"மார்ஸ் எலைட்டோட GRP 437 சார்" என்றான் மனோஜ். ஆரம்பித்த முதல் வாரத்தில் ஒரு சேனல் 437 GRP-க்கள் பெறுவது என்பதெல்லாம் உலக சாதனை. அதை மார்ஸ் எலைட் மட்டுமே சாத்தியப்படுத்தியிருந்தது. மார்ஸின் பிராண்டுக்கு மக்களிடம் இருந்த செல்வாக்குதான் அதற்கு காரணம்.
தாம்சன் அது பற்றி அலட்டிக் கொள்ளாமல், “முதல்ல மார்ஸ் டிவியோட GRP எவ்வளவுன்னு சொல்லுங்க” என்றார்.
சின்ன தயக்கத்துடன் மனோஜ் ‘’998 சார்’’ என்றான். ஆரம்பித்த இத்தனை வருடத்தில் அதன் GRP நான்கு இலக்கங்களை விட்டு குறைந்ததே இல்லை. 352 GRP -க்களை மார்ஸ் எலைட் டிவி தன்னுடைய முக்கிய சேனலான மார்ஸ் டிவியிடமிருந்து எடுத்திருந்தது. இப்படி ஓர் இழப்பை அவர் எதிர்பார்க்கவில்லை.
“ஆரஞ்ச் டிவியோட GRP என்ன?” எனக் கேட்டார் தாம்சன். “250 சார்” என்றான் மனோஜ். வெறும் 75 GRP-க்கள் மட்டுமே அது ஆரஞ்ச் டிவிக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
“நாமதான் மார்கெட் லீடர் சார். அதனால நமக்கு அதிகமான பாதிப்பு இருக்கு சார். அது மட்டும் இல்லாம நம்மளோட இன்னொரு சேனல்ன்றதால நம்ம ஆடியன்ஸ் நிறைய பேர் அதுல என்ன இருக்குன்னு பாக்குறதுக்காக வந்திருக்காங்க சார். கோயிங் ஃபார்வேட் அது ஆரஞ்ச் டிவிக்குத்தான் பெரிய சேலஞ்சா இருக்கும்” என்றான் மனோஜ்.
“ஆமா” என ஒற்றை வார்த்தையில் சொன்னார் தாம்சன். தான் ஒரு சிக்கலான இடத்தில் மாட்டிக் கொண்டதாக உணர்ந்தார் தாம்சன். மார்ஸ் டிவியின் GRP-யை அதிகரிக்க எது செய்தாலும் அது மார்ஸ் எலைட்டை பாதிக்கும். எலைட்டின் GRP-யை அதிகரிக்க நினைத்தால் அது மார்ஸின் GRP-யை மேலும் குறைக்கும்.
“நாளைக்கு டிஸ்கஸ் பண்ணலாம் மனோஜ்” எனச் சொல்லி தாம்சன் போனைத் துண்டித்தார். அவருக்குச் சுத்தமாக தூக்கம் போயிருந்தது.
ஆரஞ்ச் டிவியின் கான்ஃபரன்ஸ் ரூமில் அனைவரும் கைதட்டினார்கள். மேனன் புன்னகையுடன் “எதுக்கு இந்த சந்தோஷம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றார்.
“முத தடவயா மார்ஸ் டிவி 1000-க்கு கீழ வந்திருக்கே சார்” என்றார் நெல்லையப்பன்.
“அதுக்கு நாம காரணம் இல்லையே நெல்லையப்பன்” என்றார் மேனன்.
“யார் அடிச்சா என்ன சார். நம்ம எதிரி ஒரு அடி வாங்குனா சந்தோஷம்தான சார்”
“அவனை யாரும் அடிக்கல... அவனே அவன் கண்ணுல தெரியாம குத்திக்கிட்டான்.”
“அப்ப கூட சந்தோஷம்தான் சார்” என்றார் நெல்லையப்பன். அனைவரும் சிரித்தனர்.
“நம்ம GRP 75 குறைஞ்சிடுச்சு தெரியும்ல” என்றார் மேனன்.
