Published:Updated:

இடியட் பாக்ஸ் - 66: ஆரஞ்சு டிவிக்குள் இருக்கும் கறுப்பு ஆடு எது?

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 66: ஆரஞ்சு டிவிக்குள் இருக்கும் கறுப்பு ஆடு எது?

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

"நம்ம டீம்ல ஒரு ஸ்பை இருக்கான் சார்" என்றாள் திவ்யா.

மேனன் சற்றும் யோசிக்காமல் “குட்... வெரி குட்” என்றார். தாட்சா, மார்க்ஸ், திவ்யா மூவரும் ஆச்சரியமாக அவரைப் பார்த்தனர்.

“சார்... நம்ம ஆபிஸ்ல நடக்குறத எல்லாம் ஆப்போஸிட் சேனலுக்கு உடனே உடனே இன்ஃபார்ம் பண்றாங்க சார்”

“ஆமா... அதான ஸ்பையோட வேலை” என்றார் மேனன்.

“அது யாருன்னு கண்டுபிடிச்சு வேலைய விட்டு தூக்க வேண்டாமா சார்?”

“அய்யய்யோ... அப்படி எல்லாம் எதுவும் பண்ணிடாதீங்க... ஸ்பையை நல்ல படியா பார்த்துக்க வேண்டியது நம்ம பொறுப்பு” என சிரித்தார் மேனன்.

“என்ன மேனன்... கன்ஃப்யூஸ் பண்றீங்க?” என கேட்டாள் தாட்சா.

“மத்த சேனல்ல என்ன நடக்குதுன்னு நமக்கு சொல்றதுக்கு ஆட்கள் கிடைக்கிறது ஈஸி. ஆனா, நம்ம சேனல்ல நடக்கிறதை மத்த சேனலுக்கு சொல்ற மாதிரி ஒரு ஆள் கிடைக்குறதுதான் கஷ்டம்” என்றார் மேனன்.

“சார்... நீங்க சொல்றது எனக்கு சுத்தமா புரியல சார்” என்றாள் திவ்யா.

“நம்ம இந்த ஸ்பையை நல்லா யூஸ் பண்ணிக்கலாம் திவ்யா. நம்ம என்ன தப்பான தகவல மார்ஸ் டிவிக்கு அனுப்பனும்னு நினைச்சாலும் அது முடியும். ஃபார் எக்ஸாம்பிள் நம்ம தீபாவளி அன்னைக்கு ‘காலா’ போடப் போறோம்னு சும்மா கான்ஃபரன்ஸ் ரூம்ல டிஸ்கஸ் பண்ணலாம். உடனே நியூஸ் அவங்களுக்குப்போகும் அவங்க ஒரு நல்ல படத்தை நம்மள கவுன்ட்டர் பண்ண ரெடி பண்ணுவாங்க... நம்ம ‘காலா’வை தீபாவளிக்கு முந்தின நாளே போட்டுரலாம்” என்றார் மேனன்.

அனைவரும் அவரை ஆச்சரியமாக பார்த்தனர்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“நம்ம ஒரு ஷோவ 8 மணிக்கு போட போறோம்னு சொல்லுவோம். அவங்க அதுக்கு ப்ரிபேர் ஆகுறப்ப நம்ம அதை 9 மணிக்கு லான்ச் பண்ணுவோம்.”

“சான்சே இல்ல சார்” என்றான் மார்க்ஸ்.

“அந்த ஸ்பையை நமக்கு வேலை செய்ய வைப்போம். நம்ம ரைட்டுன்னு சொல்லுவோம். அவன் போய் அவங்க கிட்ட சொல்லுவான். அவங்க ரைட்ல தயாரா இருக்கும் போது நம்ம லெஃப்ட்ல போயிடலாம்” என்றார் மேனன்.

அனைவரும் சிரித்தனர்.

“சார் அது யாருன்னு கண்டுபிடிச்சு வச்சுக்கலாமா சார்?” எனக் கேட்டாள் திவ்யா.

“வேணாம் திவ்யா அதுக்கு நம்ம டைம் வேஸ்ட் பண்ணனும்னு அவசியம் இல்ல” என்றார் மேனன்.

“இல்ல சார் அவங்களுக்கு தண்டணை எதுவும் குடுக்க வேண்டாமா?”

