Published:Updated:

உங்கள் குழந்தைகளை கோடீஸ்வரர் ஆக்கும் ‘பிறந்த நாள் பரிசு!’ எளிமையான எஸ்.ஐ.பி மந்திரம்

கவர் ஸ்டோரி

பிரீமியம் ஸ்டோரி

அண்மையில் முதலீட்டு ஆலோசனைக்காக 36 வயது நபர் ஒருவர் என்னைச் சந்திக்க வந்தார். தனியார் நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.62,000 சம்பளம் வாங்குவதாகக் குறிப்பிட்ட அவர், சொல்லிக்கொள்ளுபடியாக எந்தவிதமான முதலீட்டையும் செய்திருக்கவில்லை. வீட்டுக் கடன் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பில் சொந்தமாக வீடு ஒன்று அடுக்குமாடிக் குடியிருப்பில் வாங்கியுள்ளார். தன் இரண்டு வயது மகனின் பெயரில் சில்ட்ரன்ஸ் இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்றை மட்டும் எடுத்து வைத்துள்ளார்.

சொக்கலிங்கம் பழனியப்பன்
சொக்கலிங்கம் பழனியப்பன்

வாழ்க்கையில் குழந்தையின் படிப்பு, திருமணம் உள்ளிட்ட அவசியமான இலக்குகளுக்கு முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவருடைய வரவு செலவு விவரங்களைக் கேட்டு கணக்கிட்டுப் பார்த்தேன். ஏறக்குறைய பற்றாக்குறை என்ற நிலைதான் இருந்தது. அவரிடம் பொதுவான சில விஷயங்களைப் பேசியபோதுதான் அவர் பணத்தை கணக்குப் பார்க்காமல் செலவழிக்கக்கூடியவர் எனத் தெரியவந்தது. தன் இரண்டு வயது மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக ரூ. 1 லட்சம் செலவு செய்த தாகப் பெருமையாகச் சொன்னார். தன் மகனின் எதிர்காலத்துக்காக இன்னொரு வீடு வாங்க வேண்டும் என்று என்னிடம் யோசனை கேட்டார்.

ஒருவழியாக அவருக்கு பண நிர்வாக விஷயங்களை பட்ஜெட் போட்டு விளக்கி, குறிப்பிட்ட தொகையை எதிர்கால இலக்குகளுக்காக முதலீடு செய்யும்படி சொல்லி, முதலீட்டுக்கான வழிமுறைகளையும் ஆலோசனையாகச் சொல்லி அனுப்பினேன். இவரைப் போன்றுதான் ஏராளமானோர் பண நிர்வாகத்திலும் முதலீட்டிலும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார்கள். இவரைப்போல குழந்தைகளுக்கு வீடு வாங்கி வைக்க நினைக்கும் பலர், முதலீட்டு வழிமுறைகளையும், பணத்தை நிர்வகிக்கும் சூட்சுமங்களையும் சொல்லித் தருவதில்லை.

உங்கள் குழந்தைகளை கோடீஸ்வரர் ஆக்கும் ‘பிறந்த நாள் பரிசு!’ எளிமையான எஸ்.ஐ.பி மந்திரம்

மீன் பிடிக்கக் கற்றுத் தருவோம்...

‘மீனைப் பிடித்துக் கொடுக்காதீர்கள்; மீனைப் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்’ என்று புத்திசாலிகள் கூறுவார்கள். அதை நாம் எந்த அளவுக்கு நம் குழந்தைகளிடம் செய்கிறோம் என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். நடுத்தர வர்க்கத்தினர் பலர், குழந்தைகளுக்கு நாங்கள் மனை வாங்கி வைக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளோம் எனச் சொல்கின்றனர். அது நீங்கள் குழந்தைகளுக்கு மீனைப் பிடித்துக் கொடுப்பதாகும். மீனைப் பிடிக்க கற்றுக் கொடுப்பது அல்ல. குழந்தைகளுக்காக சரியான முதலீட்டைச் செய்யும் போது, உங்கள் குழந்தைகளைப் பணக்காரர்களாக ஆக்குவதுடன், முதலீட்டின் சூட்சுமங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறீர்கள் என்பதை அனைத்துப் பெற்றோர் களும் புரிந்துகொள்ள வேண்டும்.

பிறந்தநாள் முதலீடு...

ரூ.1 லட்சம் செலவழித்து குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடிய விஷயத்தை என்னிடம் பெருமையாகச் சொன்ன நபரைப் போல, நிறைய பேர் பெரிய தொகையைச் செலவு செய்து பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள். நடுத்தர வருமானக்காரர்களில் பலரும் லட்சம் ரூபாய் தாண்டியும் செலவழிக்கிறார்கள். பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் எனச் சொல்லவில்லை. செலவைச் சுருக்கி எளிமையாகக் கொண்டாடிவிட்டு, மீதி பணத்தை ஒரு முதலீடாக மாற்றி குழந்தையின் எதிர்காலத்துக்கு ஒரு வழிவகை செய்தால் என்ன என்று நீங்கள் எப்போதாவது யோசித்துள்ளீர்களா?

அட்டவணை 1
அட்டவணை 1

30 வயதில் கோடீஸ்வரர்...

