Published:Updated:

இடியட் பாக்ஸ் - 75 | திவ்யாவின் லஞ்சம், மார்க்ஸின் எதிர்ப்பு, அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 75 | திவ்யாவின் லஞ்சம், மார்க்ஸின் எதிர்ப்பு, அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

மேனன் முன்னால் ராயும் அலோக்கும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு பின்னால் புரடக்ஷன் மேனேஜர் ரவி நின்று கொண்டிருந்தான்.

மேனன் யோசனையாக அவர்களை பார்த்தபடி இருந்தார்.

“டிசிப்ளினரி கமிட்டியோட பிரசிடென்ட் நீங்க... என்ன பண்ணலாம்னு சொல்லுங்க” என்றான் அலோக்.

“தப்பு பண்ணவங்களுக்கு தண்டணை கிடைக்குன்னு நம்புறேன்” என்றான் ராய்.

மேனன் ராயை பார்த்து தலையாட்டினார்.

“கம்பெனிக்கு எவ்வளவு தேவையான ஆளா இருந்தாலும் இப்படி ஒரு காரியம் பண்ணா அனுப்பித்தான் ஆகனும்” என்றான் அலோக்.

மேனன் புன்னகைத்தார்.

“என்ன மேனன் சிரிக்கிற? எனக்கு தெரியும் திவ்யா உனக்கு குளோஸ்ன்னு... நீ நடவடிக்கை எடுக்கலைனா நான் இந்த விஷயத்தை பாம்பே வரைக்கும் எடுத்துட்டுப் போவேன்”

மேனன் மெளனமாக இருந்தார்.

“அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?’ என்றான் அலோக்.

“நான் பேச வேண்டியதையும் சேர்த்து நீங்களே பேசுறீங்கன்னு அர்த்தம்” என்றார்.

இருவரது முகமும் மாறியது.

“தப்பு நடக்காம தடுக்கத்தான் டிசிப்பிளினரி கமிட்டி... பிடிக்காதவங்களை பழி வாங்குறதுக்கு இல்ல” என்றார் மேனன்.

“மேனன்” என அலோக் கோபமாக ஆரம்பிக்க கையை உயர்த்தி அவன் பேச்சை பாதியில் நிறுத்திய மேனன் திரும்பி ரவியைப் பார்த்தார்.

“என்ன நடந்துச்சு ரவி?”

“ஸ்டேடியம் பெர்மிஷன் 10 மணி வரைக்கும்தான். இன்சார்ஜ் 25,000 குடுத்தாதான் புரோகிராம் நடத்த அலோவ் பண்ணுவேன் இல்லன்னா கரன்ட்டை கட் பண்ணிருவேன்னு பிரச்னை பண்ணிட்டு இருந்தான். அவன் லஞ்சம் கேட்டதால நான் அதெல்லாம் தர முடியாது. கம்பெனி பாலிசிக்கு அது எதிரானதுன்னு கண்டிப்பா சொல்லிட்டேன்!”

“ஓ” என்றார் மேனன். அந்த ஓ-வில் ஒளிந்திருந்த கேலி அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது.

“அப்பதான் மேடம் வந்து அவனுக்கு 25,000 ஜீபே-ல அனுப்புனாங்க” என்றான் ரவி.

“ம்.. ஒருத்தன் நேர்மையின் சிகரம். இன்னொருத்தர் தவற்றின் உருவம். அலோக் திவ்யாவுக்கு தண்டனை கொடுக்கும் அதே நேரத்துல நாம ரவியோட நேர்மைக்கு நாம ஏதாவது பரிசு கொடுக்கணும்” என்றார் மேனன்.

“என்ன கிண்டலா?” என்றான் அலோக்.

“சே... சீரியசாதான் சொல்றேன்” என்றார் மேனன்.

“சார், அவங்க புரோகிராம் பிரச்னையில்லாம நடக்கணும்னுதான் பணம் கொடுத்தாங்க... ஆனாலும் லஞ்சம் கொடுக்கிறது தப்புதான?” என்றான் ரவி

“கண்டிப்பா தப்புதான்” என்றார் மேனன்.

“என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்க?” எனக் கேட்டான் அலோக்.

“திவ்யாவை கூப்புட்டு விசாரிக்கிறேன்.”

“அதை இப்பவே பண்ணலாமே சார்” என்றான் ராய்.

“பண்ணலாமே” என போனை எடுத்து திவ்யாவுக்கு கால் செய்தார் மேனன்.

ராயின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தை மேனன் கவனிக்கத் தவறவில்லை. காதலி என்பவள் ஒரு உன்னத உறவு. காதலிக்கும் பெண் மனைவியாக மாறினாள் தான் உறவாகிறாள் என்பதில்லை. அவள் காதலிக்கும்போதே உறவாகிவிடுகிறாள். அந்த காதல் திருமணத்தில் முடியாமல் போனாலும் காதலி என்ற உறவு அறுந்து போவதில்லை. இதுதான் ஒரு நல்ல காதலின் அடையாளம். கல்யாணம் என்பது கண்டிஷன்களுடன் வருவது. காதலுக்கு கண்டிஷன்கள் கிடையாது. நேசிப்பவர்களின் நலனை எப்போதும் நாடுவதுதான் உண்மையான நேசம். திவ்யாவை வீழ்த்த வேண்டும் என்கிற ராயின் ஆர்வத்துக்கான காரணம் என்ன என்பது மேனுக்கு புரிந்தது. அவர் அமைதியாக இருந்தார்.

திவ்யா அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

“குட் மார்னிங் சார்” என்றாள் திவ்யா.

“குட் மார்னிங் திவ்யா உட்காருங்க” என்றார் மேனன்.

திவ்யா சேரில் அமர்ந்தவள் ராயையும் அலோக்கையும் பார்த்து புன்னகைத்தாள். அவர்கள் இறுகிப்போன முகத்துடன் இருந்தார்கள்.

“திவ்யா நேத்து ஈவென்ட் நடந்தப்ப அங்க இருந்த ஸ்டேடியம் இன்சார்ஜுக்கு ஏதாவது பணம் கொடுத்தீங்களா?”

“யெஸ் ஸார். 25,000 ஜீ பே பண்ணேன் சார்”

“எதுக்காக கொடுத்தீங்க?”

“ஸ்டேடியம் 10 மணி வரைக்கும்தான் புக் பண்ணியிருந்தோம். 12 மணியைத் தாண்டி புரோகிராம் போயிட்டு இருந்துச்சு. அதனாலதான் சார்” என்றாள் திவ்யா.

“அப்படி பே பண்றது தப்புன்னு உங்களுக்குத் தெரியாதா?” என கேட்டான் அலோக்

“பே பண்ணலன்னா ஈவென்ட் பாதியில நின்னிருக்கும்” என்றாள் திவ்யா.

“அதுக்காக லஞ்சம் குடுப்பியா?” என கேட்டான் ராய்.

“லஞ்சம் எல்லாம் கொடுக்கலையே... எக்ஸ்ட்ரா டைமுக்குதான் பே பண்ணேன்” என்றாள் திவ்யா.

“இல்ல மேடம் அவன் அட்ஜஸ்ட் பண்ணிக்க கட்டிங் கேட்டான். அதை நான் தர முடியாதுன்னு சொல்லிட்டு இருந்தப்பதான் நீங்க வந்து அந்த பணத்தை பே பண்ணீங்க” என்றான் புரெடக்ஷன் மேனேஜர் ரவி.

“பொய் சொல்றது உனக்கு உதவாது” என்றான் அலோக்.

“நான் பே பண்ணது உண்மைதான் சார். ஆனா, அது லஞ்சம் இல்லை” என்றாள் திவ்யா.

“நான் அது லஞ்சம்னு சொல்றேன்” என குரலை உயர்த்தினான் அலோக்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“லஞ்சம்னா அதுக்கு பில் தரமாட்டங்கல்ல” என்றாள் திவ்யா.

ராயும் அலோக்கும் அதிர்ந்தார்கள்.

