பேபியம்மா வீட்டு மொட்டை மாடி ஆரஞ்சு டிவி ஆட்களால் நிரம்பியிருந்தது. பார்ட்டிக்கான வழக்கமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கைகளில் கோப்பைகளுடன் ஆட்கள் அனைவரும் ஆங்காங்கே நின்று சத்தமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். பேபியம்மாவின் அப்பாவும் அவரது நண்பர் பிரகாஷும் பார் கவுன்ட்டரிலும் ஸ்னாக்ஸ் கவுன்ட்டரிலும் பிஸியாக இருந்தார்கள்.
ஏஞ்சல் தனியாக நின்று கொண்டிருந்தாள். பேபியம்மா அவளைக் கடந்து செல்லும் சமயம் ஏஞ்சல் பேபியம்மாவின் கையை பற்றி இழுத்தாள். “எங்க போற? ஒரு நிமிஷம் இப்படி வாம்மா”
“என்னடி?” என்றார் பேபியம்மா...
“பார்ட்டின்னு சொன்னதும் உடனே கடகடன்னு எல்லாம் ஏற்பாடு பண்ணியே காரணம் என்னன்னு கேட்டியா என்கிட்ட?” என்றாள் ஏஞ்சல்.
“எல்லாரும் சந்தோஷாமா ஒண்ணு கூடுறீங்க... என்ன காரணமா இருந்தா என்ன?” என்றார் பேபியம்மா.
அதுதான் பேபியம்மா. அவருக்கு எப்போதும் வீடு ஆட்களால் சூழப்பட்டிருக்க வேண்டும். சந்தோஷமும் சிரிப்புமாக ஆட்களை பார்ப்பதுதான் அவருக்கு சந்தோஷம். அதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருவதென்றால் அதை யோசிக்காமல் செய்பவர் அவர்.
ஏஞ்சல் அம்மாவை உற்றுப் பார்த்தாள். “சரி சொல்லு எதுக்கு இந்த பார்ட்டி அரேஞ் பண்ண?’’
“நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கம்மா” என்றாள் ஏஞ்சல்.
பேபியம்மா வாஞ்சையாக அவளது கன்னத்தில் கை வைத்தவர், “உனக்கு சந்தோஷம்னா எனக்கும் சந்தோஷம்தான்” என சிரித்தார்.
“ஏன் நான் சந்தோஷமா இருக்கேன்னு நீ கேக்கவே இல்லையே”
அம்மா அவளைப் பார்த்தார்.
“என்னோட ஐடியாவில நான் ரெண்டு சீரியல் பண்ணேம்மா.”
“போன வாரம் ஆரம்பிச்சுதே அதுவா?” என்றார் பேபியம்மா.
“ஆமாம்மா அதுதான். அந்த சீரியல் ஓடவே ஓடாது அதுக்கு டிஆர்பியே வராதுன்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா அந்த சீரியல் ரெண்டும் பெரிய ஹிட்டாயிருச்சும்மா... நல்ல ரேட்டிங் வந்திருக்கு” என்றாள் ஏஞ்சல்.
“நீ பெரிய திறமைசாலிடி... இன்னும் பெரிய பெரிய சக்சஸ் எல்லாம் உனக்கு வரப்போகுது பாரு” என்றார் பேபியம்மா.
ஏஞ்சல் அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“அம்மா உண்மையை சொல்லு... என்ன விட அந்த மார்க்ஸதான உனக்கு பிடிக்கும்” என்றாள் ஏஞ்சல்.
பேபியம்மா சிரித்தார்.
“சும்மா சிரிச்சு சமாளிக்காத”
“ஆமா மார்க்ஸதான் எனக்கு அதிகம் பிடிக்கும்” என்றார் பேபியம்மா.
ஏஞ்சல் நிமிர்ந்து பேபியம்மாவை பார்த்தாள்.
“ஆனா நீ தான்டி என் உசிரு” என்று சொன்ன போது பேபியம்மாவின் கண்கள் கலங்கின.
“அம்மா” என்றாள் ஏஞ்சல்.
“உன் ஃபிரண்ட்களையே அம்மாவுக்கு அவ்வளவு தூரம் பிடிக்குறப்ப உன்ன எவ்வளவு தூரம் பிடிக்கும்னு உனக்கு தெரியலயா” என்றார் பேபியம்மா.
“ஆனா நீ என்கிட்ட என்ன பிடிக்கும்னு சொன்னதே இல்லையேம்மா!”
“சொல்லனுமா என்ன?” என புன்னகையுடன் பேபியம்மா கேட்டபோது ஒட்டு மொத்தமாக எல்லாம் புரிந்தது போலிருந்தது ஏஞ்சலுக்கு.
அம்மாக்கள் பார்க்கிற இடமெல்லாம் அன்பை விதைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் அந்த அன்பில் ஒன்றாவது முளைக்கிறபோது தன் பிள்ளைகளுக்கு நிழல் தராதா என்பதுதான். அப்பாக்கள் பிள்ளைகளுக்கு பணம் சேர்த்து வைக்கிறார்கள் என்றால் அம்மாக்கள் பிள்ளைகளுக்கு புண்ணியம் சேர்த்து வைக்கிறார்கள்.
ஏஞ்சல் அம்மாவின் கழுத்தை கட்டி அணைத்துக் கொண்டாள்.
“விடுறி யாராச்சும் பாக்க போறாங்க” என்றார் பேபியம்மா.
“எங்கம்மாவ நான் கொஞ்சுறேன் யார் பார்த்தா என்ன?” என்றாள் ஏஞ்சல்.
“அதெல்லாம் சரி... ஆனாலும் இந்த சீரியல் அம்மா மாதிரி எல்லாம் எனக்கு பண்ண வராது” என்றார் பேபியம்மா.
ஏஞ்சல் சிரித்தாள்.
“ஏண்டி மார்க்ஸ எங்க இன்னும் காணோம்... பார்ட்டிக்கு அவன கூப்பிடலயா?” என்றார் பேபியம்மா.
“பார்ட்டின்னு அவனுக்குத் தெரியும்மா...”
“தெரியுறதா முக்கியம் நீ அவன கூப்பிட்டியா ?”
“பத்து வாட்டியாவது போன் பண்ணியிருப்பேன். அவன் எடுக்கல... வாட்ஸ் அப்ல மேசேஜ் போட்டேன். புளூ டிக் காட்டுது... அவன் மேசேஜை பார்த்துட்டான்” என்றாள் ஏஞ்சல்.
“வந்திருவான்ல”
“தெரியலம்மா” என்றாள் ஏஞ்சல்.
பேபியம்மா யோசனையாக நகர்ந்தார்.
நெல்லையப்பன், பாண்டியன், வினு, டார்லிங் அனைவரும் கூட்டமாக மொட்டை மாடியில் ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள்.
திவ்யா அவர்கள் அருகே நடந்து வந்தாள்.
“எங்க உங்க தலய இன்னும் காணோம்” என்றாள் திவ்யா.
“இத நாங்க உங்ககிட்ட கேட்கலாம்னு யோசிச்சோம். நீங்க அந்த பால எங்களுக்குப் போட்டா எப்படி?” என்றார் நெல்லையப்பன்.
“காலையில வீட்ல இருந்து கிளம்பறப்ப பார்த்தேன். அப்புறமா ரேட்டிங் மீட்டிங்குக்கு கூட அவன் வரலயே” என யோசனையாக சொன்னாள் திவ்யா.
“நாங்க காலையில 11 மணி வரைக்கும் டீக்கடையில ஒண்ணாதான் இருந்தோம். அப்புறமாதான் தல யெஸ்ஸாயிருச்சு” என்றான் வினு.
“ஏதாவது பிரச்னையா?” எனக் கேட்டாள் திவ்யா.
“தங்களுக்குத் தெரியாத சட்டமில்லை” என இழுத்தார் நெல்லையப்பன்.
“கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்க” என்றாள் திவ்யா.
