Published:Updated:

இடியட் பாக்ஸ் - 81 | மார்க்ஸின் ‘மெளன ராகம்’… சித்தார்த் மேனனின் ‘காதல் கண்மணி’!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 81 | மார்க்ஸின் ‘மெளன ராகம்’… சித்தார்த் மேனனின் ‘காதல் கண்மணி’!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

மழை பெய்து கொண்டிருந்தது. மார்க்ஸ் ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்தான். சவரம் செய்யப்படாத அவன் முகத்தில் இருந்த ஒரு மாத தாடி அவனை வித்தியாசமாக காட்டியது. இதழில் சின்ன புன்னகையுடன் மார்க்ஸ் மழையை ரசித்துக் கொண்டிருந்தான்.

தனியாக இருக்கும் போது உங்களால் புன்னகைக்க முடிகிறது என்றால் அந்த புன்னகை உங்களுக்கானது மட்டும் என்று அர்த்தம். மனம் அமைதியில் நிரம்பி வழியும் போது இதழ்கள் புன்னகைப்பது இயல்பு.தனியாக புன்னகைத்துக் கொள்ள முடிகிற மாதிரியான தருணங்கள் அழகானவை.

மார்க்ஸின் போன் அடித்தது. அது திவ்யாவாகத்தான் இருக்கும் என அவனுக்குத் தோன்றியது. அவன் போனை எடுத்தான். அவனது கணிப்பு சரியாக இருந்தது.

“ஹலோ” என்றான் மார்க்ஸ்.

“எங்க இருக்க?” எனக் கேட்டாள் திவ்யா.

“சிவகங்கையில ஒரு குட்டி லாட்ஜ்ல”

“வசதியா இருக்கா?”

“ஜன்னல் இருக்கு... வெளிய மழை பெய்யுது… இதைவிட வேறென்ன வசதி வேணும்”

“என்னடா பண்ணிட்டு இருக்க?”

“ஜன்னல் பக்கத்துல நின்னு மழைய ரசிச்சிக்கிட்டு இருக்கேன்” என்றான் மார்க்ஸ்.

“அங்க இப்ப மழை பெய்யுதா?”

“ஆமா”

“மழை என்ன சொல்லுது?” எனக் கேட்டாள் திவ்யா.

“உன்ன ஞாபகப்படுத்துது”

திவ்யா சிரித்தாள்.

“ஃபிராடு... அப்ப நீயில்ல எனக்கு போன் பண்ணியிருக்கணும்” என்றாள் திவ்யா.

“நீ போன் பண்ணலைன்னா நான் பண்ணியிருப்பேன்” என்றான் மார்க்ஸ்.

“குடுத்து வச்சவன் நீ... ஒரு மாசமா ஊர் சுத்திட்டு இருக்க”

“நான் உன்னை என் கூட வா-ன்னு சொல்லி எவ்வளவு தடவை கூப்பிட்டேன். நீ தான் வரலைன்னு சொல்லிட்ட!”

“அது எப்படி இவ்வளவு வேலையை விட்டுட்டு நான் வர முடியும்?” என்ற திவ்யாவின் குரலில் ஏக்கம் இருந்தது.

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

பெரும்பாலானோரின் வாழ்க்கை கரைந்து போவது இப்படித்தான். நேரமிருக்கும் போது பணமிருக்காது. பணமிருக்கும் போது நேரமிருக்காது. இரண்டும் இருக்கும்போது எதையும் அனுபவிக்க இளமை இருக்காது.

“எப்ப சென்னைக்கு வர்ற?” எனக் கேட்டாள் திவ்யா.

“நாளைக்கு காலையில காபி உன்னோடதான்” என்றான் மார்க்ஸ்.

“மார்க்ஸ்”

“சொல்லு திவ்யா”

“உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன்” என சொல்லும் போதே திவ்யாவின் குரல் உடைந்தது.

