Published:Updated:

`கண்ணீரே எமக்கு மன அமைதியைத் தருகிறது' மே 18 - ஈழ எழுத்தாளர்களின் பகிர்வு!

மே-18

மே-18 இறுதி யுத்தத்தின் நினைவுகள் குறித்து ஈழ எழுத்தாளர்களிடம் பேசினோம்.

`கண்ணீரே எமக்கு மன அமைதியைத் தருகிறது' மே 18 - ஈழ எழுத்தாளர்களின் பகிர்வு!

மே-18 இறுதி யுத்தத்தின் நினைவுகள் குறித்து ஈழ எழுத்தாளர்களிடம் பேசினோம்.

Published:Updated:
மே-18

சமகால நெடுந்துயரின் சாட்சியம்தான் மே -18. கடந்த சில தசாப்தங்களில் தமிழர்தம் வாழ்வில் இரண்டறக் கலந்தவை ஈழப் போராட்டம். போர் கூடாது என்பதே மானுடத்தின் பொது நீதி என்றாலும் வல்லாதிக்கத்தின் போர் எப்போதும் எளியவர்களின் உயிரையும், உணர்வுகளையும், உரிமைகளையும் காவு கேட்கின்றன. போருக்குப் பின்பான வாழ்வும், இடப்பெயர்வும் அத்தனை சுலபானதோ, சுகமானதோ அல்ல.

மே-18
மே-18

ழப்போராட்டம், தமிழக இலக்கியத்திலும் அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்ததை உண்டாக்கின. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, போரில் மரித்துப்போனவர்கள், உறவுகளை இழந்தவர்கள், அகதிகளாக புலம்பெயர்ந்தவர்கள், அவர்களுக்கான அரசியல் என அனைத்தையும் தமிழர்கள் கவனிக்கத் தவறுவதில்லை. இன உணர்வால் அதை தம் துயரமாகவே எண்ணுகின்றனர். ஈழத்துப் படைப்புகள் உலக அரங்கில் மாபெரும் அலையை ஏற்படுத்தி வருகின்றன. படைப்பின் ஆழம், தனித்துவமான மொழி, அழுத்தமான, காத்திரமான அரசியல் என ஈழத்து படைப்புகள் வல்லமை பெற்று நிற்கின்றன. மே-18 இறுதி யுத்தத்தின் நினைவுகள் குறித்து ஈழ எழுத்தாளர்களிடம் பேசினோம்.

`நினைவுகளை விசாரணை செய்கிற நாடு இது'

எழுத்தாளர் தீபச் செல்வன்:

``கொரோனாவுக்கான ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, சுமார் ஐம்பது நாள்களின் பின்னர் தளர்த்தப்பட்டுள்ளது. அப்போது அமைக்கப்படாத சோதனைச் சாவடிகளை அரசப் படைகள் இப்போது அமைத்திருக்கின்றன. மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நெருங்குகின்ற காலத்தில், கொரோனாவின் பெயரால் சோதனைச் சாவடிகளை திறந்திருப்பது, அதைத் தடுக்கத்தான்.

இங்கே நினைவுகள் இப்போது ஆயுதம். நினைவுகளை அழிப்பதில்தான் அரசும் மிகத் தீவிரமாக இருக்கிறது. இனத்தை அழித்த பிறகு, நினைவுகளை அழித்துவிட்டால், தனிஈழம் குறித்து யாரும் பேசமாட்டார்கள் என்று நினைக்கிறது அரசு. ஆனால், நினைவுகள்தான் எங்களுக்கு ஆறுதல். கண்ணீர் விடுதல் எங்களுக்கு மனவமைதியைத் தருவது.

தீபச்செல்வன்
தீபச்செல்வன்

கொல்லப்பட்டவர்களுக்கான நீதியைக் கோரி போராடுகின்ற ஈழ மண்ணில், அழுவதற்கும் நினைப்பதற்கும்கூடப் போராடுகிறோம் என்பது எவ்வளவு துயரமானது. ஆனாலும் 2009-ல் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பிறகு, மகிந்த ராஜபக்சேவின் மிகப் பயங்கரமான ஆட்சிக்காலத்தில்கூட இறந்தவர்களுக்காக தீபங்களை ஏற்றியிருக்கிறோம். கொல்லப்பட்டவர்களுக்கான நீதியைக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், கொரோனா ஊரடங்கு காலத்தில்கூட சமூக இடைவெளியைப் பேணியபடி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எந்தவொரு சமயத்திலும் தங்கள் போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை. 3 ஆண்டுகளாக அவர்களின் போராட்டம் நடக்கிறது. கொரோனா பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் நடக்க இருக்கிறது.