அப்படிச் செய்தால் உங்கள் குழந்தைகள் படித்து முடித்து, திருமணம் செய்து வாழ்க்கையைத் தொடங்கும்போது கோடீஸ்வரர்களாக இருப்பார்கள். இன்றைக்குப் பெரும்பாலும் 30 வயதில்தான் தன்னிச்சையான வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். ஆனால், 30 வயதில் வாழ்க்கையை ஆரம்பிக்கும் எத்தனை பேர் கோடீஸ்வரர் களாக ஆரம்பிக்கிறார்கள் என்றால் சிலரைத்தான் சொல்ல முடியும். எதிர்காலத்தில் நம் குழந்தைகளாவது கோடீஸ்வரர்களாக வாழ்க்கையை ஆரம்பிக்கட்டும் என நினைப்பவர்களுக்கு மிகச் சிறந்த முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன. தங்களின் குழந்தைகளை கோடீஸ்வரர் ஆக்க வேண்டும் என்று ஆசைப் படும் பெற்றோர்களுக்கு சிம்பிளான யோசனைதான் பிறந்தநாள் முதலீடு.

எஸ்.ஐ.பி மந்திரம்...

பிறந்தநாள் கொண்டாட்ட செலவுகளைக் குறைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக ஒரு தேர்வு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஆண்டுதோறும் முதலீடு செய்து வந்தால், உங்கள் குழந்தையின் 30-வது வயதில் அவர்கள் கோடீஸ்வரர்களாக இருப்பார்கள்.

நீங்கள் அவர்களின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் 42,000 ரூபாயை ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்துவந்தால், அவர்கள் தங்களது 30-வது வயதில் கோடீஸ்வரராக வாழ்க்கையைத் தொடங்க முடியும். ஆண்டுக்கொரு முறை ரூ.42,000 செலுத்துவது கடினமாக இருந்தால், மாதம் தோறும் எஸ்.ஐ.பி முறையில் நீங்கள் ரூ.3,500-ஐ முதலீடு செய்து வரலாம். நீண்ட காலத்தில் எளிமையான முறையில் பணம் சேர்க்க நினைப்பவர்களுக்கு எஸ்.ஐ.பி ஓர் அருமையான முதலீட்டு மந்திரம் எனலாம்.

குறைந்தபட்ச முதலீடு...

ஆண்டுக்கு ரூ.42,000 அதிகம் என நினைப்பவர்கள், ஆண்டுக்கு ரூ.30,000 (மாதம் ரூ.2,500) அல்லது ரூ.18,000 (மாதம் ரூ.1,500) முதலீடு செய்யலாம். அவ்வாறு செய்யும் போது, 30 ஆண்டுகளில் முறையே ரூ.72 லட்சம் மற்றும் 43 லட்சம் முதிர்வுத் தொகை கிடைக்கலாம். (பார்க்க அட்டவணை 1).

அட்டவணை 2
அட்டவணை 2

குழந்தைகளே தொடர்வார்கள்...

இந்தப் பிறந்த நாள் பரிசு முதலீட்டில் மற்றொரு சிறப்பு என்னவெனில், குழந்தைகள் படித்து முடித்து சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், இந்தப் பொறுப்பை அவர்களிடம் கொடுத்துவிடலாம். அன்றிலிருந்து நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. இந்த வகையில் நீங்கள் அவர்களுக்கு மீனைப் பிடிக்கக் கற்றுக் கொடுத்துவிட்டீர்கள்.

முதலீடு செய்யும் பழக்கத்தை பெற்றோர்களாகிய நாம்தான் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இது இரண்டு வகையில் குழந்தைகளுக்கு பாடத்தைக் கற்றுத் தருகிறது. ஒன்று பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற செலவுகளைக் குறைக்கலாம் என்பது. மற்றொன்று, நீண்ட நாள் முதலீட்டின் மகிமையைக் காண்பிப்பதுடன் முதலீட்டு ஒழுக்கத்தையும் கற்றுத்தரும்.

உங்கள் குழந்தையை நீங்கள் கோடீஸ்வரர் ஆக்குவது என்பது முடிவாகிவிட்டால், எங்கு முதலீடு செய்யலாம் என்பது உங்களின் அடுத்த கேள்வியாக இருக்கும். இதுபோன்ற நீண்டகால முதலீட்டுக்கு மல்ட்டிகேப் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம்.

செபியின் விதிமுறை களின்படி, மல்ட்டிகேப் ஃபண்டுகள் குறைந்தபட்சம் 25 சதவிகிதத்தை லார்ஜ்கேப் பங்குகளிலும், மற்றொரு 25 சதவிகிதத்தை மிட்கேப் பங்குகளிலும், மூன்றாவது 25 சதவிகிதத்தை ஸ்மால்கேப் பங்குகளிலும் முதலீடு செய்ய வேண்டும். எஞ்சியதை லார்ஜ், மிட் அல்லது ஸ்மால்கேப் பங்குகளில் ஃபண்ட் மேனேஜரின் விருப்பத்துக்கு இணங்க முதலீடு செய்துகொள்ளலாம். சில மல்ட்டிகேப் ஃபண்டு களின் வருமானத்தை அட்டவணை-2-ல் கொடுத்துள்ளோம்.

உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்க பிறந்த நாள் முதலீட்டை உடனே தொடங்குங்கள்!

படம்: சி.சுரேஷ் பாபு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு