Published:Updated:

இடியட் பாக்ஸ் - 68: திவ்யா மார்க்ஸின் பிரிவும், சந்திப்பும்!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 68: திவ்யா மார்க்ஸின் பிரிவும், சந்திப்பும்!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

ரயில் இரிஞ்சாலக்குடா ஸ்டேஷனில் வந்து நின்றபோது மாலை மணி நான்கைத் தாண்டியிருந்தது. திவ்யா பையுடன் இறங்கினாள். கையிலிருந்த போனை மீண்டும் ஒரு முறை பார்த்தாள். மார்க்ஸிடமிருந்து எந்த மெசேஜும் வந்திருக்கவில்லை. நேற்று ரயில் ஏற்றிவிட்டவன் இப்போதுவரை ஒரு போன் கூட பண்ணவில்லை. அவனுக்கு போன் செய்ய அவளது மனமும் இடம் கொடுக்கவில்லை.

திவ்யா போனை எடுத்து அம்மாவின் எண்ணுக்கு டயல் செய்தாள்.

“திவ்யா... ட்ரெயின் எங்கடி இருக்கு?”

“வந்து இறங்கிட்டம்மா” என்றாள் திவ்யா.

“ஏன்டி... அரை மணி நேரத்துக்கு முன்னால சொல்ல சொன்னேன். இல்ல வெயிட் பண்றியா அப்பாவ கார் எடுத்துட்டு வர சொல்றேன்!”

“இல்லம்மா நானே ஒரு ஆட்டோ பிடிச்சு வந்துடுறேன்”

“பரவாயில்லையா?”

“நான் வந்தர்றம்மா” என போனை துண்டித்தாள் திவ்யா.

மார்க்ஸுக்கு போன் செய்து பார்க்கலாமா என மீண்டும் அவளுக்குத் தோன்றியது. அவசரமாக அந்த எண்ணத்தை அழித்தவள் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து ஆட்டோ ஒன்றில் ஏறினாள்.

ஆட்டோ ஏற்றமும் இறக்கமுமான அந்தச் சாலையில் பயணிக்கத் தொடங்கியது.

மழை அப்போதுதான் பெய்து ஓய்ந்திருக்க வேண்டும். சாலையில் ஈரம் இன்னும் மிச்சமிருந்தது. இருபுறம் மழையில் குளித்த மரங்களின் பச்சை கொஞ்சம் கூடியிருந்தது. ஆட்டோவுக்குள் காற்று புகுந்தடித்து திவ்யாவின் கூந்தலை கலைத்தது. அந்தக் குளிர்ந்த காற்று அவளுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. கண்ணாடி ஏற்றப்பட்ட கார் பயணங்களைவிட காற்று கன்னத்தை வருடும்படியான ஆட்டோ பயணங்கள் அலாதியானவை.

வீட்டு வாசலில் வந்து இறங்கினாள் திவ்யா. சட்டென மனசு லேசாகி சந்தோஷம் அவளை ஒட்டிக் கொண்டது. வீடு திரும்புதல் எப்போதும் இனிமையானது. அம்மா அப்பாக்களுடன் சேர்ந்து வாழ்தல் என்பது வேறு. படிப்பு, பணி நிமித்தம் வேறெங்கோ வாழ நேர்ந்து வருடத்துக்கு ஒரு முறையோ இரு முறையோ வீட்டிடுக்கு வந்து போவதென்பது முற்றிலும் வேறு.

வருடம் முழுக்கத் தேக்கி வைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் அவர்களோடிருக்கும் நான்கைந்து நாள்களில் பெரு மழையாய் நம் மீது பொழிவார்கள். அந்த நான்கைந்து நாள்கள் தரும் அனுபவம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. நீங்கள் எத்தனை சாதாரண மனிதனாக இருந்தாலும் வீடு திரும்பும் ஒவ்வொருவரையும் சக்கரவர்த்தியாகவே வீடு வரவேற்கும். உலகத்தின் மிகப்பெரிய செல்வந்தனாக பெற்றோர்களின் பாசம் நம்மை உணர வைக்கும்.

மலைச்சரிவு ஒன்றின் நடுவில் திவ்யாவின் வீடிருந்தது. முன்புறம் முழுவதும் பூந்தோட்டங்களால் நிறைந்திருந்தது. நடுவில் சமன் செய்து வீடு கட்டப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து வீட்டின் பின்புற சரிவு முழுக்க பலா மரங்களும் ரப்பர் மரங்களும் காய்கறித் தோட்டங்களும் நிறைந்திருந்தன. அதை கடந்து சென்றால் நிலத்தின் எல்லை முடியும் இடத்தில் நீரோடை ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. திவ்யா பூந்தோட்டங்களைக் கடந்து வீட்டிற்குள் நுழைந்தாள்.

“திவ்யா” என அம்மா ஒடி வந்து அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பு திவ்யாவுக்கு ஆறுதலாய் இருந்தது.

“அப்பா எங்கம்மா?”

“பின்னாடி ஓடையில குளிக்க போயிருக்காரு” என்றாள் அம்மா.

“சொல்லும்மா என்ன பிளான். எதுக்கு அவசரமா வர சொன்னீங்க?”

“நீ முதல்ல குளி அப்புறம் பேசிக்கலாம்.”

“இல்ல பரவால்ல... என்ன விஷயம் சொல்லு” என்றாள் திவ்யா.

“ஏழு மணிக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க” என அம்மா தயக்கமாகச் சொன்னாள்.

திவ்யா அம்மாவை முறைத்து பார்த்தாள்.

“இங்க பார் என்கிட்ட எதுவும் கேட்காத... எல்லாம் உங்கப்பாவோட பிளான். எதுவாயிருந்தாலும் அவர்கிட்ட பேசு.”

“என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? எவனோ ஒருத்தன் வருவான் அவனுக்கு டீ பிஸ்கட் நான் குடுக்கணும். அவன் குடிச்சிட்டு என்னை பிடிச்சிருக்குன்னு சொல்வான். நான் வெட்கப்பட்டுகிட்டு சந்தோஷமா அவனை ஏத்துக்கணும் இல்ல.”

அம்மா சிரித்தாள்.

“என்னம்மா சிரிக்கிற?”

“எதுக்குடி டென்ஷனாகுற? பொண்ணு பாக்குற செட்அப் எல்லாம் ஒண்ணும் கிடையாது. அப்பாவோட ஃபிரண்ட் ஃபேமிலிதான் அவங்க... டின்னருக்கு அப்பா அவங்களை வர சொல்லியிருக்காரு அவ்வளவுதான். நீ அவனைப் பாரு... அவன் உன்னை பார்க்கட்டும். அப்புறமா நீ உங்கப்பா கிட்ட பேசிக்கோ” என்றாள் அம்மா.

“என் வாழ்க்கையில என்ன நடந்துட்டு இருக்குன்னு உனக்கு தெரியாதா?”

“அப்ப மார்க்ஸ் பத்தி அப்பாகிட்ட பேசு...”

“அப்பாக்குதான் அவன சுத்தமா பிடிக்காதே” என்றாள் திவ்யா.

“அதுக்கு என்ன பண்ண முடியும். உனக்கு அவனைதான பிடிச்சிருக்கு. அவனையும் ஒரு தடவ அப்பாகிட்ட வந்து பேச சொல்லு... ஒரு sorry சொன்னா உங்கப்பா சமாதானமாயிடுவாரு” என்றாள் அம்மா.

“அவனைப் பத்தி உனக்கு தெரியும்ல. திமிர்பிடிச்சவன்...”

“பொண்ணு வேணும்னா மாமா கால்ல விழுந்துதான் ஆகணும்னு கண்டிப்பா சொல்லு...”

“அவன் அதெல்லாம் பண்ண மாட்டாம்மா. ஈகோ பிடிச்சவன். நான்தான் இவங்களுக்கு நடுவில மாட்டிகிட்டு முழிக்கிறேன்” என எரிச்சலாகச் சொன்னாள் திவ்யா.

“என்னடி இப்படி சொல்ற?”

“ஆமாம்மா... அப்பா நோ சொன்னா போடான்னு சொல்லிட்டு என்ன அவன் கூட வர சொல்றான்.”