புகைப்படங்களைத் துரத்திப் பிடித்தும்... பாடல்களைக் கைது செய்தும்... கண்ணீரை சிறையிலடைந்து நினைவுகளை விசாரணை செய்வதைப் பார்த்தாலே, இந்த நாடு மனித உரிமைகளை எந்தளவு மதிக்கிறது என்பது புரியும்.

இனப்படுகொலைக்கு எதிரான நீதிக்கான போராட்டத்தை ஈழத் தமிழர்கள் மட்டும் முன்னெடுக்க முடியாது. அது தாயகம்; தமிழகம்; புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆகிய மூன்று தரப்புகளாலும் கூட்டாக முன்னெடுக்கப்பட வேண்டும்.''

எழுத்தாளர் நிலாந்தன் :

``மே 18 முழுப் பெருந்தமிழ்ப்பரப்பையும் இணைக்கும் ஓர் உணர்ச்சிப் புள்ளி. நவீன தமிழ் வரலாற்றில் ஒரு குறுகிய காலப் பகுதிக்குள் இவ்வளவு தொகையான தமிழர்கள் தமது இன, மொழி அடையாளங்களுக்காகக் கொல்லப்பட்ட ஒரே ஒரு வரலாற்றுக் காலகட்டத்தை அது குறிக்கிறது. அதோடு இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலையும் அது.

ஆனால், ஈழத்தமிழர்கள் 2009 மே மாதம் மட்டும்தான் கொல்லப்படவில்லை. அதற்கு முன்னரே கடந்த நூற்றாண்டில் 1950-களிலிருந்தே இனப்படுகொலை நடந்து வருகிறது.

நிலாந்தன்
நிலாந்தன்

2009 மே மாதத்துக்குப் பின்னரும் கட்டமைப்பு சார் இனப்படுகொலை நடக்கிறது. அரச திணைக்களங்கள் அதைச் செய்கின்றன. யுத்தகளத்தில் ஆயுதங்கள் மூலம் செய்யப்பட்ட இனப்படுகொலையின் உச்சமே மே 18.

அதை நினைவுகூர்வது என்பது முதலாவதாக -அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வது.

ஏன் அப்படி ஒரு பெருந்தோல்வி; கூட்டு அவமானம்; கூட்டுக் காயங்கள் ஏற்பட்டன என்று ஆராய்ந்து அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது - நினைவுகூர்வது என்பது தனியாக துக்கப்படுவதோ அல்லது புலம்புவதோ மட்டும் அல்ல. மாறாக அது கூட்டுத் துக்கத்தைக் கூட்டுக் கோபமாக; கூட்டு ஆக்க சக்தியாக மாற்ற வேண்டும். ஏனெனில் நினைவுகூர்வது என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவதற்கான போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதிதான்.

உலகம் இப்பொழுதும் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழக சட்டசபையும்; ஈழத்தில் வட மாகாண சபையும்; கனடாவில் ஓர் உள்ளூராட்சி சபையும்தான் அதை இனப்படுகொலை என்று தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளன.

ஈழப் படுகொலை
ஈழப் படுகொலை

எனவே, இனப்படுகொலைக்கு எதிரான நீதிக்கான போராட்டத்தை ஈழத் தமிழர்கள் மட்டும் முன்னெடுக்க முடியாது. அது தாயகம்; தமிழகம்; புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆகிய மூன்று தரப்புகளாலும் கூட்டாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு ஒரு தமிழ் சொலிடாரிட்டி கட்டாயமான முன்நிபந்தனை.

