Published:Updated:

இடியட் பாக்ஸ் - 70: மாறா ஏன் ஆரஞ்சு டிவிக்கு வந்தார்?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 70: மாறா ஏன் ஆரஞ்சு டிவிக்கு வந்தார்?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

மார்க்ஸ் பைக்கை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்தபோது மணி 11-ஐ தாண்டியிருந்தது. ஹாலில் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. டைனிங் டேபிளுக்கு மேலிருந்த விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

டைனிங் டேபிள் மேல் அவனுக்கான இரவு உணவு எடுத்து வைக்கப்பட்டிருந்தது. நந்திதா கொல்கத்தா சென்றுவிட்டாள். வீட்டில் திவ்யாவும் அவனும் மட்டும்தான். அதனால் திவ்யாதான் ஆர்டர் செய்திருக்க வேண்டும்.

மார்க்ஸ் மெதுவாக டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தவன் ஹாட்பேக்கை திறந்தான். மார்க்ஸூக்குப் பிடித்த பரோட்டா, பீஃப் ஃபிரை, ஆம்லெட், அவன் விரும்பி குடிக்கிற ஆரஞ்ச் ஜூஸ் என ஒவ்வொன்றும் ஒரு ரெஸ்ட்டாரன்ட்டில் இருந்து ஆர்டர் செய்து டைனிங் டேபிளில் அடுக்கியிருந்தாள் திவ்யா.

மார்க்ஸுக்கு என்னவோ போல் இருந்தது. கோபித்துக் கொண்டு வந்தவள் அவனுக்குப் பிடித்த விஷயங்களாகப் பார்த்து பார்த்து ஆர்டர் செய்திருக்கிறாள். கோபப்பட வேண்டிய சமயத்தில் கோபப்படாமல் தான் வெட்கப்படுகிற மாதிரி ஒரு விஷயத்தை பண்ணிவிட்டாளே என எண்ணியது மார்க்ஸின் மனது.

ஒரு கணம் அப்படியே அமர்ந்திருந்தான் மார்க்ஸ். இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்றே அவனுக்குத் தெரியவில்லை. 'இன்னா செய்தாரை' என்ற குறள் அவனுக்கு சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்தது. அது அந்தச் சூழலுக்குப் பொருத்தமாக இருப்பதாக அவனுக்குப்பட்டது.

மார்க்ஸ் மெதுவாக எழுந்து திவ்யாவின் அறைக்குள் நுழைந்தான். அவனுக்கு முதுகைக் காட்டியபடி அவள் கட்டிலில் படுத்திருந்தாள். மெதுவாக அவள் அருகே அமர்ந்தவன் அவள் தோளில் கை வைத்தான். திவ்யா அசையாமல் படுத்திருந்தாள். உறங்கிவிட்டாள் என மார்க்ஸுக்குத் தோன்றியது.

அவள் காதருகே குனிந்தவன் மெல்லிய குரலில் “சாரி” என்றான். அவள் அப்போதும் அசையாமல் படுத்திருந்தாள். அவன் எழுந்து நகர போக, “சாரி சொல்லாம இருக்கிற மாதிரி நடந்துக்கக் கூடாதா?” என்றாள் திவ்யா.

அவன் திரும்பி அவளைப் பார்த்தான். திவ்யா புரண்டுபடுத்தாள். அந்த வெள்ளை நைட்டியில் கலைந்து போன கவிதை மாதிரி இருந்தாள் அவள். மீண்டும் அவளருகே அமர்ந்தான் மார்க்ஸ்.

“சாரி”

“அதைத்தான் சொல்ல வேணாம்னு சொல்றேன்” என்றாள் திவ்யா.

அவன் மெதுவாக அவளது கையை பற்றிக் கொண்டான்.

“உனக்கு ஒரு நல்ல புடவை வாங்கி தரணும்னுதான் யோசிச்சேன். இப்படி நடக்கும்னு நான் யோசிக்கல” என்றான் மார்க்ஸ்.