“திவ்யா... இந்த ட்ராவல்லதான் நான் உன்னை எவ்வளவு தூரம் லவ் பண்றேன்னு எனக்கே புரிஞ்சது” என்றான் மார்க்ஸ்.

“அப்படியா?”

“ஆமா திவ்யா... உன் நினைப்பு இல்லாம ஒரு செகண்ட் கூட என்னால இருக்க முடியல… என்ன சாப்பிட்டாலும் உனக்கு இது பிடிக்கும் பிடிக்காதுன்னு தோணுது. ஒவ்வொரு விஷயத்தை பாக்கும்போதும் இதை நீ பார்த்தா எப்படி ரியாக்ட் பண்ணியிருப்பேன்னு நினைச்சு பார்க்குறேன். எந்த நல்ல இடத்தை பார்த்தாலும் உன்னோட அங்க திரும்பவும் வரணும்னு நோட் பண்ணி வெச்சிக்குறேன். எனக்குள்ள முழுசா உன்னோட ஞாபகம் மட்டும் தான்” என்றான் மார்க்ஸ்.

திவ்யா நெகிழ்ந்தாள்.

“அதெல்லாம் இருக்கட்டும். நீ போன வேலை என்னாச்சு?”

“நாளைக்கு உனக்கு பிரசன்ட் பண்றேன்” என்றான் மார்க்ஸ்.

“சீக்கிரம் வா” என ஏக்கமாகச் சொன்னாள் திவ்யா.

“நாளைக்கு காலையில நான் அங்க இருப்பேன்னு சொன்னனே?”

“இந்த ஒரு மாசமா நான் ஒரு மாதிரி சமாளிச்சிட்டேன்...இப்ப நீ திடீர்னு நாளைக்கு வரேன்னு சொன்னதும் எப்படிடா இந்த ஒரு நாளை சமாளிக்கிறதுன்னு மலைப்பா இருக்கு” என்றாள் திவ்யா.

“லவ் யூ திவ்யா” என்று மார்க்ஸ் போனை முத்தமிட்டான்.

“என்ன வெறுப்பேத்துறியா… ஒழுங்கா நேர்ல வந்து குடு!” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் சிரித்தான். திவ்யா போனை துண்டித்தாள். மார்க்ஸ் மீண்டும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். மழை இடியுடன் மீண்டும் வலுக்க துவங்கியது. அந்த லாட்ஜின் முன்புறம் நின்று கொண்டிருந்த அவனது புல்லட் மழையில் நனைந்து கொண்டிருந்தது.

கான்ஃபரன்ஸ் ரூமில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.

“என்னயா தாடி மீசையோட யேசுநாதர் மாதிரி ஆயிட்ட” என்றார் நெல்லையப்பன்.

“அந்த அளவுக்கா வளர்ந்திருச்சு” என புன்னகையுடன் கேட்டான் மார்க்ஸ்.

“சாமியார் லுக் ஒண்ணு வருதுப்பா உன் கிட்ட”

மார்க்ஸ் கையை உயர்த்தி அவரை ஆசிர்வதிப்பது போல சைகை செய்தான்.

“எனக்கு ஆசிர்வாதம் பண்றதெல்லாம் இருக்கட்டும்… திவ்யா உன்ன அப்படியே கடிச்சு திங்குற மாதிரி பார்த்துகிட்டு இருக்குப்பா கவனிச்சியா?” எனக் கேட்டார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் திரும்பி எதிரிலிருந்த திவ்யாவை பார்த்தான்.

அவனுக்கு தெரியாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்த திவ்யா சட்டென சுதாரித்து புன்னகைத்தாள்.

“என்ன?” என கண்களால் கேட்டான் மார்க்ஸ்.

“ஒண்ணுமில்ல” என்பது போல் அவள் தலையாட்டி புன்னகைத்தாள்.

தாட்சாவும் மேனனும் உள்ளே நுழைந்தார்கள்.

“குட் மார்னிங் சார்... குட் மார்னிங் தாட்சா” என்றான் மார்க்ஸ்.

“என்னடா கோலம் இது” என்றாள் தாட்சா.

