Published:Updated:

ஆக்டிவ் ஃபண்ட் Vs பேசிவ் ஃபண்ட்... உங்களுக்கு ஏற்றது எது?

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

ஆக்டிவ் ஃபண்ட் Vs பேசிவ் ஃபண்ட்... உங்களுக்கு ஏற்றது எது?

மியூச்சுவல் ஃபண்ட்

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

இன்றைய இந்திய சிறு முதலீட்டாளருக்கு இருக்கும் மிகப் பெரிய குழப்பம் மியூச்சுவல் ஃபண்டில் ஆக்டிவ் ஃபண்டில் முதலீடு செய்வதா என்பதாகத்தான் இருக்கிறது. பேசிவ் மியூச்சுவல் ஃபண்டில் முக்கியமான கவர்ச்சிகரமான அம்சமாக இருப்பது, அதன் குறைவான செலவு விகிதம்தான் (Expense Ratio). இதனால்தான் சிறு முதலீட்டாளர்கள் பேசிவ் ஃபண்ட் திட்டங்களைப் பற்றி அடிக்கடி விசாரிக்கிறார்கள். ஆக்டிவ், பேசிங் - இந்த இரண்டில் நீங்கள் எந்த ஃபண்டைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கும் முன், ஆக்டிவ் ஃபண்ட் என்றால் என்ன, பேசிவ் ஃபண்ட் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

ஆக்டிவ் ஃபண்ட்...

எந்த ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாக இருந்தாலும், அதற்கென ஒரு நோக்கம் இருக்கும். மேலும், அந்த ஃபண்டின் முதலீட்டுக் கலவைக்கான (Portfolio) பங்குகளை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பதும் வரையறுக்கப்பட்டிருக்கும்.

ஆக்டிவ் ஃபண்ட் என்கிறபோது, அந்த ஃபண்டின் நோக்கம் மற்றும் முதலீட்டுக் கலவையின் விதிமுறைக்கேற்ப நிறுவனப் பங்குகளில் அதன் நிதி மேலாளர் (Fund Manager) முதலீடு செய்வார். ஒரு நிறுவனத்தின் பங்கு எதிர்காலத்தில் எப்படி வருமானம் கொடுக்கும் என்கிற கணிப்பு மற்றும் எதிர்பார்ப்பின் அடிப்படையில் அந்தப் பங்கில் குறிப்பிட்டத் தொகையை முதலீடு செய்வார். எப்போது வேண்டுமானாலும் அந்தத் தொகையை அதிகரிப்பார்; எப்போது வேண்டுமானாலும் அந்தத் தொகையைக் குறைப்பார்.

உதாரணமாக, லார்ஜ்கேப் ஃபண்ட் ஒன்றை எடுத்துக்கொள்வோம். இந்த ஃபண்டில், அதன் ஃபண்ட் மேனேஜர் பங்குச் சந்தை மதிப்பின் (Market Capitalization) அடிப்படையில் முதல் 100 நிறுவனப் பங்குகளில் எதை வேண்டுமானாலும் வாங்கலாம். இந்த ஃபண்ட் மேனேஜரின் முக்கியமான பணி, இந்த ஃபண்டின் மூலம் அதன் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸைவிட அதிக வருமானம் கொடுப்பதாகும்.

லார்ஜ்கேப் ஃபண்டின் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் நிஃப்டி 50 குறியீடு ஆகும். இது கொடுக்கும் வருமானத்தைவிட, தனது ஃபண்டை அதிக வருமானம் கொடுக்க வைப்பதே ஃபண்ட் மேனஜரின் முக்கியமான வேலையாகும். ஃபண்ட் மேனேஜர் அவரின் திறமை மற்றும் அவரின் முதலீட்டு ஆராய்ச்சிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பங்குகளை வாங்குவார் மற்றும் விற்பார்.

ஃபண்டின் முதலீட்டுக் கலவையில் சுமார் 50 நிறுவனப் பங்குகள் இடம்பெற்றிருக்கும். பங்குச் சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப அடிக்கடி பங்குகளை வாங்கி, விற்க வேண்டிவரும். இதற்கு ஃபண்ட் மேனேஜர் மற்றும் அவரின் குழுவினர் அதிக நேரம் செலவிடுவார்கள். அந்த வகையில் செலவு விகிதம் அதிகமாக இருக்கும். அதாவது, ஆக்டிவ் ஃபண்டில் செலவு விகிதம் என்பது 1.5%-லிருந்து 2.5% வரை இருக்கும்.

ஆக்டிவ் ஃபண்ட் Vs பேசிவ் ஃபண்ட்... உங்களுக்கு ஏற்றது எது?

இண்டெக்ஸ் ஃபண்ட்...