“இப்படி தப்பு தப்பான இன்ஃபர்மேஷன் குடுத்தா அவனுக்கு தண்டணைய அவங்களே குடுப்பாங்க” எனச் சிரித்தார் மேனன். அனைவரும் சிரித்தனர்.

“எப்படி மேனன் எங்களுக்கு பிரச்னையா தோன்ற ஒரு விஷயம். உங்களுக்கு பாசிபிலிட்டியா தெரியுது?” என கேட்டாள் தாட்சா.

“நடக்கிறதை மாத்த முடியாது. அதனால அத பத்தி நாம நினைக்கிறதை மாத்திக்க வேண்டியதுதான். பிரச்னைன்னு கவலைப்படாம அதுதான் நமக்கு கிடைச்சிருக்கிற நல்ல வாய்ப்புன்னு நினைச்சுக்கிட்டா சந்தோஷமாயிடுதுல்ல மனசு. நம்ம என்ன மனசுல சொல்றமோ அத அப்படியே பெரிசு பண்ணிகிட்டே போகும். அதனால நமக்கு நடக்கிற கெட்ட விஷயத்தை கூட நல்ல விஷயம் தான்னு சொல்லி நம்ம மனச ஏமாத்திட்டோன்னா அது நம்பிடும்” என்றார் மேனன்.

அறையிலிருந்த அனைவரும் சிரித்தனர்.

“சார்... வேற லெவல் சார் நீங்க” என்றான் மார்க்ஸ்.

மேனன் புன்னகையுடன் கை கூப்பினார்.

மார்ஸ் டிவியின் கான்ஃபரன்ஸ் ரூமில் தாம்சன் அமர்ந்திருந்தார். மனோஜும் மற்றவர்களும் அவர் எதிரே அமர்ந்திருந்தனர்.

வருடத்துக்கு ஒருமுறை தாம்சன் இந்தியா வருவதே பெரிய விஷயம். ஆனால், இது மூணு மாதத்தில் இரண்டாவது முறை. அவர் வரும் ஒரு முறைகூட அலுவலக அனுவல் டே-வாக இருக்கும். பாராட்டுகளையும் பரிசுகளையும் வழங்கிவிட்டு போய் விடுவார். நிகழ்ச்சிகள் குறித்து அவர் விவாதித்ததே இல்லை. அதற்கு அவசியமும் ஏற்பட்டதில்லை. மார்ஸ் எலைட்டினால் ஏற்பட்ட சறுக்கல் அவரை மீண்டும் வர வைத்திருந்தது.

தாம்சன் அறையில் இருந்தவர்களை உற்றுப் பார்த்தார். ஏசி குளிரிலும் அனைவருக்கும் வியர்த்தது.

“இந்த தப்புக்கு நான் முழு பொறுப்பு எடுத்துக்கிறேன். நடந்த குழப்பங்களுக்கு நீங்க யாரும் காரணம் இல்லை” என்றார் தாம்சன்.

தோல்விக்கு பொறுப்பு எடுத்துக் கொள்வதும் வெற்றியை அணியினருக்கு விட்டுத் தருவதும் நல்ல தலைமையின் பண்பு.

தாம்சன் அப்படி சொன்னதும் அனைவரும் சட்டென நெகிழ்ந்தார்கள். “இல்ல சார் எங்க பக்கமும் நிறைய தவறுகள் இருக்கு சார்” என்றான் மனோஜ்.

“நீங்க பண்ணது ஒரே தப்புதான். தப்பு பண்ணிட்டோம்னு தெரிஞ்சும் அதையே தொடர்ந்து பண்ணது” என்றார் தாம்சன்.

அனைவரும் அவரை பார்த்தனர்.

“தப்பே பண்ணாதவன் நம்பர் ஒன்னா வரவே முடியாது. தப்புல கத்துகிறவன் அந்த தப்ப வேகமா சரி பண்ண தெரிஞ்சவன்தான் நம்பர் ஒன்னா வர முடியும்.”

அனைவருக்கும் தலையாட்டினார்கள்.

“ஆரஞ்ச் டிவிக்கு under dog அட்வான்டேஜ் இருக்கு... இழக்குறதுக்கு எதுவும் இல்லாதவன் என்ன வேணா பண்ண முடியும். ஆனா, நாம அப்படி பண்ண முடியாது. நம்பர் ஒன்னா வர்றது ஈஸி. ஆனா அங்கயே உட்கார்ந்து இருக்கிறது ரொம்ப கஷ்டம். அதுக்குத்தான் நிறைய உழைப்பு தேவைப்படும், பிளான் தேவைப்படும்”

அனைவருக்கும் அவர் சொல்வதன் உண்மை புரிந்தது.

