நடப்பு
Published:Updated:

பி.எஃப் பென்ஷன்... அதிகபட்சம் எவ்வளவு கிடைக்கும்? அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்..!

பி.எஃப் பென்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
News
பி.எஃப் பென்ஷன்

FAQ

ஆர்.கணேஷ் , பி.எஃப் உதவி கமிஷனர் (வேலூர்)

பி.எஃப் பென்ஷன் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் சில...

ஆர்.கணேஷ் 
பி.எஃப் 
உதவி கமிஷனர் 
(வேலூர்)
ஆர்.கணேஷ் பி.எஃப் உதவி கமிஷனர் (வேலூர்)

பி.எஃப்-க்கு பணம் செலுத்தாமல் ஓர் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் மட்டுமே உறுப்பினராக முடியுமா?

“வருங்கால வைப்பு நிதியின் உறுப்பினர் மட்டுமே ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினராக முடியும்.”

ஓய்வூதியத்துக்கு நாமினி வழங்க வேண்டிய அவசியம் என்ன?

“உறுப்பினர் இறந்தவுடன் (ஓய்வூதியம் பெறுவதற்கு முன்), தகுதியான குடும்ப உறுப்பினர் இல்லையெனில், நியமனம் செய்யப் பட்டவருக்கு / பரிந்துரைக்கப்பட்ட வருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.”

ஓய்வூதியத்தை வழங்கத் தகுதியான குடும்ப உறுப்பினர் யாரும் நாமினியாக நியமிக்கப்படாதபோது யாருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்?

“சார்புடைய பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் (சார்புடைய தந்தை, சார்புடைய தாய்).”

திருமணமாகாத ஒருவர் வெளியிலிருந்து யாரையாவது நியமனம் செய்ய முடியுமா?

“முடியும். உறுப்பினர் ஒரு குடும்பத்தைப் பெற்றவுடன் நியமனம் செல்லாது எனக் கருதப்படுகிறது, மேலும், வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளுக்கு (யாராவது இருந்தால்) ஓய்வூதிய நன்மைகள் வழங்கப்படும்.”

ஓர் உறுப்பினர் தனது பணி ஓய்வில் பெறக்கூடிய ஓய்வூதியத்தின் அளவு என்ன?

“பணியாளர் ஓய்வூதியத் திட்டம் 1995-ல் 23 வயதில் சேர்ந்து பணியாற்றும் ஒரு உறுப்பினர் 58 வயதில் பணி ஓய்வில் சேவை 35 ஆண்டுகள் எனில், (தற்போது) ஊதிய உச்சவரம்புக்கு ரூ.15,000 பங்களிப்பு செய்தால் சுமார் ரூ.7,500 ஓய்வூதிய மாகப் பெறலாம். (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் X ஓய்வூதிய சேவை) / 70 = (15,000x35) / 70 = 7,500. ஒருவர் பணிபுரிந்த ஆண்டுகளைப் பொறுத்து இந்த கணக்கீடு மாறும்.”

திட்டச் சான்றிதழ் எடுப்பதன் நன்மைகள் என்ன?

“வேலை மாறும்போது ஓய்வூதியக் கணக்குகளை மாற்றுவதற்கு இது உதவுகிறது. திட்டச் சான்றிதழ் வைத்திருப்பவர் இறந்தால், குடும்பத்துக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும். இது பிரீமியம் செலுத் தாமல் ஓய்வூதியத்துக்கான காப்பீடு போன்றது.”

பி.எஃப் பென்ஷன்
பி.எஃப் பென்ஷன்

திட்டச் சான்றிதழ் பெறத் தகுதியானவர் யார்?

“10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவை மற்றும் 58 வயதை எட்டாத ஓர் உறுப்பினருக்குக் கட்டாயமாகத் திட்டச் சான்றிதழ் வழங்கப்படும். 10 வருடங்களுக்கும் குறைவான சேவையின் உறுப்பினர் ஒருவர் தனது ஓய்வூதிய சேவையை முன்னெடுத்துச் செல்ல திட்டச் சான்றிதழைப் பெறலாம். ஆனால், அது கட்டாயமில்லை.”

ஓய்வூதியத் திட்டத்திலிருந்து உறுப்பினர் விலக்குப் பெற முடியுமா?

“தனிப்பட்ட உறுப்பினர் ஓய்வூதி யத் திட்டத்திலிருந்து விலக்குப் பெற முடியாது. ஒரு நிறுவனமாக விலக்குப் பெற முடியும்.”

எந்த வயதில் உறுப்பினர் ஓய்வூதியத் துக்குத் தகுதியுடையவர்?

“ஓர் உறுப்பினர் 58 வயதில் மேலதிக ஓய்வூதியம் (Superannuation Pension) பெறத் தகுதியுடையவர். ஓர் உறுப்பினர் 50 முதல் 57 வயது வரை வேலைவாய்ப்பை விட்டால், அவர் முன்கூட்டியே (குறைக்கப்பட்ட) ஓய்வூதியத்தைப் பெற முடியும்.”

உறுப்பினர் இறந்தால் ஓய்வூதியம் வழங்கத் தேவையான சேவை என்ன?

“ஓர் உறுப்பினர் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பங்களிப்பு தேவை. ஓர் உறுப்பினர் சேவைக் காலத்தில் இறந்தால், இது பொருந்தாது. மேலும், ஓர் உறுப்பினர் இறந்தால், ஓய்வூதிய நிதிக்கு ஒரு மாதப் பங்களிப்பை (மாதத்தின் ஒரு பகுதி உட்பட) செலுத்தினால்கூட குடும்ப ஓய்வூதியம் மற்றும் குழந்தை ஓய்வூதியம் வழங்கப்படும்.”

ஓய்வூதியம் செலுத்த வேண்டிய உறுப்பினர் ஒருவர் இறந்தால்..?

“உறுப்பினர் இறந்தவுடன் ஓய்வூதியம் தானாகவே வாழ்க்கைத் துணைக்கு (விதவை) வழங்கப்படும். கூடுதலாக, 25 வயது அடையும் வரை (ஒரு நேரத்தில் 2) குழந்தைகளும் தகுதியுடையவர்கள். குடும்பத்தில் உள்ள எந்தவொரு ஊனமுற்ற குழந்தையும் இரண்டு குழந்தை ஓய்வூதியங்களைத் தவிர, ஊனமுற்ற குழந்தைக்கான ஓய்வூதியத்தை வாழ்க்கை முழுவதுமாகப் பெறுவார்கள்.”

முதலாளி ஓய்வூதியப் பங்களிப்பைச் செலுத்தத் தவறிவிட்டால் ஓய்வூதியம் வழங்கப்படுமா இல்லையா?

“ஒரு முதலாளி / நிறுவனம் ஓய்வூதியப் பங்களிப்பைச் செலுத்தாதது ஓய்வூதியத் தைப் பாதிக்காது. ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் உள்ளது.”

வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய உறுப்பினரின் ஓய்வூதியம் எவ்வாறு தீர்மானிக்கப் படுகிறது?

“ஓய்வூதியத்தைத் தீர்மானிக்க உறுப்பினரின் ஊதியம் மற்றும் சேவை ஒருங்கிணைக்கப்படுகின்றன.”

உறுப்பினர் 50 வயதில் குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறும்போது, 58 வயதை எட்டியவுடன் தனது முழு ஓய்வூதியத்தையும் பெற முடியுமா?

“இல்லை. ஓய்வூதியம் அனுமதிக்கப் பட்ட பிறகு, அதை மாற்ற முடியாது.”

ஆரம்ப (58 வயதுக்குமுன்) ஓய்வூதியத்துக்கான தகுதி தேதியை நிர்ணயிப்பதற்கான அளவுகோல்கள் யாவை?

“விண்ணப்பப் படிவத்தில் ஆரம்ப ஓய்வூதியம் தேவைப்படும் தேதி குறித்த தனது விருப்பத்தை உறுப்பினர் குறிப்பிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் எந்தத் தேதியும் வழங்கப்படவில்லை எனில், விண்ணப்பித்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியாக எடுத்துக் கொள்ளப்படும்.”

உறுப்பினர் சேவையில் இருக்கும்போது கூட ஓய்வூதியத்தைப் பெற முடியுமா?

“58 ஆண்டுகளுக்குப் பிறகும் சேவையில் தொடரும் உறுப்பினர் 58 வயதிலிருந்தே ஓய்வூதியத்தைப் பெற முடியும். ஆரம்ப ஓய்வூதியத்தைப் பெற்ற ஓர் ஓய்வூதியதாரர், அதன் பிறகு வேலைவாய்ப்பைப் பெறலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர் ஓய்வூதியத் திட்டத்தில் சேரத் தகுதியற்றவர் மற்றும் முதலாளி தரப்பிலிருந்து 8.33% பங்களிப்பு இ.பி.எஃப் நிதியில் சேர்க்கப்படும்.”

ஓர் உறுப்பினருக்கு இரண்டு மனைவிகள் இருந்தால் குடும்ப ஓய்வூதியம் யாருக்கு வழங்கப்பட வேண்டும்?

