மேனன் வாய் விட்டு சிரித்தார். அவர் அப்படி சிரித்து தாட்சா பார்த்ததில்லை. தாட்சா புன்னகையுடன் “எதுக்கு இந்தச் சிரிப்பு?” என்றாள்.
“மார்க்ஸோட அந்த சீரியல்ல வர்ற ஜெயமோகன் கேரக்டர் யார் தெரியுதா?” எனக் கேட்டார் மேனன்.
“இது ஒரு கேள்வியா பார்த்த எல்லாருக்கும் தெரியுது... அது நீங்க தான்னு!”
“சீரியல்ல காட்டுற அளவுக்கு அவ்வளவு நல்லவனா நான்?”
“இப்ப என்ன? நான் ஆமான்னு சொல்லணுமா?” எனக் கேட்டு சிரித்தாள் தாட்சா.
“இல்ல உங்க வாயால கேக்குறதுல ஒரு சின்ன சந்தோஷம்தான்” என்றார் மேனன்.
“மேனன் நீங்க நிஜம். அந்த ஜெயமோகன் கேரக்டர் உங்களோட டூப்ளிகேட். புதுசா பாக்குறவங்களுக்கு வேணா அவரைப் பிடிக்கலாம். ஆனா, உங்களைப் பார்த்தவங்களால அந்த கேரக்டரை ரசிக்க முடியாது. ஏன்னா உங்க ஸ்டைலே வேற” என்றாள் தாட்சா.
“கதையில உங்க கேரக்டரும் வருதே” என்றார் மேனன்.
“ஆமா மேனன். அந்த ஆக்னஸ் கேரக்டர்தான... என்ன மாதிரியே காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல் எல்லாம் பண்ணி வச்சிருக்காணுங்க” எனச் சிரித்தாள் தாட்சா.
மேனனும் சிரிப்பில் கலந்து கொண்டார்.
“ஜெயமோகனுக்கும் ஆக்னஸுக்கும் லவ்வுன்னு மட்டும் சொன்னானுங்க... முடிஞ்சுது நம்ம கதை” எனச் சிரித்தாள் தாட்சா.
“அய்யய்யோ.. அப்படி ஒரு பிரச்னை இருக்குல்ல” என்றார் மேனன்.
தாட்சா சிரித்தாள். மேனை அவளை ரசித்தபடி கேட்டார்.
“நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே தாட்சா” என்றார் மேனன்.
“சொல்லுங்க... இது என்ன புதுசா, பேசுறதுக்குலாம் பர்மிஷன் கேட்டுகிட்டு...”
“நீங்க இண்டிபெண்டென்ட்டான ஒரு பொண்ணு. எனக்கு தெரிஞ்சு யாருக்கும் தலை வணங்காத ஒரு கேரக்டர். என்கிட்ட மட்டும் ரொம்ப இறங்கிப் போற மாதிரி உங்களுக்கு தோணலையா?” எனக் கேட்டார் மேனன்.
தாட்சா சிரித்தாள்.
“சிரிக்காதீங்க... உண்மைய சொல்லுங்க நிஜமான அன்பு இன்னொருத்தரை அடிமைப்படுத்தக்கூடாதுதானே?” என்றார் மேனன்.
தாட்சா சின்ன புன்னகையுடன் மேனனைப் பார்த்தாள்.
“கெத்தான தாட்சா என்னால நார்மலான ஒரு பொண்ணா ஆயிட்டாங்களோன்னு எனக்கு கவலையா இருக்கு” என்றார் மேனன்.
“மேனன் உங்க மேல இருக்கிற அன்புனால நான் நீங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டுறேன்னு நினைக்கிறீங்களா?”
“அப்படியில்ல” என மேனன் இழுத்தார்.
“நீங்க நான் நேசிக்கிற ஒருத்தர் மட்டுமில்ல... நிறைய விஷயங்களை எனக்கு கத்து கொடுக்கிற குருவா உங்களை நான் பாக்குறேன்.”
மேனன் முகம் ஆச்சரியத்தில் மாறியது.

“நான் உங்கக்கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன். இன்னும் கத்துக்கிட்டு இருக்கேன் மேனன். உங்க கிட்ட மட்டும் நான் இறங்கி போறதுக்கு காரணம் அன்பு மட்டும் இல்ல. பாடம் சொல்லி கொடுக்கிற வாத்தியார் மேல இருக்குற மரியாதையும் கூட” என்றாள் தாட்சா.
மேனன் நெகிழ்ச்சியாக அவளைப் பார்த்தார்.
“கத்துக்கிற விஷயத்தில எனக்கு ஈகோ கிடையாது. ஆம்பிளையா, நம்மள விட வயசுல சின்னவங்களா, இல்லை நமக்கு கீழ வேலை செய்யுறவங்களான்னு எல்லாம் யோசிக்க மாட்டேன். நம்மளைத் தாண்டி அவங்க சிறப்பான ஒரு விஷயம் சொன்னா நான் அதை ஏத்துப்பேன். நான் சொல்றதுதான் சரினு அடம் பிடிக்க மாட்டேன். திறமைசாலிங்க யாரைப் பார்த்தாலும் அவங்கக்கிட்ட இருந்து கத்துக்கணும்னுதான் நினைப்பேன்.”
“எக்ஸலென்ட் தாட்சா” என்றார் மேனன்.
“அதுக்காக நீங்க சொல்ற எல்லாத்துக்கும் நான் தலையாட்டுவேன்னு நினைக்காதிங்க. என்னோட குப்பை கொட்டுறது லைஃப்ல அவ்ளோ ஈஸி இல்ல” எனச் சிரித்தாள் தாட்சா.
“லைஃப் என்னன்னு நீங்க கத்து குடுங்க தாட்சா... அதை நான் கையைக் கட்டி உங்கக்கிட்ட கத்துக்கிறேன்” என்றார் மேனன்.
தாட்சா சிரித்தாள்.
……………………………...
திவ்யாவும் மார்க்ஸும் பீச்சில் இருக்கும் தடுப்பு சுவரில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் மார்க்ஸின் புல்லட் நின்று கொண்டிருந்தது.
“சான்ஸே இல்லை” என்றாள் திவ்யா.
“ஏன் என்னாச்சு?” என்றான் மார்க்ஸ்.
“ஒரு வாரத்துல ஒரு சீரியல் லான்ச் பண்றதுலாம் உலகத்தில எங்கேயும் நடக்காது!”
“வேற வழி இல்லைனா பண்ணித்தான் ஆகணும்.”
“கல்கத்தால ஒரு சீரியல் லான்ச் பண்றதுக்கெல்லாம் மினிமம் 6 மாசம் டைம் எடுத்துப்போம். ஒரு நாட் எடுத்து அதை ஒரு நல்ல ரைட்டர் கிட்ட குடுத்து டெவலப் பண்ணி அதுல சேனல் கரெக்ஷன் சொல்லி திரும்பவும் அதை ரெடி பண்ணி, கன்ஸ்யூமர் ஸ்டடி பண்ணி, அதுல வர்ர ஐடியாஸ் கேட்டு அதுக்கேத்த மாதிரி கதையில் சேஞ்சஸ் பண்ணி, அப்புறமா முதல் 20 எபிசோட் 6 மாச கதை… ஒரு வருச கதைன்னு ரெடி பண்ணி அதுக்கப்புறம் நடிகர் நடிகைகளை செலக்ட் பண்ணி முதல் 5 எபிசோட் ஷூட் பண்ணி அதை திரும்பவும் ஒரு குரூப் ஆப் ஹவுஸ் வொய்ஃபுக்குக் காட்டி அவங்க சொல்ற கருத்துக்களை கேட்டு திரும்பவும் கரெக்ஷன் பண்ணி...”
மார்க்ஸ் கண் இமைக்காமல் அவள் பேசுவதை க்கேட்டுக் கொண்டிருந்தான்.
“இவ்வளவு பண்ணுவீங்களா என்ன?”
“ஆமா... இவ்வளவு பண்ணித்தான் ஒரு சீரியல் லான்ச் பண்ணுவோம்” என சிரித்தாள் திவ்யா.
“அப்பக்கூட அந்த சீரியல் ஃபிளாப் ஆக சான்ஸ் இருக்குதானே?” எனக் கேட்டான் மார்க்ஸ்.
