Published:Updated:

இடியட் பாக்ஸ் - 65: ரஜினிகாந்த் சீரியல்ல நடிக்கப்போறார்… நயன்தாரா டிவி ஷோல ஆடப்போறாங்க!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 65: ரஜினிகாந்த் சீரியல்ல நடிக்கப்போறார்… நயன்தாரா டிவி ஷோல ஆடப்போறாங்க!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

கான்ஃபரன்ஸ் அறையில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.

“இவன் எதுக்கு எல்லா மீட்டிங்குக்கும் வர்றான்” என தனபால் காதில் கிசுகிசுத்தாள் ஏஞ்சல்.

“டிஜிட்டல் டீம் எல்லா மீட்டிங்லயும் இருக்கிறது வழக்கம்தான” என்றார் தனபால்.

“மனோகரி டிஜிட்டல் ஹெட்டா இருந்தப்ப, அவங்களை நான் பார்த்ததே இல்லையே!”

“அதனாலதான் அந்தம்மாவ தூக்கிட்டாங்க!”

ஏஞ்சல் புன்னகைத்தாள்.

“மார்க்ஸை வெறுக்கிறது தான் உன் ஃபுல்டைம் ஜாப். ஆரஞ்சு டிவி பார்ட் டைம்தான்”

ஏஞ்சல் ஏதோ சொல்ல வாயெடுக்க,

“வாட் நெக்ஸ்ட்” என ஆரம்பித்தாள் தாட்சா.

அனைவரும் நிமிர்ந்து அவளைப் பார்த்தார்கள்.

“350-ல இருந்தோம் திரும்பவும் 250-க்கே போயிட்டோம் தேங்க்ஸ் டூ மார்ஸ் எலைட்”

“மார்ஸ் டிவியும் 1000-க்கு கீழ வந்திடுச்சே மேடம்” என்றார் நெல்லையப்பன்.

“நீங்க ஏன் சரியா படிக்கலைன்னு கேக்குறேன். அவன் கூட சரியா படிக்கலைன்னு பக்கத்தில இருக்கிற பையனை கை காட்டுறீங்க” என்றாள் தாட்சா.

அனைவரும் சிரித்தனர். பாண்டியன் சத்தமாக சிரித்தான்.

“அது என்ன... என்னை யாராவது அசிங்கப்படுத்துனா மட்டும் உனக்கு அவ்வளவு சந்தோஷம் வருது?” எனக் கேட்டார் நெல்லையப்பன்.

“தெரியல மாமா... ஆனா வருது!” என மீண்டும் சிரித்தான் பாண்டியன்.

“நம்ம கிட்ட என்ன பிரச்னை... ஏன் நம்மளால இந்த 300 ஐ தாண்டி போக முடியல?” எனக் கேட்டாள் தாட்சா.

“இந்த மார்க்கெட்டுல இத கூட யாரும் சாதிச்சதில்லை மேம்” என்றாள் ஏஞ்சல்.

“யெஸ்... 300 GRP-யவே நம்ம சாதனையா நினைச்சிக்கிட்டு சந்தோஷமா இருந்துடுறோம். அதான் நம்ம பிரச்னை... நம்மளோட ஆட்டிட்யூடை நாம கொஞ்சம் மாத்திப் பாக்கலாமா?” என்றாள் தாட்சா.

அனைவரும் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது போல பார்த்தனர்.

“நம்ம எப்பவுமே மார்ஸ் டிவியை பீட் பண்ணனும்னு நினைச்சதே இல்லை. இந்த வாரம் இருனூத்தி இருபதா சந்தோஷம், நாளைக்கு 221ஆ... அத விட சந்தோஷம். நம்ம தான் செகண்டுன்னு நமக்கு ரொம்ப பெருமை. ஒரு போதும் ஃபர்ஸ்ட்டாகணுன்னு நாம யோசிச்சதே இல்லை. இப்ப நம்ம மார்ஸ் டிவிய பீட் பண்றோம்னு யோசிச்சு பார்ப்போம்” என்றாள் தாட்சா.

“அது கஷ்டம் மேம்” என்றான் தனபால்.

“பீட் பண்றது கஷ்டம்தான். ஆனா, பீட் பண்ற மாதிரி யோசிச்சுதான பாக்கப் போறோம்... அது ஒண்ணும் கஷ்டம் இல்லையே” என்றார் மேனன்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“என்ன தனபால் அப்படி யோசிக்கிறதுகூட கஷ்டம்னு தோணுதா?” என தாட்சா புன்னகைத்தாள்.

தனபால் அவசரமாக இல்லை எனத் தலையாட்டினான்.

“அடுத்த அரை மணி நேரம் நம்ம நம்மளை சூப்பர் பவரா யோசிச்சுக்கலாம். நாமதான் உலகத்துலயே நம்பர் ஒன் சேனல். நம்ம கிட்ட ஏகப்பட்ட பணம் இருக்கு. நாம என்ன வேணா பண்ணலாம். இப்ப நம்ம தமிழ்நாட்டுல

நம்பர் ஒன்னா வரணும். அதுக்கு என்னெல்லாம் பண்ணலாம்னு யோசிக்கலாமா” என்றார் மேனன்.

“யெஸ் சார்” என அனைவரும் அந்த விளையாட்டுக்கு தயாரானார்கள்.

“வினு நீ போர்டுல என்ன எல்லாம் பண்ணலாம்னு நம்ம ஆட்கள் சொல்ற ஐடியாக்களை எழுது” என்றாள் தாட்சா.

வினு சிரிப்புடன் போர்ட் அருகே சென்று எழுதத் தயாரானான்.

“ரஜினிகாந்தை வெச்சு ஒரு சீரியல் பண்றோம்” என்றார் நெல்லையப்பன் அறையில் சிரிப்பொலி எழுந்தது.

“என்ன வினு வேடிக்கை பாக்குற... எழுது போர்டுல” என்றாள் தாட்சா.

அவன் சிரிப்புடன் எழுதினான்.

“ரஜினிகாந்த வச்சு சீரியலா... ஓவர் நக்கல்யா உனக்கு” என்றான் பாண்டியன்.

“யோசிக்கிறது தானடா... அதுல என்ன கஞ்சத்தனம் பண்ணிகிட்டு பெருசா யோசிப்போம்” என்றார் நெல்லையப்பன்.

“காலையில 6 மணியில இருந்து மறுநாள் காலையில 6 மணி வரைக்கும் சீரியல் பண்றோம்” என்றான் பாண்டியன்.

“அடப்பாவி 48 சீரியலா?” என்றார் நெல்லையப்பன்.

“ஏன் நீ ரஜினியை வெச்சு சீரியல் யோசிக்கிறப்ப நான் 48 சீரியல் யோசிக்கக் கூடாதா?” என்றான் பாண்டியன்.

“பழிக்குப் பழியா?”

“யெஸ்”

வினு போர்டில் அதை எழுத அனைவரும் சிரித்தார்கள்.

“நம்ம கேம் ஷோல எல்லாம் இனி பொது மக்கள் கலந்துக்க போறதில்லை… ராஷ்மிகா, நயன்தாரா, தமன்னான்னு ஸ்டார்ஸ் தான் கலந்துக்க போறாங்க” என்றான் தனபால்.

“எது நீ குடுக்குற 500 ரூபா ஆப்ப கடை கூப்பன் பிரைஸுக்கு நயன்தாரா போட்டியில கலந்துக்க போறாங்களா?” என்றார் நெல்லையப்பன்.

அனைவரும் சிரித்தார்கள்.

“இதையும் எழுதவா மேடம்” எனக் கேட்டான் வினு.

“ஆமா முக்கியமான ஐடியாவாச்சே எழுது” என்றாள் தாட்சா.

“உலகத்தோட நம்பர் ஒன் கேம் ஷோவை நாம தமிழ்ல பண்றோம்” என்றான் மார்க்ஸ்.

மேனன் திரும்பி அவனைப் பார்த்தார்.

“வழக்கமா நாம பண்றதுதான... யூடியூப்ல பார்த்துட்டு அதே மாதிரி ஒரு ஷோவை காப்பியடிப்போம். அவனுங்க அமெரிக்கா கேங்ஸ்டர்ஸ் பண்ணா அத நம்ம மாத்தி அமிஞ்சிக்கரை கேங்ஸ்டர்ஸ்ன்னு பண்ணுவோம் அதான?” என்றார் நெல்லையப்பன்.

“இல்ல... இல்ல ஒரிஜினல் ஷோவை யாரு பண்ணாங்களோ அதே கம்பெனி, அதே டீம் வச்சு அதே குவாலிட்டியில பண்ணணும்!”

“பட்ஜெட் கோடியை தாண்டுமேப்பா” என்றார் நெல்லையப்பன்.

“ஆகட்டும் அடுத்த அரைமணி நேரத்துக்கு நாமதான் உலகத்தோட பணக்கார சேனலாச்சே” என்றார் மேனன்.

“கோடியில பணம் செலவழிக்கிறது ஓகே சார்... அந்த அளவுக்கு விளம்பரம் வாங்கணுமே” என்றான் குரு.

“அது சீயோன் பிரச்னை... நீ ஏன் அதை பத்தி கவலைப்படுற?”

“அதான... நீ எப்படி விளம்பரம் பிடிப்பேன்னு கேட்டோமா... எப்படி புரோகிராம் பண்ணுவேன்னுதான கேட்டோம்... அத மட்டும் யோசி” என்றாள் தாட்சா.

“பெரிய பெரிய படமா வாங்குறோம்... முதல்ல நம்ம சேனல்ல போடுறோம். அப்புறமா தான் தியேட்டருக்கே போகுது” என்றார் நெல்லையப்பன்.

அனைவரும் சிரித்தனர்.

அனைவரும் தங்களுக்குத் தோன்றிய யோசனைகளைச் சொல்லி முடிக்க போர்ட் முழுவதும் ஐடியாக்களால் நிரம்பி வழிந்தது.

“இது எல்லாம் பண்ணா நம்ம மார்ஸ் டிவியை பீட் பண்ணிடலாம் இல்லையா” எனக் கேட்டாள் தாட்சா.

“யெஸ்... மேம்” என்றார்கள் அனைவரும்.

“திவ்யா இதெல்லாம் மார்ஸ் டிவியை நாம ஜெயிக்கிறதுக்கான ஐடியாஸ்... இதை பார்க்கும்போது என்ன தோணுதுன்னு சொல்லுங்க!” என்றாள் தாட்சா

திவ்யா எழுந்து போர்ட் அருகே வந்தாள்.

“ரஜினிகாந்த் வச்சு சீரியல்... அது நடக்காது. ஆனா, நம்மளோட ஒவ்வொரு சீரியல்லயும் ஒரு பிரபலமான ஆட்களை நாம பயன்படுத்தலாம்.” அனைவரும் திவ்யாவை பார்த்தபடியிருந்தனர்.

“தினம் 48 சீரியல் வாய்ப்பில்லை... இப்ப நாம 8 சீரியல் பண்றோம். மதியமும் சீரியல் ஆரம்பிக்கலாம். டைம் பேண்டை டபுள் பண்ணலாம். 16 சீரியல் பண்ணலாம்.” அனைவரது முகமும் மெல்ல மாறத்துவங்கின.

“நம்மளோட ஷோல எல்லாம் இப்ப பொதுமக்கள் தான் கலந்துக்கிறாங்க. நாம அடுத்து பண்ற டான்ஸ் ஷோ , கேம்ஷோ, ரியாலிட்டி ஷோல எல்லாம் செலிபிரட்டிகளை பார்ட்டிசிபன்ட்ஸா யூஸ் பண்ணலாம். தனபால் சொல்ற மாதிரி தமன்னா, நயன்தாரா வரப் போறதில்லை. நம்ம சீரியல் ஸ்டார்ஸை நாம யூஸ் பண்ணிக்கலாம். அவங்களும் பாப்புலர்தான்!”

அனைவருக்கும் அது சரியான யோசனையாகத் தோன்றியது.

“அவங்க இந்த சாதாரண பிரைஸ்க்காக போட்டியில கலந்துப்பாங்களா?” என்றாள் ஏஞ்சல்.

“வேண்டாம். அவங்களோட ஒரு நாள் பேமன்ட் கொடுத்துடலாம். இதை அவங்க போட்டியா நினைக்காம ஷூட்டிங்கா நினைச்சு கலந்துக்கட்டும்” என்றாள் திவ்யா.

“பப்ளிக் இன்வால்வ்மென்ட் குறையாதா?" எனக் கேட்டாள் ஏஞ்சல்

“அதிகமாகும்... யாரோ முகம் தெரியாத அஞ்சு பேர் விளையாடுறதைப் பாக்குறதைவிட எல்லாருக்கும் தெரிஞ்ச பிரபலமான ஆளுங்க கலந்துக்கிறப்ப நிறைய பேர் பாக்குறதுக்கு வாய்ப்பிருக்கு!”

ஏஞ்சல் மெளனமானாள்.

“உலகத்தோட நம்பர் ஒன் ஷோவை கான்சப்ட் ரைட்ஸ் வாங்கி இந்தியாவோட பெரிய டெலிவிஷன் கம்பெனி இந்தியில பண்ணிட்டு இருக்காங்க... அவங்க கிட்ட பேசி தமிழுக்கு பண்ண சொல்லலாம்” என்றாள் திவ்யா.

“கரெக்ட் பட்ஜெட் அதிகமாதான் இருக்கும்... ஆனா நடக்காதுன்னு சொல்லமுடியாது” என்றாள் தாட்சா.

சற்று முன் வரை நடக்காது என தோன்றிய ஐடியாக்கள் எல்லாம் தற்போது நடக்ககூடியவைகளாக அங்கிருந்த அனைவருக்கும் தோன்றியது.

முதலில் மனதை கட்டவிழ்த்து விடுங்கள். அது இஷ்டம் போல பறக்கட்டும். அதன் பிறகு அது பறந்த உயரத்தை எப்படி அடையலாம் என திட்டமிடுங்கள். யோசிக்கும் போதே இறக்கைகளற்ற மனதோடு யோசித்து பழகிவிட்டால் இறக்கை முளைத்த பின்னும் பறக்க முடியும் என்கிற நம்பிக்கையற்று போய்விடும்.

“மிஸ்டர் மேனன்... இது நம்ம ஆனுவல் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகம். நீங்கதான் அப்ரூவல் வாங்கித் தரணும்” என்றாள் தாட்சா.

“வாங்கிரலாம்” எனச் சாதாரணமாகச் சொன்னார் மேனன்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“பட்ஜெட் டபுள் ஆகலாம்... ஆனா, ப்ராஃபிட் டபுள் ஆகுமா சார்” எனச் சிரித்தபடி கேட்டாள் ஏஞ்சல்.

“ஆகாது” என்றார் மேனன்.

“அப்புறம் எப்படி சார் ஒத்துப்பாங்க” எனக் கேட்டாள் ஏஞ்சல். மேனன் புன்னகையுடன் எழுந்து போர்டுக்கு வந்தார்.

“இப்ப நம்ம கம்பெனியோட செலவு 50 கோடி... வருமானம் 60 கோடி... லாபம் எவ்வளவு… 10 கோடி” அனைவரும் மேனனை பார்த்தனர்.

“நாம சொல்ற இந்த ஷோஸ் எல்லாம் பண்ணா செலவு 150 கோடி ஆகும். அப்ப வருமானம் 160 கோடி வரும். அப்ப லாபம் எவ்வளவு?''

“அதே பத்து கோடி தான் சார்” என்றார் நெல்லையப்பன்.

“எது பெஸ்ட்... ஆப்ஷன் ஒன்னா, ஆப்ஷன் ரெண்டா?”

அனைவரும் ஒரே குரலில் “ஆப்ஷன் ஒன்” தான் சார் என்றனர்.

“லாபம் அதே பத்து கோடி தான்னா எதுக்கு எக்ஸ்ட்ரா செலவழிக்கணும். இது ரிஸ்க் கம்மிதான சார்” என்றார் நெல்லையப்பன். மேனன் சிரித்தபடி “அது தான் தப்பு... 50 கோடி செலவு பண்றப்ப உங்க சேனல் சாதாரண ஷோஸோட பூனை மாதிரி தெரியும். அதுவே 150 கோடி செலவு பண்ணா பிரமாண்டமான ஷோஸோட உங்க சேனல் புலி மாதிரி தெரியும்... இப்ப சொல்லுங்க எது பெஸ்ட்” எனக் கேட்டார் மேனன்.

அனைவரும் வாயடைத்துப் போனார்கள்.

“அதே லாபம்தான். ஆனா, 150 கோடியில நம்ம சேனல் வேற லெவலுக்கு போயிடும். இப்ப சொல்லுங்க எந்த ஆப்ஷன் போகலாம்!”

“ஆப்ஷன் டூ சார்” என அனைவரும் கத்தினார்கள். “தெய்வமே... எங்கயோ போயிட்டீங்க” என வணங்கினார் நெல்லையப்பன்.

மேனன் சிரித்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த மார்க்ஸ் “சார் இன்னைக்கு டான்ஸ் ஷோவோட ஃபைனல்ஸ் நேரு ஸ்டேடியம்ல” என்றான்.

“போலாம்” என்றார் மேனன்.

அவர்களது கார் நேரு ஸ்டேடியத்தை அடைந்த போது வாசலில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. அவர்களது கார் கேட்டை நோக்கி முன்னேறி கொண்டிருக்க கண்ணாடி வழியாக மார்க்ஸ் வெளியே பார்த்தபோது துரை கேட்டுக்கு வெளியே, உள்ளே நுழைய பாஸ் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தான்.

“சார் துரை”

“கூப்புடு அவனை” என்றார் மேனன்.

கார் கண்ணாடியை திறந்து “துரை...” என குரல் எழுப்பினான் மார்க்ஸ். அவனைப் பார்த்த துரை ஆட்களை தள்ளிக் கொண்டு அருகில் வந்தான். “வா” எனக் கார் கதவை திறந்தான் மார்க்ஸ். துரை காரில் ஏறிக்கொள்ள கார் வளாகத்திற்குள் நுழைந்தது.

“சார் வணக்கம் சார்... நல்லா இருக்கீங்களா?” என மேனனை பார்த்து கும்பிட்டான் துரை.

“நான் நல்லா இருக்கேன்... நீங்க நல்லா இருக்கீங்களா?”

“சூப்பரா இருக்கேன் சார்... எல்லாத்துக்கும் நீங்க தான் சார் காரணம்!” என்றான் துரை.

“நான் என்ன பண்ணேன்” என்பதுபோல பார்த்தார் மேனன்.

“இப்படி போடான்னு வழி காட்டி விட்டீங்கள்ல சார்... அதுதான சார் முக்கியம்”

“என்ன உன் வொய்ஃபோட டான்ஸை பாக்க வந்தியா?”

“ஆமா சார்.... அன்னைக்கு சேனல்ல இருந்து கிளம்புன நாள் ஆரம்பிச்சு இப்ப வரைக்கும் பத்மா கிட்ட பேசல சார். நடுவில ஒரு நாலஞ்சு தடவை அது போன் பண்ணிச்சு... நான் எடுக்கல” என்றான் துரை.

“ஏன்?” எனக் கேட்டார் மேனன்.

“இல்ல சார்... வேணாம்னு தெளிவா சொல்லிட்டா... திரும்ப பேசுனா நான் எதாச்சும் சம்பந்தம் இல்லாம பேசி அவ மனச சங்கடப்படுத்துற மாதிரி இருக்கும். அவளாச்சும் பிடிச்சதைப் பண்ணட்டும் சார்” என்றான் துரை. அந்த வார்த்தைகளில் எந்த வருத்தமும் இல்லை. பத்மபிரியா மேல் நிஜமான அக்கறை தெரிந்தது.

“இவ்வளவு யோசிக்கிறவன் ஏன் இப்ப வந்த?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“இதை சாதிக்கணும்னுதான் அவ கிளம்பி வந்தா… ஃபைனல்ஸ் வரைக்கும் வந்துட்டா... கடைசியா ஒரு தடவை அவ ஆடுறதை நேர்ல பாக்கணும்னு ஒரு ஆசைதான். அவ வாழ்க்கையில முக்கியமான கட்டம் சார். நாம இல்லாம எப்படி?”

“மேடையில ஏத்திரவா உன்னை?” என சிரித்தான் மார்க்ஸ்.

“அய்யோ அதெல்லாம் வேணாம் சார்... சும்மா கூட்டத்துல ஒருத்தனா நின்னு பார்த்துட்டு அப்படியே கிளம்பிர வேண்டியதுதான்” என்றான் துரை.

“துரை... எப்ப நம்மளை கஷ்டப்படுத்தினவங்க நல்லா இருக்கனும்னு நாம யோசிக்கிறமோ அப்பவே நம்ம ஜெயிச்சிட்டோம்னு அர்த்தம். உனக்கு இனிமே எல்லாமே நல்லதா நடக்கும்” என்றார் மேனன்.

துரை கை கூப்பினான். அவன் கண்கள் கலங்கியிருந்தன.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

அரங்கத்தில் மேனன் மார்க்ஸ் அருகில் துரை அமர்ந்திருந்தான். மேடையில் வெளிச்சம் நிறைந்திருந்தது. பார்வையாளர்கள் பக்கம் இருளில் இருந்ததால் மேடையிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவர்கள் கீழே அமர்ந்திருப்பது தெரியாது.

நிகழ்ச்சி துவங்கியது. இறுதி சுற்றில் 6 ஜோடிகள் கலந்து கொண்டார்கள். விக்ரம் - பத்மபிரியா ஜோடி மேடை ஏறும் போதெல்லாம் துரை கரவொலி எழுப்பி அவர்களுக்கு ஆதரவை தெரிவித்ததை மேனனும், மார்க்ஸும் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நேசித்தல் என்பதன் அர்த்தமாக துரை இருந்தான். அன்பென்பது ஒரு வழி பாதையாய் இருந்துவிட்டு போகட்டும், அதனாலென்ன என்பதாகயிருந்தது அவன் அணுகுமுறை. உன்னை நான் நேசிப்பேன். நீ என்னை நேசிக்கிறாயா இல்லையா என ஆராய்ந்து கொண்டிருப்பது என் வேலையல்ல என்பதுதான் நேசித்தலுக்கான அவனது விளக்கமாகயிருந்தது.

போட்டி முடிந்து நடுவர்கள் விக்ரம் பத்மபிரியா ஜோடியை வெற்றியாளர்களாக அறிவித்தார்கள். உணர்ச்சிவசப்பட்ட துரை அழுதான். மார்க்ஸ் அவனை அணைத்துக் கொண்டான்.

“சாதிச்சு காட்டிருச்சு சார்... அது” எனக் கண்ணீரும் சந்தோஷமுமாக அவன் சொன்ன போது மேனனும் மார்க்ஸும் வார்த்தைகளற்று மெளனமாகிப் போனார்கள்.

“அவ என்னை விட்டுட்டுப்போறன்னு சொன்னப்ப எனக்கு கோபம்தான் சார் வந்துச்சு. ஆனா, இப்ப மேடையில அவங்களை ஜோடியா பார்த்தப்பதான் சார் எனக்கு புரியுது... இதுதான் சார் ஜோடி. இவ்வளவு திறமைசாலி பொண்ணை அந்தச் சின்ன கிராமத்துல அடைச்சு வைக்க பார்த்தனே... எவ்வளவு பெரிய முட்டாள் நான்... நல்ல வேளை அது சுதாரிச்சுக்கிச்சு... இனி அது நல்லா வரும்” என்றான் துரை.

விக்ரம் பத்மா ஜோடிக்கு கோப்பையும் ஆளுக்கு 10 லட்சம் பணமும் வழங்கப்பட்டன.

“நான் கிளம்புறேன் சார்” என்றான் துரை.

“இரு நாங்களும் வர்றோம்” என்றார் மேனன்.

அவர்கள் கிளம்ப தயாராக பத்மாவின் கையில் மைக் வழங்கப்பட்டது.

“இந்த மேடையில நான் வின்னரா நிக்குறன்னா அதுக்கு நான் ஒருத்தருக்கு நன்றி சொல்லனும்” என்றாள் பத்மா.

மார்க்ஸ் திரும்பி துரையைப் பார்த்தான். அவனோ கடவுளுக்கு அவ நன்றி சொல்ல போறா என்பதாக மேலே கை காட்டினான்.

“அந்த கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்!”

“நான் சொன்னேன்ல” என்பது போல மார்க்ஸைப் பார்த்தான் துரை.

“அந்த கடவுளோட பேர் துரை... அவர் என்னோட கணவர்” என அவள் சொல்லி முடித்த அடுத்த நொடி அரங்கமே கை தட்டலில் அதிர்ந்தது.

துரை அதிர்ந்து போய் பார்த்தான். மார்க்ஸுக்குப் புல்லரித்தது.

“இந்த உலகத்தோட பெஸ்ட் ஹஸ்பெண்ட் யாருன்னா அது என்னோட துரை மாமாதான்... எனக்கு தெரியும் மாமா நீ இந்த கூட்டத்துல எங்கேயாவது நிச்சயமா இருப்பேன்னு... உன் கால்ல விழுந்து நான் மன்னிப்பு கேட்கணும். தயவு செஞ்சு மேடைக்கு வா மாமா” என்றாள் பத்மா.

கைதட்டல் மேலும் அதிகரித்தது. செம ரேட்டிங் வரும் மொமன்ட்டுக்காக கேமராக்கள் அரங்கத்தில் துரை எங்கே எனத் தேடி அலைந்தன.

கண்ணில் நீர் வழிய துரை நின்று கொண்டிருந்தான்.

“எனக்கு இந்த பிரைஸ் எல்லாம் கூட வேணாம். நீயும் என் புள்ளைங்களும்தான் வேணும்” என மேடையில் பத்மபிரியா அழுதாள். மேடையில் நின்று கொண்டிருந்த விக்ரம் அதை எதிர்பார்க்கவில்லை என்பதை அவனது பாவனை காட்டியது.

உணர்ச்சிவயப்பட்டவனாக மேடையை பார்த்துக் கொண்டிருந்த மார்க்ஸ் துரையை நோக்கி திரும்பினான். துரை நின்று கொண்டிருந்த இடம் காலியாகயிருந்தது. மார்க்ஸ் சுற்றும் முற்றும் தேட அந்த கூட்டத்தில் துரை காணாமல் போயிருந்தான். மேனனும் மார்க்ஸும் கூட்டத்தில் எங்காவது அவன் தலை தெரிகிறதா என தேடிப்பார்த்தனர். அவர்களின் கண்ணுக்கு அவன் தென்படவில்லை.

மார்க்ஸும், மேனனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஏன் துரை காணாமல் போனான், அவன் என்ன நினைத்தான், அவன் முடிவு என்ன என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பத்மா எங்கே இருந்தாலும் சந்தோஷமாக இருக்கட்டும் என ஆசிர்வதித்த துரையினால் அவள் தன்னோடு சந்தோஷமாக இருக்கட்டும் என ஏன் யோசிக்க முடியவில்லை?

