பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மதிப்பு குறைந்த பங்குகளில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கே.சேகர், அசோக் நகர், சென்னை.

பங்குச் சந்தை முதலீட்டில் மதிப்பு குறைந்த (Undervalued) பங்கு என்றால் என்ன, அதை எப்படிக் கண்டுபிடிப்பது, அந்தப் பங்கில் முதலீடு செய்தால் நீண்ட காலத்தில் லாபம் கிடைக்குமா?

என்.ஜெயகுமார், சர்டிஃபைட் ஃபைனாஷியல் அனலிஸ்ட் (CFA).

“ஒரு பங்கின் சந்தை விலை (Market value) அதன் உள்ளார்ந்த விலையை (Intrinsic Value) விடக் குறைவாக இருந்தால் அந்தப் பங்கை மதிப்பு குறைந்த (Undervalued) பங்கு என்று சொல்லலாம். இதைக் கண்டுபிடிக்க பல ரேஷியோக்கள் உள்ளன. உதாரணமாக, பி/இ (P/E) ரேஷியோ 15-க்குக் கீழும் பி.வி.பி (PBV) ரேஷியோ 1.5-க்குக் கீழும் இருந்தால், விலை குறைந்த பங்கு எனலாம். இதை மதிப்பு முதலீடு (value Investing) என்று சொல்வார்கள்.

உலக அளவில் மதிப்பு முதலீடு முறையில் கிடைக்கும் வருவாயானது வளர்ச்சி முதலீட்டு (Growth Investing) வருவாயைவிட நீண்ட கால அடிப்படையில் அதிகமாக உள்ளது.

சில முதலீட்டாளர்கள் தவறுதலாக விலை குறைந்த பங்குகளை (அதாவது, பத்து ரூபாய்க்கு கீழே விலையுள்ள ‘பென்னி’ ஸ்டாக் பங்குகளை) அதன் உள்ளார்ந்த மதிப்புடன் ஒப்பிடாமல் மதிப்பு குறைந்த பங்கு என்றும், அதேபோல விலை உயர்ந்த பங்குகளை (அதாவது, 1,000 ரூபாய்க்குமேலே விற்கும் பங்குகளை) விலை உயர்ந்த (OverValued) பங்கு என்றும் தவறாக நினைக்கிறார்கள்.”

மதிப்பு குறைந்த பங்குகளில் 
முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா..?

பூமிநாதன், பாவூர்சத்திரம்.

என் வயது 30. என் இரண்டு வயது மகளின் உயர்கல்வி மற்றும் கல்விச் செலவுக்கு ஃபார்மா ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாமா? செய்யலாம் எனில், எந்த நிறுவனத்தின் ஃபார்மா ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் அல்லது வேறெந்த வகை ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்?

கிஷோர் சுப்ரமணியன், நிறுவனர், https://www.shreeconsultants.in

“உங்கள் மகளின் உயர்கல்விக்கு இன்னும் 15 - 16 ஆண்டுகள் இருக்கின்றன. முதலீட்டுக் காலம் நீண்டதாக இருந்தாலும் ஃபார்மா மற்றும் எந்த ஒரு துறை சார்ந்த செக்டோரல் ஃபண்டிலும் முதலீடு செய்வது புத்திசாலித்தன மல்ல; தவிர, அது லாபகரமாகவும் இருக்காது. காரணம், இந்த ஃபண்டுகள் மிகவும் ரிஸ்க் கானவை ஆகும். பிள்ளைகளின் கல்விக்கான முதலீட்டில் மிக அதிக ரிஸ்க் எடுப்பது தவறு.

எனவே, உங்கள் பிள்ளையின் எதிர்காலத்துக்கு அதிக ரிஸ்க் இல்லாத லார்ஜ்கேப் ஃபண்டுகள், மல்ட்டிகேப் ஃபண்டுகள், ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகள் என அவற்றில் பிரித்து முதலீடு செய்துவருவது சரியாக இருக்கும். இந்த முதலீடு மூலம் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

மொத்த முதலீட்டுக் காலத்தில் முதல் 12 - 13 ஆண்டுகள் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து வர வேண்டும். கடைசி இரண்டு ஆண்டு களில் அதிக ரிஸ்க் இல்லாத கடன் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்து வர வேண்டும்.

கூடவே, ஏற்கெனவே ஈக்விட்டி ஃபண்டுகளில் செய்திருக்கும் முதலீட்டை கடைசி இரண்டு ஆண்டுக் காலத்தில் சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (STP) மூலம் கடன் ஃபண்டுகளுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் முதலீட்டின் மீதான ரிஸ்க்கைக் குறைப்ப துடன், லாபத்தையும் தக்க வைக்க முடியும்.

கடந்த பத்தாண்டுகளுக்குமேல் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஐந்து நட்சத்திரக் குறியீடு பெற்ற ஃபண்டுகளை முதலீட்டுக்குத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும்.