“சும்மா தான்” என சிரித்தான் மார்க்ஸ்.

“சொல்லுங்க மார்க்ஸ் நம்ம சேனலைப் பத்தி என்ன நினைக்கிறாங்க மக்கள்?” எனக் கேட்டார் மேனன்.

“கிராமத்துப் பக்கம் போனா நம்ம சேனல் இருக்குறதே நிறைய

பேருக்கு தெரியல சார்” என்றான் மார்க்ஸ்.

அனைவரும் சிரித்தார்கள்.

“ஆரஞ்சு டிவி உங்க கிட்ட இருக்கான்னு கேட்டா நான் சாம்சங் டிவி வச்சிருக்கேன்னு பதில் சொல்றாங்க சார்” என்றான் மார்க்ஸ்.

அனைவரும் புன்னகைத்தார்கள்.

“நம்ம ரூரல்ல பெரிசா ஒரு பிராண்ட் கேம்பைன் பண்ற பிளான் இருக்கு” என்றார் தாட்சா.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“இங்க உட்கார்ந்துகிட்டு ஏன் சேனலுக்கு ரேட்டிங் வரலைன்னு யோசிச்சுட்டு இருக்குறதை விட்டுட்டு ஒரு மாசம் தமிழ்நாடு பூரா டிராவல் பண்ணி கன்ஸ்யூமர் ஸ்டடி பண்ணிட்டு வந்திருக்கீங்க.. ரொம்ப நல்ல விஷயம். இங்க எங்கயோ சென்னையில உட்கார்ந்துகிட்டு இது தான் கன்னியாகுமரி பக்கத்துல உள்ள சின்ன கிராமத்துல இருக்கிற ஹவுஸ் வொய்ஃபுக்கு பிடிக்கும்னு நாம நினைச்சுகிட்டு புரோகிராம் பண்றது முட்டாள்தனம்தான்” என்றார் மேனன்.

“இல்ல சார் அதுக்கு தான் அப்பப்ப நம்ம ரிசர்ச் டீம் கன்சூமர் ஸ்டடி பண்ணி ரிப்போர்ட்ஸ் தர்றாங்க. அத வச்சுதான சார் புரோகிராமிங் பிளான் பண்றோம்” என்றாள் ஏஞ்சல்.

“அஃப்கோர்ஸ் அத வச்சு தான் பிளான் பண்ண முடியும். ஆனாலும் பவர் பாயின்ட்ல இருக்கிற நம்பர்ஸ் சொல்றதைவிட அந்த நம்பருக்கு பின்னால ஒளிஞ்சுகிட்டு இருக்கிற ஜனங்க உங்க முகத்துக்கு நேரா உங்க சேனல் இப்படித்தான்னு சொல்றப்ப வர்ர இம்பேக்ட் வேறதான” என்றார் மேனன்.

“அதுக்காக எல்லாரும் ஒரு மாசம் லீவ் போட்டு போக முடியாதில்ல சார்” என்றாள் ஏஞ்சல்.

மேனன் சிரித்தார்.

“ஆமா நம்மளால ஆசைப்பட மட்டும் தான் முடியும். சில பேரால மட்டும் தான் அதை தைரியமா பண்ண முடியும்” என்றார் மேனன் விட்டுக் கொடுக்காமல்.

“சொல்லு மார்க்ஸ் என்ன முடிவு பண்ணியிருக்க? இரண்டு சீரியல் பண்றதா சொல்லியிருக்க. அதுக்கான ஐடியாவை தேடி ஒரு மாசமா ஊர் ஊரா சுத்திட்டு வந்திருக்க... என்ன ஐடியா பிடிச்சேன்னு சொல்லு கேப்போம்.”

அனைவரும் மார்க்ஸ் என்ன சொல்லப்போகிறான் என்பது போல அவனைப் பார்க்க மார்க்ஸ் சின்ன புன்னகையுடன் தொண்டையை செருமிக் கொண்டு ஆரம்பித்தான்.

“ஒரு அரேஞ்டு மேரேஜ் கப்பிள்… முதலிரவுல இரண்டு பேருக்குமே தெரியுது அவங்களோட ஆசை, எதிர்பார்ப்பு, கனவுன்றது ஒருத்தருக்கொருத்தர் சுத்தமா சம்பந்தம் இல்லாம இருக்குன்னு. ஆனா அவசரப்பட்டு பிரிய முடியாது. ஏன்னா இரண்டு குடும்பமும் இவ்வளவு செலவு பண்ணி ஊர் கூட்டி கல்யாணம் பண்ணியிருக்காங்க… அவங்க கிட்ட போய் இந்த மாப்பிள்ளை பிடிக்கல தனியா போறேன்னு எப்படி சொல்றது. அதனால இரண்டு பேரும் ஒரு வருஷம் ஒரே வீட்ல வேற வேற ரூம்ல இருக்கலாம்னு முடிவு பண்றாங்க... அந்த ஒரு வருஷத்துக்குள்ள தங்களோட எதிர்கால வாழ்க்கைக்கான ஏற்பாடுகளை பண்ணிட்டு பிரியலாம்னு முடிவு பண்றாங்க”

“ஆனா இந்த ஒரு வருஷத்துக்குள்ள அவங்களுக்குள்ள லவ் வந்திரும் அதான… உன் கதை” என்றார் நெல்லையப்பன்.

“ஆமா” என சிரித்தான் மார்க்ஸ்.

“இத தெரிஞ்சுக்க எதுக்கு ஒரு மாசம் நீ ஊருக்கு போன? ‘மெளன ராகம்’ படத்த டிவிடியில போட்டு பார்த்தா தெரிஞ்சிர போகுது” என்றார் நெல்லையப்பன்.

அனைவரும் சிரித்தார்கள்.

“லட்சக்கணக்கான படம் இருக்கு மாமா... அதுல எந்த கதைய சீரியலா பண்ணலாம்னு முடிவு பண்றதுக்குதான் இந்த டிராவல்” என்றான் மார்க்ஸ்.

“இந்த கதையில அப்படி என்ன பெரிசா வித்தியாசம் இருக்கு?” என கேட்டாள் ஏஞ்சல்.

“காதலுக்கு அப்புறம் கல்யாணம் நார்மல்... இது கல்யாணத்துக்கு அப்புறம் காதல்” என்றான் மார்க்ஸ்.

“இந்த சீரியல எதனால ஜனங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறீங்க மார்க்ஸ்” எனக் கேட்டார் தாட்சா.

“இன்னைக்கு மிடில் கிளாஸ் மனிதர்களோட வாழ்க்கையில காதல் ரொம்பவே மிஸ்ஸிங் தாட்சா. ரெண்டு பேரும் காலையில எந்திரிச்சு ராத்திரி வரைக்கும் வேலை வேலைன்னு ஓடிக்கிட்டே இருக்காங்க... காதல்ன்ற ஒரு விஷயம் இன்னைக்கு குடும்பத்துல இல்லவே இல்லை. அதனால சப்போர்ட்டிவ்வான கணவன். காதலோட இருக்கிற தம்பதிகள்னு ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் கதைய சொன்னா பெரிய ஹிட்டாகும்னு தோணுது தாட்சா. அவங்க வாழ்க்கையில மிஸ் ஆகுற காதலை அவங்க ஸ்கீரின்ல பார்த்து ரசிப்பாங்கன்னு தோணுது” என்றான் மார்க்ஸ்.

“காரணங்கள் கரெக்ட்டா இருக்கு... கோ அஹெட்” என்றார் தாட்சா.

“தேங்ஸ் தாட்சா” என்றான் மார்க்ஸ்.

“அடுத்த சீரியல் ஐடியா என்ன?” எனக் கேட்டாள் திவ்யா.

“ரிசர்ச் டீம் மூலமா தமிழ்நாடு முழுக்க இருக்கிற இளம் பெண்கள்கிட்ட ஒரு ரிசர்ச் பண்ண சொல்லி அவங்களோட முக்கியமான பிரச்னைகள் என்ன என்னன்னு எடுக்க சொல்லியிருந்தோம். அந்த பிரச்னைகளை

அடிப்படையா வச்சுகிட்டு ஒரு கதை பண்ணலாம்னு இருக்கேன்” என்றான் மார்க்ஸ்.

“வழக்கமா ஒரு கதையை பண்ணிட்டு அப்புறமா நாம அதை ரிசர்ச் டீமுக்கு குடுத்து ஜனங்களுக்கு இந்த கதை பிடிச்சிருக்கான்னு கேட்போம். ஆனா, வித்தியாசமா முதல்ல ரிசர்ச் பண்ணி பெண்களோட பிரச்னைகள் என்னன்னு தெரிஞ்சுட்டு அதை அடிப்படையா வெச்சுட்டு கதை பண்றது நல்ல ஐடியாவா இருக்கு” என்றார் மேனன்.

“20 வயசுல இருந்து 24 வயசுக்குள்ள இருக்கிற பெண்களோட கவலை என்னன்னு யாராவது சொல்லுங்களேன்” என்றான் மார்க்ஸ்.

“காதல் பிரச்னையாதான் இருக்கும்” என்றார் நெல்லையப்பன்.

“நானும் ரிசர்ச் ரிப்போர்ட் பார்க்கிற வரைக்கும் அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, ரிப்போர்ட் வேற மாதிரி சொல்லுது. காதல் ரிஸ்க்குன்னு இப்ப இருக்கிற இளம் பெண்கள் நினைக்கிறாங்க. அதுக்கு அப்பா பார்த்து வைக்கிற பையனே பெட்டர்னு யோசிக்கிறாங்க” என்றான் மார்க்ஸ்.

“என்னய்யா சொல்ற?” என ஆச்சரியமாகக் கேட்டார் நெல்லையப்பன்.

“நான் சொல்லல... ரிசர்ச் சொல்லுது. நம்மள ஒரு பையன் காதல் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு... கல்யாணத்துக்கு அப்புறம் அவன் சரியில்லைன்னு தெரிய வரும் போது பொண்ணுங்களால அவங்க அப்பா அம்மாகிட்ட போய் நிக்க முடியறது இல்ல. நீ பார்த்த பையன் பிரச்னை பண்ணா அதை நீ தான் டீல் பண்ணனும்னு சொல்லிடுறாங்க… அதுவே அப்பா அம்மா பார்த்த பையனா இருந்தா கடைசி வரைக்கும் பொறுப்பு அவங்களோடதாயிடுது... ரிஸ்க் பொண்ணுங்களுக்கு இல்ல… அவங்களோட பேரன்ட்ஸுக்குத்தான்!”

“அப்படியெல்லாமா யோசிக்கிறாங்க” என்றார் நெல்லையப்பன். மார்க்ஸ் புன்னகையுடன் தலையாட்டினான்.

“கல்யாணம் ஃபிக்ஸ் ஆனதும் ஒரு பொண்ணுக்கு வர்ற பயமும் கவலையும் என்னவா இருக்கும்… யாராவது சொல்லுங்களேன்?” என்றான் மார்க்ஸ்.

“வர போற புருஷன் நல்லவனா இருக்கணும்” என்றான் பாண்டியன்.

“இல்ல” என்றான் மார்க்ஸ்.

“மாமியார் நல்லவங்களா இருக்கணும்” என்றாள் ஏஞ்சல்

“இல்ல”

“போற வீட்டு சூழல் எப்படியிருக்கோன்ற கவலையா இருக்கலாம்” என்றாள் திவ்யா.

இல்லை என தலையாட்டினான் மார்க்ஸ்.

“அட கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுக்கு அப்படி என்னதான்பா பயம்?” என்றார் நெல்லையப்பன்.