“பில் இருக்கா?” எனக் கேட்டார் மேனன்.

“ஆமா சார். நான் பே பண்ண 25,000 ரூபாய்க்கு ஸ்டேடியத்தில் இருந்து பில் வாங்கியிருக்கேன் சார்” என்றாள் திவ்யா.

“அப்படியா, அதை பார்க்க முடியுமா?” என்றார் மேனன்.

“யெஸ் சார்” என்றவள் போனை எடுத்து டயல் செய்ய மற்றவர்கள் குழப்பமாக அவளைப் பார்த்தபடி இருந்தனர்.

“மார்க்ஸ் எங்க இருக்க... அந்த ஸ்டேடியம் பில் மட்டும் எடுத்திட்டு வர்றியா?” என்றாள் திவ்யா.

ராய் ரவியை பார்த்தான். அவன் குழப்பமாக இருந்தான்.

“மார்க்ஸ் டீக்கடையில இருக்கான். பில்லோட வர்றான் சார்” என்றாள் திவ்யா.

அதற்கு வாய்ப்பேயில்லை என்கிற தொனியில் காத்திருந்தார்கள் ராயும் அலோக்கும்!

பத்து நிமிடத்தில் கதவைத் தட்டிவிட்டு வந்த மார்க்ஸ் பில்லை அவளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

திவ்யா பில்லை நீட்டினாள். ஸ்டேடியம் பெயர் போட்டு ஆரஞ்சு டிவியின் பேரில் இருந்த பில்லை பார்த்ததும் அலோக் ராய் இருவரது முகமும் சுருங்கியது.

“என்ன அலோக் பில் கரெக்டா இருக்கா செக் பண்ணு... ஒரு சின்ன தப்பு கூட நடக்கவிடக்கூடாது” என்றார் மேனன். அவர் முகத்தில் இருந்த புன்னகை அவர்களை கேலி செய்வது போல இருந்தது.

அலோக் பில்லை புரடக்ஷன் மேனேஜர் ரவியிடம் நீட்டினான். அதை வாங்கிப்பார்த்தவன் “ஸ்டேடியம் பில் தான் சார்” என்றான்.

“இந்த விஷயத்தை நீங்க என்கிட்ட கேட்டிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன். இப்படி நீங்க என்ன சந்தேகப்பட்டது எனக்கு ரொம்ப டிமோட்டிவேட்டிங்கா இருக்கு” என்றாள் திவ்யா.

“சாரி” என இறுக்கமான முகத்தோடு சொன்னான் அலோக்.

“ராய்... உன் மேல பெரிய மரியாதை வச்சிருந்தேன்” என வார்த்தைகளை முடிக்காமல் திவ்யா முகம் சுளித்தாள்.

“சாரி” என்ற ஒற்றை சொல்லுடன் தலையை தொங்க போட்டபடி அவன் எழுந்து அங்கிருந்து நகர்ந்தான்.

“வரேன் சார்” என ரவி அங்கிருந்து நகர முற்பட்டான்.

“ஒரு நிமிஷம்... ரவி உன் ராஜினாமா லெட்டரை பிரசாத் கிட்ட குடுத்துட்டு நீ கிளம்பலாம்” என்றார் மேனன்.

“சார்... சாரி சார்” எனப் பதறினான் ரவி.

“பல கோடி ரூபா செலவுல ஒரு ஈவென்ட் நடக்குது. நீ சரியா பிளான் பண்ணாம கையில பணம் இல்லாம இருந்திருக்க... பணம் கொடுத்த ஒருத்தரை லஞ்சம் கொடுத்தாங்கன்னு கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்க… நீ ரெசிக்னேஷன் லெட்டர் கொடுத்திட்டு கிளம்பலாம்” என்றார் மேனன்.

“சார்.. சாரி சார்” என அவன் ஏதோ பேச முற்பட மேனன் கையை உயர்த்தி தடுத்தார்.

“என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல... நீ கிளம்பலாம்” என உறுதியாகச் சொன்னார் மேனன்.

“இவரும் அந்த ராயும்தான் சார் எல்லாத்துக்கும் காரணம்” என அலோக்கை பார்த்து சொன்னான் ரவி.