“எல்லாத்தையும் யோசிக்கணும்”

மார்க்ஸ் தலையாட்டினான்.

“திவ்யா... ஏஞ்சலும் நானும் எதுக்காக பிரிஞ்சோம்றதை உன்கிட்ட சொல்லிடுறேன். இந்த விஷயத்தில இதுக்கப்புறம் நமக்குள்ள எந்தப் பிரச்னையும் வரக்கூடாது.”

“வேணாம்” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் புரியாமல் பார்த்தான்.

“நீ ஏஞ்சல காதலிச்ச... உங்களுக்கு நடுவுல பிரேக்கப் ஆயிடுச்சு. அதுபோதும். அதைத் தாண்டி எந்த டீடெயிலும் எனக்குத் தேவையில்லை” என்றாள் திவ்யா.

“உண்மைய சொல்ல வேணாமா?” என்றான் மார்க்ஸ்

“வேணாம் மார்க்ஸ். அந்த உண்மையினால சங்கடம்தான். நடந்தது எதையும் பின்னால போய் சரி பண்ண முடியாதுன்றப்ப நடந்து முடிஞ்ச உண்மையை வச்சுகிட்டு என்ன செய்யுறது? அவளை நீ எப்படி பிரிஞ்சேன்றது முக்கியமில்லை... நம்ம ரெண்டு பேரும் எப்படிச் சேரப் போறோம்றதுதான் இப்ப முக்கியம். அதுக்கு பொய்தான் தேவைன்னா பொய்யே சொல்லு போதும்”

“என்ன பொய் சொல்லணும்?”

“ஏஞ்சலுக்கும் எனக்கும் இருந்தது இன்ஃபாக்சுவேஷன். அது காதலே இல்லை. நான் அவளை ஒரு போதும் என்னோட ஆதர்ச காதலியா நினைச்சதே இல்லை. வேற வழி இல்லாமதான் சேர்ந்து இருந்தோம்.”

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“இதெல்லாம்தான் நான் கேட்க விரும்புற விஷயங்கள். இது பொய்யா இருந்தா கூட பரவாயில்ல... அந்தப் பொய்யை சொல்லு... அது என்ன சந்தோஷப்படுத்தும். அந்தப் பொய் நம்ம உறவை ஸ்ட்ராங்காக்கும். அந்தப் பொய் நம்ம ஆயுசுக்கும் சந்தோஷமா இருக்க உதவி பண்ணும்!”

மார்க்ஸ் புன்னகையுடன் அவளைப் பார்த்தபடி இருந்தான்.

“உங்க ரெண்டு பேருக்குள்ள என்னல்லாம் நடந்தது எங்கல்லாம் போனீங்கன்ற உண்மைய நீ சொல்றதுனால என்னாகும்? நிம்மதிதான் போகும். பீச்சுக்கு போனா நீயும் அவளும் பீச் போன ஞாபகம் வரும். அவங்க வீட்டு மாடி படிக்கட்டு பாக்குறப்ப அவளும் நீயும் கிஸ் பண்ணது நினைவுக்கு வரும். அவளை பாக்குறப்ப எல்லாம் உங்களுக்கு நடுவில் என்ன நடந்திச்சுன்னு நீ சொன்னதெல்லாம் ஞாபகம் வரும். அது தேவையா சொல்லு?”

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

அவள் சொல்வது நியாயம் என மார்க்ஸுக்கு பட்டது.

எப்போதும் உண்மையை சொல்ல வேண்டும் என அவசியம் இல்லை. குட்டி குட்டி பொய்களால் வாழ்க்கை அழகாகும் பட்சத்தில் அதனால் தவறில்லை. ‘’சாப்பாடு நல்லா இருக்கு’’, ‘’இந்த புடவையில் நீ ரொம்ப அழகா இருக்கே’’, ‘’உன் அம்மா மாதிரி அன்பான ஆள் கிடையாது’’... இப்படி குட்டி குட்டி பொய்களில் தான் நிறைய உறவுகள் உயிர்வாழ்கின்றன. சொல்பவனுக்கு மட்டுமல்ல கேட்பவர்களுக்கும் தெரியும் அது பொய்தான் என்று. ஆனாலும் அதை கேட்கப் பிடிக்கும். உறவை முறிக்கும் உண்மைகளை விட உறவை வளர்க்கும் பொய்கள் சிறந்ததல்லவா?

“நான் உன்ன பார்த்த நிமிஷத்துல இருந்துதான் நம்மளோட வாழ்க்கை ஸ்டார்ட் ஆச்சு... அதுக்கு முன்னால நீ என்னவா இருந்த? உன் வாழ்க்கையில என்ன நடந்துச்சு, யார் இருந்தாங்கன்றதெல்லாம் எனக்கு தேவையும் இல்ல. அத நான் தெரிஞ்சுக்கணும்னும் விரும்பல... போதுமா?”

மார்க்ஸ் தலையாட்டி எழுந்தான்.

“எங்க போற?”

“மனசு லேசானதும் வயிறு பசிக்குது... அதான் சாப்பிடலாம்னு” என்றான் மார்க்ஸ்.

“நானும் இன்னும் சாப்பிடல” என்றாள் திவ்யா.

“அய்யோ... வா... சாப்பிடலாம்”

திவ்யா எழுந்து தலைமுடியை சுழற்றி கொண்டை போட்டவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

மார்க்ஸ் அவளை ஒரு கரத்தால் அணைத்துக் கொண்டான்.

“சின்ன சின்ன சண்டைகள் கேட்டேன்... சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்” என்ற வைரமுத்துவின் பாடல் வரிகள் அவனது நினைவுக்கு வந்தது.

“நாளைக்கு காலையில மாறாவோட மீட்டிங் இருக்கு” என்றாள் திவ்யா.

“ஆமா போன் வந்துச்சு” என்றான் மார்க்ஸ்.

………………………………………………..

மாறா சின்ன புன்னகையுடன் அமர்ந்திருந்தார். அவன் முன்னால் மார்க்ஸ், திவ்யா, ஏஞ்சல் மூவரும் அமர்ந்திருந்தார்கள்.

“நான் ஏன் இந்த ஷோ பண்ண ஒத்துகிட்டேன் தெரியுமா?” என கேட்டார் மாறா.

“தெரியல சார்” என்றான் மார்க்ஸ்.

“நீங்க வந்துட்டு போன விஷயம் தெரிஞ்சு என் அடுத்த படத்தோட புரொடியூசர் போன் பண்ணாரு.”

அவர்கள் மூவரும் மாறா என்ன சொல்ல போகிறார் எனப் பார்த்தபடி இருந்தனர்.

“நம்ம இண்டஸ்ட்ரியோட பெரிய புரொடியூசர் அவரு. டிவி ஷோ எல்லாம் பண்ணாதீங்க... நீங்க டிவியில வந்தா உங்க படம் தியேட்டர்ல ஓடாதுன்னு சொன்னாரு!”

“நீங்களும் அன்னைக்கு அதைத்தான சார் சொன்னீங்க” என்றான் மார்க்ஸ்.

“ஆமா... அவர் இன்னொன்னும் சொன்னாரு.. என் பேச்சு மீறி நீங்க அந்த ஷோ பண்ணா உங்களை அடுத்த படத்துல இருந்து தூக்க வேண்டியது வருன்னு மிரட்டினாரு. அப்பதான் முடிவு பண்ணேன் இந்த ஷோ பண்ணியே ஆகணும்னு!”

மூவரும் ஆச்சர்யமாக அவனைப் பார்த்தனர்.

“அவரு அமைதியா இருந்திருந்தா நான் இத பண்ணியிருக்க மாட்டேன். மிரட்டுனதும் கோபம் வந்திருச்சு... உடனே போன் பண்ணி இந்த ஷோ பண்றதா ஒத்துகிட்டேன்” எனச் சிரித்தார் மாறா. மூவரும் சிரித்தார்கள்.