“மார்ஸ் எலைட் சக்சஸா... யெஸ் பெரிய சக்சஸ். ஆரம்பிச்ச முதல் வாரத்தில இப்படி ஒரு GRP எந்த சேனலும் பண்ணதில்லை. அதுதான் நம்ம பிராண்டோட சக்ஸஸ். நாம என்ன கொடுத்தாலும் மக்கள் என்னன்னு கூட யோசிக்காம அதை பாக்க தயாரா இருக்காங்க... தட் வில் மேக் அஸ் மோர் ரெஸ்பான்சிபிள்”

அனைவரும் தலையாட்டினார்கள்.

“ஆனா எலைட்டோட சக்சஸ் நம்ம மெயின் சேனலை ஹிட் பண்ணிருச்சு அதான் பிராப்ளம். அத நாம எதிர்பார்த்தோம், ஆனா இவ்வளவு பெரிசா எதிர்பார்க்கல... ஆபரேஷன் சக்ஸஸ்.. ஆனா பேஷன்ட்தான்...” என தாம்சன் நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

“மார்ஸ் எலைட்டோட ஷோஸ் எல்லாம் நிறுத்திட்டு அதை ஒரு ஃபுல் டைம் மூவி சேனலா மாத்திடலாம்.”

“நல்ல ஐடியா சார். ஏற்கெனவே ஒரு மூவி சேனல் ஆரம்பிக்கிற பிளான் நமக்கு இருக்கு தான சார்” என்றான் மனோஜ்.

“தசரா வீக் வருது... நவராத்திரியை முன்னிட்டு ஸ்பெஷல் படங்கள்னு சொல்லி சீரியல்களை நிறுத்திட்டு படம் போடுங்க... அப்படியே படங்களை கன்டின்யூ பண்ணிடலாம்” என்றார் தாம்சன்.

“யெஸ் சார்” என அனைவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

“சார்... மார்ஸ் எலைட்டுல ரெண்டு சீரியல் ரொம்ப நல்லா போகுது சார்” என்றான் கூட்டத்தில் ஒருவன்.

“அந்த ரெண்டு சீரியலை மட்டும் மெயின் சேனலுக்கு மாத்திடுங்க” என்றார் தாம்சன். அனைவருக்கும் அவரது யோசனை சரியாகவே பட்டது.

“என்ன தப்பா போச்சுன்னு உங்களில் யாருக்காவது ஒப்பினியன் இருக்கா?” என அவர்களைப் பார்த்து கேட்டார்.

அவர்கள் அனைவரும் பதில் ஏதும் சொல்லாமல் அவரைப் பார்த்தனர்.

“நமக்கு எது வருமோ அதை பண்ண முயற்சி பண்ணாம... அவங்களுக்கு எது நல்லா வருமோ அதை பண்ண நாம முயற்சி பண்ணதுதான் இந்த செட்பேக்குக்கு காரணம்.”

''யெஸ் சார்'' என்றான் மனோஜ்.

''நான் மார்ஸ் எலைட் ஐடியா சொன்னப்ப யாருக்கு அது வொர்க் அவுட் ஆகாதுன்னு தோணிச்சு!''

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“தைரியமா சொல்லலாம்.”

கூட்டத்தில் ஒருவன் கை தூக்கினான்.

''ஏன் அப்பவே சொல்லல''

“சொன்னா நீங்க கேட்பீங்களான்னு சந்தேகமா இருந்துச்சு சார்”

“நிச்சயமா நான் கேட்டிருக்க மாட்டேன். ஆனாலும் நீங்க சொல்லியிருக்கணும்” என சிரித்தார் தாம்சன்.

அனைவரும் புன்னகைத்தனர்.

“கருத்து சொல்றதுக்கு இங்க எல்லாருக்கும் உரிமை இருக்கு. கருத்துக்களை தைரியமா சொல்லலாம். கருத்து சொல்றவங்க ஆபத்தானவங்க கிடையாது. நாம சொல்றதுக்கு எல்லாம் சூப்பர்னு கை தட்டுறவங்க தான் ஆபத்தானவங்க. அவங்க தான் நம்ம தவறான முடிவுகளை எடுக்க முக்கியமான காரணமா இருக்கிறவங்க” என்றார் தாம்சன்.