‘என்னை விட்டு விலகுவதுதான் உனக்கு சந்தோஷம் என்றால் விலகிப்போ… ஆனால், மீண்டும் என்னோடு இருப்பதுதான் சந்தோஷம் என நீ உணர்ந்தால் தயவு செய்து திரும்பி வராதே. மீண்டும் என்னோடிருப்பது உனக்கு வேண்டுமானால் சந்தோஷமாகயிருக்கலாம்... எனக்கல்ல’ உடைந்த உறவை ஒட்டிக் கொள்ள அவள் தயாராக இருந்தாள். ஆனால் ஒட்டுபோட்ட உறவுடன் வாழ துரை தயாராகயில்லை.

மார்க்ஸும் மேனனும் கனத்த இதயத்துடன் அங்கிருந்து வெளியே வந்தார்கள். இரவெல்லாம் மார்க்ஸுக்கு உறக்கம் வரவில்லை. யாருக்காகக் கவலைப்படுவது என அவனுக்கு புரியவில்லை. தவற்றை சரி செய்து கொள்வதற்கான தருணத்தைத் தவற விட்டுவிட்டால் தண்டணையை அனுபவிப்பதை தவிர வேறு வழியில்லை எனத் தோன்றியது அவனுக்கு.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

திவ்யா தனது அறையில் அமர்ந்திருந்தாள். கதவை தட்டிவிட்டு தாட்சா உள்ளே நுழைந்தாள்.

“குட்மார்னிங் தாட்சா”

“குட்மார்னிங்” என சொன்ன தாட்சாவின் முகம் மாறியிருந்தது.

“என்னாச்சு தாட்சா?”

“உலகத்தோட நம்பர் ஒன் ஷோவை நம்ம சேனலுக்கு பண்ணலாம்னு நினைச்சோம்ல...”

“ஆமா... அதுக்கென்ன”

“அது நம்ம கையை விட்டு போயிருச்சு... அதோட தமிழ் ரைட்ஸை மார்ஸ் டிவி வாங்கிட்டாங்க!”

“அய்யோ… நாம மிஸ் பண்ணிட்டமே... எப்ப அவங்க டீல் முடிச்சாங்களாம்” எனக் கேட்டாள் திவ்யா.

“இன்னைக்கு காலையில”

“வாட்?” என அதிர்ச்சியானாள் திவ்யா.

ஆமென தலையாட்டினாள் தாட்சா... “நாம ரொம்ப அன்லக்கி”

“இல்ல... நாம ஏமாந்துட்டோம்”

“என்ன சொல்றீங்க தாட்சா?”

“நம்ம ஆபிஸ்ல இருந்துதான் அவங்களுக்கு தகவல் போயிருக்கு. இந்த ஐடியாவை நாம பேசும் போது ஒரு துரோகி நம்ம கூடவே நேத்து கான்ஃபரன்ஸ் ரூம்ல இருந்திருக்கான்!”

திவ்யா அதிர்ந்து போய் பார்த்தாள்.

“இந்த விஷயம் ஜென்ரலா லீக்காகல... நம்ம கான்ஃபரன்ஸ் ரூம்ல டிஸ்கஸ் பண்ணிகிட்டு இருந்தப்பவே இந்த ஷோ எங்களுக்கு வேணும்னு மார்ஸ் டிவியில இருந்து அவங்களுக்கு போன் போயிருக்கு. அதனாலதான்நான் சொல்றேன். யாரோ இங்க இருந்து மார்ஸ் டிவிக்கு மேசேஜ் பண்ணியிருக்காங்க... அல்லது போன் ஆன் பண்ணி வச்சிட்டு நம்மகூட கான்பரன்ஸ் ரூம்ல இருந்திருக்காங்க” என்றாள் தாட்சா.

அன்றைக்கு அவர்களுடன் கான்ஃபரன்ஸ் ரூமில் இருந்த அனைவரது சிரித்த முகங்களும் திவ்யாவின் நினைவில் வந்து போனது. யாராகயிருக்கும் என்ற கேள்வி அவளுக்குள் மீண்டும் மீண்டும் ஓடியது!

- Stay Tuned...