“இல்லங்க... ஏஞ்சலோட சீரியலுக்கு ரேட்டிங் வந்ததுல மார்க்ஸ் கொஞ்சம் அப்செட்.”
“ரேட்டிங் வந்தா சந்தோஷம்தான படணும் அவன் எதுக்கு அப்செட் ஆகனும்.”
“அப்படியில்லங்க... அந்த சீரியல் ரெண்டும் வழக்கமான குடும்ப குருமா. மார்க்ஸுக்கு அது சுத்தமா பிடிக்கல... அவன் புரோகிராமிங் ஹெட்டா இருந்திருந்தா அப்படி ஒரு சீரியல நம்ம சேனல்ல வரவிட்டிருக்க மாட்டான் ஏஞ்சல் உங்ககிட்ட பெர்மிஷன் வாங்கி அத பண்ணிடுச்சு. மார்க்ஸ் அந்த சீரியலுக்கு ரேட்டிங் வராதுன்னு நினைச்சுகிட்டு இருந்தான். நல்ல ரேட்டிங் வந்ததும் அவனால தாங்க முடியலன்னு நினைக்கிறேன்” என்றார் நெல்லையப்பன்
திவ்யாவுக்கு மார்க்ஸின் மனநிலை புரிந்தது. தான் வெற்றி பெறாது என நினைத்த ஒரு விஷயம் வெற்றி பெறும்போது தனது கணிப்பில் மேல் படைப்பாளிக்கு வரும் சந்தேகம் அவனுக்கு வந்திருப்பதை அவள் உணர்ந்தாள்.
“இதுக்காகவா அவன் டென்ஷனாகுறன். அவன் அப்படிபட்ட ஆளில்லையே” என்றாள் திவ்யா.
“அப்படிப்பட்ட ஆள் இல்லதான். ஆனா என்னன்னு தெரியல... இது அவன ரொம்ப குழப்பிடிச்சு” என்றார் நெல்லையப்பன்.
மார்க்ஸ் அங்கில்லாதது பேபியம்மாவுக்கு உறுத்தலாக இருந்தது. பேபியம்மா மார்க்ஸுக்கு போன் செய்தார்.
மறுமுனையில் போனடிக்கும் சத்தம் கேட்டது. பேபியம்மா காத்திருந்தார்.
போன் எடுக்கப்பட “அம்மா” என்றான் மார்க்ஸ். சட்டென பேபியம்மாவுக்குள் நிம்மதி படர்ந்தது.
“எங்கடா இருக்க?” என்றார் பேபியம்மா.
“அப்படியே கொஞ்சம் உங்க வலது பக்கமா பாருங்க”
பேபியம்மா திரும்பி பார்க்க மார்க்ஸ் படியேறி மொட்டைமாடிக்குள் நுழைந்தான்.

அனைவரும் அவனைத் திரும்பி பார்த்தனர். நெல்லையப்பன் பாண்டியன் மற்றும் அவனது சகாக்கள் அனைவரும் ஓ வென குரலெழுப்ப மார்க்ஸ் அவர்கள் அருகில் வந்து நின்றான்.
பேபியம்மா அவன் அருகில் வந்தவள் “ஏண்டா லேட்டு” என்றார்.
மார்க்ஸ் பதில் ஏதும் சொல்லாமல் புன்னகைத்தான்.
“சரி நம்ம அப்புறம் பேசுவோம்” என்றபடி பேபியம்மா அங்கிருந்து நகர்ந்தார். அனைவரும் மௌனமாக இருந்தார்கள்.
“டேய் மார்க்ஸுக்கு என்ன வேணும்னு கேட்டு எடுத்துட்டு வாடா” என்றார் நெல்லையப்பன்.
“எனக்கு எதுவும் வேணாம் நான் குடிக்கல” என்றான் மார்க்ஸ்.
“ஏன்?”
“மனசு சரியில்ல” என சிரித்தான் மார்க்ஸ்.
அனைவரும் புன்னகையுடன் மார்க்ஸைப் பார்த்தனர்.
“இல்ல மாமா... எப்பவுமே குடிக்காதவன் மனசு சரியில்லன்னா குடிக்கிறான். எப்பவுமே குடிக்கிறவன் மனசு சரியில்லன்னா குடிக்காம இருக்கணும்ல, அதான்” என்றான் மார்க்ஸ்.
“யப்பா இவன் நார்மலாயிட்டான்ப்பா” என்றார் நெல்லையப்பன்.
அனைவரும் சிரித்தனர்.
சிரிப்பு சத்தம் கேட்டு ஏஞ்சல் திரும்பி பார்த்தாள். மார்க்ஸ் கையை உயர்த்தி காட்டினான். அவனது வருகை அவளது வெற்றியை அவன் ஏற்றுக் கொண்டதாக அவளுக்கு தோன்றியது. ஏஞ்சலும் கையை உயர்த்தி காட்டிவிட்டு அருகிலிருந்த நந்திதாவிடம் பேச தொடங்கினாள்.
திவ்யா நடந்து அவர்கள் அருகில் வந்தாள். “என்ன சொல்றாரு உங்க தல?” என்றாள் திவ்யா.
“அவன் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கான்” என்றார் நெல்லையப்பன்.
திவ்யா புன்னகைத்தாள்.
“பேசிக்கிட்டு இருங்க நாங்க அடுத்த ரவுண்ட் எடுத்துட்டு வந்துர்றோம்” என அவர்கள் மெதுவாக அங்கிருந்து கலைந்தார்கள். திவ்யாவும் மார்க்ஸும் மட்டும் தனித்திருந்தார்கள்.
திவ்யா மார்க்ஸைப் பார்த்தாள். மார்க்ஸ் சின்ன புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
“எட்டாங்கிளாஸ்” என்றாள் திவ்யா.
ஆம் என்பதுபோல தலையாட்டி புன்னகைத்தான் மார்க்ஸ்.
“இதவிட பெரிய பெரிய ஃபெயிலியர் எல்லாம் பார்த்தவன் நீ... இதுக்கு போய் இப்படி நடந்துக்கிற!”
“இது ஃபெயிலியர் இல்ல திவ்யா... சக்ஸஸ். தப்பான விஷயம் சக்ஸஸ் ஆகுறப்ப வலிக்காது. பயமாயிருக்கும்” என்றான் மார்க்ஸ்.
“இங்க பார்... உனக்கு பிடிச்ச இடியட் பாக்ஸும் ஸ்கூல் ஸ்டோரியும் சேனல்ல இருக்கதான் போகுது. ஏஞ்சல் நம்புற ஹாட் கோர் டிராமாவும் இருந்துட்டு போகட்டுமே... அதுல என்ன பிரச்னை உனக்கு?” என்றாள் திவ்யா.
மார்க்ஸ் என்ன பேசுவது எனத் தெரியாமல் திவ்யாவை பார்த்தான்.
“ஆடியன்ஸ் முடிவு பண்ணட்டும் அவங்களுக்கு எது வேணும்ன்னு. நீ ஏன் முடிவு பண்ற?”
“கிளாஸா ஷோ பண்றது தப்பா?”
“இல்ல... நீ கிளாஸா ஷோ பண்ற... கிளாஸான ஆளுங்க நம்ம ஷோ பாக்க வர்றாங்க. நம்ம எதிர்பாக்குற மாஸ் நம்ம சேனலுக்குள்ள வரணும்னா ஏஞ்சல் பண்ற மாதிரி அவங்களுக்கு பிடிச்ச ஷோஸ் பண்ணிதான ஆகணும்!”
“இதுதான் மாஸுக்கு பிடிக்கும்னு யார் முடிவு பண்றது?”
“என்ன சின்ன புள்ள மாதிரி கேள்வி கேக்குற? ஏஞ்சல் ஷோவுக்கு ரேட்டிங் வருது மார்க்ஸ்” என்றாள் திவ்யா.
“சரி இப்ப என்ன பண்ணலாம்னு சொல்ற?”
“நீ நம்புற சீரியல்ஸும் இருக்கு... ஏஞ்சல் நம்புற சீரியல்ஸும் சேனல்ல இருக்கு. அத விட இத நல்ல டிஆர்பி கொண்டு வா. அது தப்புன்னு ப்ரூவ் பண்ணு”
“அப்ப வெற்றி ஒண்ணுதான் எது நல்லதுன்னு முடிவு பண்ணுமா?”
“மார்க்ஸ்... நம்ம ஹோட்டல் நடத்துறோம். உனக்கு பிடிச்சத குடுப்பியா சாப்பிட வர்றவங்களுக்குப் பிடிச்சத குடுப்பியா… யோசி”
மார்க்ஸ் திவ்யாவைப் பார்த்தான். அவன் சமாதானமாகவில்லை என்பது அவளுக்குப் புரிந்தது.
“பார்ட்டிக்கு வந்திருக்கோம். ரிலாக்ஸ் ஆகு. அப்புறமா இத பத்தி பேசலாம்” என்றபடி திவ்யா அவனது தோளோடு அணைத்துக் கொண்டாள்.
மேனன் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். மணி இரவு 12-ஐ நெருங்கியிருந்தது. சோம்பல் முறித்தபடி எழுந்தவர் பால்கனிக்கு வந்தார். சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைக்கப் போகும் சமயம் கீழே அபார்ட்மென்ட் முன்னால் மொபட் ஒன்றில் காபி கேனை கட்டியபடி இளைஞன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். இரவு டியூட்டி பார்க்கும் வாட்ச்மேன்கள் சிலர் காபி குடித்துக் கொண்டிருந்தார்கள். மேனனுக்கும் காபி குடிக்கலாம் எனத் தோன்றியது.
மேனன் இறங்கி வந்தார். காபி குடித்துக் கொண்டிருந்த வாட்ச்மேன் அவசரமாக மேனனுக்கு சல்யூட் அடித்தார்.
மேனன் புன்னகையுடன் “நீங்க காபி குடிங்க” என்றவர் இளைஞனிடம் “ஒரு நல்ல காபி குடுப்பா” என்றார்.
அவன் காபியை ஆற்றத் தொடங்கினான்.
மேனன் சிகரெட்டை பற்ற வைத்தார்.
“சார்” என்ற குரல் கேட்டு திரும்பினார்.
மார்க்ஸ் நின்று கொண்டிருந்தான். அவர் அந்த நேரத்தில் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை.
“என்ன மார்க்ஸ் இந்த நேரத்துல?”
“சாரி சார்... உங்க கிட்ட பேசணும் போல இருந்துச்சு. அதான் வந்தேன்!”
“மேல வர வேண்டியது தான?”
“இல்ல சார் இந்த டயத்துல உங்கள டிஸ்டர்ப் பண்றோமேன்னு யோசனையா இருந்துச்சு. கிளம்பலாமாம்னு யோசிச்சிட்டு இருக்கும்போதே நீங்க இறங்கி வந்திட்டீங்க சார்” என்றான் மார்க்ஸ்.
அவர் புன்னகையுடன் “யூ கேன் ஆல்வேஸ் நாக் மை டோர்... ரொம்ப சில பேருக்கு மட்டும்தான் நான் அந்த உரிமை குடுத்திருக்கேன். இப்ப உனக்கும் தர்றேன்” என்றார் புன்னகையுடன்.
“தேங்ஸ் சார்” என மார்க்ஸ் புன்னகைத்தான். காபி விற்கும் இளைஞன் அவரிடம் காபியை கொண்டு வந்து நீட்டினான்.
“இன்னொரு காபி குடுப்பா” என்றார் மேனன்.
இருவரும் காபி கோப்பையுடன் அபார்ட்மென்ட்டின் முன்னால் இருந்த பிளாட்ஃபார்மில் அமர்ந்தார்கள்.
மார்க்ஸ் எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் மெளனமாயிருந்தான்.
“நீ வருவேன்னு நான் நினைக்கல ஆனா உன்கிட்ட இருந்து போன் வரும்னு நான் எதிர்பார்த்தேன்” என்றார் மேனன்.
மார்க்ஸ் திரும்பி அவரை பார்த்தான். அவருக்கு எல்லாம் புரிந்திருந்தது என்பதை அவரது புன்னகையில் இருந்தே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
“நான் என்ன பண்ணட்டும் சார். எனக்கு பிடிச்சத பண்ணவா? இல்ல சேனலுக்குத் தேவையானதை பண்ணவா?” எனக் கேட்டான் மார்க்ஸ்.
“உலகத்துல இருக்கிற எல்லா மனுஷனுக்குள்ளயும் ஓடிக்கிட்டு இருக்கிற கேள்வி இது” என்றார் மேனன்.
மார்க்ஸ் அவரை ஏறிட்டு பார்த்தான்.
“எத்தனையோ பேர் குடும்பத்துக்காக பிள்ளை குட்டிகளுக்காக, அம்மா, அப்பாவுக்காக அவங்களோட கனவு வேலைய விட்டுட்டு பொழப்புக்காக ஏதோ ஒரு பிடிக்காத வேலையை செஞ்சுட்டு இருக்காங்க. சிங்கர் ஆகணும்னு ஆசைப்பட்டிருப்பான். ஆனா, ஏதோ ஒரு கவர்மென்ட் ஆபிஸ்ல கிளார்க்கா வேலை செஞ்சுட்டு இருப்பான். அந்த அளவுக்கெல்லாம் நம்ம மோசம் இல்ல... நமக்கு பிடிச்ச வேலையதான் செய்றோம்.”
மார்க்ஸ் மெளனமாக இருந்தான்.
“அந்த பிடிச்ச வேலையை நமக்கு பிடிச்ச மாதிரி செய்ய முடியலன்றது சமாளிக்க கூடிய பிரச்னைதான்” என சிரித்தார் மேனன்.
“சார்... அந்த சீரியல் நிஜமாவே மோசமா இருக்கு சார்” என்றான் மார்க்ஸ்.
“எனக்கு கூட அடிக்கடி தோணும் மார்க்ஸ். பெண்களை முட்டாளாவும் அடிமைகளாவும் வில்லிகளாவும் காட்டுற இந்த சீரியல்களை ஏன் பெண்களுக்கு பிடிக்குதுன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கும்.”
“ஆமா சார்... அந்த கேள்வி தான் என் மனசுக்குள்ள இன்னும் ஓடிக்கிட்டே இருக்கு சார்”
“நிஜத்துல பெண்களோட வாழ்க்கை இன்னும் மாறல மார்க்ஸ். அவங்க கஷ்டப்பட்டுகிட்டுதான் இருக்காங்க. அதனாலதான் சீரியல்ல கஷ்டப்படுற பெண்களை அவங்க தங்களோட பிம்பமா பாக்குறாங்க. அதனால அது அவங்களோட கதையா ஆயிடுது. அந்த சீரியல் ஹிட்டாயிடுதுன்னு நினைக்கிறேன்” என்றார் மேனன்.
மார்க்ஸ் அவரைப் பார்த்தபடியிருந்தான்.
“ரெண்டு விஷயம் சீரியல்ல வொர்க்காகும். ஒண்ணு இவ என்னை போலவே இருக்கிறான்ற கதையும் வொர்க்காகும். இன்னொன்னு இவ நான் இருக்க விரும்புன மாதிரி இருக்குறான்ற கதையும் வொர்க்காகும் மார்க்ஸ்!”
மார்க்ஸுக்குள் ஏதோ பொறி தட்டியது.

“எல்லாரும் கஷ்டப்படுற பொண்ணுங்க கதைய சொல்றாங்க... அது ஈஸி இப்படி நான் இருக்கணும்ற ஒரு பொண்ணோட கனவு இருக்கே அத பெருசா யாரும் சொன்னதில்லை. அப்படி ஒரு பொண்ணோட கதைய நீ சொல்லு மார்க்ஸ்” என்றார் மேனன்.
“சார் இது சூப்பர் ஐடியா சார்” என்றான் மார்க்ஸ்.
“வெற்றியாளர்கள் வித்தியாசமான விஷயங்களை செய்வதில்லை. நம்ம செய்யுற அதே விஷயங்களைத்தான் அவங்க வித்தியாசமா செய்றாங்க” என்றார் மேனன்.
மார்க்ஸ் ஆச்சரியமாக அவரைப் பார்த்தான்.
“உடனே ஃபீலிங்கா பார்க்காத... இது நான் சொன்னதில்ல... ஷிவ்கெரோ சொன்னது” எனச் சிரித்தார் மேனன்.
“எனக்கு நீங்கதான சார் சொன்னீங்க” என்றான் மார்க்ஸ்.
“நீ வித்தியாசமா சீரியல் பண்ணனும்னு ஸ்கூல் கதை சொல்ற... வக்கீல் கதை சொல்ற... புதுசா யாரோட கதைய சொல்லலாம்னு யோசிக்கிற. ஒரு சேஞ்சுக்கு காலம் காலமா இவங்க சொல்ற ஹவுஸ் வொய்ஃப் கதைய எப்படி வித்தியாசமா சொல்றதுன்னு யோசிச்சு பாரேன்”
மார்க்ஸுக்குள் பல கதவுகள் திறந்தன.
“ஒவ்வொரு பொண்ணுக்குள்ளயும் நாம இப்படி இருக்கணுன்ற கனவு ஒண்ணு இருக்கும். அந்த கனவு என்னன்னு கண்டுபிடிச்சு அப்படி ஒரு கதாபாத்திரத்தை ஹீரோயினா மாத்து மார்க்ஸ். எனக்கு என்னவோ அது வொர்க்காகும்னு தோணுது” என்றார் மேனன்.
“யெஸ் ஸார்” என நம்பிக்கையுடன் எழுந்தான் மார்க்ஸ்.
“இன்னொருத்தரோட வெற்றி நியாயமில்லாததா இருக்கலாம். ஆனா அதுக்கான பதில் நியாயமான ஒரு விஷயத்த ஜெயிக்க வச்சு காட்டுறதுதான்” என்றார் மேனன்.
மார்க்ஸ் புரிந்து கொண்டதன் அடையாளமாகத் தலையாட்டினான். மேனன் ஆதரவாக அவனது முதுகை தட்டிக் கொடுத்தார்.
கான்ஃபரன்ஸ் அறையில் அனைவரும் கூடியிருந்தார்கள்.
“மார்க்ஸ்... ஏஞ்சல் சீரியலோட இரண்டாவது வார ரேட்டிங் வரப் போகுது… அது ஜாஸ்தியானா திரும்பவும் டென்ஷனாயிடாத” என்றார் நெல்லையப்பன்.
அவன் பதில் ஏதும் சொல்லாமல் மெளனமாயிருந்தான்.
திவ்யா மார்க்ஸைப் பார்த்தாள். மார்க்ஸ் அவளைப் பார்த்து புன்னகைத்தான். திவ்யாவால் அவன் என்ன நினைக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
மேனனின் போனில் மேசேஜ் வரும் ஓசை கேட்டது.
அவர் போனை எடுத்து பார்த்துவிட்டு சொன்னார்.
“இந்த வாரம் ஏஞ்சலோட ரெண்டு ஷோஸும் குரோ ஆயிருக்கு. ரெண்டுமே சிக்ஸ் பிளஸ் ரேட்டிங்”
அனைவரும் கைதட்டினார்கள்.
“தேங்க்யூ சார்” என சொன்ன ஏஞ்சல் மார்க்ஸைத் திரும்பி பார்த்தாள்.
அந்தப் பார்வையில் இருந்த நம்பிக்கை மார்க்ஸை ஏளனம் செய்வது போலிருந்தது.
மார்க்ஸ் புன்னகையுடன் ஏஞ்சலைப் பார்த்தான்.
“பாண்டியா நம்ம ஆள் சிரிப்பே சரியில்லையே” என்றார் நெல்லையப்பன்.
“ஆமா மாமா... எனக்கும் அதுதான் யோசனையாயிருக்கு” என்றான் பாண்டியன்.
“சில மாற்றங்கள் நடந்திருக்கு. மார்க்ஸ் திரும்பவும் புரோகிராமிங் டீமுக்கு டிரான்ஸ்பர் ஆகியிருக்காரு” என்றாள் தாட்சா.
“பேருக்குதான் மேடம் மார்க்ஸ் டிஜிட்டல் டீம். ஆனா மார்க்ஸ் எப்பவுமே புரோகிராமிங் டீம்ல தான் மேம் இருந்திருக்காரு” என்றான் பாண்டியன்.
அனைவரும் புன்னகைத்தார்கள்.
“புரோகிராமிங் ஹெட்டா திவ்யா இருக்காங்க... ஃபிக்சன் ஹெட்டா ஏஞ்சல் ப்ரமோட் ஆயாச்சு. அதனால சீனியரான மார்க்ஸ இவங்களுக்கு கீழ வேலை செய்ய வைக்க முடியாது அதனால மார்க்ஸுக்கு தனியா இரண்டு சீரியல் ஒரு நான் ஃபிக்சன் பண்ற பொறுப்ப கொடுத்திருக்கோம். மார்க்ஸ் நேரா எனக்கு ரிப்போர்ட்டிங். இந்த மூணு ஷோ அவர் அவருக்குப் பிடிச்ச மாதிரி பண்ணலாம்” என்றாள் தாட்சா.

அந்த முடிவு அனைவருக்கும் ஏற்புடையதாக இருந்தது என்பது அனைவரது முக பாவனையில் இருந்தே தெரிந்தது.
“அடுத்த வருஷம் பெரிய ரேட்டிங் டார்கெட் நமக்கு இருக்கு. நிறைய ஷோஸ் லான்ச் பண்ணனும். அதனால மார்க்ஸ் திரும்ப புரோகிராமிங் வர்ரது, அந்த டீமை ஸ்ட்ராங் பண்ணும்னு நான் நம்புறேன்” என்றாள் தாட்சா.
“நான் நம்புற விஷயங்களை நான் பண்றேன். அவர் நம்புற விஷயங்களை அவர் பண்ணட்டும். எது ஜெயிக்குதோ அத நம்ம சேனலோட பாதையா நம்ம மாத்திக்கலாம். என்ன மார்க்ஸ் ஓகே தான” என்றாள் ஏஞ்சல்.
“பெர்ஃபக்ட் ஏஞ்சல்” என்றான் மார்க்ஸ்.
மீட்டிங் முடிந்து இருவரும் எழுந்தார்கள். ஏஞ்சலும் மார்க்ஸும் கான்ஃபரன்ஸ் அறை கதவை தாண்ட போகும் சமயம் ஏஞ்சல் கேட்டாள்.
“என்ன சீரியல் பண்ண போற? டாக்டர்ஸ் கதை. ஸ்பேஸ்ல இருந்து வந்த ஏலியனோட கதைன்னு ஏதாவது வித்தியாசமா வச்சிருப்பியே” என்றாள் ஏஞ்சல்.
“‘அகல்யா’, ‘அவளும் பெண்’ அப்படின்னு ரெண்டு கதை... ஹவுஸ் வொய்ஃப் எல்லாம் கதற கதற பாக்குற மாதிரி” என சொல்லிவிட்டு சிரித்தபடி மார்க்ஸ் அங்கிருந்து நகர்ந்தான்.
ஏஞ்சல் அவனை வித்தியாசமாக பார்த்தபடி இருந்தாள். அவன் சொன்னதிலிருந்த பாதி உண்மை அவளுக்குப் புரிந்தது. ஆனால் அவன் சொல்லாமல் விட்ட மீதி உண்மை என்ன என்பதை அவளால் யூகிக்க முடியவில்லை.
Stay tuned… இடியட் பாக்ஸ் அடுத்த சனிக்கிழமை வெளியாகும்!