அனைவரும் புன்னகையுடன் தாம்சனைப் பார்த்தனர்.

“எனிதிங் எல்ஸ்”

“நம்ம ஆரஞ்ச் டிவியை பார்த்து காப்பியடிக்க ட்ரை பண்றோம்னு ஒரு இமேஜ் நமக்கு வந்துடுச்சு சார்” என்றான் ஒருவன்.

“உண்மைதான்” எனத் தலையாட்டினார் தாம்சன்.

மற்ற துறைகளை போல் அல்ல மீடியா. அம்பானியின் கம்பெனியில் இருக்கும் ஒருவர் அதானியின் கம்பெனிக்கு போவதெல்லாம் வேலை வாய்ப்பாகத்தான் பார்க்கப்படும். திறமையான ஒருவரை இன்னொரு கம்பெனியில் இருந்து தூக்குவது வியாபார தந்திரமாக பார்க்கப்படும். சரியான முடிவு என பாராட்டப்படும். அதை விட முக்கியமாக ஹமாம் சோப் வாங்கும் ஒருவனுக்கு அந்த நிறுவனத்தில் வேலை செய்பவரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது பற்றி அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை. அது அவனை எந்த விதத்திலும் பாதிக்க போவதும் இல்லை. ஆனால் மீடியா என்பது வேறு.

மீடியா நிறுவனங்களுக்கு என்று முகம் உண்டு. அதில் இருக்கும் வர்ணனையாளர்களும், நடிகர் நடிகைகளும் தான் அந்த நிறுவனத்தின் முகங்கள். அவர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்குப் போகும்போது அது மக்களின் மனதை பாதிக்கும். ஒரு சேனலின் அடையாளமாக பிரபலமாக இருந்தவர்கள் பலர் மற்றொரு சேனலுக்கு சென்று காணாமல் போன நிகழ்வுகள் நிறைய உண்ட

“அந்த காப்பிகேட் இமேஜை மட்டும் மாத்தணும் சார்” என்றான் அவன்.

“வெற்றி ஒண்ணுதான் இது எல்லாத்துக்கும் பதில். காம்ப்படிஷனை குளோசா வாட்ச் பண்ணுங்க... அவன் திருடன்... திருடுற அரை மணி நேரம் அவன் அலர்ட்டா இருந்தா போதும். நாம போலிஸ்காரன் 24 மணி நேரமும் அலர்ட்டாதான் இருக்கணும்” என்றபடி தாம்சன் போனை எடுத்தார்.

“தேங்க்ஸ் ஃபார் த டிடெய்ல் ரிப்போர்ட்... நீங்க என்ன சொன்னீங்களோ அதைதான் இவங்களும் சொன்னாங்க... உங்க ஐடியாக்களை அப்படியே இம்ப்ளிமென்ட் பண்ணிட்டேன்” என அவர் போனில் பேச துவங்கினார்.

அனைவரும் அவர் தனியாக ஏதோ பெரிய ரிசர்ச் ஏஜென்சி மூலம் இந்தத் தகவலை திரட்டியிருக்கிறார் என நினைத்தபடி அவரைப் பார்த்தனர். தாம்சனோ அம்மா ஆக்னஸ்க்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

போனை வைத்து விட்டு திரும்பியவர் சொன்னார்.

“ஏஜென்ஸிஸ் தர்ற ரிசர்ச் ரிப்போர்ட் மட்டும் பார்த்தால் போதாது. சமயம் கிடைக்கும் போதெல்லாம் புரோகிராமிங் ஆட்கள் கிரவுண்டுக்கு போகணும். அங்க இருக்கிறவங்களோட கருத்துக்கள நேரா கேட்கணும். ரிப்போர்ட்ஸ்க்கு முகம் கிடையாது. ஆனா யாரோ ஒரு ஹவுஸ் வொய்ஃப் நம்ம முகத்துக்கு நேரா பேசுறப்ப கிடைக்கிற இம்பக்ட்டே வேற!”

“நான் அதுக்கு அரேஞ்ச் பண்றேன் சார்” என்றான் மனோஜ்.