அம்மா அவளை ஏறிட்டுப் பார்த்தாள்.

“நியாயம் பேசுறாம்மா... என்னை என்ன பண்ண சொல்ற?”

“அவர் பெர்ஃபெக்ட்டான ஆளா இருக்கட்டும். வேணாம்னு சொல்லல. ஆனா, சில சமயத்துல நியாயமா நடத்துக்கிறதைவிட ரிலேஷன்ஷிப்பை காப்பாத்திக்க இறங்கி வர்றது தப்பில்ல”

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

“எனக்கு புரியுதும்மா அவனுக்கு புரியலயே...”

“நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத... இதுக்கே அவன் அடம்பிடிச்சான்னா... அவனோட நீ ரொம்ப நாள் சந்தோஷமா சேர்ந்து வாழ முடியும்னுலாம் எனக்கு தோணல” என்றாள் அம்மா.

அம்மாவின் வார்த்தைகளில் இருந்த நிஜம் அவளை அறைந்தது.

திவ்யா மெதுவாக தலை குனிந்தாள்.

“சாரிடி ... வந்ததும் வராததுமா தேவையில்லாத விஷயங்களைப் பேசி உன்னை கஷ்டப்படுத்திட்டேன்” என அருகில் வந்து அம்மா அவளை அணைத்துக் கொள்ள திவ்யாவின் கண்கள் கலங்கின.

“உனக்கு பிடிக்காத விஷயத்தை உங்கப்பாவும் திணிக்க மாட்டாருன்னுதான் எனக்கு தோணுது. இந்த டின்னர் பிளான் முடிச்சிட்டு அப்புறமா உங்க அப்பாகிட்ட பொறுமையா பேசிக்கலாம்” என்றாள் அம்மா.

திவ்யா தலையாட்டினாள்.

“ஓடையில சூப்பரா தண்ணி போகுது... போய் குளிச்சிட்டு வா... ரெஃப்ரெஷ்ஷிங்கா இருக்கும்” என்றாள் அம்மா.

ஷார்ட்ஸும் டி-ஷர்ட்டும் கையில் துண்டுமாக வீட்டின் பின்புறம் இறங்கினாள் திவ்யா. அடர்ந்த மரங்களுக்கு ஊடாக மாலை வெயில் கீற்றுக்களாக விழுந்து கொண்டிருந்தது. சூழலை ரசித்தபடி திவ்யா சரிவான பாதையில் இறங்கி ஓடையருகே வந்தாள்.

அப்பா குளித்து முடித்துவிட்டு கரையில் நின்று தலை துவட்டிக் கொண்டிருந்தார்.

“அப்பா...”

“வாம்மா திவ்யா எப்பம்மா வந்த?”

“இப்பதான்பா... வந்ததும் கிளம்பி வந்துட்டேன்” என்றாள் திவ்யா.

“சரிம்மா... நீ குளிச்சிட்டு வா... நான் போய் உனக்கு ஒரு நல்ல டீயும் டிபனும் ரெடி பண்றேன்” என்றார் அப்பா.

“அப்பா கொஞ்சம் கம்பெனி கொடுங்கப்பா... அரை மணி நேரத்தில குளிச்சிட்டு வந்தர்றேன்”

“அதான் அவன் இருக்கானே...”

“யாருப்பா?” என்றாள் திவ்யா...

அப்பா கை காட்ட திவ்யா திரும்பி பார்த்தாள்.

மெல்லிய சத்ததுடன் ஓடை ஓடிக் கொண்டிருந்தது.

யாரை அவர் சொல்கிறார் என்பதுபோல அவள் திரும்பி அப்பாவை பார்த்தாள்.

அவர் அங்கே பார் என்பது போல தண்ணீரை பார்த்து கைகாட்ட திவ்யா மீண்டும் திரும்பி பார்த்தாள்.

தண்ணீருக்குள்ளிருந்து மார்க்ஸின் தலை வெளியே வந்தது.