“ஈகோதான எல்லாமே. ஒருத்தன் ஜெயிச்சு வர்றதுக்கும், அழிஞ்சு போறதுக்கும் அதுதான் காரணம் இல்லையா?”

“இந்த ஷோ பண்றதுல உங்களுக்கு வேற ஏதாவது செகண்ட் தாட் இருக்கா சார்?” எனக் கேட்டாள் ஏஞ்சல்.

“இப்பவும் இந்த முடிவு சரியா தப்பான்னு எனக்கு தெரியல. அதை சரியான முடிவாக்குறதும் தப்பான முடிவாக்குறதும் உங்க கையிலதான் இருக்கு” என்றார் மாறா.

“என்ன பண்ணனும் சொல்லுங்க சார்… பண்ணிரலாம்” என்றாள் ஏஞ்சல்.

“நீங்க ப்ராமிஸ் பண்ணதை பண்ணுங்க போதும். சினிமால பாக்குற மாறா இல்ல... நிஜமான மாறாவை மக்கள் பாக்கப் போறாங்க... அவங்களுக்கு இந்த மாறாவை பிடிக்கணும். என் படம் முடிஞ்சு போறப்ப அவங்களுக்குக் கிடைக்கிற சந்தோஷமும் திருப்தியும் ஒவ்வொரு நாளும் இந்த ஷோ முடியறப்ப அவங்களுக்கு கிடைக்கணும்… அவ்வளவுதான் நான் எதிர்பாக்குறது.”

“கண்டிப்பா சார்” என்றான் மார்க்ஸ்.

“நீங்க எனக்கு தரப்போற 15 கோடி ரூபாயில் இருந்து நான் ஒரு பைசா கூட எடுத்துக்கப் போறதில்ல... அத அப்படியே தமிழ் நாட்டுல இருக்கிற அரசு பள்ளிகளை டெவலப் பண்றதுக்காக செலவழிக்கப் போறேன்.”

சட்டென மாறாவின் மேல் அவர்களுக்கு மரியாதை வந்தது.

“சார் உண்மையிலேயே பெரிய விஷயம் சார்” என்றாள் ஏஞ்சல்.

“எனக்கு எப்பல்லாம் வாழ்க்கை பத்தின பயம் வருதோ அப்பல்லாம் நான் இந்த மாதிரி நல்ல விஷயங்கள பண்ண ஆரம்பிப்பேன். நாம நாலுபேருக்கு நம்பிக்கை கொடுக்குறப்ப நமக்குள்ள ஒரு நம்பிக்கை வரும்ல அதுக்காகத்தான்” என சிரித்தார் மாறா.

இடியட் பாக்ஸ் | மாறா
இடியட் பாக்ஸ் | மாறா

“சார்... பிரச்னைகள் வர்றப்ப தர்மம் பண்றதை நிறுத்துற ஆளுங்களைத்தான் பார்த்திருக்கேன். உங்க பாலிசி வித்தியாசமா இருக்கு சார்” என்றான் மார்க்ஸ்.

“கஷ்டத்தில இருக்குறவங்களுக்கு உதவி பண்ணி அவங்க முகத்துல சந்தோஷத்தை பாக்குற மாதிரி ஒரு விஷயம் இருக்கே... அதுக்கு பெரிய சக்தி இருக்கு. கோயிலுக்கு போய் யாகம் பண்ணி பவர் ஏத்திக்கிற மாதிரி இத பண்ணிப்பேன்… யாராலயும் இத ஜெயிக்க முடியாது” என்றார் மாறா.

மார்க்ஸ் புன்னகையுடன் தலையாட்டினான்.

“நான் இன்னைக்கு இந்த இடத்துல இருக்கேன்னா அதுக்கு காரணம் என்னோட கெமிஸ்டரி டீச்சர் சந்திரசேகர் சார்தான். அவர்தான் என்ன முதன் முதல்ல ஸ்கூல் டே டிராமால மேடை ஏத்துனவரு. நான் சினிமால நடிக்கப் போறேன்னு சென்னை கிளம்புனப்ப கையில ஆயிரம் ரூபாயும்... எப்ப எது வேணும்னாலும் போன் பண்ணுன்னு அவரோட போன் நம்பரையும் குடுத்து என்ன ட்ரெயின் ஏத்திவிட்டாரு!”

மாறாவுக்குள் இன்னொரு மாறா இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

“அவர் கொடுத்த யோசனைதான் இது. மக்கள் உனக்காக எவ்வளவோ செய்யுறாங்க… அவங்களுக்கு நீ திருப்பி செய்யுறதுக்கு இந்த ஷோவை யூஸ் பண்ணிக்கோன்னு சொன்னாரு. இந்த ஷோவை நான் ஒத்துகிறதுக்கு அதுவும் ஒரு காரணம்.”

நிழல் மாறாவை நிஜ மாறா தோற்கடித்து விட்டான்.

“அந்த படம் கேன்சல் ஆயிட்டதால அந்த படத்துக்காக பிளாக் பண்ண டேட்ஸ் எல்லாம் ஃப்ரீதான். ஷூட் பிளான் பண்ணிட்டு இன்ஃபார்ம் பண்ணுங்க.”

“யெஸ் சார்” என உற்சாகமாக சொன்னார்கள் மூவரும்.

………………………………………..

மார்ஸ் டிவியின் கான்ஃபரன்ஸ் ரூமில் அனைவரும் கூடியிருந்தார்கள். அறையில் இருந்த பெரிய டிவியில் தாம்சன் நியூயார்க்கில் இருந்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

“சார்... ஆக்டர் மாறாதான் அந்த ஷோவோட ஹோஸ்ட். கன்ஃபர்ம் பண்ணிட்டோம் சார்” என்றான் மனோஜ்.

தாம்சன் தலையாட்டினார்.

“நம்ம ஷோஸ்க்கு எல்லாம் கூட பெரிய ஆக்டர்ஸ் ஹோஸ்ட் பண்ணுவாங்களான்னு செக் பண்ண சொல்லியிருக்கேன் சார்.”

“ஏன் அது முன்னாடியே உங்களுக்குத் தோணல?”

“இல்ல சார்... இவ்வளவு பெரிய ஆக்டர் டிவிக்கு வருவார்னு நாங்க யாரும் எதிர்பார்க்கல சார்.”

“கரெக்ட்… அதுதான் உண்மை... உங்களுக்கு நான் ஒரு சின்ன எக்சர்சைஸ் தரலாம்னு இருக்கேன்” என்றார் தாம்சன்.

“யெஸ் சார்” என்றான் மனோஜ்.

“நீங்க ஒவ்வொருத்தரும் உங்களுக்கு ஒரு சிலை வைக்கணும்னா அதை என்ன மெட்டல்ல வைப்பீங்க... என்ன சைஸ்ல வைப்பீங்க… அந்தச் சிலை என்ன பண்ணிட்டு இருக்கிற மாதிரி பண்ணுவீங்க?”

தாம்சன் முடிக்க அனைவரது முகமும் மாறியது. இது என்னடா எக்சர்சைஸ் என அனைவருக்குள்ளும் கேள்வி ஓடியது. ஆனாலும் அந்தக் கேள்வியை தாம்சனிடம் கேட்க அவர்கள் யாருக்கும் தைரியம் வரவில்லை.

“நான் கேட்ட சிம்ப்பிள் கொஸ்டீனுக்கான பதிலை டைப் பண்ணி உடனே மெயில் பண்ணுங்க... உங்களுக்கு மூணு நிமிஷம் டைம்” என அவர் ஆடியோவை சைலன்ட்டில் போட்டுவிட்டு தனது மொபைலை பார்க்கத் தொடங்க... அறையில் இருந்த அனைவரும் தங்களுக்கு எதிரே இருந்த லேப்டாப்பில் பதிலை டைப் பண்ணத் துவங்கினார்கள்.

