Published:Updated:

என்.பி.எஸ் Vs சி.பி.எஸ்... சரியான தகவல்கள்..!

ஓய்வூதியத் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வூதியத் திட்டம்

ஓய்வூதியத் திட்டம்

என்.பி.எஸ் Vs சி.பி.எஸ்... சரியான தகவல்கள்..!

ஓய்வூதியத் திட்டம்

Published:Updated:
ஓய்வூதியத் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வூதியத் திட்டம்

அது என்னவோ தெரியவில்லை, வாட்ஸ் அப்பில் சரியான தகவல்கள் வேகமாகப் பகிர்வதைவிட, தவறான தகவல்கள் படுவேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. அதிலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributory Pension Scheme), புதிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) பற்றிய அடிப்படை எல்லாம் கொஞ்சம்கூட புரிந்து கொள்ளாமல், இஷ்டத்துக்கு ஏதோ ஒன்றைச் சொல்லி, வாட்ஸ்அப்பில் பரப்பிவிடுவதுடன், ‘இதைக் கட்டாயம் பகிருங்கள்’ என்று வேறு வற்புறுத்துகிறார்கள்.

என்.பி.எஸ் - சி.பி.எஸ் பற்றிய தவறான புரிந்துகொள்ளல்களைத் தவிர்க்க, சரியான தகவல்களை இங்கே தருகிறோம்.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

வரலாறு முக்கியம் பாஸ்...

பழைய பென்ஷன் திட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதால், அரசுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியைத் தவிர்க்கவும், குறைக்கவுமான நடவடிக்கையாக மத்திய அரசு, 1.1.2004 முதல் மத்திய அரசுப் பணியில் இணைவோர்க்கு என்.பி.எஸ் எனும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தது. மேற்கு வங்கம், தமிழகம் தவிர, அனைத்து இந்திய மாநிலங்களும் தற்போது என்.பி.எஸ் திட்டத் திலேயே இணைந்துள்ளன. என்.பி.எஸ்ஸில் முதலில் சேர்ந்தது ராஜஸ்தானும் பஞ்சாபும் (1.1.2004-ல்), கடைசியாகச் சேர்ந்தது திரிபுரா (1.7.2018-ல்).

இந்தியாவின் ஏனைய மாநிலங்களைக் காட்டிலும், தமிழக அரசின் ஓய்வூதியம் சார்ந்த செலவு அதிகமாக உள்ளது என 2002-03 பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 01.04.2003-லேயே சி.பி.எஸ் (Contributory Pension Scheme) நடைமுறைக்கு வந்தது.

யார் இதில் சேரலாம்..?

மத்திய அரசுப் பணியினருக்கென்றே வடிவமைக்கப்பட்டதுதான் என்.பி.எஸ் என்றாலும் (மே 2009 முதல்) விருப்பமுள்ள இந்தியக் குடிமக்களும் என்.பி.எஸ் உறுப்பின ராகலாம். ஆனால், சி.பி.எஸ்ஸைப் பொறுத்த வரை, தமிழக அரசு ஊழியர்கள் மட்டுமே இதில் உறுப்பினராக முடியும்.

என்.பி.எஸ் Vs சி.பி.எஸ்... சரியான தகவல்கள்..!

நிர்வாகம் செய்வது யார்?

என்.பி.எஸ் திட்டத்தை ஓய்வூதிய நிதிய ஒழுங்கமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Pension Fund Regulatory and Development Authority - PFRDA) நிர்வகித்து வருகிறது.

சி.பி.எஸ் திட்டத்தை நிர்வாககிக்கும் பொறுப்பு ஆரம்பத்தில் மாநிலக் கணக்காயர் வசம் இருந்தது. 2013 முதல் தமிழக அரசின் (Govt. Data Centre) டேட்டா சென்டருக்கு மாற்றப்பட்டு, இன்றளவும் அந்த அமைப்பே நிர்வகித்து வருகிறது. தவிர, இ.பி.எஸ் நிதிய மானது தமிழக அரசின் பொதுக் கணக்கில் (Public Accountant) உள்ளது. என்.பி.எஸ் நிதியமானது என்.பி.எஸ் டிரஸ்டில் உள்ளது.

பங்களிப்பு எவ்வளவு?