திவ்யாவால் அதை கொஞ்சமும் நம்ப முடியவில்லை. முறுக்கிக்கொண்டு தன்னை ரயிலேற்றி விட்டவன் தனக்கு முன்னால் வந்து தனது அப்பாவிடம் தன் வீட்டு பின்னாலிருக்கும் நீரோடையில் குளித்துக் கொண்டிருக்கிறான். புரியாமல் திவ்யா அவனை பார்த்தாள்.

தலையிலிருந்து நீர் வழிய பலத்த புன்னகையுடன் மார்க்ஸ் கழுத்தளவு தண்ணீரில் நின்றபடி, “ஹாய்” என்றான்.

“குளிச்சிட்டு வாம்மா” என அவளது பதிலுக்கு காத்திராமல் அப்பா அங்கிருந்து நகர்ந்தார்.

என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவுக்கு திவ்யாவால் யூகிக்க முடிந்தது. திவ்யாவின் கண்கள் கலங்கின. அவள் என்ன பேசுவது எனத் தெரியாமல் உதட்டைக் கடித்து அழுகையை அடக்க முயன்றாள்.

சந்தோஷத்தின் உச்சம் என்பது புன்னகையை வரவழைப்பதல்ல... அழுகையை வரவழைப்பதே... அளவில்லாத சந்தோஷத்தை தாங்கிக் கொள்ள முடியாத இதயம் அழுகையை உதவிக்கு அழைக்கும். சந்தோஷத்தில் சிந்தப்படுகிற கண்ணீர்தான் உலகின் மிக விலையுயர்ந்த பொருள்.

தன்னை நிதானப்படுத்தியபடி திவ்யா ஓடைக்கருகே வந்து நின்றாள்.

“நீ எப்படி?”

“நேத்து ராத்திரி லாஸ்ட் ஃபிளைட் எடுத்து கொச்சின் வந்து... அங்க இருந்து ஒரு டாக்ஸி எடுத்து நடுராத்திரி உன் வீட்டு கதவை தட்டி... உன் அப்பா கால்ல விழுந்து.. அப்புறமா நாங்க ரெண்டு பேரும் விடிய விடிய பேசி... விடிஞ்சதும் தூங்கி மதியமா எந்திருச்சு லைட்டா ஒரு லன்ச் சாப்பிட்டு, அப்புறமா கதை பேசி 5 மணிக்கு ஒண்ணா குளிக்க வந்து... தண்ணியில முங்கி வெளியே வந்து பார்த்தா நீ நிக்கிற” எனச் சிரித்தான் மார்க்ஸ்.

திவ்யா அவனையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

“எப்படி?” என்றான் மார்க்ஸ்.

திவ்யா தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுதாள்.

“ஏய்... ஏன் அழுற… கை குடு நான் மேல வந்து பேசுறேன்” என மார்க்ஸ் கையை நீட்டினான்.

திவ்யா எதுவும் பேசாமல் குனிந்து கை நீட்டினாள்.

மார்க்ஸ் அவளது கையை பிடித்து சுண்டி இழுக்க பெரும் சத்தத்துடன் அவள் தண்ணீரில் விழுந்தாள்.

மார்க்ஸ் சிரித்தான்.

அவன் அருகே வந்த திவ்யா அவனை பொய் கோபத்துடன் முறைத்துப் பார்த்தாள்.

மார்க்ஸ் சிரித்தபடி அவளைப் பார்த்தான்.

“நான்” என மார்க்ஸ் ஏதோ ஆரம்பிக்க ஆவேசமாக திவ்யா அவனை அணைத்து முத்தமிட்டாள். மார்க்ஸும் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

இருவரும் எண்ணிக்கை இல்லாமல் முத்தமிட்டுக் கொண்டே இருந்தார்கள். சலசலக்கும் ஓடை ஏதோ ஒரு பறவையின் கூவல் அதோடு அவர்கள் முத்தமிடும் சத்தமும் சேர்ந்து அந்த இடத்தை நிறைத்தது.

ஈகோக்களை வெற்றி கொள்கிற ஆண் அனைவரையும் வெற்றிக் கொள்கிறான். வெற்றி கொண்ட இதயங்களை காப்பாற்றிக் கொள்கிறான்.

