Published:Updated:

இடியட் பாக்ஸ் - 63: மார்ஸ் எலைட் சேனல் யாருக்குப் போட்டி?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 63: மார்ஸ் எலைட் சேனல் யாருக்குப் போட்டி?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

திவ்யா, மார்க்ஸ், ஏஞ்சல், தாட்சா, மேனன் அனைவரும் கான்ஃபரன்ஸ் ரூமில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு எதிரே இருந்த டிவியில் மார்ஸ் எலைட் சேனலின் நிகழ்ச்சிகள் குறித்த ப்ரோமோக்கள் ஓடிக் கொண்டிருந்தன.

“எப்ப இந்த சேனல் லான்ச் பண்றாங்களாம்?“ எனக் கேட்டார் மேனன்.

“அடுத்த மாசம் 10-ம் தேதி” என்றான் மார்க்ஸ்.

“அவ்வளவு சீக்கிரமா லான்ச் பண்ண முடியுமா?”

“முடியும். அவங்ககிட்ட எல்லா வசதிகளும் இருக்கு. நல்ல செட் ஆப் புரடியூசர்ஸ் இருக்காங்க. பெரிய டெக்னிக்கல் டீம் இருக்கு. அதனால கண்டிப்பா பண்ணிடுவாங்க” என்றாள் தாட்சா.

மேனன் தலையாட்டினார்.

“நம்ம டைப் ஆஃப் ஷோஸ் சார். ஆனா நம்மள விட டபுள் பட்ஜெட்ல” என்றாள் ஏஞ்சல்.

மேனன் புன்னகைத்தார்.

“எப்படி சார் இத கவுன்ட்டர் பண்றது?” எனக் கவலையாகக் கேட்டாள் திவ்யா.

“அத பத்தி மார்ஸ் டிவிதான் யோசிக்கணும்” என்றார் மேனன்.

அனைவரும் முகம் மாறி அவரை பார்த்தனர்.

“ஒரு புது திருடன் திருடுறதுக்காக ஒரு ஏரியாவுக்கு வர்றான்னு வச்சுப்போம். அவன் முதல்ல எந்த வீட்ல திருடுவான்... அந்த ஏரியாவுல இருக்கிற வசதியான பங்களாவில் திருடுவானா? இல்லை ஒரு சாதாரண மிடில் கிளாஸ் வீட்ல திருடுவானா?” எனக் கேட்டார் மேனன்.

“வசதியான வீட்லதான் சார்” என்றாள் திவ்யா.

“நம்ம ஏரியாவுல இருக்கிற வசதியான வீடு மார்ஸ் டிவி. அவங்க கிட்டதான் 1350 GRP இருக்கு. நம்ம ஒரு சாதாரண மிடில் கிளாஸ் வீடு. நம்மகிட்ட வெறும் 325 GRPதான் இருக்கு. அதனால மார்ஸ் எலைட் நமக்கு போட்டியா இருக்குறதை விட மார்ஸ் டிவிக்கு தான் பெரிய போட்டியா இருக்க சான்ஸ் இருக்கு” என்றார் மேனன்.

அனைவரும் ஆச்சர்யமாக மேனனைப் பார்த்தார்கள்.

“மார்ஸ் எலைட் ஒரு 400GRP-யோட இரண்டாவது இடத்துக்கு வர்றதுக்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கு. அந்த 400GRP எங்க இருந்து வரும்? நம்ம கிட்ட இருந்து ஒரு 100 GRP போச்சுன்னா 300 GRP மார்ஸ் டிவியில இருந்துதான் போகும்.”

அனைவருக்கும் மேனனின் லாஜிக் புரிந்தது.

“ஆரஞ்ச் டிவி 325 GRP-ல இருந்து 225 GRP-யா குறைஞ்சுதுன்னா… மார்ஸ் டிவியும் 1350 GRP ல இருந்து 1000 GRP யா குறைஞ்சே ஆகணும். அது அவங்களோட பொசிஷனை கொஞ்சம் வீக் பண்ணும்!”