“தல போகும்னு நினைச்சோம்... தலைப்பாகைதான சார் போயிருக்கு. புதுசா வாங்கிக்கலாம்” என்றார் நெல்லையப்பன்.
உண்மையில் அதுதான் அனைவரது மனநிலையாகவும் இருந்தது. ஆரஞ்ச் டிவி பெரிதாக அடிவாங்கவில்லை என்பதே அனைவருக்கும் ஆறுதலாக இருந்தது. அதை விட மார்ஸ் எலைட் அதன் தாய் சேனலான மார்ஸை பதம் பார்த்ததில் கூடுதல் சந்தோஷம் வேறு.
“சார் இப்ப அவங்களோட அடுத்த மூவ் என்னவா இருக்கும்?” எனக் கேட்டாள் திவ்யா.
“மார்ஸ் டிவியை பழைய இடத்துக்கு கொண்டு வர்றதுதான்” என்றார் மேனன்.
“அப்படின்னா?” என திவ்யா இழுக்க...
“அவங்க எலைட்டோட ஷோஸை கொஞ்சம் கம்மி பண்ணுவாங்க. மெயின் சேனல் ஷோஸ்ல கான்சன்ட்ரேட் பண்ணுவாங்க,”
அனைவரும் மேனனைப் பார்த்தார்கள்.
“அவங்களோட இந்த பிளான் ஃபெயிலியர். அது ஃபெயிலியர்ன்னு உலகத்துக்கு தெரியாம மெதுவா அவங்க அதை சரி பண்ணனும்!”
“மார்ஸ் எலைட்டோட ஃபியூச்சர் என்ன சார் ஆகும்?”
“அதுக்கு பெருசா ஃபியூச்சர் இல்ல... அதுவும் பேருக்கு இன்னொரு சேனலா இருக்கும். அவ்வளவுதான். ஆனா இதுல நமக்கு இன்னொரு அட்வான்டேஜ் இருக்கு” என்றார் மேனன்.
அனைவரும் அது என்ன என்பதாக அவரைப் பார்த்தார்கள்.
“நம்ம மார்ஸ் டிவியை அடிக்கிறதெல்லாம் நடக்காத ஒரு விஷயம். ஆனா, இன்னொரு அஞ்சாறு வாரத்துக்குள்ள நம்ம மார்ஸ் எலைட்டை அடிக்க வாய்ப்பிருக்கு!”
அனைவரது முகமும் ஆச்சர்யத்தில் மலர்ந்தன.
“பெரிய ரவுடியை அடிக்க வாய்ப்பில்லை... ஆனாலும், அந்த பெரிய ரவுடி பக்கத்துல இருக்கிற ஒரு சின்ன ரவுடியை அடிக்கிறதுல ஒரு சந்தோஷம் இருக்குல்ல” எனச் சிரித்தார் மேனன்.
அனைவரும் சிரித்தார்கள்.
“நாம மத்தவங்களை அடிக்கிறது எல்லாம் அப்புறம்... 325-ல இருந்து நாம 500 போயிருக்கணும். இப்ப திரும்பவும் 250-க்கு வந்துட்டோம். நாம கொஞ்சம் கடுமையா வேலை செய்ய வேண்டியதிருக்கு. அதுக்கான பிளான்களை ரெடி பண்ணுங்க” என்றார் மேனன்.
“யெஸ் சார்” என்றபடி அனைவரும் கலைந்தார்கள். அந்த அறையில் மேனனும் தாட்சாவும் மட்டும் தனித்திருந்தார்கள்.

“டார்லிங்” என்றாள் தாட்சா. அதை எதிர்பாராத மேனன் சட்டென ஆச்சர்யப்பட்டு திரும்பி அவளைப் பார்த்தார்.
குறும்பு புன்னகையுடன் தாட்சா அவரை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏதாவது சொன்னீங்களா?”
ஆமென தலையாட்டினாள் தாட்சா.
“சரியா கவனிக்கல” என்றார் மேனன்.
“டார்லிங்குன்னு சொன்னேன் டார்லிங்” என்றாள் தாட்சா.
மேனன் வெட்கம் கலந்து புன்னகைத்தார். அந்தக் கொஞ்சலை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
“அப்படியே உங்களை ஒரு கடி கடிக்கணும் போல இருக்கு” என்றாள் தாட்சா.
மேனன் வெட்கத்தில் முகம் சிவந்தார்.
“எப்படி உங்களால மட்டும் இப்படி யோசிக்க முடியுது. இந்தத் தெளிவு, சிந்தனை. அதோட இது எதுவுமே என்னோடதில்லை மாதிரியான சிம்பிளான ஆட்டிட்யூடும் சான்சே இல்லை.”
மேனன் தாட்சாவை காதலாகப் பார்த்தார்.
அறிவு எப்போதும் ஒரு ஆணவத்தையும் கர்வத்தையும் கூடவே சேர்த்துக் கொண்டு வரும். மழை நீரில் கப்பல் விடும் குழந்தைத்தனமும், சதுரங்க விளையாட்டில் வியூகம் வகுக்கும் அறிவாளித்தனமும் எப்போதும் எதிர் எதிரானவைகள்தான். அறிவு முதலில் நமக்குள் இருக்கும் குழந்தையை காணாமல் போகச் செய்கிறது. வெகு சிலர் மட்டுமே தங்களுக்குள் இருக்கும் குழந்தையை கடைசிவரை காப்பாற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் எப்போதும் குழந்தையின் குதூகலத்துடன் வாழ்கிறார்கள்.
“நான் உங்களைப் பத்தி ஒரு விஷயம் சொல்லட்டா தாட்சா?’’ எனக் கேட்டார் மேனன்.
“நான் உங்களைப் பாராட்டுனா உடனே நீங்க என்ன பாராட்டணும்னு எல்லாம் அவசியம் இல்லை” என்றாள் தாட்சா புன்னகையுடன்.
“அப்படியெல்லாம் இல்ல... எனக்கு இப்ப சொல்லணும்னு தோணுது”
“சொல்லுங்க கேப்போம்... மேனன் தாட்சா பத்தி என்ன நினைக்கிறாருன்னு!”
“பெரிய இடத்துல இருக்கிற எல்லாருக்கும் ஒரு விஷயத்தை எப்படி பண்ணனும்னு ஒரு பிளான் இருக்கும். வேற யாராவது ஐடியா சொன்னா அதை ஏத்துக்க மாட்டாங்க... சரின்னு தெரிஞ்சா கூட அதை ஒத்துக்க மாட்டாங்க!”
“நான் ஈகோ இல்லாம நல்ல ஐடியா யார் சொன்னாலும் ஏத்துகிறேன் அதான” என்றாள் தாட்சா.
மேனன் இல்லை என தலையாட்டினார்.
“அப்புறம்?”
“நல்ல ஐடியாவை நிறைய பேர் ஏத்துப்பாங்க... ஆனா நீங்க அதை ரசிக்கிறீங்க. அதை சொன்னவருக்கு அதோட கிரெடிட் தர்றீங்க. அதுலே இருந்து ரொம்ப சந்தோஷமா கத்துக்கிறீங்க... இது எல்லோராலயும் முடியாது” என்றார் மேனன்.
“நான் அப்படியிருக்கனா என்ன?” எனக் கேட்டாள் தாட்சா.
“ஆமா தாட்சா”
“ஒருவேளை அந்த ஐடியா சொல்றவரை எனக்கு பிடிச்சதுனால கூட இருக்கலாம்” எனச் சிரித்தாள் தாட்சா.
மேனன் சிரித்தார்.
ஒருவரின் அறிவு சார்ந்து அவர் மீது வரும் காதல் அலாதியானது. ஆழமானது. அந்தக் காதல் படபடக்காது. தண்ணீரில் இட்ட வண்ணமாய் மெல்லப் படர்ந்து அழகாய்க் கரைந்து வண்ணம் எது, தண்ணீர் எது எனத் தெரியாமல் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும். துணை மீதான ஆச்சர்யங்களும் பிரமிப்பும் தொடர்வது காலங்களைக் கடந்து எப்போதும் காதலை சுவாரஸ்யமாக வைத்திருக்கும்.
…………………………………...
மேனன் எதிரில் சீயோனும் சேல்ஸ் டீம் ஆட்களும் நின்று கொண்டிருந்தார்கள்.
“நீங்கதான் ஹெல்ப் பண்ணனும் மேனன்” என்றான் சீயோன்.
“எனக்கு சுத்தமா சேல்ஸ் நாலேட்ஜே கிடையாது” என்றார் மேனன்.
“நீங்க அசத்தாத டிப்பார்ட்மென்ட்டுன்னு ஏதாவது இருக்கா என்ன? எங்களுக்கு கொஞ்சம் கை குடுங்க” எனக் கெஞ்சும் பாவனையில் கேட்டான் சீயோன்.
“சரி... பிரச்னை என்னன்னு சொல்லுங்க”
“ஹவுஸ் போட் பில்டர்ஸ்... அவங்கதான் நம்பர் ஒன் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி. அவங்க நமக்கும் விளம்பரம் குடுத்திருக்காங்க. மார்ஸ் டிவிக்கும் விளம்பரம் குடுத்திருக்காங்க”
சரி என்பதாக மேனன் தலையாட்டினார்.
“மார்ஸ் டிவியோட பிரைம் டைம் ஷோக்கு செகண்டுக்கு அம்பதாயிரம் பேமென்ட் பண்றாங்க... நம்ம பிரைம் டைம் ஷோவுக்கு பதினஞ்சாயிரம் பே பண்றாங்க”
மேனன் அவனைப் பார்த்தபடி இருந்தார்.
“இல்ல சார் மார்ஸ் டிவியோட பிரைம் டைம் ஷோ 20 ரேட்டிங் வருது. நம்ம ஷோ 4 ரேட்டிங்தான் வருது. அதனால அவங்களுக்கு ஃபிஃப்ட்டி, நமக்கு ஃபிப்டீன்”
“புரியுது” என்றார் மேனன்.
“மார்ஸ் எலைட் லான்ச்சானதால நம்ம ஷோவோட ரேட்டிங் மூணாயிடுச்சு. அதனால ஸ்பாட்டுக்கு பதினஞ்சாயிரம் தர முடியாது பத்தாயிரம்தான் தருவேன்னு அடம் பிடிக்கிறாங்க!”
“மார்ஸ் டிவியோட ரேட்டிங்கும் குறைஞ்சிருக்கே”
“ஆமா சார் அது 20 ல இருந்து 15 ரேட்டிங்கா ஆயிருக்கு. அத பத்தி நம்ம பேச முடியாதுல்ல சார். 4 ரேட்டிங்ன்றதால 15,000 தர்றதா ஒத்துகிட்டேன். இப்ப 3 ரேட்டிங்னா பத்தாயிரம்தான் தர முடியும்னு சொல்றாங்க சார்” என்றான் சீயோன்.
‘’அவங்க எங்க இருக்காங்க?’’ எனக் கேட்டார் மேனன்.
“கான்ஃபரன்ஸ் ரூம்ல வெயிட் பண்றாங்க” என்றான் சீயோன்.
மேனன் எழுந்தார்.
“சார், மாசம் ஒரு கோடி தர்றான். வருஷத்துக்கு 12 கோடி... பெரிய கிளையன்ட் சார். கொஞ்சம் பொறுமையா பேசுங்க... பதினஞ்சாயிரம் தந்த இடத்தில மூவாயிரம் குறைச்சுகிட்டு அவங்க 12000-க்கு ஒத்துகிட்டாகூட பெரிய விஷயம்தான் சார்” என்றான் சீயோன்.
மேனன் புன்னகையுடன் நகர்ந்தார்.
கான்ஃபரன்ஸ் ரூமில் ஹவுஸ் போட் கன்ஸ்ட்ரக்ஷன் எம்டி கங்காதரும் அவரது மகன் விஸ்வாவும் அமர்ந்திருந்தார்கள். விஸ்வா லண்டணில் எம்பிஏ படித்தவன் என சீயோன் மேனனின் காதைக் கடித்தான்.
“சொல்லுங்க சார்” என்றார் மேனன்.
“சார்தான் நம்ம சேனலோட பிசினஸ் ஹெட்” என்றான் சீயோன்.
விஸ்வா தொண்டையைச் செருமியபடி பேசத் தொடங்கினான்.