“கல்யாண நாள்ல நான் அழகா இருக்கணும். என்னோட புடவையும் மேக்கப்பும் பர்ஃபெக்டா இருக்கணும்ன்றதுதான் கல்யாணம் பண்ணிக்க போற ஒவ்வொரு பொண்ணோட பெரிய பயமாவும் கவலையா இருக்கு” என்றான் மார்க்ஸ்.

ஆச்சரியத்தில் அனைவரும் வாயடைத்து போனார்கள்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே” என்றார் நெல்லையப்பன்.

“பெண்களோட கவலை இதுதான்னு நினைச்சு நாம சீரியல் பண்ணிட்டு இருக்கோம். ஆனா, அவங்களோட நிஜமான கவலை வேற ஒண்ணா இருக்கு” என்றான் மார்க்ஸ்.

திவ்யா மார்க்ஸை வித்தியாசமாகப் பார்த்தாள். மார்க்ஸின் இந்த மாற்றம் அவள் எதிர்பாராதது. தான் சொல்வதுதான் சரி என அதில் உறுதியாக நிற்கும் மார்க்ஸைத்தான் அவள் பார்த்திருக்கிறாள். முதன் முறையாக மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப தன்னை அவன் மாற்றிக் கொள்வது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“இந்த கதையை பொறுத்த வரைக்கும் கல்யாணத்துக்கு முன்னால இருக்கிற பொண்ணுங்களோட பிரச்னை என்ன? கல்யாணம் ஆன உடனே அவங்க ஃபேஸ் பண்ற பிரச்னை என்ன? அதுக்கப்புறம் குழந்தை பிறக்குறப்ப என்ன

மாதிரி சேலஞ்ச் எல்லாம் அவங்க சந்திக்கிறாங்கன்னு ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் ரிசர்ச் பண்ணி நிஜமான பிரச்னைகளை ஐடென்ட்டிஃபை பண்ணி அத நம்ம கதையில எடுத்துட்டு வரப் போறோம். பொதுவான மாமியார் மருமகள் சண்டையா இந்த கதைகள் இருக்காது” என்றான் மார்க்ஸ்.

“இன்ட்ரஸ்டிங் மார்க்ஸ். முதல் சீரியலை ஏன் பண்ணனுன்றதுக்கு நீ சொன்ன காரணமும், இரண்டாவது சீரியல எப்படி பண்ண போறோம்னு நீ சொன்ன பிளானும் கரெக்டா இருக்கு. இத நம்ம ப்ரொசீட் பண்ணலாம்” என்றாள் தாட்சா. அனைவரும் கலையத் தொடங்கினார்கள்.

ஏஞ்சல் அவனை பார்த்து கிண்டலாக புன்னகைத்தாள்.

மார்க்ஸ் பதிலுக்கு சினேகமாக புன்னகைத்தான்.

“இந்த ஏட்டு சுரைக்கா எல்லாம் வேலைக்காகுன்னு நினைக்கிறயா மார்க்ஸ்” என்றாள் ஏஞ்சல்.

“உலகத்தில நடக்குற எல்லா விஷயத்துக்கு பின்னாலயும் ஒரு சயின்ஸ் இருக்கு. இந்த சீரியல் கதை பண்றதுலயும் ஒரு சயின்ஸ் இருக்குன்னு எனக்கு தோணுது. முயற்சி பண்ணி பார்ப்போம்” என்றான் மார்க்ஸ்.

“பார்ப்போம்” என அங்கிருந்து நகர்ந்தாள் ஏஞ்சல்.

மார்க்ஸும் திவ்யாவும் அவர்கள் வீட்டு பால்கனியில் நின்று கொண்டிருந்தார்கள்.

மார்க்ஸ் திவ்யாவை பின்புறம் அணைத்தபடி நின்றிருந்தான். அந்த பிடியில் ஒரு நிதானம் தெரிந்தது. அது திவ்யாவை யோசிக்க வைத்தது.

“மார்க்ஸ்”

“சொல்லு திவ்யா”

“உன்கிட்ட ஏதோ ஒரு வித்தியாசம் தெரியுது” என்றாள் திவ்யா.

“அப்படியா” என சிரித்தான் மார்க்ஸ்.

“ஆமா... இந்த ட்ராவலுக்கு அப்புறம் உன் கிட்ட வழக்கமா இருக்கிற வேகம் குறைஞ்சு ஒரு நிதானம் தெரியுது. கோபம் குறைஞ்சு கொஞ்சம் ஃபிலாசஃபிக்கலா நீ மாறுன மாதிரி தெரியுது” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் சிரித்தான்.

ஆழமான பயணங்கள் எப்போதும் மனிதனுக்குள் மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை. எங்கு சென்றாலும் தான் தங்குவதற்கான சிறப்பான ஹோட்டல், தனக்கு தேவையான உணவு, தான் பார்க்க வேண்டிய இடம், அங்கு எடுத்து இன்ஸ்டாவில் போட வேண்டிய புகைப்படங்கள் என்கிற யோசனையில்

இருப்பவர்களை பயணங்கள் மாற்றுவதில்லை. எங்கு சென்றாலும் தன் குறித்த யோசனையுடன் பயணிப்பது என்பது நிஜமான பயணமல்ல. பயணம் என்பது புது சூழலுக்கு சந்திக்கும் புது மனிதர்களுக்கு தன்னை ஒப்பு கொடுப்பது.தன்னை மறந்து சுற்றியிருக்கும் புது சூழலுக்கு தன்னை அர்பணித்துக் கொள்வது.

புதிய சூழலின் மனிதனாக மாறி அந்த வாழ்க்கைக்குள் நம்மையும் இணைத்து கொள்ள முயற்சிப்பதுதான் சிறப்பான பயணம். அப்படி பயணிப்பவர்கள் ஒவ்வொரு பயணத்திற்கு பிறகும் வேறு வேறு மனிதர்களாக உருவெடுக்கிறார்கள். அந்த பயண அனுபவங்கள் அவர்களுக்குள் நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மோட்டார் சைக்கிள் பயணம் தான் எர்னஸ்டோவை உலகை நேசிக்கும் சே என்கிற போராளியாக மாற்றியது என்றால்... ஒரு பயணம் எவ்வளவு முக்கியமானது என்பதை நான் உணர்ந்து கொள்ள முடியும்.

“என்ன ஆமாவா இல்லையா?” எனக் கேட்டாள் திவ்யா.

“ஆமா நான் கொஞ்சம் மாறி இருக்கேன்” என்றான் மார்க்ஸ்.

“என்னவா மாறியிருக்க?”

“உன்ன இன்னும் அதிகமா காதலிக்கணுன்னு தோணுது” என்றான் மார்க்ஸ்.

திவ்யா சிரித்தாள்.

“உன்னோட சீக்கிரமா ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு தோணுது திவ்யா” என்றான் மார்க்ஸ்

“ஏன்... அப்படி தோணுது”

“எந்த சந்தோஷமா இருந்தாலும் அத உன் கைய பிடிச்சுக்கிட்டுதான் நான் அனுபவிக்கணும் திவ்யா. தனியா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு இந்த டிராவல் எனக்கு புரிய வச்சிருச்சு” என்றான் மார்க்ஸ்.

திவ்யா புன்னகைத்தாள்.

“பயணம்றது எங்க போறோம்றது இல்ல திவ்யா. யாரோட போறோம்றதுதான்” என்றபடி அவளை இறுக அணைத்துக் கொண்டான் மார்க்ஸ்.

காலையில் தாட்சா அலுவலகத்துக்குள் நுழைந்தாள். தனது அறைக்குள் நுழைந்தவள், தனது லேப்டாப்பை எடுத்து டேபிளில் வைத்து ஆன் செய்தாள்.