“ஆமா... வாய்ப்பிருக்கு... அப்படி எல்லா ரிசர்ச்சும் பண்ணி லான்ச் பண்ண நிறைய சீரியல்ஸ் ஃபிளாப்பும் ஆகியிருக்கு!”
“அப்புறம் எதுக்கு இதெல்லாம் பண்ணனும்?”
“வெற்றி தோல்வின்றது எப்பவுமே நம்ம கையில இல்லதான். ஆனா, ஒரு நல்ல பிரிப்பரேஷன் தோல்விக்கான வாய்ப்புக்களை குறைக்கும்” என்றாள் திவ்யா.
மார்க்ஸுக்கு அது சரியெனப் பட்டது.
“நாங்க வர்றதுக்கு முன்னால இங்க இந்த மாதிரி ப்ராசஸ் எல்லாம் பண்ணதே இல்லையா?”
“பண்ணுவோம்... ஆனா எமர்ஜென்சினா எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு மனசுக்கு என்ன தோணுதோ அதை பட்டுனு பண்ணிடுவோம்” எனச் சிரித்தான் மார்க்ஸ்.
“கதை பண்ணும்போது மைண்ட் ஃபீரியா ஜாலியாதான் பண்ணனும். பண்ணதுக்கு அப்புறம் அதுல ஜனங்களுக்கு தேவையான எல்லாம் இருக்கான்னு சயின்ஸ் யூஸ் பண்ணி செக் பண்ணிக்கணும். அவ்வளவுதான்” என்றாள் திவ்யா.
“பர்ஃபெக்ட்” என்றான் மார்க்ஸ்.
திவ்யா புன்னகைத்தாள்.
கடற்கரையில் வாக்கிங் சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவர் பரபரப்பாக அவர்களைக் கடந்து சென்றவர் நின்று திரும்பி மீண்டும் அவர்களை நோக்கி வந்தார்.
“நீங்க ஆரஞ்சு டிவி மார்க்ஸ்தான?” எனக் கேட்டார் அவர்.
“ஆமா சார்... நீங்க யாருன்னு தெரியலையே” என யோசனையாகக் கேட்டான் மார்க்ஸ்.
“ஆரஞ்சு டிவியோட ரெகுலர் வியூவர். உங்களை அவார்ட் ஃபங்ஷன்ல எல்லாம் பார்த்திருக்கேன்”
“ஓ” எனத் தயக்கமாகப் புன்னகைத்தான் மார்க்ஸ்.
“இடியட் பாக்ஸ் பார்த்தேன்... ஃபென்டாஸ்டிக்கா இருக்கே... சேனல்ல என்ன நடக்குதுன்னு புட்டு புட்டு வைக்கிறீங்க” என்றார் அவர்.
மார்க்ஸ் அதற்கு என்ன சொல்வதென தெரியாமல் புன்னகைத்தான்.
“அதுல வர்ற ஹீரோ ரவிவர்மா கேரக்டர் நீங்கதான” என்றார் அவர்.
மார்க்ஸுக்குத் தூக்கி வாரிப்போட்டது...
“சே... சே... அது நான் இல்ல...” என அவசரமாக மறுத்தான் மார்க்ஸ்.
“சும்மா சொல்லாதிங்க.... கையில காப்பு போட்டிருக்கு... பின்னாடி புல்லட்டு நிக்குது... உங்களை வெச்சுத்தான் அந்த கேரக்டர் டிசைன் பண்ணியிருக்கீங்க… அது ஓப்பனா தெரியுது”
இப்படி ஒரு ஒற்றுமையை அவர் சொல்வார் என மார்க்ஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
“அந்த சேனலுக்கு புதுசா வர்ற ஹீரோயின் ஓவியா இவங்கதான?” என திவ்யாவைப் பார்த்து சிரித்தபடி கேட்டார் அவர்.
அதுவரை புன்னகையுடன் அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த திவ்யா சட்டென முகம் மாறினாள்.
“சார்... அது ஒரு சீரியல் சார்... அதுல ரவிவர்மா நீ தான.. ஓவியா அவங்க தானேன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது” என்ற மார்க்ஸின் குரலில் கொஞ்சம் கோபம் எட்டிப்பார்த்தது.