ஆனால், அவ்வாறான தரிசனங்களைக் கொண்ட ஒரு தலைமை இன்னமும் ஈழத்தில் பலமடையவில்லை. அந்த வெற்றிடம் காரணமாக கடந்த பதினோரு ஆண்டுகளாக தமிழ் அரசியல் தேங்கி நிற்கிறது. இப்படியே தொடர்ந்தும் தேங்கி நின்றால் நினைவுகூர்தல் துக்கத்தை அனுஷ்டிக்கும் ஒரு சடங்காக மட்டும் சுருங்கிவிடும் ஆபத்து உண்டு."

அந்த நாள்களை ஏன் உன்னால் மறக்கமுடியவில்லை?

எழுத்தாளர் அகரமுதல்வன்:

அந்த நாள்கள் குருதியுண்டன. ஊழியுகத்தின் எல்லாப் பகல்களும் எல்லா இரவுகளும் மனித மாமிசங்களையே பெருக்கின. காயத்துக்கும் வலிக்கும் சாவுக்கும் ஒப்பாரிக்குமாய் எங்கள் கூடாரங்கள் இருந்தன. கடற்கரையின் சுடுமணல் பரப்பெங்கும் அழுகிய உடல்களோடு அந்தக் கொலைக்களம் நீண்டது. குழந்தைகள் அழுதனர். பொஸ்பரஸ் குண்டுத்தாக்குதலினால் சரீரம் பொசுங்கிய குழந்தைகள் திணறிய மூச்சின் ஒலியையும், அவர்களின் பரிதாபகரமான கண்களையும் மறக்கவியலாது. ரத்தச் சேறள்ளி காயங்களுக்குப் பூசினோம். மருந்துகள் இல்லை. மருத்துவமனைகள் இல்லை. ஒவ்வொரு குழந்தையும் கைகளை மேலே தூக்கி அழுது தமது போர்க்காயத்தோடு சாவை வேண்டி அழுதனர். கண்களுக்குத் தெரியாத செய்மதியின் புகைப்படங்களில் அந்தக் குழந்தைகள் இல்லை. அந்தக் குழந்தைகளின் அழுகுரல் இல்லை. சாவோலாம் இல்லை.

அகரமுதல்வன்
அகரமுதல்வன்

பத்து ஆண்டுகள் நிறைவடைந்து பதினோராவது ஆண்டாகியிருக்கிறது ஒரு மானுடப்பேரழிவு நிகழ்ந்து. அதற்கான நீதியைத் தரவல்ல எந்த அமைப்புகளும் உலகத்தில் இல்லை. நீதிக்கும் நாம் வாழும் காலத்துக்கும் தொடர்பில்லை. இதுவொரு குரூரயுகம். நாம் நினைவுகூரும் இந்த நாள்கள் நீதிக்கானவை. கழிவிரக்கத்திற்கானதல்ல. உலகம் வெட்கித்து தலை தாழ்த்தும் அதுவே எமக்கு கிடைத்த முதல் நீதியென்று கொள்வேன். அந்த நாள்கள் பயங்கரமானவை. மனச்சாட்சி உள்ளோரை குற்றவுணர்ச்சிக்குள் இழுக்கும். நீதி ஒரு முதலுதவியைப் போல காயப்பட்ட தமிழ்நிலத்திற்காய் பேசும் அந்த நாள்களுக்காகவே காத்திருக்கிறேன். அது நிகழும். இந்தக் குரூர யுகத்தின் அந்தம் அன்றைக்குத் தான் நிகழும். அறம் வெல்லும் அஞ்சற்க"

அந்த நாள்களை ஏன் உன்னால் மறக்கமுடியவில்லை?

அந்த நாள்களை

அந்தக் கடல் நகரில் சந்தித்தேன்

அலைகளில் குழந்தைகளின் சவங்கள்

அவற்றைக் கொத்தித் தின்ன

எத்தனையோ வல்லூறுகள்

எத்தனையோ காகங்கள்

அந்த நாள்களில்தான்

எரியுண்டு போகும் எனது நிலத்தில்

மிஞ்சியிருந்து எழுதினேன்

நிலமே !

நீயும்

நாமும்

இனிமேல்

பாழ்.

எழுத்தாளர் குணா கவியழகன்

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான அரசியல், ஈழத்தமிழரின் இதுவரையான அரசியல் பயணத்தின் மாபெரும் சரிவு. மலை உதிர்ந்து மண்ணாகிப்போவது போன்ற சரிவு. ஒருவேளை விடுதலைப்புலிகள் போரில் தோற்று போராட்டத்தைக் காப்பாற்றுவது என்ற தீர்மானத்தை எடுத்திருந்தால், இன்றைய கையறு நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்காது. தமிழர்களின் விடுதலை அரசியல் என்ற நீண்ட பயணத்தில் விலைபோகாத, அதிகாரத்துக்குப் பணியாத தலைமைத்துவம் என்ற விடுதலைப்புலிகளுக்கான பெருமையே அவர்கள் இத்தகைய தீர்மானத்தை எடுக்க தடையாகவும் இருந்தது.

குணா கவியழகன்
குணா கவியழகன்

புலிகளுக்குப் பின்னான அரசியல் தலைமைத்துவம் உண்மையில் இதுவரையான அரசியல் பயணத்தை அதன் தொடர்ச்சியாக எடுத்துச் செல்ல தவறிவிட்டன. புலிகள் இனப்பிரச்னையை உள்நாட்டு விவகாரம் என்ற நிலையிலிருந்து பிராந்திய நிலைகடந்து சர்வதேச அரசியலின் பேசுபொருளாக மாற்றியிருந்தனர். புலிகளுக்குப் பின்வந்த தலைமைத்துவம் புலிகள் -அரசு என்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையை, சர்வதேச அரங்கில் இணைத்தலைமை நாடுகளின் அனுசரணையில் தொடர்வதாக முன்னெடுத்திருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பும் மக்களின் ஜனநாயக பிரதிநிதிகள் என்ற தகுதியும் அவர்களுக்கு இருந்தது. ஆனால், அவர்கள் அதிகார சக்திகளின் தரகு அரசியல் தலைமையாக மாறினார்கள்.

விளைவாக, இன்று தமிழர்கள் அறுபதாண்டு காலம் முன்னெடுத்து வந்த விடுதலை அரசியல் பாதையில் தலைமைத்துவங்கள் தறிகெட்டு நிற்கின்றன; தளம்பி நிற்கின்றன. விடுதலை அரசியல் என்ற பயணத்தில், தம் காலத்துப் பாதையின் மாயை அகற்றி, உரித்துணர்ந்து பயணம் தொடரவில்லை. மக்களுக்கு வழிகாட்ட அவை தம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளவுமில்லை. அறிவும் அர்ப்பணமும் அறமும் தலைமைத்துவத்துக்கு அவசியமான ஒழுக்கப் பண்புகள். இந்த உயரிய ஒழுக்கப் பண்புகளற்ற எந்த மனிதனாலும் மக்களின் விமோசன அரசியலுக்கு தலைமை தாங்க முடியாது. தக்க அரசியல் இயக்கத்தைக் கட்டி வளர்க்கவும் முடியாது.

அறிவு, அர்ப்பணம், அறம் என்ற ஒழுக்கத் தகுதியற்ற எந்த அரசியல் அமைப்பாலும் மக்களுக்காக மக்களுடைய நல்வாழ்வை பெற்றுத் தந்துவிடவும் முடியாது. அடிப்படையில் அவை மக்களால் மக்களிடமிருந்து கொண்டுவரப்பட்ட தலைமைத்துவமாகவும் இருக்க நியாயம் இல்லை. இவை இறக்குமதி ஜனநாயக நாசகாரப் பொறிமுறையால் மக்களுக்கு தருவிக்கப்பட்ட தரகு தலைமைத்துவமாகவே இருக்க முடியும்.

என்றோ ஒரு நாள் இலங்கையின் மக்கள் சமூகங்கள் இன மோதலின் பின்னாலுள்ள சர்வதேச இழி அரசியலை புரிந்துகொள்ளும், உண்மை உணர்ந்து விழித்துக்கொள்ளும் ஓர் அரசியல் புறநிலை தோன்றலாம். வரலாறு உலக அரசியலை ஒரே போன்று வைத்திருப்பதில்லை. அதுவரை தமிழினம் அதிகார சக்திகளின் அரசியலில் பலியாகாது தம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும். தேசிய பிரக்ஞைபூர்வமான ஆன்ம சக்தியை சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரத்துக்காக கொண்டிருக்க வேண்டும்.