“சார்... மார்ஸ் டிவியில 20 டிஆர்பி ரேட்டிங் வர்ற ஷோவுக்கு நாங்க 50,000 குடுக்குறோம். அப்ப ஒரு டிஆர்பிக்கு 2500 ரூபா வேல்யூ வருது. அப்படி பார்த்தா உங்களோட 4 ரேட்டிங் ஷோவுக்கு பத்தாயிரம் ரூபாதான் நாங்க குடுக்கணும். ஆனா, இதுவரைக்கும் பதினஞ்சாயிரம் குடுத்துட்டு இருந்தோம். அத விடுங்க... இப்ப டிஆர்பி மூணாயிடுச்சு. நியாயமா 7500 ரூபாதான் தரணும். ஆனா, பத்தாயிரம் தரோம்னு சொல்றேன். இது எப்படித் தப்பாகும்?" எனக் கேட்டான் விஸ்வா.
கங்காதர் தன் லண்டன் ரிட்டன் மகன் அறிவாகப் பேசுவதைப் பார்த்து பெருமையுடன் ரசித்தபடி இருந்தார்.

“சாதாரண கடைல டீ 10 ரூபா, அதுவே சரவணபவன்ல 50 ரூபா, காபி டேல 75 ரூபா, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல 200 ரூபா. அதே டீ தான் அங்க பத்து ரூபா, இங்க ஏன் 200 ரூபா கேக்குறீங்கன்னு சொல்ல முடியாதில்ல!” என்றார் மேனன்.
“இப்ப என்ன உங்களை நீங்க ஸ்டார் ஹோட்டல்னு சொல்ல வர்றீங்களா?” எனக் கேட்டான் விஸ்வா.
மேனன் கோபப்படாமல் புன்னகைத்தபடி, “சீயோன்... இன்னைக்கு நம்ம சேனல்ல இவங்களோட விளம்பரம் எந்த ஸ்லாட்ல வருது” எனக் கேட்டார்.
“ஏழு மணில இருந்து ஏழரை மணிக்குள்ள 4 தடவை வருது சார்” என்றான் சீயோன்.
“இன்னைக்கு மார்ஸ் டிவியில அதே டைம்ல உங்க விளம்பரம் வருதா?” எனக் கேட்டார் மேனன்.
“ஆமா வருது... 6 தடவை வருது” என்றான் விஸ்வா.
“இந்த விளம்பரத்தோட ரெஸ்பான்ஸ் எப்படிக் கண்டுபிடிக்கிறீங்க?” எனக் கேட்டார் மேனன்.
“அந்த ஷோ முடிஞ்சதும் எங்க கம்பெனி கால் சென்டருக்கு எத்தனை கால் வருதோ அதை வெச்சு அந்த விளம்பரத்துக்கு எவ்வளவு ரெஸ்பான்ஸ்னு கண்டுபிடிப்போம்” என்றார் கங்காதர்.
மேனன் அவரை நிமிர்ந்து பார்த்தார்.
“ரெண்டு சேனலுக்கும் வேற வேற ஆஃபர்ன்றதால அவங்க எந்த சேனலைப் பார்த்திட்டு போன் பண்றாங்கன்றதை கண்டுபிடிச்சிட முடியும்” என்றார் கங்காதர்.
“சரி, மணி இப்ப ஆறே முக்கால். ஏழு மணில இருந்து ஏழரை மணிக்கு உங்க விளம்பரம் ரெண்டு சேனல்லயும் வரட்டும். அதுக்கப்புறம் எந்த சேனலை பார்த்துட்டு அதிகமான ஆட்கள் போன் பண்ணியிருக்காங்கன்னு பார்ப்போம். அதை வச்சுகிட்டு பேசலாம்” என்றார் மேனன்.
“போன்ல என்கொயரி பண்றது விஷயம் இல்ல... பத்தாயிரம் ரூபா கட்டி புக் பண்ணனும். அதுதான் ரியல் ரெஸ்பான்ஸ்” என்றான் விஸ்வா.
“அதுவும் என்னன்னு கவுன்ட்ல எடுத்துப்போம்” என்றார் மேனன்.