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

மார்க்ஸும் அப்பாவும் வீட்டின் முன்னால் இருந்த வராண்டாவில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு எதிரே பாட்டில் ஒன்றும் இரண்டு கிளாஸ்களும் இருந்தன. அதனுடன் கொறிப்பதற்கான சில தின்பண்டங்களும் வைக்கப்பட்டிருந்தன.

அப்பாவுக்கு நேர் பின்னால் திவ்யா வெள்ளை நிற சேலையில் அமர்ந்திருந்தாள். வழக்கமாக அவள் வீட்டில் இருக்கையில் சேலை அணிபவள் அல்ல. அந்த சேலை தனக்காக அவள் கட்டியிருப்பதாக மார்க்ஸுக்குத் தோன்றியது.

கூந்தல் விரிந்து கிடந்தது. நெற்றியில் சின்னதாக சந்தனம் ஒன்று. அவளது தோற்றம் மார்க்ஸை கிறங்கடிப்பதாக இருந்தது. மார்க்ஸ் அவளைப் பார்க்க அவள் கண்ணால் குடிக்காதே என்பதாக ஜாடை செய்தாள்.

அவன் ‘அது எப்படி முடியும்’ என கண்களால் கெஞ்சினான்.

“இங்க வாடா” என அவள் கண்களால் அழைத்தாள்.

“ஒரு நிமிஷம் அங்கிள்” என மார்க்ஸ் எழுந்து நகர்ந்து வீட்டுக்குள் வர அவன் பின்னால் வந்த திவ்யா அவன் சட்டையைப் பிடித்து சுவரில் சாய்த்து நிறுத்தினாள்.

“என்ன தைரியம் இருந்தா எங்கப்பா கூட குடிப்ப நீ?”

“அவர்தான்” என மார்க்ஸ் இழுக்க...

“அவர் கூப்பிடத்தான் செய்வாரு... நீ வேண்டாம்னு சொல்லு”

“அது மரியாதையா இருக்காது திவ்யா”

“ஓ கூட குடிக்கிறது தான் மரியாதையா உங்க ஊர்ல? ”

மார்க்ஸ் சிரித்தான்.

“என்னடா சிரிக்கிற” என்றாள் திவ்யா.

“கண்டுக்காத ... நான் கரெக்டா அவரை ஹேண்டில் பண்ணிருவேன். அப்புறம் நீ என்ன குடிப்பேன்னு கேட்டாரு. ஓட்கா லெமன்னு சொன்னேன். அதுவும் ஒரு குவார்ட்டர் வாங்கி வச்சிருக்காரு”

“அடப்பாவி” என அவள் அவன் மார்பில் செல்லமாகக் குத்தினாள் திவ்யா.

“ஏய்... ஏய்… சும்மா சொன்னேன் சும்மா சொன்னேன்” என்றான் மார்க்ஸ்.

“மார்க்ஸ்” என திவ்யாவின் அப்பா அழைத்தார்.

“மாமா கூப்பிடுறாரு வந்தர்றேன்” என நகர முற்பட்டவனை இழுத்து இதழில் முத்தமிட்டாள் திவ்யா.

மார்க்ஸ் நகர்ந்து வராண்டாவுக்கு போனான்.

திவ்யாவின் அப்பாவும் மார்க்ஸும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். திவ்யா அவர்கள் பேசுவதை ரசித்தபடி அமர்ந்திருந்தாள்.

அவர்களுக்கிடையில் இருந்த பனிச்சுவர் உடைந்து அவர்கள் நெருக்கமாவதை திவ்யாவால் உணர முடிந்தது.

இரவு உணவு முடிந்து மார்க்ஸ் மாடியில் இருக்கும் அவனது அறைக்குப் படுக்கச் சென்றான்.

மழை தூறத் தொடங்கியது. திவ்யாவின் அப்பா சிகரெட் ஒன்றை புகைத்தபடி வராண்டாவில் நின்று மழையை பார்த்தபடி இருந்தார்.

திவ்யா மெதுவாக அவர் அருகே வந்து நின்றாள்.

அப்பா திரும்பி அவளைப் பார்த்து புன்னகைத்தார்.

“தேங்ஸ்ப்பா” என்றாள் திவ்யா.