என்.பி.எஸ்ஸில் ஊழியர் பங்களிப்பு தொடக்கம் முதல் இன்று வரை சம்பளம் & அகவிலைப் படியில் 10% என்கிற அளவிலேயே உள்ளது. ஆனால், மத்திய அரசின் பங்களிப்பு ஜனவரி 2004 முதல் 10 சதவிகிதமாக இருந்தது. ஏப்ரல் 2019 முதல் மத்திய அரசு தனது பங்களிப்பை 14 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

சி.பி.எஸ்ஸில் ஊழியர் பங்களிப்பும் சரி, அரசின் இணை பங்களிப்பும் சரி, அன்று முதல் இன்று வரை 10 சதவிகிதமாகவே தொடர்கிறது.

பகுதி பணம் எடுக்க முடியுமா?

என்.பி.எஸ்ஸின் ஆரம்ப கால விதியின்படி, ஊழியர் தனது என்.பி.எஸ் சேமிப்பிலிருந்து பகுதித் தொகையைப் பெற முடியாமல் இருந்தது. தற்போது திருத்தப்பட்ட விதியின்படி, கல்வி, திருமணம், குறிப்பிட்ட நோய் சிகிச்சை முதலானவற்றுக்கு பகுதித் தொகையைப் (அதாவது, தனது பங்களிப்பில் 25%) பெறமுடியும். ஊழியர் ஓய்வு பெறும் வரை சி.பி.எஸ். நிதியத்தில் இடைக்கால பண வரைவுக்கு அனுமதி இல்லை.

வருமானம் எவ்வளவு?

மத்திய அரசு ஊழியர்களும் மத்திய அரசும் செலுத்தும் எஸ்.பி.எஸ் பங்களிப்புத் தொகையின் வளர்ச்சி சந்தை (Market) சார்ந்ததாக உள்ளது. இதற்காக எட்டு நிதி மேலாளர்கள் (Pension Fund Managers) நியமிக்கப்பட்டு உள்ளனர். சந்தை நிலவரத்தைப் பொறுத்து நிதியத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் கூடவோ, குறையவோ இருக்கலாம்.

சி.பி.எஸ் திட்டம் மூலம் கிடைக்கும் வருமானம், அரசு நிர்ணயிக்கும் வட்டி விகிதம் சார்ந்தது. அதாவது, மத்திய அரசு பொதுசேம நிதிக்கு (G.P.F) நிர்ணயம் செய்யும் வட்டி என்னவோ, அதே விகிதத்தில் சி.பி.எஸ் வட்டி நிர்ணயமா கிறது. அந்த வகையில், சி.பி.எஸ் திட்டத்துக்கான வட்டி விகித மானது அதிகபட்சமாக 8.8 சதவிகிதமாக இருந்து, கடந்த ஏப்ரல் 2020 முதல் தற்போது வரை 7.1 சதவிகிதமாக உள்ளது.

இந்த வட்டியை சம்பாதிப்ப தற்காகத் தமிழக அரசு, சி.பி.எஸ். தொகையை எல்.ஐ.சி-யின் வயது முதிர்வு நிதி (L.I.C Superannation Fund) மற்றும் கருவூல உண்டியல் (Treasury Bills) ஆகிய திட்டங்களில் முதலீடு செய்கிறது. என்றாலும், இவற்றின் மூலம் கிடைக்கும் வட்டி வரவு சி.பி.எஸ் வட்டியை விடக் குறைவாக இருப்பதால், ஆண்டுதோறும் வட்டியைச் சரிக்கட்ட மட்டுமே ரூ.1,200 கோடி செலவு செய்கிறது தமிழக அரசு.

விருப்ப ஓய்வு பெறும்போது...

என்.பி.எஸ்-ல் உள்ள ஊழியர் 60 வயதுக்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்றால், அவரது கணக்கில் உள்ள முதிர்வுத் தொகையில் 20% மட்டுமே ரொக்கமாகப் பெறமுடியும். மீதமுள்ள 80% தொகை பென்ஷனுக்கு முதலீடாக நிறுத்தி வைக்கப்படும்.

சி.பி.எஸ்ஸில் இந்த நடைமுறை இல்லை. ஓய்வு பெற்றவுடன் மொத்தத் தொகையும் தரப்பட்டுவிடும்.

முதிர்வுத் தொகை எந்தக் கணக்கில் கிடைக்கும்?