பேசிவ் ஃபண்டில் முக்கியமானது இண்டெக்ஸ் ஃபண்ட் ஆகும். இந்த ஃபண்டில் முதலீடு செய்ய ஃபண்ட் மேனேஜரும் அவரின் குழுவினரும் அதிகம் மூளையை கசக்கி யோசிக்க வேண்டாம்; அதிக நேரம் செலவிட வேண்டாம். நிஃப்டி 50 இண்டெக்ஸைப் பின்பற்றும் இண்டெக்ஸ் ஃபண்ட் எனில், அந்தக் குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் நிறுவனப் பங்குகளை அதன் விகிதாசாரத்துக்கேற்ப அப்படியே வாங்கி அந்த ஃபண்டில் சேர்ப்பதாகும்.

உதாரணமாக, இண்டெக்ஸில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்கின் வெயிட்டேஜ் 10 சதவிகிதமாக இருக்கலாம். டி.சி.எஸ் 7 சதவிகிதமாக இருக்கும். ஹெச்.டி.எஃப்.சி 5 சதவிகிதமாக இருக்கும். இந்தச் சதவிகித அளவுக்கு அந்தப் பங்குகளை வாங்கி, ஃபண்டில் சேர்க்க வேண்டியதுதான் ஃபண்ட் மேனேஜரின் வேலையாகும்.

இப்படி பங்குச் சந்தை மதிப்பில் அடிப்படையில் முதல் 50 இடங்களில் இருக்கும் நிறுவனப் பங்குகளில், அந்த நிஃப்டி 50 ஃபண்டில் முதலீடு செய்து, ஒரு முதலீட்டுக் கலவை உருவாக்கப்படும். இதுதான் இண்டெக்ஸ் ஃபண்ட் ஆகும். இந்த இண்டெக்ஸ் ஃபண்டில் கண்காணிப்புப் பிழை என்கிற ‘டிராக்கிங் எரர்’ இருக்கும். ஆனால், இது ஃபண்டின் வருமானத்தைப் பெரிதாக பாதிக்காது. இந்த டிராக்கிங் எர்ரரைக் குறைவாக வைக்க ஃபண்ட் மேனேஜர் முயற்சி செய்ய வேண்டும்.

அதாவது, ஒரு குறியீட்டிலிருந்து ஒரு பங்கு வெளியேற்றப் பட்டு, வேறு ஒரு பங்கு சேர்க்கப்படுகிறது எனில், அந்த மாற்றத்தை இண்டெக்ஸ் ஃபண்டிலும் ஃபண்ட் மேனேஜர் செய்ய வேண்டும். அதாவது, வெளியேறும் நிறுவனப் பங்கை உடனடியாக விற்பதுடன், இண்டெக்ஸில் புதிதாகச் சேர்ந்திருக்கும் பங்கிலும் விரைந்து முதலீடு செய்ய வேண்டும். இந்த ஃபண்டில் அடிக்கடி பங்குகளை வாங்கி, விற்க வேண்டி யிருக்காது. மேலும், ஃபண்ட் மேனேஜருக்கும் பெரிதாக ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்காது. அதனால், இந்த இண்டெக்ஸ் ஃபண்டில் செலவு விகிதம் பொதுவாக 0.25% முதல் 0.5 சதவிகிதமாக இருக்கும்.

பேசிவ் ஃபண்டைவிட ஆக்டிவ் ஃபண்டில் செலவு விகிதம் சுமார் 0.75% - 1.25% அதிகமாக இருக்கும். பெரும்பாலும் வித்தியாசம் 1 சதவிகிதமாக உள்ளது.

ஆக்டிவ் ஃபண்டா, பேசிவ் ஃபண்டா?

ஆக்டிவ், பேசிவ் ஃபண்டுகள் பற்றிப் புரிந்துகொண்டு விட் டோம். இனி, எதைத் தேர்வு செய்வது என்று பார்ப்போம். முதலில், லார்ஜ்கேப் ஃபண்ட் பிரிவை எடுத்துக்கொள்வோம்.

கடந்த ஐந்தாண்டுகளில் சிறப்பாக வருமானம் கொடுத்த ஃபண்டுகளில் முதல் இடத்தில் இருக்கும் கனரா ராபிகோ புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட் ஆண்டுக்கு சராசரியாக 13.72% வருமானம் கொடுத்திருக்கிறது. இரண்டாம் இடத்தில் ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் 12.5% வருமானம் தந்திருக்கிறது.

அடுத்து, மிரே அஸெட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல், கோட்டக் மஹிந்திரா ஆகிய மூன்று ஃபண்டுகளும் ஆண்டுக்கு சராசரியாக 12.4% வருமானம் கொடுத்துள்ளன.

இந்த ஃபண்டுகளின் பெஞ்ச் மார்க் வருமானம் கடந்த ஐந்தாண்டுகளில் சராசரியாக 10.5% என்கிற அளவில்தான் இருக்கிறது. அதாவது, பெஞ்ச் மார்க்கைவிட சுமார் 3% கூடுதல் வருமானத்தை ஆக்டிவ் லார்ஜ்கேப் ஃபண்டுகள் கொடுத்துள்ளன. இதிலும், சுமார் 8% வருமானம் கொடுத்த ஆக்டிவ் ஃபண்டுகளும் இருக் கின்றன. எனவே, முதலீடு செய்யும்போது நிதி ஆலோசகர் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் ஒருவரின் உதவியை எடுத்துக்கொள்வது நல்லது. நீண்ட காலத்தில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் ஃபண்டுகளை அவர் நிச்சயம் பரிந்துரை செய்வார். அதை ‘அட்வைஸர் ஆல்பா’ என்பார்கள், அதாவது, ஓர் ஆலோசகர் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது நிச்சயம் அதிக வருமானம் கிடைக்க அதிக வாய்ப்பிருக் கிறது.

சிறப்பாகச் செயல்படும் ஆக்டிவ் ஃபண்டுகளில் செலவு விகிதம் சுமார் 1% அதிகமாக இருந்தாலும், அவை இண்டெக்ஸ் ஃபண்டைவிட கிட்டத்தட்ட 2-3% அதிக வருமானம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. பவர் ஆஃப் காம்பவுண்டிங் மற்றும் ஸ்னோபால் விளை வின்படி பார்த்தால், இந்த 2% வருமான வித்தியாசம் என்பது நீண்ட காலத்தில் பல லட்சம் ரூபாயாக இருக்கும்.

அதே நேரத்தில், இப்போது தான் மியூச்சுவல் ஃபண்டில் ஒருவர் முதன்முதலில் அதுவும் அவரே நேரடியாக முதலீடு செய்திருக்கிறார் எனில், அவர் இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்வது நல்லதாகும். காரணம், தவறான ஒரு ஆக்டிவ் ஃபண்டைத் தேர்வு செய்து, அதன் செலவு விகிதமும் அதிகமாக இருந்து, கிடைக் கும் வருமானம் என்பது பெஞ்ச்மார்க் வருமானத்தை விட சொற்பமாக இருந்தால், ஒரு மோசமான முதலீட்டு அனுபவம் கிடைக்கக்கூடும். அதனால், முதன்முதலில் முதலீடு செய்பவர் அதுவும் சிறு முதலீட்டாளர் எனில், ் செலவு குறைவான இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்வது லாப கரமாக இருக்கும். அதே நேரத்தில், ஆலோசகரின் உதவியுடன் முதலீடு செய்யும்பட்சத்தில் ஆக்டிவ் ஃபண்டுகளில் தாராளமாக முதலீடு செய்யலாம்.

அமெரிக்காவில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 55 சதவிகிதமாக இருக்கிறது. இது இந்தியாவில் வெறும் 4.5 சதவிகிதமாகவே இருக்கிறது. அமெரிக்காவில் அட்வைஸர் ஆல்பா 2 சதவிகிதத்தை அதிக வருமானம் தருவது மிகவும் கடினம்தான். அந்த நாட்டின் மியூச்சுவல் ஃபண்ட் துறை மிகவும் வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு ஆக்டிவ் ஃபண்டு களைவிட பேசிவ் ஃபண்டுகள் அதிக வருமானம் தந்து வருகின்றன. இந்தியாவுக்கு இந்த நிலைமை வர இன்னும் பல காலம் ஆகும். அது வரைக்கும் ஆக்டிவ் ஃபண்டுகளில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிப்பதுதான் புத்திசாலித்தனமாகும்.

காரணம், இந்தியாவில் ஃபண்ட் மேனேஜர்களுக்கு முதலீட்டுக்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக, அவரால் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் வருமானத்தைவிட அதிக வருமானத் தைப் பெற்று தர முடிகிறது.

இந்தியாவில் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸைவிட அதிக வருமானம் தரக்கூடிய 55% ஃபண்ட் மேனேஜர்கள் இருக்கிறார் கள். அமெரிக்காவில் இது 10 சதவிகிதமாகத்தான் இருக்கிறது.

இந்தியாவில் ஆக்டிவ் ஃபண்டுகள் மூலம் இண்டெக்ஸ் ஃபண்ட் களைவிட சுமார் 3% கூடுதல் வருமானம் பெற முடியும்.

உங்களுடன் ஒரு நல்ல நிதி ஆலோசகர் இருக் கிறார்; அவர் அடிக்கடி உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கலவையை மதிப்பாய்வு செய்து தேவையான மாற்றங்களைச் செய்கிறார் எனில், இந்தக் கூடுதல் 3% வருமானத்தை நிச்சயம் பெற முடியும்.

ஆக்டிவ் ஃபண்டா, பேசிவ் ஃபண்டா, யாருக்கு எது பெஸ்ட் என்று சொல்லிவிட்டோம். இதில் எதைத் தேர்வு செய்வது என்பதை இனி நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!