“எதுக்கும்மா”

“மார்க்ஸை நீங்க ஏத்துக்கிட்டதுக்கு”

“அதுக்கு நீ அவனுக்குதான் மா கிரெடிட் கொடுக்கணும்” என்றார் அப்பா.

கணவனைப் பற்றி அப்பாவும் தன் அப்பாவை பற்றி கணவனும் பாராட்டுவதை கேட்பது போல சந்தோஷமான விஷயம் எதுவும் இல்லை எனத் தோன்றியது அவளுக்கு.

“அவ்வளவு தூரம் ஃபிளைட் பிடிச்சு வந்து என்ன மன்னிச்சிருங்க அங்கிள்னு அந்த பையன் கேட்டப்ப எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சும்மா” என்றார் அப்பா.

“சின்ன பையன் அவனே ஈகோ தூக்கி போட்டு சாரி சொல்றான். அதுக்கு மேல வீம்பு பிடிக்க என்னடா இருக்கு...”

திவ்யா அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“பொண்ணுங்களை லவ் பண்ற பசங்ககிட்ட அப்பாக்கள் கொஞ்சம் முரண்டு பிடிக்கிறதுக்கு நிறைய காரணங்கள் இருக்குடா... என் பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிளைங்க லிஸ்ட்ல நான்தான் முதல்ல இருக்கேன்ற ஒரு பெருமை எல்லா அப்பனுக்கும் உண்டு. அவ ஒருத்தன லவ் பண்றான்னு சொன்னதும் முதல்ல அந்த இடம் பறிபோயிடுச்சேன்னு ஒரு கோபம் எல்லா அப்பாக்களும் வரும். அதை பொறாமை, பொசசிவ்னஸ்னு எப்படி வேணா வச்சுக்கோ... ஆனா அது வரும்.”

திவ்யா நிமிர்ந்து சிரித்தாள்.

“அப்புறம் அப்பன்களுக்கு எந்தப் பையனைப் பார்த்தாலும் என்ன மாதிரி எல்லாம் நீ என் பொண்ண நேசிக்கவே முடியாதுடான்னு தோணும். நம்ம புள்ளைய இவன் சந்தோஷமா பார்த்துப்பானா, சேஃபா பார்த்துப்பானான்ற சந்தேகம் அப்பன்களுக்கு இருந்துகிட்டே இருக்கும்”

திவ்யா புன்னகையுடன் அப்பா சொல்வதை ரசித்தாள்.

“அப்பன் ஆம்பள இல்லையா... இன்னொரு ஆம்பள எப்படி எல்லாம் யோசிப்பான்னு அவனுக்கு சட்டுன்னு புரிஞ்சிடும். அதனாலதான் அந்த சந்தேகம். அது கடைசி வரைக்கும் இருந்துகிட்டே இருக்கும். அன்பான அம்மா, அழகான மனைவி இவங்க கூட எல்லாம் வருஷக்கணக்கா வாழ்ந்தாலும் ஒரு ஆம்பள பொம்பளைங்களை சரியா புரிஞ்சிக்கிறது ஒரு பொண்ணுக்கு தகப்பனா இருக்கிறப்ப தான்மா” என்றார் அப்பா.

திவ்யா கண்கலங்கினாள்.

“இவன் பொண்டாட்டிக்கு சுமாரான புருஷனா இருப்பான். ஆனா பொண்ணுக்கு பிரமாதமான புருஷன் கிடைக்கணும்னு ஆசைப்படுவான். அம்மாக்களைப் பொறுத்தவரைக்கும் ஓரளவுக்கு ஒரு நல்ல பையன் பொண்ணுக்குக் கிடைச்சா போதும்னு நினைப்பாங்க... அதுக்கப்புறம் அவ அட்ஜஸ்ட் பண்ணி வாழனும்னு யோசிப்பாங்க.. அப்பனுங்க அப்படி கிடையாதும்மா... 24 கேரட் தங்கம்தான் மாப்பிள்ளையா வரணும்னு அடம்பிடிப்பாங்க!”

“நீங்க எப்பவுமே பெஸ்ட்ப்பா...”