ஒவ்வொருவராக மெயில் அனுப்ப தாம்சன் அவர்களின் பதிலை சின்ன புன்னகையுடன் படிக்கத் துவங்கினார். அனைவரும் மெயிலை அனுப்பிவிட்டு தாம்சன் என்ன சொல்லப் போகிறார் என அவரது பதிலுக்காகக் காத்திருந்தார்கள்.

தாம்சன் தனது கண்ணாடியை கழட்டிவிட்டு அவர்களை நோக்கி புன்னகைத்தார்.

அவர் என்ன யோசிக்கிறார் என்பது தெரியாமல் அனைவரும் அமைதியாக இருந்தனர்.

“நம்ம மார்ஸ் டிவியோட முக்கியமான முடிவுகளை எடுக்குற 10 பேர் எனக்கு எதிர்ல இருக்கீங்க... உங்ககிட்ட நான் ஒரு சிம்பிள் கேள்வி கேட்டேன். உங்களுக்கு நீங்க சிலை வைக்கிறதா இருந்தா என்ன சைஸ், என்ன மெட்டல், என்ன ஆக்ஷன்ல சிலை வைப்பீங்க?”

அனைவரும் தாம்சனை மெல்லிய பதற்றத்துடன் பார்த்தபடி இருந்தனர்.

“5 பேர் வெண்கலம், 4 பேர் கல்லுல, ஒருத்தர் மார்பிள்னு சொல்லியிருக்கீங்க... எல்லாருமே 4 அடியில இருந்து 5 அடியில சிலை இருக்கணும்னு சொல்லியிருக்கீங்க.. எழுதிட்டு இருக்கிறது, நின்னுட்டு இருக்கிறதுனு இந்த ஆக்ஷன்லதான் உங்க சிலை இருக்கும்னு சொல்லி இருக்கீங்க.”

எல்லோரும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் சிந்தித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. அப்படித்தான யோசிக்க முடியும் என்றும் அவர்களுக்குத் தோன்றியது.

“ஏன் யாருமே தங்கத்துல, வைரத்தில் சிலை வைக்கணும்னு ஆசைப்படல” என கேட்டார் தாம்சன்.

அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.

“கற்பனைதானே... அதுக்கு ஒண்ணும் செலவாகப் போறதில்லையே!”

“இல்ல சார்... சிலைன்னா நார்மலா இப்படித்தான இருக்கும்” என தயக்கமாகச் சொன்னான் மனோஜ்

“ஏன் யாருமே 150 அடி 500 அடி, ஆயிரம் அடி, ஒரு பெரிய மலையவே அப்படியே சிலையா பண்ணலாம்னு யோசிக்கல” என அடுத்த கேள்வியை கேட்டார் தாம்சன்.

அவரது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அனைவரும் மெளனமானார்கள்.

“ஏன்?”

“இல்ல சார்... பொதுவா சிலைகள் இந்த சைஸ்லதான் இருக்கும்”

“யெஸ்... இதுக்கு பேர் தான் மைண்ட்செட். சிலைனு சொன்னதும் உங்களால இப்படித்தான் யோசிக்க முடிஞ்சுது. ஏன்னா இப்படித்தான் சிலைகளை பார்த்திருக்கீங்க.. உங்க மைண்ட் அப்படித்தான் யோசிக்க பழகியிருக்கு. நம்ம பண்ற நிகழ்ச்சிகளையும் நீங்க இப்படித்தான் யோசிக்கிறீங்க... அவுட் ஆஃப் த பாக்ஸ் யாரும் யோசிக்கிறது இல்ல. ஹோஸ்ட் அப்படின்னதும் வழக்கமான ஹோஸ்ட்கள்ல ஒருத்தரா யோசிக்கிறீங்க... ஆரஞ்சு டிவி மாதிரி ஏன் அது மாறாவா இருக்கக்கூடாது, ஏன் அது ஒரு பெரிய ஹீரோயினா இருக்கக்கூடாதுன்னு உங்களால பெருசா யோசிக்க முடியல”

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

அனைவருக்கும் சட்டென உறைத்தது.