“இதை எல்லாம் அவங்க யோசிச்சிருக்க மாட்டாங்களா சார்?” என கேட்டான் மார்க்ஸ்.

“நிச்சயமா அவங்க யோசிச்சிருப்பாங்க. ஆனாலும் இவ்வளவு பெரிய இழப்பு வரும்னு அவங்க யோசிக்க வாய்ப்பு குறைவு. அதோட நம்மளை மூணாவது இடத்துக்குத் தள்ளிட்டா மார்கெட்டுல நம்மளோட இமேஜ் காலியாகும். அது முக்கியம்னு நினைக்கிறாங்க” என்றார் மேனன்.

“இப்ப நம்ம என்ன பண்ணணும் சார்?”

“அவங்க ஒரு முனியாண்டி விலாஸ்னா நீ சரவண பவன். முனியாண்டி விலாஸ் புதுசா ஒரு வெஜிட்டேரியன் ஹோட்டல் ஆரம்பிக்கிறாங்கன்னு கேள்வி பட்டா நீங்க என்ன பண்ணுவீங்க” எனக் கேட்டார் மேனன்.

அனைவரும் அவரை பார்க்க மேனன் அவர்களது பதிலுக்காக காத்திருந்தார்.

“கறிக்குழம்பு வைக்கிறதுல நீ பெரிய பிஸ்தாவா இருக்கலாம். ஆனா, காபி போடுறதுல என்ன நீ அடிச்சுக்க முடியாதுன்னு யோசிப்பேன் சார்” என்றான் மார்க்ஸ்.

“எக்ஸாக்ட்லி. இது நம்ம கிரவுண்ட். இந்த கிரவுண்டுக்கு அவங்கதான் புதுசு. நமக்குத்தான் இங்க அனுபவம் ஜாஸ்தி. அதனால நம்ம பண்றத இன்னும் பெஸ்ட்டா பண்ணுவோம். அவ்வளவுதான். புதுசா அவங்களை கவுன்ட்டர் பண்ண யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல”

அனைவருக்கும் அது சரியெனபட்டது.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“அதை விட முக்கியமா எலைட் நல்லா தான்பா இருக்கு. ஆனா, ஆரஞ்சு டிவி அளவுக்கு இல்லைப்பான்னு ஜனங்களை சொல்ல வச்சுட்டா போதும். அதுவே பெரிய சக்ஸஸ்தான்!”

“யெஸ் சார்” என்றாள் திவ்யா.

“நம்ம சேனலை ஒரு தடவைக் கூடப் பார்க்காத ஆளுகிட்ட கூட ஆரஞ்ச் டிவி எப்படியிருக்குன்னு கேட்டுப்பாருங்க. வித்தியாசமா சூப்பரா இருக்குன்னு சொல்லுவான். அவன் பாக்குறானோ இல்லையோ அவன் மனசுல நம்ம சேனல் ஒரு வித்தியாசமான நல்ல சேனல்னு பதிஞ்சிருக்கு. அந்த பெர்சப்ஷனை மார்ஸ் எலைட்டால மாத்த முடியும்னு எனக்குத் தோணல”

“அவங்க சேனலைப் பார்க்கிறது எல்லாம் ஹார்ட்கோர் ஹவுஸ் வொய்ஃப்ஸ் சார். நம்மள பார்க்குறவங்க எல்லாம் யங்ஸ்டர்ஸ், காலேஜ் பொண்ணுங்க சார்” என்றாள் ஏஞ்சல்.

“அடுத்த அஞ்சாறு வருஷத்தில இந்தக் காலேஜ் பொண்ணுங்களுக்கு வயசாகும். அவங்க கல்யாணம் பண்ணிட்டு ஹவுஸ் வொய்ஃப்ஸா மாறுவாங்க. அப்ப நாமதான் நம்பர் ஒண்ணா இருப்போம்” என சிரித்தார் மேனன்.

அனைவரும் சிரித்தார்கள்.

“அடுத்து 2 மாசத்துக்கு நம்ம ஷோஸ் எல்லாம் டைட் பண்ணுங்க. அவங்களுக்கு பதிலடி எல்லாம் கொடுக்கணும்னு அவசியம் இல்ல. இருக்குற 325 GRP-ய காப்பாத்திகிட்டாலே அது அவங்களுக்கு நாம கொடுக்குற சரியான பதிலடியா இருக்கும்” என்றார் மேனன்.

“யெஸ் சார்” என அனைவரும் ஒரே சமயத்தில் சொன்னார்கள்.

இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. திவ்யா, ஏஞ்சல், மார்க்ஸ் மற்றும் அனைத்து புரோகிராமிங் டீம் ஆட்களுடன் திவ்யாவின் அறையில் கூடியிருந்தார்கள்.

சுவரில் இருந்த வெள்ளை போர்டு முழுக்க வியூகங்களால் நிறைந்து கிடந்தது.

“அந்த ஸ்கூல் ஸ்டோரில ஒரு பொண்ணு போகப் போறதா சொன்னீங்கல்ல...” என திடீரெனக் கேட்டாள் திவ்யா.

“ஆமா... அவங்க அப்பா அம்மாவோட போய் நியூசிலாந்துல அந்த பொண்ணு செட்டிலாகப் போகுது” என்றான் பாண்டியன்.

“அந்த பொண்ணு கேரக்டரை என்ன பண்ண போறீங்க?”

“அவளை ரொம்ப பேருக்கு பிடிக்கும். ரீப்ளேஸ் பண்ணா ஜனங்க ஏத்துக்க மாட்டாங்க. அதனால அந்த கேரெக்டரை ஒரு ஆக்ஸிடென்ட்ல இறந்து போற மாதிரி கதையை பிளான் பண்ணியிருக்கோம்” என்றான் பாண்டியன்

“எப்ப அது ஏர்ல வருது?”

“அடுத்த வாரம்... அந்த போர்ஷன் ஷூட் எல்லாம் கூட பண்ணியாச்சு” என்றான் பாண்டியன் .

“அதை இன்னும் ரெண்டு வாரம் தள்ளி போடுங்க... எலைட் சேனல் லான்ச் ஆகுற வாரம் அந்த கேரெக்டரோட டெத் வரணும். அதுக்கு முந்தின வாரத்துல இருந்து ப்ரோமோ போட்டு தாக்கிரலாம்” என்றாள் திவ்யா.

“வாவ்” என சத்தமாகச் சொன்னான் மார்க்ஸ். அனைவருக்குமே அது சரியான யோசனையாகப்பட்டது.

“அந்த பொண்ண ஒரு வாரம் கோமால வச்சு பொழைக்குமா இல்லையான்னு டென்ஷன் பண்ணலாம். அதுக்கடுத்த வாரம் சாகடிக்கலாம். ரெண்டு வாரம் டென்ஷன் ஹோல்ட் ஆகும்” என்றார் நெல்லையப்பன்.

“நல்ல ஐடியா... ரெண்டு வாரம் அது தாங்கும்” என்றாள் திவ்யா.

“நம்ம ஷோல ஹீரோ ஹீரோயின் கல்யாணம் அடுத்த மாசம் வருது. அது கொஞ்சம் அட்வான்ஸ் பண்ணிக்கலாமா” என்றான் வினோ.

“யெஸ்... பண்ணிரலாம்!”

“ஜானு வீட்ட விட்டு போற சீனைக் கூட 8 மணி சீரியல்ல முன்னாடி கொண்டு வந்துடலாம்” என்றான் தனபால்.

“எல்லா சீரியல்லயும் எப்ப என்ன நடக்கும்னு ஜனங்க வெயிட் பண்ணிட்டு இருக்குற ஹை பாயின்ட் எலைட் சேனல் லான்ச் ஆகுற வாரத்துலயும் அதுக்கு அடுத்த வாரத்துலயும் வர்ற மாதிரி பிளான் பண்ணுங்க. நம்ம சேனலை விட்டு ஒருத்தர் வெளியே போகக்கூடாது” என்றாள் திவ்யா.