“சார்... டிவின்னு நீங்க காட்டுறது ஆரஞ்சு டிவி தான?”
“பொதுவா ஒரு டிவி சார்”
“எங்களைப் பொறுத்த வரைக்கும் அது ஆரஞ்சு டிவி... ரவிவர்மா நீங்க, உங்க கூட இருக்கிறதுனால இதுதான் ஓவியா” எனச் சிரித்தார் அவர்.
மார்க்ஸ் என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறினான்.
எதிரில் நிற்பவர் தனி மனிதர் அல்ல. ஒட்டு மொத்த தமிழகத்தில் ஆரஞ்சு டிவி பார்க்கும் பார்வையாளர்களின் பிரதிநிதியாகவே அவர் மார்க்ஸின் கண்ணுக்குத் தெரிந்தார். ரவிவர்மாதான் மார்க்ஸ் என்பது அவரது தனிப்பட்ட கற்பனை என எடுத்துக் கொண்டால் கூட பார்க்கும் அனைவருக்கும் சேனல் என்றால் அது ஆரஞ்சு டிவியாகத் தோன்றுவது நியாயம்தானே என மார்க்ஸுக்கு பட்டது.
“ஆல் த பெஸ்ட் சார்... இடியட் பாக்ஸ் பெரிய ஹிட்டாகும் பாருங்க” என சொல்லிவிட்டு அவர் நகர்ந்தார்.
“மிஸ்டர் ரவிவர்மா” என்றாள் திவ்யா.
“என்ன திவ்யா நீயும் கலாய்க்கிற?” என்றான் மார்க்ஸ்
“நான் திவ்யா இல்ல... ஒவியா...” என்றாள் திவ்யா.
என்ன சொல்வது எனத் தெரியாமல் திவ்யாவை பார்த்தான் மார்க்ஸ்.

“அப்படி பார்த்தா என்ன அர்த்தம்? சீரியல் பண்ண சொன்னா சீரியசா நம்மளோட பயோபிக் எடுத்து வச்சிருக்கியா?” எனக் கேட்டாள் திவ்யா.
“இந்த பாண்டியன் பயல கதை எழுத சொன்னா அப்படியே சேனல்ல நடக்கிறதை எழுதி வெச்சிருக்கான்.”
“நம்ம வாழ்க்கையில என்ன நடந்துச்சுன்னு நாம யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... சீரியல் பார்த்தா போதும்” எனச் சிரித்தாள் திவ்யா.
“அய்யய்யோ” என ஏதோ யோசித்துப் பதறினான் மார்க்ஸ்.
“என்னாச்சு?’’
“இல்ல... இந்த சீரியல் இன்னும் எத்தனைப் பேரோட வாழ்க்கைல பிரச்னை ஏற்படுத்தப்போதோ தெரியலையே” என்றான் மார்க்ஸ்.
“என்ன சொல்ற... முதல் அஞ்சு எபிசோட் நீ பார்த்திருப்பல்ல”
“பார்த்தேன். ஆனா, இதுதான் அவங்க இவங்கனு எல்லாம் நான் யோசிக்கவே இல்லை... சீரியல் நல்லா இருக்குன்னு மட்டும்தான் தோணிச்சு... இப்ப யோசிச்சு பார்த்தா சீரியல்ல வர்ற ஒவ்வொரு கேரக்டரும் நம்ம ஆபிஸ்ல இருக்கிற பல பேரோட மேட்ச் ஆவுதே”
“என்னடா சொல்ற?” எனச் சிரித்தபடி கேட்டாள் திவ்யா.
“சிரிக்காத திவ்யா... சீரியசாதான் சொல்றேன்”
“அப்படி யாரெல்லாம் இருக்காங்க இந்தக் கதையில” என சிரித்தபடி கேட்டாள் திவ்யா.
“எல்லாரும் இருக்காங்க... ஆனா யாரெல்லாம் அதை கண்டுபிடிக்கப் போறாங்கன்னுதான் தெரியல” என்றான் மார்க்ஸ்.
“யாரும் கண்டுபிடிக்கக் கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கோ... அது தவிர நீ உசிர் பொழைக்க வேற உனக்கு வழியில்ல...” என்றாள் திவ்யா.
மார்க்ஸ் யோசிக்கத் தொடங்கினான்.
……………………………………...
நெல்லையப்பன் வீட்டுக்குள் நுழைந்தார். அவரது மனைவி கோமதியும் மகள்களும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.
நெல்லையப்பனைப் பார்த்ததும் மகள்கள் வாயை பொத்தியபடி சிரித்தார்கள்.
“என்னம்மா என்னாச்சு?” எனப் புரியாமல் கேட்டார் நெல்லையப்பன்.
“ஒண்ணுமில்லப்பா” எனச் சொல்லிவிட்டு அவர்கள் சிரிப்பை மறைக்க தலையை குனிந்து கொண்டார்கள். அவரது மனைவி கோமதி மட்டும் இறுகிப்போன முகத்துடன் அமர்ந்திருந்தாள். ஏதோ தவறாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது நெல்லையப்பனுக்கு. ஆனால் என்னவென்று அவரால் யூகிக்க முடியவில்லை.
அவர் யோசனையாக நாற்காலியில் அமர்ந்தார்.
“ஆபிஸ் பார்ட்டியில் தண்ணியடிச்சீங்களா?” எனக் கேட்டார் கோமதி.
தூக்கி வாரிப்போட்டது நெல்லையப்பனுக்கு. ‘அது எப்படி இவளுக்குத் தெரியும்’ என்கிற நினைப்பு அவருக்குள் அவசரமாக ஓடியது.
“இல்லையே” என்றார் பலவீனமான குரலில்
“இல்லையேவா? குடிச்சுபுட்டு உங்க பாஸோட டான்ஸ் ஆடல. அத கேக்க வந்த பிரசாத்தை மண்டையில குட்டல... செல்லப்பா தலையில சிக்கன் துண்ட போடல?” என கோமதி ஆபிஸ் பார்ட்டியில் நடந்ததைப் புட்டு புட்டு வைக்க அதிர்ந்து போனார் நெல்லையப்பன்.
“இதெல்லாம் யாரு சொன்னது?” என பயத்துடன் கேட்டார் நெல்லையப்பன்.
“யாரு சொல்லணும்... அதான் படமா பிடிச்சு உங்க டிவியிலயே காட்டுறாங்களே”

“படம் பிடிச்சு காட்டுனாங்களா?” எனப் பதறி போய் கேட்டார் நெல்லையப்பன்.
“அப்பா அந்த இடியட் பாக்ஸ் சீரியல்ல எல்லாம் வருதுப்பா” என்றாள் அவரது மூத்த மகள். சட்டென எல்லாம் விளங்கிவிட்டது நெல்லையப்பனுக்கு. ‘அடேய் பாவி பாண்டியா மொத்தமா போட்டு தள்ளிட்டியே’ என அலறியது அவரது மனது.
“அது கதைமா” என கோமதியை சமாதானப்படுத்தும் நோக்கில் சொன்னார் நெல்லையப்பன்.
“ஆமா.. கதைதான்... உங்க கதை” என்றார் கோமதி.
மகள்கள் மீண்டும் சிரித்தார்கள்.
“நெல்லையப்பனுக்கு பதிலா சாமியப்பன்னு பேரை மாத்துனா எங்களுக்குத் தெரியாதா?” என்றார் கோமதி.
‘அடப்பாவி அந்த அப்பன மட்டுமாவது தூக்கியிருக்கக் கூடாதா? அக்கியூரட்டா போட்டு குடுத்திட்டியடா’ என்றது அவரது மனதின் குரல்.
………………….
அலோக் தனது இருக்கையில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான். அவனது போன் அடித்தது. போனை எடுத்து காதில் வைத்தான் அலோக்.
“பார்த்தீங்களா?” என மொட்டையாக ஆரம்பித்தான் ராய்.
“என்ன சொல்றீங்க... எனக்குப் புரியல?” என்றான் அலோக்.
“இடியட் பாக்ஸ்னு ஒரு புது சீரியல் வருதுல்ல நம்ம சேனல்ல”
“ஆமா... அதுக்கென்ன?”
“அதுல நீங்க, நான், செல்லப்பா, பிரசாத் எல்லாரும் வில்லனுங்க” என்றான் ராய்.
“வில்லனுங்களா” எனப் புரியாமல் கேட்டான் அலோக்.
“நாலாவது எபிசோட்ல டென்த் மினிட் பாருங்க.. உங்களுக்கு புரியும்” எனக் கோபமாக சொல்லிவிட்டு போனை வைத்தான் ராய்.
அலோக் ஆரஞ்சு டிவியின் டிஜிட்டல் பக்கத்தில் இடியட் பாக்ஸின் நாலாவது எபிசோடை க்ளிக் செய்தான்.
…………………………….
ஏஞ்சல் அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். கையில் லேப்டாப் பேகுடன் அவள் ஹாலுக்கு வந்தாள்.
பேபியம்மாவும், அப்பாவும் அமர்ந்திருந்தார்கள்.
“என்னடி உன் கேரக்டருக்கு இப்படி ஒருத்திய போட்டிருக்காங்க” எனக் கேட்டார் பேபியம்மா.
“என் கேரக்டரா?” எனப் புரியாமல் கேட்டாள் ஏஞ்சல்.
“நீ தானம்மா சீரியல் எல்லாம் பார்த்துகிற?” என்றார் அப்பா.
“இல்லப்பா ஒரு மாசமா நான் மாறா ஷோவுல பிஸியா இருக்கிறதால அதை மார்க்ஸ்தான் பார்த்துக்கிறான். ஏன்பா அதுல என்னாச்சு?”
“ஒண்ணும் இல்லம்மா... அதுல இடியட் பாக்ஸ்னு ஒரு சீரியல் வருதுல்ல” என்றார் அப்பா.
“ஆமா...”
“ஒண்ணும் இல்லடி அது சேனல் கதை... அதுல உங்க எல்லார் கேரக்டரும் வருது” என்றார் பேபியம்மா.
ஏஞ்சல் முகம் மாறினாள்.
“என் கேரக்டரும் வருதா?”
“ஆமா... பேரு மட்டும் ஏஞ்சலுக்கு பதிலா மேகின்னு வெச்சிருக்காங்க”
“சரி... என் கேரக்டருக்கு என்ன?”
“ஒண்ணும் இல்லடி ... உன் கேரக்டருக்கு சரியா ஆர்டிஸ்ட் போடலைன்னு சொல்ல வந்தேன்!”
“பாப்பா... அந்தக் கதையில வர்ற வில்லி நீ தான். அடுத்து என்ன நடக்கும்னு பரபரப்பை ஏற்படுத்துற கேரக்டருக்கு கரெக்டான ஆள் போட வேண்டாமா?” என்றார் அப்பா.
ஏஞ்சல் முகம் மாறினாள்.
“என்ன வில்லியா காட்டுறானுங்களா?” எனக் கோபமாக ஏஞ்சல் கேட்டாள்.
அவளது குரலில் இருந்த கோபத்தை உணர்ந்தார் பேபியம்மா.
“வில்லின்னா... வில்லி இல்ல... செகண்ட் ஹீரோயின்” என பேபியம்மா ஏதோ சொல்ல வர ஏஞ்சல் விருட்டென கிளம்பினாள்.
“என்னங்க இது ஜாலியா எடுத்துப்பான்னு சொன்னா அவ இப்படி சீரியசா எடுத்துக்கிட்டாளே” எனக் கவலையாகச் சொன்னார் பேபியம்மா...
“ஆமாம்மா” என்றார் ஏஞ்சலின் அப்பா.
………………………………...
மேனனின் அறையில் அலோக், ராய், செல்லப்பா, பிரசாத் நால்வரும் நின்று கொண்டிருந்தார்கள்.
“என்ன மேனன் இதெல்லாம்?” எனக் கோபமாக கேட்டான் அலோக்.
“என்ன?” என சாதாரணமாக கேட்டார் மேனன்.
“எங்க மேல இருக்குற கோபத்தை எல்லாம் அவன் சீரியல்ல காட்டியிருக்கான் சார்” என்றார் பிரசாத்.
“சீரியலை சீரியலா பாருங்க... அதை ஏன் இவ்வளவு சீரியசா யோசிக்கிறீங்க” என்றார் மேனன் சாதாரணமாக.
“அற்புதம் - அக்கவுன்ட்ஸ் மேனேஜர்னு அவன் என்னதான் சொல்றான்” என்றார் அலோக்.
“அலோக்... அற்புதம் இரண்டும் சம்பந்தமில்லாத பேரா இருக்கே” என்றார் மேனன்.

“அவன் பேப்பர் தூக்கி மூஞ்சில எறிஞ்ச சீனெல்லாம் கூட வருது” எனக் கோபமாகச் சொன்னான் அலோக்.
“எட்டு எப்பிசோடுக்குள்ளயா அதெல்லாம் வந்திருச்சு” எனக் கேட்டார் மேனன்.
அவரது குரலில் ஒளிந்திருந்த கேலி அலோக்கை கோபப்படுத்தியது.
“சார் ஒவ்வொரு எபிசோட்லயும் ஹெச்ஆர்தான் அவன் டார்கெட் பண்றான்” என்றான் பிரசாத்.
“உனக்கு அவனைப் பிடிக்காது... அதனால இப்படி யோசிக்கிற பிரசாத்” எனச் சமாதானப்படுத்தும் தொனியில் சொன்னார் மேனன்.
“மேனன் அந்த சீரியலை உடனே நிறுத்தணும். யாராவது அவங்க வேலை செய்யுற சேனலை கிண்டல் பண்ணுவாங்களா?”
“நம்மள மட்டும்தான் கிண்டல் பண்றாங்க... மேனன் சாரைப் பத்தியெல்லாம் உயர்வாதான் வருது” என்றான் செல்லப்பா.
“ஓ... என் கேரக்டரும் இருக்கா என்ன? நான் சீரியல் பார்த்தேன். அப்படி எதுவும் எனக்கு தோணலையே” என்றார் மேனன்.
“மேனன் உனக்கு மார்க்ஸைப் பிடிக்கும் நீ அவனை சப்போர்ட் பண்ணுவ, அவன் உன்னைப் புகழ்வான். அதெல்லாம் பத்தி எனக்கு கவலையில்லை. ஆனா, இது தப்பு... எங்களை பெர்சனலா அட்டாக் பண்ண அவனுக்கு எந்த உரிமையும் கிடையாது. இந்த சீரியலை நிறுத்த முடியுமா, முடியாதா? அதுக்கு மட்டும் பதில் சொல்லு” எனக் கேட்ட அலோக்கின் குரலில் கடுமை இருந்தது.
மேனன் பதில் சொல்ல வாயைத் திறக்கும்போது கையில் லேப்டாப்புடன் சாந்தினி உள்ளே நுழைந்தாள்.
“சார்... இடியட் பாக்ஸ் முதல் வாரமே 5 டிஆர்பில ஒப்பனாயிருக்கு சார். இதுவரைக்கும் லான்ச் ஆன சீரியல்லயே இதுதான் ஒப்பனிங் வீக்ல 5 பண்ண ஒரே ஒரு சீரியல்” என்றாள் சாந்தினி.
மேனன் முகத்தில் சின்ன புன்னகை விரிந்தது.
அவளுக்குப் பின்னால் சேல்ஸ் மேனேஜர் சீயோன் உள்ளே நுழைந்தான்.
“என்ன சீயோன்... என்ன விஷயம்?” எனக் கேட்டார் மேனன்.
அறையில் அனைவரும் கூட்டமாக இருப்பதை பார்த்து சீயோன் தயங்கினான்.
“பரவாயில்லை சீயோன்... சொல்லு” என்றார் மேனன்.
“நம்ம இடியட் பாக்ஸுக்கு மெயின் ஸ்பான்சர்ஷிப், கோ ஸ்பான்சர்ஷிப் எடுத்துக்க ஆளுங்க அடிச்சுக்கிறாங்க சார். பெரிய ரேட்டுக்கு ஒத்துகிட்டாங்க சார்” என்றார் சீயோன்.
மேனனின் புன்னகை இன்னும் அதிகமானது.
இனி இந்த சீரியலை நிறுத்த முடியாது என்பது அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. அடுத்தடுத்த எபிசோடுகளில் இன்னும் இது நம்மை என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ என பதற்றமானார்கள் அலோக்கும் மற்றவர்களும்.