“இது கிரியேட்டிவ் பிசினஸ். வியர்டான ஆளுங்க இதுல சக்ஸஸ் ஃபுல்லா இருப்பாங்க.. அதுக்கு நீங்க உங்கள மாத்திகிட்டே ஆகணும். ஒரு சக்சஸ் வந்தா அது மேல நம்ம படுத்து தூங்கக்கூடாது. புதுசு புதுசா முயற்சிகள் பண்ணிட்டே இருக்கணும். 100 முயற்சிகள் தோற்று போனாலும் தொடர்ந்து ட்ரை பண்ணனும். அது வேஸ்ட் கிடையாது. 100 விஷயம் வொர்க் ஆகாதுன்னு நீங்க கண்டுபிடிச்சிருக்கீங்கன்னு அர்த்தம்”

அனைவரும் மெளனமாக இருந்தார்கள்.

“இன்னொருத்தன் வந்து தான் நம்மள சேலஞ்ச் பண்ணனும்னு அவசியம் இல்ல... நம்மளோட ரிக்கார்ட்ஸை நம்மளே உடைக்கனும். அப்பதான் நாம எப்பவும் டாப்ல இருக்க முடியும்...” என்றார் தாம்சன்.

“நாங்க வேற யாராவது ஹீரோக்கள்கிட்ட பேசி பார்க்குறோம் சார்” எனக் கேட்டார் மனோஜ்.

“ஆரஞ்சு டிவியை பார்த்து நம்ம காப்பி அடிக்கிறோம்னு சொல்றதுக்கா? அவசியம் வரும் போது பண்ணலாம்... புது ஐடியா யோசிங்கன்னு சொன்னேன். அவங்களோட புது ஐடியாவை பண்ண சொல்லல.... டிவியில வர்ற அடுத்த நல்ல ஐடியா அவங்களோடதா இருக்கக்கூடாது... நம்ம டீமோடதா இருக்கணும்”

“யெஸ் சார்” என்றார்கள் அனைவரும்.

தாம்சன் இணைப்பை துண்டித்தார். அறையில் இருந்தவர்கள் ரிலாக்ஸ் ஆனார்கள்.

“ஆரஞ்ச் டிவி 200 பிளஸ்... நம்ம 1200 பிளஸ்... ஆனாலும் சார் இவ்வளவு சீரியசா இருக்காரே” என்றான் கூட்டத்தில் ஒருவன்.

“அதனாலதான் அவர் அங்க இருக்காரு. நாம இங்க இருக்கோம்… மாறாவோட ஷோ லான்ச் ஆகுற வாரம் மார்ஸ் எலைட்டுல தினம் புதுப்படமா போடுங்க... நம்ம கன்டன்ட்டை ஸ்ட்ராங் பண்ணுங்க… புரமோஷன் ஜாஸ்தி பண்ணுங்க... எல்லா ஷோலயும் போட்டி வச்சு இன்ட்ரஸ்டிங்கான பிரைசஸ் குடுங்க. பார்க்கலாம் மாறா ஏதாவது மாற்றத்தை கொண்டு வராருன்னு” என்றார் மனோஜ்.

ஒரு மாதமாக ஆரஞ்சு டிவி புதிய நிகழ்ச்சிக்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வெளிநாடுகளிலிருந்து தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தார்கள். பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. ஒட்டு மொத்த ஆரஞ்சு டிவியும் இந்த நிகழ்ச்சிக்காக தயாராகிக் கொண்டிருந்தது.

மறுநாள் காலை பிரஸ் மீட். மொத்த உலகத்துக்கும் மாறாதான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்கிற அறிவிப்பை வெளியிடப்போகும் நாள். பிரஸ்மீட்டுக்கான ஏற்பாடுகள் ஒரு படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் போல நடந்து கொண்டிருந்தது.