“நான் உங்க பாஸ் கிடையாது. ஒரு சின்ன டிவியில எங்கயோ உட்கார்ந்து நம்ம சேனல் பாக்குறான் பாருங்க... அவன்தான் நம்ம எல்லாருக்கும் பாஸ். அந்த எண்ட் கன்ஸ்யூமர் குடுக்கிற 35 ரூபாலதான் என்னோட ரோல்ஸ் ராய்ஸ் ஒடுது” எனச் சிரித்தார் தாம்சன்.

அனைவரும் சிரித்தனர்.

படைப்பாளிகள் மக்களோட நெருக்கமாக இருக்கும் வரை அவர்களது படைப்புகள் வெற்றி பெறுகின்றன. வெற்றி அவர்களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது. அந்தத் தொடர்பு தொலைந்து போன பிறகு அவர்களது படைப்புகள் உயிரற்றுபோய் விடுகின்றன. படைப்பாளிகளை பொறுத்தவரை வெற்றிதான் தோல்வியின் முதல் படி. தாம்சன் வெற்றியை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் பாடம் படிக்கத் தயாரானார்.

மார்க்ஸும் திவ்யாவும் கடற்கரையில் அமர்ந்திருந்தார்கள்.

“அப்பா என்ன ஊருக்கு வர சொன்னாரு” என்றாள் திவ்யா.

“போயிட்டு வா... நீ ஊருக்கு போய் ரொம்ப நாளாச்சே” என்றான் மார்க்ஸ்.

எதுவும் பேசாமல் திவ்யா அவனை திரும்பி பார்த்தாள்.

“என்ன திவ்யா நான் எதுவும் தப்பா சொல்லிட்டனா” என கேட்டான் மார்க்ஸ்.

“அப்பா எதுக்கு வர சொல்றாருன்னு தெரியுமா?”

“எதுக்கு வர சொல்றாரு” என கேட்டான் மார்க்ஸ்.

“என்னோட கல்யாண விஷயமா பேசுறதுக்கு வர சொல்றாரு”

என்றாள் திவ்யா.

“நல்ல விஷயம் தான” என சிரித்தான் மார்க்ஸ்.

“விளையாடாத... அப்பா பத்தி உனக்கு தெரியும் இல்ல...” என எரிச்சலாக சொன்னாள் திவ்யா.

“என்ன பிரச்னை உனக்கு?” என கேட்டான் மார்க்ஸ்.

“அவர் உன்ன கட்டிக்க ஒத்துக்க மாட்டாரு”

“நானும் அவர கட்டிக்கிறதா பிளான் இல்ல” என சிரித்தான் மார்க்ஸ்.

அவள் கோபமாக எழுந்தாள்.

“ஏய்... ஏய்… கோபப்படாத... இப்ப என்ன பண்ணனும் சொல்லு”

“அத தான் நான் உன்னை கேட்கிறேன்” என்றாள் திவ்யா.

“என்ன கேட்டா நான் என்ன சொல்றது... என் வீட்ல பிரச்னைன்னா நான் சொல்லலாம். உன் அப்பா கிட்ட நீ தான் பேசணும்!''

“அப்ப அதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்ல” என கோபமாக கேட்டாள் திவ்யா.

“திவ்யா... எதுக்கு கோபப்படுற.... உன் அப்பா கிட்ட பேசு.... நீ என்ன காதலிக்கிறேன்னு சொல்லு... என்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு சொல்லு”

“அவர் முடியாதுன்னு சொல்லுவாரு”

“நீயும் முடியாதுன்னு சொல்லு” என்றான் மார்க்ஸ்.

''என்னால அப்படி எல்லாம் என் அப்பா கிட்ட அப்படி பேச முடியாது” என்றாள் திவ்யா.

“அப்ப என்ன பண்ணலாம்?”

“நீ சொல்லு”

“ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்” என்றான் மார்க்ஸ்.

“அதுதான் உனக்கு தெரிஞ்ச ஒரே வழியா?”

“எனக்கு என்ன பண்றதுன்னு புரியல” என்றான் மார்க்ஸ்.

“புதன்கிழமை ராத்திரி எனக்கு டிரெயின். அதுக்குள்ள நீ என்ன பண்ணலாம்னு யோசிச்சு சொல்லு...”

“இல்லன்னா?”

“யோசிச்சு சொல்லு” என்றாள் திவ்யா...