கான்ஃபரன்ஸ் ரூமில் டிவி ஆன் செய்யப்பட்டு நிகழ்ச்சி ஓடி முடிந்தது.
“இன்னொரு அரை மணி நேரம் ரெஸ்பான்ஸுக்குக் குடுப்போம்” என்றான் விஸ்வா.
மேனன் தலையாட்டினார். மணி எட்டானது. விஸ்வா தனது கம்பெனிக்கு போன் செய்து ஸ்பீக்கரில் போனை போட்டான். போன் அடித்தது. சீயோனுக்கு வியர்த்தது. மேனன் எப்போதும் போல் புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.
“ஹலோ” என்றான் கால் சென்டர் நபர்.
“எந்த சேனல் ரெஸ்பான்ஸ் எவ்வளவுன்னு சொல்லுங்க” என்றான் விஸ்வா.
“சார் மார்ஸ் டிவியில 6 ஸ்பாட் போட்டிருக்கோம். மொத்தம் 50 கால் வந்தது சார். அதுல 3 பேர் புக்கிங் பண்ணியிருக்காங்க சார்” என்றான் விஸ்வாவின் கால் சென்டர் அதிகாரி.
“ஆரஞ்ச் டிவி ரெஸ்பான்ஸ் சொல்லுங்க”
அனைவரும் சின்ன எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். கங்காதர் மெதுவாக
சேரின் முன்னால் நகர்ந்து அமர்ந்தார்.
“சார் ஆரஞ்ச் டிவியில 4 ஸ்பாட் போட்டோம் சார். மொத்தம் 180 கால் வந்துச்சு சார்”
விஸ்வாவின் முகம் மாறியது.
“அதுல எத்தனை பேர் புக் பண்ணியிருக்காங்க”
“மொத்தம் 45 பேர் புக் பண்ணியிருக்காங்க சார்”
விஸ்வா போனை துண்டித்தான்.
“எத்தனை பேர் உங்க விளம்பரத்தை பாக்குறாங்கன்றது முக்கியம் இல்ல. பாக்குறதுல எத்தனை பேர் உங்களுக்கு வியாபாரமா கன்வர்ட் ஆகுறாங்கன்றதுதான் முக்கியம். அதுதான் ஆரஞ்ச் டிவி பாக்குறவங்களுக்கும் மத்த சேனல் பாக்குறவங்களுக்கும் உள்ள வித்தியாசம். நம்ம சேனல் பாக்குறவங்கதான் நீங்க எதிர்பார்க்குற கன்ஸ்யூமர்ஸ். 50 கால் 3 புக்கிங் பெருசா இல்ல 180 கால், 45 புக்கிங் பெரிசா?” எனக் கேட்டார் மேனன்.
“சாரி சார்... நாங்க பதினஞ்சாயிரம் ரூபாயே குடுத்துடுறோம்” எனச் சமாளிக்காமல் சரண்டைந்தான் விஸ்வா.
“சாரி விஸ்வா... இதுக்கப்புறம் ஒரு ஸ்பாட்டோட விலை அம்பத்தஞ்சாயிரம் ரூபா” என்றார் மேனன். அனைவரும் அதிர்ச்சியானார்கள்.
“இது அநியாயம்” என்றான் விஸ்வா.
“இவ்வளவு நாள் நீங்க குடுத்ததுதான் அநியாயம். வேணும்னா விளம்பரம் போடுங்க... இல்லைனா விட்டுடலாம்” என எழுந்தார் மேனன்.
“சார் நாங்க எடுத்துக்குறோம்” என்றார் கங்காதர்.
“அப்பா” என விஸ்வா ஏதோ சொல்ல வர அவனை கண்ணால் அடக்கினார் கங்காதர்.
“வேற எந்த சேனலுக்கும் விளம்பரம் குடுக்கல... உங்களுக்கு மட்டும் எக்ஸ்க்ளூசிவா தர்றேன். 45,000 பண்ணிக்க முடியுமா?”