மார்க்ஸும் மற்றவர்களும் ஹோட்டலில் பிரஸ் மீட்டுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

பாண்டியன் அவசரமாக ஓடி வந்தான்.

“தல ஒரு சின்ன பிரச்னை” என்றான் பாண்டியன்

“என்னடா?” என முகம் மாறினான் மார்க்ஸ்.

அவனுடன் இருந்த தாட்சா ஏஞ்சல் திவ்யா அனைவருக்கும் மெல்லிய பதற்றம் தொற்றிக் கொண்டது.

“இத பாருங்க” என மொபைலைக் காட்டினான் பாண்டியன்.

அதில் மாறா செட்டில் அமர்ந்து ஷூட்டிங்கிற்காக பிராக்டிஸ் பண்ணிக் கொண்டிருக்கும் வீடியோ வந்திருந்தது. அதோடு ஆரஞ்சு டிவியின் பிரமாண்டமான நிகழ்ச்சியை பண்ணப்போவது மாறாதான் என்கிற வாய்ஸ் ஓவரும் இருந்தது.

அனைவரும் அதிர்ந்தார்கள்.

மறுநாள் காலை முறையாக இந்த அறிவிப்பு பிரஸ் மீட்டில் வெளியிடப்படுவதற்கு முன்னால் இந்த வீடியோ லீக்காகி விட்டது.

“டேய் பாண்டியா நம்ம டார்லிங்கிட்ட சொல்லி ஐடி டிபார்ட்மென்ட் அலர்ட் பண்ணு... இந்த வீடியோ சோர்ஸ் எங்க இருந்து போச்சுன்னு தெரியணும்” என்றான் மார்க்ஸ்.

“சரி தல” என அவசரமாக ஓடினான் பாண்டியன்.

“என்ன மார்க்ஸ் யாரு இதை பண்ணியிருப்பா?” எனக் கவலையாகக் கேட்டாள் தாட்சா.

“மேம் ஷூட் நடந்தப்ப உள்ள இருந்த யாரோதான் அவங்க மொபைல்ல இத ஷூட் பண்ணியிருக்கணும்” என்றான் மார்க்ஸ்.

“யாரா இருக்கும்?” என்ற கேள்வி அனைவருக்குள்ளும் ஓடியது.

“அந்த வீடியோவை தூக்க முடியாதா?” எனக் கேட்டாள் தாட்சா.

“இல்லை மேடம் கஷ்டம்.. இப்பவே அதோட வியூஸ் மில்லியன்ஸ்ல போயிடுச்சு... எத்தன தடவை ஷேர் ஆச்சுன்னு கணக்கு போட முடியல” என்றான் வினோ.

ஆரம்பமே சொதப்புகிறதே என தோன்றியது மார்க்ஸுக்கு...

பிரஸ்மீட்டுக்கான ஏற்பாடுகளை முடித்துவிட்டு அவர்கள் ஹோட்டலில் இருந்து கிளம்பினார்கள். ஹோட்டலில் இருந்து அவர்கள் வெளியே வரவும் டார்லிங் பைக்கில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.

அவன் தயக்கமாக அவர்கள் அருகில் வந்தான்.

“என்னடா?” என கேட்டான் மார்க்ஸ்.

“அந்த வீடியோவை எடுத்து லீக் பண்ணது யாருன்னு கண்டு பிடிச்சாச்சு” என்றான் டார்லிங்...

“யார்றா பண்ணது?”

ஏஞ்சல், திவ்யா, தாட்சா அனைவரும் டார்லிங் சொல்லப்போகும் பெயருக்காக காத்திருந்தார்கள்.

“சொல்லுடா யார் இதை பண்ணது?”

“மேனன் சார்” என்றான் டார்லிங்.

அனைவரும் அதிர்ந்தார்கள்.

- Stay Tuned...