
‘‘இது ஈழத்தின் கதை. அந்த நிலத்துக்காக நெடுங்காலமாகத் தொடரும் யுத்தத்தின் கதை. அகாலத்தில் கொல்லையில் விழுந்து தெறிக்கின்றன குண்டுகள்
சென்னையை விழாக்கோலமாக்கியிருக்கிறது புத்தகக்காட்சி. எந்தப் பக்கம் திரும்பினாலும் கலை நிகழ்ச்சிகள், இலக்கியத் திருவிழாக்கள், நூல் வெளியீட்டு விழாக்கள் எனப் பெருநகரம் அறிவுக் களைகட்டுகிறது. இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி, ஆனந்த விகடனில் வெளியாகிப் பல லட்சம் வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற 5 தொடர்கள் நூல்களாகி வாசகர்களின் கரங்களுக்கு வருகின்றன. அந்த நூல்கள் குறித்த சிறுகுறிப்பு...
உன் கண்ணில் நீர் வழிந்தால்... சேவற்கொடியோன்
ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த, விகடன் குழுமத் தலைவர் அமரர் எஸ்.பாலசுப்ரமணியன், ‘சேவற்கொடியோன்’ எனும் புனைபெயரில் 17.04.1960 முதல் 02.07.1961 வரை எழுதிய தொடர்கதை ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்.’ தான் காதல் கொண்ட பெண் தன்னைச் சகோதரனாகக் கருதுகிறாள் என்பதை அறிந்து, அதிர்ச்சிக்கும் வெறுப்புக்கும் ஆளாகாமல் அந்தப் பெண்ணுக்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் ஓர் இளைஞனின் கதை. உறவுகளுக்கிடையே எழும் கருத்து வேறுபாடுகள், அதனால் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள், சந்தேகத்தால் ஏற்படும் விளைவுகள் என அனைத்து உணர்வுகளையும் தன் விறுவிறுப்பான எழுத்து நடையால் சுவாரஸ்யமாகக் கொண்டுபோகிறார். ஓவியர் கோபுலுவின் தத்ரூபமான ஓவியங்கள், கதையின் பாத்திரங்களை உயிரோட்டம் உள்ளவையாக மாற்றியுள்ளன. உணர்ச்சிகளின் கலவையான இந்நாவல் முதல்முறையாக நூலாகிறது.
பக்கங்கள்: 632 விலை: ரூ. 599
நரம்பு அறுந்த யாழ் - கவிக்கோ அப்துல் ரகுமான்
வரலாற்றுக்கால இலங்கை, யாழ்ப்பாணம் நகரின் பழம்பெருமை, அங்கு நிகழ்ந்த இனக் கலவரங்களைப் பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான் 2003-ம் ஆண்டில் ஆனந்த விகடனில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இலங்கையின் வரலாறு, தமிழருக்கும் சிங்களருக்கும் இடையே ஆதியிலிருந்து நடந்துவரும் மோதல்கள், போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்த போர், சமாதான முயற்சிகள் என அனைத்தையும் தன் செழுமையான தமிழால் பதிவு செய்திருக்கிறார் கவிக்கோ. ஈழத் தமிழர்களின் இன்னல் வாழ்வை முழுமையாகப் பதிவு செய்துள்ள இந்த ஆவணம், முதன்முறையாக நூல் வடிவம் பெறுகிறது.