“இரண்டாவது திருமணம் சட்டபூர்வமாகச் செல்லுபடி யாகும் என்றால், குடும்ப ஓய்வூதியம், திருமண தேதியின் அடிப்படையில் முதலில் மூத்தவருக்கு வழங்கப்படும், மற்றும் அவர் மறைந்த பிறகு அடுத்த எஞ்சியிருக்கும் கைம்பெண்ணுக்கு வழங்கப்படும்.”

ஒருவரின் வாழ்க்கைத் துணையைக் குடும்ப ஓய்வூதியத்தைப் பெறுவதில் இருந்து விலக்க/தவிர்க்க முடியுமா?

“இல்லை. கணவர் / மனைவி சட்டப்படி விவாகரத்து செய்யாத வரை, வாழ்க்கைத் துணை ஒரு கட்டாயப் பயனாளி. இருப்பினும், ஒரு பெண்மணி தன் கணவரை தன் குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைத்து, இது தொடர்பாக ஒரு கோரிக்கையை ஆணையாளருக்கு எழுத்து பூர்வமாகச் சமர்ப்பித்து, குடும்ப ஓய்வூதியத்தை அவருக்குத் தர மறுக்க முடியும்.”

விதவை மறுமணம் செய்தால், குடும்ப ஓய்வூதியம் யாருக்கு வழங்கப்பட வேண்டும்?

“விதவைக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு, அதன் பின்னர் குழந்தைகள் ஓய்வூதியம் அநாதை ஓய்வூதியமாக மாற்றப் படும் (விதவை ஓய்வூதியத்தில் 75%).”

பி.எஃப் பென்ஷன்
பி.எஃப் பென்ஷன்

விதவைக்கு எத்தனை காலம் வரை ஓய்வூதியம் வழங்கப்படும்?

“விதவை மறுமணம் செய்து கொள்ளும் வரை அல்லது இறக்கும்வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.”

விதவை மற்றும் குழந்தைகள் வெவ்வேறு இடங்களில் / வங்கிகளில் ஓய்வூதியம் பெற முடியுமா?

“இல்லை. ஒரே வங்கி மற்றும் கிளையில் மட்டுமே விதவை மற்றும் குழந்தைகளால் ஓய்வூதியம் பெற முடியும்.”

ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995-ன்கீழ், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஓய்வூதியங்களைப் பெற முடியுமா?

“முடியாது.”

எட்டு வருட சேவைக் காலம் கொண்ட திட்டச் சான்றிதழ் வைத்திருப்பவர் அதை ஒப்புவித்து, ஓய்வூதியத் தொகையைத் திரும்பப் பெறும் நன்மையைப் பெற முடியுமா?

“இல்லை. 58 வயதை எட்டிய பின்னரே அவர் ஓய்வூதியம் பெற (அவர் ஓய்வூதியத்துக்குத் தகுதியானவர் என்றால்) அல்லது ஓய்வூதியத் தொகையைத் திரும்பப் பெறும் நன்மையைப் பெற, திட்டச் சான்றிதழை ஒப்புவிக்க முடியும்.”

உறுப்பினர் 58 ஆண்டு வயதுக்குப் பிறகு, ஓய்வூதியத்தைத் தாமதப்படுத்த முடியுமா?

“ஆம், ஓய்வூதியத்தை 58 வயதுக்குப் பிறகு தாமதப்படுத்த உறுப்பினருக்கு உரிமை உள்ளது. 59 அல்லது 60 வயதை எட்டிய பின்னர் உறுப்பினர் ஓய்வூதியத்தைப் பெறப் தேர்ந்தெடுக்கலாம், ஆனால், ஓய்வூதிய பங்களிப்பு 58 ஆண்டு வயதுக்குப் பிறகு நிறுத்தப்படும்.

இந்தச் சூழ்நிலையில், ஓய்வூதியத்தின் அளவு 58 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டுக்கு 4% அதிகரிக்கும். உறுப்பினர் 59 அல்லது 60 வயதை அடைந்தபின் ஓய்வூதியத்தைப் பெறலாம்.

ஆனால், ஓய்வூதியப் பங்களிப்பு58 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்கிறது. அத்தகைய சூழ்நிலையில் ஓய்வூதியத்தின் அளவு மேலே குறிப்பிடப்பட்ட முதல் நிலையைவிட அதிகமாக இருக்கும்.”

ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகளை எப்படி நிவர்த்தி செய்வது?

“பி.எஃப் பிராந்திய அலுவலகங்கள் மூலம் வெபினார்கள் நடத்தப்படுகிறது. ஓய்வூதியம் பெறுவோர் எந்தவொரு பிரச்னையையும் தீர்க்க சம்பந்தப்பட்ட அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.”