அனைவரும் ஆமோதிக்கிற பாவனையில் தலையாட்டினார்கள்.

“எல்லா ஷோவையும் ஒரு 5 நிமிஷம் முன்னாடி ஆரம்பிக்கலாம்” என்றான் மார்க்ஸ்.

அனைவரும் மார்க்ஸைத் திரும்பிப் பார்த்தனர்.

“அவங்க எப்படியும் ஏழு ஏழரை எட்டு மணிக்குன்னு ரவுண்ட் டைமிங்ல தான் ஷோஸை ஆரம்பிப்பாங்க... நம்ம 5 நிமிஷத்துக்கு முன்னாடி ஆறு அம்பத்தஞ்சு ஏழு இருபத்தஞ்சுன்னு எல்லா ஷோவையும் ஆரம்பிக்கலாம். ஜனங்க நம்ம ஷோவை ஏழு அம்பத்தஞ்சுல இருந்து பார்த்துட்டு இருந்தா எட்டு மணிக்கு அவங்க ஷோ ஆரம்பிக்கறப்ப அத போய் பார்க்கனும்னு தோணாது.”

“உலக ஐடியாவா இருக்கே மார்க்ஸ்” என்றார் நெல்லையப்பன்.

அனைவரும் சிரித்தனர்.

“அப்புறம் ரெண்டு வாரம் ஒரே ஒரு பிரேக் மட்டும் ஷோவுக்கு நடுவுல வச்சுக்கலாம்... விளம்பரத்துக்கு நடுவுல ஆடியன்ஸ் அடிக்கடி சேனல் மாத்த வேண்டிய அவசியம் இருக்காது” என்றான் மார்க்ஸ்.

“எங்க இருந்து இந்த ஐடியா எல்லாம் பிடிக்கிறீங்க?” என புன்னகையும் ஆச்சர்யமுமாக கேட்டாள் திவ்யா.

“இந்த 300 GRP இப்படி எல்லாம் திருட்டுத்தனமா சம்பாதிச்சதுதான்” என்றார் நெல்லையப்பன்.

“இதுல திருட்டுதனம் என்ன இருக்கு... இது ஒரு நல்ல ஸ்ட்ராட்டர்ஜிதான்” என்றாள் திவ்யா.

“இதுல இன்னொரு விஷயமும் இருக்கு... யப்பா மார்க்ஸ் அந்த கோயம்பேடு சீரியலை வேலை செய்ய வச்ச டெக்னிக்கை சொல்லு.”

“என்ன அது?” என ஆர்வமாகக் கேட்டாள் திவ்யா.

“அது ஒண்ணும் இல்ல... வழக்கமா சீரியல்ல ரெண்டு பிரேக் வரும். மூணு பார்ட்டா சீரியல் டெலிகாஸ்டாகும். ஒவ்வொரு செக்மன்ட்டும் 8 நிமிஷம்ன்னு 3 செக்மன்ட் இருக்கும்”

“ஆமா அது தான் யூஷுவல்... நீங்க என்ன பண்ணீங்கன்னு சொல்லுங்க” என ஆர்வம் தாங்காமல் கேட்டாள் திவ்யா.

“முதல் செக்மன்ட் 20 நிமிஷம் ரெண்டாவது மூணாவது செக்மன்ட் வெறும் ரெண்டு ரெண்டு நிமிஷம்” என சிரித்தான் மார்க்ஸ்.

திவ்யாவும் ஆச்சர்யம் தாங்காமல் சிரித்தாள்.

“முத செக்மன்ட்ல உள்ள வர்றவனை அடுத்த 20 நிமிஷம் வெளிய போக விடாம லாக் பண்றது. அதுக்கப்புறம் அவன் ரெண்டு ரெண்டு நிமிஷம் வந்தாலும் வரலைன்னாலும் நமக்கு ரேட்டிங் வந்திரும்” என்றார் நெல்லையப்பன்.

“சூப்பர் ஐடியா” என்றாள் திவ்யா.

“இதெல்லாம் சில தந்திரங்கள்தான். அதைத்தாண்டி ஷோ நல்லா இல்லைனா யாரும் பாக்க மாட்டாங்க” என்றான் மார்க்ஸ்.

“அது ஓகே... ஆனாலும் இது நல்ல டெக்னிக்காதான் இருக்கு” என்றாள் திவ்யா.

“டைட்டில் சாங் எல்லாம் 3 வாரம் கட் பண்ணிரலாம்... அது 2 நிமிஷம் ஓடுறதுக்குள்ள ஜனங்க வெளிய பக்கத்து சேனல்ல என்ன நடக்குதுன்னு போய் பார்க்க சான்ஸ் இருக்கு... ஒரு ஷோ முடிஞ்சதும் அப்படியே பேக் டு பேக் அடுத்த ஷோ வந்துரலாம்” என்றான் டார்லிங்.

“ஆளாளுக்கு ஐடியாவை அள்ளி வீசுறானுங்களே... ஷோவும் டைட்டா இருந்தா எலைட்டோட மல்லுகட்டி பார்க்கலாம்” என்றார் நெல்லையப்பன்.

“வந்தியதேவன் பிரச்னையை சால்வ் பண்ணனும்’’ என்றான் பாண்டியன்.

“என்னாச்சு?” எனக் கேட்டாள் திவ்யா.

“வந்தியத்தேவன் நம்ம சேனலோட சீனியர் ஆங்கர்!”

“எனக்கு தெரியும்” என்றாள் திவ்யா.

“அவரைப் பெரிய பேமன்ட் குடுத்து அந்த சேனல்ல கூப்பிட்டு இருக்காங்க...”

“அவரு என்ன சொல்றாரு?”

“இல்ல பேசணும்னு சொல்லியிருக்காரு. நாளைக்கு காலையில சேனலுக்கு வர்ராரு” என்றான் பாண்டியன்.

“இந்த மாதிரி பஞ்சாயத்துக்கெல்லாம் நம்ம நாட்டாமை மேனன் சார்தான் கரெக்ட். அவரை டீல் பண்ண சொல்லிரலாம்” என்றார் நெல்லையப்பன்.

அனைவருக்கும் அதுதான் சரி எனப்பட்டது.

“சார்கிட்ட பேசிரலாம்” என்றாள் திவ்யா.

மேனன் அறையில் வந்தியதேவனும் மேனனும் அமர்ந்திருந்தார்கள். அருகில் நெல்லையப்பன் அமர்ந்திருந்தார்.

வந்தியத்தேவன் சேனலின் மிகப் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளர். ஏழு ஆண்டுகளாக ஆரஞ்சு டிவியில் பணிபுரிந்து கொண்டிருப்பவர். ஆரஞ்சு டிவி என்றால் அவரது முகம்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.

“சொல்லுங்க வந்தியத்தேவன்” என்றார் மேனன்.

“சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல சார். மார்ஸ் எலைட்ல ஒரு ஷோ பண்ண கூப்புடுறாங்க... இங்க எபிசோடுக்கு இருபதாயிரம் தர்றீங்க... அவங்க எழுபத்தஞ்சாயிரம் தர்றதா சொல்றாங்க”

மேனன் அமைதியாகக் கேட்டபடி இருந்தார்.

“நான் என்ன பண்ணனும்னு நீங்க தான் சொல்லணும்” என்றார் வந்தியதேவன்.

“நீங்க என்ன பண்ணனும்ன்னு நான் எப்படி சொல்ல முடியும். நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு முதல்ல சொல்லுங்க” என்றார் மேனன்.

“நீங்க அதே பணம் தர்றாதாயிருந்தா நான் இங்கயே கன்டின்யூ பண்றேன்” என்றார் வந்தியத்தேவன்.

“அது முடியாதுல்ல வந்தியத்தேவன். ஒரு பத்தாயிரம் ரூபா ஜாஸ்தி பண்ணி தரலாம். அதுக்கு மேல கஷ்டம்” என்றார் மேனன்.

“அவங்க எழுபத்தி அஞ்சு தர்றாங்க சார்.”

“வந்தியத்தேவன்… இதை தரலன்னா உங்கள விட்டுட்டு அந்தப் பக்கம் போயிடுவேன்னு சொல்றது உங்கள மாதிரி ஒருத்தருக்கு அழகில்ல!”

“இப்ப என்ன... 75 வேணாம் 20 போதும்னு உங்க கூடவே இருந்து காலம் பூரா நான் கஷ்டப்படணுமா?”

“சேனலுக்கு சோதனையான ஒரு காலம் வர்றப்ப கூட இருக்கணுமா, வேணாமான்றதை நீங்கதான் முடிவு பண்ணனும்!”

“என்ன சார் சென்டிமென்ட்டா பேசி கவுக்கலாம்னு பாக்குறீங்களா?”

“இல்ல... உங்களுக்கு இது நல்ல வாய்ப்புன்னு தோணுனா நீங்க போகலாம். நான் தடுக்க மாட்டேன்”

“அப்ப அவங்க தர்ற பேமன்ட் நீங்க தர மாட்டீங்க...”

“வாழ்த்துகள்... நல்ல ஷோ பண்ணுங்க... மீட் பண்ணலாம்” என்றார் மேனன்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“கூடவே இருந்தால் அருமை தெரியாது சார். நான் போனதுக்கு அப்புறம் ஃபீல் பண்ணுவீங்க”

“அவங்க, நீங்க நல்ல ஆங்கர் நீங்க அவங்களுக்கு வேணுன்னு விரும்பி கூப்பிடல. ஆரஞ்சு டிவியை காலி பண்றதுக்காக உங்களைக் கூப்புடுறாங்க. அது நடந்தாலும் நடக்கலைன்னாலும் உங்களை தூக்கி போட்டிருவாங்க” என்றார் மேனன்.

வந்தியத்தேவன் சற்று கோபமாகவே அந்த அறையை விட்டு வெளியேறினார்.

“என்ன சார் எதையாவது பேசி அந்த ஆளை லாக் பண்ணுவீங்கன்னு பார்த்தா விட்டுட்டீங்களே சார்” என ஆதங்கத்துடன் சொன்னார் நெல்லையப்பன்.

“இல்ல நெல்லையப்பன்... ஒரு போதும் மிரட்டலுக்கு பயந்து நம்ம ஒரு விஷயத்தை ஒத்துக்க கூடாது. அப்புறம் அது எங்கயுமே நிக்காது. இன்னைக்கு 75 வேணும் பாரு. அப்புறம் வேற ஏதாவது டிமாண்டுன்னு அது கன்டின்யூ ஆயிட்டேதான் இருக்கும். இவரைப் பார்த்து நாளைக்கு எல்லோரும் எங்களுக்கும் ஜாஸ்தி குடுங்கன்னு ஆரம்பிச்சா சமாளிக்க முடியாதில்ல!”

“இல்ல சார்... அவர்தான் சார் ஆரஞ்சு டிவியோட முகமே, அவரைப் போய் விட்டுட்டமே சார்”

“அவரை நான் போங்கன்னு சொன்னதுக்கு மூணு காரணம் இருக்கு… முதல் காரணம் இவரையே போன்னு சொல்லிட்டாங்க நம்ம பிரச்னை பண்ணா நம்மளையும் அனுப்பிடுவாங்க... பயப்பட மாட்டாங்கன்னு மத்த எல்லாருக்கும் புரியும்!” நெல்லையப்பன் ஆச்சர்யமாக அவரைப் பார்த்தார்.

“அப்புறம் வந்தியத்தேவன் மார்ஸ் எலைட்ல பாக்குறப்ப எல்லாம் நம்ம சேனல் எல்லோரோட ஞாபகத்துலயும் வரும். அது ஒரு ப்ளஸ். செலவே இல்லாமல் அந்த சேனல் மூலமா நம்ம சேனலுக்கு விளம்பரம் கிடைக்கும்.”

“மூணாவது சார்”

“மார்ஸ் எலைட் சேனல் அநியாயமா நம்ம டிவி ஆளைத் தூக்கிருச்சுன்னு அவங்களுக்கு ஒரு கெட்ட பேரும், நம்ம மேல ஒரு சிம்பதியும் வரும்.”

“தெய்வமே” என கை எடுத்து கும்பிட்டார் நெல்லையப்பன்.

மேனன் சிரித்தபடி, “அவரு போனும்னு முடிவு பண்ணிட்டுத்தான் நம்மகிட்ட பேச வந்திருக்காரு. அதனால நம்ம என்ன சொன்னாலும் அவரு கண்டிப்பா போயிருப்பாரு. அவரா போறதுக்கு முன்னாடி நாமளே அனுப்பிட்டோம்னு வேணா நம்ம சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்” எனச் சிரித்தார் மேனன்.

“அப்ப இப்ப நீங்க சொன்ன மூணு காரணம்”

“நமக்கு கிடைக்காதப்ப... சீ சீ இந்த பழம் புளிக்கும்னு நினைச்சுகிட்டா மன ஆறுதலா இருக்கும்ல” எனச் சிரித்தார் மேனன்.

நெல்லையப்பனும் சிரித்தார்.

மார்ஸ் எலைட் சேனலின் ஒளிபரப்பு திங்கள்கிழமை தொடங்கியது. முழு பக்க பேப்பர் விளம்பரங்கள். முக்கியமான சாலைகளில் பெரிய விளம்பர பலகைகள், திரும்பிய பக்கம் எல்லாம் போஸ்டர்கள் என எங்கு திரும்பினாலும் மார்ஸ் எலைட் சேனல் கண்ணில் பட்டது. மார்ஸ் டிவியில் ஒவ்வொரு பிரேக்குக்கும் நடுவில் மார்ஸ் எலைட் குறித்த ப்ரோமோக்கள் ஓடின. மொத்த தமிழகமும் மார்ஸ் எலைட் குறித்தே பேச்சாக இருந்தது.

மேனன் தனது அறையில் அமர்ந்து மார்ஸ் எலைட்டின் முதல் நாள் ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்தார். கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் தாட்சா.

“என்ன மேனன் நீங்களும் மார்ஸ் எலைட்தான் பார்த்துட்டு இருக்கீங்களா?”

மேனன் புன்னகைத்தபடி “நம்மளோட மொத்த ஆபிஸும் அதைத்தான் பார்த்துட்டு இருக்கு” என்றார்.

“என்ன மேனன் சேனல் எப்படி இருக்கு?” எனக் கேட்டாள் தாட்சா.

“ஏஞ்சலினா ஜூலி புடவை கட்டுன மாதிரி இருக்கு...”

“என்ன உதாரணம் இது... புரியலையே!”

“புதுசா இருக்கு... ஆனா செட்டாகல!” என்றார் மேனன்.

தாட்சா புன்னகைத்தாள்.

“அவங்களோட பலமான ஏரியாவை விட்டுட்டு அவங்களுக்குப் பழக்கமில்லாத ஒரு விஷயம் முயற்சி பண்ணியிருக்காங்க... கொஞ்சம் வீக்கா தெரியுது.”

“அது மார்ஸ் டிவி, இது மார்ஸ் எலைட் ரெண்டும் வேற வேற சேனல் மேனன்.”

“அது உங்களுக்கும் எனக்கும்... ஆனா வெளிய இருக்கவங்களுக்கு இல்ல... அவங்க இந்த சேனலை மார்ஸ் டிவியோட இன்னொரு சேனலாத்தான் பார்ப்பாங்க!”

அவர் சொல்வது உண்மை என்றே பட்டது தாட்சாவுக்கு.

“இப்ப என்ன சொல்ல வர்றீங்க?”

“GRP அவங்களுக்குக் கிடைக்கலாம். ஆனா எங்கேயோ ஒரு இடத்தில அவங்களோட இமேஜ் இதுல பிரேக்காகும்னு தோணுது”

தாட்சா அவரை உற்றுப் பார்த்தாள்.