என்.பி.எஸ் திட்டம் சார்ந்த ஊழியர் ஓய்வு பெறும் போது ஊழியரின் பங்களிப்பு, அரசின் பங்களிப்பு, இவை இரண்டுடன் சந்தை வளர்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகை ஆகிய மூன்றின் கூட்டுத் தொகை முதிர்வுத் தொகையாகக் கிடைக்கும்.

இந்த முதிர்வுத் தொகையில் 60% மட்டுமே ரொக்க மாகப் பெறமுடியும். மீதமுள்ள 40% தொகை மாதந்தர (Annuity) பென்ஷனுக்காக அன்யூட்டி சேவையாளர் களிடம் (Annuity Service Provider) முதலீடாக இருக்கும். இதிலிருந்து மாதந்தோறும் பென்ஷன் கிடைக்கும்.

சி.பி.எஸ்ஸைப் பொறுத்தவரை, ஒருவர் ஓய்வு பெறும்போது கிடைக்கும் முதிர்வுத்தொகை என்பது, ஊழியரின் பங்களிப்பு + அரசின் இணைப்பங்களிப்பு மற்றும் இவ்விரண்டுக்கும் அரசு தரும் வட்டி ஆகிய வற்றின் கூட்டுத்தொகையாக இருக்கும். இந்த ஒட்டு மொத்தத் தொகையும் கருவூலக் கணக்கு இயக்கத்தால் ஏற்பளிக்கப்பட்டு, கருவூலம் மூலம் ஊழியரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

என்.பி.எஸ் Vs சி.பி.எஸ்... சரியான தகவல்கள்..!

பணியில் ஓய்வு பெறும்போது...

என்.பி.எஸ்ஸில் பணியில் இருந்து ஓய்வு பெற்றால் ஓய்வுக்கான பணிக்கொடை, பணியில் உள்ளபோது இறந்துவிட்டால் (இறப்பு) பணிக்கொடை, பணியில் உள்ளபோது உடல் செயல்பாடு இழப்பு அல்லது மூளை செயல்பாடு பாதிப்பு எனில், இயலாமை ஓய்வூதியம் தரப்படும்.

எது பெஸ்ட்..?

என்.பி.எஸ் திட்டத்தைவிட சி.பி.எஸ் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானமானது (Return) குறைவாக உள்ளது. நீண்ட காலத்தில் ரிஸ்க் மிகுந்த மூலதனச் சந்தை (Capital Market) அளிக்கும் வருமானத்தைப் பாதுகாப்பு அதிகமுள்ள கடன் திட்டங்களில் கிடைப்பதில்லை. எனவே, பங்குச் சந்தை முதலீடு பற்றி ஓரளவு நன்கு தெரிந்தவர்கள் என்.பி.எஸ் திட்டத்தையே தேர்வு செய்துவருகிறார்கள்.

சி.பி.எஸ் நிதியத்தைப் பாதுகாப்பு மிகுந்த கடன் திட்டங்களில் முதலீடு செய்யப்படுவதால், அரசுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக, ஓய்வுக்காலத்தில் ஊழியர்களுக்குத் தேவையான நிதி கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். எனவே, சி.பி.எஸ் நிதியத்தை நிர்வாகம் செய்யும் வழிமுறைகள் மாற்றி அமைப்பதுடன், இந்த நிதியத்தை நிர்வகிக்க உடனடியாக நிதி மேலாளரை (Fund Manager) நியமிப்பது அவசியமாக வும் உள்ளது.

என்.பி.எஸ் திட்டத்தில் தமிழக அரசை சேரும்படி இந்திய ஓய்வூதிய ஒழுங்கமைப்பு மற்றும் மேம்பட்டு ஆணையம் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை 2010-ல் தமிழக அரசு நிராகரித்துவிட்டது. என்றாலும், இது குறித்த முடிவை எடுக்க வேண்டும் என 2022-23 பட்ஜெட் அறிக்கையில் சொல்லியிருக்கிறார் தமிழக நிதி அமைச்சர்.

ஆக, சி.பி.எஸ் - என்.பி.எஸ்ஸைப் பொறுத்தவரை இவைதான் உண்மை! இனி இந்தத் திட்டங்கள் பற்றி வரும் தவறான தகவல்களை மக்கள் பிறருடன் பகிரமாட்டார்கள் என நம்புவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism