காது சார்” என தமிழ் சேனல் நிகழ்ச்சி பொறுப்பாளர் மனோஜ், தாம்சனுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“மனோஜ், உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா?” என்றார் தாம்சன்.
அனைவரும் மெளனமானார்கள்.
“சில வருஷங்களுக்கு முன்னால இந்தியாவுல ஒரு கூல்டிரிங்ஸ் கம்பெனி நம்பர் ஒண்ணா இருந்துச்சு. அப்ப உலகத்தோட நம்பர் ஒன் கூல்டிரிங் கம்பெனி இந்தியாவில அவங்களோட சேல்ஸை ஆரம்பிச்சாங்க. வேர்ல்டு நம்பர் ஒன் கம்பெனி போட்டிக்கு வருது, நாம ஏதாவது பண்ணனும்னு எல்லோரும் அந்த சேர்மன் கிட்ட சொன்னாங்க. அவரு இந்தியா மார்க்கெட்டை அவங்களால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு அசால்ட்டா சொல்லிட்டாரு!”
அனைவரும் தாம்சனை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“அடுத்த வருஷம் இவங்களோட லாபம் பாதியா குறைஞ்சுது. அப்பவும் சேர்மன் கவலைப்படல. இப்ப கூட நாமதான நம்பர் ஒண்ணுன்னு அதே அலட்சியத்தோடு சொன்னார். அடுத்த வருஷம் அவங்க நம்பர் 2 ஆனாங்க. அப்பவும் அவர் நம்ம கம்பெனி ப்ராஃபிட்ல தான இருக்குன்னு அசால்ட்டா சொன்னாரு. அதுக்கு அடுத்த வருஷம் அந்த கம்பெனி என்னாச்சு தெரியுமா?” என அவர் நிறுத்த அனைவரும் அவரை கேள்விக்குறியோடு பார்த்தனர்.
“புதுசா உள்ள வந்த கம்பெனி இந்தியாவோட நம்பர் ஒன் கம்பெனியை விலைக்கு வாங்கிடுச்சு!”
அனைவருக்கும் அவர் சொல்ல வருவது புரிந்தது.
“நீங்க எல்லாம் கோட்டையில இருக்கிறதா நினைச்சுகிட்டு இருக்கீங்க… நான் இத கோட்டையா பார்க்கல... லட்சக்கணக்கான செங்கலா பாக்குறேன். ஒரு செங்கலை ஒருத்தன் உடைக்க முடியும்னா எல்லா செங்கலையும் உடைக்க முடியும்னுதான் அர்த்தம். அந்த நம்பிக்கையைதான் இந்த அரைமணி நேரம் அவங்களுக்கு குடுத்திருக்கு. 250 லேர்ந்து அவங்க 325 தான் ஆகியிருக்காங்க, நாம 1400 லேர்ந்து 1350 தான ஆகியிருக்கோன்னு நீங்க பாக்குறீங்க... நான் அவங்க வளர்றாங்க, நாம தேயுறோம்னு பாக்குறேன்”
அனைவரும் பயமாக பார்த்தனர்.
“அவங்களோட எல்லா ஷோவையும் வாட்ச் பண்ணுங்க... எல்லா டைம் பேண்டையும் கவுன்ட்டர் பண்ணுங்க... அவங்க 200 க்கு கீழ போகணும்… அந்த 125 GRP இங்க அதிகமாகணும். இது இன்னும் 2 மாசத்துல நடக்கணும். தட்ஸ் ஆல்!” என அவர் முடிக்க அனைவரும் எழுந்தனர்.
பணம், புகழ், மக்கள் அபிமானம், நீண்ட நாள் அனுபவம் என சகல சக்திகளும் கொண்ட அந்த சேனல் ஆரஞ்ச் டிவியை திரும்பிப் பார்த்தது. ஆனால் பின்னால் நடப்பது எதுவும் அறியாத ஆரஞ்ச் டிவியோ கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்தது!