வந்தியதேவன் தலையணைகளை முதுகுக்கு ஆதரவாக கொடுத்து படுக்கையில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்தான். அவரைச் சுற்றி ஆரஞ்சு டீம் ஆட்கள் நின்று கொண்டிருந்தனர்.
“உங்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல” என்றான் வந்தியதேவன்.
“என்னப்பா ஆங்கரிங் பண்ற மாதிரியே ஆரம்பிக்கிற?” என்றார் நெல்லையப்பன். அனைவரும் சிரித்தார்கள். வந்தியதேவன் முகத்திலும் புன்னகை.
“விட்டா ஸ்பான்சர் பை முறுக்கு கம்பி, புளியோதரை மிக்ஸ் எல்லாம் சொல்லுவ போல”
“இல்ல மாமா... ஆப்போஸிட் சேனல் போயிட்டேன்... அதுவும் சண்டை போட்டுட்டு போயிருக்கேன்... நீங்கள்லாம் என் மேல கடுப்புல இருப்பீங்கன்னு நினைச்சேன்!”
“கடுப்பிலதான் இருந்தோம்... அதுல என்ன சந்தேகம் உனக்கு?”
“இருந்தாலும் எனக்கு ஒண்ணுன்னதும் வந்து நின்னீங்கல்ல” என்றான் வந்தியதேவன்.
“அது எப்படியா வராம போவோம்? யோவ்... வேலை வேற பர்சனல் வேற... எதுக்கு ரெண்டையும் போட்டு குழப்பிக்கிற…. இன்னைக்கு நீ கூட இல்லன்றதால நீயும் நானும் 7 வருஷம் ஒன்னா பழகுனது இல்லன்னு ஆயிடாதில்ல” என்றார் நெல்லையப்பன்.
வந்தியதேவன் கண்கள் கலங்கின.
“இன்னொருத்தன் பொண்டாட்டியாயிட்டா அது அப்பனுக்கு பொண்ணு இல்லன்னு ஆயிருமா?”
“மாமா பின்ற மாமா” என்றான் மார்க்ஸ்.
அனைவரும் சிரித்தார்கள்.
“இந்தியா பாகிஸ்தானே எப்படி நட்பா இருக்கலாம்னு யோசிக்குது. நாலு தெரு தள்ளியிருக்கிற மார்ஸ் டிவிக்கு போயிட்டா நீ உடனே எங்க விரோதி ஆயிருவியா?”
“மாமா இன்னைக்கு வேற லெவல் ஃபார்ம்ல இருக்காரு” என்றான் பாண்டியன்.
“டேய் சீரியசா பேசிட்டு இருக்கேன். நீ என்ன காமெடி பண்ணிகிட்டு… எங்க இருந்தாலும் அவன் நம்மாளுடா. யாரோ ஒரு வெள்ளைக்காரனும் எங்கயோ இருக்கிற சேட்டும் உன் சேனல் பெருசா என் சேனல் பெருசான்னு சண்டை போட்டுக்கிறானுங்க, அவனுங்களுக்காக நாங்க எதுக்காகடா சண்டை போட்டுக்கணும்”
“கரெக்ட் மாமா”
“டேய் வந்தியதேவா உன்ன மாதிரி தமிழ் பேச இங்க யாரும் கிடையாது. எதிர்ல எவன் இருந்தாலும் பயப்படாம தைரியமா நீ கேள்வி கேட்ப… அந்த ஆந்திரா ரவுடி கிட்ட நீ எகிறி எகிறி கேள்வி கேட்ட பாரு… இப்ப நினைச்சாலும் உடம்பெல்லாம் புல்லரிக்குது. உன் திறமைக்கு நான் ரசிகன்டா... ஐ லவ் யூடா” என்றார் நெல்லையப்பன்.
வந்தியதேவன் அவரது கைகளை பற்றி கண்ணில் வைத்துக் கொண்டான். அவனது கண்ணீர் நெல்லையப்பன் கைகளை நனைத்தது. அவரது கண்களும் கலங்கின.

“நீ உன் வேலைய நேசிச்சு பண்ணு அதுதான் முக்கியம். வேலை செய்ற கம்பெனிய நேசிக்கணும்னு எல்லாம் அவசியம் இல்ல. உன்ன விட நல்லதா ஒருத்தன் கிடைச்சா கம்பெனி உன்னை கழட்டி விட்டிரும். அதனால இதை
எல்லாம் யோசிச்சு ஃபீல் பண்ணாத” என்றார் நெல்லையப்பன்.
நிறுவனங்களுக்கென்று தனியாக குணாதிசயங்கள் கிடையாது. நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களை பொறுத்து அது மாறிக்கொண்டே இருக்கும். நல்ல தலைவர்கள் நிறுவனத்தின் மதிப்பையே மாற்றியமைக்கிறார்கள். நல்ல தலைமையின் கீழ் வேலை செய்பவர்கள் கற்றுக் கொள்கிறார்கள், வேலையை கொண்டாட்டமாக செய்கிறார்கள்.
நல்ல தலைமையின் முக்கியமான பணி தனக்கு கீழ் வேலை செய்பவர்களின் இதயத்தில் நம்பிக்கையை விதைப்பதுதான். எங்கு சென்றாலும் என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை தருவதுதான் நல்ல நிறுவனத்தின் பணிகளில் ஒன்று.
மோசமான தலைமை தனக்கு கீழ் வேலை செய்பவர்களை பயமுறுத்தி வேலையை சாதித்துக் கொள்கிறது. நான் சொல்வதை செய் என சொல்கிற தலைவன் அவனுக்கு கீழே இருக்கும் அணியினரின் தன்னம்பிக்கையை உடைத்து நொறுக்குகிறான். சுயமாக சிந்திக்கும் திறனை அவர்கள் இழந்து அடிமைகளாய் ஏதோ ஒரு கட்டளைக்கு காத்திருக்கும் இயந்திரங்களாக மாறிவிடுகிறார்கள். எப்போதும் எதிர்காலம் குறித்த பயமும் சந்தேகமுமாக வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள். வேலை என்பது பெரும் சுமையாகவும் அலுவலகமென்பது சிறையாகவும் மாறிப் போகிறது. இந்த வேலையை விட்டு விட்டால் வேறு வேலை கிடைக்காது என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக பிடிக்காத வேலையை செய்பவர்கள்தான் இங்கு அதிகம்.
அதனால்தான் அறிஞர்கள் எப்போதும் நல்ல நிறுவனத்தை தேர்ந்தெடு என சொல்வதில்லை நல்ல தலைவனை தேர்ந்தெடு என்று தான் சொல்கிறார்கள்.
“நான் திரும்பவும் நம்ம சேனலுக்கே வந்திரட்டா?” என்றான் வந்தியத்தேவன்.
“வேணாம் சார். பெரிய சேனலுக்கு போயிருக்கீங்க... உங்கள தூக்குனது ஒரு நல்ல முடிவுன்னு அவங்க நினைக்கிற மாதிரி அசத்தி காட்டுங்க சார்” என்றான் மார்க்ஸ்.
“அந்த தாம்சனும் சூப்பர் ஆளுப்பா... பட்டுன்னு பத்து லட்சத்தை தூக்கி குடுத்துட்டாரு தெரியும்ல” என்றார் நெல்லையப்பன்
“சொன்னாங்க” என்றான் வந்தியதேவன்.
“மார்க்ஸ் சொன்ன மாதிரி அங்க போய் அசத்து... இது நம்ம பையன்தான்னு நாங்க சொல்லி பெருமைபடணும்... நாலு நாளைக்கு ஒரு சேனல் ஜம்ப் பண்ணா உன்ன பத்தி தப்பா நினைப்பாங்க” என்றார் நெல்லையப்பன்.
“உங்க கூட நான் எப்பவும் இருக்கணும்”
“அவ்வளவுதான... அந்த தாம்சன் கிட்ட பேசி எனக்கு ஒரு லட்ச ரூபா சம்பளம் வாங்கி குடு நானும் அங்க வேலைக்கு வந்தர்றேன்” என்றார் நெல்லையப்பன்.
அனைவரும் சிரித்தார்கள்.
விட்டு போனவர்களின் நியாயங்களை நாம் புரிந்து கொள்கிற போது பிரிவு வலி தருவதில்லை மாறாக பிரிந்து போனவர்களின் மேல் பிரியம் இன்னும் அதிகமாகிறது.
கான்ஃபரன்ஸ் அறையில் அனைவரும் கூடியிருந்தார்கள். சேல்ஸ் ஹெட் சீயோன் எழுந்து நின்றான்.
“தமிழ் நாட்டோட தலையெழுத்தையே மாத்த போகுதுன்னு பொய் சொல்லித்தான் நம்ம புது ஷோவுக்கு விளம்பரங்கள கொண்டாந்திருக்கோம்” என ஆரம்பித்தான் சீயோன்
“அது பொய் இல்ல சீயோன்… நிஜம் தான் ” என்றார் நெல்லையப்பன்.
அனைவரும் சிரித்தனர்.
“10 செகண்ட் விளம்பரம் இப்ப 15 ஆயிரத்துக்கு போயிட்டிருக்கு. இந்த ஷோவோட 10 செகண்ட் விளம்பரத்தை நாங்க ஐம்பதாயிரத்துக்கு வித்திருக்கோம். 8 ரேட்டிங் வரும் 10 ரேட்டிங் வரும்னு க்ளையன்ட்டுக்கு ப்ராமிஸ் பண்ணி கொடுத்துத்தான் இந்த விளம்பரங்களை வாங்கியிருக்கோம். ரேட்டிங் வரலைன்னா விளம்பரம் குடுத்தவனுங்க சும்மா விட மாட்டாங்க” என கவலையாக சொன்னான் சீயோன்.
“12 ரேட்டிங் வரும் பாரு” என்றார் நெல்லையப்பன்.
“என்ன மாமா ஓவர் கான்ஃபிடன்ஸா” என்றார் அப்பாராவ்.
“இல்லப்பா... 5 ரேட்டிங் வரும்னாலும் நீங்க நம்ப போறதில்ல… அதுக்கு 12 ரேட்டிங்கே சொல்லி வைப்போமே” என சிரித்தார் நெல்லையப்பன்.
“சார் நான் ரொம்ப சீரியஸா பேசிட்டு இருக்கேன் சார்” என்றான் சீயோன்.
“உங்க டென்ஷன் எனக்கு புரியுது... அதே பிரஷர் எல்லாருக்கும் இருக்கு” என்றாள் தாட்சா.
“இல்ல தாட்சா... நம்ம ப்ராமிஸ் பண்ண மாதிரி ரேட்டிங் வந்துட்டா அதுக்கப்புறம் நம்ம என்ன சொன்னாலும் க்ளையன்ட் கேட்பாங்க… மிஸ்ஸாயிட்டா நம்ம மேல இருக்கிற நம்பிக்கை போயிடும். நார்மலா இப்ப வித்துட்டு இருக்கிற மத்த ஷோஸைக்கூட விக்கிறது கஷ்டமாயிடும்” என்றான் சீயோன்.
“புரியுது” என்றாள் தாட்சா.
ஒட்டு மொத்தமாக இந்த பந்தயத்தில் அனைத்தையும் பணயம் வைக்கிறோம் என்பது தாட்சாவுக்கு புரிந்தது.
“இந்த ஷோவோட ஹோஸ்ட் யாரு?” எனக் கேட்டான் சீயோன்.
“இன்னும் முடிவாகல...” என்றாள் தாட்சா.
“நீயே சொல்லு சீயோனு யாரு வேணும்னு” என்றார் நெல்லையப்பன்.
“என்ன கேட்டா நான் இன்னைக்கு ஃபிலிம் இண்டஸ்ட்ரில டாப்ல இருக்கிற மாறா-வை சொல்லுவேன். உங்களால கூட்டிட்டு வர முடியுமா?”
“கூட்டிட்டு வந்துட்டா போச்சு” என்றார் மேனன்.
அனைவரும் அவரை திரும்பி பார்த்தார்கள்.
“மாறா கிட்ட பேசி பார்க்கலாம்” என்றார் மேனன்.
“சார் அவர் இன்னைக்கு பெரிய ஸ்டார் சார். வரிசையா நாலு பிளாக் பஸ்டர். அவரு எல்லாம் டிவிக்கு வர மாட்டாரு சார்”
“அவர் இந்த ஷோ பண்ணா கரெக்டா இருக்குமா?” என்றார் மேனன்.
“வேற லெவல்ல இருக்கும் சார்” என்றான் மார்க்ஸ்.
“அப்புறம் என்ன அவரையே ட்ரை பண்ணுவோம்”
அறையிலிருந்த அனைவரும் இவர் எதுக்காக இப்படி பேசுகிறார் என்பது போல அவரை பார்த்தனர்.
“நாளைக்கு ஒரு அப்பாய்ன்மென்ட் மட்டும் வாங்க சொல்லுங்க… நாம போய் பாத்துட்டு வந்திரலாம்”
“சார்” என தயக்கமாக அழைத்தார் நெல்லையப்பன்.
“சொல்லுங்க நெல்லையப்பன்”
“இது கொஞ்சம் கஷ்டம்னு உங்களுக்கு தோணலையா?”
“கஷ்டம்தான்... ஆனா ட்ரை பண்றதுல எந்த நஷ்டமும் இல்லையே. தமிழ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்களே” என மேனன் யோசித்தார்.
“முடிய கட்டி மலையை இழுக்குறோம்... வந்தா மலை போனா முடி அதான சார்”
“பர்ஃபெக்ட்” என சிரித்தார் மேனன்.
“மாறா வரேன்னு சொல்லிட்டா பிரஸ்ஸுக்கு எல்லாம் சொல்லி தெறிக்க விடலாம்ல சார்” என கேட்டார் நெல்லையப்பன்.
“அவர் வரேன்னு சொன்னா சீக்ரெட்டா வெக்கனும்... வரலைன்னு சொன்னா அவரு வரலைன்னு சொல்லிட்டாருன்னு உலகத்துக்கே சொல்லணும்”
“ஏன் சார் அப்படி?”
“ஆரஞ்சு டிவிக்காரனுங்க மாறாவையே கேட்டானுங்களாம்ன்னு ஒரு பில்டப் கொடுக்கத்தான்” என மீண்டும் சிரித்தார் மேனன்.
“உங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியல சார்” என்றார் நெல்லையப்பன்.

மாறாவின் வீட்டு வரவேற்பறையில் திவ்யா, மார்க்ஸ், மேனன் தாட்சா நால்வரும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு எதிரே மாறா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான்.
“டிவிக்காரங்களை பகைச்சுக்க வேணாம்னுதான் வர சொன்னோம். டிவிக்கு இறங்கி வர்ற அளவுக்கு எல்லாம் எங்களுக்கு இன்னும் கஷ்டம் வரல” என்றார் மாறாவின் மேனேஜர்.
அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
“மார்க்கெட் இல்லாம இருக்குற நடிகர்களைப்போய் பாருங்க... அவங்க யாராவது இதை ஒத்துக்க ஒரு சான்ஸ் இருக்கு”
“வாசு” என மேனேஜரை அமைதியாக்கிய மாறா அவர்களை பார்த்து திரும்பினான்.
“நான் இத ஒத்துப்பேன்ற நம்பிக்கை உங்களுக்கு எப்படி வந்துச்சு”
“கோன் பனேகா குரோர்பதியை அமிதாப்பச்சன் ஆங்கர் பண்ணப்ப என்ன நடந்துச்சின்னு உங்களுக்கு தெரியும். ஷோவும் ஹிட்டாச்சி அதுக்கப்புறம் அவரோட வாழ்க்கையும் மாறுச்சு. திரும்பவும் அவர் பெரிய ஸ்டார் ஆனாரு” என்றார் மேனன்.
“அவரு நிலைமை அப்ப கொஞ்சம் சரியில்ல அவர் பண்ணாரு... இப்ப நான் டாப்ல இருக்கேன். நான் எதுக்காக பண்ணனும்?”
“கஷ்டப் பட்டா தான் டிவிக்கு வரணும்னு அவசியம் இல்ல மாறா… இஷ்டப்பட்டு கூட வரலாம்” என்றார் மேனன்.
“டிவிக்கு வந்தா சினிமா மார்க்கெட் பாதிக்காதா? வருஷத்துக்கு ஒரு படம் வருது. ஜனங்க காத்திருந்து காசு குடுத்து என்ன பாக்க வராங்க… ஓசியில தினம் தினம் என்ன டிவியில் பார்த்துட்டா ஜனங்களுக்கு க்ரேஸ் போயிடாதா?” எனக் கேட்டான் மாறா.
“நீங்க நடிக்கிற கேரக்டர்களைத்தான் ஜனங்க பாக்குறாங்க... இந்த ஷோல நிஜமான மாறா யாருன்னு அவங்களுக்கு நீங்க காட்ட ஒரு வாய்ப்பு
கிடைக்கும். உங்களோட இன்னொரு முகத்தை பாக்குற ஜனங்க உங்களை இன்னும் அதிகமா நேசிக்க ஆரம்பிப்பாங்க. அது உங்க அடுத்த படத்துக்கு இன்னும் உதவியா இருக்கும். மைனஸாக வாய்ப்பே இல்லை!”