“ஒகே” என நகர்ந்தார் மேனன். வாயடைத்துப் போனான் சீயோன். 12,000 கிடைக்குமா என எதிர்பார்த்து கொண்டிருந்தவன் 45,000 ரூபாய்க்கு டீல் கிடைத்தால் அதிர்ச்சியாகாமல் என்ன செய்வது. அவசரமாக அவன் மேனன் பின்னால் ஓடி வந்தான்.
“இனிமே எல்லா கன்ஸ்ட்ரக்ஷன் விளம்பரத்துக்கும் ஒரு ஸ்பாட் 45,000 தான்னு சொல்லிடுங்க” என நகர்ந்தார் மேனன். மீண்டும் ஒரு முறை இன்ப அதிர்ச்சி சீயோனை ஆட்கொண்டது.
“எந்த பால் போட்டாலும் அடிக்கிறாரே...” என்றது அவன் மனது.
………………………………………..
ஏஞ்சல், தல்வார் டவர் வாசலில் ஆட்டோவுக்காக காத்துக் கொண்டிருந்தாள். லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. ஆட்டோக்கள் நிற்காமல் அவளைக் கடந்து சென்று கொண்டிருந்தன. மழை வரும் முன் ஆட்டோக்களும் வீடு சென்று சேர்ந்துவிட வேண்டும் என நினைத்தால் என்ன செய்வது என அவளுக்குத் தோன்றியது. அந்த நினைப்பு அவளுக்கு சிரிப்பையும் தந்தது.
ஹார்ன் சத்தம் கேட்டு ஏஞ்சல் திரும்பினாள்... பிஎம்டபுள்யூ கார் ஒன்று அவளுக்கு முன்னால் வந்து நின்றது. யாருடையதாக இருக்கும் என்ற குழப்பத்துடன் அவள் பார்த்தாள். காரின் கண்ணாடி கீழிறங்க உள்ளே இருந்து ராய் கையை ஆட்டினான்.
“ஏஞ்சல் வாங்க டிராப் பண்றேன்” என்றான் ராய்.
“நீங்க எங்க போறீங்க?”
“எங்க போனாலும் உங்களை டிராப் பண்ணிட்டு போறேன்... உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!”
ஏஞ்சல் காரில் ஏறி அமர்ந்தாள்.
“என்னோட கார்தான் இது... கல்கத்தாவுல இருந்து கொண்டு வந்துட்டேன். ஐ லவ் டிரைவிங்” என்றான் ராய்.
ஏஞ்சல் புன்னகைத்துக் கொண்டாள்.
ராயின் கார் பாரிமுனை சாலையில் மெதுவாக நகரத் தொடங்கியது.
“என்ன பேசணும்?” எனக் கேட்டாள் ஏஞ்சல்.
“நான் ராய்... மார்க்கெட்டிங் ஹெட்”
“இது எனக்கு தெரியாதா” என்பது போல ஏஞ்சல் பார்த்தாள்.
“இது உங்களுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியாத ஒண்ணு. நானும் திவ்யாவும் 5 வருஷம் லவ் பண்ணோம். இரண்டு குடும்பமும் பேசி கல்யாண டேட் எல்லாம்கூட ஃபிக்ஸ் பண்ணாங்க. அப்புறம் செட்டாகாம நாங்க பிரிஞ்சிட்டோம்” என்றான் ராய்.
ஏஞ்சல் அவன் பக்கமாக திரும்பி அமர்ந்தாள்.
“எனக்கு சுத்தி வளைச்சு பேசத் தெரியாது. நேராவே சொல்லிடுறேன். நான் திவ்யாவோட திரும்பவும் சேரணும்னு விரும்புறேன். அவளோட பேரன்ட்ஸ் சப்போர்ட்கூட எனக்கு இருக்கு!”
“இதை எல்லாம் ஏன் என்கிட்ட சொல்றீங்க?”
“ஏன்னா திவ்யா இப்ப லவ் பண்றதா நினைச்சிக்கிட்டு இருக்கக்கூடிய மார்க்ஸோட எக்ஸ் நீங்கன்னு எனக்கு தெரியும் அதான்!”
ஏஞ்சல் எரிச்சலானாள்.
“இங்க பாருங்க” என ஏஞ்சல் கோபமாக ஆரம்பிக்க ராய் இடைமறித்தான்.