“எல்லாத்தலயுமான்னு தெரியல... ஆனா உன் விஷயத்தில தி பெஸ்ட்டா இருக்கணும்னு ஆசைப்படுறேன்மா!”

“மார்க்ஸ் ஏன்பா உங்களுக்கு பிடிச்சுது?”

“உனக்கு தர்மசங்கடம் கொடுக்க கூடாதுன்னு என்கிட்ட சமாதானம் பேச வந்தான் பாரு... அது நிஜமாவே எனக்கு பிடிச்சிருந்திச்சு... காதலை பணயமா வச்சுகிட்டு நீயா நானுன்னா அவன் சண்டை போட்டிருந்தா நிஜமான கஷ்டம் எனக்கோ அவனுக்கோ இல்லை. உனக்குதான். உனக்கு அந்தக் கஷ்டம் கொடுக்கக்கூடாதுன்னு என்கிட்ட வந்து அவன் சாரி சொன்னப்ப என்னால நோ சொல்ல முடியல!”

திவ்யா புன்னகைத்தாள்.

“திமிரா கெத்தா இருக்கிறது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி எந்த இடத்துல அந்த கெத்தையும் திமிரையும் விட்டு கொடுக்கணும்னு ஒருத்தனுக்குத் தெரியணும். அவன்தான் உண்மையான ஆம்பள. அவன் நடிக்கல... நிஜமா இருக்கான்னு எனக்கு தோணிச்சு. உனக்கும் அவனை பிடிச்சிருக்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்!”

“லவ்யூப்பா!”

“ஆனா ஒண்ணு மட்டும் தெளிவா சொல்லிடு... நான் கூடவே இருப்பேன்... எப்பவாவது சொதப்புனான் உடனே வந்து உதைப்பேன். தாலிய கட்டிட்டா இஷ்டப்படி நடந்துக்கலாம், புள்ளைங்க பொறந்தா உன்னால ஒண்ணும் செய்யமுடியாதுன்னு நினைச்சுகிட்டு ஆட்டம் காட்டுனான்னு வையி. போடான்னு சொல்லி உன்னையும் புள்ளைகளையும் கூட்டிட்டு வந்துகிட்டே இருப்பேன்.”

திவ்யா சிரித்தாள்.

“இப்படியே கடைசி வரைக்கும் இருந்தா தப்பிச்சான். இல்ல மகனே செத்தான்...”

மகள்களை பெற்ற அப்பாக்கள் வித்தியாசமானவர்கள் குற்றம் குறைகளோடு அவர்கள் மகள்களை நேசிப்பது போலவே அவளுக்கு வரப்போகும் கணவனும் அவளை நேசிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள் என்று திவ்யாவுக்குத் தோன்றியது.

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

மார்க்ஸ் புரண்டுபடுத்தான். அவன் படுத்திருந்த அறைக்கதவை திறந்து கொண்டு திவ்யா உள்ளே நுழைந்தாள். மார்க்ஸ் எழுந்து அமர்ந்தான். மின்னல் வெளிச்சத்தில் திவ்யாவின் அழகிய உருவம் தெரிந்து மறைந்தது. அவள் மெதுவாக அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

மீண்டும் மின்னலடிக்க அவளது முகம் இப்போது அவனுக்கு வெகு அருகில் தெரிந்தது.

மெதுவாக அவன் முன்னோக்கி நகர்ந்து அவளை முத்தமிட்டான். அவள் மார்க்ஸை இறுக அணைத்துக் கொண்டாள். அவன் அருகில் அவள் படுத்துக் கொண்டாள். மார்க்ஸ் தனது கரங்களால் அவளை பின்புறமிருந்து அணைத்துக் கொண்டான்.

இருவரது மனமும் சந்தோஷத்தில் நிரம்பியிருந்தது. ஜன்னலுக்கு வெளியே தெரிந்த மழையை ரசித்தபடி அவர்கள் அமைதியாக இருந்தார்கள். வார்த்தைகள் எதுவும் தேவைப்படவில்லை. வெளியே மழை விடாமல் கொட்டிக் கொண்டிருந்தது.