மாறன் யோசனையாக பார்த்தபடி இருந்தான்.
“டெலிவிஷனுக்குன்னு ஒரு பவர் இருக்கு மாறா. அது என்னன்னு ஒரு தடவை நீங்க டெஸ்ட் பண்ணி பாருங்க”
“சார் ஒரு படத்துக்கு 15 கோடி வாங்குறாரு தெரியும் இல்ல” என்றார் மேனேஜர்.
“அந்த பதினஞ்சு கோடி நாங்க தரோம். படத்துக்கு கொடுக்கிறதுல பாதி டேட்ஸ் குடுத்தா போதும்” என யோசிக்காமல் சொன்னார் மேனன்.
அறையிலிருந்த அனைவரும் அதிர்ந்து போய் பார்த்தார்கள்.
“நிஜமாவா சொல்றீங்க?” என சிரித்தபடி கேட்டான் மாறா.
“உனக்கென்ன பைத்தியமா” என்பது போல் இருந்தது அவன் கேள்வி.
“யெஸ்” என்றார் மேனன்.
“பணத்தை காட்டி எங்க சாரை விலைக்கு வாங்கிரலாம்னு பாக்குறீங்களா?” என்றான் மேனேஜர்.
“அப்படி எல்லாம் இல்லைங்க... நான் ஒரு ஷோ பண்றேன். அதை மாறா பண்ணா அவருக்கான நியாயமான சம்பளத்தை தர்றேன்னு சொல்றேன்
அவ்வளவுதான்” என்றார் மேனன்.
“எனக்கு இப்ப டிவி பண்ற ஐடியா இல்ல... ஸாரி” என கும்பிட்டு விட்டு எழுந்தான் மாறா.
“சந்திக்க டைம் கொடுத்ததுக்கு நன்றி” என்றார் மேனன்.
அவர்கள் அவனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்கள்.

மேனனும் தாட்சாவும் ரெஸ்டாரன்ட் ஒன்றில் எதிர் எதிரில் அமர்ந்திருந்தார்கள்.
மேனன் சீரியசாக காபி குடித்துக் கொண்டிருந்தார்.
தாட்சா மேனனையே பார்த்துக் கொண்டிருந்தாள். நிமிர்ந்த மேனன் சின்ன புன்னகையுடன்
“என்ன தாட்சா அப்படி பாக்குறீங்க?” என கேட்டார்.
“15 கோடிக்கு அவன் ஒத்துகிட்டு இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?”
“குடுத்திருக்க வேண்டியது தான்” என சிரித்தார் மேனன்.
“ஏற்கெனவே பெரிய பணம் இந்த ஷோல இன்வெஸ்ட் பண்ணியிருக்கோம். இன்னொரு 15 கோடி ரொம்ப அதிகம் இல்லையா?”
“அதிகம்தான் தாட்சா... ஆனா நாம போட்ட 25-ஐ எடுக்கணுன்னா இந்த 15-ம் போட்டுத்தான் ஆகணும்!”
தாட்சா அவரைப் பார்த்தாள்.
“உலகத்தோட நம்பர் ஒன் ஷோவை பண்றோம். அது நம்பர் ஒன் ஷோன்னு நமக்கு மட்டும்தான் தெரியும். ஜனங்க உள்ள வந்தாதான் அவங்களுக்கும் அது புரியும். இந்த மாதிரி ஒரு ஆளாளதான் ஆடியன்சை நம்ம சேனலுக்குள்ள கொண்டு வர முடியும்”
“எப்படி இப்படி தைரியமா முடிவு எடுக்குறீங்க மேனன்?”
“வேற வழியில்ல தாட்சா.... தமிழ்ல இன்னொரு மூணு சேனல் சீக்கிரமே வரப்போகுது. அவங்க வர்றதுக்கு முன்னாடி நாம அடுத்த லெவலுக்கு போயே ஆகணும். இறங்கி அடிக்கணும்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் நடுவுல யோசிக்கக்கூடாது” என்றார் மேனன்.
“எனக்கு சில சமயம் உங்கள பார்த்தா ரொம்ப பொறாமையா இருக்கும் மேனன். என்னால உங்கள மாதிரி ஆக முடியுமான்னு தெரியல”
“நீங்க என்ன மாதிரி ஆக வேண்டாம்னுதான் சொல்றேன்... ஒரு டீமுக்கு டிராவிடும் வேணும்... சச்சினும் வேணும். இப்ப நாம எடுக்குற இந்த ரிஸ்க் தோத்து போச்சுன்னா திரும்பவும் இந்த சேனலை தூக்கி நிறுத்த உங்க ஒருத்தராலதான் முடியும் தாட்சா”
“நீங்க தோத்துப் போக மாட்டீங்க மேனன்”
“ஏன் அப்படி?” என மேனன் சிரித்தார்.
“ஏன்னா நான் சொல்றேன்” என்றாள் தாட்சா.
மேனனும் சிரித்தார்.

மார்க்ஸும் திவ்யாவும் பொட்டிக் ஒன்றின் முன் பைக்கில் வந்து இறங்கினார்கள்.
“என்ன பிளான் பண்றேன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றாள் திவ்யா.
“வா சொல்றேன்” என்றான் மார்க்ஸ்.
“முதல்ல சொல்லு”
“இல்ல.. உனக்கு ஒரு புடவை வாங்கி குடுக்கலாம்னு” என சொல்லும் போதே மார்க்ஸுக்கு வெட்கம் வந்தது.
திவ்யா மார்க்ஸின் வெட்கத்தை உள்ளூர ரசித்தாள்.
“புடவையா... எதுக்கு?”
“ஏன் உனக்கு நான் ஒரு கிஃப்ட் வாங்கி தரக்கூடாதா?” என்றான் மார்க்ஸ்.
“ஆச்சர்யமா இருக்கே... லவ் பண்ற பொண்ணுக்கு கிஃப்ட் எல்லாம் வாங்கி தரணும்னு கூட உனக்கு தோணியிருக்கே” என்றாள் திவ்யா.
மார்க்ஸ் புன்னகைத்தான்.
“ஏன் புடவை?”
“பிடிச்ச பொண்ணுக்கு புடவை வாங்கி தர்றதுல ஒரு சின்ன சென்ட்டிமென்ட் இருக்கு”
“என்ன சென்ட்டிமென்ட்?”
“அண்ணன் அப்பாவுக்கு அடுத்து புடவை வாங்கி தர உரிமை புருஷனுக்குத்தான் இருக்கு” என்றான் மார்க்ஸ்.
திவ்யா சிரித்தாள்.
“என்ன சிரிக்கிற?”
“யோசிக்கிறது எல்லாம் மாடர்னா யோசிக்கிறது... ஆனா உள்ளுக்குள்ள இந்த மாதிரி ஊர் சென்ட்டிமென்ட் வச்சிக்கிறது” என அவன் முதுகில்
தட்டினாள் திவ்யா.
“சின்ன சின்ன சென்ட்டிமென்ட்ஸ்தான வாழ்க்கையை சந்தோஷமாக்குது”
“ம்...” என தலையாட்டினாள் திவ்யா.
“போலாம் வா” என மார்க்ஸ் நகர அவன் பின்னால் திவ்யா உள்ளே நுழைந்தாள்.
மஞ்சள் விளக்குகளில் புடவைகள் மின்னின. கேட்டும் கேட்காமலும் மெலிதான வயலின் இசை ஒன்று கசிந்து கொண்டிருந்தது. இவர்களை
தவிர வேறு யாரும் இல்லை. இரண்டு பெண்கள் அவர்களை பார்த்து கை கூப்பினார்கள்.
“செட்டப்பை பார்த்தா விலை பின்னுவாணுங்க போல இருக்கே” என்றாள் திவ்யா.
“கொஞ்சம் காஸ்ட்லிதான்... ஆனா இங்க புடவைங்க சூப்பரா இருக்கும்” என்றான் மார்க்ஸ்.
“உன் பட்ஜெட் என்ன சொல்லு” என்றாள் திவ்யா.
“5 லட்ச ரூபாய் லிமிட்ல இரண்டு கிரெடிட் கார்டு இருக்கு. பத்து லட்சத்துக்குள்ள என்ன எடுத்தாலும் ஓகே தான்”
திவ்யா காதலாக மார்க்ஸைப் பார்த்தாள்.
“வாங்க மாட்டன்ற தைரியத்துலதான அப்படி சொல்ற?”
“அந்த ரேஞ்சுல இந்த கடையில் புடவை இல்லன்ற தைரியத்துல சொல்றேன்” என சிரித்தான் மார்க்ஸ்.
திவ்யாவும் சிரித்தாள்.
“நீ பாரு திவ்யா” என்றான் மார்க்ஸ்.
“சார் வணக்கம்” என சத்தம் கேட்டு இருவரும் திரும்ப கடை உரிமையாளர் நின்று கொண்டிருந்தார்.
மார்க்ஸ் முகம் மாறினான்.
“என்ன சார் இப்பல்லாம் வர்றதே இல்லை” என்றார் அவர்.
“அது வந்து” என மார்க்ஸ் தடுமாறினான்.
திவ்யா புரியாமல் அவர்கள் இருவரையும் பார்த்தாள்.
“ஏஞ்சல் மேடம் நல்லா இருக்காங்களா... நிறைய புது கலெக்ஷன் வந்திருக்கு… அவங்க கிட்ட சொல்லுங்க” என அவர் மேற்கொண்டு பேசும் முன் போன் அடிக்க...”ஸாரி நீங்க பாருங்க” என சொல்லி போனை எடுத்து கொண்டு நகர்ந்தார்.
திவ்யா மார்க்ஸை ஏறிட்டு பார்த்தாள்.
மார்க்ஸ் தயக்கமாக அவளை பார்த்தான்.
“இங்கதான் ஏஞ்சலுக்கு எப்பவும் புடவை எடுத்து குடுப்பியா?”
“இல்ல... அது வந்து” என மார்க்ஸ் வார்த்தைகளை தேடினான்.
“என்ன இங்க கூட்டிட்டு வர்றியே உனக்கு தப்பா தோணல”
“இல்ல திவ்யா”
“எனக்கு ஒரு மாதிரி அசிங்கமா இருக்கு” என சொல்லும் போதே திவ்யாவின் கண்கள் கலங்கின.
“ஸாரி திவ்யா இங்க புடவை நல்லா இருக்கும் அதான்” என மேற்கொண்டு அவன் பேசும் முன்னால் விறு விறுவென கதவை திறந்து கொண்டு
அவள் வெளியே நடந்தாள்.
“திவ்யா... திவ்யா” என அவன் பின்னால் ஓடி வர அதற்குள் அவள் சாலையில் இறங்கி நடக்க தொடங்கியிருந்தாள்.
மார்க்ஸ் அவசரமாக பைக்கை எடுத்து உதைக்க அது ஸ்டார் ஆக மறுத்தது. பதற்றமாக மீண்டும் உதைக்க... அது ஸ்டார்ட் ஆக மறுக்க அவன் இறங்கி திவ்யாவை நோக்கி ஓடி வர...
அவன் கண் முன்னால் அவள் ஆட்டோ ஒன்றில் ஏறி கிளம்பினாள். மூச்சிரைக்க ஓடி வந்தவன் நின்று காலால் தரையை ஓங்கி உதைத்தான்.
தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று அவனுக்குப் புரிந்தது. ஆனால் அதை எப்படி சரி செய்வது என்று தான் அவனுக்கு புரியவில்லை.
மேனன் தாட்சாவின் அறைக்கதவை தட்டினார்.
போனில் பேசிக் கொண்டிருந்த தாட்சா அவரை உள்ளே வருமாறு கையை ஆட்டினாள்.
உள்ளே நுழைந்தவர் அவளுக்கு எதிரில் இருக்கும் சேரில் அமர்ந்தார்.
“சரி சார்... சொல்லிர்றேன்... தேங்க்யூ...” என போனை வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.
“போன்ல யார் தெரியுமா?” என கேட்டாள் தாட்சா.
“யார்” என்பது போல அவளை பார்த்தார் மேனன்.
“மாறாவோட மேனேஜர்”
“என்ன நம்ம ஷோ அவர் பண்ணலையாமா?”
“இல்ல... பண்றாராம்” என்றாள் தாட்சா...
மேனன் முகம் மாறினார்.
“எடுத்து வைங்க 15 கோடியை” என சிரித்தாள் தாட்சா
மேனனும் புன்னகைத்தார்.
சதுரங்க ஆட்டத்தில் கையில் இருந்ததை எல்லாம் கட்டியாகிவிட்டது. சாமர்த்தியமாக கட்டைகளை உருட்ட வேண்டியதுதான். தாயம் விழுமா இல்லை தவறாக போகுமா? என மனதுக்குள் கேட்டுப் பார்த்தார் மேனன்.
எப்போதும் பதில் சொல்லும் பட்சி இப்போது அமைதியாக இருந்தது.