“இல்லன்னா என்ன பண்றது?”

திவ்யா அவனை முறைத்து பார்த்தவள் பதில் ஏதும் பேசாமல் நகர்ந்தாள்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

மார்க்ஸ் அவள் போவதை பார்த்துக் கொண்டே இருந்தான். எப்படியும் அவள் தன்னுடன் தான் பைக்கில் வர வேண்டும் என்பதால் அவன் பொறுமையாக அவள் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

மணலை கடந்து சாலைக்கு வந்த திவ்யா ஆட்டோ ஒன்றை கை காட்டி நிறுத்தினாள். அப்போது தான் அவளது கோபத்தின் ஆழத்தை புரிந்து கொண்டவனாக மார்க்ஸ் அவசரமாக “ஏய் திவ்யா... நில்லு” ஓடி வர அவள் ஆட்டோவில் ஏறினாள். ஆட்டோ கிளம்பி சென்றது.

ஓடி வந்தவன் மூச்சிறைக்க ஆட்டோ போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். எதற்காக திவ்யா கோபப்பட்டாள் என்பது கூட அவனுக்கு புரியவில்லை. நடந்தவைகளை அவன் மீண்டும் யோசித்துப் பார்த்தான். அவனுக்கு தன் மேல் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

பெண்களின் கோபத்துக்கு பெரிதாக காரணம் எல்லாம் தேவையில்லை. அவர்கள் நாம் இந்த பதிலை தான் சொல்ல வேண்டும் என முடிவு செய்து கொண்டு ஒரு கேள்வியை கேட்பார்கள். அதற்கு தவறான பதிலைச் சொன்னால் முடிந்தது கதை. அவர்கள் எதிர்பார்க்கும் பதிலை புரிந்து கொள்வதுதான் அவர்களை புரிந்து கொள்வதென அர்த்தம்.

பெருமூச்சுடன் புல்லட்டை எடுத்தவன் கோபம் அத்தனையும் சேர்த்து உதைக்க அது ஒரே உதையில் தடதடத்து கிளம்பியது. மார்க்ஸ் வீட்டிற்கு வந்த போது நந்திதா டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“திவ்யா எங்க?” என சன்னமான குரலில் கேட்டான் மார்க்ஸ்.

“தலை வலிக்குது தூங்க போறேன்னு சொல்லிட்டு போய் படுத்திட்டா” என்றாள் நந்திதா.

“ஓ” என்றான் மார்க்ஸ்.

நந்திதாவின் போன் அடிக்க அவள் போனை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள். மார்க்ஸ் திவ்யாவின் அறைக் கதவருகே வந்தவன் மெதுவாக கை வைத்தான். அறை உட்புறமாக தாளிடப்பட்டிருந்தது. தட்டலாமா என யோசித்தவன் காலையில் பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்து அங்கிருந்து நகர்ந்தான்.

தனது அறைக்குள் நுழைந்த மார்க்ஸ் அப்படியே படுக்கையில் சாய்ந்தான். தான் என்ன சொல்ல வேண்டும் என அவள் யோசிக்கிறாள் என்பது மார்க்ஸுக்குப் புரியவில்லை. அதை யோசித்தபடியே மார்க்ஸ் உறங்கிப் போனான்.

தூரத்தில் எங்கோ செல்போன் அடிக்கும் ஓசை கேட்டது. சட்டென அது தனது போன் தான் என்பதை உணர்ந்து வேகமாக எழுந்தான் மார்க்ஸ்.

அறை விளக்கை கூட அணைக்க மறந்து அப்படியே உறங்கிவிட்டோமே என்கிற யோசனையோடு செல்போனை கையில் எடுத்து பார்த்தான். “வந்தியதேவன் காலிங்” என்றது போன்.

நேரம் என்ன என பார்த்தான். இரவு மணி 2 என காட்டியது.

இந்த நேரத்தில் எதற்காக இவர் போன் செய்கிறார் என யோசித்தபடி போனை எடுத்தான் மார்க்ஸ்.

“ஹலோ சொல்லுங்க சார்” என்றான் மார்க்ஸ்.

“இந்த போன்ல உங்களோட நம்பர் ஃபேவரைட்டுல இருந்துச்சு அதான் போன் பண்ணோம்” என வேறு யாரோ பேசினார்கள்.

“சொல்லுங்க... என்னாச்சு?”

