Published:Updated:

சீனப் பொருளாதாரத்தை வீழ்த்திய `திருட்டு' தேநீர்! - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image

ஒரு சிறிய கண்ணாடி டம்பளரில் டீ கொடுத்தார். அதன் பெயர் ``கட்டிங் சாய்". நான்காண்டுக்காலம் இப்படி கட்டிங் சாய் குடித்து விட்டு அமெரிக்கா போனேன்.

சீனப் பொருளாதாரத்தை வீழ்த்திய `திருட்டு' தேநீர்! - வாசகர் பகிர்வு #MyVikatan

ஒரு சிறிய கண்ணாடி டம்பளரில் டீ கொடுத்தார். அதன் பெயர் ``கட்டிங் சாய்". நான்காண்டுக்காலம் இப்படி கட்டிங் சாய் குடித்து விட்டு அமெரிக்கா போனேன்.

Published:Updated:
Representational Image

சிறு வயதில் காலையில் எழுந்தவுடன் என் அம்மா தரும் பூஸ்ட் அல்லது ஹார்லிக்ஸை குடிக்க வேண்டும். என் அம்மாவும் அப்பாவும் டீ அல்லது காபி குடிப்பார்கள். அதை எனக்கு தரமாட்டார்கள். எரிச்சலாக இருக்கும். கொஞ்சம் பெரியவனாக ஆனவுடன் கடைக்குப் போய் டீ குடிக்க அனுமதித்தார்கள்.

கசரா
கசரா

கமுதியில் டீயுடன் உருண்டை அல்லது கசரா என்ற தின்பண்டங்கள் கிடைக்கும். என் வாழ்நாளில் நான் மிகவும் விரும்பிச் சாப்பிட்ட உணவு உருண்டை/கசரா, டீ தான். பின்னர் ஐஐடி பாம்பேவிற்குப் படிக்கப் போனேன். அங்கே திவாரி டீக்கடை இருந்தது. அங்கே போய் Can I have a Tea என்று கேட்டேன். South India? என்று கேட்டு பயங்கரமாகச் சிரித்தார். எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. அப்பொழுது அங்கே நின்ற ஒருவர் என்னிடம், "நீங்க தமிழா?" என்று கேட்டார். ஆமாம் என்று சொல்லி விட்டு, ஏன் இப்படி சிரிக்கிறார் எனக் கேட்டேன். பொதுவாக தக்க்ஷிண் பாரத் (தென்னிந்தியா) என்றுதான் சொல்வார். South, India என்ற இரண்டு வார்த்தையை ஆங்கிலத்தில் பேசிய மகிழ்ச்சியில் சிரிக்கிறார். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். திவாரி நல்ல மனிதர் என்று சான்றிதழும் கொடுத்தார்.

ஒரு சிறிய கண்ணாடி டம்பளரில் டீ கொடுத்தார். அதன் பெயர் "கட்டிங் சாய்". நான்காண்டு காலம் இப்படி கட்டிங் சாய் குடித்து விட்டு அமெரிக்கா போனேன். அட்லாண்டா நகரில் டீ கேட்டேன். ஒரு பெரிய காகித டம்ளரில் சுடு தண்ணீரை கொடுத்தார். மும்பையில் ஒருவர் காலைக் கடனை முடிக்க இந்த அளவு தண்ணீரை தானே பயன்படுத்துவார், நமக்கு ஏன் இவ்வளவு தண்ணீர் தருகிறார் என்று ஆச்சர்யமடைந்தேன். அது தவிர, நாம் கேட்டது டீ, இவர் தண்ணீரை தருகிறாரே எனக் குழப்பம். மீண்டும் அவரிடம் டீ கேட்டேன். அங்கே டீ பேக் இருக்கிறது அதை எடுத்துக் கொள் என்று கை காட்டினார். டீ பேக் எடுத்துக்கொண்டு மீண்டும் அவரிடமே போய் பால் எங்கே என்று கேட்டேன். ஒரு குவளையைக் காட்டினார். அங்கே ஐஸ் கட்டிகளில் சிறு குப்பிகள் இருந்தது. ஒவ்வொரு குப்பியிலும் 20 மி பால் இருந்தது. அதுவரை சூடாகக் காய்ச்சிய பாலை டீயுடன் கலந்துதான் பார்த்திருக்கிறேன். ஐஸ் கட்டியில் இருந்த பாலை டீயில் ஊற்றுவது புதுமையாக இருந்தது. அதை விட ஆச்சர்யம், அரை லிட்டர் தண்ணீரில் 20 மிலி பாலைக் கலப்பது.

Representational Image
Representational Image

சமீபத்தில், உத்தரப்பிரதேசப் பள்ளியில் ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 குழந்தைகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வித்தையை உத்தரப்பிரதேச அரசாங்கம் அமெரிக்கர்களிடம் இருந்து கற்றுக்கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். அந்த டீயைக் குடித்த பொழுது, பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. பொதுவாக ரயிலில் டீ விற்பவர்கள் ``கரம் சாய்" என்று கூவி விற்பார்கள். ``கரம் சாய்" என்றால் சூடான டீ என்று பொருள்.

`டீ’யின் வரலாறு சுவாரஸ்யமானது. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக சீனர்கள் டீ உற்பத்தி செய்து வருகிறார்கள். 1886 இல் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட டீ 2,50,000 டன். அதில் ஏற்றுமதி செய்தது 1,34,000 டன். சீனாவின் மொத்த ஏற்றுமதியில் டீயின் பங்கு 62%. அதாவது சீனப் பொருளாதாரமே டீயை மய்யமாக வைத்துத்தான் நடந்தது. டீ உற்பத்தியில் அவர்களுக்கு இருந்த நிபுணத்துவம் அலாதியானது. டீயைப் பல்வேறுவிதமாக தயாரித்தார்கள். அவற்றில் கறுப்பு, பச்சை, மஞ்சள் டீ நமக்கு பரிச்சயம். ஆனால், வெள்ளை டீயும் தயாரித்தார்கள்.

Representational Image
Representational Image

சீன அரச பரம்பையினர் இதைப் பருகினர். வழக்கம் போல அன்றைய உலக சண்டியர் பிரிட்டனுக்கு இந்த விஷயம் கண்ணை உறுத்தியது. அன்றைக்கு சீனா ஓபியத்தை பிரிட்டனிடமிருந்து இறக்குமதி செய்து விட்டு, டீயை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. ஓபியம் விளைவிக்கும் முறையை சீனா தெரிந்து கொண்டால், பிரிட்டன் பொருளாதாரம் படுத்து விடும். அதனால், சீனர்கள் ஓபியம் விளைவிக்கும் முறையைக் கற்றுக்கொள்வதற்கு முன், அவர்கள் டீ விளைவிக்கும் முறையைத் தெரிந்து கொள்வது என்று முடிவு செய்தது பிரிட்டன். அதைத் திருட்டுத்தனமாகச் செய்ய முடிவெடுத்த பிரிட்டன், ராபர்ட் ஃபார்ச்சூன் (Robert Fortune) என்ற தாவரவியல் அறிஞரைத் தேர்ந்தெடுத்து சீனாவிற்கு அனுப்பியது. அங்கே போன அவர், சீனர் போலவே நடித்து டீ உற்பத்தி செய்யும் முறைகளைத் தெரிந்து கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் முதல் தவணையாக 13,000 டீ கன்றுகளையும் 10,000 விதைகளையும் திருடி இந்தியாவின் கொல்கத்தாவிற்கு அனுப்பினார்.

இங்கிலாந்தில் டீ விளைவதற்கான தட்பவெப்ப நிலையில்லை. எனவே, தங்கள் ஆளுகையின் கீழ் இருந்த இந்தியாவில் டீ விளைவிப்பது என்பது பிரிட்டனின் திட்டம். ஆனால் கொல்கத்தாவுக்கு ஃபார்ச்சூன் அனுப்பிய கப்பல் வந்த பொழுது 1000 செடிகள்தான் உயிரோடு இருந்தன. மற்றவை எல்லாம் செத்துப்போனது. இதற்கெல்லாம் கவலைப்படவில்லை ராபர்ட் ஃபார்ச்சூன். எல்லாத் திருடர்களையும் போல மீண்டும் டீ செடிகளையும் விதைகளையும் திருடி இந்தியாவிற்கு அனுப்பினார். பாதுகாப்பாக இந்தியா வந்த டீ செடிகளை டார்ஜீலிங்கில் பயிர் செய்தனர் பிரிட்டிஷார்.

Robert Fortune
Robert Fortune

இன்றைக்கு உலகம் முழுதும் புகழ் பெற்று விளங்கும் டீ, சீனாவில் "ஆட்டையை" போட்டு இந்தியா வழியாகக் கடத்தப்பட்டது. அமெரிக்கர்களும் இதே போல ஆட்டையைப் போட்டார்கள். இதன் விளைவு, சீனப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

1886 இல் 1,34,000 டன் ஏற்றுமதி செய்த சீனாவிலிருந்து 1949 இல் ஏற்றுமதி செய்யப்பட டீ வெறும் 9000 டன். Robert Fortune பிரிட்டனுக்கு Fortune ம், சீனாவுக்கு Misfortune ம் உண்டாக்கினார்.

Representational Image
Representational Image

இப்படித்தான் உலக வளங்களை எல்லாம் திருடியது பிரிட்டன்.

உருண்டை மற்றும் கசரா புகைப்படங்கள்: கமுதி முத்துமுருகன்

-கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

சீனப் பொருளாதாரத்தை வீழ்த்திய `திருட்டு' தேநீர்! - வாசகர் பகிர்வு #MyVikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/