“எனக்கு அப்படி தோணுது... என்னோட கெஸ்ஸிங் தப்பா கூட போகலாம்.”

“மேனன் கெஸ் பண்ணி தப்பா போக சான்ஸ் இருக்கா என்ன?” எனச் சிரித்தாள் தாட்சா.

“புது டைரக்டர் சூப்பர் ஹிட்டான படம் பண்ணலாம், மணிரத்னம் மாதிரி ஒரு டைரக்டர் படம் ஃபிளாப்பும் ஆகலாம். அதுதான் கிரியேட்டிவ் ஃபீல்டோட இன்ட்ரஸ்டிங்கான விஷயமே... இதனாலதான் இது ஜெயிச்சுதுன்னு சொல்ல முடியும். ஆனா, இத பண்ணா கண்டிப்பா ஜெயிக்கும்னு யாராலயும் கேரன்ட்டியா சொல்ல முடியாது. இதுதான் சக்ஸஸ் ஃபார்முலான்னு தெரிஞ்சா எல்லாருமே சக்ஸஸ் படம் பண்ணிருவாங்களே” என்றார் மேனன்.

“தோத்து போயிடுவமோன்னு எப்பவாவது பயந்திருக்கீங்களா மேனன்?”

“இல்ல தாட்சா... ஆனா சரியா விளையாடாம போயிடக் கூடாதேன்னு நிறைய தடவ பயந்திருக்கேன்” என்றார் மேனன்.

தாட்சா சிரித்தாள்.

ஒரு வாரம் முடிந்து போயிருந்தது. அடுத்த வார வியாழக்கிழமை.

ரேட்டிங்கிற்காக அனைவரும் காத்திருந்தார்கள். ஆரஞ்சு டிவியின் ரேட்டிங்கை விட மார்ஸ் எலைட்டின் ரேட்டிங் என்ன எனத் தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்தார்கள்.

திவ்யா, தாட்சா, மேனன், ஏஞ்சல் என ஒட்டுமொத்த அலுவலகமும் அமர்ந்து இருக்க அவர்களுக்கு எதிராக சாந்தினி லேப்டாப்புடன் அமர்ந்திருந்தாள்.

சாந்தினி வரக்கூடிய தகவல்களை ஒருங்கிணைத்து சேனல்களின் ரேட்டிங்கை சொல்லக் கூடிய பொறுப்பில் இருப்பவள்.

காலையில் பத்து மணியில் இருந்து பத்தரைக்குள் ரேட்டிங் வரும். அவர்கள் தரும் டேட்டாக்களை ஒருங்கிணைத்து ரேட்டிங் ஷீட்டை அவள் தயார் செய்ய 20 நிமிடங்கள் ஆகும்.

சாந்தினி மெயில் வந்திருக்கிறதா என அவ்வப்போது லேப்டாப்பைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன சாந்தினி பொட்டி வந்திருச்சா இல்லையா?” எனக் கேட்டார் நெல்லையப்பன்.

“இல்ல மாமா இன்னும் வரல” எனச் சிரித்தாள் சாந்தினி.

அனைவரும் புன்னகைத்தார்கள். ஆனால் அவர்களது மனம் வரப்போகும் ரேட்டிங்கை எண்ணி படபடத்துக் கொண்டிருந்தது.

ஆரஞ்சு டிவியின் கான்ஃபரன்ஸ் ரூமில் அனைவரும் கூடியிருந்த அதே சமயம் தாம்சன் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் விழித்துக் கொண்டிருந்தார். அமெரிக்க நேரப்படி இரவு மணி 2-ஐ கடந்திருந்தது. என்ன ரேட்டிங் வரும் என அவரது மனதும் யோசித்துக் கொண்டிருந்தது.

“ரேட்டிங் வந்துடுச்சு” எனச் சொன்னாள் சாந்தினி.

தாம்சனின் அலைபேசி அடித்தது.

- Stay Tuned...