லேப்டாப் சின்ன சத்தத்துடன் உயிர் பெற்றது. வரிசையாக மெயில்கள் சின்ன ஒலியுடன் வர தொடங்கின. மேனனிடம் இருந்து மெயில் ஒன்று வந்திருந்தது. அது என்னவாகயிருக்கும்

என்கிற யோசனையுடன் மெயிலை தட்டினார் தாட்சா.

தான் வேலையை ரிசைன் பண்ணுவதாக மேனன் மெயில் அனுப்பி இருந்தார். சட்டென அதிர்ந்தாள் தாட்சா. தன்னிடம் அது குறித்து எதுவும் பேசாமல் மும்பையில் இருக்கும் சவுத் ஹெட்டுக்கு தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மேனன் அனுப்பியிருந்தார். அதன் காப்பியை தாட்சாவுக்கும் அனுப்பியிருந்தார் மேனன்.

பதற்றமும் கோபமுமாக தாட்சா எழவும் மேனன் கதவை தட்டி விட்டு அவளது அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

“என்ன மேனன் இதெல்லாம்” என கோபமாக கேட்டாள் தாட்சா.

“ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க” என்றார் மேனன்.

“என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு கூட தோணல இல்ல!”

‘’அப்படியில்ல தாட்சா... நேத்து தருண் போன் பண்ணான். அவன் கிட்ட ஒரு விஷயம் சொன்னேன். அவன்தான் உடனே ரிசைன் பண்ண சொன்னான்” என்றார் மேனன்.

“டார்கெட், பிசினஸ் இதுக்காக நீங்க எதுக்கு ரிசைன் பண்ணனும். அவங்க கேட்டா நான் பதில் சொல்லிக்குறேன்”

“அதெல்லாம் இல்ல… இது வேற விஷயம்”

“அப்படி நீங்க ரிசைன் பண்ணித்தான் ஆகனுன்ற அளவுக்கு என்ன விஷயம் சொன்னீங்க?” எனக் கோபமாக கேட்டாள் தாட்சா.

“நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம்னு தருண் கிட்ட சொன்னேன்” என்றார் மேனன்.

அந்த பதிலை எதிர்பாராத தாட்சா சட்டென வாயடைத்து போனாள்.

“நம்ம ரெண்டு பேரும் கணவன் மனைவியா ஒரே டிபார்ட்மென்ட்ல வேலை செய்ய முடியாதுல்ல. அதனாலதான் முடிவு பண்ணிட்டா உடனே ரிசைன் பண்ணிருங்கன்னு தருண் சொன்னான்” என்றார் மேனன்.

தாட்சா என்ன சொல்வதென தெரியாமல் மேனனைப் பார்த்தாள்.

“நீங்க இந்த வேலையில கண்டினியூ பண்ணணும்றது என்னோட ஆசை. அதனால தான் நான் உங்க கிட்ட சொல்லாம ரிசைன் பண்ணேன். உங்க கிட்ட சொன்னா நீங்க ரிசைன் பண்றேன்னு சொல்ல ஒரு வாய்ப்பு இருக்கு. அந்த வாய்ப்பை உங்களுக்கு கொடுக்க வேணாம்னுதான் நான் முந்திகிட்டேன்” என்றார் மேனன்.

தாட்சா அவரையே பார்த்தபடி இருந்தாள்.

“மூணு மாசம் நோட்டீஸ் பீரியட். அதுக்கப்புறம் நான் ஃப்ரீ... ரிலீவிங் லெட்டர் வாங்குன அடுத்த நாளே நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்” எனப் புன்னகைத்தார் மேனன்.

மூன்று மாதத்தில் தன்னுடன் மேனன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வார் என சந்தோஷப்படுவதா இல்லை மூன்று மாதத்தில் ஒரு அருமையான சக பணியாளன் சேனலை விட்டு போய்விடுவான் என வருத்தப்படுவதா எனத் தெரியாமல் தாட்சா மேனனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

Stay Tuned... இடியட் பாக்ஸ் தொடரின் அடுத்த பகுதி, வரும் அக்டோபர் 31-ம் தேதி ஞாயிறன்று வெளியாகும்.