ஆரஞ்சு டிவியின் கான்ஃபரன்ஸ் ரூம். அனைவரும் கூடியிருந்தார்கள்.

“மார்க்ஸ்... நேந்திரங்காய் சிப்ஸ் வாங்கிட்டு வரலையாப்பா” எனக் கேட்டார் நெல்லையப்பன்.

“இந்த நியூஸ் எல்லாம் எப்படி மாமா உனக்கு கிடைக்குது?” என ஆச்சர்யமாகக் கேட்டான் மார்க்ஸ்.

“இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்” எனச் சிரித்தார் நெல்லையப்பன்.

“எப்படின்னு சொல்லு மாமா?”

“போனடிச்சா நீங்கள் விளிக்கின்ன சப்ஸ்கிரைபர்னு உன் போன் மளையாளம் பேசிச்சே!”

“அது இருக்கட்டும் நான் திவ்யா வீட்டுக்குதான் போனேன்னு உனக்கு யார் சொன்னது?”

“யாரும் சொல்லல... இப்பதான் நீ சொல்ற?”

மார்க்ஸ் தனது தலையில் தட்டிக் கொள்ள, நெல்லையப்பன் சிரித்தார்.

திவ்யா எழுந்தாள். கான்ஃபரன்ஸ் அறையில் இருந்த அனைவரையும் அவள் புன்னகையுடன் பார்த்தாள். மார்க்ஸைக் கடக்கும்போது மட்டும் பார்வை ஒரு கணம் தயங்கி பின் நகர்ந்தது.

“உங்களுக்கெல்லாம் ஒரு பெரிய நியூஸ் சொல்லணும்... அதுக்காகதான் உங்கள வர சொன்னேன்” என்றாள் திவ்யா.

“நீங்க எந்திரிச்சு நின்னு பேசும் போதே முக்கியமான நியூஸ்ன்னு புரிஞ்சிருச்சு... ஆனா, என்னன்னுதான் புரியல” என்றார் நெல்லையப்பன்.

திவ்யா சிரித்தாள்.

“உலகத்தோட நம்பர் ஒன் ஷோவை நாமதான் தமிழ்ல பண்ண போறோம். ரைட்ஸ் வாங்கி அதோட டெக்னிக்கல் க்ருவை ஃபாரின்ல இருந்து வர வச்சு பண்ண போறோம்.”

அனைவரும் கரவொலி எழுப்பினார்கள்.

“அந்த ஷோவோட பட்ஜெட்... நம்மளோட ஒரு வருஷ புரோகிராமிங் பட்ஜெட்ல பாதி” என்றாள் திவ்யா.

அனைவரது முகமும் அதை கேட்டு மாறியது. கொஞ்சம் ஆச்சர்யமும் நிறைய பயமும் அவர்கள் அனைவரது முகத்திலும் தெரிந்தது.

“சின்ன சின்னதா ஷோ பண்ணி நாம நினைக்கிற இடத்துக்கு போக முடியாது. அதனாலதான் இந்த பெரிய முடிவை எடுத்திருக்கோம். கையில இருக்கிற மொத்த பணத்தையும் கட்டி இந்த விளையாட்டை ஆடப்போறோம். ஜெயிச்சா நம்ம வேற லெவல்ல இருப்போம். ஒரு வேளை தோத்துட்டா அடுத்த இரண்டு வருஷத்துக்கு நாம எதுவும் பண்ண முடியாது. ஒரு வேளை இந்த சேனலையே மூடவும் வாய்ப்பிருக்கு!”

“இவ்வளவு ரிஸ்க் தேவையா?” என்றாள் ஏஞ்சல்.

“எந்த சக்ஸஸும் ரிஸ்க் இல்லாம கிடையாது. முடிவு பண்ணியாச்சு இதை பண்ணப் போறோம்னு. அது எப்படி சக்ஸசா பண்றதுன்னு யோசிக்கலாம்!”

அறையில் இருந்த அனைவரது மனமும் படபடக்க தொடங்கியது. அந்த நிகழ்ச்சியின் வெற்றி தோல்வி பொறுத்தே தங்களது எதிர்காலம் என்பது அனைவருக்கும் புரிந்தது.

- Stay Tuned...