“அவருக்கு பூந்தமல்லி கிட்ட ஆக்சிடெண்ட் ஆயிருச்சு... ஆர்.எஸ்.எம் ஆஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்.”

அதிர்ந்து போய் எழுந்தான் மார்க்ஸ்.

“நீங்க யாரு பேசுறீங்க?”

“என் பேர் ராஜான்னு... நான் தான் ஆம்புலன்சுக்கு போன் பண்ணேன். இப்ப ஆஸ்பிட்டல்ல தான் இருக்கேன். நீங்க கொஞ்சம் வர முடியுமா? இல்ல அவங்க ஃபேமிலிக்கு ஏதாவது இன்ஃபார்ம் பண்றீங்களா?”

“நான் உடனே கிளம்பி வரேன்... அவருக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க சொல்லுங்க” என்றான் மார்க்ஸ்.

“அது ஆரம்பிச்சிட்டாங்க”

“நான் வந்துட்டே இருக்கேன்” என அவசரமாக உடை மாற்றியபடியே பாண்டியன், டார்லிங், வினு என ஆட்களுக்கு போன் செய்தபடி வண்டியை எடுத்தான் மார்க்ஸ்.

மார்க்ஸ் ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்து வண்டியை பார்க் செய்து விட்டு அவரசமாக எமர்ஜென்ஸியை நோக்கி ஓடினான். அவனுக்கு முன்பாகவே அங்கு அவனது ஆட்கள் அனைவரும் கூடியிருந்தார்கள்.

“எப்படிடா இருக்கு அவருக்கு”

“ஹெட் இஞ்சுரி தல... பார்த்துகிட்டு இருக்காங்க... உடனே எதுவும் சொல்ல முடியாதுன்றாங்க” என்றான் பாண்டியன்.

“அவங்க வீட்டுக்கு சொல்லியாச்சா?”

“இல்ல தல... அவங்க வொய்ஃபுக்கு போன் பண்ணேன்... எடுக்கல”

“டாக்டர் கிட்ட பேசுனீங்களா?”

“உள்ள பார்த்துட்டு இருக்காங்க” என்றான் வினோ.

மார்க்ஸ் பதற்றமாக என்ன செய்வது என தெரியாமல் யோசிக்க உள்ளே இருந்து நர்ஸ் ஒருவர் வெளியே வந்தார்.

“பேஷன்ட்டோட ரிலேட்டிவ்ஸ் யாராவது இருக்கீங்களா?”

“நான் அவரது தம்பிதான்” என்றான் மார்க்ஸ்.

“உடனே ஆபரேஷன் பண்ணனும்... அவருக்கு இன்சூரன்ஸ் ஏதாவது இருக்கா?”

“நான் செக் பண்றேங்க” என்றான் மார்க்ஸ்...

“முதல்ல ஒரு அம்பதாயிரம் மட்டும் கட்டுங்க” என்றாள் அவள்.

நெல்லையப்பன் பையிலிருந்து பணத்தை எடுத்தார்.

“ஏது மாமா இவ்வளவு பணம்?” என்றான் மார்க்ஸ்.

“பொண்ணுக்கு நகை வாங்க எடுத்து வச்சிருந்தாங்க...நல்ல வேளை அவசரத்துக்கு உதவியா போச்சு” என்றார் நெல்லையப்பன்.

“நான் கார்டுல போட்டிடுறேன் மாமா.”

“பணத்தை கட்டுப்பா அப்புறமா பார்த்துக்கலாம். ஒண்ணும் அவசரம் இல்லை”

வினு பணத்தை வாங்கிக் கொண்டு நகர்ந்தான்.

“ஒண்ணும் ஆபத்தில்லயேம்மா?” என நர்ஸிடம் கேட்டார் நெல்லையப்பன்.

“இப்ப ஒண்ணும் சொல்ல முடியாது... கொஞ்சம் கிரிடிக்கல்தான்” என்றபடி நகர்ந்தார் நர்ஸ்.

“அருமையான பையன்பா... ” என பேச முடியாமல் கண்கலங்கினார் நெல்லையப்பன்.

“ஒண்ணும் ஆகாது மாமா” என அவரை அணைத்துக் கொண்ட மார்க்ஸுக்கு மனமெல்லாம் எப்போதும் இல்லாமல் படபடக்கத் தொடங்கியது.

- Stay Tuned...