முதலீட்டை ஆண்டுக்கு ஒரு முறை பரிசீலனை செய்து தேவைப்பட்டால் ஃபண்டுகளில் மாற்றம் செய்ய வேண்டும். ஒரு நிதி ஆலோசகரின் உதவியை நாடும்பட்சத்தில், ஈக்விட்டி ஃபண்டுகள், கடன் ஃபண்டுகள் தேர்வு மற்றும் முதலீட்டு நடை முறைகள் சுலபமாக இருக்கும்.”

மதிப்பு குறைந்த பங்குகளில் 
முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா..?

க.மணிகண்டன், அகஸ்தியர்பட்டி, திருநெல்வேலி.

எனக்கு 32 வயது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் கோட்டக் ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் (ரூ.9,000), எல் & டி இந்தியா வேல்யூ ஃபண்ட் (ரூ.9,000), குவான்ட் அப்பசலூட் ஃபண்ட் (ரூ.12,000), குவான்ட் மல்ட்டி அஸெட் ஃபண்ட் (ரூ.12,000) ஆகிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதிலீடு செய்தேன். என் தேர்வு சரியா, இல்லை இந்தத் தொகையைப் பிரித்து வேறு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?

வித்யா பாலா, இணை நிறுவனர், Primeinvestor.in

“குவான்ட் மியூச்சுவல் ஃபண்டில் அதிக முதலீட்டை மேற்கொண்டு வருகிறீர்கள். அது புதிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாகும். மேலும், குறுகிய காலத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக அடிக்கடி பங்குகளை வாங்கி விற்று வருகிறது. இது அதிக ரிஸ்க்காக அமையக்கூடும்.

பொதுவாக, அதிக வருமானம் கொடுக்க வேண்டும் எனில், அதிக ரிஸ்க் எடுத்துதான் ஆக வேண்டும். உங்களின் ஒட்டுமொத்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் குவான்ட் மியூச்சுவல் ஃபண்டில் 10% - 15 சதவிகிதத்துக்குள் இருப்பது போல் பார்த்துக்கொள்வது நல்லது. அந்த நிறுவன முதலீட்டைக் குறைத்து, யு.டி.ஐ நிஃப்டி 50 மற்றும் மோதிலால் ஆஸ்வால் நிஃப்டி 500 ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.

மேலும், எல் அண்ட் டி இந்தியா வேல்யூ ஃபண்டின் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தவும். அதற்கு பதில், இன்வெஸ்கோ இந்தியா கான்ட்ரா ஃபண்ட் அல்லது கோட்டக் கான்ட்ரா ஃபண்டில் முதலீடு செய்யவும்.”

மதிப்பு குறைந்த பங்குகளில் 
முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா..?

எஸ்.ராஜன், சென்னை இ-மெயில்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் உள்ள பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் மற்றும் மல்ட்டி அஸெட் ஃபண்டுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? இரண்டில் எது சிறந்தது?

எம்.கண்ணன், ஆலோசகர், radhaconsultancy.blogspot.com

“பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் (Balanced Advantage Fund) என்பது பங்குச் சந்தை செயல் பாட்டுக்கேற்ப கடன் பத்திரம் மற்றும் நிறுவனப் பங்கு களில் கலந்து முதலீடு செய்வதாகும். பங்குச் சந்தையின் நிலவரத்துக்கு ஏற்றவாறு பங்கு சதவிகிதம் குறைந்தும் கூடியும் வரும்.

மல்ட்டி அஸெட் ஃபண்டில் திரட்டப்படும் நிதி, குறைந்தபட்சம் மூன்று சொத்துப் பிரிவுகளில் (Asset Classes) தலா 10% முதலீடு செய்யும். மூன்று சொத்துப் பிரிவு என்கிறபோது நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம் / வெள்ளி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

பொதுவாக, சந்தையில் ஒரு வகையான முதலீடு ஏறும் போது, அடுத்த வகையான முதலீடு இறங்கும் என்பது ஒரு எழுதப்படாத சட்டமாகும்.

இந்த வகையில் பார்த்தால், பங்குச் சந்தை ஏறும்போது, தங்கம்/வெள்ளி ஆகியவற்றின் விலை இறங்கலாம்; அல்லது, ஒரே நேரத்தில் இரண்டின் விலை ஏறவும் செய்யலாம்; இறங்கவும் செய்யலாம்.

எனவே. இந்த வகையான ஃபண்டுகளில் ஏற்ற இறக்கங்கள் மிகக் குறைவாக இருக்கும். அதே சமயம், லாபமும் குறைவாகத்தான் இருக்கும். எனவே மொத்தமாகப் பார்த்தால், எப்போதும் பெரிய அளவில் நஷ்டம் வராது, என்று எதிர்பார்க்கலாம்.

முடிவாக, லாபம் அதிகம் இருக்க வேண்டும்; அதிக ரிஸ்க் எடுக்கத் தயார் எனில், அக்ரஸிவ் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் முதலீடு சரியாக இருக்கும்.

ஏற்ற இறக்கங்கள் குறைவாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், மல்ட்டி அஸெட் ஃபண்ட முதலீடு சரியானதாக இருக்கும்.”