“சாரி உங்களைக் கஷ்டப்படுத்துறதுக்காக இத சொல்லல... உங்களைப் பிடிச்சவன் உங்களுக்கும் எனக்கு பிடிச்சவள் எனக்கும் கிடைக்கணும்.. என்ன பண்ணலாம் சொல்லுங்க?”
“இங்க பாருங்க எனக்கு மார்க்ஸ் எல்லாம் தேவையில்ல... நான் அவனை தூக்கி எறிஞ்சிட்டேன்”
“ஓகே.. உங்களுக்கு மார்க்ஸ் வேணாம். ஆனா எனக்கு திவ்யா வேணும். அவ இல்லாத வாழ்கையை என்னால யோசிச்சு கூட பார்க்க முடியல. எனக்கும் அவளுக்கும் நடுவுல இருக்கிற பிரச்னையை என்னால சரி பண்ண முடியும்... இந்த மார்க்ஸ் மட்டும் நடுவில இல்லைனா...” என்றான் ராய்.
“என்னை என்னன்னு நினைச்சு பேசிக்கிட்டு இருக்கீங்க நீங்க?”
“எனக்கு இங்க யாரையும் தெரியாது. நீங்கதான் எனக்கு திவ்யா கிடைக்க ஹெல்ப் பண்ணனும்… ப்ளீஸ்” என்றான் ராய்.
“அதாவது எனக்கு மார்க்ஸைப் பிடிக்காது. அதனால நான் மார்க்ஸ் திவ்யா லவ்வை போட்டு தள்ளணும். அப்படி பண்ணிட்டா நீங்க திவ்யாவோட சேர்ந்துருவீங்க அதான!”
“எக்ஸாக்ட்லி... இத நான் வேற வேற வார்த்தையில நாசூக்கா சொல்லலாம். ஆனாலும், நான் சொல்ல நினைக்கிறது இதுதான்!”
ஏஞ்சல் ராயைப் பார்த்தாள். அவனை பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது. பேட்டும் பாலும் கையில் இருந்தாலும் விளையாட்டுக்கு யாரும் சேர்த்துக்கொள்ளாமல் தனியாக அமர்ந்திருக்கும் பாவமான பணக்காரக் குழந்தையை அவன் நினைவூட்டினான்.
“எனக்கு மார்க்ஸைப் பிடிக்காதுதான்” என்றாள் ஏஞ்சல். ராய் அவளைத் திரும்பி பார்த்தான்.
“அவனை திவ்யா மாதிரி ஒரு பொண்ணு லவ் பண்றதை பாக்குறப்ப எனக்கு கோபமாதான் இருக்கு!”
ராய் பார்த்தபடி இருந்தான்.
“சரி... அவங்க காதல் பிரேக் அப் ஆச்சுன்னா திவ்யா திரும்ப உங்களை லவ் பண்ணுவான்னு என்ன கேரன்ட்டி?”
“மார்க்ஸ் நடுவுல இல்லாம இருந்தா போதும்… திவ்யாவை என்னால கன்வின்ஸ் பண்ண முடியும்” என்றான் ராய்.
சற்று நேரம் யோசித்த ஏஞ்சல் பெருமூச்சு விட்டபடி, “நியாயமா கல் எறிஞ்சு பார்ப்போம். நீங்க நினைக்கிறது நடந்தா நல்லது. நடக்கலைனா இந்த கார்ல அப்படியே நீங்க கல்கத்தாவுக்கு போயிட வேண்டியது தான்” என்றாள்.
ராய் சிரித்தான். ஏஞ்சலும் சிரித்தாள்.
தான் செய்வது தவறு என ஏஞ்சலுக்குத் தோன்றியது. அதே சமயம் அது அவளுக்கு பிடித்தும் இருந்தது. அவளுக்குத் தெரியும் எங்கு தட்டினால் மார்க்ஸ் விழுவான் என்று. தட்டிவிட வேண்டியதுதான் என முடிவு செய்தவள் காரில் சாய்ந்து அமர்ந்தாள்.
வெளியே இடி ஒன்று இடித்து பலத்த சத்ததுடன் மழை பெய்யத் தொடங்கியது.