அலோக் முகம் இருண்டது.

“நீ கிளம்பலாம் ரவி” என்றார் மேனன்.

“இந்த ஒரு தடவை மன்னிக்க முடியாதா சார்” என்றான் ரவி

திவ்யாவுக்கு அவனை பார்க்க பாவமாயிருந்தது.

“உன்னோட திறமைக்கு எங்க போனாலும் வேலை கிடைக்கும். நானே ரெக்கமண்ட் பண்ணி உன்ன ஒரு நல்ல வேலைக்கு சேர்த்து விடுறேன். இங்க வேணாம். போற இடத்துல ஒரே ஒரு விஷயம் ஞாபகத்தில வச்சுக்கோ. எப்பவும் நல்லவங்களோட இரு. தப்பு செய்யனும்னு இல்ல... தப்பான ஆளுங்களோட இருந்தா கூட அது தப்பு பண்ணதுக்கு சமம்தான்” என்றார் மேனன்.

ரவி தலையை தொங்க போட்டபடி அங்கிருந்து நகர்ந்தான்.

அலோக் மேனனை பார்த்தான்.

மேனன் புன்னகையுடன் “அப்புறம்” என்றார்.

“ஏதோ ட்ரிக் பண்ணி அவளைக் காப்பாத்திட்ட இல்ல” என பல்லைக் கடித்தபடி சொன்னான் அலோக்.

மேனன் பதில் சொல்லாமல் சிரித்தார்.

திவ்யா இருவரையும் பார்த்தபடி இருந்தாள்.

“லஞ்சத்தை சப்போர்ட் பண்றியா மேனன்!”

“இல்ல... திவ்யாவை பழிவாங்கணும்கிறது மட்டும்தான் உன் மனசுல இருந்தது. அதுல இருந்து அவள காப்பாத்த வேண்டியது என் பொறுப்பு. அதைத்தான் நான் செஞ்சேன்” என்றார் மேனன்.

“நான் கம்ப்ளைன்ட் பண்ணதும் நீ திவ்யாவுக்கு மேசேஜ் பண்ணிட்ட. அவ மார்க்ஸ் மூலமா பில்லை ரெடி பண்ணிட்டா. இத புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் முட்டாள் இல்ல மேனன்” என்றான் அலோக்.

“நீ புத்திசாலின்னு எனக்கு நல்லா தெரியும்.. அதே மாதிரி நீ ரொம்ப கெட்டவன்றதும் எனக்குத் தெரியும்” என்றார் மேனன்.

“உன்ன நான் இந்த ஆபிஸ் விட்டு சீக்கிரமே அனுப்புறனா இல்லையா பாரு” என்றான் அலோக்

“தயவுசெஞ்சு பண்ணு. உனக்கு புண்ணியமா போகும். நான் வேலைய விட்டு போறேன்னு சொன்னா எம்டி விட மாட்டேன்னு அடம் பிடிக்குறாரு” எனச் சிரித்தார் மேனன்.

அலோக் கோபமாக நகர்ந்தான்.

சட்டங்களும் விதிகளும் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்காகத்தான். புதிது புதிதாக குற்றவாளிகளை உருவாக்குவதற்கல்ல... ஆனால் பெரும்பாலும் அவை பிடிக்காதவர்களை பழிவாங்கவே பயன்படுத்தப்படுகின்றன.

“சார்” என கண்கள் கலங்க திவ்யா ஏதோ சொல்ல வந்தாள்.

“இருக்கிறதுலயே கஷ்டமான விஷயம் நமக்கு ஒருத்தர் தேங்க்ஸ் சொல்றப்ப என்ன ரியாக்ஷன் குடுக்குறதுன்னு தெரியாம முழிக்கிறதுதான்” என சிரித்தார் மேனன்.

“என்ன ஏன் சார் மன்னிச்சீங்க?”

“மன்னிக்கல... வார்னிங் குடுத்திருக்கேன். அது தப்புன்னு தெரிஞ்சு நீ பண்ணல. சேனலோட நலனுக்காக யோசிக்காம அதை நீ பண்ணிட்ட... தெரியாம பண்ணாலும் தப்புதான். இன்னொரு தடவை அதை பண்ணாத!”

“ஏன் சார் இந்த மன்னிப்பு ரவிக்கு குடுக்கல”

“உன்னோடது மிஸ்டேக்... அவன் பண்ணது திட்டம் போட்டு பண்ண குற்றம். அதுக்கு தண்டனை ஒண்ணுதான் வழி” என்றார் மேனன்.

“தேங்க்ஸ் சார்” என அங்கிருந்து நகர்ந்தாள் திவ்யா. அவளது போனடித்தது.

“திவ்யா ஈவ்னிங் கொஞ்சம் வீட்டு வரைக்கும் வர முடியுமா?” என்றார் பேபியம்மா.

ஏஞ்சலின் வீட்டு முன்னால் மார்க்ஸின் புல்லட் வந்து நின்றது.

பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவன் வீட்டின் வெளியே செருப்பை கழட்டும் போது அங்கு குவிந்து கிடந்த செருப்புகளை கவனித்தான். அதிலொன்று திவ்யாவின் செருப்பு என்பது அவனுக்குத் தெரிந்தது.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

திவ்யா ஏன் பேபியம்மாவின் வீட்டுக்கு வருவதை சொல்லவில்லை என்கிற யோசனையுடன் உள்ளே நுழைந்தான் மார்க்ஸ். உள்ளே திவ்யா, பேபியம்மா நந்திதா, மாட்ஸ் என அனைவரும் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

“வாப்பா” என்றார் பேபியம்மா.

“அண்ணே” என எழுந்தான் மாட்ஸ்.

“நீ எங்கடா இந்தப் பக்கம்?” என்றபடி உள்ளே நுழைந்தான் மார்க்ஸ்.

“இல்லன்ணே சும்மாதான்” என இழுத்தான் மாட்ஸ்.

மார்க்ஸ் சேரில் அமர்ந்தபடி “எங்கம்மா உங்க பொண்ணு” என்றான்.

“ஏஞ்சல் இப்ப பிஸிப்பா... மாறா ஷோல அவார்டு குடுத்தாலும் கொடுத்தாங்க அவ இப்பல்லாம் வீட்டு பக்கமே வர்றதில்லை” என்றார் பேபியம்மா.

“என்னம்மா என்ன நடக்குது?” என்றான் மார்க்ஸ்.

“ஒரு சின்ன விஷயம்... அதை பேசலாம்னு தான் உன்ன வர சொன்னேன்” என்றார் பேபியம்மா.

மார்க்ஸ் திரும்பி திவ்யாவைப் பார்த்தான்.

“எனக்கும் எதுவும் தெரியாது... அம்மா திடீர்னுதான் போன் பண்ணி வரச் சொன்னாங்க... அவ்வளவுதான்!” என்றாள்.

“என்னம்மா பில்ட் அப் எல்லாம் ஓவரா இருக்கு?”

“ஒண்ணும் இல்லப்பா... நம்ம நந்திதாவுக்கு மாட்ஸை ரொம்ப பிடிச்சிருக்காம்!”

மார்க்ஸ் முகம் மாறினான்.

“என்ன லவ்வா?”

“ஆமா... லவ்வில்லாம பின்ன வேறென்ன?”

“லவ் பண்ணா பண்ண வேண்டியதுதான.. அதுக்கு எதுக்கு எல்லோரையும் கூட்டி தகவல் சொல்லணும்” எனக் கேட்டாள் திவ்யா.

“இப்ப கேட்டியே இது பாயின்ட்... இதைத்தான் நானும் கேட்டேன். அதுக்கு அவ தான் எனக்கு எதுன்னாலும் திவ்யாவும் மார்க்ஸும்தான்… அவங்ககிட்ட முதல்ல இதை சொல்லணும்னு சொல்லிட்டா” என்றார் பேபியம்மா.

திவ்யா சிரித்தாள்.

“ஒரே வீட்ல பக்கத்து ரூம்ல இருக்கோம். நேரா சொல்றதை விட்டுட்டு எதுக்கு இவ்வளவு பில்ட் அப்” என்றாள் திவ்யா.

“ஒரு பயம்தான்.... நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு சொல்லுங்க” என்றார் பேபியம்மா...

“நான் சொல்றதுக்கு என்ன இருக்கு... அவ லைஃப்.. அவளுக்கு பிடிச்சிருந்தா ஒகேதான்” என்றாள் திவ்யா.

“என்ன மார்க்ஸ்... நீ என்ன சொல்ற?”

“அவன் என்ன சொல்லப்போறான். அவனும் இதைத்தான் சொல்லணும்” என்றாள் திவ்யா.

“இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்றான் மார்க்ஸ்.

சட்டென அனைவரும் முகம் மாறினார்கள். மார்க்ஸ் இப்படி சொல்வான் என அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.

“என்னப்பா சொல்ற?” என்றார் பேபியம்மா...

“இதெல்லாம் சரியா வராதும்மா... இவன் எல்லாம் அவளுக்கு செட்டாக மாட்டான்” என்றான் மார்க்ஸ்.

“மார்க்ஸ்... ஒரு மரியாதைக்காக அவ உன்கிட்ட சொல்றா அவ்வளவுதான்... நீ என்னமோ பெர்மிஷன் குடுக்குற மாதிரி முடியாதுன்ற?” என்றாள் திவ்யா.

“ஏதோ தப்பா தோணப் போயிதான அவ பெர்மிஷன் கேக்குறா?”

“இல்ல மார்க்ஸ்” என நந்திதா ஆரம்பிக்க மார்க்ஸ் இடை மறித்தான்.

“இங்க பாரு நந்திதா... இது சரியா வராது அவ்வளவுதான். நான் சொன்னா கேளு.. ஆர்க்யூ பண்ணாத” என்றவன் மாட்ஸ் பக்கம் திரும்பினான்

“தம்பி உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் புரியுதா? ஆனா இந்தக் காதல், கல்யாணம், குடும்பத்துக்கு எல்லாம் நீ செட்டாக மாட்ட!”

“இல்லன்னா நான் என்ன மாத்திக்கிறன்னா” என தயக்கமாக சொன்னான் மாட்ஸ்.

“என்ன மாத்திப்பே... உன்கிட்ட ஒழுங்கா ஒரு சட்டை பேன்ட் இருக்கா, கையில எவ்வளவு காசு வச்சிருக்க, எத்தனை மாசம் வாடகை பாக்கி? அவள எதுல கூட்டிட்டுப் போவ... உன் சைக்கிள்ல டபுள்ஸ் அடிப்பியா?” என மார்க்ஸ் கேட்க கேட்க திவ்யாவுக்கு கோபம் வந்தது

“இப்ப எதுக்கு நீ அவன அசிங்கப்படுத்திட்டு இருக்க? இதெல்லாம் இருந்தாதான் ஒருத்தன் காதலிக்கணுமா?”

“காதலிக்க எதுவும் தேவையில்ல... ஆனா கல்யாணம், குடும்பன்னா எல்லாம் தேவை புரியுதா?”

“பொண்ணு வந்தா தானா பொறுப்பு வரும்பா” என்றார் பேபியம்மா

“அம்மா இவனை நான் பத்து வருஷமா பாக்குறேன்... 10 ரூபா கிடைச்சா ரெண்டு வாழைப்பழம் சாப்பிட்டு ஜாலியா படுத்து தூங்குற ஆள் இவன். அடுத்த வேளை என்னென்னல்லாம் அவன் யோசிக்க மாட்டான்!”

“இல்லன்னா நான்...” என மாட்ஸ் பேச வந்தான்.

“ஏய் வாய மூடுறா... நந்து இது சரியா வராது...அவ்வளவுதான் சொல்லுவேன். இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்” என மார்க்ஸ் எழுந்து நின்றான்.

“அவ வாழ்க்கை அவ இஷ்டம்... இத சொல்ல நீ யாரு?” என கோபமாகக் கேட்டாள் திவ்யா.

“யாரா வேணா அவ வச்சுகட்டும், ஃபிரண்டுன்னு நினைச்சா ஃபிரண்ட், அண்ணன்னா அண்ணன், ஒரு அப்பான்னு நினைச்சா நான் அவ அப்பன் போதுமா?” என கோபமாக மார்க்ஸ் அங்கிருந்து நகர்ந்தான்.

நந்திதா கண்கள் கலங்க அவன் போவதை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் உதடுகள் புன்னகைத்துக் கொண்டிருந்தது.

சினிமா அவார்ட்ஸ் சனி மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என்ற விளம்பரம் மார்ஸ் டிவியில் ஓடியது.

சினிமா அவார்ட்ஸுக்கு எதிராக அதே சனி மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு டிவி அவார்ட்ஸ் என்கிற ப்ரோமோ ஆரஞ்சு டிவியில் ஓடியது.

“முட்டாளா அவங்க... இவ்வளவு பெரிய ஸ்டார்ஸுக்கு எதிரா அந்த டிவி ஸ்டார்ஸ் வெச்சுகிட்டு ஹெட் ஆன் பண்றாங்க” என ஆச்சரியப்பட்டார் மனோஜ்.

“சார் நம்ம வேற ஏதாவது டைம் பேண்டில் நம்ம டிவி அவார்ட்ஸ் போடலாமே” எனக் கேட்டாள் திவ்யா.

“சில சமயத்தில இந்த மாதிரி ஹெட் ஆன் பண்ண வேண்டியது அவசியம். அப்பதான் நாம யாருன்னு நமக்கே ஒரு ஐடியா கிடைக்கும்” எனச் சிரித்தார் மேனன்.

“நம்மளோட சேனல்ல இவ்வளவு பெரிய ஷோ போட போறோம்னு தெரிஞ்சும் அதை எதிர்த்து அவங்க ஒரு ஷோவை போடுறாங்கன்னா அவங்க நம்மளை சண்டைக்கு இழுக்குறாங்கன்னு அர்த்தம். இனிமே அவங்களை நாம சும்மா விடக்கூடாது. போட்டு பார்த்திட வேண்டியது தான்” என சொன்ன தாம்சனின் குரலில் வழக்கத்துக்கு மாறான கடுமை இருந்ததை உணர்ந்தார் மனோஜ்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

இரண்டு நிகழ்ச்சிகளும் ஒரே சமயத்தில் ஒளிபரப்பாகின. நான் போன் பண்ணி ஃபிரண்ட்ஸுக்கெல்லாம் கேட்டேன். எல்லா வீட்டுலயும் நம்ம ஷோதான் பார்த்திருக்காங்க என இரண்டு டிவியிலும் ஆட்கள் பேசிக் கொண்டார்கள்.

தீர்ப்பு வழங்கும் வியாழக்கிழமை வந்தது. அனைவரும் பதற்றத்துடன் காத்திருந்தார்கள்.

சாந்தினி ரேட்டிங்கை ஒருங்கிணைத்தவள் மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள். அனைவரும் அவளது முகத்தை ஆவலாக பார்த்தனர்.

“மார்ஸ் டிவியோட சினிமா அவார்ட்ஸ் 10 ரேட்டிங் பண்ணியிருக்கு”

அனைவரது உற்சாகமும் மெதுவாக வடியத் தொடங்கியது...

“நம்மளோட டிவி அவார்ட்ஸ் ரேட்டிங்...” என சாந்தினி நிறுத்தினாள்.

அனைவரும் அடுத்து அவள் சொல்ல போகும் வார்த்தைக்காகக் காத்திருந்தார்கள்.

இதயம் துடிக்கிற ஒசை திவ்யாவுக்குத் தெளிவாகக் கேட்டது. மொத்த கான்ஃபரன்ஸ் ரூமும் நிசப்தமாக இருந்தது.

சாந்தினி டிவி அவார்ட்ஸ் டிஆர்பியை சொல்ல வாய் திறந்தாள்!

- Stay Tuned...