பக்கங்கள்: 152 விலை: ரூ. 160
கடவுள்... பிசாசு... நிலம்! - அகரமுதல்வன்
‘‘இது ஈழத்தின் கதை. அந்த நிலத்துக்காக நெடுங்காலமாகத் தொடரும் யுத்தத்தின் கதை. அகாலத்தில் கொல்லையில் விழுந்து தெறிக்கின்றன குண்டுகள். எப்போதும் வானில் சுற்றித் திரிகின்றன போர் விமானங்கள். பள்ளிக்கூடங்களில் ராணுவம் சூழ்ந்திருக்க, பதிகங்கள் ஒலித்திருந்த கோயில்களில் பிசுபிசுக்கிறது ரத்தக்கறை. ஒரு சிறிய கிராமத்தின், எளிய மனிதர்களின் இயல்பு வாழ்க்கையின்மீது இருள் மூட்டம் கவிகிறது. அச்சம் கடும் நச்சுக்காற்றாகி, அனைவரையும் பதறச்செய்கிறது. அத்தனைக்கும் நடுவே, நம்பிக்கை தருகிற வலுவான தொன்மங்களும் தொல்கதைகளும் அவர்களைச் சூழ்ந்திருக்கின்றன. மண்ணுக்காகப் போராடும் துணிச்சலைத் தருகின்றன. துல்லியமான குணவார்ப்புகளின் வழியாக உருவான வலுவான கதாபாத்திரங்களும், திருத்தமான உரையாடல்களும் இப்புனைவை வாசகனுக்கு நெருக்கமாக்குகின்றன. கடவுளுக்கும் பிசாசுக்கும் இடையே உக்கிரமான போர் மூளும்போது நிலமும், அந்நிலத்தில் வாழும் புல் பூண்டுகள், புழுப் பூச்சிகள் உள்ளிட்ட ஜீவராசிகளின் கதி இன்னொரு மோசமான யுத்தமாகிவிடுகிற தீவினையை விவரிக்கிற இந்த நூல், ஈழ இலக்கியத்தின் முக்கியமான வருகை!
பக்கங்கள்: 384 விலை: ரூ. 430

போராட்டங்களின் கதை - அ.முத்துக்கிருஷ்ணன்
நாம் இன்றைக்குப் பெற்றிருக்கும் எட்டு மணி நேர வேலை நேரம், சம்பளம், விடுமுறைகள், வாக்குரிமை, சொத்துரிமை தொடங்கி நம்முடைய பெண்கள் தங்கள் மார்புகளை மறைத்துக்கொள்ளும் உரிமை வரை அனைத்துமே இந்த மனிதச் சமூகம் போராடிப் பெற்றவையே. அடிமைச் சமூகத்திலிருந்து நம் சமூகம் விடுதலை பெற்ற வரலாற்றின் மிக முக்கிய தருணங்களை, அதன் சூழலை, அதன் நியாயங்களை இந்தப் புத்தகத்தின் ஒவ்வோர் அத்தியாயமும் நமக்குக் காட்சிப்படுத்துகின்றன. ஜனநாயகத்தையும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளையும் அதன் முழு அர்த்தத்தில் அறிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு மிக முக்கிய அரசியல் கையேடாக இந்த நூல் திகழ்கிறது.
பக்கங்கள்: 288 விலை : ரூ. 310
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு - தெய்வீகன்
வெவ்வேறு நாட்டு அகதிகளின் ஓலங்கள், முகாம் வாழ்வின் மனவலியை ஜீரணிக்க முடியாமல் தங்களைத் தாங்களே வருத்திக்கொண்ட காயங்கள், தனிமையின் சிதைவைப் பொறுக்க முடியாத தற்கொலை முயற்சிகள், முலை கொடுத்த தாயின் கண்ணீரே புரியாமல் முகாமுக்குள் வருகிற ஆஸ்திரேலியக் காகங்களைக் கலைத்து விளையாடும் அப்பாவிக் குழந்தைகள், விஸா முடிவுகளை அறிவிக்கும் அலுவலகத்துக்கு வெளியே அதிகாரிகளின் கால்களில் விழுந்து கதறும் முதியவர்கள்... என இந்த நூற்றாண்டின் கொடுந்துயரங்களை, இந்த அகாலங்களின் நினைவுகளை, மூச்சுத்திணறிக்கிடக்கும் நெருக்குவாரம்மிக்க மானுடத்தின் கூக்குரலை, கரிக்கும் உண்மையை, உலகளாவிய தமிழ் வாசகப் பரப்பிடம் கையளிக்கிறது இந்நூல்!
பக்கங்கள்: 208 விலை : ரூ. 200
சென்னை புத்தகக்காட்சியில் விகடன் பிரசுர ஸ்டால் எண்கள் - F1, F44